செவ்வாய், செப்டம்பர் 23, 2008

நந்தனம் சிக்னல்

தமிழ்நாட்டின் மிக அதிக வசூல்திறனுள்ளதாகச் சொல்லப்படும் நந்தனம் சிக்னல். மாலை 8 மணி. தி. நகரிலிருந்து வந்து தெற்குப்புறம் திரும்பவேண்டும். என் ஹோண்டா ஷைன் சிக்னலுக்கு அருகில் வரவர பச்சைமாறி மஞ்சள் விழுகிறது. 'ஒரே அமுத்து'. அப்பாடா!

பிறகு வேகம் குறைத்து மெதுவாக அண்ணா சாலையின் அகலத்தை ரசித்தவாறு சைதாப்பேட்டை நோக்கி சவாரி. வலதுபுறமாக ஒரு போலீஸ் மாமா. 'ஒதுங்கு' என்ற சைகை. குழப்பத்தில் முதலில் புரியாவிட்டாலும், பிறகு புரிந்து ஒதுக்குகிறேன். முன்னால் போன மாமா எனக்கு முன்னால் ஒதுங்கி அவரருகே வர சைகை கொடுக்க, வண்டியிலேயே நகர்ந்து செல்கிறேன்.

'எந்த ஊரு?'
'கோயம்த்தூரு'. அதான் டி.என். முப்பத்தெட்டு சொல்லுதே, பிறகென்ன கேள்வி.

'சிக்னல்ல என்ன லைட் இருந்துச்சு நீங்க பாஸ் பண்ணும்போது?'
'பச்சை'. ஒரே அடி!
'இல்லை, ரெட்'
'இல்லை, பச்சைதான்'
'கேமராவில் எல்லாம் ரெகார்ட் ஆகியிருக்கு, ரெட்தான்'
'ம்ஹும்'
'உங்க ஊர்ல இப்படிப் போலாமா இருக்கும், இங்கல்லாம் ரெட்னா நிக்கணும்'
'எல்லா ஊர்லயும்தான். ஆனா ரெட் இல்லை, மஞ்சள் விழுந்துது. ஆனா வந்த வேகத்தில் எப்படி நிறுத்தமுடியும்?'
'அதெல்லாம் நான் சொல்லலை. கேமராவில் இருக்கு, என்னோட வர்றீங்களா, காட்டறேன்.'

சார்லீ கம்ப்யூட்டரக் காட்டி மிரட்டினார், இந்தாளு கேமராவைப் பத்திச் சொல்லி பூச்சாண்டியா? 'சென்னை சாலைப்போக்குவரத்து அனுபவங்கள்' எழுத வெச்சிருவார் போல இருக்கே! அட அதுக்கெல்லாம் நேரமில்லை, எழுதினாலும் யாருக்கும் படிக்க பொறுமையிருக்காதுய்யா. கொஞ்சம் பொறுமையிழக்க ஆரம்பிக்கிறேன். ஆள் பார்க்க ஏற்கனவே கட்டிங் அடித்த அல்லது அடிக்கப் போகிற சாயலில், வேலை முடிந்து நங்கநல்லூரோ, மடிப்பாக்கமோ, வீட்டுக்குப் போகிற சாவகாச மூடில் 'வெளியூர் வண்டி, கிடைக்கிறது லாபம்'னு கணக்குப் போட்டு ஒதுக்கற மாதிரி தெரியுது.

வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்துகிறேன்.

'வாங்க போகலாம்'
மாமா வண்டியில் ஏறப் போகிறேன்.
'அங்க வந்து ப்ரூவ் ஆகிருச்சுன்னா டபுள் பைன் தெரியுமல்ல?'
'ஓ'
'ஆமா, சொன்னா ஒத்துக்குங்க'
'இல்ல, நான் ஒத்துக்கல, வாங்க பாத்திருவம்'
'வாங்க...'
'திரும்ப இதே இடத்தில கொண்டுவந்துவிடுவீங்கல்ல' மாமா வண்டியில் ஏற எத்தனிக்கிறேன்.
'ஆமா. சரீ, அப்படியே லைசன்ஸ், ஆர்,சி. இன்சூரன்ஸ் எல்லாம் எடுத்துக் காட்டுங்க'
'இந்தாங்க'

ஏய்யா, ஒரு டம்ளர் டீகுடிக்கப்போனாலே, நாலுமுறை பாக்கெட்டைத் தடவிப் பாத்துக்கற ஆளுகிட்ட, பேப்பர்சா கேக்கிற?

'கேமராவெல்லாம் எதுக்கு, இங்கயே ஓட்டை'
'என்ன ஓட்டை'
'பாருங்க, இன்சூரன்ஸ் எக்ஸ்பயர் ஆயிடுச்சு'
'அலோ, அதை விடுங்க, இன்னொரு காயிதம் இருக்கு பாருங்க, அதைப் படிங்க.'

மங்கிய மஞ்சள் வெளிச்சத்தில் சாளேசரக் கண்ணாடியில்லாமல் இன்சூரன்ஸ்காரன் எழுத்து எனக்குப் படிக்கமுடியவில்லை.

'ம்..சரியாத்தான் இருக்கு..'
'எல்லாம் சரியாத்தான் இருக்கும். சரி, வாங்க, கேமராவைக் காட்டுங்க'
'சரி, சரி, போகட்டும், இனிமேலாவது பாத்து ஒட்டூங்க'
'சேரி. இனி ஒருதடவைக்கு ரெண்டுதடவை பாத்து ஓட்டுறேன்'

ஒண்ணும் தேறலை. போய்விட்டார்.

ப்ளாட்பாரத்தில் ஒரு ஆள்: 'சார் நீங்க விடாம பேசினதால விட்டுட்டான் சார், இல்லாட்டி, காசு வாங்காம விடமாட்டான் சார்.'

என்னமோ சாதிச்ச மாதிரி ஜம்பமா கிளம்புறேன். இனிமேல் மஞ்சள்வந்தாலுமே க்ராஸ் பண்ணக்கூடாதுன்னு பிரசவ வைராக்கியத்துடன்.

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...