வெள்ளி, பிப்ரவரி 16, 2018

எழுத்தென்னும் அற்புதம்


நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார்.


இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும், பகுத்தறிந்ததும்):

கலைப்படைப்புகள் இருவகைப்படும்: நிகழ்த்துகலை (performing art) & உருவக்கலை (visual art).

குயவன், சிற்பி, கருவி/எந்திரம் சமைப்போன், கட்டடமாக்குவோன், ஓவியன், அணிகலன் செய்வோன், துணி நெய்வோன், ஆடை தைப்போன், போன்றோர் உருவக்கலைஞர்கள். அவர்கள் படைப்புக்கள் பெரும்பாலும் அவர்கள் கையாலேயே முழுமை பெற்றுவிடுகின்றன. இவ்வகைக் கலைப் பொருட்கள் உருவாகப்பட்டபின் இயல்பான சிதிலமடைதல் தவிர்த்து பெரும்பாலும் காலம் கடந்து நிற்கும் தன்மையை தாமாகவே பெற்றுவிடுகின்றன. இந்த உருவக்கலையிலும் படைப்பு(creation), மறுஉருவாக்கம் படியாக்கம் (reproduction) இரண்டும் நிகழ்கின்றன. காட்டாக, ஒற்றைக்காலில் நிற்கும் நடராச உருவத்தை முதன்முதலில் மனக்கண்ணில் வடித்து, அதை உலோகத்தில் கொண்டு வந்து நிறுத்திக் காட்டியவன் படைப்பாளி(artist). இன்றும் பூம்புகார் நிறுவனத்துக்காக நடராசரை சிலையை (அந்த முதல் படைப்பாளியின் செய்நேர்த்தியைவிடவும்கூட சிறப்பாக) செய்து விற்பனைக்கு அனுப்பும் சிற்பி, படைப்பாளி அல்லர். வெறும் கைவினைஞர் (craftsman/artisan)! இந்தக் கைவினைஞர் மரபுவழிக் கற்றவரானால் artisan என்றும் அதற்கான பள்ளியில் படித்து வந்தால் craftsman என்றும் அழைக்கப்படுவது வழக்கம்.

நிகழ்த்துகலைகளில் முதன்மையானவை ஆட்டமும் பாட்டும். கண்கட்டு வித்தைக்காட்சி, சிலம்பம்/கராத்தே போன்ற போர்ப்பயிற்சிகள், சதாவதானம், போன்றவையும் நிகழ்த்துகலைகளே. இவற்றிலும் விற்பன்னரும் நிகழ்த்துவோரும் படைப்பாளி (creator/composer) கலைஞர்(performer) என்ற இரு நிலையிலும் இருப்பர். காட்டாக இளையராஜா படைப்பாளியாக உருவாக்கியதை லட்சுமண்சுருதி என்ற மேடைநடத்துநர் தம் வாத்தியக்குழுவினரை வைத்து நிகழ்த்தும்போது அவர் வெறும் இசைக் கலைஞரே.

நிகழ்த்துகலைகளை வெளிப்படுத்தவும், ரசிக்கவும் ஒரு அரங்கம்/மேடை தேவைப்படுகிறது. நிகழ்த்துகலைகள் நிகழ்நேரத்து விந்தைகள். இவற்றைச் சேமிக்க, பரப்ப, காலங்கடந்து நிறுத்த ஒரு மிடையம்/ஊடகம் தேவைப்படுகிறது. இன்றைய ஒலி/ஒளிப்படக் கருவிகளின் வரவாலேயே இந்த நிகழ்த்துகலைகள் பதிவுசெய்யப்பட்டு காலங்கடந்த தன்மையை எட்டும் வாய்ப்பைப் பெற்றிருக்கின்றன. இவற்றுக்கு முன் நிகழ்த்துபவரின் நேரடியான பொழுதில் அன்றி  அவர் உருவில்/குரலில் நிகழ்த்துகலைகளை வேறெவரும் காண, கேட்க இயலாதிருந்தது. ஒளிக்காட்சியாக நிகழ்த்து கலைகளின் சில நிலைகளை சிற்பம்/ஓவியம் வழியாகக் காண முடிந்தாலும் முழு இயக்கத்தோடே காணும் அனுபவம் ஒளிப்படக்கருவிகளின் வந்ததாலேயே சாத்தியப்பட்டிருக்கின்றது. ஆகவே நிகழ்த்துகலைகளின் பரவலுக்கும், காலங்கடந்த தன்மைக்கும் அறிவியல் வளர்ச்சி இன்றியமையாததாகிவிட்டது கண்கூடு. மாறாக உருவக்கலை பெரிய அளவில் அறிவியல் சார்பின்றி காலங்கடந்து நிற்பது எளிதில் காணக்கிடைக்கிறது.

இந்தப் பின்னணியில் நாம் எழுத்துக்கலையை அணுகலாம். எழுத்திலும் மூலப் படைப்பாளி(author)யுடன் பகிர்வோன்/உரைப்போன்/விளக்குவோன்/தொகுப்போன்/பதிப்போன் (propagator) என்ற சார்நிலைகளும் உண்டு. எழுத்து காலங்கடந்து நிற்க நிகழ்த்துகலை போலவே ஊடகம் ஒன்று தேவைப்படுகிறது. சுட்ட களிமண் பலகைகளிலிருந்து, பனை ஓலைகள், கல்வெட்டுகள், என்று பரிணமித்து இன்று காகிதம், அதற்குமேல் கணினித் திரை, கைப்பேசி/படிப்பான் கருவிகள் என எழுத்தின் ஊடகங்கள் பலவிதம். ஆனால் நிகழ்த்துகலைகளின் ஒரு குறைபாடு எழுத்துக்கலையில் இல்லை. நிகழ்த்துகலை பதிவாக்கத்துக்கு அறிவியல் வளர்ச்சி தேவைப்பட்டது. எழுத்துக்கு அவ்விதமில்லை. இதனாலேயே ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவைகூட காலத்தைக் கடந்து இன்றும் நமக்குக் கிடைக்கின்றன. சுருதி என்று அழைக்கப்படும் வேத உபநிடதக் கூற்றுக்களும், காடு கரைகளில் பாட்டாளிகள் படைத்த, பரப்பிய தெம்மாங்கு, ஒப்பாரி, தாலாட்டு, கூத்து வகைப் படைப்புகளும் ஒலிவடிவிலேயே காலங்கடந்து சேமிக்கவும் பரப்பவும் ஆகின. 

எழுத்தின் இன்னொரு முக்கியக் குணம், எந்த இழப்பு சிதைவுமில்லாமல் இவை சேமிக்க, கடத்தப்படுவது. அறிவியலில் அனலாக் & டிஜிடல் என்று சொல்வோம். மற்ற நிகழ்த்துகலைகள் அனலாக் சமிக்ஞையாக சேமிக்கப்படுகின்றன. அதனாலே அவற்றின் நேரடி அனுபவமும் ஊடகங்களின் வாயிலாகப் பெறும் அனுபவமும் வேறுவேறாய் இருக்கின்றன. இசையரங்கில் கேட்பதும், ஒலிப்பேழைவழிக் கேட்பதும், வானொலியில் கேட்பதும், செல்பேசியிலிருந்து இயர்போன்வழி கேட்பதும் வேறுவேறு தரம், வேறுவேறு உணர்வு. ஆனால் எழுத்து அப்படியல்ல. எந்த ஊடகமென்றாலும், எழுத்து ஒன்றே. ஏனென்றால் எழுத்து உள்ளத்துக்கானது. எழுத்து முழுமை பெறுவது மூளையில், மற்ற நிகழ்த்துகலைகளைப் போல ஐம்புலன்களில் அல்ல. இந்த வேறுபாட்டாலேயே எழுத்து தரும் உணர்வு எல்லைகளற்றது. வாசிப்போரின் கற்பனைத் திறன் சார்ந்தது.

சாண்டில்யனின் கடல்புறா வாசிப்பவர் அக்ஷயமுனையில் இளைய பல்லவன் நிகழ்த்திய வீரதீரங்களையும் மஞ்சள் அழகியுடன் விளையாடிய பொழுதுகளையும் தம் மனக்கணால் காணச் செய்வது எழுத்து. அஹூதா, அமீர் என்றெல்லாம் பாத்திரங்களை நம்மால் அகக்கண்ணாலேயே காணச்செய்வது எழுத்து. விவரிப்போர் வாசிப்போர் இருவரின் கற்பனைத் திறனும் சேர்ந்த பெருக்கல் விளைவே எழுத்தின் தாக்கம். இதனாலேயே காலம் எழுத்தின்மேல் தன் அதிகாரத்தைச் செலுத்த முடியாததாயிருக்கிறது. தாராசுரம் சிறபங்களின் செய்நேர்த்தியைவிட எவ்விதத்திலும் குறைவில்லாத ஆனால் இன்னுமே புதியதுமான கொனார்க் சிற்பங்களும் பேலூர் ஹளபேடு சிற்பங்களும் சோழன் படைப்பைவிடவும் சிதைவடைந்திருப்பது முன்னது கருங்கல்லாலும், பின்னவை மணற்கல் மற்றும் மாவுக்கல்லால் செய்யப்பட்டதாலுமே. இங்கே படைப்பின் திறன் படைப்புக்கு எடுத்துக்கொண்ட பருப்பொருளால் காலப்போக்கில் இழப்பை சிதைவை எதிர்கொள்வதுபோல எழுத்துக்கு நேர்வதில்லை. இதனாலேயே மற்ற எல்லாக் கலைகளையும்விட எழுத்துக்கலை வேறுபட்டது. காலங்கடந்து நிற்பது.

நிற்க. இது எழுத்து என்ற கலையின் சிறப்பேயன்றி எழுத்துக்காரன் என்ற படைப்பாளியின் தனிச் சிறப்பென்று கொள்ளவேண்டியதில்லை. மற்ற நிகழ்த்துகலைஞர்களையும் உருவக்கலைஞர்களையும் போலவே அவனும் படைப்பாளி. சொல்லப் போனால் படிப்போனும் சேர்ந்தே எழுத்தென்னும் படைப்புக்கு முழு உருவம் கொடுக்கிறான். ஆனால் படைக்கப்படும் பொருளான எழுத்தின்  இயல்தன்மையால் எழுத்துக்கலை இந்த உன்னத நிலையை அடைகிறது.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...