தமிழ்மணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்மணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஆகஸ்ட் 27, 2009

தமிழ்மணம் குழு

கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்மணம் சேவையை நடத்துவது தமிழ் மீடியா இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் என்பது தெரிந்த செய்தி. இது லாபநோக்கற்ற ஒரு நிறுவனமாக அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்டது.

இப்போது
முனைவர் இரா. செல்வராஜ் - தலைவர்,
முனைவர் நா. கணேசன் - துணைத் தலைவர்,
முனைவர் பா. சுந்தரவடிவேல் - செயலாளர்,
மயிலாடுதுறை சிவா - பொருளாளர்.

இவர்களோடு,

முனைவர் சொ. சங்கரபாண்டி
தமிழ்சசி
முனைவர் இரமணீதரன்
முனைவர் பாலு
இளங்கோ
முனைவர் சுந்தரமூர்த்தி
கார்த்திக்ராமஸ்
முனைவர் தங்கமணி
முனைவர் பாலாஜி பாரி

ஆகியோரும் உறுப்பினர்களாக உள்ளனர். சுரதாவும் நானும் ஆலோசகர்களாக உள்ளோம்.

தமிழ்மணம் தொடர்ந்து இயங்குவதற்கு இவர்கள் அனைவரின் பங்களிப்பும் ஆர்வமும் பெரிதும் காரணம்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்சசியின் நுட்பரீதியான பங்களிப்பு மிக முக்கியக் காரணி. தமிழ்மணம் நுட்பத்தின் குழந்தை. தொடர்ந்து நுட்ப மேம்பாடுகள் செய்துகொண்டிருந்தாலே இது காலமாற்றங்களுக்கேற்ப பரிணாமித்து இயங்கமுடியும். ஏற்கனவே சொன்னதுபோல தமிழ்மணத்தின் நிரல்கள் ஒரு வழமையான மென்பொருளாளரால் உருவாக்கப்படாததால் தொழில்முறை உத்திகளைப் பயன்படுத்தி ஒரு குழுமுயற்சியால் மேம்படுத்துவதில் பல சவால்கள் ஏற்பட்டன. அப்போது தனியொருவராக பொறுப்பு எடுத்துக் கொண்டு இன்று கிட்டத்தட்ட தமிழ்மணத்தின் நுட்பம் முழுமைக்கும் ஆதாரமாக விளங்குவது தமிழ்சசி.

திரைமணம், செய்திகள், மறுமொழி திரட்டி என பல பரிமாணங்களாக விரிந்திருக்கும் தமிழ்மணம் தளத்தின் முதன்மை நுட்பவியலாளருக்கு வந்தனங்கள். இரு குழந்தைகளுடன், தற்போதைய சிக்கலான பொருளாதார மந்த நிலை சூழலில், தமிழ்சசி எடுத்துக்கொண்டுள்ள பணியை எண்ணிப் பார்த்து, தமிழ்மணத்தின் நுட்பச் சிக்கல்களைப் பற்றிக் குறிப்பிடும் நண்பர்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டுகிறேன். மாற்றாக பலரும் பங்களிக்க ஏதுவான வேறு தீர்வுகள் இருப்பினும் முன்வைத்தால் தமிழ்மணம் குழு பரிசீலிக்கும் என்று நம்புகிறேன். முக்கியமாக மென்பொருளாளர்கள் கவனத்துக்கு இதை வைக்கிறேன்.

தற்போதைய தலைவர் செல்வாவும் சரி, முன்னாள் தலைவர் சங்கரபாண்டியும் சரி, தலைவருக்குரிய முதிர்ச்சி, கண்டிப்பு, பொறுமை, போன்ற எல்லாக் குணங்களும் கொண்டு தமிழ்மணத்தை நடத்திச் செல்வதைப் பார்க்கிறேன். செல்வா கிட்டத்தட்ட நான் வலைப்பதிவுக்கு வந்த நாள்முதலே நல்ல நண்பர். ஈரோட்டுக்காரர். நுட்பத்திலும், இலக்கிய சமூக எழுத்துக்களிலும் சமமான ஈடுபாடு கொண்டவர். தேவைக்கேற்ப நுட்பப் பங்களிப்பும் செய்யக்கூடியவர்.

சங்கரபாண்டிக்கென்று வலைப்பதிவே கிடையாது! பின்னூட்டப் புகழ் சங்கரபாண்டியென்று வேடிக்கையாகச் சொல்வதுண்டு. பெரும் சமூக ஆர்வம் கொண்டவர். இணையத்துக்கு வெளியே தமிழ்ச்சங்கம் போன்ற பணிகளில் அதிகம் செயலாற்றுபவர். எங்க ஊர் மாப்பிள்ளை!

எங்கூர்க்காரர் கணேசனைப் பத்திச் சொல்வதானால் சொல்லிட்டே இருக்கலாம். நாசாவில் விஞ்ஞானி. அற்புதமான நினைவாற்றல். ஆனால் தினமும் மணிக்கணக்காகப் படிப்பது தமிழ். வெறுமனே படித்துக்கொண்டிராமல் தமிழ்க் கணிமைக்காகப் பல பங்களிப்புகளைச் செய்திருக்கிறார், செய்துகொண்டிருக்கிறார். பல பெரிய தமிழறிஞர்கள், நுட்பவியலாளர்களுடன் நெருங்கிய தொடர்பு. தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா சென்ற அறிஞர்களில் கணேசனுடைய ஹூஸ்டன் வீட்டு விருந்தோம்பலை நுகராதவர் இருக்கமுடியாது. எனக்குத் தான் வாய்க்கவில்லை!

’பெயரிலி’ ரமணியைப் பலருக்கும் தெரியும், ஆனால் சிலருக்கே புரியும்! மேலோட்டமான பொதுப்புத்தியில் அவரைப் பார்த்துவிட்டு சிறுமைப்படுத்தும் மனிதர்களைப் பார்த்துச் சிரித்துக்கொள்வதுண்டு. ஈழத்து நிகழ்வுகளால் காயப்பட்டிருக்கும் அவரைப் போன்ற நண்பர்களுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. தமிழ்மணத்தின் அன்றாட நிர்வாகப் பொறுப்பில் பலநாள் பங்களித்துள்ளார்.

சுந்தரவடிவேல், கலையார்வம் நாட்டுப்புறவியல் ஆர்வம் மிக்க நண்பர். பெட்னா விழா போன்ற நிகழ்வுகளில் நாட்டுப்புறக்கலை வடிவங்கள்மூலம் பல செய்திகளை உணர்த்தியிருக்கிறார்.

இளங்கோ, பாலு, கார்த்திக், தங்கமணி, சுந்தரமூர்த்தி, சிவா, பாலாஜி பாரி ஆகியோரும் சாத்தியத்துக்குட்பட்ட பங்களிப்பைத் தொடர்ந்து செய்கிறார்கள்.

இது சிறப்பான அமைப்பா என்றால் உறுதியாகச் சொல்லமுடியவில்லை. இன்னும் கொஞ்சம் நுட்ப ஆதரவு/பங்களிப்பு சாத்தியப்பட்டிருந்தால் தமிழ்மணம் இன்னும் உச்சங்களை எட்டியிருக்கும். ஆனால் சிறப்பான குழுவா என்றால் உரக்கச் சொல்லலாம் ஆம் என்று.

செவ்வாய், ஆகஸ்ட் 25, 2009

நட்சத்திரக் கேள்விகள் - ஒரு சிறிய மாற்றம்

ஆழந்தெரியாமக் காலை விடுவதே வேலையாப் போச்சுங்க!

நண்பர்கள் பலரிடமும் கேள்விகளை அனுப்பி, அவர்களும் பதில் அனுப்பியிருந்தார்கள். பதில்களைப் பார்த்து கொஞ்சம் மலைப்பாய்த் தான் இருந்தது. அத்தனை விதமான பார்வைகள், கருத்துகள். இவற்றை கேள்விக்கு ஒரு இடுகையாக 6 இடுகைகளில் இடுவதாக முதலில் எண்ணியிருந்தேன். ஆனால் இப்போது இந்தப் பதில்களை அப்படி இட்டால் வாசிப்பது மிக சிரமமாக இருக்கும் என்றும், அதனால் இவற்றை சிரமமெடுத்து எழுதியோருக்கு உரிய கவனம் கிடைக்காமல் போய், கருத்துக்கள் பலருக்கும் சென்று சேராமல் போய்விடும் என்ற பயம் வந்துவிட்டது. மேலும் ஏற்கனவே கோவி.கண்ணன் போன்ற நண்பர்கள் எழுதும் பதில்கள் ஒரு சங்கிலித்தொடராக அமைந்து வருகிறது. இந்த நிலையில் முன்பு போட்ட திட்டத்தில் ஒரு மாறுதல் செய்கிறேன். நண்பர்கள் புரிந்துகொண்டு உதவவேண்டும்.

அதாவது என் மின்னஞ்சல் வழியாக பதில் அனுப்பிய நண்பர்களை நான் கேட்டுக்கொள்வது, உங்கள் பதிவிலேயே இந்தக் கேள்வி-பதிலை ஒரு இடுகையாக இடுங்கள் என்பதே. இதனால் ஒவ்வொருவர் எழுதிய மணியான பதில்களும் அவற்றுக்குரிய கவனம் பெறுவதோடு, அவரவர் ப்திவில் நிரந்தரமாக சேமிக்கவும் ஏதுவாகின்றது. அந்தந்த பதில்கள் மேல் விவாதம் நடப்பதானால் அங்கேயே நிகழவும் இது வாய்ப்பளிக்கிறது. மேலும் மறுமொழிவழியாகவோ, தங்கள் பதிவு வழியாகவோ பதில் எழுதுபவர்களும் ஜோராச் செய்யுங்க.

என்ன நான் சொல்றது, சரிதானுங்களே!

அவரவர் பதிவில் இட்டபின் இங்கே ஒரு மறுமொழியாகத் தொடுப்புக் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

செஞ்சுடலாமா?

திங்கள், ஆகஸ்ட் 24, 2009

நட்சத்திரக் கேள்விகள் - 0

பெரிதாக ஒண்ணும் சிந்திக்காமலே, சிந்தனையாளர்போல பாவனை செய்வது எப்படி? கீழே உள்ள கேள்விகளைப் பாருங்கள். இதுக்குப் பதில் சொல்ல கொஞ்சமாவது யோசிக்கணும்தானே. அதனால்தான் திருவிளையாடல் தருமி போல நான் கேள்விகளோடு நிறுத்திக்கொண்டேன். நண்பர்கள் சிலரிடம் பதில் தருமாறு கேட்டேன். பலரும் அனுப்பியிருந்தார்கள். சிலர் அனுப்பிய பதில் பிரமாண்டமாய் இருந்தது. பதில்கள் பின்னால் வருகின்றன. இதோ கேள்விகள்:
  1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்?
  2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).
  3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும்முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?
  4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?
  5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?
  6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

சுமார் 30 பேரிடம் கேட்டு வாங்கிவிட்டேன். இதைத் தொகுத்துப்போடுவதே பெரிய வேலையாய் இருக்கும் போலிருக்கிறது, இன்னும் சிலரும் பட்டியலில் இருந்தார்கள், வேலைப் பளுவுக்குப் பயந்து அவர்களுக்கு எழுதவில்லை. பதில் தந்த நண்பர்களுக்கு நன்றி சொல்லும் வேளையில், கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பும் அனைவருக்கும் வரவேற்பைச் சொல்லி, மறுமொழியாக உங்கள் பதிகளை இடலாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு கேள்வியும் ஒருநாளாக 6 கேள்விகளும், பதில்களும் வரும். அந்தந்த இடுகையில் உங்கள் கருத்துகளைச் சொல்லலாம்.

புதன், நவம்பர் 14, 2007

புனித பிம்ப தமாஷ்!

பரண் என்று ஒன்று தமிழ்மணத்தில் இடதுபுறமாக சாத்தி வைக்கப்பட்டிருக்கிறது. யார் பார்க்கிறார்களோ இல்லையோ பழைய பெருச்சாளியான நான் அவ்வப்போது பார்ப்பேன். நடந்ததை அசைபோடுவது வயசான காலத்தில் நல்ல பொழுதுபோக்கல்லவா? :P

இன்று அதில் பார்த்த ஒன்று பயங்கர சிரிப்பை வரவழைத்தது பத்ரி சேஷாத்ரியின் கருத்துச் சுதந்தரம் என்ற இடுகைதான் அது. அதில் பத்ரி (மறுமொழி மட்டுறுத்தல் ஆசான்:), இவர் சொல்லபோய்த்தான் ப்ளாக்கரின் புதுசாய் அந்த வசதி வந்தது எனக்குத் தெரிந்தது, அதுக்குமுன்பே அது இருந்ததுபோலவும் நாங்கள் தான் ஒளித்துவைத்தது மாதிரியும் இன்னொரு கோஷ்டி சொல்லிக்கொண்டிருப்பது வேறுகதை) தன் மட்டுறுத்தல் கொள்கைகளாக அப்போது இவர் அறிவித்தது:
கருத்து ரீதியாக நான் செய்யப்போவது (இப்போதைக்கு) இதுதான்:

  1. spam, தேவையற்ற வெட்டி விளம்பரங்கள் ஆகியவை வெட்டப்படும்.
  2. மூன்றாவது மனிதர்களை (என்னை அல்ல) பற்றி ஒருவர் எழுதும்போது defamation/libel என்று நான் அதைக் கருதினால் அதனை வெளியிட மாட்டேன்.
  3. என்னைப் பற்றி எந்த விமரிசனத்தையும் வெட்டமாட்டேன் - ஆனால் கீழ்த்தரமான "கெட்ட" வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டால் அதை வெட்டுவேனா மாட்டேனா என்று இன்னமும் யோசிக்கவில்லை.
  4. ஒரு பதிவுக்குச் சம்பந்தமற்ற பின்னூட்டங்களையும் ஏற்றுக்கொள்ளப்போகிறேன்.

இவைதான் இப்பொழுதைக்கு...

அக்டோபர் 2005-ல் தமிழ் வலைப்பதிவர்கள் என்ற பெயரில் இயங்கிய சிலர் (ஏம்ப்பா, ஒரு தொழில்நுட்பப் பிரச்னையால சில பதிவுகளை தற்காலிகமான நீக்குனதுக்கு என்னமோ வலைப்பதிவுலகமே இருண்டு போனாமாரி கூவுனீங்களே, அந்தச் சிலரில் ஒரு டிக்கிட்டுங்கூட இன்னிக்கு பதிவுலகிலேயே காணமே, அட தமிழ்மணத்தை வுடு, தமிழ் வலைப்பதிவு உலகிலேயே காணமே, அதைக் கேக்குறேன். இதில் வேற நடுவுநிலை வியாக்கியானம் பேசிட்டு ரெண்டு நல்லவங்க வேற வீரப்பா இருந்துட்டாங்க, இன்னிக்கும் அவங்க வீம்பே அவங்களை நீரோட்டத்தில் சேரவிடாமத் தடுக்குது, ம், நல்லவங்க, வாழ்க:) ) என்னைச் சூழ்ந்து தர்ம அடி போட்டபோது என்னால் யாருக்கும் பதில் தர நேரமோ, பொறுமையோ, மனநிலையோ வாய்க்கவில்லை.
அப்போது நடுநிலைவியாதிகள் வேசம் போட்டுக்கொண்டிருந்த முக்கால்வாசி பதிவர்கள் 'எங்கேயோ மழை பெய்யுது, எங்கேயோ காத்தடிக்குது' என்ற மோன நிலையில் இருந்தார்கள்.

சில வாரங்களுக்கு முன் பரண்மூலம் அன்று நடந்த கூத்துக்களையெல்லாம் இன்று படித்து ரசித்து சில பதிவுகளில் என் மறுமொழியையும் இட்டுக்கொண்டிருந்தேன். அப்போதுதான் பத்ரியின் தமிழ் வலைப்பதிவர்களுக்கு சில ஆலோசனைகள் (இதற்கு அவர் முதலில் வைத்த தலைப்பு '... சில அறிவிப்புகள்', அது என் 'அறிவிப்பு' இடுகைகளைக் கிண்டல் செய்ய விரும்பி, பிறகு அப்பட்டமாக எழுதினால் தன் புனித பிம்பத்துக்கு பங்கம் வந்துவிடுமோ என்று எண்ணி இப்படி மாத்தீட்டாருன்னு இப்ப புரியுது, எளவு, அன்னிக்குப் புரியலை! ஆதாரம்: இன்னும் தமிழ்மணம் தரவுத்தளத்திலுள்ள தலைப்பு '...அறிவிப்புகள்'தான், இதுபற்றிய என் மறுமொழியையும் பார்க்கலாம்.)

அதில் முதல் வாக்கியம்: 'இது தமிழ்மணம் பற்றிய பதிவல்ல:-)'

இன்றைக்கு இவங்க அரசியல் எல்லாம் புரிந்துவிட்டதால், இதை விட்டுவிட மனமில்லாமல் ஒரு கேள்வி கேட்டேன்: 'ஊர் உலகத்தில் நடப்பதைப்பற்றியெல்லாம் எழுதுபவருக்கு தன்னைச்சுற்றி நடப்பதைப் பற்றி எழுத ஒண்ணுமில்லையா? நல்லாருக்கு உங்கள் பரந்த பார்வை' (இந்தாளு இதைக்கூட நிறுத்தி வைப்பாருன்னு தோணாம அதை சேமிச்சுக்கூட வைக்காமப் போயிட்டேன்!)

அதுக்கு முன் வேறு இடுகைக்கு நான் எழுதிய மறுமொழிகள் உடனுக்குடன் மட்டுறுத்தப்பட இது மட்டும் பலநாள் கிடந்தது. இன்னொருமுறையும் எழுதிக் கேட்டேன். ம்ஹும். பெட்டி பூட்டுனது பூட்டுனதுதான்.

இதில் என்ன தனிமனிதத் தாக்குதல், என்ன 'கீழ்த்தரமான கெட்ட வார்த்தைகள்', ஒரு எளவும் புரியலே!

புனித பிம்ப .சிருகள் வாழ்க!

டிஸ்கி:
1. 'நான் இதுவரைக்கும் 900 கமெண்டு போருக்கேன் சார்வாள் ஒண்ணையும் நிறுத்தலை, தங்கம்'னு சர்டிபிகேட் கொடுக்கறவங்க அப்பீட்டாகிக்குங்க. இங்க, வராததைப் பத்தி மட்டும்தான் பேச்சு.
2. 'இங்கே மட்டும் மட்டுறுத்த மாட்டியா, எல்லாம் போடுவியா?'ன்னு கேக்கறவங்களுக்கு 'ராசா, இது ஒரு *சர்வாதிகார*, *த..க் கம்மனாட்டியின்* வலைப்பதிவு, இங்க நான் வெச்சதுதான் சட்டம், இஷ்டமிருந்தா எழுது இல்லாட்டிப் போயிட்டே இரு'ங்கறதுதான் பதில்.
3. சாரைப் பத்தி அறிவுத்திருட்டு அது இதுன்னு எழுதி ஒய்ஞ்சவங்க எதுனா இங்க வந்து கும்முனா, 'அது என்னோட சட்ட அறிவுக்குட்பட்டே மட்டுறுத்தப்படும், எதுக்கும் நான் கியாரண்டி இல்லை'ங்கைறதையும் சொல்லிடறேன்.
4. 'பட்டறை மேளாவுல பலரும் பேசுனதையெல்லாம் வலையேத்துனவர் என் உளறலை ஏன் ஏத்தலைங்கற காண்டுலதான் கரிக்க்கிறான் வயத்தெரிச்சல் புடிச்சபய'ன்னாலும், 'ஆமா அப்படின்னே வெச்சுக்க, இப்ப அதுல என்ன தப்புங்கறேன்'ன்னு இப்பவே கேட்டுக்கர்றேன். அதுமட்டுமில்ல, இந்தியா டுடே போட்டாவிலிருந்து, ரிப்போர்ட்டர்ல எம் பொண்டாட்டி சொன்னதா அவனவன் விருப்பத்தை எளுதிக்கிட்டதிருந்து, சிஎன்என் ஐபிஎன் சன் டிவி விடியோவில் தமிழ்மணப் பக்கத்தையே காமிச்சுங்கூட தமிழ்மணம்க்கிற லோகோ வராமப் பாத்துகிட்ட கதையெல்லாம் வெளிவரும், கபார்தார்!

மக்களே, கடைசியா, சார் எழுதறதெல்லாம் 'politically very correct', ஆனா நான் சொல்லிக்கறது 'people, be alert!'

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...