செவ்வாய், செப்டம்பர் 30, 2003

ஆண்பிள்ளை சமையல்

சும்மா ஒரு விஷுவலுக்காக, என் சமையலல்ல :-)

எங்கப்பாவுக்கு சமைக்கத்தெரியும். அவர் அண்ணந்தம்பிகள் எல்லாரும் சமைப்பார்கள். சித்தூரில் ஹோட்டல் நடத்திய ('டீக்கடைன்னு சொல்றது, இதில் என்ன பெருமை?' - இது என் இல்லத்தரசி) குடும்பம் என்பதால் எல்லாருக்கும் சமையல் தெரிந்திருந்தது. சென்ற வருடம் வரை என் பெரியப்பா கடை நடத்தினார். அவருக்குக் கடை ஒன்று தான் உலகம். எந்த ராஜா எந்தக் கோட்டையைப் பிடித்தாலும் கடை நடக்கும்.

ஆனால் எனக்குத் தெரிந்து எங்கப்பா கடை நடத்தினதில்லை. அவர் ஒரு சகலகலாவல்லவர். நிறையத்தொழில் பார்த்திருக்கிறார். அப்பா போனபிறகு அம்மா ரொட்டி வெல்ல (bread winner, ஹி ஹி..:) வேண்டி வெளியேபோக வேண்டிவந்ததால் நானும் என் அண்ணனும் சமைத்துப் பழகினோம். பாலிடெக்னிக் படிக்கும்போதுதான் என் சமையல் சாம்ராஜ்யத்தின் பொற்காலம். ரொம்ப வெரைட்டியெல்லாம் தெரியாது. ஏதோ ஒரு பருப்பு அல்லது பயறு, புளி ரசம் அவ்வளவு தான். அம்மா, அண்ணன் ரெண்டு பேரும் உழைக்க, நான் நிறைய முறை சமைப்பேன். என் அண்ணன் கல்யாணத்துக்கப்புறம் கிட்டத்தட்ட அதை மறந்தே விட்டார் ('நான் இல்லீன்னா பசங்களுக்கு முன்னாடி அப்பா புரோட்டாக் கடையில நிப்பாரு' - இது என் அண்ணி). ஆனால் என்னால் அவ்வப்போது சமையலறையில் சாகசம் பண்ணுவதை நிறுத்த முடியவில்லை. அதற்கு இன்னொரு காரணம் என் குழந்தைகள்.

நண்பர் Dr. கண்ணன் கொரியக் கூட்டணியில் மாட்டிக்கொண்டு சமைக்க ஆரம்பித்தபோது எனக்கு இரண்டு வருடம் முன் அமெரிக்கா வந்து சுயசமையல் பண்ண ஆரம்பித்தது நினைவுக்கு வந்தது. ஒரு சமயம் சமையல் செய்ய ஆர்வமாய் இருக்கும், இன்னொரு சமயம் யாராவது ஒரு கப் தயிர்சாதமாவது செய்துவைத்திருக்க மாட்டார்களா என்று ஏக்கமாக இருக்கும். கண்ணன் அவர்கள் அனுபவம் என்ன என்பது அவர் சொன்னல்தான் தெரியும். அவருடைய சமையல் குறிப்பு சேகரத்தில் நானும் நேற்று ஒரு பங்களித்தேன். ஆனால் அது சிக்கனமான சித்தூர் சமையலுமல்ல, ஏனோ தானோ சுயசமையலுமல்ல. உண்மையில் ஆர்வத்துடன் இந்த வாரம் கற்றுக்கொண்டு செய்த சமையல்.

இத்தனைக்கும் இங்கு என் மனைவி சமையலைப் பாராட்டாதவர் இல்லை. இங்கு எங்களைச்சுற்றி உள்ள தமிழ்ப்பெண்கள் பெரும்பாலும் கலயாணமானதும் அடுத்தவாரம் அமெரிக்கா வந்தவர்கள். எனவே சமையல் அனுபவம் கம்மி. ஆனால் என் மனைவியோ எல்லா R&Dஐயும் ஏற்கனவே முடித்துவிட்டு இங்கு வந்தவள். அதனால் அவள் சமையலைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும்...(அய்யோ அடிக்காதே, அடிக்காதே)

இருந்தாலும், அவ்வப்போது என்னைச் சமைக்கச்சொல்லிக் வேண்டுகோள் ('அன்பு'க் கட்டளை) விடுவாள். குழந்தைகளும் ஆமோதிப்பார்கள். ஏனென்றால் நான் சமையலில் பண்ணும் R&D தான். ரவாதோசை, சுட்ட காய்கறிகளிருந்து சென்ற வாரம் பண்ணிய தால் மக்கானி வரை. இயற்கையிலேயே R&D ஆர்வம் பொங்கும் மண்டையாதலால் இப்போது வேறு எதிலும் R&D பண்ணமுடியாமல் இதில் பண்ணுகிறேன் என்றும் கொள்ளலாம்.

இதில் ஒரு சவுகர்யம், அவள் பண்ணாத ஐட்டம் ஆனதால் அனாவசியமாக போட்டி, பொறாமை இல்லை. நான் ஆரஅமர நேரம் எடுத்து பண்ணிமுடிப்பதற்குள் பசியால் துடிக்க ஆரம்பித்து விடுவார்கள், எனவே எதைச்செய்து போட்டாலும் 'ஆஹா சூப்பர்' என்று பெயர்வேறு கிடைக்கும் (பசி ருசியறியாது)

வருடம் 9 மாதம் குளிரில் வீட்டைவிட்டு வெளியேவரமுடியாத ஊரில் (இன்று இரவு 3 degC குளிர்) மாட்டிக்கொண்டதால், இது ஒரு நல்ல பொழுது போக்கும் கூட. இங்கு மின்னடுப்பு, நுண்ணலை அடுப்பு என்று வித்தியாசமாய் சோதனை செய்ய வசதியான கட்டமைப்பு வேறு. அதிலும் இப்போது சுத்த சைவர்களாகி விட்டதால் காய்கறிச்சமையலில் புதிதுபுதிதாய் ஆராய்ச்சி வேறு நடக்கிறது.

முடிந்தவரையில் ஆண்கள் அவ்வப்போது சமையலை ஒரு கை பாருங்கள், குடும்பத்துக்கே பொழுதுபோகும்.

சனி, செப்டம்பர் 27, 2003

மனிதனின் உணவு தர்மம் - 2

அலசல் விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறது.

உடல்கூறு அடிப்படையில் மனிதன் சைவ உணவு உண்ணும் விலங்குகளையே பெரிதும் ஒத்திருக்கிறான் என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆதியில் மனிதன் சைவம் தான் உண்டிருக்க வேண்டும், பிறகு காட்டுத்தீயில் வெந்த மாமிசத்தை எதேச்சையாக உண்ணப்போக, 'ஹய்யா, இது ரொம்ப டேஸ்ட்டா இருக்கே, ஏன் நீ இந்த மாதிரி டிஷ்ஷெல்லாம் பண்றதே இல்ல'ன்னு பொண்டாட்டிகிட்டே கேட்டிருக்கணும். அவளும் மாமா கேக்கறாங்களேன்னு பாய் கடையிலே கறிவாங்கிவந்து சமையல் பண்ணியிருக்கணும்...ச்சே கனவு சரியா மேட்ச் ஆக மாட்டெங்குதே.

ஆனால் இந்தக் காட்டுத்தீ தியரி உண்மையா என்பதும் தெரியவில்லை. பனிப்பிரதேசத்தில் வாழும் (வாழ்ந்த?) எஸ்கிமோக்களை எடுத்துக்கொள்வோம். அவர்கள் பெரும்பாலும் பச்சை மாமிசத்தை உண்டார்கள் என்று ஒரு கருத்து. இந்த எஸ்கிமோ என்ற வார்த்தையே 'பச்சை மாமிசம் உண்பவன்' என்பதில் இருந்து வந்தததாகவும் ஒரு வாதம்.


(c) Jean Clottes

ஃப்ரான்சில் Chauvet (ஷாவே?) குகைகளில் ஆதிமனிதன் காட்டெருமையை வேட்டையாடுவதை கரிக்கட்டையால் படம் வரைந்து இருப்பதையும், கார்பன் டேட்டிங் முறைப்படி அவை இன்றைக்கு 31000லிருந்து 32000 வருடங்களுக்கு முற்பட்டவை என்று கண்டிருப்பதையும் படிக்கிறோம்

அப்படியானால் எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன் அவன் அந்தக் காட்டுத்தீயில் வெந்த கறியை உண்டான்? அசைவப் பிரியர்கள் (வெறியர்கள்?) பங்குகொண்ட ஒரு வலைமடலாடலில் இன்னும் சில தகவல்களைக் கண்டேன். இந்த உடற்கூறு ஒப்புமையில் ஒரு விதத்தில் மனிதன் மாமிசபட்சிணிகளை ஒத்திருக்கிறான் என்று வாதிடுகிறார் ஒருவர். இரு கண்களாலும் ஒரே இடத்தைப்பார்க்கும் திறன் உள்ள விலங்குகள் மட்டுமெ முப்பரிமாணத்தை (Stereoscopic vision) அவதானிக்க முடியும். வேட்டையாடி உண்ணும் சிங்கம், புலி, இவைகளைப்போல மனிதனுக்கும் முன்நோக்கிப் பார்க்கும் இரு கண்கள் உள்ளன. ஆடு மாட்டுக்கெல்லாம் பக்கவாட்டில் பார்க்கும் வண்ணம் தான் கண்கள் உள்ளன. எனவே மனிதன் வேட்டையாடப் பிறந்தவன் என்கிறார் இவர். அப்படியானல் இந்த அற்பக்குரங்கு சைவம் சாப்பிடுகிறதே, அதற்கு நம்மைப்போலவே முப்பரிமாணப்பார்வை தானே, ஒரே குழப்பமாய் உள்ளது இந்த வாதம்.

இன்னொரு அலசல். மனிதன் சைவப்பிராணியாக இருந்து மாறியிருப்பானென்றால், அதுவும் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருக்க வேண்டும் (குறைந்தது 30 000 ஆண்டுகளுக்கு முன் என்பது சான்றுடன் நிரூபிக்கப்பட்டிருக்கும்போது, உண்மையில் லட்சக்கணக்கில் இருக்கலாமே). அப்படியானால் இத்தனை ஆண்டுகளில் அவன் உடல்கூறு கொஞ்சமாவது அசைவ விலங்குகளை நோக்கி நகர்ந்திருக்கவேண்டாமோ, டார்வினின் பரிணாமக்கொள்கையின்படி ? ஒருவேளை இந்த இருகண்பார்வை அதைதான் காட்டுகிறதோ. எனக்கு இப்போதெல்லாம் முன்பு அளவுக்கு டார்வின் மேல் நம்பிக்கை இல்லை. சந்தேகத்துடன் தான் பார்க்கிறேன்.

அந்த மடல்களில் ஒருவர் வாதிட்டிருந்தார், மனிதன் உடல் சைவ உணவிற்கும், அசைவ விருந்திற்கும் (Plants are staple, meat is treat) பொருந்துவதாக.இதைத்தானே செய்து வந்திருக்கிறது எம் தமிழ்ச் சமுதாயம். எங்கள் ஊரில் வாரத்தில் ஒரு நாள் தான் கறிக்கடையே திறக்கும். ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் உணவு ஆட்டுக்கறிக் குழம்பு என்பது எழுதப்படாத சட்டம். பிறகு என்றாவது ஒரு விடுநாளில் வந்து சேரும் ஒரம்பரைகளுக்குப் படைக்க கோழிகள் இருக்கவே இருக்கின்றன.

காடுகளில் இயற்கையாக வளர்க்கப்படும் ஆடுகளையும், வீடுகளில் குப்பை கூளங்களை உண்டு வளரும் கோழிகளையும் விருந்தாக மட்டும் உண்ணும் வரை எல்லாமே சரியாகத்தான் இருந்தது. இறைச்சிக்காகவே விலங்குகளையும், பறவைகளையும் தொழில்முறையாக வளர்க்க ஆரம்பித்தபின் தான் எல்லாச்சிக்கலும். இந்தத் தொழில் முறை இறைச்சி விவசாயம் இந்தப் பூவுலகின் இயற்கை வளங்களுக்கு எப்படி எதிரியாகிறது என்பதையும், மனிதன் முழுநேர மாமிச பட்சிணியானால் மேலும் என்னென்ன விளைவுகள் என்பதையும் இன்னொரு நாள் தொடர்ந்து அலசலாம்.

வெள்ளி, செப்டம்பர் 26, 2003

அரிச்சந்திரன் மகன்

சில வருடங்களுக்கு முன் சன் டிவியில் ஒரு தொடர். குறைந்த கதாபாத்திரங்களைக் கொண்டு நிறைவாய் இருந்த தொடர். 'ரமணி vs. ரமணி' என்று, பிரித்விராஜ் &வாசுகி என்று நினைக்கிறேன், அவர்கள் இருவரும் நடித்தது. நல்ல காமெடி, ஆனால் வக்கிரம் இல்லாமல், மெல்லியதான காமெடி. யாருக்குப் பிடித்ததோ இல்லையோ, எனக்கும் என் மனைவிக்கும் ரொம்பப் பிடித்தது.

அதில் இறுதியாக ஒரு தத்துவம் வரும். 'ஒவ்வொரு பெற்றோரும் தான் எப்படியெல்லாம் இருந்திருக்க வேண்டும் என்று உள்மனதில் ஏக்கம் கொண்டுள்ளார்களோ, அப்படியெல்லாம் தங்கள் குழந்தைகளை வளர்க்க ஆசைப்படுவார்கள்' என்பது போல். (பார்த்து நாளாச்சில்லையா, கரெக்டாச் சொல்லமுடியலே)

நேற்று என் மகனை ஒரு விஷயத்திற்காகக் கடிந்து கொண்டபோது அதைத்தான் நினைத்துக் கொண்டேன். அவன் எப்போதும் தன்னுடன் வைத்து விளையாடும் Gameboy Advance என்ற கைக்கடக்கமான வீடியோ விளையாட்டு அது. கொஞ்சம் விலையான பொருள் ($100).


gameboy advance sp pictures

நேற்று யாரோ ஒரு அண்டை வீட்டுப் பையன் விளையாடக் கேட்டான் என்று கொடுத்து விட்டு வந்ததாகச் சொன்னான். இந்த அமெரிக்கக் கிராமத்தில் அப்படி எளிதில் ஏமாந்துவிடும் வாய்ப்பு இல்லையென்பதால் 'ஏண்டா கண்டவனிடம் கொடுத்தாய்?' என்று கோபிக்கவில்லை நான். ஆனால் அடுத்த கேள்வியில் கோபம் வந்து விட்டது.

'அவன் பேர் என்ன?'

'தெரியலை'

ஏதோ தமிழ்ப் படத்தில் காதலில் விழுந்துவிட்ட ஹீரோவிடம் நண்பர்கள் கேட்பதுமாதிரி இல்லை?

'கழுதை, பேர் கூடத்தெரியாதவனிடம் எப்படிக் கொடுத்தாய்? என்ன புளுகிறியா?' என்று எகிறிவிட்டேன்.

ஒருவேளை எங்காவது தொலைத்துவிட்டு, அதைச்சப்புக்கட்ட இப்படி உடறானா?

'இல்லை எனக்கு அவன் வீடு தெரியும்' என்றான்.

'சரி, cartridgeஐக் கொடுத்தியா, முழு Game-ஏவா?'

ஏனென்றால் இவன்கள் இந்த cartridge-ஐ அப்பப்ப பண்டமாற்று பண்ணிக்கொள்வான்கள்.

'எல்லாம் தான்'

எனக்கு நம்பிக்கையில்லை. அதற்குக் காரணம் இருந்தது. கோவையில் GCTயில் பகுதிநேர பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும்போது கையில் இருந்த ஒரே சொத்தான சைக்கிளை, ராத்திரி பள்ளியில் அமர்ந்திருக்கும்போதே எவனோ திருடிக்கொண்டு போக, அங்கும் இங்கும் தேடி, கல்லூரி வளாகத்தில் குடியிருந்த பேராசிரியரிடம் ஓடிச்சென்று புலம்பிவிட்டு பின் வீட்டுக்கு வந்து அம்மாவிடம் சொல்லத்தைரியம் இல்லாமல் நண்பனிடம் இருப்பதாகப் பொய் சொன்னவனின் மகன் அல்லவா? எனவே 'தன்னைப்போல் பிறரையும் நினை' என்ற மந்திரப்படி என்னைப்போலவே என் மகனும் பொய் சொல்கிறான் என நினைத்ததில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

என்னையே நான் கடிந்து கொண்டேன், அடுத்த நாள் என் மகன் தன் பள்ளியிலிருந்து வரும்போதே அந்த விளையாட்டுக் கருவியுடன் வரும் வரை!

'எப்படிடா உன்கிட்டயே இருக்கு இப்ப?'

'அதுவந்து...நான் Game Cartridge மட்டும் தான் அவன் கிட்டக் கொடுத்திருக்கிறேன், முழுக் கருவியல்ல' என்றானே பார்க்கலாம்.

'அப்புறம் நேத்து என்கிட்ட முழுதும்னு சொன்னே?'

'அப்படித்தான் நெனச்சேன், ஆனா இப்ப ஸ்கூல் பேக்கில பார்த்தப்பத்தான் தெரிஞ்சது'

எனக்குத் தலை சுற்றியது. இவன் எனக்கு அப்பனா இருக்கான்!

இவன் என்ன சொல்லுகிறான்? எனக்கு இன்னும் புரியவில்லை. இப்போது அந்தப் பேர் தெரியாத நண்பனின் வீட்டுக்குபோய் அந்த cartridgeஐ வாங்கப்போய் இருக்கிறான். வந்தால்தான் தெரியும்.

புதன், செப்டம்பர் 24, 2003

இப்போதைக்கு ரோச்சஸ்டர்

Rochester நகரம் நியூயார்க் மாநிலத்தில் சொல்லிக்கொள்ளும்படி பெரிய ஊர். உலகப்புகழ் பெற்ற நயாகரா அருவி இங்கிருந்து ஒண்ணரை மனி நேரம். (அதுக்காக எததனை வாட்டி பாக்க முடியும், போர்! ஒரு குத்தாலம் மாதிரி குளிக்க முடியுமா, அட நம்ம மங்கி ஃபால்ஸ் போனாக்கூட திருப்தியா நனையலாம், இங்க வெறும் காட்சி தான்!)

ஜெனஸீ நதியிலிருந்து ரோச்சஸ்டர் நகரின் கோலம்


நகருக்குள் நகரும் நதியில் மேலருவி (Upper falls)


கீழருவி (Lower falls)



இந்தப்படங்களில் நீங்கள் பார்ப்பது நயாகராவல்ல. இந்த ஊருக்கென்று இருக்கும் குட்டி நயாகரா! இந்த ஆற்றின் பேர் ஜெனஸீ (Genessee)

World's imaging capital என்று ரோச்சஸ்டருக்குப் பெயருண்டு. ஒளிப்பிம்பவியலை (imaging) பின்னணியாகக் கொண்ட மூன்று உலகளாவிய பெரும் நிறுவனக்கள் இங்கு இயங்குவது தான் காரணம். அவை நான் பணிபுரியும்

Xerox Corporation - அலுவலகங்களில் உபயோகப்படுத்தும் பலவித வணிகக் கருவிகள் தயாரிப்பில் உள்ள நிறுவனம்
Kodak Corporation - புகைப்படக் காமிராக்கள், படச்சுருள்கள் போன்றவை இவர்கள் தயாரிப்பு
Baush and Lamb - கண்ணோடு உள்ளணியும் கண்ணாடிகள் (contact lenses) இவர்களின் தனிச்சிறப்பு.

இவர்களில் பெரியண்ணன் Xerox தான். ஆனால் இப்போது உடம்பு இளைக்க உடற்பயிற்சி செய்து இளைத்துப் போன பெரியவர். எங்கள் வளாகத்தில் மட்டும் 8000 பேர் வேலை செய்கிறார்கள். ஆனால் ஒரு காம்பவுண்ட் சுவர் கிடையாது என் பது என் இந்திய மனத்துக்கு ரொம்ப வித்தியாசமாகப்பட்டது. காரை நிறுத்திவிட்டு நேராக Electronic செக்யூரிட்டிக்கு வணக்கம் சொல்லிவிட்டு அடுத்த நிமிடம் என் அறையில் இருப்பேன். எப்படி இவ்வளவு எளிதாய் நடத்துகிறார்கள் என்று ஆச்சர்யமாக இருந்தது. அவ்வப்போது 'செக்யூரிட்டி' என்று பறையடித்துக் கொண்டு கார்கள் கடக்கும், உள்ளே புன்முறுவலுடன் 'கார்ட்' இருப்பார். அவ்வளவு தான். ஏதோ இலட்சிய நகரம் போல் எல்லாம் இருந்தது. சென்ற மாதம் 12ந்தேதி காலை 10 மணிக்கு அந்த வங்கிக்கொள்ளையன துப்பாக்கியைத் தூக்கும் வரை.

-தொடரும்

திங்கள், செப்டம்பர் 22, 2003

காலங்கடந்த 'நீதி'

மாவட்ட நீதி மன்றம் அளித்த தீர்ப்பை உயர்நீதி மன்றம் தலைகீழாக மாற்றுவதைக் கண்டிருக்கிறோம். அதை உச்ச நீதிமன்றம் மீண்டும் மாற்றி எழுதுவதையும் பார்க்கிறோம். அப்படியானால் இதில் யார் சரி? இது பதில் சொல்ல முடியாத கேள்வி. மாற்றி எழுதப்பட்டதனாலேயே ஒரு நீதிமன்றம் தந்த தீர்ப்பு தவறாகி விடுமா? யார் அதிகாரம் படைத்தவர்களோ அவர்கள் சொல்வதே சரியாகிறது. மாவட்ட நீதிபதியை விட உயர் நீதிமன்ற நீதிபதி அதிகாரம் படைத்தவர். அவரை விட உச்ச நீதிமன்ற நீதிபதி அதிக அதிகாரம் படைத்தவர். சிங்கிள் பெஞ்ச்சை விட டிவிசன் பெஞ்ச், அதைவிட ஃபுல் பெஞ்ச் அதிகாரம் படைத்தது. (நன்றி: நண்பர் சுபாஷ், இந்த வார்த்தையெல்லாம் அவர் வாயால் சொல்லிக் கேட்டிருக்கிறேன்) அவ்வளவுதான் உண்மை. அதற்குமேல் இதில் உண்மையைத் தேட முடியாது.

இந்தவாரத்தில் முதல் ஆண்டு நிறைவைக் கொண்டாடப் போகிறது டான்சி வழக்கின் தீர்ப்புக்கான காத்திருப்பு. இதில் சட்டப்படி என்ன தீர்ப்பு வேண்டுமானாலும் வரலாம். சும்மா ஒரு வாதத்திற்காக செல்வி JJவுக்கு எதிரான தீர்ப்பு வருவதாகக் கொள்வோம். அதை நம் ஜனநாயகம் எப்படி நேர்கொள்ளப் போகிறது? ஒரு வருடம் முன்பே முடிந்து விட்டது வழக்கு விசாரணை. நீதி வழங்கலுக்கு இந்தக் காத்திருப்பு எந்த விதத்திலாவது உபயோகம் ஆகியிருக்குமா? கனம் நீதிபதிகள் கனமான சட்டப் புத்தகங்களை மீண்டும் மீண்டும் படித்து சிறப்பான தீர்ப்புத்தர இந்த நேரம் உபயோகப் பட்டிருக்குமா? என்னால் ஆம் என்று கூற முடியவில்லை. ஆனால் இந்த கால தாமதத்தினால் ஒரு குற்றவாளி தண்டனை பெறுவது தள்ளிப் போனது என்பது மட்டும் இல்லாமல், அவரால் ஆளப்பட்ட ஒரு மாநில மக்கள் அனைவரும் இந்த ஒரு வருடமும் தண்டனை பெற்றார்கள் என்று தான் கருதவேண்டும். சிறைக்குள் இருக்க வேண்டிய ஒருவரால் ஒருவருடம் (அதுவும் ஏதேச்சதிகாரமாய்) ஆளப்பட்ட மக்களை வேறு என்னவென்பது? இந்தத் தண்டனை யாரால்? கனம் நீதிபதிகளால், ஏன்? அவர்கள் ஆழ்ந்த சிந்தனைக்கு தேவைக்கு அதிகமான நேரம் எடுத்துக் கொண்டதால். இந்தப் பழியை கனம் நீதிபதிகள் உதற முடியுமா?

மாறாக, செல்வி JJவுக்கு சாதகமான தீர்ப்பு வருவதாக வைத்துக் கொள்ளுவோம். அதனால் எந்தப் புரட்சியும் நடக்கப் போவதில்லை. வேண்டுமானால் சில குரல்கள் அந்தத் தீர்ப்பை விமர்சித்து எழலாம். அவர்களும் எங்கே தங்கள் மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்துவிடுமோ என்று பயந்து பயந்து மேம்போக்காய் எழுதுவார்கள். இந்தப் பின்னணியில் இந்தக் காலதாமதம் யாருக்கும் பெரிதாய் தெரியப் போவதில்லை. இது நீதிபதிகளுக்கு எந்தப் பழியையும் கொண்டு வரப் போவதில்லை.

ஆகவே, கனம் நீதிபதிகள் இந்த பாதுகாப்பான தீர்ப்பைத் தான் தரப் போகிறார்கள் என்று சொல்வேன். நீதியரசர்கள் என்னென்ன வெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது! நம் பாடு தேவலை. என்னை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருக்கச் சொன்னால் நான் மாட்டேன் என்று ஓடி வந்து விடுவேன் :-)

முன்பெல்லாம் நீதிமன்றத்தில் நீதி கிடைக்கிறதோ இல்லையோ, தீர்ப்பு கட்டாயம் கிடைத்தது, இப்போது அதற்கும் பஞ்சம்!

திருக்குறள் தரும் நிர்வாகக் கோட்பாடுகள் -1

அப்போது ஒரு வளரும் பொறியியல் நிறுவனத்தில் வடிவமைப்புத்துறையின் தலைமைப்பொறுப்பில் இருந்தேன். தொழிற்கூடத்தில் தயாராகும் பாகங்கள் ஒவ்வொன்றுக்கும் செய்முறைக் குறிப்புக்களை எழுத்துவடிவத்தில் பதிப்பிக்க வேண்டி வந்தது. ISO:9001 தர உறுதிச் சான்றிதழ் பெறுதல் என்ற எங்கள் தலைவரின் இலட்சியம் இந்த வேலைகளை முடுக்கி விட்டிருந்தது. குறிப்புக்களைப் பதிப்பிக்கும் விதமாய் ஒரு படிவத்தை முதலில் வடிவமைத்தோம். அந்தப் படிவத்தில் முக்கியமான கட்டங்கள் எவை என்றால்:

1. பாகத்தின் அடையாள எண், பெயர்
2. மூலப்பொருளின் அடையாள எண், பெயர், அளவு
3. மூலப்பொருளில் ஆரம்பித்து செயல்படுத்த வேண்டிய தயாரிப்பு முறைகளின் அட்டவணை. ஒவ்வொரு அடிப்படை செயலுக்கும் கீழ்க்கண்ட விவரங்கள்:
3.1 செயல்
3.2 எந்திரத்தின் பெயர்
3.3 கருவியின் பெயர்
3.4 செய்ய ஆகும் நேரம்
3.5 செய்யும் ஆலையின் பிரிவு/இடம்

இவை அனைத்தும் தெளிவாகக் கொடுக்கப்பட்டால் எந்தப் பாகத்தையும் எப்படித் தயார் செய்வதென்று யாரையும் கேட்காமல் தெரிந்து கொள்ளமுடியும். A4 தாள் அளவில் படிவத்தை கட்டங்கள் கொண்டு அமைத்தோம். அப்போது தயாராகிக்கொண்டிருந்த பாகங்கள் அனைத்திற்கும் இவை சரியாகப் பொருந்தினதில் திருப்தி.

பிறகு ஒருநாள் திருக்குறளைப் புரட்டுகையில் ஒரு குறளைக்கண்ட கண் மேற்கொண்டு நகராமல் நின்றது. அது:

பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல். :675
(பொருட்பால், அமைச்சியல், 2.2.5 வினைசெயல்வகை)

செய்முறை விளக்கத்தை எவ்வளவு சுருக்கமாய், ஆனால் எவ்வளவு நிறைவாய் எழுதியிருக்கிறான் என் பாட்டன்!
பொருள்:
மூலப் பொருள் (raw material), செய்யப்படவேண்டிய பொருள் (objective) இரண்டுக்குமே பொதுவானது
கருவி:
எந்திரம், செய்கருவி, கைக்கருவி என் அனைத்தையும் அடக்கும் ஒரு பெருஞ்சொல். That which transforms! Machine tool, custom made tool (mold, press toll, jigs&fixtures) and hand tools.
காலம்:
விளக்கம் தேவையில்லை. ௾ருந்தாலும் சொல்லலாம். காலம் இரு வகைப்படும். நேரம் மற்றும் வரிசைக்கிரமம் (இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என வரிசைப்படுத்த, அதாவது எது முதல், எது அடுத்து என வரிசைப்படுத்த.) இங்கு அடிப்படைச்செயல்களின் வரிசைப்படுத்த வேண்டிய அவசியத்தையும் 'காலம்' குறிக்கும். செயல் X, செயல் K -க்குப் பிறகு தான் வரவேண்டும் என்றால் பிறகு தான் வரவேண்டும்.
வினை:
செய்முறை, அதாவது வெட்டுதல், இழைத்தல், ஒட்டுதல் போன்ற செயல்கள். அட்டவணைப்படுத்தப்படும் செயல்கள். activity/process
இடம்:
செயல் செய்யப்படவேண்டிய இடம். இது ஆலைபிரிவின் பெயராக இருக்கலாம், அல்லது ஆலைக்கு வெளியே அனுப்பி வாங்கவேண்டிய செயல் என்றால், அப்படி அனுப்பவேண்டிய இடத்தின் பெயராய் இருக்கலாம்.

இவை ஐந்தினையும் 'இருள்தீர' எண்ணிச் செய்யச்சொல்கிறான். எப்போது இருள் தீரும்? தெளிவாகப் பட்டியலிட்டு, அதை சாசனம் செய்து, தேவையான இடங்களில் பார்வைக்கு வைத்தால், பிறகென்ன ஆட்கள் 'இருள்தீர', ஐயம் தெளிவுற தெரிந்து கடைப்பிடிப்பார்களே!

இதில் இன்னுமொரு சிறப்பு இந்தக்குறளை எங்கு வைத்திருக்கிறான் பாருங்கள், பொருட்பாலில், 'அமைச்சியலி'ல். நிறுவனத் தலைவர் அரசர் என்றால் துறைத்தலைவர்கள் அமைச்சர்கள் அல்லரோ? எனவே என் போன்ற துறைத்தலைவர்கள் அறிந்து கொள்ள வேண்டி இதை அங்கு வைத்திருக்கிறான். அய்யா வள்ளுவரே, உம் ஒருவராலேயே எம் தமிழ் வாழும், அதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஞாயிறு, செப்டம்பர் 21, 2003

மெல்லிசை பாசுரங்கள்

திவ்ய பிரபந்தங்களை உணர்ந்து படிக்க ஆரம்பித்தபிறகு அவற்றை வாய்விட்டுப் பாட வேண்டும் என்றும் ஆசை ஏற்பட்டது. (SPB இடமிருந்து பாடம் படித்தும், ஆசை விடவில்லை) இணையத்தில் ஒலிவடிவத்திலும் கிடைத்தது. ஆனால் அவை மந்திர பாராயணம் போல் இருந்ததே அன்றி மனதில் பச்சென்று ஒட்டிக்கொள்ளும்படியாய் இல்லை. அப்போது உன்னிகிருஷ்ணன் பாடிய 'பச்சை மாமலை போல் மேனி' musicindiaonline இணைய தளத்தில் கிடைத்தது. என்னமாய் இழைந்து பாடியுருக்கிறார் மனுஷன்! ம்.. நம்மால் கூடப்பாடுவது கூட கடினமாயிருக்கிறது. (தமிழ் உச்சரிப்பில் சிறு பிணக்குத் தெரிகிறது, மன்னிப்போம், உதாரணமாய் 'கமலச்செங்கண்' 'கமலச்செங்கன்' ஆகிவிட்டது)

பிறகு இரு மாணிக்கங்கள் templenet இணையத்தில் கிடைத்தன. அவை 'அமலன் ஆதி பிரான்' மற்றும் 'பாயும் நீர் அரங்கம் தன்னுள்'. இவை பிரபலமான பாடகர் யாரும் பாடினதில்லை. அந்த இணையதள உரிமையாளர் திரு K. கன்னிகேஸ்வரன் பாடியிருக்கிறார். ஆனால் மிக அருமையாக இருக்கின்றன. கேட்டுப்பாருங்கள். இப்பொழுது எங்கள் வீட்டு சுப்ரபாதம் இந்த மூன்று பாடல்கள் தான்.

இன்னும் இசையுடன் பாடப்பட்ட பாசுரங்கள் எங்காவது இணையத்தில் கிடைத்தால், தெரிந்தவர்கள் சுட்டினால், ரொம்ப மகிழ்வேன்.

வார்ப்புக்களோடு யுத்தம்

யுனிகோட் வார்ப்பு (font) கொண்டு பக்கத்தை நிரப்பினால் வலைப்பூவை வெளியிடுவது எளிது என்று எண்ணியிருந்தேன். திரு. கண்ணன் சுட்டிக்காட்டினார், அது மட்டும் போதாது என்று. மீண்டும் தட்டுத்தடுமாறி அவர் சொன்னதில் புரிந்ததை செய்துள்ளேன். எனக்கு blog பக்கத்தில் இரண்டு முறையிலுமே படிக்க முடிந்தது. ஆனால் blog post செய்யும் பக்கத்தில் இன்னும் சீனா, ரஷ்யா எழுத்துக்கள் தான் தெரிகின்றன. பரவாயில்லை, அது என் சமயலறை தானே. அது கலைந்துகிடந்தாலும் நான் எப்படியோ சமாளித்துக்கொள்வேன். வரவேற்பறை சுத்தமானதே, அது போதும் இப்போதைக்கு.

உயிருள்ள கூகிள்

ம்...கொஞ்சம் பெருமையடித்தேன், அதற்குள் கூகிள் தான் எவ்வளவு விரைவாக தேடல் விடைகளை மாற்றுகிறேன் என்பதை ஆணி அடித்தாற்போல உணர்த்திவிட்டது. இப்போது 'சாகபட்சிணிகள்' தேடினால் என் வலைப்பூ பக்கம் வருவதில்லை. :(

வெங்கட் அருமையாக எழுதியிருந்தார், அது theory, இன்று Practical lesson.

சுய விளம்பரம்

என்னவெல்லாம் வலைப்பூவாகப் பதிவு செய்யலாம் என்று ஒரு பட்டியல் இட்டேன். நான் இலக்கியவாதியல்ல, விஞ்ஞானியல்ல. எனக்குப் பிடித்ததெல்லாம் சூடான செய்திகள் (அன்னைத் தமிழகத்திலிருந்து, அமெரிக்க புஷ்களிடமிருந்தல்ல), கணினித் தொழில்நுட்பம், முக்கியமாக பல்லூடகம் (multimedia) - ஒன்று தெரியுமா, இந்த அமெரிக்கர்கள் இதை 'மல்டை மீடியா' என்று தான் சொல்கிறார்கள்-மற்றும் எலெக்ட்ரானிக் சாதனங்கள். இவை பற்றி எழுதினால் என்ன. இப்போதைக்கு நான் எழுத எண்ணியிருக்கும் தலைப்புக்கள்:

1. நயாகரா அருவியும் இந்திய-சீன மக்களின் ஆர்வமும்
2. ISKCON நண்பர்களுடன் சில அனுபவங்கள்
3. அமெரிக்காவில் கண்ட சில அதிசய பழக்கவழக்கங்கள்
4. Camcorder-லிருந்து VCD
5. 802.11b கம்பியில்லாத் தொடர்பு சாதனங்கள்
6. இலவசமாய் பொருட்கள் வாங்குவது எப்படி? - அமெரிக்காவில் :(
7. Tansi வழக்கும் உச்ச நீதிமன்றமும்

மேலும் ஏற்கனவே தொடங்கிய சைவ-அசைவ உணவு பற்றிய அலசலையும் மேலும் தொடர ஆசை.

ம்..ம்..தம்பட்டம் அடித்தாயிற்று. இனிமேல் தான் இருக்கிறது. இனி மலரப்போகும் பூக்களில் நிறையக் காட்சிப்பொருள்கள் சேர்க்க ஆசை. இல்லாவிட்டால் இந்தப்பக்கம் டல்லாக வறட்சியாகத் தெரிகிறது.

சனி, செப்டம்பர் 20, 2003

Unicode-ல் தமிழ் செய்தால் கிட்டும் அனுகூலம்!

இந்த யுனிகோட் முறையில் தமிழ் எழுத்துக்களில் வலைப்பதிவு செய்வதில் ஒரு உடனடி ஆதாயம் இன்று கண்டேன். இதோ இந்தப் பக்கத்தை இந்த நிமிடம் google தேடும் எந்திரத்தின் மூலம் என்னால் எட்ட முடிகிறது. சோதனை செய்ய ஆசை இருந்தால், இந்தப்பக்கத்தில் உள்ள "சாகபட்சிணிகள்" என்ற வார்த்தையை cut & paste செய்து கூகிள் தேடும் எந்திரத்தின் மூலம் தேடிப்பாருங்கள். தெரியும். ஆகவே நண்பர்களே, வாருங்கள் எல்லாரும் unicode-க்கு மாறிடலாம் :)

குருவிடம் கற்காத கலை

இப்போது தான் தட்டுத்தடுமாறி html என்றால் என்ன என்றே தெரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். ஆகவே எதனால் அந்த சாகபட்சிணி vs. மாமிசபட்சிணி அட்டவணைக்கும் அதற்கு மேலே உள்ள பத்திகளுக்கும் இத்தனை இடைவெளி, அதை என்ன செய்து போக்கலாம் என்றெல்லாம் தெரியவில்லை. சீக்கிரம் கற்றுக்கொள்ள வேண்டும்!

புதன், செப்டம்பர் 17, 2003

மனிதனின் உணவு தர்மம் - 1

சைவம்/அசைவம் இரண்டுவகை உணவு உண்பதுபற்றி எத்தனை வாதங்கள் பிரதிவாதங்கள்! தீர ஆராய்ந்தால் மனிதனுக்கு விதிக்கப்பட்டது சைவ உணவு தான், அசைவம் பிறழ்நெறி தான் என்பது தெளிவாகிறது. எப்படி? இதைப்பல தலைப்புகளில் ஆராயலாம். அறிவியல், ஆரோக்யம், சுற்றுச்சூழல், சமயம்/மெய்யுணர்வு என்று பல கோணங்களில் இதை ஆராயலாம்.

அறிவியல்/உடல்கூறு காரணங்கள்:

மனிதனின் உடல்கூறு புல்பூண்டுகளை உண்ணும் ஆடு,மாடு, யானை, மான் போன்ற விலங்குகளையே (சாகபட்சிணிகள்) பெரிதும் ஒத்திருக்கிறது. மாறாக மாமிசபட்சிணிகளான சிங்கம், புலி, கரடி போன்றவற்றின் உடல் கூறுகள் மனிதனிலிருந்து பெரிதும் வேறுபட்டு இருக்கின்றன. எப்படி?
இரு வகை விலங்குகளின் உடலியல் கூறுகளை ஒப்பு நோக்குகையில் கீழே உள்ளவாறு அவை அமைகின்றன.




































செய்கை/அமைப்பு

சாகபட்சிணிகள்


மாமிசபட்சிணிகள்
வேர்வை வெளியேற்றுதல்தோலின் துவாரங்கள் வழியாகதோலில் துவாரங்கள்
இல்லை.நாக்கை வேகமாக உள்ளே-வெளியே அசைப்பதன் மூலமும், வேகமாக மூச்சு விடுவதன்
மூலமுமே அவை தன் மேனியின் சூட்டைப் பராமரிக்கின்றன.
தண்ணீர் குடித்தல்
உறிஞ்சிக் குடிக்கின்றன
நாக்கால் நக்கிக்
குடிக்கின்றன
பற்கள்/தாடைகள் அமைப்புசிறிய முன்பற்கள். அரைத்து
விழுங்க கடைவாய்ப் பற்கள் உண்டு. இடம் வலமாய் அசையும் தாடை.
வேட்டையைப் பிடித்துக் கொள்ள,
சதையைப் பிடுங்கி உண்ண நீண்ட கூரிய முன்பற்கள் உண்டு. தாடை பக்க வாட்டில்
அசைவதில்லை
நகங்கள் கூர்மையற்ற நகங்கள்கூரிய, உள்ளிழுக்கக்கூடிய
நகங்கள், வேட்டைக்கு உதவுகின்றன
குடல்/ஜீரண அமைப்புஉடல் நீளத்தைபோல் 10-12
மடங்கு நீளம் கொண்டவை. சைவ உணவு கெட்டுப்போய் உணவுப்பாதை பாதிக்கப்படாததால்
இந்த நீளத்தால் நன்மையே.
உடல் நீளத்தை போல் 3 மடங்கு
தான் நீளம்.? மாமிசம் சீக்கிரம் கெட்டுப் போகக் கூடியது? என்பதால்,
உணவு சீக்கிரம் குடல்பயணத்தை முடித்து வெளியே தள்ளப்படுகிறது.
உமிழ்நீர்மிகக்குறைவான அமிலச்சத்து,
சைவ உணவு செரிக்க இது போதும்
10 மடங்கு செறிவான
அமிலச்சத்து, மாமிசம் மற்றும் எலும்புகளை செரிக்க தேவைப்படுகிறது.


இந்த வகையில் ஆராய்ந்தால் மனிதனின் உடல்கூறு எல்லாவிதத்திலும் சாகபட்சிணிகளை பெரிதும் ஒத்திருக்கிறது தெரிகிறது. வேறு கோணங்களில் இதே கருத்தை பின்னர் ஆராய்வோம்

தொடரும்..

கிடாவெட்டும் தடைச்சட்டமும்

இந்தக் கிடாவெட்டு ஒரு அவசியமான அதீதம். கறி(புலால்) சாப்பிடுவது சமூகக் குற்றமில்லையென்றால் இதுவும் குற்றமாக இருக்கமுடியாது. முதலில் கோயில்களில் 'உயிற் பலியிடல்' தடை செய்யப்படவேண்டும் என்பதற்கான காரணங்கள் என்ன?

சாந்தமே உருவான கடவுள் சன்னிதியில் கொலையை எப்படி அனுமதிக்க முடியும்? அனைத்து உயிர்களுக்கும் அனுக்ரகம் செய்யும் ஆண்டவன் எப்படி ஒரு உயிர்க்கொலையை காணிக்கையாகக் கேட்பான்? மன அமைதிக்காகக் கோயிலுக்கு வரும்போது, அங்கு ரத்த ஆற்றில் பிணங்களைக் கண்டால் எங்கிருந்து வரும் நிம்மதி?

விரும்பியோ விரும்பாமலோ வெகுபல கிடாவெட்டுகளுக்குப் போனவன், சில கிடாவெட்டுகளை நடத்தியவன் என்றமுறையில் நினைத்துப்பார்க்கிறேன். இந்த வாதங்கள் எனக்கு சரியாகப்படவில்லை.

முதலில் சாந்தசொரூபிகளான சாமிகளுக்கு என்றுமே பலியிடுதல் நடத்தப்படுவதில்லை. அதற்கென்று கோயில்கள் இருக்கின்றன. பெருமாள் கோயிலிலோ பிள்ளையார் கோயிலிலோ யாரும் கிடாவெட்டுவதில்லை. எங்கள் ஊரில் கருப்பராயனுக்குத்தான் கிடாவெட்டுவார்கள். கிடாவெட்டு நடத்தும் கோயில்களுக்கு சாத்வீக பக்தர்கள் வருவதில்லை. எனவே இந்த வாதம் வீண்வாதம்.

ஆண்டவன் என்று எதைக்கேட்டிருக்கிறான்? நாமாகக் கொண்டு கொடுப்பதுதானே காணிக்கை. பகவத் கீதையில் கண்ணன் 'இலை, மலர், பழம், நீர் இவையாவது அன்புடன் எனக்கு காணிக்கை செய்தால் அதை நான் சந்தோஷமாய் ஏற்றுக்கொள்வேன்' (Patram Pushpam Phalam Thoyam...) என்று சொல்கிறான். பெரிதாய் செய்யவேண்டியதில்லை, இந்த நாலில் ஒன்றையாவது செய்யுங்கள் என்கிறான், அதிலும் அந்த நாலாவது ஒன்றைக்கூட (நீரை) காணிக்கையிட முடியாதவன் மனமில்லாதவனேயன்றி வேறில்லை. இதைத்தவிர ஒன்றும் படைக்காதீர்கள் என்று சொல்லவில்லை.

நெய்யும் சர்க்கரையும், அரிசியும் பருப்புமாய் பலகாரங்கள் செய்து அவனுக்கு அளித்துப் பின் அதை பிரசாதமாய் உண்டு ஆனந்திக்கிறோம். அதாவது நாம் உண்ணும் எதையும் ஆண்டவனுக்குப் படைத்துப் பின் உண்ணுவதே இதில் அடிப்படியான விஷயம். ஆனால் வேதங்களில் இன்னும் பலவற்றைக் காணிக்கை செய்வதைப் பற்றிய குறிப்புகள், அதிலும் அக்கினியில் இட்டு சாம்பலாக்கும் விதத்தில், இருப்பதாக அறிகிறோம். இதைத்தான் அதீதமான, தேவையற்ற, காணிக்கையாகக் கருதமுடியும். ஏனெனில் இங்கு தீயில் இடப்படுவது எதுவும் நமக்குப் பிரசாதமாய் திரும்ப வருவதில்லை.

கண்ணப்ப நாயனார் வேடனாய் தினமும் ஈசனுக்கு கறி படையலிட்டு வணங்கியதைப் படித்திருக்கிறோம். தர்மம் என்றால் என்ன என்னும்போது 'தன் குணத்தியல்பு வழுவாமல் நடத்தல்' என்று ஒரு விளக்கம் கிடைக்கிறது. மானைக்கொல்வது புலியின் தர்மம், அதன் மூலம் புலி பாவத்தை சம்பாதிப்பதில்லை. க்ஷத்திரியனின் தர்மம் போரில் எதிரியைக்கொல்லுதல். ஒரு வேடனின் தர்மம் வேட்டையாடுதல், அப்படி வேட்டையில் கிடைக்கும் பொருட்களை அவன் கடவுளுக்குக் காணிக்கையிட்டால் அது எப்படிக்குற்றமாகும்? இந்த வகையில் புலால் உண்ணுவதை வழக்கமாகக் கொண்டவர்கள் அதை ஆண்டவனுக்குப் படைத்துப் பின் தான் உண்பதில் என்ன பிணக்கு இருக்க முடியும்?

தன் உணவிற்காகப் பிற உயிர்களைக் கொல்ல வேண்டுமா என்றால் அது ஞாயமான கேள்வி. மனித உடலின் தர்மம் அசைவம் உண்பதா என்றால் அது ஞாயமான கேள்வி. இந்த இரண்டுக்குமே இல்லை என்பதுதான் பதில். புலால் உண்பதால் இந்த உலகின் இயற்கை வளங்களை எப்படி வேகமாக காலி பண்ணிக்கொண்டிருக்கிறோம் என்பது சிந்திக்க வேண்டிய விஷயம். இந்த விபரங்களைப் புரியவைத்து புலால் உண்ணும் வழக்கத்தை ஒழிக்க முயற்சி எடுத்தால் வரவேற்கலாம்.

முன்பெல்லாம் என்றாவது ஒருநாள் கறி சாப்பிட்டது போய் இன்று கறிக்கோழிகள் வந்தபின், தினமும், ஏன் இன்னும் சிலர் ஒரு நாளில் பல வேளை, அசைவம் உண்பது சாதாரணமாகி விட்டது. இதனால் தனக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் கேடு பற்றி அறிய வைத்தல் முக்கியம். கறிக்கோழிகள் வளர்ப்பதற்கு அரசாங்கமே கடன் கொடுக்கும்வரை, கறிக்கடைகள் நடத்துவதை அனுமதிக்கும்வரை, கிடாவெட்டையும் அனுமதிப்பதே சமத்துவம். அதைவிடுத்து வைதீகக் காரணங்களுக்காக சட்டம் இயற்றப்பட்டால் அது நின்று நிலைக்கும் என்று தோன்றவில்லை. இதுவும் அமல் படுத்தாமல் அடங்கிவிட்ட 'கட்டாய மதமாற்றத்தடைச்சட்டம்' கிடக்கும் நிலையிலேயே கிடத்தப்பட்டு விடும் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது.

இதில் இன்னோரு வினோதம், பிறந்தது முதல் அசைவம் உண்டு வந்த நான், அசைவத்தை கைவிட்டு 3 மாதங்களுக்குப் பிறகும் இந்த கிடாவெட்டுத் தடைச்சட்டத்தில் அதிருப்தி காண்பதுதான்!

ஏனிந்த வலைப்பதிவு?

blogகளைப் படிக்க ஆரம்பித்ததிலிருந்து ஒரு அரிப்பு. ரேடியோவில் SPB பாடும்போது கூடவே குறைந்த சத்தத்தில் பாடி, குரல் கிட்டத்தட்ட SPBக்கு மேட்ச் ஆவதாக எண்ணிக்கொண்டது ஞாபகம் வருகிறது. கொஞ்சம் தைரியம் வந்து ரேடியோவை ஆஃப் பண்ணி தனியாகப் பாட முயற்சிக்கும்போது தான் நம் சாரீரம் எவ்வளவு வளமையானது என்பது உறைத்தது. சங்கீதம் எத்தனை ஆழமான விஷயம் என்பது புரிந்தது.

ஆனாலும் இந்த SPB ரொம்ப மோசம். TMS கூடத்தான் எத்தனையோ பாட்டுப் பாடினார், ஆனால் ஏனோ தெரியவில்லை அவர் பாட்டைக்கேட்டு ரசிக்கத்தான் தோன்றியது, கூடப்பாடத் தோன்றவில்லை, அது நமக்கு வராது என்பது தெளிவாகத் தெரிந்தது. TMS பெரும்பாலும் MGR, சிவாஜிக்காகவே குரல் கொடுத்ததால் ஒருவேளை என்னால் அவர் குரலுடன் ஒட்ட முடியாமல் போயிருக்கலாம். இந்த SPB அப்படியில்லை. கூடப்பாட இழுக்கும் குரல். 'இது ஒன்றும் அவ்வளவு பிரம்ம வித்தையில்லை, உன்னால் முடியும் தம்பி', என்று எண்ணவைக்கும் குரல். ஆனால் பாடிப்பார்த்தால் தெரிகிறது, அது எப்பேற்பட்ட மாயை என்று. சொல்லப்போனால் அதில் தான் அவர் வெற்றியே இருக்கிறது.

அதுபோலவே தான் இந்த வலைப்பூக்களைப் பார்க்கும்போதும். இத்தனை பேர் இத்தனை எளிதாய் (உண்மையிலேயே எளிதா என்பது இனிமேல் தெரிந்துவிடப்போகிறது!) எவ்வளவு விஷயங்களை அலசுகிறார்கள். நாமும் ஏன் முயலக்கூடாது என்று ஒரு அரிப்பு. முகம் தெரியாமல் ஒளிந்துகொண்டு 'தைரியமாக' எதைவேண்டுமானாலும் எழுதலாம் என்ற வசதி. வெட்கம், சங்கோஜம், பயம், அவநம்பிக்கை இவை எல்லாவற்றையும் மறந்துவிட்டு தோன்றியதை உரக்கக் கத்த இதை விட ஒரு வாய்ப்பு கிடைக்குமா? ஆகவே ஆரம்பிக்கிறேன், கற்றோரே, பெரியோரே, வாழ்த்தி வரவேற்பீர்!

சரி, என் இந்த வலைப்பூ மாலைக்கு ஒரு தலைப்பு வைத்தாயிற்று. அதற்கு விளக்கம் தர வேண்டாமா? நீங்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் நான் சொல்லத்தான் போகிறேன்.

நான் சித்தூர்க்காரன். இரண்டு விதத்தில். என் சொந்த ஊர் 'வடசித்தூர்'. கோவை-பொள்ளாச்சி வட்டாரம். அது வெறும் சித்தூராகத்தான் இருந்திருக்கவேண்டும். இந்த 'சோமந்துரை சித்தூர்'க்காரர்களுக்கும் எங்க ஊர்க்காரர்களுக்கும் இடையே குழப்பம் இல்லாமல் இருக்க, இந்தப் பொள்ளாச்சிக்காரர்கள்தான் அதை வடசித்தூர் ஆக்கியிருக்கவேண்டும். இன்னொன்றை ஏன் 'தென்சித்தூர்' என்று சொல்லவில்லை என்பதற்கு நான் ஜவாப்தாரியில்லை. ஆகக்கூடி, நான் சித்தூர்காரன். இன்னொரு விதத்தில் கிராமத்தான். எனவே அந்த வகையிலும் சிற்றூர்க்காரன்.

என் சிந்தனை அவ்வளவு தெளிவாக இருக்காது. மனம் ஒரு 'மப்'படித்த குரங்கு என்பதை உணர்ந்து கடைப்பிடிப்பவன்; எனவே என் சிந்தனை சிதறிக்கொண்டே இருக்கும். இதை முன்னமே பறையடித்துக்கொள்வதில் ஒரு வசதி, கோர்வையாக எதையும் எண்ணவேண்டியதில்லை, எழுதவேண்டியதில்லை.

அப்பாடா, எப்படியோ தேவையான அலபை கிடைத்துவிட்டது, இனி சுதந்திரமாய் எதை வேண்டுமானாலும் எழுதலாம். என்ன வேண்டுமானாலும் தொடலாம்...அதெல்லாம் சரி என்னதான் எழுதப்போகிறேன்? அதை இனிமேல் தான் யோசிக்கவேண்டும். பார்க்கலாம்.

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...