திங்கள், ஆகஸ்ட் 04, 2008

பெரியாரைக் கேளுங்கள் - குறுமம் 1: பெரியார்

முதலில் இதைப் படித்துவிடுங்கள்:

பெரியாரைக் கேளுங்கள் - 24 குறுமங்கள் : ஆக்கம்- மா. நன்னன்

.
.
.
தங்களின் தாய்மொழி யாது?

என்னுடைய தாய்மொழி கன்னடமாக இருந்த போதிலும் அதனை நான் தினசரிப் பேச்சு வழக்கத்தில் கொண்டிருக்கவில்லை. எல்லாவற்றிலும் தமிழ் மொழியினைத்தான் பயன்படுத்தி வருகின்றேன். எனக்குக் கன்னடத்தைவிடத் தெலுங்கில் கொஞ்சம் பயிற்சி உண்டு . எப்படி என்றால் வியாபார முறையிலும் நண்பர்களின் பழக்கத்தாலுமேயாகும். இருந்தாலும் தமிழ் மொழியில்தான் என்னுடைய கருத்துக்கள் அத்தனையும் நான் நினைக்கிற மாதிரி வெளிப்படுத்த முடியும்.
.
.
.
தாங்கள் சர்வாதிகாரிதானே அய்யா?

நான் சர்வாதிகாரம் செய்கிறேன் என்பதும் ஓரளவுக்கு உண்மைதான்; ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ஆணவத்திற்காகச் சர்வாதிகாரியல்ல; நான் ஏற்றுக்கொண்டுள்ள பொறுப்பு அம் மாதிரியானது. சர்வாதிகாரத் தன்மை இல்லாமல் பயன்தரக் கூடாதது. இச் சர்வாதிகாரத் தன்மையும் எனக்கு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. நான் பொது வாழ்க்கையில் ஈடுபட்டது முதற்கொண்டே, ஏன் அதற்கு முன்பிருந்தேகூட நான் சர்வாதிகாரியாகவே இருந்திருக்கிறேன்.
.
.
.
தங்கள் சொற்பொழிவு எதை அடிப்படையாகக் கொண்டிருக்கும்?

பேச்சு என்றால் சிலர் அழகுக்குப் பேசுவார்கள். சிலர் அலங்காரத்திற்காகப் பேசுவார்கள்; மக்கள் சிரிக்க வேண்டும், கைதட்டவேண்டும் என்று சிலர் பேசுவார்கள். சிலர் தான் கற்றவைகளை வெளியிடுவதே முக்கியம் என்று பேசுவார்கள்; சிலர் தன் கருத்தை வெளியிடப் பேசுவார்கள். கடைசியில் சொன்ன ரகத்தினன்தான் நான்.
.
.
.
தமிழகப் பத்திரிகைகளின் ஆதரவு தங்களுக்குக் கிடைத்ததுண்டா?

நான் எனது பொதுவாழ்வு ஆரம்பம் முதலே பத்திரிகைக்காரன்கள் தயவை நாடி முன்னேறியவன் அல்ல; அவர்களை வெறுத்துக்கொண்டு, எதிர்நீச்சல் அடித்துத்தான் முன்னேறிவருகிறேன்.
.
.
.
காந்தியடிகளுக்கும் தங்களுக்கும் உள்ள வேறுபாடு யாது?

காந்தி, தீண்டப்படாதவர்களை (எனக்கு மிகவும் பிடித்தது 'தீண்டப்படாதவர்கள்' என்று பெரியார் குறிப்பிட்டது. 'தீண்டத்தகாதவர்கள்' என்பது சரியாகப்படவில்லை:காசி) கிணற்றில் தண்ணீர் எடுக்கவிடாவிட்டால் 'வேறு தனிக்கிணறு கட்டிக்கொடு கோவிலுக்குள் விடாவிட்டால் வேறுதனிக் கோவில் கட்டிக்கொடு' என்றார். அப்போது நான் கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாதென்று இழிவுபடுத்தும் இழிவுக்குப் பரிகாரமில்லாவிட்டால் - அவன் தண்ணீரில்லாமல் சாகட்டும்; அவனுக்கு இழிவு நீங்கவேண்டுமென்பது முக்கியமே தவிர தண்ணீரல்ல என்றேன்.


இதுபோல 106 கேள்விகளும் அவற்றுக்குப் பெரியாரின் பதிலும் இக்குறுமத்தில் இடம் பெற்றுள்ளன.

அடுத்து வருவது... 2. ஒழுக்கம்

வியாழன், ஜூலை 31, 2008

பெரியாரைக் கேளுங்கள் - 24 குறுமங்கள் : ஆக்கம்- மா. நன்னன்

சென்னை வந்து 4 மாதமாகிறது. நேற்றுத்தான் ஒரு விழாவுக்கு செல்ல முடிந்தது. நமக்கெல்லாம் தொலைக்காட்சி மூலம் தமிழ்ப்பாடம் நடத்திய/நடத்தும் பேராசிரியர் மா. நன்னன் அவர்கள் ஆக்கிய 'பெரியாரைக் கேளுங்கள்' என்ற தலைப்பிலான 24 குறுமங்கள் கொண்ட தொகுப்பை வெளியிடும் நிகழ்வு தி.நகரில் சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் நடந்தது. தமிழக நிதி அமைச்சர் திரு. க. அன்பழகன் அவர்கள் தலைமையில் முனைவர்கள் திரு. பொன்னவைக்கோ, திரு. சொ. ந. கந்தசாமி, திரு. சிலம்பொலி செல்லப்பன் இவர்களோடு திரு. முகம் மாமணி, திரு. இரா. நல்லக்கண்ணு ஆகியோரும் பங்கேற்றார்கள்.

விழா முடிவில் 24 குறுமங்களின் தொகுப்பு ஒன்றை வாங்கினேன். ஒவ்வொன்றும் 64 பக்கங்கள் கொண்ட, சிறு கையேடு வடிவில் அமைந்திருக்கிற தொகுப்பின் தலைப்புகளைக் கீழே தருகிறேன்:
  1. தாம்
  2. ஒழுக்கம்
  3. கல்வி
  4. தொண்டு
  5. பொருள்
  6. மனிதன்
  7. மொழி
  8. இலக்கியம்
  9. கடவுள்
  10. சமூகச் சீர்திருத்தம்
  11. சாதி
  12. திருமணம்
  13. மதம்
  14. மூடநம்பிக்கை
  15. சுயமரியாதை
  16. புராணங்கள்
  17. கட்சிகள்
  18. தனிநாடு
  19. அரசியல்
  20. தொழிலாளர்
  21. பகுத்தறிவு
  22. பார்ப்பனியம்
  23. கிளர்ச்சி
  24. தமிழர்
வெளியீடு:
ஏகம் பதிப்பகம்,
தபால் பெட்டி எண் 2964,
3, பிள்ளையார் கோயில் தெரு,
2ஆம் சந்து,
முதல் மாடி,
திருவல்லிக்கேணி,
சென்னை -5

விலை: குறுமம் ஒன்றுக்கு ரூ. 10 வீதம் ரூ. 240/- (சலுகை விலை ரூ. 200)

மா. நன்னன் அவர்கள் பெரியாருடன் உரையாடும் பாங்கில் எழுதப்பட்டிருக்கும் இந்நூல் தொகுப்பின் முகவுரையில், 'இக்குறுமங்களிலுள்ள வினாக்கள் மட்டும் எம்முடையவை என்றும் விடைகள் யாவும் அய்யா பெரியாருடையவை மட்டுமே' என்று குறிப்பிடப்படுகிறது.

குறுமங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் சில துளிகளை ஒவ்வொரு நாளுக்கு ஒன்றாக எடுத்துப் போட ஆசை. பார்க்கலாம்.

சனி, மார்ச் 08, 2008

மேதாவி மதனின் ஆணாதிக்க மனப்பான்மைக்குக் கண்டனம்!

உலக மகளிர் தினத்தன்று இதைப் படிக்க நேர்ந்ததும் என்னால் எரிச்சலை அடக்க முடியவில்லை.நீங்களும் படியுங்க:

கேள்வி: புத்திசாலிகூடத் தோற்கும் இடம் எது?
மதன் பதில்: பெண்ணிடம் மட்டுமே புத்திசாலி கூடத் தோற்பான்.

(ஆ.வி. மார்ச் 12,2008)

கொஞ்சம் பொறுங்க, பெண்ணிடம் தோற்றுபோன ஒரு 'புத்திசாலி' ஆணைப்பற்றியதல்ல என் எரிச்சல். 'புத்திசாலி' என்ற, இருபாலருக்கும் பொதுவான ஒரு சொல்லை வைத்துக்க் கேட்ட கேள்விக்கு இந்த மேதாவி மதன் அய்யா சொன்ன பதிலிலிருந்து 'புத்திசாலி' என்றாலே, by default, ஆண்தான் என்ற எண்ணம் வெளியாகவில்லையா? காட்டாக, 'கணவன் சம்பளத்தை வெளியிலே சொல்லலாமா?' என்று ஒரு கேள்வி வந்தால்,'கணவன்' என்ற சொல் ஒரு ஆணைத்தான் குறிக்கும் என்பதைப் புரிந்து ஏற்றுக்கொள்ளலாம். 'புத்திசாலி' என்று பொதுவாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒரு ஆணாதிக்கத்தில் ஊறிய ஒருவரே இந்த மாதிரி பதிலளிக்கமுடியும். மதன் மன்னிப்புக் கேட்கவேண்டும். அபத்தமான ஹாய் மதனை ஆ.வி. நிறுத்தவேண்டும். ஆ.வி.யையே நிறுத்த நாள் பார்த்துக்கொண்டிருக்கையில் இப்படியெல்லாம் படித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது!

வியாழன், பிப்ரவரி 28, 2008

'சுஜாதா' ரங்கராஜன் (1935-2008)

முதலில் சுஜாதாவின் தாக்கம் ஏற்பட்டது நீண்ட தொடராகக் குமுதத்தில் வெளிவந்த 'கொலையுதிர்காலம்'. தலைப்பிலேயே சுஜாதாவைப் பார்க்கலாம். அதுவரை எந்த வார,மாத இதழும் வாங்கும் வழக்கமில்லாத எங்கள் வீட்டில் கொலையுதிர்காலத்துக்காக குமுதம் வாங்க ஆரம்பித்தோம். வீட்டுக்கு அருகில் இருக்கும் கடையில் கிடைப்பதைவிட முந்தின நாளே வாங்கமுடியும் என்பதற்காக தூரத்தில் உள்ள பெரியகடைக்குப் போய் வாங்கிவந்து உடனே தொடரின் பகுதியை வாசித்துவிட்டுத்தான் அடுத்தவேலை. கிட்டத்தட்ட கஞ்சாவுக்கு அடிமையானதுபோல அந்த நாள் வந்தால் கை பரபரக்கும்! கால் பலமுறை கடைக்குப் போய்... 'வந்தாச்சா' என்று கேட்டு...

2004-ல் நியூக்ளியஸ் என்ற நிரற்பொதியை தமிழாக்கம் செய்யத் தலைப்பட்டபோது புதிய சொற்கள் பலவற்றிற்கு தமிழ்வடிவம் தேடி, பயன்படுத்தியது சுஜாதாவின் கலைச்சொல் தொகுதி ஒன்று (அப்போது இணையத்தில் கிடைத்தது). ழ கணினி என்ற திட்டத்துக்காகவோ என்னவோ சுஜாதா தலைமையில் ஒரு குழு இயங்கியபோது கோர்க்கப்பட்ட திரட்டு அது.

'தமிழ்மணம்' வலைவாசல் உருவானபோது 'வலைப்பூ' என்ற 'வாரம் ஒரு ஆசிரியர்' பொறுப்பேற்கும் வலைப்பதிவு வாயிலாக அதற்கு அறிமுகம் கொடுக்க எண்ணி முன்மொழிந்த பெயர் 'சுஜாதா'. அறிவியல், கணிமை - இவற்றில் ஈடுபாடு, புதுமுயற்சிகளுக்கான அவரின் ஆதரவு ஆகியவற்றால் சுஜாதா என்ற ஆளுமையின் பொருத்தம் இருந்தாலும், அணுகுவதற்கும், அவர் ஒத்துக்கொள்ளுவதற்குமான சாத்தியங்கள் பற்றிய பல கேள்விகள்/ முன்முடிவுகள் அந்த வேண்டுகோள் அவருக்குப் போகாமலே செய்துவிட்டன. குழந்தைத்தனமாக இருந்தாலும் இன்றும் நம்பிக்கொண்டுள்ளேன், 'அன்று கேட்டிருந்தால் நிச்சயம் ஒத்துக்கொண்டிருப்பார்'.

சுஜாதாவின் சில அரசியல் நிலைப்பாடுகள், அதிரடி புறந்தள்ளல்கள், பிரபலங்கள்/ஆளுமைகளுக்கு அவர் காட்டும் அதீத சாய்வு, திரைப்படங்களில் வந்த சில கருத்தமைவுகள் போன்றவை குறித்து விமர்சனங்கள் இருந்தாலும், சுஜாதாவின் நீண்ட நெடுங்காலத் தமிழ்ப் பங்களிப்பு அவற்றையெல்லாம் விட பிரமாண்டமானது, முக்கியமானது. என்றும் நிலைத்திருப்பது. வாழ்க அவர் புகழ்.

புதன், ஜனவரி 30, 2008

சென்னை பயணம் - பிப்ரவரி 08

அலுவலக வேலையாக சனிக்கிழமை 2-2-2008 அன்று சென்னையில் இருப்பேன். மாலை 6 மணியிலிருந்து 9 மணிவரை மெரினா கடற்கரையில் கழிக்க யோசனை. நேரமும் விருப்பமும் இருக்கும் வலைப்பதிவு நண்பர்கள் (எதிரிகளும்தான்:-) தொடர்புகொள்ள செல்பேசி எண்: 94426 09820

செவ்வாய், ஜனவரி 22, 2008

'ப்ளாக்' பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி: சில கருத்துக்கள்.

சன் நியூஸ் தொலைக்காட்சியில் வந்த நிகழ்ச்சியின் ஒளிப்பதிவை சற்றுமுன் கண்டேன். (நன்றி: ஸ்ரீனிவாசன்) சில உடனடியான கருத்துக்கள்:

நல்ல ஸ்கிரிப்ட். பொதுவாக வலைப்பதிவுகளைப் பற்றித் தெரியாத/அரைகுறையாகத்தெரிந்த ஒருவருக்கு நன்றாகப் புரியவைக்க இந்த நிகழ்ச்சி ஒரு நல்ல பணியாற்றியிருக்கிறது. தயாரித்தவர்களுக்குப் பாராட்டும், நன்றியும்.

சில குறைகள்: (அதானே, அது இல்லாமலா?:-))
  • முற்பாதியில் எழுத்தாளர்கள் தொல்லை அதிகம். 'பத்திரிகைகளில் இடம் கிடைக்காத புனைவு எழுத்துக்களுக்குத்தான் வலைப்பதிவுகளே' என்று ஐயுறும் அளவுக்கு கதை,கவிதை என்று போனது,பிற்பாதியில் சரிசெய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் மனுஷயபுத்திரனையும் எஸ். ராமகிருஷ்ணனையும் விடவும் வலைப்பதிவுகளைப் பற்றிச் சொல்லத் திறமையானவர்கள், தகுதியானவர்கள் *சென்னையிலேயே* இருக்கிறார்களே இன்னும் ஏன் எழுத்தாளர்கள் பிரேமை என்றுதான் தெரியவில்லை. இவங்க தொல்லை தாங்கமுடியலப்பா! :-)
  • தமிழ்மணத்தைப் பற்றிப் பலமுறை குறிப்பிடப்பட்டது, அடுத்த முறை சரிசெய்யப்பட்டு விடும்:-) அப்போதுகூட தமிழ்மணம் இணையத்தில் சுயம்புவாக இருக்கவில்லை என்பதும், ஒரு வேலைகெட்டவன் செய்தான் என்பதையும் சொல்லியிருக்கலாம். (அதுசரி அவன்தான் சென்னையில் இல்லையே, சென்னையில் இருப்பது என்ற அடிப்படைத் தகுதிகூட இல்லாதவனைப் பற்றியெல்லாம் என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது!:P) இன்னொன்றும் சொல்லிக்கணும்: 'உலகின் முதல் திரட்டி'க்கெல்லாம் நான் பொறுப்பில்லை, மா.சி.யின் கருத்து. ('சரி' போலத்தான் தோணுது!)
  • பத்ரியின் விளக்கம் நன்றாக இருந்தது. புனைவுகளை விடுத்து பொதுவாகக் குறிப்பிட்டதும் சேர்த்து.கிருஷ்ணகுமார் (யாரது? வலைப்பதிவரா?) தான் பார்க்கும் கோணத்தில் நன்றாகவே சொன்னார். மா.சி. சொன்னதும் புனைவுகளைப் பற்றி அதிகமில்லாததால் நன்றாக இருந்தது. (ஜால்ரா என்று சில வக்கிரங்கள் சொல்லட்டும, கவலையில்லை)
  • சில முக்கியமான யு.ஆர்.எல்.களை பெரிய எழுத்தில் காட்டியிருக்கலாம். அது காரணத்தோடுதான் என்றால் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
  • தமிழில் எல்லாரும் எழுதணும் என்ற ஸ்ரீனிவாசனின் அழைப்புக்கு ஒரு சபாஷ். வலைப்பதிவு என்று சொல்லாமல் ப்ளாக் என்றே பேசியதற்கு ஒரு குட்டு! (தலைப்புக்கு அர்த்தம் வந்தாச்சா?:-))

உதகைப் பயணம் செல்பவருக்கும், இணையத் தொடர்பில் சில பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும்.

4-5 வருடமாக கிடப்பில் கிடந்த ஆங்கிலப் பதிவை தூசிதட்டி எடுத்து, இரண்டு இடுகைகளும் எழுதிவிட்டேன். அதே இடுகைகளைத் தமிழிலும் இங்கே எழுதி வைக்க ஆசை. நேரமில்லாததால், அப்படியே அவற்றின் சுட்டிகளை மட்டும் இங்கே போட்டுவைக்கிறேன்.
Notes on our Trip to Ooty
BSNL broadband - Parental control (prevent visits to unwanted sites)

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...