வெள்ளி, அக்டோபர் 31, 2003

சும்மா வச்சுக்குங்க!

இந்த அமெரிக்கா வந்து எது கத்துக்கிட்டேனோ இல்லியோ, கொஞ்சூண்டு காசில எப்படிக் கைநிறைய பொருள் வாங்கிறதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். பொருள்னா அரிசி, பருப்பல்ல; எலக்ட்ரானிக் சாமான்கள் (வன் &மென் பொருட்களும்). போன வருஷம் ஒரு DSL Wireless Router வாங்கின கதையை அவுத்து வுடறேன் இங்க, கேட்டுக்கங்க! என் சில இந்திய நண்பர்களுக்கு இதை நான் தனி மடல்ல ஏற்கனவே தம்பட்டமடிச்சுட்டேன், அவங்களுக்கு இது ரெண்டாவது வாட்டி, PMG மக்களே, போரடிச்சா படிக்காதீங்க!

இந்த ரவுடரின் அறிவிக்கப்பட்ட விலை $150 (2002 நவம்பரில், இப்ப இது $50க்கெல்லாம் கிடைக்குது). நமக்குத் தோணினதும் கடையில போய் வாங்கினா, $150 தான் விலை. இங்க ஒவ்வொரு கடையும் வாராவாரம் தங்களோட கடையில் உள்ள சில பொருட்களை வாரந்திர சிறப்பு விற்பனையில் விலையைக் குறைத்து (Instant Rebate) விற்பாங்க. அதில் அந்த வாரம் இந்த ரவுடர் $120 ஆக விளம்பரப் படுத்தப் பட்டிருந்தது.

அதோட இங்க நான் பார்த்த இன்னொரு அதிசயம் Mail-in-rebate (MIR) என்கிறது. சில பொருட்களை வாங்கினப்புறம் ரசீதையும் அதன் பாக்கிங்கில் உள்ள யூபிசி லேபிளையும் தபாலில் அனுப்பினா, சில வாரங்களுக்குப்பிறகு நமக்கு அறிவிக்கப்பட்ட பணம் திரும்பி வரும். அப்படி இந்த ரவுடருக்கு அப்போ அந்தக்கடை $50 MIR அறிவிச்சிருந்தாங்க.

அத்தோட இன்னொரு சலுகை க்யூப்பான்ஸ் (Coupons), அதாவது $100க்குப் பொருள் வாங்கினா $20 தள்ளுபடிங்கிறமாதிரி அவங்க நம்மளக் கடைப்பக்கம் இழுப்பதற்காக நம்ம வீட்டுக்கு அல்லது மின்னஞ்சலில் அனுப்பி வெப்பாங்க. அப்படி அன்னிக்கு எனக்கு $100க்கு வாங்கினா $30 தள்ளுபடிங்கிற க்யூப்பான் கிடைச்சது. $50க்கு மேல் பொருள் வாங்கினா, வீட்டிலிருந்தபடியே ஆர்டர் போட்டாலே, இலவசமா அவங்களே வண்டிச்சத்தம் இல்லாம நம்ம வீட்டுக் கதவத்தட்டிக் கொடுத்திட்டுப் போயிடறாங்க. எங்களை மாதிரி உறைபனியில் குடியிருக்கிறவங்களுக்கு இது ரொம்பத் தேவை.

இப்படி ஒரு வழியா அந்த ரவுடர் ஆர்டர் போட்டாச்சு. ஆகக்கூடி நான் செலவு செய்தது $120-$30=$90. பிறகு $50 MIR திரும்பக் கிடைத்தால் $40 தான் விலையாகிறது. $150 விலையுள்ள பொருள் $40க்குன்னா கசக்குதா? 'சூப்பர் டீல்'னு தோணுதா, இருங்க அவசரப்படாதீங்க.

Price Matching, Price Matching-னு ஒண்ணு இருக்குது. 'இதே பொருள், பக்கத்திலே வேற கடையில எங்களைவிடக் குறைச்சு வித்தா, சொல்லுங்க, நாங்க விலை வித்தியாசத்தில 110% உங்களுக்குத் திருப்பித்தாரோம்'ங்கறது அவங்க கொள்கையில் ஒண்ணு. அன்னிக்கு பக்கத்துக்கடையில அதே ரவுடர் $100க்கு விக்கிறதா விளம்பரம்! உடனே தொலைபேசியில் கூப்பிட்டுச் சொன்னதும், இவங்க விலையான $120க்கும், அவங்க விலயான $100க்கும் உள்ள வித்தியாசம் $20, அதன் 110% = $22 திரும்ப நம்ம கடன் அட்டைக்கு வந்தாச்சு.

இருங்க, இருங்க, இன்னும் கதை முடியல்லே. ஆர்டர் போட்டு நாலு நாளாகியும் பொருள் வரல்லெ. ஏனோ அவங்க சிஸ்டத்திலே கோளாறு. அதுக்குள்ள நான் நாலுவாட்டி போன் பண்ணியாச்சு. (குளிர்லே வீட்டுக்குள்ள உக்காந்துட்டு வேறெ வேலை என்ன, அப்பல்லாம் இந்த வலைப்பூ வேற கிடையாது!). கடைசி தடவை போன் பண்ணப்ப, என்னை இத்தனை வாட்டி விரட்ட வெச்சதுக்கு ரொம்ப வருத்தப்பட்டு, அதற்குப் பிராயச்சித்தமா ஒரு $20 பரிசுக் க்யூப்பான் (Gift Coupon) அனுப்பறதா அவங்களா எனக்கு ஐஸ் வச்சாங்க. எனக்கென்ன பெரியமனசு பண்ணி சரின்னுட்டேன்.

இன்னும் ஒண்ணே ஒண்ணு, அதையும் சொல்லிடறேன். இந்தக்கடை அறிவிச்சிருந்த MIRஉடன் அந்த ரவுடர் தயாரிப்பாளரும் ஒரு $30 MIR அறிவிச்சிருக்கிறாங்க. பொதுவா ஒரிஜினல் யூபிசி லேபிள் அனுப்பினாதான் ரிபேட் என்பதால், ஒரு பொருளுக்கு ஒரு ரிபேட் தான் வாங்க முடியும். ஆனா இந்தக்கடையோட ரிபேட்டை கவனிக்கிற நிறுவனத்துக்குக் கொஞ்சம் இளகிய மனசு. அவங்க யூபிசியின் நகல் இருந்தாலே ஒத்துக்கிடுவாங்க. அப்புறமென்ன ரெண்டு பேருக்கும் MIR விண்ணப்பம் அனுப்பியாச்சு, ஒரு மாசம் கழிச்சு $50+$30 = $80 செக் வந்தாச்சு.

இப்ப கணக்கு என்ன ஆச்சு?
$150 - $30 IR = $120 - $30 Coupon = $90 - $22 PM = $68 - $80 MIR= (-)12 - $20 GC = (-)$32

ஆக, வீட்டை விட்டு வெளியில் போகாம, ஒரு வயர்லெஸ் ரவுடரையும் கொடுத்து, இந்தா வச்சிக்கன்னு பணமும் குடுக்கறாங்க, வாழ்க அமெரிக்க வர்த்தக முறை!

எனக்கு இது இப்ப ஒரு பொழுதுபோக்காவே ஆகிப்போச்சு. இதனாலே தேவையோ இல்லையோ நிறையப் பொருள் வாங்கிக் குவிச்சிருக்கிறேன். இந்த வாரம் 100வது ரிபேட் அனுப்புகிறேன், அதைக் கொண்டாடத்தான் இந்தப் பிரஸ்தாபம்!

இந்த மாதிரி எப்படியெல்லாம் பொருள் வாங்கறதுன்னு யாருக்காவது ஆலோசனை வேணும்னா எனக்குத் தனி மடல் அனுப்பிடுங்க, ஐடியாக்கள் இலவசம்.

வியாழன், அக்டோபர் 30, 2003

Kasi Lite

குறுவேக இணையத்தொடர்பாலோ வேறு என்னவாலோ, சில நண்பர்கள் என் வலைப்பூ பக்கம் தங்கள் திரையில் விழ அதிகநேரம் பிடிக்கிறது என்று கூறக்கேட்டேன். ஒரு சோதனை முயற்சியாக விரைவில் இணையத்திலிருந்து இறங்கும் விதமாக ஒரு விரைவுப்பதிப்பு வெளியிடலாமே என்று ஒன்றை ஆரம்பித்திருக்கிறேன். இது சரிவருமா என்று போகப்போகத்தான் தெரியும். பார்த்து உங்கள் கருத்தைச் சொல்லுங்களேன்.

புதன், அக்டோபர் 29, 2003

Update on கிடாவெட்டு

கிடாவெட்டு தடைச்சட்டத்தை எதிர்த்து ஆடிட்டர் குருமூர்த்தி துக்ளக்கில் எழுதியிருப்பதை எடுத்துக்காட்டி, பத்ரி தனக்கு அந்தக் கருத்துக்களுடன் முழு உடன்பாடு உண்டு என்றும் எழுதியிருக்கிறார். பகவத் கீதையையும், கண்ணப்ப நாயனாரையும் குறிப்பிட்டு ஏற்கனவே இந்த வலைப்பூவில் எழுதியிருந்தேன். எனக்கும் நிறைய விஷயங்களில் குருமூர்த்தி அவர்களுடன் கருத்து வேறுபாடு உண்டென்றாலும், இந்த விஷயத்தில் சிந்தனை ஒரே மாதிரி ஓடுகிறது. Great men think alike என்பதனால் அல்ல, இது நம் சமூக வரலாறை, மக்கள் எண்ணங்களை அறிந்த எவரும் எடுக்கக்கூடிய நிலைப்பாடு என்பதுதான் காரணம். இந்தச் சட்டத்தின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

செவ்வாய், அக்டோபர் 28, 2003

வாழ்க்கைக் கல்வி

அறிவியல் செய்திகள் நிறைய சொல்லும் நம் வெங்கட் இன்று விதிகள்-மீறுபவர்களுக்கு என்ற தலைப்பில் பதிவு (குறிப்பு?) செய்திருக்கிறார். அரசு நிறுவனமான அணு சக்தி (வெங்கட்டுக்கு சகதி என்று தான் வருகிறதாம்:-)) துறையில் நடந்த அதைப் படித்தவுடன் தனியார் நிறுவனத்தில் எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம் நினைவுக்கு வந்தது.

இது நடந்து ஆறு-ஏழு வருடங்கள் இருக்கும். அப்போது ஒரு புது இயந்திரம் ஒன்றை வடிவமைக்க, மற்றும் அந்த இயந்திரத்தை ஆலையில் தயாரிக்க தேவையான கருவிகளையும் உருவாக்கிக் கொடுக்க போர்க்கால அடிப்படையில் ஒரு சிறு குழுவாக என் தலைமையில் இரவு பகலாக வேலைசெய்தோம். பெரும்பாலான நாட்களில் இரவு 8 மணியில்லாமல் வீட்டுக்குப் போக மாட்டோம்.

எங்களுக்கு டீ, காபி, டிபன் வாங்கித்தர ஒரு பையன் (உண்மையிலேயே பையன் மாதிரிதான் இருந்தான்) இருந்தான். ஒரு பதினேழு வயசிருக்கும். அலுவலக வரபேற்பாளரை ' ***அக்கா சொன்னாங்க' அன்றும் எங்கள் சக பெண் அலுவலரை '***அக்கா கேட்டாங்க' என்றும் பாசத்தோடு அவன் அழைப்பான். அவன் பேயர் வேறு என் மகனின் பெயர். இதெல்லாம் கூடி அவன் எங்கள் எல்லாருக்கும் ஒரு செல்லப்பிள்ளையாக வலம் வந்தான்.

அவன் வாங்கிவரும் டீ காபி செலவுகளை அடுத்தநாளே வவுச்சர் போட்டு நிறுவனத்திடமிருந்து வாங்கிவிடவேண்டும் என்று நான் உத்தரவு போட்டிருந்தேன். ஏனென்றால் முன்பு வேறு ஒருவன் வாரம் ஒருமுறை அல்லது இருவாரம் ஒருமுறை வந்து மொத்தமாக வவுச்சர் போடும்போது, எனக்கு உண்மையிலேயே அன்று வாங்கினோமா இல்லையா என்று சந்தேகமாயிருந்தது. இப்படி அடுத்தநாளே கணக்குப்பார்த்தால் ஞாபகத்திலேயே இருக்கும் என்பதால் இந்த உத்தரவு.

அப்படி வவுச்சர் எழுதும்போது அவன் 'ருபாய்................பன்னிரண்டு' என்று எழுதினான். நான் கூப்பிட்டு, இப்படி ரூபாய்க்கும் பன்னிரண்டுக்கும் இடைவெளி விடக்கூடாது. அப்படி விட்டு எழுதினால் வேறு யாராவது அதற்கிடையில் 'நூற்றுப்' என்று எழுதி அதை நூற்றுப் பன்னிரண்டாக்கி ஏமாற்றி ஊழல் செய்ய வாய்ப்பிருக்கிறது என்று எடுத்துக்கூறினேன். அவனும் சரி யென்று புரிந்து கொண்டு தலையாட்டினான். இருந்தும் அவ்வப்போது அவன் மறந்து போய் இடைவெளிவிட்டு எழுதுவது கண்டு மீண்டும் மீண்டும் சொல்வேன்.

தொடர்ந்து நாங்கள் கருமமே கண்ணாக உழைத்து வந்தோம். (அந்த இயந்திரம் உலக அளவில் நல்ல வரவேற்பைப் பெற்று இன்று நிறுவனத்துக்கு நிறைய அன்னிய செலாவணி சம்பாதித்துக் கொடுப்பது மனதுக்கு நிறைவான விஷயம்) ஒரு நாள் நிதித்துறைத் தலைவர் என்னிடம் தொலைபேசியில் 'உங்கள் துறையில் சில்லறைச்செலவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறதே' என்று வருத்தப்பட்டார்.

'இருக்க முடியாதே' இது நான். ஏனென்றால் மிஞ்சிப்போனால் ஒரு நாளைக்கு இருபது ரூபாய்க்குள் தான் இருக்கும். மாதத்தில் இருபத்தைந்து நாள் என்று எடுத்துக்கொண்டாலும் ஐந்நூறு ரூபாய் வரும், இது ஒரு செலவா?

'இல்லை, நேற்று மட்டும் இருனூற்று சொச்சம், முந்தானாள் நூற்று சொச்சம்...'

'இல்லவே இல்லை.. அந்த வவுச்சரைக் காட்டுங்கள்'

அப்புறம் தான் தெரிந்தது, நான் எது நடந்து விட வாய்ப்புக் கொடுத்த மாதிரி ஆகிவிடும் என்று பயந்தேனோ, அது நடந்திருக்கிறது. ரொம்ப வளவளக்காமல் விளக்கி விடுகிறேன். அந்தக் 'குழந்தைப் பையன்' தெரிந்தே, திட்டம் போட்டேதான் அப்படி இடைவெளி விட்டு எழுதி இருக்கிறான். என்னிடம் கையெழுத்து வாங்கிய பிறகு இடைச்செருகல் செய்து விளையாடியிருக்கிறான். இப்படி இரு மாதத்தில் அவன் சுருட்டிய பணம் முப்பதாயிரத்துக்கும் மேல்.

ஒவ்வொன்றாக வவுச்சர்களை எடுத்துப்பார்த்தால்த இடைவெளி இல்லாத இடத்தில் ரப்பரால் அழித்தும் எழுதியிருக்கிறான். எண்ணால் எழுதிய இடத்திலும் அழித்து, திருத்தி விளையாடியிருக்கிறான். ஒரு சாதாரண எச்சரிக்கையுணர்வுள்ளவர் கூட அத்தனை அழித்தல் திருத்தலை ஒப்புக்கொண்டிருக்க மாட்டார், ஆனால் மிகுந்த அனுபவமும், நம்பகத்தன்மையும் கொண்ட அந்தக் காசாளர் அத்தனையையும் ஒதுக்கி அவன் தன்னைப் பகடையாய் ஆக்கி விளையாட அனுமதிதிருக்கிறார்! இத்தனைக்கும் அவரும் அதே டீக்கடையில் டீ குடிப்பவர். மிஞ்சிப்போனால் ஒரு நாளைக்கு 4-5 பேருக்கு எவ்வளவு செலவாகும் என்று கூடவா தெரியாது?

அந்தக் குழந்தை அம்மாவுக்கு புடவை வாங்கிக்கொடுத்திருக்கிறது, நகை கூட வாங்கிக்கொடுத்ததாக ஞாபகம். பிறகு விசாரணையில் எல்லாம் வெளிவந்து ஒப்புக்கொண்டான். ஏனோ இந்த ஆளும் உள் என்று என்னைக் கையைக் காட்டவில்லை! (காட்டியிருந்தாலும் யாரும் நம்பப்போவதில்லை என்பது வேறு விஷயம்)

அதற்குமுன் மார்வாடிகளின் நிறுவனத்தில் பணிபுரிந்திருந்த எனக்கு இவ்வளவு எளிதில் ஒரு சிறுவன் ஏமாற்றமுடியும் அளவுக்கு நிதிநிர்வாகம் இருக்க முடியும் என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. உண்மை சிலசமயம் கற்பனையை விட ஆச்சரியமானது என்பதை அன்று உணர்ந்தேன்.

வெங்கட் சொன்னதைப்போல நானும் இந்த இடத்தில் எப்படி தில்லு முல்லு நடக்க ஏதுவாகிவிடும் என்று விளக்கியிருக்கிறேன், ஆனால் நிர்வாகத்துக்கல்லாமல், திருடனுக்கு! எனக்கு இது ஒரு பாடம். கட்டாயம் நிறுவனமும் பாடம் கற்றுக்கொண்டது. இன்று நினைத்துப்பார்க்கிறேன், அவன் பாடம் கற்றிருப்பானா?

திங்கள், அக்டோபர் 27, 2003

NRI பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்

இந்தியாவில் இருக்கும்போது அமெரிக்காவாழ் தமிழர் என்றதும் என் மனதில் ஒரு பணக்கார இந்திய அமெரிக்கர் உருவம் தோன்றும். என் நெருங்கிய நண்பர்களையோ, உறவினரையோ கோவை மாவட்டத்துக்கு வெளியே பார்ப்பதே அரிது, அப்படியிருக்கையில் என் கற்பனை எப்படியிருந்திருக்கும்? சில திரைப்படங்கள், வார இதழ்கள் இவற்றின் மூலம் நான் அறிந்த விஷயங்களை வைத்து உருவாக்கியிருந்த NRI, எல்லாவிதமான ஆட்களையும் கட்டாயம் பிரதிபலிக்க முடியாதுதானே. இன்று நானே அப்படி ஒரு அமெரிக்காவாழ் இந்தியனான பிறகு ஓரளவுக்குப் புரிகிறது, இவர்களில் எத்தனை வகை உண்டு என்று.

நான் அறிந்தவரை, முக்கியமாக மூன்று வகையினராகத் தரம் பிரித்துப் பார்க்க முடிகிறது.

முதலில் ஒரு பத்து-இருபது வருடங்களுக்கு முன் இங்கு வந்து இங்கேயே உறையுரிமை, பிறகு குடியுரிமை என்று தங்கிவிட்டவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவர்கள், ஆசிரியர்கள், தொழில்நுட்ப, பொறியியல், மற்றும் விஞ்ஞான வல்லுனர்கள். சிலர் இங்கு மேல்படிப்புக்காக வந்து பிறகு இங்கேயே வேலை தேடிக்கொண்டவர்கள். இவர்களின் குழந்தைகள் இந்த அமெரிக்க சூழ்நிலையிலே வளர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இணையத்தொடர்பு, இந்திய பலசரக்கு சாமான்கள் ஆகியவை இல்லாத அந்தக்காலங்களில் (நல்ல அரிசி, பருப்பு கூடக் கிடைக்காத நிலை) இவர்கள் தங்கள் குழந்தைகளை தமிழ் மொழியை, இந்திய சமூக சூழலை அறிந்தவர்களாக வளர்க்க மிகுந்த சிரமப்பட்டிருக்கிறார்கள். அதில் எல்லாரும் வெற்றி கண்டிருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அப்படியில்லையென்றால் அவர்களைக் குற்றம் சொல்லவும் முடியாது. இவர்களில் பெரும்பாலானோருக்கு திரும்ப நிரந்தரமாக இந்தியா வருவதைப்பற்றி ஆழ்ந்த ஆர்வம் இருப்பதில்லை. வந்தாலும் அவர்களால் சமாளிக்க முடியுமா என்பது எனக்கு ஐயமாகவே இருக்கிறது. இவர்கள் அந்த 'பணக்கார NRI' உருவத்திற்குக் கிட்டத்தில் வருபவர்கள். கொச்சையாக ABCDs (American Born Confused Desis) என்று அழைக்கப்படும் குணாதிசயங்கள் இவர்களின் குழந்தைகளுக்கு ஓரளவேனும் பொருந்தும். இவர்கள் பேச்சு அமெரிக்கப் பொருளாதாரம், இராக், இந்தியாவின் குப்பை அரசியல், எந்த நகர்ப்பகுதியில் கல்வித்தரம் உயர்வு, வீட்டின் கணப்புக்கு எரிவாயு செலவை எப்படிக் குறைப்பது, புல்வெட்ட, பனியைத்தள்ள ஒப்பந்தக்காரனை வைக்கலாமா அல்லது தானே செய்வது நல்லதா... என்று போகும்.

இரண்டாவது வகையினர் இந்தப் பத்து வருடங்களுக்குள் அமெரிக்காவுக்கு வேலை நிமித்தமாய் வந்த அதிலும் முக்கியமாய் மென்பொருள்-கணினி சம்பந்தப்பட்டவர்கள். குறைந்த கால இடைவெளியில் நிறையப்பேர் வந்திருக்கிறார்கள். இவர்கள் பலர் இப்போது உறையுரிமை பெற்றவர்களாக இருக்கிறார்கள். இப்போது தான் பள்ளிக்குப்போக ஆரம்பித்திருக்கும் குழந்தை, பச்சை-அட்டை விண்னப்பத்தின் முன்னேற்றம், ஊரிலிருந்து வந்துள்ள பெற்றோர், இந்த இடத்தில் இன்னும் எத்தனை நாள் போன்றவை இவர்கள் எண்ணங்களையும், உரையாடல்களையும் ஆக்கிரமிக்கும் விடயங்கள். இன்னும் சொந்த ஊர், உறவினர் ஆகியவற்றோடு தொப்புள் கொடி உறவு, புதிதாய் கிளம்பியிருக்கும் 'அக்கரைக்குச் செல்லும் வேலைகள்' ஆகியவை இவர்களை இங்கும் அங்கும் அலைக்கழித்து மன உளைச்சலிலேயே வைத்திருப்பதைப் பார்த்தால் முதல் வகை ஜீவன்கள் பரவாயில்லை என்று தோன்றுகிறது.

மூன்றாவது வகை, என்வகை. மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களிலிருந்து, தற்காலிகம் என்று பறையறிவிப்போடு அமெரிக்கா வந்துள்ளவர்கள். இவர்களில் நேற்று வந்தவர்களும் இருப்பார்கள்; போன மாதம், போன வருடம் வந்தவர்களும் இருப்பார்கள். ஒட்டுனர் உரிமம், வாடகை வீட்டு ஒப்பந்தக் காலம், ஊருக்கு தொலைபேசிக் கட்டணத்தை எப்படிக் குறைப்பது, இலவச இணையசேவையில் எப்படி தொடர்வது, விசா என்று காலாவதியாகிறது, ஏதாவது பொருள் வாங்கினால் அது இந்தியாவில் வேலை செய்யுமா, சுங்க சோதனைக்கு தப்புமா; பயன் படுத்திய மேசை, இருக்கை, பாய் படுக்கையானாலும் பரவாயில்லை எங்காவது குறைந்த விலையில் (இலவசமாய்க் கிடைத்தால் இன்னும் மகிழ்ச்சி) கிடைக்குமா, இருக்கும் ஒரே வேலைக்கு என்னை வைத்துக்கொள்வார்களா அல்லது அந்தத் தெலுங்கரையோ மராத்திக்காரரையோ வைத்துக்கொள்வார்களா, ஊரில் வாடகைக்கு விட்டு வந்த வீடு எப்படி இருக்கிறதோ - இது மாதிரி ஓடும் இவர்கள் சிந்தனை. இவர்களுக்குத்தெரியும், இங்கு இருப்பதெல்லாம் மாயை, அன்னை பூமியே நிரந்தரம் என்று. இங்கு தங்கள் தங்கலை எவ்வளவு மாதம் நீட்ட முடியுமோ அவ்வளவு நீட்ட எதுக்கும் தயாராய் இருப்பார்கள். நாளைக்கே பெட்டிகட்டச்சொன்னால் அத்ற்கும் தயார். ஊரில் ஒரு வீடு கட்டுவதற்காக இங்கு இருக்கும் காலத்தில் எப்படியாவது சேமிக்கத் தயாராயிருப்பார்கள்.

எனவே இப்போதெல்லாம் அமெரிக்க வாழ் தமிழரைப் பார்க்கும்போது அவர்கள் பேச்சு நடவடிக்கையிலிருந்து இம்மூன்றில் அவர்கள் எவ்வகை என்று தெரிந்து அதற்குத்தக்கபடி உரையாட முயற்சிக்கிறேன்.

ஞாயிறு, அக்டோபர் 26, 2003

Updates

Update 1:
கணினியில் ஒலிப்பதிவு செய்ய, செய்ததை வெட்டி, ஒட்டி, கோர்த்து, வடிவம்மாற்றி இன்னும் பலதும் செய்ய நண்பர் வெங்கட் ஒரு செயலியை எனக்குச் சுட்டியுள்ளார். அது நன்றாக இருக்கிறது. இரண்டாவது பாகத்தில் அதையும் உள்ளடக்கி எப்படி கணினியில் கேட்கும் அனைத்தையும் பதிவு செய்யலாம் என்று என் அனுபவததைப் பகிர்ந்து கொள்ள எண்ணியுள்ளேன். கூடிய விரைவில்.

Update 2:
ஆப்பிள் ஊறுகாய் பெருவெற்றி! ஆந்திரதேசத்துப் பக்குவத்தில் செய்தது. சரக்கு வேண்டுபவர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் :-)) மேலும் நண்பர் வாசன் பிள்ளை பீச் பழத்திலும் (காயிலும்?) ஊறுகாய் போடலாம் என்று தன் அனுபவத்தைச் சொல்லியிருக்கிறார், யார் முயற்சி செய்யப்போகிறீர்கள்?

Update 3:
என் வலைப்பூவைப் படிக்க வேண்டி நான் செய்த தொல்லைகளால், ஒரு நண்பர் கோவையைவிட்டு வெளியூருக்கு (வேலையாய்த்தான்) போய்விட்டார். இருப்பவர்கள் படித்து, கருத்தும் சொல்லிவிட்டார்கள், எனவே அந்தக் குறை ஒருவழியாகத்தீர்ந்தது:-))

Update 4:
கடந்த வாரம் மேலதிகமாய் வலைப்பூ வாத்தியார் வேலை வேறு பார்க்கவேண்டி வந்ததால் இங்கு கொஞ்சம் கவனம் குறைந்துவிட்டது. தீபாவளீ விடுமுறைக்குப்பின் நம் பூ இனி தொடர்ந்து மலரும். (ஜாக்கிரதை!)

பி.கு. இந்த update என்ற வார்த்தைக்கு சரியான தமிழ்ப்பதம் தெரிந்தவர்கள் சொன்னால் நன்றியுடையவனாவேன். நன்றிக்கடனாக அதை update 5 ஆகப் போட்டுவிடுகிறேன், பார்ப்பவர்கள் அனைவருக்கும் பயன்படும் (ஆமா, இது பெரிய தினமலர் வெப்சைட், இதில் போட்டதும் உலகத்துக்கே தெரிந்து விடப்போகுது - இது என் பாதி, என்னிலும் நல்ல பாதி (better half), உஸ் அப்பாடா!)

வியாழன், அக்டோபர் 23, 2003

மயிலந் தீபாவளி

பொங்கல் என்றால் எல்லாருக்கும் குறைந்தது மூன்று நாள் கொண்டாட்டம் நினைவுக்கு வரும். ஆனால் தீபாவளி ஒரு நாள் தான் என்று தான் எல்லாரும் சொல்லுவார்கள். ஆனால் சித்தூர்க்காரர்கள் அப்படிச்சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் எங்க வடசித்தூரில் ரெண்டு நாள் தீபாவளி! ஆமாம், முதல் நாள் எல்லா ஊரையும் போல. ரெண்டாம் நாள் தான் கோலாகலமே. அதற்கு மயிலந்தீபாவளி என்று பெயர். பெயர்க்காரணம் எல்லாம் தெரியாது. ஆனால் சுத்துப்பட்டு கிராமம் (இதெல்லாம் சினிமா டயலாக், எங்க ஊரில் இந்த 'சுத்துப்பட்டு' என்ற வார்த்தையே கேட்டதில்லை) எல்லாம் சித்தூருக்கு வந்துவிடுவார்கள்.

எங்க வீட்டிலிருந்து சும்மா 100 அடி தூரத்தில் ஒரு மைதானம் உண்டு. அங்கே தான் எல்லாக் கொண்டாட்டமும். மேலே இருந்து கீழே வரும் ராட்டின தூரி, தரை மட்டத்தில் சுற்றி வரும் குடை தூரி (மெர்ரி கோ ரவுண்ட்) இன்னும் பலூன், சீக்கி (ஊதல்), மிட்டாய் என்று பாரதிராஜா காண்பித்த எல்லாம் அன்னிக்கு கலர் கலரா பளபளக்கும். வண்ணக் காகிதத்தில் செய்த நிறைய பூச்செண்டுகள், பலூன் வைத்த சீக்கி (இது நாம் ஊதும்போது பலூன் காற்றை வாங்கிப் பெருக்கும், பின் அதுவாக ஊதி சத்தம் போடும்) இதெல்லாம் எனக்குப் பிடித்த விளையாட்டுகள்.

இந்த தூரி வகைகள் அவ்வளவாய் ஈடுபாடில்லை (இன்னிக்கும் amusement park-ல் ரைட் போக ஆசைப்படமாட்டேன், என் மனைவி நான் எல்லார் எஞ்சாய்மென்டையும் கெடுக்கிறேன் என்று முறைப்பாள்!) இத்தனைக்கும் தூரி நடத்துபவர்கள் என் தூரத்து உறவினராய் இருப்பார்கள், இலவச சவாரி கிடைக்கும். என் அண்ணன் நிறைய ரவுண்ட் சுத்தி வருவார். அதிலும் ஆணும் பெண்ணும் போட்டி, சீண்டல், என்று அமர்க்களப் படுத்துவார்கள். ராட்டினத் தூரியில் ஒருவர் தன் பெட்டி கீழே வரும்போது கையில் இருக்கும் அடையாளப்பொருளை வைப்பார்கள், வேறு பெட்டியில் இருப்பவர் அதை லாவகமாக கையில் எடுத்துக்கொள்வார்கள், பதிலுக்கு அவர்கள் ஒன்று வைக்க, இவர்கள் எடுக்க, இது இப்படியே நடக்கும்.

மாலையில் ஆண்கள், (கவனிக்க: முழுக்க முழுக்க ஆண்கள்) ஆடும் கும்மியாட்டம் நடக்கும். கிட்டத்தட்ட ஒயிலாட்டம் போலிருக்கும், ஆனால் அதுவல்ல. நான்றாகப் பாடி கைகொட்டிக் கும்மியடித்து ஆடுவார்கள். அது ஒரு மணி போல நடக்கும்.

இந்த மாதிரி ரெண்டு நாள் தீபாவளி வேறு எங்கும் கொண்டாடுகிறார்களா தெரியவில்லை. ஊரைவிட்டு வந்து 27 வருடம் ஆகிறது சில ஆண்டுகளுக்கு முன் வரை இது நடந்து கொண்டுதானிருந்தது. இன்னும் நடக்கும் என்று நினைக்கிறேன். ரெண்டு வருடம் முந்தி சன் டிவியில் கூட எங்க ஊரின் மயிலந்தீபாவளியை செய்தியாக ஒளிபரப்பினார்கள் என்று கேள்விப்பட்டேன். என்றாவது ஒருநாள் ஒரு மயிலந்தீபாவளிக்கு ஊருக்குப் போவேன் என்று நம்பிக்கை இருக்கிறது. பார்ப்போம்.

செவ்வாய், அக்டோபர் 21, 2003

அஞ்சு வயது ஆனந்தம்

ஒரு அஞ்சு வயதுக்குழந்தைக்கு என்னவெல்லாம் தெரியும்? ஒருநாள் அம்மாவிடம் mommy, you are not nice, you are hurting my feelings என்கிறது. இன்னொருநாள் I have this super duper fixing machine, bring anything you want to fix என்கிறது. ஏன் இன்றைய குழந்தைகள் இவ்வளவு விவரமாக இருக்கின்றன. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். இன்னும் ABCD, 123யே சரியாச்சொல்லத் தெரியாது, ஆனால் கதைப் புத்தகம் எழுதுகிறது, அந்தப் புத்தகத்திற்குத் தானே படம் போட்டு, stapler கொண்டு தைத்து, அதை பரிசளிக்கிறது. யாராவது பிறந்த நாள் என்று அழைப்புக் கொடுத்தால், தானே கலர் கலராக பதிலுக்கு வாழ்த்து அட்டை தயாரித்து, 'எம்பலப்' கேட்டு நச்சரித்து, உள்ளே இட்டு, எச்சில் தடவி ஒட்டி... இறைவா எத்தனை கோடி இன்பம் வைத்தாய், அதில் ஒரு கோடியைக் குழந்தையின் கையில் கொடுத்தாய்.

திங்கள், அக்டோபர் 20, 2003

அன்னை தெரசாவுக்கு அருளாளர் பட்டம்

அன்னை தெரசாவுக்கு அருளாளர் பட்டம்

ஒருவிதத்தில் இது கத்தொலிக்க மதம் சம்பந்தப்பட்ட விவகாரமானாலும், இந்தியாவில் இது அப்படியெல்லாம் பிரித்துப் பார்க்கப்படுவதில்லை. இந்தியாவில் பேரூடகங்கள் இதைத் திருப்பித் திருப்பி பறை சாற்றிக்கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு இந்தியருக்கு இவ்வாறான அங்கீகாரம் கிடைக்கிறது என்ற அளவில் இது பெருமைப்படத்தக்கதே. ஆனால், அன்னை நிகழ்த்தியதாகக் கூறிய அற்புதத்தை மறுத்தும் பல அபிப்ராயங்கள்இருக்கத்தான் செய்கின்றன. எது உண்மையென்று ஆராய்வதைவிட, அவர் எளியவர்களிடம் காட்டிய பரிவை, சேவை உள்ளத்தை, நன்றியுடன் நினைவு கூறி முடிந்த அளவு நாமும் நம்மாலானதைச் செய்யவேண்டும்.

சனி, அக்டோபர் 18, 2003

நான் இன்னும் வளரவே இல்லையா?

எனக்கு ஒரு நண்பர் குழாம். அந்தக் குழாத்தின் சராசரி வயது என்னைவிட சற்று அதிகம். அதற்குப் பெயரெல்லாம் கூட உண்டு. நான் அந்த நண்பர்களின் நெருங்கிய அண்மையிலேயே ஒரு ஏழு வருடம் இருந்தேன். இப்போது மூன்று வருடமாக வெளியில் இருக்கிறேன். ஆனால் மின்னஞ்சல் எங்களை அதே நெருக்கத்தில் வைத்திருக்கிறது (அல்லது அப்படி என்னை எண்ண வைத்திருக்கிறது). இந்தப் பத்து வருடத்தில் ஒவ்வொருவர் பணிபுரியும் மட்டம், அவரவர் குடும்பத்தில் நிகழ்வுகள் (இப்போது மூவர் வீட்டில் வயது வந்த பெண்கள்!) அவரவர் பொழுதுபோக்கு (இந்தியாவில் எத்தனை பேர் 'பொழுது போக்கும்' நிலையில் இருக்க முடிகிறது? பொழுது போதாமல் இருப்பதே நிதர்சனம்) என நிறைய மாறிப்போனது. ஆனால் நான் இன்னமும் அந்தப் பத்து வருடம் பின்னோக்கியே இருக்கிறேனொ என்று எனக்கு இப்போது ஒரு பயம், சந்தேகம்.

நான் வலைப்பூவெல்லாம் எழுதுகிறேன் என்று பெரிதாய் அலட்டிக் கொண்டு, இவர்களுக்கு குறிப்பாக மடல் அனுப்பி அதைப் படித்து கருத்துச்சொல்ல மீண்டும் மீண்டும் விரட்டுகிறேன். ஆனால் அவரவர் இருக்கும் இன்றைய நிலையில் ஓட்டமாய் ஒட வேண்டிய இன்றைய வாழ்க்கையில், இதற்கெல்லாம் எங்கு நேரம் என்பதை எண்ண மறந்தேன். அவர்களைக் கொஞ்சம் வருத்தி விட்டேனோ என்று தான் இப்போது மனதில் கூச்சமாய் இருக்கிறது.

இன்னொரு விதத்தில் எண்ணிப்பார்த்தால், எனக்கு அவர்களை நினைத்துப் வருத்தமாயும் இருக்கிறது. உழைத்து உழைத்து, இன்னும் ஓடி ஓடி கடைசியில் என்ன மிஞ்சப்போகிறது? வேலை வேலை என்ற சுழலில் இருந்து சற்று இளைப்பாறவாவது வேறு சிந்தனைகளை, கருத்துக்களை படிக்க, அலச மனதை அனுப்பினால் மனம் புத்துணர்வு பெறாதோ? கட்டாயம் சினிமா, TV என்று அவர்கள் மனமும் மாற்றுத் தளம் வேண்டி அலைந்து கொண்டுதானிருக்கும். ஏன் இந்த மாதிரி எண்ணமுடிவதில்லை? திரும்பிப்பார்த்தால், அந்த ஏழு வருடங்களும் நானும் அச்சு அசலாக இப்படித்தானிருந்தேன். அதே சுழலில் இருந்திருந்தால் அனேகமாக இப்படியே தான் இருந்திருப்பேன். ஆனால் அப்போதும் கொஞ்சமாவது மாற்றுச் சிந்தனைகள், தன் மன அலசல்கள் என்று நிச்சயம் என்னைப் புதுப்பித்துகொண்டேதான் இருந்தேன். பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி என்று நம்மை வந்து தாக்கும் பேருடகங்களிருந்து நம்மைக் காத்து, கொஞ்சமாவது சுயசிந்தனை உள்ளவராக வைத்துக் கொள்ள வலைப்பூ போன்றவை நிச்சயம் உதவும். முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை 'தி ஹிந்து' படித்த 20 வருடத்திற்கு முந்திய நாட்களிலும், நான் 'ஆசிரியருக்குக் கடிதம்' படிக்காத நாளிருக்காது. அந்த 'வேறு என்ன அபிப்ராயம் இருக்க முடியும்?' என்ற ஆர்வமே, இன்று வலைப்பூக்களைத் தேடிப் பிடித்துப் படிக்க என்னை இட்டுச்செல்கிறது.

ஆகவே நாளெல்லாம் உழைப்பிலே உழலும் நேரமில்லாத என் நண்பர்களே, எனக்காக அல்ல, உங்களுக்காக உங்களைப் புதுப்பித்துக்கொள்ள படியுங்கள். பலம் வாய்ந்த ஊடகங்களின் தாக்குதலில் உங்களின் எண்ணக்கள் மழுங்கிப் போகமலிருக்கப் படியுங்கள். உங்கள் மூளைக்கு உணவு வேண்டின் படியுங்கள். வெங்கட்டைவிஷய கனத்திற்காகப் படியுங்கள், பத்ரியைப்பளிச் பளிச் அலசல்களுக்காகப் படியுங்கள், கண்ணனைஇளகிய மனத்துடன் உலகை உணருவதற்காகப் படியுங்கள், புலம் பெயர்ந்தும் நம் குலம் பெருமை பெற பலதும் செய்யும் சுபாவை, சந்திரவதனாவைப்படியுங்கள். இளைஞர்கள் பரி, மதி, ஹரன்எண்ண ஓட்டம் எப்படியென்று அறியப் படியுங்கள், கணினியில் தமிழ் தழைக்க இன்னும் பலர் பதியும் வலைப்பூக்களைப் படியுங்கள்.

நிச்சயமாய் உங்கள் வேலைப்பளுவின் இடையிலும் உங்கள் மூளைப்பளு குறைவதை உணர்வீர்கள்.

வியாழன், அக்டோபர் 16, 2003

இன்விடேஷன் ஃப்ரம் டமில் சங்கம்

அன்பு நண்பர் பரிமேழலகர் (ரெண்டு விரல்ல டைப் அடிக்கற எனக்கு உங்க பேரை அடிக்கறதுக்குள்ள விரல் சுளுக்கிக்கும் போல இருக்கு :), இங்கு நடத்தப்படும் தமிழ்சங்கங்களின் வாழ்நாள் முதல் தலைமுறை புலம்பெயர்ந்தோர் இருக்கும் வரைதான் போல என்று வேதனைப்பட்டிருந்தார். அதுவரைக்கும்கூட தாங்குமா என்று தெரியவில்லை.

எங்க ஊர் டமில் சங்கத்தில் தீபாவளி விழாவுக்கு அமைப்பாளராக இருக்கும் ஒரு குடும்பத்துப் பெண்மணி என் மனைவியிடம் இங்லீஷில் பேசி அழைக்க, தமிழ்ச் சங்கம் தானே தமிழிலேயே பேசலாமே என்று என் மனைவி சொல்லப்போக, இப்போது இருவரும் TV சீரியலில் வரும் மாமியார்-மருமகள் அல்லது நாத்தனார் அளவுக்கு வாய்ச்சண்டை போடும்படி யாகி விட்டது. ஒரு சாதாரண விஷயம் பெரிசுபடுத்தப்பட்டு விட்டது வேறுபுறம். என் கவலை எல்லாம், தமிழ்ச்சங்கத்துக்கு தமிழில் அழைக்கலாமே என்று சொன்னதே குற்றமாகிவிட்டதே என்பதுதான். பரி, கவலையே வேண்டாம், அடுத்த தலைமுறைக்கெல்லாம் தமிழ்ச்சங்கம் இருக்காது. சண்டைகளும் இருக்காதென்றெல்லாம் நான் உத்தரவாதம் தரமுடியாது :-)

புதன், அக்டோபர் 15, 2003

ஆப்பிள் சொல்லும் பாடம்

என் மகன் (அரிச்சந்திரன் மகன்:-)

பஜ்ஜி எதிலெல்லாம் பண்ணலாம்? வாழைக்காய் என்று டைப் அடித்தாலே கை பஜ்ஜி என்று அடிக்கத் துடிக்கிறது. அந்த அளவிற்கு பஜ்ஜிக்கும் வாழைக்காய்க்கும் பந்தம். அடுத்து வெங்காயத்தைச் சொல்லலாம். அப்பள பஜ்ஜி அவசர பஜ்ஜி. மிளகாய் பஜ்ஜி கண்ணீர் பஜ்ஜி. ஆப்பிள் பஜ்ஜி?

பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன் ஒருநாள் கேகே நகர் சரவணபவனில் ஆப்பிள் பஜ்ஜி சாப்பிட்டது இன்னும் நினைவில் இருக்கிறது. இப்போது சரவணபவன் என்றாலே வேறு என்ன என்னவோ நினைவுக்கு வருகிறது. அன்று 'இன்றைய ஸ்பெஷல்' போர்டில் ஆப்பிள் பஜ்ஜியைப்பார்த்து என்னவோ புதுமையாய் இருக்கும் என்று (அன்றே விலை பையைக் கடித்தது) ஆர்டர் பண்ணி, பாதி சாப்பிட்டுவிட்டு மீதியை வைத்து விட்டு வந்தவன் தான் பல மாதங்கள் சரவண பவனுக்கும் போகவில்லை, ஆப்பிள் பழமும் சாப்பிடவில்லை. இனிப்பும் புளிப்பும் கலந்த ஆப்பிளுக்கும், உப்பும் காரமும் கலந்த மாவுக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை. அவர்கள் தான் புதுமை, ஆடம்பரம் என்று எதையாவது செய்தார்களென்றால் எனக்கெங்கே போனது புத்தி?

அதற்கடுத்துப் புதுமையாக இப்போது எங்கள் வீட்டில் ஆப்பிள் ஊறுகாய் ஊறிக் கொண்டிருக்கிறது. என்னடா மறுபடியும் புத்தியில்லையா என்று நினைக்காதீர்கள். சென்ற வார இறுதியில் ஆப்பிள் தோட்டத்துக்குப் போய் வந்ததின் ஒரு விளைவு இது.

பொன்னிறத்தில் பரங்கிக்காய்கள்

சாறு செறிந்த விதம் விதமான ஆப்பிள்களை, கையால் பறித்து, நறுக் நறுக்கென்று கடித்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை எத்தனை நாளாய் மனசை குடைந்து கொண்டிருந்தது! சிறுவயதிலிருந்து ஒவ்வொரு சினிமா பார்க்கும்போதும் முதலில் வந்து, மனப்பாடம் ஆகிவிட்ட 'வஜ்ரதந்தி, வஜ்ரதந்தி, விக்கோ வஜ்ரதந்தி...', அதில் பல்லைக் காட்டிகொண்டு ஒரு பெண் சரக்கென்று ஒரு ஆப்பிளைப் பறித்து கடிக்கும் காட்சியைப் பார்க்கும் போதெல்லாம் நாமும் ஒருநாள் இப்படி ஆப்பிளைக் கடிக்க மாட்டோ மா என்று ஏக்கமாயிருக்கும். எனவே இப்போது அமெரிக்க சித்தூரில் இதோ கூப்பிடுதூரத்தில் (உள்ளுர் தொலைபேசியில் கூப்பிடுதூரம், ஹி ஹி) ஆப்பிள் தோட்டம், அங்கு போனால் எத்தனை பழம் வேணுமானாலும் பறிக்கலாம், கடிக்கலாம், சுவைக்கலாம்; திரும்பி வரும்போது பையில் உள்ள ஆப்பிளுக்கு மட்டும் பவுண்டுக்கு 40 சென்ட் கொடுத்தால் போதும் (நல்லவேளை நம்மை எடை போட்டுப் பார்ப்பதில்லையாம்) என்று கேள்விப்பட்டவுடன் சும்மா இருக்க முடியவில்லை.

இந்த மாதிரி விஷயம் என்று கேள்விப்பட்டதுதான் தாமதம், 'நானும் வர்ரேன்' என்று ஒன்று, இரண்டு..மொத்தம் ஆறு குடும்பங்கள் அணிவரிசை ஆகிவிட்டது. கிளம்பினோம். பூந்து விளையாடிடணும் என்று தீர்மானம் செய்துவிட்டேன். முதல் ஆப்பிள் முழுசாய் சாப்பிட்டேன், அடுத்த ஆப்பிள் அரை வாசிக்கு மேல் உள்ளே போகவில்லை திகட்டியது. அடுத்த வகை வேறு மாதிரி இருக்குமே என்பதற்காக மூன்றாவது ஆப்பிளை ஒரு கடி. அவ்வளவுதான். ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள், ஆப்பிள் அஞ்சு கூட இல்லை. ஆப்பிளைப் பார்த்தாலே வெறுக்க ஆரம்பித்துவிட்டது.

உலகமே இப்படித்தான். எல்லாமே தூரத்தில் இருந்து பார்க்கும்போது தான் பெரிய விஷயம். ஒன்றை அடையவேண்டும், அதற்காக எவ்வளவு மெனக்கெட்டாலும் பரவாயில்லை என்று இருக்கும். அது கிடைத்தவுடன், அட இவ்வளவு தானா என்று இருக்கும். இது இந்த மண்டைக்கு உறைப்பது இது முதல் முறையல்ல. ஆனாலும் இப்படி நிறைய விஷயங்கள் இன்னும் ஆளை ஈர்த்தபடியேதானே இருக்கின்றன! ஒருவிதத்தில் இந்த ஈர்ப்பு தானே வாழ்க்கையின் உயிர்நாடி என்றும் தோன்றுகிறது. இப்படி சின்னச்சின்ன ஆசைகள் விருப்பங்கள் தானே வாழ்க்கையை இன்னும் அலுக்காமல் வைத்திருக்கின்றன.

திராட்சைப்பழம் கிடைக்காமல் போனதால் நரி 'சீச்சீ, இந்தப்பழம் புளிக்கும்' என்று சொல்லிப் போன கதை தெரியும். எண்ணிப் பார்த்தால் கொத்து திராட்சைப்பழம் கிடைத்திருந்தாலும் அது அப்படித்தான் சொல்லியிருக்கும் என்று நினைக்கிறேன். (அதெல்லாம் சரி, நரி சாக பட்சிணியா மாமிச பட்சிணியா, திராட்சையெல்லாம் சாப்பிடுமா? அதைக் கண்டுபிடிக்கணும்

எத்தனை ஆப்பிள் விரயம்?

அங்கு ஆப்பிள் தோட்டத்தில் மனத்தை உறுத்திய இன்னொரு விஷயம், ஒவ்வொரு மரத்தடியிலும் ஒரு 50 பழங்களாவது வீணடிக்கப் பட்டுக் கிடந்ததுதான். ஒரு வரிசைக்கு 30 மரங்களாவது இருக்கும், இப்படி ஒரு கூட்டத்தில் 20 வரிசை இருக்கும், அப்படியானால் ஒரு கூட்டத்தில் எத்தனை பழம் வீண்? 30000? இப்படி அந்தத் தோட்டத்தில் ஒரு 4-5 ஆப்பிள் கூட்டங்கள் இருந்தன, அப்படியானால் மொத்தம் வீணடிக்கப்படும் பழங்கள்...ஒரு லட்சத்திற்கும் மேல்! மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது. இதெல்லாம் இந்த நாட்டில் தான் சாத்தியம். எத்தனை பேர் நம்மூரில் வருடத்திற்கு ஒரு ஆப்பிளுக்கும் குறைவாக சாப்பிடுபவர்கள்? இந்தியாவில் இருக்கும்வரை எங்கள் வீட்டிலேயே ஒரு ஆப்பிளை ஒருவர் மட்டும் சாப்பிடுவது மிக அபூர்வம், சொல்ல வெட்கப்படவில்லை. உலகில் ஏனிந்த ஏற்றத் தாழ்வு? பதில் தெரியாத கேள்விகள்.

அதெல்லாம் சரி, அதென்ன ஆப்பிள் ஊறுகாய்?

நெல்லிக்காய் ஆப்பிள் (crab apple)

நெல்லிக்காய் சைசில் ஆப்பிள் ஒரு மரத்தில் கொத்து கொத்தாய் காய்த்திருந்தது. பறித்து சுவைத்ததில் அப்படியொரு புளிப்பு. அசல் நெல்லிக்காய் புளிப்பு, ஆனால் ஆப்பிள் மணம், வடிவம், நிறம், கவர்ச்சி! இங்கேதான் எதில் R&D பண்ணலாம் என்று மண்டையில் எப்போதும் ஒரு அரிப்பு ரெடி ஸ்டாக்காக இருக்குமே, சரி, ஆப்பிள் ஊறுகாய் போட்டுப் பார்த்துவிடலாம் என்று அதில் கொஞ்சம் கொண்டுவந்து, அதை அன்பு மனையாள் ஊறுகாயும் போட்டிருக்கிறாள். இது வெற்றியா இல்லை ஆப்பிள் பஜ்ஜி கதையாகப்போகிறதா என்று இன்னும் கொஞ்ச நாளில் தெரியும். வெற்றி என்றால் சொல்கிறேன்.

திங்கள், அக்டோபர் 13, 2003

ஒலிவிளையாட்டைப் படிக்கும் முன்

எச்சரிக்கை 1:இந்த முறை தொழில்முறை ஒலிப்பதிவுக்கல்ல. திருட்டு ஆடியோ CD தயாரிப்பதற்கு அல்ல. (தயாரித்தாலும் ஒரு பயலும் வாங்கப்போவதில்லை)
எச்சரிக்கை 2: வெறும் windows மட்டுமே பயன்படுத்தி எப்படி கேட்கும்படியான தரத்தில் ஒலிப்பதிவு செய்வதென்பது தான் நோக்கம். மேலதிகமாக மற்ற மென்பொருட்களை உபயோகிக்க தயாரென்றால், இன்னும் சிறப்பாகச் செய்யமுடியும்.
எச்சரிக்கை 3:இங்கு மென்பொருள் வல்லுனர் என்பது யாரையும் குறிப்பிட்டு அல்ல, முக்கியமாக என் இனிய நண்பர் பரிமேலழகரை அல்லவே அல்ல.
எச்சரிக்கை 4: ***இந்த இடம் காலியாக இருக்கிறது*** யாராவது நிரப்ப உதவுங்களேன்.

ஒலியுடன் விளையாட்டு

கணினியின் பல பரிமாணங்களில் ஒலி முக்கியமான ஒன்று. ஆனால் அலுவலகங்களில் பெரும்பாலும் உபயோகிக்கப்படாத ஒன்றும் கூட. எனக்குத்தெரிந்து மென்பொருள் துறையில் வருடக்கணக்கில் பணிபுரியும் நண்பர்களே பலர் ஒலித்தரவைக் கையாளும் செயலிகளை அதிகம் அறிந்திருப்பதில்லை. நேற்று சந்தித்த ஒரு நண்பர் ஏழு வருடமாக அமெரிக்காவில் மென்பொருள் வல்லுநராக (வல்லுனர்?) இருக்கிறார், ஆனால் அடிப்படை ஒலிப்பதிவு செயலி (sound recorder) விண்டோஸில் எங்கு இருக்கிறது, எப்படி உபயோகிப்பது என்பது தெரியவில்லை. இவர் போன்ற பலர் யூனிக்ஸ் உலகத்தில் பணியாற்றுவதும் ஒரு காரணமானாலும், இந்த ஏழு வருடமும் அவரிடம் விண்டோஸில் இயங்கும் மடிக்கணினி ஒன்று இருந்தேதான் வந்துள்ளது. நண்பர் கண்ணன் அவர்கள் தன் 'குரல்வளை' முயற்சிக்கு பங்களிக்க ஆர்வமிருந்தும் சிலர் தொழில்நுட்பக் காரணங்களால் செய்யாமலிருப்பதாக சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. நான் நச்சரித்து சிலரிடம் பெற்ற ஒலிக் கோப்புகளும் கேட்கமுடியாமல் கரகரவென்று முறுக்குக் கடித்தாற்போல் இருந்ததும் அதே காரணத்தால் தான்.

என் மகளின் இசை ஆசிரியர் கொடுத்திருந்த ஒலி நாடாவை குறுவட்டாக்கி காரில் ஓடவிட்டிருப்பதை அந்த நண்பர் ஆச்சர்யமாகப் பார்த்தார். அவருக்கு இந்த மாதிரி வேலையெல்லாம் AVM 'G' தியேட்டரில் தான் செய்ய முடியும் என்பது போல ஒரு எண்ணம்!

எனவே எனக்குத்தெரிந்த ஒலிப்பதிவு விளையாட்டுக்களை இங்கு பதிவு செய்தால் யாருக்காவது பயன்படுமென்று இதோ செய்கிறேன். விளையாட்டுக்கள் என்று நான் குறிப்பிடக்காரணம்:
1. இது சுய உபயோகத்திற்காக, தன்னிடம் இருக்கும் வசதிகளை வைத்து செய்யக் கூடியது,
2. இந்த நகல்தடுப்பு சட்டங்கள் (copyright laws), அதன் பாதிப்பு ஆகியவற்றை இந்த விளையாட்டுக்கு வருபவர்கள் தாங்களே பார்த்துக்கொள்ளவேண்டும். நான் எதற்கும் பொறுப்பில்லை:--o

நான் உங்களை அந்த சட்டங்களை மீற தூண்டுவதாகவோ, உதவுவதாகவோ யாரும் என் மேல் வழக்குப் போட்டால் காப்பாற்ற இந்த அமெரிக்காவில் எனக்கு யாரும் இல்லை. என் ஒரே வழக்கறிஞ நண்பர் சுபாஷ்கூட இங்கில்லை. அமெரிக்கா சிறையில் களி கிடைத்தால் சந்தோஷம், ஆனால் இந்த பர்கர், சுடுநாய், பீசாவெல்லாம் என் வயிறு தாங்காது! ஜெயில் என்றதும் எல்லே ராம் எழுதின NRI கோதுவின் கதை தான் ஞாபகத்திற்கு வருகிறது. மனுஷன் என்ன அருமையாக அனுபவித்து(?) எழுதியிருந்தார்!

இந்த ஒலிப்பதிவு விளையாட்டுகளில் பலவகை உண்டு:
1. ஒலிநாடா அல்லது வானொலிப்பெட்டி போன்ற ஒலிஎழுப்பும் கருவியிலிருந்து அல்லது ஒலிவாங்கியிலிருந்து (mic) கணினியில் ஒலியைப் பதிவு செய்தல்.
2. வேறு கருவியிலிருந்தல்லாமல், உங்கள் கணினியிலிருந்தே வெளிப்படும் ஒலியை பதிவுசெய்தல். இணைய வானொலி, மற்றும் இறக்கிக் கொள்ளமுடியாத ஆனால் கேட்கமுடிகின்ற ஒலித்தரவுகளை இதன் மூலம் பதிவு செய்யமுடியும் (Again, copyright warning!).
3. ஒலிக் கோப்புகளை குறுவட்டில் பதிவுசெய்தல் (audio CD or MP3 CD)

இவற்றில் மூன்றாவது, CDRW உள்ள கணினியில் மட்டும் சாத்தியம். அதை வைத்திருப்பவர்கள் இதை செய்வதெப்படியென்பதைக் கட்டாயம் அறிந்திருப்பார்கள், எனவே இங்கு அது விளக்கப்படாது.

முதல் விளையாட்டு பலருக்கும் தெரிந்த ஒன்று, இருந்தாலும் முழுமை கருதி இங்கு அதை மீண்டும் அலசி, அதில் உள்ள சில சூட்சுமங்கள் என்ன என்றும் பார்ப்போம்.

ஒலிவாங்கியை கணினியுடன் இணைப்பது எளிது. வேறு கருவியென்றால் ஒரு இணைப்பு கேபிள் தேவைப்படும். அது இருபுறமும் 3.5 mm ஸ்டீரியோ ஜாக் கொண்டுள்ள விசேட கேபிள். கீழே பார்க்கவும்.

இணைப்பு கேபிள்
சும்மா ஒரு விளக்கத்துக்காக இப்படி இருக்கு,
இது போல் ரெண்டு துண்டு பண்ணினா எப்படி இருக்கும்? :-))

அதன் ஒரு முனையை கணினியின் ஒலிவாங்கி வாயிலில் (mic port) செருகி, மறுமுனையை உங்கள் ஒலிக்கருவியின் earphone/speaker/line-out இதில் ஏதாவது ஒன்று இருக்கும், அந்த வாயிலில் செருகிவிட்டால் இனி மென்பொருள் வேலை தான் பாக்கி.

நாம் இங்கு காணும் முறை விண்டோஸ் XPயில் இயங்கும் கணினிக்குப் பொருந்தும். பெரும்பாலான முறைகள் எல்லா விண்டோஸ் வகைகளுக்கும் பொதுவானவைதான். மற்றவர்கள் கொஞ்சம் முயன்று கவனித்தால் மாற்று முறை கிடைக்கும்.

1. செயலி (Program): Start-->Programs-->Accessories-->Entertainment-->Sound Recorder. இதைத் திறந்து கொள்ளவும்

ஒலிப்பதிவு செயலி

2. ஒலிமூலம்(Sound source): எங்கிருந்து வரும் ஒலியை பதிவுசெய்யவேண்டும் என்று நீங்கள் சொல்லவேண்டும். வேறுவிதமாய் சொல்லாதவரை, விண்டோஸ் தானாக ஒலிவாங்கி வாயிலை தெர்ந்தெடுத்துக்கொள்ளும். எனவே இப்போதைக்கு இந்தப் படியை நீங்கள் தாண்டிச்செல்லலாம்.

3. ஒலிப்பதிவு நேரம் (length of recording): இங்குதான் முதல் சூட்சுமம் இருக்கிறது. இயல்பாக விண்டோ ஸ் ஒரு நிமிடம் வரை நீளம் கொண்ட ஒலித்துண்டுகளைத் தான் பதிவு செய்ய அனுமதிக்கிறது. இந்த எல்லையை எப்படி விரிவு படுத்துவது? ஒரு எளிய வழியை இங்கு காண்போம்.
ஒலிப்பதிவுச் செயலியின் 'பதிவு' பொத்தானை அழுத்தி ஒரு நிமிட நேரம் கொண்ட ஒரு வெற்று (dummy) ஒலித்துண்டினை முதலில் தயார் செய்யலாம். பிறகு இதே செயலியில் உள்ள Edit-->copy & Edit-->Paste insert உபயோகித்து, அந்த நீளத்தைப் பெருக்கிக்கொள்ளலாம். ஒருமுறை ஒட்டினால் 60 Sec என்பது 120 sec ஆவதைக் காணலாம். எத்தனை முறை தேவையோ அத்தனை முறை செய்து நமக்குத் தேவையான நேரம் அல்லது அதைவிட சற்று அதிகமான நேரம் வரும்படி செய்யலாம். இப்போது இந்த நீளமான ஒலிக்கோப்பை ஒரு பெயரில் (e.g. 240SecTemplate) சேமித்து வைத்தால், ஒவ்வொரு முறை நீளமான ஒலிப்பதிவு செய்யும்போதும் இதை ஒரு முன்மாதிரி (template) ஆக உபயோகிக்கலாம். இவ்வாரு நீளமாக்கப்பட்ட ஒரு ஒலிக்கோப்பு இந்தச் செயலியால் திறக்கப்பட்டிருக்கும் வரை இந்தச்செயலி 60 நொடி எல்லையை மறந்துவிடும்!

4. ஒலிச்சத்த அளவு (volume level): நாம் ஒலி எழுப்பப் பயன் படுத்தும் கருவியின் ஒலி அளவு (அல்லது பேச்சைப் பதிவு செய்வதானால் ஒலிவாங்கியின் திறன்) சரியான அளவில் குறைந்தாலும் கூடினாலும் செய்யும் ஒலிப்பதிவின் தரம் சிதைந்துவிடும். வெளிக்கருவியில் பாதிக்கும் குறைந்த அளவே சத்தம் வைத்துக்கொள்வது நல்லது. இருப்பினும் ஒலிப்பதிவு செய்யும்போது சிறிது கவனம் செலுத்தி இதை உறுதி செய்ய வேண்டும்.
அதற்குத்தான் பச்சை வண்ணத்தில் ஒரு மானி(meter) இந்தச்செயலியில் அமைக்கப் பட்டிருக்கிறது. செயலியின் பதிவு பொத்தானை அழுத்தி அதேசமயம் வெளிக்கருவியில் ஒலிஎழுப்பினால் அந்தப் பச்சை வண்ண மானி உயிர் பெற்றுத்துடிப்பதை அதில் தோன்றும் அலைகளால் காணலாம். நம் ஒலி மூலம் சரியான சத்த அளவில் இருந்தால் இந்த மானியில் அலைகளின் உயரம் நடுக்கோட்டுக்கு மேல் மாறிமாறி எழும்பும். இந்த உயரம் அந்த மானியின் மேல் எல்லையைத்தொட்டுவிட்டால் நம் ஒலி மூலத்தின் சத்த அளவு அதிகம். மாறாக அலைகளின் சராசரி உயரம் மிகவும் குறைவாய் இருந்தால் சத்த அளவு குறைவு.

சத்த அளவு அதிகம் ___________ சத்த அளவு குறைவு
இதை சற்று நம் கைப்பட பல முறை செய்து, அப்படிப்பதிவு செய்ததை ஒலிக்கச்செய்து கேட்டால் சுலமாய்ப் புரிந்துவிடும். இந்த சிறு விஷயம் சரியாக கையாளப்படாதாலேயே, அந்த 'முறுக்குக் கடிக்கும்' சத்தம் கேட்பது! அல்லது கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல் கேட்பது!
ஒலிப்பதிவு செயலியில் உள்ள மற்ற பொத்தான்கள் எளிதில் விளங்குவன. அவற்றை பயன்படுத்தி பதிந்த ஒலியை ஒலிக்கச் செய்யலாம். சுட்டி முள்ளை முன்பின் நகர்த்தி தேவையற்ற ஒலித்துண்டுகளை வெட்டி எறியலாம். இன்னும் நிறைய விளையாடலாம்.

5. ஒலித்தரவு வடிவம் (audio format): இப்படி பதிவு செய்த ஒலி இன்னும் தற்காலிகமாக விண்டோ ஸின் நினைவகத்திலேயே இருக்கும். அடுத்து அதை நிரந்தரமான கோப்பாக சேமிக்கவேண்டும். File-->Save as மூலம் அது சாத்தியம். பிடித்த பெயர்கொடுத்து சேமிக்கும்போது கீழே கடைசியில் என்ன வடிவத்தில் நமக்கு வேண்டும் என்று சொல்லிக்கொள்ள ஒரு வாய்ப்பு இருக்கிறது. அங்கே Mpeg Layer-3 என்று சொல்லிவிட்டால் mp3 வடிவத்தில் சேமித்துக்கொள்ளலாம். இயல்பான வடிவம் wav எனப்படுவது. இந்த வடிவங்களிலும் bitrate என்று சொல்லப்படுகின்ற இன்னொரு அமைப்பு இருக்கிறது. அதையெல்லாம் நாமே சோதித்து அறிந்து கொள்வது எளிது.

இப்போது ஒலிக்கோப்பு உங்கள் கையில், அதாவது கணினியில். இனி அதை என்ன செய்வது என்பது உங்கள் விருப்பம்.

இணைய வானொலியிலிருந்து எப்படிப் பதிவு செய்வது, மற்றும் சத்த அளவைக் கையாள என்ன வழிகள் என்பதை பின்னொருநாள் காண்போம்.

பின்குறிப்பு:தொழில்நுட்ப விஷயங்களைத் தமிழில் தர சற்று மெனக்கெட வேண்டியிருக்கிறது, படிப்பவர்கள் பாடு இன்னும் கடினம் என்றும் தோன்றுகிறது. ஆனாலும் விடப்போவதில்லை. நடப்பது நடக்கட்டும்.

செவ்வாய், அக்டோபர் 07, 2003

சாக்குப்போக்கு

சில முக்கியமான நண்பர்கள் இன்னும் என் வலைப்பூவைப் படிக்காமல் (தொழில்நுட்ப, மற்றும் கட்டமைப்பு காரணங்களால் தான்) இருப்பதால், அவர்களைப் படிக்க வைத்துவிட்டுத்தான் மேலும் எழுதவேண்டும் என்று இருக்கிறேன். இந்த வாரம் ஆப்பிள் தோட்டத்துக்குப் போய் கைப்பட ஆப்பிள் பறித்து வந்த அனுபவம், அமெரிக்க உழவர் சந்தை அனுபவம், மற்றும் ஏற்கனவே ஆரம்பித்து நடுவில் நிற்கும் மனித உணவு தர்மம், எங்கள் நிறுவனத்தில் வங்கிக் கொள்ளையனால் கிடைத்த அனுபவம் என நிறைய எழுத வேண்டியிருக்கிறது. மீண்டும் வருவேன்.

சனி, அக்டோபர் 04, 2003

கணினித்திரையில் கலைடாஸ்கோப்



சிறு வயதில் பள்ளியில்/பாலிடெக்னிக்கில் படிக்கையில் இயற்கையாக அறிவியல் ஆர்வம் அதிகம். முக்கியமாக இயற்பியல். குண்டு பல்பு ஒன்றை கவனமாக அதன் அலுமினிய வாய்ப்பகுதியைத் திறந்து, உள்ளே இருக்கும் ஃபிலமென்ட் தாங்கும் தண்டுப்பகுதியை தூக்கி எறிந்து விட்டு, அதில் தண்ணீர் ஊற்றி, அதற்கென்று அட்டையால் செய்யப்பட்ட சதுர வடிவப்பெட்டிக்குள் வைத்து, 35mm filmஐ அதன் மூலம் சுவரில் பெரியதாகக் காட்டி விளையாடியது இன்னும் அப்படியே நினைவில் இருக்கிறது. பைசா செலவில்லாமல், விஞ்ஞானத்திற்கு விஞ்ஞானம், விளையாட்டுக்கு விளையாட்டு, கைகளுக்கும் வேலை என எவ்வளவு ஆக்கபூர்வமாக பொழுது கழிந்தது என்று நினைத்தால் மகிழ்வுடன், பெருமையாகவும் இருக்கிறது.

50 பைசாவுக்கு ஒரு லென்ஸ் (கைரேகை ஜொசியம் கூட பார்க்கலாம் அதை வைத்து) வாங்கி, அந்த குண்டு பல்பு லென்சுடன் நீண்ட ஊதுபத்திக்குழலால் இணைத்து, தொலைநோக்கி ஒன்று செய்ததும், வாசலில் கிடக்கும் ஆட்டாங்கல்லில் உட்கார்ந்து கொண்டு தூரத்தில் தெரியும் பனைமரத்தின் இலைகளை, பறவைகளை (தலைகீழாகத் தெரிந்தும்) ஆர்வமாய் கண்காணித்ததும், ஆயிரம் Gameboy Advanceகள் கொடுக்க முடியாத ஆனந்தம். பாவம் என் மகன் Yu-Gi-Oh, Pokemon என்று தலையில் கல்லைத்தூக்கிபோட்டாலும் தெரியாமல் மூழ்கிக் கிடக்கிறான். (BTW, அந்த Cartridge வந்துவிட்டது. ஆனால் ஏன் என்னைக் குழப்பினான் என்பது தான் புரியவில்லை!)

நீராவி டர்பைன் பண்ணியிருக்கிறேன், மின் மணி பண்ணியிருக்கிறேன், பெரிஸ்கோப் பண்ணியிருக்கிறேன், ஆனால் கலைடாஸ்கோப் மட்டும் பண்ணினதில்லை. ஒரே அகலத்தில் மூன்று கண்ணாடிப் பட்டைகள் கிடைக்கவில்லை. ஆனால் நண்பன் ஒருவன் டவுனில் வாங்கிவந்தது என்று காண்பித்தபோது அதிசயமாகவும் பிரமிப்பாகவும் இருந்தது.

வலைப்பூக்களைச் சுற்றிவந்தபோது நண்பர் மீனாக்ஸ் அல்லது பரி, அல்லது வேறு யாரோ, பெயர் மறந்து விட்டது, அவர்கள் கொடுத்திருந்த தொடர்பு ஒன்றின் மூலம் Flash மென்பொருள் கொண்டு தயாரான ஒரு கலைடாஸ்கோப் கிடைத்தது. மிகச்சிக்கனமாக வெறும் 5 கிலோ (ஷோபனா ரவி பாணியில் கில்லோ) பைட்டுகள் மட்டுமே அளவான ஒரு flash object. சுவாரஸ்யமாக இருக்கிறது. ஏழு விதை வடிவங்களில் ஒன்றைச் சொடுக்கி, பின் சுட்டியை அங்கும் இங்கும் அசைத்துப் பாருங்கள் எண்ணற்ற வர்ண ஜாலங்கள் தெரியும். அவற்றில் சிலவற்றை இங்கு கொடுத்திருக்கிறேன். நீங்களும் அதனுடன் விளையாடிப்பாருங்கள்.

இது ஒரு போட்டிக்காக நிறையப்பேர் அனுப்பியிருந்த அளிப்புகளில் ஒன்று. நேரமும், ஆர்வமும் உள்ளவர்கள், குறிப்பாக இணையத்தொழிலில் இணைந்திருப்பவர்கள் கட்டயம் பார்க்கவேண்டிய தொகுப்பு இது.

அந்த இளமைக்கால அறிவியல் சோதனைகளை எண்ணுகையில் இன்னொன்றும் தோன்றியது, அவற்றை விளக்கமாக என் வலைப்பூவாய் பதிப்பித்தால் என்ன என்று. நேரம் கிடைக்கும் போது செய்ய ஆசை.

புதன், அக்டோபர் 01, 2003

திருக்குறள் தரும் நிர்வாகக் கோட்பாடுகள் - 2


முன்பு பலமுறை என் சக மேலாளர்களுடன் உரையாடும்போது, எங்கள் பேச்சு எங்கள் நிறுவனத்தில் பகிர்ந்தளித்தல் (Delegation) போதுமான அளவுக்கு இல்லை என்று குறைப்பட்டுக் கொள்வதாக இருக்கும். ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் சூழலுக்குப் பொருத்தமான நிர்வாகப் பகிர்வு அமைப்பை வைத்துக்கொள்ளுகின்றன. எது சரி எது சரியில்லை என்பது நிறுவனத்தின் வெற்றி தோல்வியை வைத்துத்தான் கணிக்க வேண்டியிருக்கிறது. நமக்குப் பிடித்தவண்ணம் இருக்கிறதா என்பதைவிட இதைக்கொண்டு எப்படி சிறப்பாகப் பணியாற்ற முடியும் என்று சிந்திப்பவரே வெல்லுகிறார்.

சரி, இந்த பகிர்ந்தளித்தல் பற்றி அய்யன்(?) திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்த்தால்,

இதனை இதனான் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். (514)


பொருட்பால், அரசியல், தெரிந்து வினையாடல்

இதற்குப் பெரிய விளக்கம் தேவையில்லை. பெரும்பாலான குறட்பாக்கள் தானே விளங்கிக் கொள்ளும்படியாகத் தானே இருக்கின்றன! 'இந்தச் செயலை, தன்னிடமிருக்கும் ஆற்றல், செல்வம், திறமை போன்ற இவற்றால், இவன் செய்து முடிப்பான் என்பதை ஆராய்ந்து, அப்படிப்பட்ட செயலை அவனிடத்தில் விட்டுவிட வேண்டும்' என்கிறார். மேலோட்டமாகப் பார்த்தால் எண்ணற்கரிய எதையும் சொல்லுவது போல் தெரியவில்லை. ஆனால் மூன்று முக்கியமான சொல்லாடல் மூலம் சொல்ல வந்த கருத்தை ஆழமாகச் சொல்லியிருப்பதாக எனக்குப் படுகிறது.

ஒரு வாதத்திற்காக இப்படி மாற்றிச் சொல்லிப் பார்ப்போமே:
இதனை இதனான் இவன்செய்யும் என்றோர்ந்து
அதனை அவன்கண் கொடல்.

(ஓர்ந்து - எண்ணி)

இதுவும் கிட்டத்தட்ட அதே கருத்தைச் சொல்லுவது போல இல்லை?

மூன்று இடங்களில் சொற்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. அவை
1. முடிக்கும் - செய்யும்
2. ஆய்ந்து - ஓர்ந்து
3. விடல் - கொடல்
இந்த மூன்று இடத்தில் தான் நிர்வாகப் பகிர்ந்தளித்தலின் அடிப்படையைத் தொட்டு விடுகிறான் அய்யன்.

ஒன்று, இந்தக் காரியத்தை இவன் செய்வான் என்று பார்த்தால் போதாது, இவன் 'முடிப்பானா' என்று பார்க்க வேண்டும்.
இரண்டு, அந்த வண்ணம் பார்க்கும்போது, அவனின் தகுதியை, கைக்கொண்ட ஆற்றல், செல்வம், திறமை (Means என்ற ஆங்கிலப் பதத்திற்கு ஈடான தமிழ்ப்பதம் என்ன, தெரியவில்லையே!) இவற்றை எண்ணிப்பார்த்தால் போதாது, 'ஆராய்ந்து' பார்க்க வேண்டும்.
மூன்று, அப்படி ஒருத்தனிடத்தில் ஒப்படைக்க முடிவு செய்தபின் அவன் கையில் கொடுத்தால் மட்டும் போதாது, அவனிடத்தில் 'விட்டுவிட' வேண்டும்.

இந்த மூன்றாவது ஒன்றிற்காகவே இந்தக் குறள் எனக்கு மிகவும் பிடிக்கும்!

ஒண்ணேமுக்கால் அடியில் சொன்னாலும் ஒருபக்கம் எழுதிச்சொல்லவேண்டியதை அழுத்தம் திருத்தமாய் சொல்பவனுக்கு ஒரே பெயர் தான் இருக்கமுடியும், அவன் தான் வள்ளுவன்! வாழ்க அவன் வாக்கு!

2003, செப்டம்பர் மாதத்துப் பதிவுகள்


ஏனிந்த வலைப்பதிவு?



கிடாவெட்டும் தடைச்சட்டமும்



மனிதனின் உணவு தர்மம் - 1



குருவிடம் கற்காத கலை



Unicode-ல் தமிழ் செய்தால் கிட்டும் அனுகூலம்!



சுய விளம்பரம்



உயிருள்ள கூகிள்



வார்ப்புக்களோடு யுத்தம்



மெல்லிசை பாசுரங்கள்



திருக்குறள் தரும் நிர்வாகக் கோட்பாடுகள் -1



காலங்கடந்த நீதி



இப்போதைக்கு ரோச்சஸ்டர்



அரிச்சந்திரன் மகன்



மனிதனின் உணவு தர்மம் - 2



ஆண்பிள்ளை சமையல்

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...