சனி, பிப்ரவரி 14, 2004

புது வீடு போயாச்சு

ரெண்டு வாடகை (ஓசி ஹி..ஹி..) வீட்டில் கிட்டத்தட்ட ஆறு மாதமாய் குடியிருந்துவிட்டு சொந்தமாக மனை வாங்கி, அஸ்திவாரம் தோண்டி, சுவர் எழுப்பி, வீடு கட்டி, பூச்சு, வர்ணம் எல்லாம் செய்து, என் புதுமனை புகுகிறேன். எல்லாரும் அங்கு வந்து வாழ்த்தி, எப்போதும் போல் அடிக்கடி திண்ணைப்பக்கம் வந்து அரட்டைக் கச்சேரியில் பங்கெடுத்து, என்னை மகிழ்வியுங்கள். (மு. உஷாவுக்காக, விசேஷமாய் முட்டிக்கிற மண்டையெல்லாம் வெச்சிருக்கேன்)

இந்த வீடு கட்டிய அனுபவத்தையும் எழுதணும்.

அன்புடன்,
-கொத்தனார் காசி.

புதன், பிப்ரவரி 11, 2004

என் பைக்கணினி அனுபவங்கள் -2

'இத வெச்சு இதைச்செய்யலாம் அதைச்செய்யலாம்'னு வாங்கிடறோம். ஆனா அப்புறம் ஆனைக்கு அம்பார வகையறாக்கள்னு வேற தனியாச் செலவு பண்ண வேண்டியிருக்குது. அலுவலகம் சம்பந்தப்பட்ட வேலைகள் போக பொழுதுபோக்குக்கு இதில் நிறைய வசதி இருந்ததால அதுல ஒவ்வொண்ணா செய்துபார்க்க ஆரம்பித்தேன். முதலில் இதன் MP3 பிளேயர் உபயோகம்.

வாங்கிய நிலையில் நிறையப் பாடல்களை தேக்கி வைக்க இதில் இட வசதி பத்தாது. ஒரு 10MBக்குள்ளதான் மிச்சம் இருந்தது. அதுக்குத் தான் ஃப்ளாஷ் மெமரி கார்ட் என்கிற சிறு அட்டைகள் இருக்கு. அதில் ஒரு அட்டை முதலில் வாங்கினேன். அது ஒரு 64MB அளவு கொண்டது. அதுக்குள்ளே பாட்டெல்லாம் தேக்கி வைக்கும்போதுதான் என்னவிதமான ஒலி வடிவங்கள் இருக்கு, அதில் என்னவெல்லாம் செய்யலாம். எந்த வடிவம் எந்த செயலியில் ஓடும் என்றெல்லாம் தெரிந்து கொண்டேன். ரொம்ப அறுக்காமல் சொல்வதானால், முக்கியமா மூன்று வகை ஒலிக்கோப்பு வடிவங்கள் இருக்கு. இந்த அட்டவணையை ஒரு கண் பார்த்தா கொஞ்சம் விளக்கம் கிடைக்கும்.

குறுவட்டில் வரும் பாடல்களின் தரம் அப்படியே வேணும் என்றால் சுமார் 6MB அளவில் ஒரு பாடலை அடக்கலாம். திருவிளையாடல் தருமி மாதிரி கொஞ்சம் குறைச்சுபோட்டுக் கொடுத்தாப் போதும்னா, 3MB அளவிலும் அடக்கலாம். அப்படிப் பாத்தா சுமார் 20 பாட்டுக்கள் இந்த 64MB அட்டையில் அடங்கும். அதுவே கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஓடுமே, எனவே நிறையப் பாட்டுக்களை (சினிமாப்பாட்டுத்தான்) இணையத்தில் இருந்து இறக்கிக் கொண்டேன். புதுசுபுதுசா படம் வர வர அதை இதில் போட்டுக்கிட்டு கேட்டேன். ஒரு ஹெட்போன் இருந்தது, ஆனால் சீக்கிரம் போரடிச்சுப்போச்சு. அதோடு, பேட்டரியும் அடிக்கடி இறங்கிப் போய் தொல்லைகொடுத்தது. அப்புறந்தான் காரில் இதையே ஓடவிடமுடிந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும் என்று தோன்றியது. புதுசா இறக்கிய MP3 பாடல்களை காரின் கேசட் பிளேயர் வழியாக் கேட்பதற்கு ஒரு அடாப்டர் வாங்கினேன். காரின் சிகரெட் லைட்டர் மூலம் பேட்டரிக்கு சாப்பாடு போட ஒரு கார்-சார்ஜர். இரண்டும் வந்தபின் காரில் எப்பவும் சுடச்சுடப் புதுப்பாட்டுத்தான். கேக்கத்தான் நேரமில்லை. இங்கதான் வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் 3 நிமிடப் பிரயாணம் தானே!

கொஞ்சம் கொஞ்சமாய் இன்னும் ஆக்டொபஸ் தன் ஆயிரம் கைகளை விரித்தது. பாடல்கள் மட்டுமில்லாமல் 'ஒலியும் ஒளியும்' ஓட்டினால் ஜாலியா இருக்குமே. ஜீன்ஸ் வி.சி.டி.யை பிரிச்சுப்போட்டு, ஒலியும் ஒளியும் தயார்செய்தேன். அப்போதுதான் என்னென்ன விடியோ வடிவங்கள் இருக்கின்றன என்ன அளவில் எப்படி கையடக்கமாக விடியோத்துண்டுகளைத் தயாரிக்கலாம் என்பது பிடிபட்டது. ஒரு அருமையான விடியோ வடிவமாற்றி கிடைத்தது. இப்படி விடியோவேலையில் ஆழமாய் இறங்கவும் இந்த 64MB பத்தாமல் போனது. ஒரு 'பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம்' மட்டும் 20MB பிடித்தது. இன்னும் பெரிசாய் அட்டை கொண்டுவா என்றது இந்த அட்டை. ஓடு, மறுபடியும் தேடு. தேடி 256MB அட்டை ஒண்ணு வாங்கினேன்.

அப்பாடா, இப்போ மணிக்கணக்கில் MP3 பாடும், அப்பப்ப உள்ளங்கையில் நெல்லிக்கனி ஆடும். இப்படியே கொஞ்ச நாள் பொழுது போச்சு. அக்கம் பக்கத்தில் நெறையப்பேரை ஏத்திவிட்டாச்சு. எல்லாரும் நானும்வாங்கணும்னு ஆசைப்பட ஆசைப்பட நமக்கு நம்ம குட்டிப்பாப்பாமேல் காதலும், பெருமையும் அதிகமாச்சு. அதுவும் இதுதான் சமயம்னு அடுத்த பட்டியலை நீட்டுச்சு.

-தொடரும்

திங்கள், பிப்ரவரி 09, 2004

என் பைக்கணினி அனுபவங்கள் -1

இன்றைக்கு ஜேம்ஸ்பாண்ட் கேமராவைப் பற்றி நண்பர் முத்து எழுதியிருந்தார். ஜேம்ஸ்பாண்ட் படங்களில் இந்த மாதிரி 'பொடிஜாமானம்' (gadget-குத் தமிழில் என்ன சொல்வதென்று தெரியவில்லை) செய்து கொடுப்பதற்கென்றே ஒரு வயசான விஞ்ஞானி இருப்பார். அவர் 'டபுள்-ஓ-செவ'னுக்கு விளக்கிச் சொல்லவரும் போது ஜேம்ஸ் 'சொல்லித் தெரிந்து கொள்பவன் டபுள்-ஓ-ஓ, சொல்லாமலே தெரிந்துகொள்பவன் தான் இந்த டபுள்-ஓ-செவன்' என்பதுபோல 'கப்'பென்று பிடித்துக்கொண்டு காரியத்தில் இறங்கிவிடுவார். ஜேம்ஸ்பாண்ட் ஆக ஆசையிருந்ததோ இல்லையோ அந்த விஞ்ஞானியாக ஆக ஆசை இருந்தது (வயசெல்லாம் எதுக்கு:-)

இந்த மாதிரி புதுப்புது கையடக்கக் கருவிகள் பற்றியெல்லாம் கல்கண்டு, முத்தாரம் (இப்போது எதிலே, தினமலரிலா?) பத்திரிகைகளில் படிக்கும்போது ரொம்ப ஆர்வமாய் இருக்கும். பேனாவில் கேமரா, கடிகாரத்தில் டேப்ரிகார்டர், கண்கண்ணாடி(மூக்குக்கண்ணாடி?)யில் வயர்லெஸ்போன் என்று, இதையெல்லாம் நினைத்தாலே பிரமிப்பாக இருக்கும். போதாக்குறைக்கு என் பாஸ்களில் (இது வசந்த் கணேஷைக் கூப்பிடும் 'பாஸ்', எம்ஜியார் படத்தில் ராமதாஸ் நம்பியாரைக்கூப்பிடும் அந்த 'பாஸ்' அல்ல. அட, இப்ப வேற ராமதாஸ், வேற நம்பியார் தமிழ்நாட்டைக் கலக்கிட்டிருக்காங்களாமே...) ஒருவர் இந்த குட்டிவஸ்துகளின் காதலர். மடிக்கணினி வாங்கினாலும் 12 இன்ச் திரையுள்ள சோனி(ஹும். எவ்வளவு நல்ல கம்பெனிக்கு எவ்வளவு மோசமான பேரு.., தமிழில் சொல்லிப்பாத்தா:-)), காமிரா வாங்கினாலும் பாக்கட்டுக்குள் இருப்பதே தெரியாத கேமரா என்று எல்லாமே பொடிப்பொடியா வாங்குவாரு. அதையும் பாத்துப்பாத்து இந்த குட்டிவஸ்துகள் மேல் எப்போதும் ஆர்வம் ரெடிஸ்டாக்கா இருந்தது என்கிட்டே.

அமெரிக்கா வந்த புதிதில் சிலர் கையில் வைத்திருக்கும் பாம் (அட கையெறிகுண்டு இல்லீங்க, palm) வகைக் கணினிகளைப் பார்த்ததில் அதில் ஒண்ணும் வாங்க ஆசை வந்துது. இது 2 வருடத்திற்கு முன். ஆசைக்கு தூபம் போட்டாற்போல ஒரு ஹாட் டீலும் (இங்க தான் ஹாட் டீல் இல்லாம அரிசி பருப்புகூட வாங்கறதில்லியே:-)) மாட்டவே 2001 டிசம்பரில் வாங்கினேன் ஒரு ஐபாக் 3635 (iPAQ) கைக்கணினி. அது அப்போது பிரபலமாயிருந்த பாம் வகைக் கைக்கணினிகளை விட பலவிதத்திலும் மேம்பட்டது. நான் வாங்கும்போது அதன் பட்டியல்விலை 550 டாலர், (நான் என்ன விலைக்கு வாங்கினேன் என்பது சஸ்பென்ஸ்;-). அது ஒரு *முழு* பல்லூடகக் கணினி. ஒரு 5 இன்ச் உயரமும் 3 இன்ச் அகலமும் கொண்ட அதில் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று பட்டியலிட்டால் உண்மையிலேயே ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

அவற்றுள் சில:

1. மின்னஞ்சல், நேரத்திட்டம், முகவரிஏடு, சிறுகுறிப்பேடு போன்ற அடிப்படைத் தன்-மேலாண்மை (Personal Information Management - PIM) செயல்கள் அனைத்தும். அத்துடன் மேசைக்கனினியில் உள்ள இதே வகை செயலிகளுடன் ஒத்து இயங்கும் திறமை.
2. மைக்ரோசாப்ட் வேர்ட், எக்செல் ஆகியவற்றின் கையடக்க வடிவம்
3. இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரர் உலாவியின் கையடக்க வடிவம்
4. விண்டோஸ் மீடியா பிளேயர், ஒலி மற்றும் வீடியோ படங்களை ஓட்டும் வசதி. உள்ளடங்கிய ஒலிபெருக்கி அல்லது ஹெட்போன் கொண்டு இனிமையாக MP3 இசையைக் கேட்டுக்கொண்டிருக்கலாம். அல்லது 'ஐர ஐர ஐரொப்பா என்று ஐஸுவை உள்ளங்கையில் ஆடவிடலாம்:-)) [பாபா, அப்பவே விமர்சனமெல்லாம் எழுத ஆரம்பிச்சாச்சா?]
5. உள்ளடங்கிய மைக் மூலம் உடனடியாக, ஒற்றைப்பொத்தனை அழுத்தி ஒலிப்பதிவு செய்யும் வசதி (பெரிய மேசைக்கணினியில் ஒலிப் பதிவு செய்வது பற்றி ஒரு பெரும்பிரஸ்தாபமே ஒருவர் செய்தார் தன் வலைப்பதிவில், அந்த வேலை, இங்கு ஒரு சிறு பொத்தானை அழுத்தினால் நடக்கிறது :-(
6. தீப்பெட்டி அளவில் அதைவிட சன்னமான மோடெம் கொண்டு டயல்-அப் இன்டெர்னெட் தொடர்பைப் பெறும்வசதி. கம்பியில்லா வலைப்பின்னல் வசதி இருக்குமிடங்களில், அதற்குத்தகுந்த 'நெட்வொர்க் கார்ட்' கொண்டு அதிலும் பங்குபெறும் வசதி.
7. அகச்சிவப்பு ஒளி (Infrared light) மூலம் இன்னொரு கைக்கணினியுடனோ, அல்லது மடிக்கணினியுடனோ கம்பியில்லாமல் எளிதில் கோப்புகளைப் பரிமாறிக்கொள்ளும் வசதி.
8. எழுத்துகளை உள்ளிடும்போது, எளிதாக எழுதிக்காட்டி உணர்த்தும் வசதி. சில வரையறைக்குட்பட்டு கையால் எழுதியதை உணர்ந்து, எழுத்துக்களாக அதுவே மாற்றிக்கொள்ளும்.
9. ரீ-சார்ஜ் செய்துகொள்ளக்கூடிய பாட்டரி. 3.5 இன்ச் அகல வண்ண எல்.சி.டி. தொடு-உணர்-திரை, அதன்மேல் எழுத பிளாஸ்டிக் எழுத்தாணி.
10. வட்டுக்கள் ஏதுமின்றி திண்ம நிலையிலேயே (solid-state) இயங்கும் மெமரி & தேக்ககம். எனவே பையில் வைத்துக்கொண்டு ஆடினாலும், ஓடினாலும் எந்த சேதமும் இல்லை, தரவு இழப்பும் இல்லை.

அதன் அளவை வைத்துப் பார்க்கையில் இந்த திறன்கள் பிரமிப்பாகத்தான் இருக்கின்றன. இது கைக்குவந்த புதிதில் புதுப்பொண்டாட்டிபோல என் நேரங்கள் அதனுடன் விளையாடுவதிலே கழிந்தது. அப்புறம் தேனிலவெல்லாம் முடிந்தது. 'எனக்கு அதுவேணும், இதுவேணும், வாங்கித்தா' என்றது. பொண்டாட்டி கேட்டு இல்லை என்று சொல்ல முடியுமா?

-தொடரும்

வெள்ளி, பிப்ரவரி 06, 2004

காட்பாதர் வேணுமப்பா, ஒவ்வொருத்தருக்கும்!

உலகத்துல ஒவ்வொருத்தருக்கும் ஒரு காட்·பாதர் வேணும். வாஷிங்டன் போஸ்ட் 'Pakistan's Nuclear Crimes' அப்பிடின்னு தலைப்பில தலையங்கத்துல சொல்றான்:
'அமெரிக்காவின் பாதுகாப்புக்கும் உலகப் பாதுகாப்புக்கும் பேரழிவு ஆயுதங்களால் வரக்கூடிய அபாயம், சதாம் உசேனையும், அல்-கொய்தாவையும் விட அதிகமாக பாகிஸ்தானின் ராணுவத் தலைமையால் செய்யப்பட்டிருக்கிறது என்கிற நிஜம்..' , என்று, ஆனாலும் அமெரிக்கா இன்னும் அந்த ராணுவ ஜெனரலைத் தாங்குதாங்கு என்று தாங்குகிறது என்றால், பாகிஸ்தானுக்கு (முஷாரபுக்கு) கிடைத்த காட்பாதர் அமெரிக்கா (புஷ்) தான் காரணம்.

ஒரு டீ பார்ட்டியில் கவுத்த அம்மாவைத் தேடிப்பிடிச்சு அசடு வழிஞ்சு தேசியக் கட்சி நிக்குதுன்னா, அங்கேயும் ஒரு அத்வானிங்கிற காட்பாதர் தெரிகிறார்.

நியாயமா ஒருத்தர் மாஞ்சு மாஞ்சு கேட்டும் பதில்தராமல், ஒருத்தர் தடவிக்கொடுத்து கேட்டதும், மழுப்பலும் குழப்பலுமா பதில் வந்ததும், 'ஆங்..இத இதத் தான் நான் எதிர்பாத்தேன்'னு பாராட்டு மழையால் குளிர்வித்தால் அதே சந்தேகம்தான் வரும்.

அநியாய உலகமடா சாமி!

வியாழன், பிப்ரவரி 05, 2004

ஆளில்லாத லெவல் கிராசிங்கில் காரில் சென்ற இருவர் பலி


Picture courtesy: Mikes Railroad crossing

இது என்னவோ தினத்தந்தி தலைப்புச் செய்தி மாதிரி இருக்கா? 'ரயில் வருவது தெரியாமல் காரில் சென்ற கணவன் மனைவி இருவரும் ரயில் மோதி உடல் நசுங்கி இறந்து போனார்கள்' என்பது இன்றைய உள்ளூர் செய்தி. உள்ளூர் இங்கு ரோச்சஸ்டர் (மறுபடியும்!). அந்த ரயில்ரோடு கிராசிங்கில் நானும் பலமுறை கடந்திருக்கிறேன். அப்போதெல்லாம், 'பாரடா, என்ன சிஸ்டமேடிக்கா, ஆட்டோமேடிக்கா எல்லாம் பண்ணி வச்சிருக்கானுங்க'ன்னு சிலாகிச்சுட்டே போவேன். இங்கே நிறைய வேலைகளில் ஆளில்லாமல் செய்துவைத்திருக்கிறார்கள். ஆனால், நம்ம 'ஆளில்லா லெவல் கிராசிங்'குக்கும் இதுக்கும் ஒரு வித்தியாசம், இதில் ஆளில்லாவிட்டாலும், ஆள் பண்ணுகிற வேலையெல்லாம் அதுவாக நடக்கும்.

ஒரு படம் மேலே இருக்கு, அதில் பார்த்தால் தெரியும். முக்கியமாகப் பார்க்கவேண்டியது சாலையில் அரைப்பாகத்தை (மட்டும்) மறைக்கும் தடுப்பு, மற்றது ஓரமாய் இல்லாமல் நடுவில் மின்னிமின்னி எரியும் சிவப்பு விளக்கு. ரயில் வரும் முன் சிவப்பு விளக்கு மின்ன ஆரம்பித்து, பிறகு தடுப்பு கீழே இறங்கும். ஒரு நிமிடம் முன் தான் இது நடக்கும். பிறகு ரயில் போனதும், தானாகத் திறக்கும். ஓரளவுக்கு விதிகளை எல்லாரும் சிரத்தையாக கடைப்பிடிப்பதால் எல்லாம் ஒழுங்காக நடக்கிறது.

நேற்று இந்த லெவல் கிராசிங்கில் கட்டாயம் சிவப்பு விளக்கு மினுக்கியிருக்கலாம், ஆனால் தடுப்பு கீழே வரவில்லை என்று பலர் சாட்சியம் அளித்துள்ளனர். விளக்கைப் பார்த்து னிற்பது என்ற 'மென்' தடுப்பு சில சமயம் வேலை செய்யாமல் போக நிறையக் காரணம் இருக்கும். கண்பார்வைக் கோளாறில் இருந்து, மன உளைச்சல், கவனமின்மை வரை நிறையச் சொல்லலாம். அதற்காகத்தான் 'வன்'தடுப்பும் தேவைப்படுகிறது. இந்த வன் தடுப்பு பழுதாகி இருப்பது, ரயில் நிறுவனத்துக்குத் தெரியும் என்றும், ரயில் ஒட்டுனர்கள் இந்த சந்திப்பில் ரயிலை நிறுத்தி எடுக்க அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள் என்றும் இன்றைய செய்தி சொல்கிறது. அப்படியும் ஏன் நிறுத்தவில்லை என்று விசாரணை செய்வார்கள். ஆனால் பாவம் திவ்யதம்பதிகள் போய்விட்டது போய்விட்டதுதான். இனி அடுத்த முறை இந்த தானியங்கியை நம்பி இங்கே கடப்பதற்குப் பயமாக இருக்கிறது.

ரயில்வே கேட்டை கடப்பதில் ஒரு சமயம் உலகுவும் நானும் பி.ஹெச்.டி யே பண்ணியிருந்தோம். அப்போது கோவையில் எவெரெஸ்ட் எஞ்சினீரிங் வாசலில் கேட், அது அரை மணிக்கொருமுறை மூடப்படும் கேட். அதில் நீண்ட வரிசை வாகனங்களுக்கிடையில் சைக்கிளில் நெருக்கி அடித்துக் கடப்பதில் இருக்கும் கிக், ஃபார்முலா ஒன் ரேசில் கிடைக்குமா என்பது கேள்விக்குறி (தன்னை வைத்து உலகை அளந்தால் அதற்குப் பெயர் கிணத்துத் தவளையாமே, அதனாலென்ன, அப்படியே இருப்பதிலும் ஒரு சுகம் இருக்கத்தானே செய்கிறது). அப்படி ஒரு நாள் பஸ்ஸின் பின்புறம் இஞ்ச் கணக்கில் தொடர்ந்துவர, பஸ் பிரேக் போடும்போது அதன் கூண்டுக்கடியில் சைக்கிளின் முன்சக்கரம் நுழைய, பஸ் அப்படியே அந்தச் சக்கரத்தின் மேல் உட்கார, சக்கரம் சதுரமாகிப் போனதெல்லாம், கிளைக்கதை.

அதெல்லாம் சரி, இங்கே ரோச்சஸ்டர் கூட்ஸ் ரயிலில் நசுங்கி சாவிலும் இணைபிரியா அந்த ஜோடியின் வயதென்ன தெரியுமா, 75&75! போன வருஷம் கலிபோர்னியாவில் ஒரு கிழவர் கடைத்தெருவில் காரில் உழுததில் எத்தனையோ பேர் மாண்டார்கள். அனேகமாக கண்பார்வை, உடனடியாக இயங்கமுடியாமை போன்ற முதுமை சம்பந்தமான காரணங்கள் இங்கே முக்கியமாகப் படுகின்றன.

ஒன்று தெரிகிறது, அமெரிக்காவானாலும், ரயில்வே கேட் ரயில்வே கேட் தான். நாம் தான் கவனமாய் இருக்கணும்.

திங்கள், பிப்ரவரி 02, 2004

ஜனவரியில் ரெகார்ட் பனிப்பொழிவு

எங்க ஊர் ரோச்சஸ்டரில் இந்த ஜனவரியில் 61 அங்குலம் (5 அடி) பனிப்பொழிவு ஆனது. இது இந்த 120 வருடமாக பதிவானதிலேயே மிக அதிகம். நாங்கள் இங்கு வந்த முதல் வருடம் மிக மிகக் குறைவான பனிப்பொழிவு. சென்ற குளிர்காலம் முழுமைக்கும் பார்த்தால் பனிப்பொழிவு மிக அதிகம் என்றாலும் ஒரே மாதத்தில் இவ்வளவு இல்லை. இதுவும் ஒரு புது அனுபவம்தான்.

இந்த ஒரு மாதமாக தேவையில்லாமல் எங்கும் வெளியே போவதில்லை. மனைவியை அதிகம் கார் ஓட்டவிடுவதில்லை. எனக்குத் தெரிந்த இருவர் 180டிகிரி எபவுட் டர்ன் அடித்திருக்கிறார்கள், நல்ல வேளையாக அந்த நேரம் வேறு வண்டிகள் சாலையில் வராததால் பிரச்னை இல்லாமல் தப்பித்தார்கள். வேறு ஒருவர் சாலையின் ஓரத்தில் இருக்கும் தடுப்பில் மோதி $1000 செலவு செய்தார். குழந்தைகளும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். சில சமயம் எதற்கு இந்த சிறை வாழ்க்கை என்று வெறுப்பாய் இருக்கிறது. அமெரிக்காவிலேயே டெக்சாஸ் போன்ற இடங்களில் வாய்ப்புக் கிடைத்திருந்தால் வாழ்க்கை இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்று ஆதங்கமாயும் இருக்கும். ம்..வாழ்க்கையில் எதுவுமே சமரசம் தான், ஒன்றைப் பெற ஒன்றை இழந்தாகவேண்டும்.


பனிக்காலக் காட்சிகளில் சிலவற்றை இங்கு பதிக்கிறேன். (பெரிதாய்ப் பார்க்க சொடுக்கவும்)


Icicles from roof
ஐசிக்கிள்ஸ் (Icicles) என்பது வெள்ளைப் பனி உருகி வடிய ஆரம்பித்து ஆனால் கீழே முழுதும் விழுவதற்குள் மீண்டும் உறைந்து குச்சிகுச்சியாய் ஆலம்விழுதுகள் போல் தொங்கும் பனிக்கட்டி ஈட்டிகள். இம்முறை கூரையிலிருந்து தொங்கும் சில ஐசிக்கிள்ஸ் பதுப் பதினைந்து அடி நீளம் வரை வளர்ந்து, இன்னும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. இங்கே அப்படிப்பட்ட ஐசிக்கிள்ஸ் சில.


Icicles from roof
Icicles from roof
சில சமயம் காற்று அடிக்காமல், வெயில் வெளியே தெரியும்போது கொஞ்ச நேரம் குளிர்கால உடுப்புகள் இல்லாமலேயே வெளியில் நிற்கமுடியும். அப்படிப்பட்ட நேரத்தில் எடுத்த படங்கள்.


Icicles from roof

Icicles from roof
பனிப்பொழிவு இல்லாத நேரத்தில் காரின் முன்னிருக்கையில் இருந்து ஒரு நெடுஞ்சாலைத் தோற்றம். வலப்புறம் எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் பார்க்கிங் லாட்டில் சில கார்கள். (மேலே கிடக்கும் பனியைச் சுத்தம் செய்தபின் வெளியே போய் வந்த கார்கள் இந்த லட்சணம்!)

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...