புதன், டிசம்பர் 31, 2003

சேர்ந்திசைப் பாடல்கள்

ஒவ்வொரு நாளும் பகல் 12.40 மணி செய்திகளுக்குப் பின் தமிழக வானொலி நிலையங்கள் 'சேர்ந்திசை' என்ற பெயரில் ஒரு குழுவினர் சேர்ந்து இசைக்கும் பாடல்களை ஒலிபரப்பும். இந்த வரிசையில் பல வேறு மொழிப் பாடல்கள் இருக்கும். திரு எம். பி. சீனிவாசன் என நினைக்கிறேன், அவர் இசையில் நிறைய பாரதியார் பாடல்கள் ஒலிபரப்பாகும். கேட்க, மிக அருமையாக இருக்கும். இன்று என் மகளுக்கு 'ஓடி விளையாடு பாப்பா' சொல்லிக் கொடுக்கும்போது, அன்று சேர்ந்திசையில் கேட்ட அதே பாடல் மனதுக்குள் வந்து, இன்னும் காதில் ஒலிப்பதுபோலவே இருக்கிறது. அதிலும், 'காலை எழுந்தவுடன் படிப்பு..' என்று சொல்லி நிறுத்தி, 'ஒரெண்டு ரெண்டு, ஈரெண்டு நாலு..' என்பது போல குழந்தைகள் படிப்பது ஒலிக்கும், பிறகு 'பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு..' என்றதும் குழந்தைகள் ஒரு பாடல் பாடுவார்கள். சேர்ந்திசையில் வந்த பாரதியார் பாடல்கள் எங்காவது இணையம் வழி கிடைக்குமா, தெரிந்தவர்கள் சுட்டினால் மகிழ்வேன்.

அதே போல வாணி ஜெயராம் பாடிய பாரதியின் 'எந்தையும் தாயும்..', 'தொன்று நிகழ்ந்ததனைத்தும்..' போன்ற மெல்லிசைப்பாடல்களும் வானொலியில் ஒலிக்கும்போது உணர்ச்சிபொங்கக் கேட்டிருக்கிறேன். இவையும் எங்காவது கேட்கக் கிடைக்குமா தெரியவில்லை. மனப்பாடம் செய்வதில் ரொம்ப ரொம்ப பலவீனமான என்னைப் போன்றோருக்கே பாரதியின் பாடல்கள் பசுமையாக நினைவில் நிற்க இந்தப் பாடல்களை இசையமைத்த/பாடிய கலைஞர்களும் அடிக்கடி ஒலிபரப்பிய வானொலியும் ஆற்றிய பங்கு என்றும் நன்றியுடன் நினைவு கூறத்தக்கது.

நண்பர்கள் இவற்றுக்கு ஏதும் சுட்டிகள் தெரிந்தால் சொல்லுங்கள்.

செவ்வாய், டிசம்பர் 30, 2003

மொழிமாற்றம் சில எண்ணங்கள்

உஷா ஒரு கேள்வி கேட்டிருந்தார். 'காசி! comment க்கு சரியாய் ஒரு வார்த்தை தமிழில் சொல்லுங்கள் பார்ப்போம்?'. முதலில் நான் ஒன்றும் தனித்தமிழ் ஆர்வலன் அல்ல. அதை மீண்டும் மீண்டும் சொல்லிகொள்கிறேன். நான் காலையில் 'காப்பி'தான் சாப்பிடுகிறேன். 'காரி'ல் தான் அலுவலகம் வருகிறேன். தமிழ்ப்பித்தன் எல்லாம் கிடையாது. என் குழந்தைகளுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் வைத்துள்ளேன். அதை மாற்றும் உத்தேசம் கிடையாது. ஆகவே நானும் எல்லாரையும் போல சாதாரண 'குமுதம்-சன்டிவி-தனுஷ்-சிம்ரன்-செரினா-வைகோ' தமிழன்:-)))

உஷா, உங்கள் மேல் கோபமில்லை:-))

எனக்குத் தோன்றியதைச் சொல்கிறேன். இதில் தவறும் இருக்கலாம்.

எந்த ஒரு சொல்லுக்கும் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றம் செய்யும்போது 'இதுக்கு இது' என்று நேரான சொல் ஒன்றைச் சொல்ல முடியாது. மூல மொழியில் அந்தச் சொல்லுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள் இருக்கும். அதே பொருளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சொல்லும் இருக்கும். அதே போல் ஆக்கவேண்டிய மொழியிலும் இப்படியே. ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் என்பது சூழல், தொனி, முதலானவற்றை (context, connotation, etc.) சார்ந்தே இருக்கிறது.

எனவே comment என்பதற்கு கருத்து, விமரிசனம், எண்ணம், மறுமொழி என்று சொல்லாலாம். இதில் 'கருத்து'க்கு, opinion, message, என்று விரிந்து கொண்டே போகும். 'விமரிசன'த்திற்கு, இதே போல் criticism, review, etc. என்று சொல்லலாம். opinion என்பதற்கு எண்ணம், அபிப்ராயம் என்றும், message என்றால் செய்தி, தூது, அறிக்கை என்றும் சொல்ல முடியும். review என்பதற்கு, அலசல், பார்வை, என்று விரியும். இது மொழிகளின் பெருமையைத்தான் குறிக்குமே அன்றி சிறுமையை அல்ல.

நம் வலைப்பதிவுகளில் comment என்பதற்குப்பதில் ஒவ்வொருவர் ஒவ்வொன்றை பயன்படுத்துகிறோம். அதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. comment என்பதில் ஒரு குறைகூறும் தொனி இருப்பதாகவும், 'மறுமொழி' அப்படி எந்தத் தொனியும் இல்லாமல் வெள்ளையாக (neutral) இருப்பதாக எனக்குப் படுகிறது. comment என்பது என்னவோ தேவ வாசகம் என்று எண்ணி அதற்கு நேர் தமிழ்ச் சொல் தேடினோமானால் ஒற்றைசொல் கிடைக்காமல் போகலாம். எனவே தமிழ்மேல் சற்றுக் கோபம் கூட வரலாம். ஆனால் எங்கு அதைப் பயன்படுத்தப் போகிறோம், அந்த இடத்தில் என்ன பொருளை எதிர்பார்க்கிறோம் என்று பார்த்தால் இப்படிப்பட்ட பல விடைகளிலிருந்து பொருத்தமானதை தேர்வுசெய்யமுடியலாம்.

மொழிமாற்றம் செய்யும்போது, குறிப்பாய் கலைச்சொற்களை மாற்றும்போது இன்னொன்றையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. முக்கியமாய் ஆங்கிலத்தில் இருந்து மொழிமாற்றம் செய்யும்போது வினை(verb - transitive, verb - intransitive) வினையின் பெயர்(Noun - act of doing), விளைவின் பெயர் (Noun - result of doing), உரிச்சொல் (adjective) என்ற பல வடிவங்களில் எந்த வடிவம் நமக்குத்தேவை என்று அறிந்து செய்யும்போது ஒரே சொல்லுக்கு வேறு வேறு தமிழ்ச் சொல் வரும். உதாரணமாய், cut, copy, paste எல்லாருக்கும் தெரியும். இதைத் தமிழில் வெட்டு, நகல், ஒட்டு என்று மொழிபெயர்த்தால் அதில் பிழை இருக்கிறது. copy என்ற பெயர்ச் சொல்லுக்கு 'நகல்' சரிதான். ஆனால் copy என்ற வினைக்கு 'நகலெடு' என்பதுதான் சரியாக இருக்கும். view என்பதற்கும் 'பார்' (வினை) 'பார்வை' (வினையின் பெயர்) 'தோற்றம்' (விளைவின் பெயர்) என்று பல பொருள்படும்.

Update என்ற சொல்லுக்கு மொழிமாற்றம் பற்றிய பேச்சு வந்தபோது அதற்கு 'புதுப்பித்தல்' என்று ஒரு சொல் முன்வைக்கப்பட்டது. எனக்கு அப்போது தோன்றிய சில எண்ணங்களை ஒரு சிறு உரையாடல் மூலம் விளக்க முயன்றேன். அது மீண்டும் இங்கே:
____________________________________________________
ஒரு சிறு உணவகத்தில் ஒரு உரையாடல்:
-----------------------------------------------------
'வாங்க அண்ணே, இப்ப எப்படி இருக்குது நம்ம கடை?'
'என்னடா ரொம்ப நாளாக் கடை மூடிக் கிடந்ததேன்னு பாத்தேன். ஓஹோ, கடையைப் புதுப்பிச்சுட்டே(1) போலிருக்கு. எல்லாம் அழகா இருக்குது.'
'ஆமாங்கண்ணே.'
'அதெல்லாம் சரி கடைக்கு உரிமமும் புதுப்பிச்சிட்டியா?)(2) காலாவதி ஆயிருக்குமே...'
'ஓ..ஆச்சுங்க, அதெல்லாம் நேரத்துக்கு செய்திட வேண்டாமா?'
'எல்லாம் சரியாப் பண்ணிருக்கே, ஆனா இந்த இன்றைய ஸ்பெஷல் பலகையை மட்டும் புதுப்பிக்க(3) மறந்துட்டே போலிருக்கே...'
'இல்லீங்களே, அதையும் ஆசாரி கிட்டே குடுத்து உடைஞ்ச கட்டையெல்லாம் சரி பண்ணி, புது பெயின்ட் எல்லாம் அடிச்சுப் புதுப்பிச்சுட்டேனே.'
'அட அது இல்லப்பா, இது இன்னும் நேற்றைய ஸ்பெஷலையே காட்டிட்டு இருக்கேனு சொல்ல வந்தேன்.'
'அட ஆமாங்கண்ணே. டேய் பையா, அந்த போர்டை அழிச்சுவிடு, சாக் பீஸ் கொண்டா, இன்றைய ஸ்பெஷலை சரி பண்ணிடலாம்.'
----------------------------------------------------
புதுப்பித்தல்(1)=refurbish
புதுப்பித்தல்(2)=renew
புதுப்பித்தல்(3)=update

செம்மொழி என்று சொல்லிக்கொண்டு மூன்றுக்கும் ஒரே சொல்லை பயன்படுத்தினால் எனக்கென்னவோ சரியாகப் படவில்லை.
____________________________________________________

எனக்கு என்ன ஆச்சு, நான் என்னவோ தமிழாசிரியர் மாதிரி இப்படி விளக்கமெல்லாம் கொடுத்துக்கொண்டு... நான் எனக்குத் தோன்றியதைச் சொல்லுகிறேன். உண்மையில் தமிழ் இலக்கணம் படித்தவர் இன்னும் சரியாகச் சொல்லமுடியும். நினைத்துப் பார்க்கிறேன், என் முந்தைய அலுவலகத்தில், வாரம் ஒருவர் சிறு குழுவில் ஏதாவது தலைப்பில் பேசுவோம். அங்கு நான் பேசிய முதல் தலைப்பு, 'How to improve our English vocabulary?'

நண்பர்களிடையே சில நம்பிக்கைகள்

இணையம் வழியே மட்டும் அறிமுகமான ஒரு நண்பருடன் நேற்று ஒரு சிறு மின் அரட்டை. அதிலிருந்து சில வரிகள் இங்கே: (சேமிக்காமல் விட்டுவிட்டேன், ஞாபகத்தில் இருந்து எழுதுகிறேன், எனவே அச்சு அசலாக இருக்காது, கோபிக்க வேண்டாம் நண்பரே)

நண்பர்: Good evening!
நான்:வணக்கம்.
நண்பர்: மாலை வணக்கம் அல்லவா?
நான்: வணக்கம், அவ்வளவுதான் மாலை வணக்கம், காலை வணக்கம் எல்லாம் கிடையாது.
..
..
..
நான்: 'சுனில், யுவர் டின்னெர் இஸ் கெட்டிங் கோல்ட்'ங்கிற மாதிரி சத்தம் கேக்குது. [நினைத்துப்பார்க்க: 'சியர்ஸ் எல்காட் டிவி விளம்பரம்']சாப்பிடணும்..
நண்பர்: டின்னரா, இன்னேரத்திலா? [மணி 11க்கும் மேல் ஆயிருந்தது]
நான்: ஆமாம்
நண்பர்: இரவு உணவு..இதுக்கு என்ன தமிழில்? எங்க வீட்டுக்காரம்மா கிண்டல் பண்ராங்க '...காசியோடு பேசாதீர்கள், அப்புறம் இரவு உணவு, கொட்டைவடிநீர்னு பேச ஆரம்பிச்சுடுவீங்க':-))
நான்: நமக்குத் தெரிஞ்சதெல்லாம் சோறுதான்...
..
..
தமிழில் பேசுவதும் எழுதுவதும் என்னமோ ஒரு பண்டிதத் தனம் என்பது மாதிரி ஒரு பிரமை இவரைப் போன்ற நண்பர்களுக்கு இருப்பது வருத்தம் அளிக்கிறது. தமிழில் சிந்திக்காமல் தமிழில் பேச/எழுத முயன்றால் இதுதான் நடக்கும். தங்களுக்குள் வணக்கம் சொல்லிக் கொள்ளும்போது 'காலை, மாலை' என்றெல்லாம் சேர்த்துச் சொல்வதில்லை. வணக்கம் நமக்கு என்றும் வணக்கம்தான். சொல்லப்போனால் சந்திக்கும்போதும் வணக்கம்தான் விடைபெறும்போதும் வணக்கம்தான். யாரோ வணக்கம் சொல்லும்போது காலை/மாலையை சேர்த்துச் சொல்லுகிறார்கள் என்பதற்காக அதே வழியில் சிந்தித்து அந்த சிந்தனையைத் தமிழ்ச் சொல்லாக்கினால், அந்தத் தமிழ் பண்டிதத் தமிழாகத்தான் இருக்கும்.

இவர்கள் இன்னொன்றை மறந்துவிடுகிறார்கள். அதாவது மேற்கத்தியவர் கூட, 'இன்றைய காலை நல்லதாக ஆகுக' என்று 'வாழ்த்து'த்தான் சொல்கிறார்கள், 'வணக்கம்' அல்ல. அப்படி வாழ்த்தும் போதுதான் நேரம் பற்றிய குறிப்பு தேவைப்படுகிறது. இந்த வாழ்த்தும் முறையே மேற்கத்திய நாடுகளிலேயே சமூகத்திற்கு சமூகம் மாறுபடுகிறது. ஜெர்மன்காரருடன் பேசும்போது, காலை ஒரு 9 மணிக்கு மேல் போய் 'நற்காலை' வாழ்த்தினீர்களானால் முழிப்பார். அவர்களுக்கு அதற்கு மேல் 'நன்னாள்' வாழ்த்து சொல்லித்தான் பழக்கம். அதே போல் சுலபமாக 'நல்லிரவு' வாழ்த்துகிறோமே ஆங்கிலத்தில், அதை அவர்கள் மிக நெருங்கியவர்களுக்கு மட்டுமே பயன்படுத்துவர். கொஞ்சம் நெருக்கம் குறைந்தவர் அப்படி வாழ்த்தினால் அவர்கள் ஒரு மாதிரியாகப் பார்ப்பர். இவையெல்லாம் சமூகத்துக்கு சமூகம் மாறுபடும்.

அதே போலத்தான் இந்த 'இரவு உணவு'ம். அவர் கேட்க நினைத்தது 'சாப்பிட்டாச்சா?' என்பது. ஆனால் ஆங்கிலத்தில் சிந்தித்ததால் 'Had your dinner?' என்று யோசித்து, அதற்கு தமிழில் சொல்லுக்குச்சொல் மொழிமாற்றம் செய்ய நினைத்து, டின்னருக்கு 'இரவு உணவு'என்று சொல்லி, அது நீளமாக, கவர்ச்சியின்றி இருப்பதால் அதைக் குத்திக்காட்டி, அதனுடன்கூட எப்போதும் இது மாதிரி வாதிடுபவர்களுக்கென்றே எவரோ கண்டுபிடித்த 'கொட்டைவடிநீரை'ப் போட்டு. அடாடா, எத்தனை கஷ்டம் இவருக்கு. 'சாப்பிட்டாச்சா?' அல்லது 'சாப்பாடு ஆச்சா?' என்றால் 'ஆச்சு, இல்லை' என்று எளிமையாக, சுருக்கமாக முடியவேண்டியது... இந்த மாதிரி சிந்திப்பது ஒரு அதீதமான நிலைப்பாடு என்பது என் தாழ்மையான கருத்து. இப்படித் தமிழில் சிந்தித்து ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்த சிலர்தான் போட்டோ பிலிமை ஆங்கிலத்திலும் 'கழுவுவபர்கள்'. இடியாப்பத்தை ஆங்கில மொழிமாற்றம் செய்து 'extruded and steamed rice flour' என்றால் எப்படி இருக்குமோ அது போல்தான் காப்பியை இப்படி கொட்டைவடிநீராக்குவதும்.

யோசித்துப் பார்த்தால், இந்த மாதிரி வணக்கம்/வாழ்த்து/உணவு எல்லாத்திலும் நேரத்தை நுழைக்கவேண்டிய அவசியம் ஐரோப்பியருக்கு இயற்கையில் இருந்திருக்கலாம். கோடையில் இரவு 9 மணிக்கும் வெளிச்சம் இருக்கிறது. வாடையில் காலை எட்டு மணிக்கும் இருளாய் இருக்கிறது, எனவே ஒருவர் தற்போதைய வேளையை அவ்வப்போது நினைவு படுத்தவும் தேவை இருந்திருக்கலாம். வருடம் முழுதும் பெரிய அளவில் பகல் இரவு மாறாத வெப்ப மண்டல வாசிகளான நம் மக்களுக்கு இவை தேவையில்லாமல் இருந்திருக்கலாம். இதெல்லாம் ஒரு ஊகமே. இதற்கு யாரும் வழக்குத் தொடுக்க வேண்டாம்.

ஒரு விதத்தில் நண்பர் நன்மையே செய்திருக்கிறார். அவருடன் அரட்டை என்னவோ 10 நிமிடம்தான் இருக்கும். ஆனால் அதை வைத்து ஒரு நாள் வலைப் பதிவை ஒப்பேற்றிவிட்டேனே, நன்றி நண்பரே. இதனால் அவர் என்னவோ தமிழுக்கு எதிரி என்றோ நான் தான் அவ்வையாரின் ஒரே பேரன் என்றோ ஆகாது. அவர் கதை, கவிதையெல்லாம் எழுதும் எழுத்தாளர். நான் எந்திரங்களுடன் புழங்கும் பொறியாளன். என்னைவிட அவரால் தமிழுக்கு நிறைய அளிக்க முடிந்திருக்கிறது. அவரை வைத்து இந்தப் பதிவை நான் ஓட்டிவிட்டேன் அவ்வளவுதான்:-))

இதையெல்லாம் அப்போதே ஏன் சொல்லவில்லை? இப்போதுதான் தோன்றியது, சொல்கிறேன். அப்புறம் வேறு எதற்கு மெனக்கெட்டு வலைப்பதிப்பது? நமக்குத் தோன்றியதை வீட்டுக்குள்ளேயெ சொல்லிக்காமல் வீட்டுத் திண்ணைக்கு வந்து சொல்வது போலத் தானே இந்த வலைப்பதிவுகள். வீதியில் உலா வருகிற சில பேச்சுத் தோழர்களுக்கு நாம் சொல்வதில் சுவாரசியம் ஏற்பட்டால் நின்று கேட்கப்போகிறார்கள். சிலர் பதிலுக்கு ஏதாவது சொல்லியும் போவார்கள். நம்மோடு ஒத்துப் போகாதவர்கள் நகைத்துக்கொண்டு வேறு வேலையோ வேறு திண்ணையோ பார்த்துப் போய்விடுகிறார்கள். மிகச் சிலர் மட்டுமே நம் திண்ணையில் உட்கார்ந்து தங்கள் அபிப்ராயத்தையே பெரிதென்று வாதிடுகிறார்கள். இதில் சிலர் முகமூடி வேறு அணிந்துகொள்வதால் இன்னும் பிரச்னை. நாம் என்ன வழக்காடு மன்றமா நடத்துகிறோம்? அல்லது இது என்ன ஊர்ப்பொதுச்சாவடியின் திண்ணையா? வாதம் முத்திப்போனால், நாகரிகம் கருதி (நம் வீட்டுத்திண்ணையாச்சே, கசமுசன்னு சத்தம் கேட்டால் நல்லாவா இருக்கு?) அய்யா வணக்கம், சென்று வாருங்கள், தங்கள் வருகைக்கு நன்றி என்று சொல்லி கதவைச் சாத்தி வீட்டுக்குள் வந்துவிட வேண்டியதுதான். திண்ணையில் போய்ப் பேசினால் இதற்கெல்லாம் தயாராகத்தான் இருக்கவேண்டியிருக்கிறது, என்ன செய்ய?

திங்கள், டிசம்பர் 29, 2003

அமெரிக்காவில் உழவர் சந்தை

Click to enlarge


ரோச்சஸ்டர் வந்த புதிதில் பெரிய பெரிய பல்லாங்காடிகளில் காய்கறி, மளிகைப் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தோம். பால், ரொட்டி, பழம், மாவு, சோப்பு, சீப்பு, சர்க்கரை, காய்கறிகள் என ஒரே இடத்தில் எல்லாம் கிடைத்தது. கோவையிலும் பல்லாங்காடிகள் வந்துவிட்டிருந்தாலும் எங்கம்மாவுக்கு ரங்கே கவுடர் வீதியில் அந்த நெருக்கமான சந்துகளில் கடைகடையாய் ஏறி இறங்கி 'ஓல்சேல்' கடைகளில் பொருட்கள் வாங்கினால்தான் திருப்தி. வீட்டில் அம்மாவின் ராஜாங்கம் நடந்தவரை இது நடந்ததில் ஆச்சரியமில்லை. பிறகு ஒரு நாள் வழக்கம் போல் மாமியார்-மருமகள் உறவு (புடலங்காய்!) ஒரு ப்ரேக்பாயின்டில் உடைந்துபோனபிறகு மருமகள் ஆட்சிக்கு வந்த பிறகும் கூட இது தொடர்ந்ததுதான் ஆச்சரியம். 'நான் பார்த்து வாங்கினவரை எல்லாம் கம்மி விலைக்கு வாங்கினேன், இவள் வந்து டிப்பார்ட்மென்ட் ஸ்டோரில் நோகாமல் வாங்கி காசைக் கரியாக்குகிறாள்' என்று ஒரு சொல் சொல்ல இடம் கொடுக்காக் கூடாதென்ற வைராக்கியம் கொண்ட கவரிமான், அதான் என்னவள், சென்ற ஆட்சியில் நடந்த திட்டமானாலும் உடைப்பில் போடாமல் தொடர்ந்தாள். இப்படி கடைவீதிக்குப் போய், நாலு கடை நடந்து வாங்குவது ஒரு பொழுதுபோக்காகவே இருந்தது இருவருக்கும். இந்த சந்தோஷம், அதது அந்த இடத்தில் இருந்த பல்லாங்காடிகளில் பொருள் வாங்கும்போது கிடைக்கவில்லை. அதிலும் 'மார்க்கெட்டுக்குப்போய் வாங்கினால்தான் காய்கறி, மற்றதெல்லாம் மண்ணாங்கட்டி' ரீதியில் ஒரு ரத்தத்தில் ஊறிவிட்ட நம்பிக்கை.

ஒரு தள்ளுவண்டியில் எல்லாவற்றையும் ஏற்றி அந்தப் பெரிய கடையை ஒரு சுற்றுவந்து ('பட்டர்மில்க் எங்கே கிடைக்கும்?' '13வது ஐலுக்கு நேரே டைரி ஐல் எக்ஸ்டென்ஷன் இருக்கும் பாருங்க', 'இதென்ன உருளைக்கிழங்கில் இத்தனை வகை, எதை வாங்கினால் பொடிமாஸ் செய்யலாம்?' 'ஏன் இந்த வெங்காயம் அதைவிட ரெண்டு மடங்கு விலை?') பில் போடுமிடத்தில் கன்வேயரில் வைத்து பீப்..பீப் என்று பில் போட்டு, அதிலும் அந்தக் குண்டுப்பெண்கள் ('அதென்ன இந்த அமெரிக்காவில் எல்லாப் பெண்களும் இப்படி அநியாயத்துக்குக் குண்டுகளாக இருக்கிறார்கள்?'. 'சரி, சரி, எந்தப்பொண்ணோ எப்படியோ இருந்துட்டுப் போறாள், உங்க பொண் நைசா கேண்டியெல்லாம் கன்வேயரில் தள்ளுறாளே அதப் பாருங்க') கொத்தமல்லிக்கட்டை சொல்லிவைத்தாற்போல பார்ஸ்லீ என்று புரிந்துகொண்டு பில் போடுவதைக் கண்டும் காணாமலும் இருந்துகொண்டு (பார்ஸ்லீ விலை 50 காசு, கொத்தமல்லி ஒரு ரூவா, 80 காசு, ரூவா=டாலர், காசு=சென்ட்)....ம்..என்ன இருந்தாலும் மார்ர்க்கெட்டுக்குப்போய்...முதல் பாராவைப் பார்க்கவும்.

Click to enlarge Click to enlargeஅடித்தது பார் யோகம்; 'இங்கேயும் மார்க்கெட்டுக்குப் போய் காய்கறி வாங்கலாம், எடைக்குப் பதிலாய் கூறு போட்டு விற்பதை வாங்கலாம், ஏர்கண்டிஷனோ, ஹீட்டரோ இல்லாமல் திறந்தவெளியில் நாலு கடை பார்த்து விசாரித்துப் பொருள் வாங்கலாம்' என்று நண்பர் ஒருவர் கூட்டிப்போய்க் காண்பித்ததும் ஏதோ இழந்த சொர்க்கத்தை மீண்டும் பெற்றது போல் ஒரு சந்தோஷம், முக்கியமாக அன்பு மனையாளுக்கு. நிறைய அமரிக்க நகரங்களில் இருக்கிறது இந்த மார்க்கெட்டுகள். Public Market/Farmer's Market என்ற இரு பெயராலும் வழங்கப்பட்டு வந்தாலும், இங்கு நாங்கள் கேள்விப்பட்டது Farmer's Market என்பதையே. ஆனால் பெயர்ப்பலகை Public Market என்றே இருக்கிறது.

Click to enlargeவரிசையாய் கடைகள், கடைகள் என்ன கடைகள், அவரவர் பலகைகளால் தற்காலிகமாய் செய்துகொண்ட மேடைகள், அவ்வளவே. ஒரு சரக்கு வண்டி முதுகைக் காண்பித்துக்கொண்டு கடைகளுக்குப்பின் நிற்கும். அதிலிருந்து கடைக்காரர், அவர் பையன், பெண், மனைவி, கணவன் யாராவது ஒருவர் அவ்வப்போது பொருட்களை இறக்குவார். எல்லாக் காய்கறியும் கூறுபோட்டுத்தான் வைத்திருப்பார்கள். சிறுசிறு கூடைகளில் வரிசையாய் வைத்து அட்டைகளில் விலையை எழுதி, கூவிக்கூவி விற்பார்கள். பெரும்பாலும் வெள்ளையரே இருந்தாலும், கறுப்பர், சீன முகம் கொண்ட ஆசியரும் இருப்பர். பெரும்பாலும் குளிர்பதனத்தில் வைக்கப்படாமல் காய்கறிகள் இருப்பதனால் நாம் வாங்கிவந்தபின் நம் வீட்டில் அதிகநாள் தாங்குகிறது (என்று என் மனைவியின் அபிப்ராயம்). பார்கோடு கடைகளைப்போல் அல்லாமல் சீசனைப் பொறுத்து விலை மாறுவதில் ஒரு சுவாரசியம். ஆப்பிள் சீசனில் ஒரு கூடை ஒரு டாலருக்குக் கிடைக்கும். சமயத்தில் கடைகளில் கிடைக்காத வாழைக்காய், சேனைக்கிழங்கு கூடக் கிடைக்கும். எல்லாம் கூறுதான்.

Click to enlargeஅங்கு போய் பொருள் வாங்குவது சொந்த ஊர் அனுபவத்தைத் தருவதற்கு இன்னொரு காரணம், கார் நிறுத்த இடப்பற்றாக்குறை. இங்கே அமெரிக்காவில், எக்கரா ஏக்கராவாக கார் பார்க்கிங் வசதி செய்திருப்பார்கள் ஒவ்வொரு கடையிலும். சில சமயம் கார் நிறுத்தின இடத்திலிருந்து கடை வாசலுக்குப் போக இன்னொரு கார் கிடைக்குமா என்று நினைக்கும் அளவுக்கு இவை பெரிதாய் இருக்கும். ஆனால் எங்க ரோச்சஸ்டர் மார்க்கெட்டில் நிறைய முறை கார் நிறுத்த இடம் தேடி இரண்டுமுறை கிரிவலம் வரவேண்டியிருக்கும். அப்படியே ஒப்பணக்கார வீதியில் கார் நிறுத்த அலையும், கூலிக்காரர் முக்கில் டூவீலரே நிறுத்த இடம்தேடும் அதே சுகத்தையும் தரும். அடாடா..

Click to enlargeநம் ஊரிலும் உழவர் சந்தையெல்லாம் கொண்டுவந்தார்களே அது அரசியலில் வேறு மாட்டி அடிபட்டதே, அதை இன்னும் போய்ப் பார்க்கவில்லையே என்று தோன்றுகிறது. மீண்டும் ஊரில் போய் செட்டில் ஆகும்போது கட்டாயம் அதைப்போய்ப் பார்க்கவேண்டும், அதுவரை அப்படி ஒன்று இருந்தால்.

வியாழன், டிசம்பர் 25, 2003

தொழில்நுட்பக் கல்விக்கு ஒரு ஊட்டம் - 2

இது சம்பந்தமாய் என் முந்தைய பதிவிற்கு dyno (புனைபெயர்) அவர்கள் அளித்திருந்த பின்னூட்டத்தையும், எனக்கு மேலும் தோன்றிய சில எண்ணங்களையும் இங்கே காணலாம்.
dyno, உங்கள் பெயர் சொல்லாவிட்டால் பரவாயில்லை, உங்கள் பின்னணி தெரிந்தால் இன்னும் குறிப்பாக என் கருத்தை விளக்க முடியும் :-)

புதன், டிசம்பர் 24, 2003

ஒரு அஞ்சு வயசுக்குழந்தையின் சந்தேகங்கள்

'அப்பா, ஐ டொன்ட் வான்ட் டு பி எ கேர்ல்' என்று என்னிடம் வந்து அழுதது குழந்தை. விசாரித்தேன். என் மகளின் பள்ளித்தோழி, அவளும் ஒரு இந்தியரின் குழந்தை, அவள் வீட்டில் ஒரு தம்பி பிறக்கப்போகும் விஷயத்தைச் சொல்லியிருக்கிறாள். தன் அம்மாவின் வயிற்றுக்குள் இப்போது இருக்கிறான் என்றெல்லாம் பேசியிருக்கிறார்கள். அம்மாவின் வயிற்றை கத்தியால் வெட்டித் தான் குழந்தையை எடுப்பார்கள் என்று வேறு சொல்லியிருக்கிறாள். அதிலிருந்து ரெண்டு நாளைக்கு கண்ணில் மிரட்சியுடன், இதே புராணம். பெரிதானால் தன் வயிற்றையும் வெட்டுவார்கள் எனவே நான் பெண்ணாக இருக்க விரும்பவில்லை. இது எப்படி இருக்கு?

இன்னொரு நாள் நடந்தது இது: ஒரு விளையாட்டு, அவளாகத் தயாரித்தது. தரையில் வைத்திருக்கும் அட்டை மேல் ஒரு பந்தை எறியவேண்டும். இருவரும் எதிரே நிற்கவேண்டும். யார் அதிக முறை எறிகிறார்களோ அவர் வென்றவர். முதலில் எறிந்தாள், படவில்லை. நான் விட்டுக்கொடுத்தேன், என் எறியும் படாதவாறு. அடுத்து அவளின் எறி அட்டையில் பட்டது, குதூகலம். நான் இந்த முறையும் விட்டேன். அடுத்து அவள், இந்த முறையும் வெற்றி, நானும் ஒரு முறையாவது இருக்கட்டுமே என்று அட்டையில் போட்டேன். அவ்வளவுதான் விளையாட்டு முடிந்தது.

'அப்பா, நான் ஜெயிச்சுட்டேன், என்னுது ரெண்டு, உன்னுது ஒண்ணு.' இதோடு விட்டிருந்தால் பரவாயில்லை, அடுத்து வந்ததே பார்க்கலாம். 'அப்பா, இட் இஸ் நாட் டிஃபிகல்ட், யு கேன் டூ இட். யூ நீட் டு திங்க்' என்று முஷ்டியை மடக்கித் தன் மண்டையில் தட்டிக்காட்டினாளே! 'வின்னீ-த-பூ' கரடிக்குட்டி மாதிரி.

இன்னும் அவளுக்கு இருக்கும் ஒரு சந்தேகம், நம் வீட்டில் புகைபோக்கி இல்லையே, எப்படி சேந்தா க்ளாஸ் வருவார், எப்படி நமக்கு பரிசு கொண்டுவருவார்? இங்கு, இன்றிரவு 'சேந்தா க்ளாஸ்' தணப்பிற்காக இருக்கும் புகைபோக்கி வழியாக வந்து பரிசுப் பொருட்களை வைத்துவிட்டுப்போவர் என்று நம்பிக்கை! 'கவலைப்படாதே, புகைபோக்கி இல்லாத வீடுகளுக்கு அவர் டிவி வழியாக வந்து, பரிசை டிவி முன் வைத்துவிட்டுப்போவார் என்று சமாதானம் செய்திருக்கிறோம். நாளை காலையில் பார்த்துவிட்டுத்தான் இதை நம்புவாள். சாந்தாவுக்கு போன மாதமே கைப்பட எழுதிய கடிதம் அனுப்பிவிட்டாள் என்ன என்ன வேண்டும் என்று. அந்தக் கடிதம் என் அலுவலக அறையில் தூங்குகிறது. பரிசுப்பொருட்கள் கார் பின்பெட்டியில் ஒளிந்திருக்கின்றன. நாளைக்கு இருக்கு கொண்டாட்டம்.

செவ்வாய், டிசம்பர் 23, 2003

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்- ஒலி ஆராய்ச்சி


யேசு கிருஸ்துவை ஆங்கிலத்தில் 'ஜீசஸ்' என்று சொல்கிறோம் ஆனால் ஏன் தமிழில் ஏசு, இயேசு, யேசு என்றெல்லாம் சொல்கிறோம்? 'புதிய ஏற்பாடு' படித்தவர்களுக்குத் தெரியும், மேத்யூவை 'மத்தேயு' என்றும், பீட்டரை 'பேதுரு' என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும், இது ஏன்? ஏன் சிலர் தமிழில் எழுதும்போது ஜெர்மனியை யேர்மனி என்று எழுதுகிறார்கள்? கொஞ்சம் அறிவையும் நிறைய ஊகத்தையும் வைத்து ஒரு அலசல்.

ஒரு சின்ன அறிவிப்பு, இது எந்த விதத்திலும் மதநம்பிக்கைகளை விமர்சிக்க எழுதப்பட்டதல்ல. அப்படி ஏதும் தெரிந்தால், அதைச்சுட்டினால் திருத்திக் கொள்கிறேன்.

மற்ற ஐரொப்பியர்களின் இந்திய விஜயத்திற்கும் ஜெர்மானியர்களின் விஜயத்திற்கும் வேறுபாடு உண்டு. ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், போர்த்துக்கீசியர், டேனிஷ்காரர்கள் போன்றோர், இங்கு தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தப் பார்த்ததும், அதில் இறுதியில் ஆங்கிலேயர் பெருமளவில் வெற்றிபெற்றதும் தெரியும். இந்த ஜெர்மானியர் என்ன செய்தனர்? அவர்கள் பணி அரசியலைவிட கிறிஸ்தவ மதக்கருத்துகளைப் பரப்புவதிலேயே இருந்தது. ஆனால் வெறும் சமயப் பிரசாரர்களாய் இருக்காமல், கலை, மொழி, இலக்கிய வளர்ச்சிக்கும் ஊன்றுகோலாய் இருந்திருக்கிறார்கள்.

எது எப்படியோ, இப்படி சமயம் பரப்ப வந்த ஐரோப்பியர்களில் தமிழர்களால் என்றும் மறக்க முடியாதவர்கள் ஜி.யு. போப் மற்றும் 'வீரமாமுனிவர்' என்கிற கான்ஸ்டான்டைன் பெஸ்கி. ஜெர்மானியர்தான் சமஸ்க்ருத நூல்களை, குறிப்பாக வேதம் முதலானவற்றை ஐரோப்பாவுக்கு அறிமுகப்படுத்தினர் என்றாலும், அவர்கள் சமஸ்க்ருதத்தை படிக்க ஆரம்பித்ததற்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழைப் படிக்க ஆரம்பித்தார்கள். இது பற்றி சில விவரங்கள் 'தமிழியலும் ஜெர்மானியரின் தேடுதலும்' என்ற இந்த ஆங்கிலக் கட்டுரையில் கிடைக்கும். ஸீகன்பாக் (Ziegenbalg) என்பவர்தான் முதன்முதலில் 1708-இல் (சுமார் 300 வருடங்களுக்குமுன்!) தமிழ் அகராதி(அகரமுதலி?)யைத் தொகுத்திருக்கிறார்.

சரி, தொடங்கிய பிரச்னைக்கு வருவோம். நான் கொஞ்சகாலம் கோவையில் பாரதீய வித்யா பவனில் ஜெர்மன் மொழி படித்திருக்கிறேன். படிச்சதென்னவோ, அரிச்சுவடி மட்டம்தான். ஆனா சில விஷயங்கள் பச்சென்று ஒட்டிக்கொண்டன. ஜெர்மன் மொழிக்கும் தமிழுக்கும் ஒரு ஒற்றுமை. இந்த ஆங்கிலத்தைப் போல ஒரே எழுத்து வடிவத்துக்கு பலப்பல பேச்சு வடிவம்ங்கிற குழப்பம் எல்லாம் கிடையாது. தமிழ் போலவே (k, h, g எல்லாத்துக்கும் ஒரே ககரம் இருக்குன்னு ஓரத்துலே யாரோ சொல்றது கேட்டாலும்) ஒரு குறிப்பிட்ட மாதிரிதான் ஓசை இருக்குது. சின்ன உதாரணம், ஆங்கிலத்தில் 'read' என்பதை 'ரீட்', 'ரெட்' அப்படி ரெண்டு விதமா சொல்றோம். 'red' ன்னு எழுதினாலும் அதே 'ரெட்'ன்னு சொல்றோம். ஜெர்மன் இந்த மாதிரியெல்லாம் குழப்பாது. ஒரு சில விதிவிலக்கு இருந்தாலும் (நமக்கு g,h,k மாதிரி:-) பொதுவா ஒரு எழுத்துவடிவத்துக்கு ஒரு ஓசைதான்.

சரி அதுக்கு என்ன இப்ப?

அங்கதான் விஷயமே இருக்கு. ஆங்கிலத்தில் A தமிழில் அ/ஆ மேலும் எ/ஏ என்ற இரு ஒலிக்குறிப்புகளுக்குமே பயனாகும். ஆனா ஜெர்மனில் முதல் வகை ஒலிக்கு A-வும் இரண்டாம் வகைக்கு E-யும் பயனாகும். இதையே திருப்பிப் போட்டா, E வரும் இடத்தில் எல்லாம் அவர்கள் எ,ஏ இரண்டு ஒலிகளைத்தான் குறிப்பர். ஆக, Peter என்பது ஆங்கிலத்தில் பீட்டர் என்றாலும், ஜெர்மனில், பேட்டெர் என்றாகும். இன்னொன்று T என்ற மெய்யெழுத்தின் விசேஷம், அதை அவர்கள் நாம் சொல்வதைப்போல் அவ்வளவு 'பொட்டே'ரென்று போடாமல், பொதேரென்று தன் போதுவார்கள்! இதே காரணத்தால்தான் 'இடலி' தமிழில் 'இத்தாலி' ஆனது. ஆக, அடுத்த மருவல் பீட்டர்->பேட்டெர்->பேத்தெர். தமிழில் ஏதோ ஒரு இலக்கண வழக்கு இருக்கும்போல, அதாவது 'ர்' என்பதில் பெயர்ச்சொற்களை முடிக்காமல் 'ரு'வாக்கி முடிப்பர் போல. தெலுங்குக்காரர்கள் மாதிரி. அப்படி மாறி 'பேதுரு' ஆனது. இதே மாதிரித்தான் Mark 'மாற்கு' ஆனதும்.

அடுத்த விசேஷம், இந்த J என்ற ஒலி. இது ஜெர்மனில் அதிசயமாய் Y என்ற ஒலியாவதுதான் ஆச்சர்யம். நமக்கு ரொம்பப்பிடித்த 'ஆமாம் சாமி'க்கு ஜெர்மனில் 'ja' தான். ஆனால் அது சொல்லப்படுவது 'யா' என்று! உண்மையில் எதுக்கெடுத்தாலும் 'யா..யா' என்று சொல்லுவதற்கு இவர்கள் தான் முன்னோடியாக இருந்திருக்கவேண்டும். ஆக எங்கெல்லாம் J வருதோ அங்கெல்லாம் Y போடுங்க. E வந்தா ஏ போடுங்க, அதனாலதான் Jesus யேசுஸ்... இல்லியே, அப்பக்கூட கடைசி எழுத்து உதைக்குதே. அது இன்னொரு மரபு, கடைசியில் வரும் S-ஐ சைலன்ட்டா விடுவது. இதே காரணத்தால்தான் Judas, யூதாஸ் ஆகாமல் 'யூதா' ஆவதும்.

இதெல்லாம் சரி, இன்னும் Jacob எப்படி யாக்கோபு ஆனார், John எப்படி யோவான் ஆனார்?

அதே சட்டங்கள்தானே இங்கும். முதலில் சொன்னபடி ஜெர்மனில் O-வுக்கு அ, ஒ என்றெல்லாம் பல ஓசை கிடையாது. எனவே Jacob, யாக்கோப்->யாக்கோபு. அதே மாதிரி இன்னொன்று O என்பது ஒ என்றால் OH என்பது ஓஆ என்று கூட்டு உயிரெழுத்தாகும். இது ஒருமாதிரி 'குழூஉக்குறி' என்பதில் வரும் ஊகாரம் மிகுந்து 3 மாத்திரை நீளம் ஆகுதே, மற்றும் 'ஔ'வில் 'அகரம்+உகரம்' ஆகிய இரண்டும் கூடுதே, அதுமாதிரி ஒரு கூட்டு ஒலி. இப்போது என்ன ஆச்சு? John 'யோஆன்' ஆனாரா? அதைத்தான் கொஞ்சம் சுலபமாக யோவான் என்று ஆக்கியிருக்கிறார்கள் மாடர்ன் அகத்தியர்களான நம் பாதிரியார்கள்.

இதே வழியில் போனால் J என்ற ஒலிக்கும் G என்ற ஒலிக்கும் ஆங்கிலத்தில் நெருங்கிய உறவு இருப்பதும், அப்படியே ஜெர்மனியில் வரும் ஜகர ஒலிக்கு J-வைப்போட்டு அப்புறம் அதையே யகரமாக்கினால் ஜெர்மனி யெர்மனியாகும்!

எது எப்படியோ மதம் பரப்ப வந்தவர்கள் வெறும் மதத்தைப் பரப்பாமல் ஒரு சமுதாயம் தன் வேர்களை அறிந்துகொள்ள பெரும் உதவி செய்திருக்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

சனி, டிசம்பர் 20, 2003

தமிழ் பயன்பாடு பற்றிய என் கருத்துகள்

கதை, கவிதை தவிர்த்த படைப்புகளில் தமிழின் பங்கு, உபயோகம் ஆகியவை பற்றி நான் காணக்கிடைத்த சில கருத்துகளுக்கு எதிர்வினையாய்த் தான் முதலில் எழுதத் தலைப்பட்டேன். பின் அதில் நேரத்தை விரயப்படுத்தாமல் ஆக்கபூர்வமாக ஏதாவது தோன்றுவதை எழுதினால் என்ன என்று, அப்படி மனதுக்குள் வந்தவற்றை இங்கு பதிக்கிறேன். அவ்வளவு கோர்வையாக வராமல் இருக்கலாம். சிறு பிழைகளை விடுத்து, பொதுவான கருத்து மாறுபாடுகள் இருப்பின் படிப்பவர்கள் தெரிவித்தால் நன்றியுடைவனாக இருப்பேன்.

தமிழர் வளர்ச்சிக்குத் தமிழ்

தமிழும் மற்ற மொழிகளும்...

'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்பார் பாரதியார். இன்னொரு இடத்தில் 'சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து...' என்பார் அவரே. எது உண்மையில் சிறந்த மொழி? ஒவ்வொரு மொழியும் அதை நன்கு அறிந்து ரசிப்பவருக்கு இனிமைதான். ஒரு மொழிக்கும் இன்னொரு மொழிக்கும் போட்டி நடத்துவது, 'என் அம்மாவின் பாசம் உயர்ந்ததா, உன் அம்மாவின் பாசம் உயர்ந்ததா' என்று கேட்பதற்கு சமம். முதலில் ஒரு மொழி இன்னொரு மொழியை விடச் சிறந்தது என்பது வீண்வாதம் என்பது என் தாழ்மையான கருத்து. 'கணினிக்கு சம்ஸ்க்ருதம் ஏற்றது, இசைக்கு தெலுங்கு ஏற்றது, இதுக்கு இந்தி ஏற்றது, அதுக்கு ஆங்கிலம் ஏற்றது' என்பதெல்லாம் சரியெனப்படவில்லை.

எது ஒருவருக்கு சமூக அடையாளம்?

என்னதான் ஆங்கில வழிக்கல்வி பயின்றாலும் சமூகம், பொழுதுபோக்கு, சமயம், அரசியல் என்ற பல விஷயங்களில் ஒருவர் தன் மொழிப் பின்புலத்துக்கேற்பத் தான் பங்கேற்கிறார். இங்கு ஒன்றை அவதானிக்கலாம்: ஒரு நாட்டில் பிறந்தவரை அடையாளப்படுத்தும்போது அவர் நாட்டையோ, மதத்தையோ, நிறத்தையோ யாரும் முன்னிறுத்துவது இல்லை. ஒரு ஆங்கிலேயரை, He is an Englishman என்கிறார்கள், He is an Englandman என்பதில்லை. அதே போல், French, Dutch, Polish, Spanish, Italian, Chinese, Japanese...என்றுதான் சொல்கிறார்கள். முறையே, Franceman, Netherlandman, Polandman, Spainman, Chinaman, Japanman.. என்று சொல்வதில்லை. இது ஏனென்றால், ஒருவர் மதம் மாறலாம், குடியுரிமை பெற்று வேற்று நாட்டு குடிமகனாகலாம், அவரால் மாற்றிக்கொள்ள முடியாத ஒரே அடையாளம் தாய்மொழி. அதன் காரணமாகவே இவ்வாறு என்றும் நிரந்தரமான அடையாளத்தால் ஒருவரை அழைப்பது. ஆக, விரும்பியோ விரும்பாமலோ, இக்கருத்துடன் ஒத்துப் போனாலோ போகாவிட்டாலோ, தமிழர் குடும்பத்தில் பிறந்து தமிழரோடு வளர்ந்தவர் அனைவரும் சாகும்வரை தமிழரே. புலம்பெயர்ந்தோருக்கும் இது பொருந்தும்.

தமிழ் வாழ ஏதும் செய்ய வேண்டுமா?

'நாம் தமிழுக்கு என்ன செய்தோம்' என்பது அவ்வளவு முக்கியமான கேள்வியல்ல. இன்றைக்கு இருக்கும் அவசர உலகத்தில் சுற்றமும் நட்புமே சுருங்கிக் கொண்டு வருகையில் இதற்கெல்லாம் யாருக்கும் நேரமும் தேவையும் இருக்கிறது? ஆனால் தமிழ் வாழாமல் அழிந்தால் தங்கள் வாழ்வும் பங்கப்படும் என்பதைத் தமிழர் புரிந்தால் தானாகத் தமிழ் வளரும். 'ஒருவருக்கு மொழி வெறும் சாதனமல்ல, அது அவருக்குப் பின்புலமும் கூட' என்ற திரு இராம.கி.யின் கருத்தில் எனக்கு மிகுந்த உடன்பாடு உண்டு:

மொழி என்பது ஊடகம் மட்டுமல்ல; அது ஒரு பின்புலமும் கூட. இந்தப் பின் புலம் ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறது. அது நம் சிந்தனையை ஒரு விதக் கட்டிற்குக் கொண்டுவருகிறது. நாம் மொழியால் கட்டுப் படுகிறோம். மாந்தரும் கூட தாம் வாழும் சூழ்நிலைக்கு ஏற்பத்தானே இருக்க முடியும்?

தமிழர் தமிழைப் பயன்படுத்துவது போதாதா?

தமிழர் தன்னை மேம்படுத்திக்கொள்ளவும், தன் சுற்றம், சமூகம் ஆகியவற்றை மேம்படுத்திக்கொள்ளவும் தங்கள் மொழியை பேணுவதும் காலத்திற்கேற்ப மேம்படுத்துவதும், இற்றைப்படுத்துவதும்(!) அவசியமாகிறது. மீண்டும் திரு இராம.கி அவர்கள் சொல்வதைப்போல '..இன்றைக்குத் தமிழ் என்பது பழம்பெருமை பேசுதற்கும், பழைய இலக்கியம், இலக்கணம், அண்மைக்காலக் கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், கொஞ்சம் அரசியல், ஏராளம் திரைப்படம் பற்றி அறிய மட்டுமே பயன்பட்டு வருவது ஒரு பெருங்குறை..' தமிழின் உபயோகத்தை பரவலாக்கி வீட்டுக்குள், தொலைக்காட்சியில், திரைப்படத்தில், பூஜை அறையில் மட்டும் அல்லாமல் பள்ளியில், அலுவலகத்தில், வணிகத்தில் பயன்படுத்தினால் தானே தமிழ் நிலைக்கும். அல்லாவிடில் தமிழ் சிறுகச்சிறுக அழிந்தே விடாதா? அப்புறம் எங்கிருந்து அடையாளம் கிடைக்கும்?

தமிழரல்லாதோருடன் வணிகம் செய்கிறோம், நுட்பம் பேசுகிறோம், இங்கெல்லாம் தமிழால் ஆவதென்ன?

தேவையான கேள்விதான். இன்றைக்கு இந்தியாவிற்கு வெளியே தன்னை நிலைப்படுத்திக்கொண்ட இந்திய மொழியினரிடையே தமிழர் மிகுந்திருப்பதற்கு அவர்தம் ஆங்கில அறிவும் காரணம்தான். தமிழில் அலுவல், வணிகம், நுட்பம் செய்யும்போது, அது உலக அளவில் நம்மவர் பின்தங்கிவிடுவதற்குக் காரணமாகிவிடக்கூடாது. பன்னாட்டு மொழித்திறமை தொடர வேண்டும். அதனுடன் உள்ளூரில் தமிழ் முழக்கம் பரவவேண்டும். முக்கியமாக அலுவல், வணிகம், நுட்பம் (சாத்திரங்கள் என்று பாரதி பொதுவில் சொன்னதை எல்லாம்) சார்ந்த துறைகளில் தனித்தமிழ், உயர்தனிச்செம்மொழி என்றேல்லாம் முழங்காமல் முடிந்தவரை அனைவராலும் எளிதில் விளங்கக்கூடிய, சுருக்கமான சொற்கள் பாவிக்கப்படவேண்டும். கிரந்த எழுத்துகள், மற்றும் 'காபி, பஸ், ரயில்' போன்ற சுவீகரிக்கப்பட்ட சொற்கள்,ஆகியவற்றையெல்லாம் முழுமனதோடு அரவணைத்துச் செல்ல வேண்டும். கணினி, பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளில் அனைத்துலகும் பயன்படுத்தும் பெயர்சொற்கள், உரிச்சொற்களை (முக்கியமாய் முதலெழுத்துச் சுருக்கங்களான USB, RAM போன்றவற்றை) அப்படியே தமிழ் எழுத்துகளுடன் பயன்படுத்தலாம் (Tarnsliteration). தமிழ்ப்படுத்துதல் பற்றி இன்னும் சில கருத்துகளை அறிய திரு. நாகூர் ரூமி மற்றும் திரு. வெங்கடரமணன் குறிப்பிட்டவற்றைப் படிக்கலாம்.

தமிழில் இத்தகைய சாத்திரங்கள் கிடைக்க என்ன செய்யலாம்?

அதற்கு வசதியும் நேரமும் இத்தகைய சாத்திரங்களில் பரிச்சயமும் உடைய தமிழர், தங்கள் அறிவை தங்கள் மக்களுக்குச் சொல்லிக் கொடுக்கலாம். 'சாத்திரங்கள் பற்றி இணையத்தில் தமிழில் தேடினாலும் தங்களுக்குக் கிடைக்கும்' என்ற நம்பிக்கையை ஊட்டலாம். ஒவ்வொரு புதுக் கலையையும் சாத்திரங்களையும் தமிழில் தருவோர், பொதுவான சில வழிகாட்டுதலுக்குட்பட்டு புதுப்புது சொற்பிரயோகத்தை முயலலாம். அப்படியே அவை பயனுக்கு வந்து நிலைபெறும்.

யார் செய்ய முடியும் இதை?

இன்றைக்கு புலம் பெயர்ந்த தமிழருக்கு இருக்கும் நேரம், வசதி வாய்ப்புகள் உள்ளுர்த்தமிழருக்கு இல்லை. வாரத்தில் 6 நாட்கள் வேலை. தினமும் 12 மணிநேரம் அலைச்சல் என்று சிரமப்படும் மக்களை பொதுக்காரியத்துக்கு எதிர்பார்க்கமுடியாது. ஆனால் வெளிநாடுகளில் பனிபுரியும் நிறையப்பேர் இதைச்செய்ய முடியும் வசதியோடு இருக்கிறார்கள். இந்தியர்களின் மூளைத்திறன் தங்கள் சமூகத்திற்குப் பயனின்றி விரயமாகிறது (brain drain) என்னும் குற்றஞ்சாட்டுபவர்களுக்குப் பிரதியுபகாரமாக இதைச் செய்யலாம்.

எத்தனையோ விஷயங்கள் ஆங்கிலத்தில் சொடுக்கினால் கிடைக்கும் போது, அதையே மீண்டும் தமிழில் மெனக்கெட்டு எழுதி ஏன் காலத்தை விரயம் செய்ய வேண்டும்? அப்படியே செய்தாலும், இவை அந்தந்த நுட்பவியல் வளைர்ச்சிக்கு ஈடாக நிகழ்நிலைப்பட்டிருக்குமா, தேங்கிப்போய்விட்ட அறிவு யாருக்குப் பயனாகும்?

உலகத்தில் ஆங்கிலத்தில் மட்டும்தான் இந்த விஷயங்கள் கிடைக்கின்றனவா? நிறைய ஐரோப்பிய மொழிகளிலும், ஜப்பானிய, சீன, கொரிய மொழிகளிலும் சமகால நுட்ப அறிவு கிடைக்கிறதே. ஏன் அவர்கள் தங்கள் நேரத்தை வீணடிக்கவேண்டும்? அவர்கள் தங்கள் அடையாளத்துக்கு தங்கள் மொழி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். தங்கள் சிந்தனை தங்கள் மொழியில் விரிவதைப்போல் இரவல் மொழியில் இருக்காது என்பதை உணர்ந்திருக்கிறார்கள். காலங்காலமாய் இரவல் தொழில்நுட்பத்திலேயே குளிர்காய்ந்துவிட்ட எம் மக்களுக்கு சிந்தனைச் சுதந்திரத்தைப் பெற இவை அவசியமாகிறது. ஆங்கிலம் போன்ற மொழியில் இருக்கும் அளவுக்கு விரிவாகவும், நிகழ்நிலைப்பட்டதாயும் இன்றைக்கு இல்லாவிட்டாலும், ஒரு தமிழர் இத்தகைய இயல்களில் அடிப்படை அறிவு பெறுவதற்கு பயனாகும் அளவுக்காவது இவை கிடைக்கும் வண்ணம் செய்யலாம்.

தமிழில் இருக்கும் பழம் இலக்கியங்களைப் படித்தறிந்து கொள்ளவே இங்கு நிறையப்பேருக்கு நேரமில்லை, புதிது புதிதாய் நாவல்கள், கவிதைகள் வேறு, அதையெல்லாம் விடுத்து, யார் (நண்பர் ஒருவர் சொன்னது போல் 'அமெரிக்கப் பேத்தியின் ஒரு அறுபது வயசு தாத்தா, ஐரோப்பிய தமிழனின் ஐம்பது வயசு அப்பா, குமுதம்/விகடன் கூட புரட்டி மட்டுமே பார்க்கும் பதினெட்டு வயசு தங்கை, ஏற்கனவே புருஷனுக்கு ரேடியா ஷாக், அமேசான் ஆசை பட்டியல் அறிந்த மனைவி, ஆகிய இணையத் தமிழர்..') இதையெல்லாம் படிக்கப் போகிறார்கள்?

இலக்கியங்கள் படிப்பது அவற்றை ரசிப்பவர்க்குத்தான் பிடிக்கிறது. சாமானிய மக்கள் பொழுதுபோக்குக்கு வார/மாத இதழ்கள் வாசிப்பது பெரிய குறிக்கோளுடன் அல்ல. ஆனால் இந்த நுட்பவியல் விருப்பப்பட்டுப் படிப்பவருக்கு மட்டுமே. விருப்பம் இருந்து, தேவை இருந்து, ஆனால் வேற்றுமொழியறிவு இல்லாதவர் தெரிந்து கொள்வதற்காகவே இவை பயன்படப்போகின்றன. ஒரு மசாலாப்படம் குடும்ப முழுமைக்கும் பிடிக்க வேண்டும் என்பதற்காக, 'கவுண்டமணி ஜோக், கவுன் போட்ட கன்னியர் ஆடும் கனவுக்காட்சி, கட்டிப்பிடித்து அழும் அண்ணன்-தங்கை, கடைசியில் அலறலுடன் வரும் போலீஸ்' என்று எடுக்கிறார்களே அப்படிப்பட்டதல்ல நுட்பவியல். தேடிப்போய், தேவைப்படுபவர் தான் படிப்பர்.

நாளும் மாறிக்கொண்டிருக்கும் நுட்பவியலை விட என்றும் படிக்கக் கூடிய இலக்கியங்கள் படைக்கலாமே!

ஒரு உவமானத்திற்காக திருக்குறளை எடுத்துக்கொள்வோம். அறம், பொருள், இன்பம் என்று திருவள்ளுவர் 133 அதிகாரங்களைப் படைத்திருக்கிறார். அறம், மனிதனைப் பக்குவப்படுத்த, அவன் மன நிலையைத் தயார்படுத்த உதவுகிறது. பிள்ளைப் பருவத்தில் மனிதன் பெறும், அறிவுரைகள், பள்ளிக் கல்வி இவற்றுக்கு ஒப்பாகும் இது. பொருள், அவன் வளர்ந்து வாலிபனாகி இவ்வுலகில் பொருளீட்டி, பகைவரை வென்று, நண்பரை நேசித்து, கூடி வாழ்ந்து, அரசில் பங்கெடுத்து, அவன் செய்ய வேண்டிய சமூகக் கடமைகளை முன்னிறுத்தும். இன்பம், இப்படி இரு நிலைகளிலும் வெற்றி கண்ட மனிதன் தன் உள்ளத்தே களிப்பதற்கான வழிமுறைகள் கேளிக்கைகள், காதல், தாம்பத்யம், இவற்றைப் பற்றி இருக்கும்.

சமகால இலக்கியம் என்பது இந்த இன்பத்துப்பால் போன்றது. பழந்தமிழ் அறநூல்கள், பக்தி இலக்கியங்கள் அவனுக்கு அறக் கல்வியை அளிக்கின்றன. ஆனால் பொருளியல்? அவை பற்றிய தமிழ் நூல்கள், செய்யுள்கள், எவ்வளவு இருக்கின்றன? திருக்குறளிலேயே ஒன்றைக் கவனிக்கலாம், 133 அதிகாரங்களிஅறம் - 38, பொருள் - 70, இன்பம் - 25 என்ற அளவிலே அமைந்திருப்பதை. பாதிக்கும் மேற்பட்ட அதிகாரங்களில் பொருள் விளக்கப்பட்டிருப்பதே அதன் முக்கியத்துவத்துக்கு சான்று. இத்தனைக்கும், அன்றைய பொருட்பால் பெரிதும் அரசியல், அமைச்சியல், படையியல், நட்பியல், குடியியல், என்றுதான் போகும். இன்றைய நுட்பவியலும் அதற்குள் அடக்கவேண்டுமென்றால் இந்த 50 சதவீதம் கூடப் போதாமல் பொருட்பால் இயல்களுக்கு 75 சதவீதம் பங்கு அளிக்கப் பட்டிருக்கும்! ஆனால், இன்று தமிழில் எழுத்து முயற்சிகள் இந்த முக்கியமான பகுதியை விட மற்றவற்றிலேயே அதிகம் கவனம் செலுத்துவதாகத் தோன்றுகிறது. இந்த நிலை மாறினால்தான், தமிழ்ச் சமுதாயம் பொருளியல் கருத்துகளில் தெளிவுபெற்று சிந்தனையை சீர்தூக்கி முன்னேறினால் தான், பொருளாதார உயர்வுபெற்று, பின் இன்பத்துப்பாலில் சுகிக்க முடியும். இதனால் இன்றைக்கு எழுத்தாளராய், கவிஞராய் இலக்கியம் படைப்போரை நிறுத்தச் சொல்வதாய் ஆகாது. மாறாக இன்னும் அதிகமாக நுட்பவியல் சாத்திரங்களை தமிழில் கொண்டுவர அனைவரும் தங்களானதை செய்யலாம் என்று அழைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

புதன், டிசம்பர் 17, 2003

எதுவெல்லாம் தமிழ்?

திரு நாகூர் ரூமி அவர்கள் தமிழோவியம் மின்னிதழில்

...நமது இன்றைய வாழ்வு ஒரு ஆரோக்கியமான கலவையாக உள்ளது. இன்றைக்கு 'பேன்ட்' போடாத அல்லது அணியத் தெரியாத தமிழனே இல்லையென்று கூறலாம். நாம் சார்ந்து வாழும் மின்சாரம், தொலைபேசி, தொலைக்காட்சி, இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், விமானம், கம்ப்யூட்டர் போன்ற அனைத்தும் தமிழனின் படைப்பா என்ன?

இதையெல்லாம் எந்தக் கேள்வியும் இன்றி ஏற்றுக்கொள்கின்ற நாம் மொழியில் மட்டும் ஏன் தூய்மையைக் கோரவேண்டும்? 'பஸ்'ஸை பேருந்து என்றும் 'செக்'கை காசோலை என்றும் கம்ப்யூட்டரை கணிணி என்று கணிப்பொறி என்றும் குழப்பமாக தமிழ்ப்படுத்த வேண்டிய அவசியம் என்ன ஏற்பட்டது? எந்த தமிழனாவது, "இன்று நான் பேருந்தில் வந்தேன்" என்று சொல்கிறானா?

முழுக் கட்டுரையும் வாசிக்க...

எங்கெல்லாம் தமிழ்?

திரு இராம.கி. அவர்களின் வளவு வலைப்பதிவிலிருந்து....

...இன்றைக்குத் தமிழ் என்பது பழம்பெருமை பேசுதற்கும், பழைய இலக்கியம், இலக்கணம், அண்மைக்காலக் கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், கொஞ்சம் அரசியல், ஏராளம் திரைப்படம் பற்றி அறிய மட்டுமே பயன்பட்டு வருவது ஒரு பெருங்குறை என்று அறிவீர்களா? நம்மை அறியாமலேயே அலுவல் என்பதற்கு ஆங்கிலமும், நுட்பவியல் என்பதற்கு ஆங்கிலமும், மற்றவற்றிற்குத் தமிழும் என ஆக்கிவைத்திருப்பது எவ்வளவு சரி? புதுப்புது அறிவுகளைக் கலைகளைத் தமிழில் சொல்லவில்லை என்றால் தமிழ் குறைபட்டுப் போகாதா? அப்புறம் தமிழில் என்ன இருக்கிறது என்ற நம் பிறங்கடைகள் கேட்க மாட்டார்களா?

நாம் சொல்லிப் பார்த்து அதன் மூலம் மொழி வளம் கூட்டவில்லை என்றால் நம் மொழி பயனில்லாத ஒன்று என்று இன்னும் ஒரு தலை முறையில் அழிந்து போகாதா? நாம் தமிழுக்கு என்ன செய்தோம்? நமக்குத் தெரிந்த செய்திகளை, அறிவைத் தமிழில் சொல்லிப் பார்க்கிறோமா? ஆங்கிலம் தெரியாத நம் மக்களுக்குப் புரிய வைக்கிறோமா? எல்லாவற்றிற்கும் ஆங்கிலமே புழங்கி நம் எதிர்காலத்தை நாமே போக்கிக் கொள்ளுகிறோமே, அது எதனால்?

முழுக் கட்டுரையும் வாசிக்க...

செவ்வாய், டிசம்பர் 16, 2003

என்னுயிர்த்தோழன் ரேடியோ - 2

என்னுயிர்த்தோழன் ரேடியோ - இதற்குமுன்

பாலிடெக்னிக்கில் படிக்கும்போது நூலகத்தில் இருந்து ரேடியோ பற்றிய விதம்விதமான புத்தகங்கள் படிக்கக் கிடைத்தன. ஓம்ஸ் அருணாசலம் என்பவரின் புத்தகங்கள் நாவலை விட சுவாரசியமாய் இருக்கும். இதில் சில மேலை நாட்டு ஆங்கிலப் புத்தகங்களும் அடக்கம். கைப்பட ஒரு ரேடியோ செய்தே ஆகவேண்டும் என்ற ஆசை நாளொரு மேனியாய் வளர்ந்து வந்தது. அதிலும் இந்த கிரிஸ்டல் ரேடியோ என்பதின் மேல் அப்படியொரு மோகம்! அதில் ஒரு புதுமை(!) கிரிஸ்டல் ரேடியோ இயங்க மின்சாரம் தேவையில்லை. வானொலி நிலையத்தில் இருந்து ஒலிபரப்பாகும் மின்காந்த அலைகளின் சக்தியிலேயே அவை வேலை செய்யும். அதை செய்ய என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்று எழுதி மளிகை சாமான் லிஸ்டைப் போல் எழுதி, அண்ணனிடம் திணித்து, பாடாய்ப் படுத்தி... அதிலும் 1940 களில் எழுதப்பட்ட அமெரிக்க புத்தகத்தைப் பார்த்து எழுதிய பாகங்கள், பொள்ளாச்சியில் எப்படிக் கிடைக்கும்? அவர் பேருந்து பராமரிக்கும் பணிமனையில் வேலை செய்ததால் உதிரிப்பாகங்கள் வாங்கும் கடைக்குப் போவார். 'அங்கு கேட்டால் கிடைக்கும், வாங்கிவா' என்று அழாத குறையாக நெருக்க, அவரும் அந்த லிஸ்டைக் கொண்டுபோய்... அதுக்கப்புறம் அந்த லிஸ்ட் ப்த்திப் பேச்சு எடுத்தாலே அடிவிழும் என்பது மாதிரி ஆகிவிட்டது.

அண்ணன் வேலை ஓரளவுக்கு நிரந்தரமான பிறகு முதலில் வாங்கிய பொருள் ரேடியோ! வீட்டுக்கு விருந்தாளி வந்த சந்தோஷம்! அப்போது ஒரு ரேடியோ வாங்க ஒருவர் தன் ஒரு மாதச் சம்பளத்தை செலவு செய்ய வேண்டியிருந்தது. இன்று இந்த அமெரிக்காவில் ஒரு ரேடியோ வாங்க ஒருவர் தன் ஒருவேளை சாப்பாட்டுக்கு ஆகும் பணத்தைச் செலவு செய்தால் போதும். காலமும், இடமும் வசதிகளை எப்படித்தான் மாற்றுகின்றன? ஆனாலும், இன்னும் இந்தியாவில் இதே சமன்பாடு வேலை செய்யாது. ஒரு 20-30 ரூபாயில் ஒருவேளை சாப்பிட்டுவிடலாம். ஆனால் ஒரு ரேடியோ வாங்க இன்னும் சில நூறுகள் செலவு செய்துதான் ஆகவேண்டும் (இலவசமாய் FMகாரர்கள் கொடுக்கிறார்களாமே, இன்னொரு விளம்பர வாய்ப்பு!)

ரேடியோ எஞ்சினீரிங்(?) மூன்றுமாத்தில் சொல்லி கொடுக்கிறோம் என்று வரும் விளம்பரங்களைப் பார்த்தால் ஆசை ஆசையாய் இருக்கும். எப்படியாவது வேலைக்குப் போக ஆரம்பித்ததும் அதற்குப் பணம் சேர்த்து அந்தப் பயிற்சிக்குப் போய் எல்லாம் கத்துக்கொள்ள வேண்டும், அதை வைத்து பிழைத்துக் கொள்ளலாம் என்றெல்லாம் மனம் கணக்குப் போட்டது. ஆனால் உண்மையில் வேலைக்குப் போக ஆரம்பித்தவுடன் அந்த வேலை பிடித்துபோய் ரேடியோ எஞ்சினீரிங் படிக்க முடியாமல் போய்விட்டது. பாவம் ரேடியோ உலகம், ஒரு நவீன மார்க்கோனியை இழந்துவிட்டது!

கோவையில் பகுதிநேரப் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது ஆள் வீட்டில் இருக்கிறதா என்பதை ரேடியோ சத்தம் கேட்கிறதா என்பதை வைத்துத் தெரிந்து கொள்ளலாம். இரவு ஒன்பது மணிக்கு கல்லூரியிலிருந்து வந்ததும் 15 நிமிட ஆங்கில செய்திகள். அந்த செய்திகளின் தமிழாக்கத்தை அடுத்த நாள் காலை ஏழேகாலுக்கு சரோஜ் நாராயண்ஸ்வாமி சொல்வார். ஆங்கிலம் புரிதலில் உள்ள குறைகளைத் திருத்திக் கொள்ள இது ஒரு தினசரி வாய்ப்பு. அதற்கு மேலும் விளக்கத்தை மதியச் சாப்பாட்டுக்குப் பிறகு அலுவலகத்தில் படிக்கும் இந்து பேப்பர் வழியாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. இந்த சுழல் பொது அறிவுக்கு மட்டுமல்லாமல், ஆங்கில எழுத்தறிவு, உச்சரிப்பு இரண்டுக்கும் பெரிய அளவில் கைகொடுத்தது. ஆங்கிலத்தில் லீவு லெட்டர் மட்டுமே எழுதத் தெரிந்த நிலையிலிருந்து பூனா வரை நேர்முகத் தேர்வுக்கு போகவும், சம்பளத்திற்குப் பேரம் பேசவும் தைரியம் வந்ததுக்கு ரேடியோவும், இந்து நாளிதழும் தான் காரணம்.

ரேடியோவைப் படுக்கைக்குப் பக்கத்தில் வைத்து இரவுகளில் வரும் இனிமையான பாடல்களைக் கேட்டுக்கொண்டே உறங்கிப்போவது ஒரு சுகானுபவம். பாட்டுக் கேட்க ஆரம்பித்தவுடன் தூக்கம் வந்துவிடும். நிறுத்திவிட்டுத் தூங்க முயற்சித்தால் தூக்கம் வராது. இது ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு. இதற்கு முடிவுகட்ட வேண்டி ஒரு நண்பனைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தேன். அவன் இயந்திரவியல் படிக்காமல், மின்னியல் படித்தவன். ரேடியோவுக்கு, 'சிறிது நேரத்துக்குப்பின் தானாக அணையும் ஒரு டைமர் செய்துதா' என்று அவனை நச்சரித்ததில் அவன் ஆளைப்பார்த்தாலே கிட்ட வராமல் ஓடிப்போகிற அளவுக்கு ஆனதுதான் மிச்சம்.

பட்டப் படிப்பை வெற்றிகரமாக (உண்மையிலேயே பெருவெற்றிதான்:-) முடிக்கப் பெரிதும் காரணமான நண்பர் அழகிரியும் ரேடியோப் பைத்தியமாய் இருந்ததால் மிகவும் வசதியாய்ப் போய்விட்டது. அவர் அறையில் தான் இருவரின் கூட்டுப்படிப்பு. என்ன பாடம் படித்தாலும் ரேடியோ மட்டும் உயிரோடு இருக்கவேண்டும். ரேடியோவை அணைத்துவிட்டுப் பாடம் படிக்கவே முடியாது. அதுவும் தனிமையில் என்றால் ரேடியோ நிகழ்ச்சிகள் முடிந்தபின் விழித்திருக்கவே முடியாது. அத்தோடு அன்றைய நாள் நிறைவு பெரும்.

திங்கள், டிசம்பர் 15, 2003

தொழில்நுட்பக் கல்விக்கு ஒரு ஊட்டம்

இன்றைய செய்தித்தாளில் படித்த நிறைவான செய்தி. AICTE என்ற இந்திய தொழில்நுட்பக் கல்விக்கான ஆட்சிக்குழு பொறியியல் பட்டத்திற்கான பாடத்திட்டத்தில் வடிவமைப்பு மற்றும் புதுமையாக்கல் (design and innovation) கோட்பாடுகளைப் புகுத்தப் போகிறது. 'பொறியியலின் சாரம் வடிவமைப்பே' (Design is the essence of Engineering) என்பதை என்று நம் கல்வியாளர்கள் புரிந்துகொள்கிறார்களோ அன்றுதான் நம் பொறியாளர்கள் முழுமை பெறுகிறார்கள்.

மனிதனால் தயாரிக்கப்படும் செயற்கைப் பொருட்களை சிந்தித்து உருவாக்குபவரிடமிருந்து, பயன்பெறுவர் வரை இருக்கும் அடுக்குகளை முக்கியமாக பின் வருமாறு வகைப்படுத்தலாம். உதாரணமாய் ஒரு வானொலிப் பெட்டியை எடுத்துக் கொள்வோம். அதன் நிலைகள்:

1. அடைப்படை ஆராய்ச்சி/கண்டுபிடிப்பு (Invention):அதன் அடிப்படை அறிவியல் கருத்தான மின்காந்த அலைகளின்மேல் ஒலி அலைகளை ஏற்றி இறக்குதல் ஒரு விஞ்ஞானியால் (மார்க்கோனி என்று கொள்வோம்) கண்டுபிடிக்கப்படுதல். அதற்கு என்ன மாதிரியான அலைவரிசைகள் ஏற்றவை, எத்தகைய மின்சுற்றுகள் தேவை போன்ற விஷயங்கள்.

2. வடிவமைத்தல் (Product design): என்ன மாதிரிக் கருவி யாருக்குப் பிடிக்கும், என்ன விலைக்குப் போகும் என்பதிலிருந்து, எந்த மாதிரி திருகு குமிழ் எளிதில் உடையாது, எந்தப் பிளாஸ்டிக் வார்ப்புக்கு எளியது என்பது வரை எண்ணற்ற சிறுசிறு விஷயங்களை அலசி ஆராய்ந்து ஒரு ஸ்தூல வடிவம் கொடுத்தல்.

3. தயாரிப்பு முறைகள் தீர்மானித்தல் (Process Engineering): எத்தகைய ஆலையில் எவ்வாறான இயந்திரங்கள்/கருவிகள்/முறைகள் கொண்டு மேலே சொன்னவாறு வடிவமைக்கப்பட்ட வானொலிப் பெட்டியைச் செய்யலாம் என்பதை தீர்மானித்தல். என்னென்ன பாகங்களைத் தானே செய்யலாம், எதை வெளியில் வாங்கலாம் என்பதுபோன்ற நிறைய முடிவுகள் எடுத்தல்.

4. இயந்திரம்/கருவிகள் அமைத்தல் (Tooling): தயாரிப்பு முறைத்திட்டப்படி தேவைப்படும் புதிய அச்சுகள்/கருவிகள்/பிரத்தியேகமான இயந்திரங்கள் ஆகிவற்றை வடிவமைத்து, உருவாக்கி, சோதித்து, தயாரிப்பு ஆலைகளுக்கு அளித்தல்.

5. பொருள் தயாரித்தல் (Manufacturing): ஒரு ஆலையை நிறுவி, ஆட்கள் அமர்த்தி, இயந்திரங்கள்/கருவிகள் அமைத்து, கொள்முதல் போட்டு மூலப்பொருட்களை வாங்கி, விறபனைக்குத் தாயாராக வானொலிப் பெட்டிகளை தயாரித்தல்

6. சந்தைப்படுத்தல், விற்பனை, அதற்குப் பிந்திய சேவை (Marketing): அவ்வாறு தயாரான வானொலிப் பெட்டிகளை சரியான விளம்பரம் செய்து, சில்லறை வியாபாரிகளை நியமித்து, சரக்கு வினியோகிக்கத் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்தி விறபனை செய்தல். வாங்கியோருக்கு ஏற்படும் குறைகளைக் களைய சேவை மையங்களை ஏற்படுத்தி நிர்வகித்தல்.

இதில் முதல் நிலை மட்டுமே அறிவியல். இரண்டாம் நிலையிலிருந்து அறிவியல்->தொழில்நுட்பம்->பொறியியல் என்று பரிணாமிக்கிறது. இத்தகைய ஒவ்வொரு நிலையிலும் இந்திய மூளை மற்றும் கரங்களின் பங்கு எவ்வளவு என்று ஆராய்ந்தால், கீழ்க்கண்டவாறு அமைவதைக் காணலாம்.


இந்தியாவில் விற்பனையாகும் பொருட்கள் கிட்டத்தட்ட 100% இந்தியர்களாலேயே சந்தைப்படுத்தல்/விற்பனை/சேவை செய்யப்படுகிறன. அவற்றில் 95% இந்தியர்களால் தயாரிக்கப்பட்டவைதான். அவற்றைத் தயாரிக்க பயன்பட்ட கருவிகளில் ஒரு 75% இந்தியாவில் தயாரானவையாக இருக்கும். அந்தக் கருவிகளுக்கான திட்டமிடுதல் ஒரு 50% இந்தியர்கள் பங்கேற்றதாக இருக்கலாம். ஆனால், இந்தியர்களால் வடிவமைக்கப்பட்ட பொருட்கள்? அவை 25% இருந்தாலே நாம் இன்று எங்கோ போயிருப்போம். என் தாழ்மையான அனுமானம், நானும் ஒரு வடிவமைப்புப் பொறியாளன் என்ற உரிமையில் சொல்கிறேன், இதில் இந்தியப் பொறியாளர்களின் பங்கு 5-10% என்ற அளவிலேதான் இருக்கும். உலகத் தரத்துக்கு பொருட்களை வடிவமைக்க வேண்டிய ஒரு நிறுவனத்தின் துறைத்தலைமைப் பொறுப்பில் இருந்தபோது, எத்தனையோ இளம் பொறியாளர்களை நேர்காணல் செய்தவன் என்ற முறையில் நம் இந்த பலவீனத்தை நான் நன்றாக உணர்ந்திருக்கிறேன். இதை என்று நம் கல்வியாளர்களும், ஆசிரியர்களும் உணர்கிறார்களோ அன்று தான் இந்தியாவுக்கு விடிவுகாலம். அழைப்பு மையங்களாலும், மென்பொருள் சேவையாளர்களாலும் இன்று நாம் பெறுவது போல் தொன்றும் இந்த முன்னேற்றம் ஒரு நீர்க்குமிழி, நம் சொந்த பூமிக்கு எந்த விதத்திலும் பெரிய நீண்டகாலப் பயன் அளிக்காத ஒன்று என்பது என் கருத்து.

காலங்காலமாக இந்திய பொறியியல் அன்னியத் தொழில்நுட்பத்தை பெரிதும் சார்ந்தே இருந்திருக்கிறது. சுதந்திர இந்தியாவின் தொழிற்புரட்சி, மேற்சொன்ன நிலைகளில் ஐந்தாம் நிலையில் இருந்து தொடங்கியது. அதை மேலேஎடுத்துச் சென்று முதல் நிலைக்குக் கொண்டு வருவது நம் இன்றைய கடமை.

கம்பியில்லா வலைப்பின்னல் இணைப்பு (Wireless Networking) - 5

இந்தக் கட்டுரைத் தொடரின் முந்தைய பாகங்களை தனியான வலைப்பக்கமாக இங்கு காணலாம்.

2.3 ஒரு இல்ல வலைப்பின்னலின் மாதிரி

என் இல்லத்தில் நான் அமைத்திருக்கும் சிறு வலைப்பின்னலை வைத்து ஒரு இல்ல வலைப்பின்னலின் அடிப்படியான சில விஷயங்களை விளக்க முற்படுகிறேன். கீழே உள்ள வரைபடம் இதன் அமைப்பை விளக்குகிறது. படத்திற்கும் மேலாக எதுவும் சொல்லிக் குழப்ப வேண்டியதில்லை. இருந்தும் சில குறிப்பிடத்தக்க அம்சங்களை மட்டும் பார்க்கலாம்.


இங்கு முதலில் DSL மொடெம்-மிலிருந்து ரவுட்டருக்கான கம்பிவழி இணைப்பு. இங்கு அமெரிக்காவில் சேவை அளிப்பவரே பெரும்பாலும் மோடெம் (கேபிள் அல்லது DSL) கொடுத்து விடுகிறார்கள். இவை RJ45 என்று சொல்லக்கூடிய வலைப்பின்னல் வாயில், USB வாயில், ஆகிய இரண்டும் கொண்டு வருகின்றன. ஆனாலும் நான் பயன்படுத்தும் வகை ரவுட்டர் RJ45 வாயில் வழியாக மட்டுமே மொடெம்-முடன் இணைக்கும் விதமாய் உள்ளது. இந்திய நண்பர் ஒருவர் சொன்னதைப் பார்க்கையில் இந்தியாவில் சில DSL சேவை அளிப்போர் வெறும் USB வழியாக மட்டும் இணைக்கும் வசதி கொண்ட மோடெம் தருகிறார்கள் எனத் தெரிகிறது. அப்படியிருந்தால் மட்டும் இத்தகைய ரவுட்டருடன் இணைப்பதில் ஒரு பிரச்னை இருக்கும்.

பிறகு ரவுட்டரிலிருந்து விருப்பம், வசதி, இடம் ஆகியவற்றிற்கேற்ப கம்பிவழியாகவோ கம்பியில்லா முறையிலோ கனினிகளைப் பின்னிக்கொள்ள வேண்டியதுதான். கம்பிவழியாயின் மீண்டும் அதே RJ45 கம்பிகள் தேவைப்படும். இந்த வகை இணைப்புகள் சாதாரணமாக 10/100 Mbps வேகத்தில் தரவுப் பரிமாற்றம் செய்ய இயன்றவை. சரியான கம்பிகளை அமைத்தால், 100 Mbps வேகம் கிட்டும். இது இன்னும் கம்பியில்லா முறைகள் எட்டாத வேகம். எனவே வாய்ப்பு உள்ள இடங்களில், பல கணினிகள் பங்குபெறும் வலைப்பின்னல்களில், கம்பிவழி இணைப்பை நாடுதல் கூடுதல் அனுகூலமே.

ஏற்கனவே நாம் 2.2 அடாப்டர் வகைகள் தலைப்பில் கண்ட விவரத்தைக் கொண்டு நமக்குத் தேவையான அடாப்டர்களை கணினியில் பொருத்தி, அவற்றுடன் வந்துள்ள மென்பொருளை நிறுவினால், வலைப்பின்னல் இயங்குவதற்குத் தயார். இதற்கு மேல் இன்னும் ரவுட்டரை அமைப்பித்தல் என்னும் ஒரு படி தாண்ட வேண்டியிருந்தாலும், பெரும்பாலான ரவுட்டர்/அடாப்டர்கள் பொருத்தினதும் இயங்கும் வண்ணம் அமைப்பிக்கப்பட்டு வருகின்றன. அமைப்பிக்கும் வழிமுறைகள் அந்தந்தக் கருவிகளுக்கான கையேட்டில் விளக்கப்பட்டிருக்கும்.

இதுபோன்ற கருவிகளை அமைத்து இணைப்புக் கொடுத்தாலே பெரும்பாலும் வலைப்பின்னல் இயங்கத் தொடங்கிவிடும் என்றாலும், மென்பொருள் நிறுவுவது, வலைப்பின்னலை அன்னியர்களிடமிருந்து பாதுகாப்பது போன்ற விஷயங்களில் கவனிக்கத்தக்க அம்சங்களை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

பாகம் 2 முற்றிற்று

கட்டுரை மேலும் தொடரும்

ஞாயிறு, டிசம்பர் 14, 2003

சதாம் உசேன் பிடிபட்டார்

ஒரு வகையில் நிம்மதியளிக்கக்கூடிய நிகழ்வு. அமெரிக்காவின் சட்டாம்பிள்ளைத் தனத்தைப்பற்றி இப்போது பேசிப் பயனில்லை. இராக்கில் இன்று அவர்கள் ராஜ்ஜியம் நடக்கிறது. அது கொஞ்சநாள் உருப்படியாக நடந்து திரும்ப அமைதி வரவேண்டுமென்றால் சதாம் பிடிபட்டே ஆகவேண்டும். இதன் மூலம் வன்முறைகள் குறைய வாய்ப்பு இருக்கிறது. இராக்கியர்களுக்கு ஆட்சி மாற்றம் விரைவுபட வாய்ப்பிருக்கிறது. நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை.

இன்னொரு விதத்தில் அமெரிக்காவாலேயே சதாம் உசைனையும், ஒசாமாவையும் பிடிக்கமுடியவில்லை, நம்ம போலீஸ் எங்கே வீரப்பனைப் பிடிக்கிறது என்று கிண்டல் செய்ய முடியாமல் போய்விட்டது. அவர்களுக்கும் வேறுவழியில்லை, இனி பேசாமல் மான்கறி, ஆத்துக் குளியல் என்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல் தங்கள் வீரத்தைக் காண்பித்து வீரப்பனையும் அடக்குவார்கள் என்று எதிர்ப்பார்ப்போம்.

Just some pictures

Outside our home today   Outside our home today


வெள்ளி, டிசம்பர் 12, 2003

இருவர்

தமிழ் பத்திரிகைகள், செய்தித்தாள்கள் இவர்கள் இருவருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டும். இந்த இரு பெண்களைச் சுற்றி எழுதப்பட்ட, எழுதப்படாத மர்மங்கள் எத்தனையோ இருந்துவிட்டுப் போகட்டும். அதனால் தமிழ்கூறும் நல்லுலகுக்கு ஏதாவது பிரயோசனம் உண்டா? இவர்களைப் பார்த்தாலும் ஒரேயடியாக 'அய்யோ பாவம்' என்றும் சொல்ல முடியவில்லை. அடுத்தவர் வாழ்வின் அவலங்களை உள்நுழைந்து பார்த்து சுகப்படும் மனோபாவம் தான் இரண்டு நிகழ்வுகளும் பெறும் முக்கியத்துவத்துக்குக் காரணம். இரண்டும் பெரிய மனிதர் அத்துமீறல்கள் சம்பந்தப்பட்டவை. இரண்டுக்கும் கண்ணுக்குத்தெரியாத காரணங்கள் இருக்கும். நான் இவர்களைப் பற்றிய செய்திகளைப் படிப்பதை விட்டு பல நாட்கள் ஆகின்றன. நீங்கள்?

என்னுயிர்த்தோழன் ரேடியோ

இலங்க ஒலிபரப்புக் கூட்டுத்தாபன, தமிழ்ச்சேவை-2ல் காலையில் ஏழு மணிக்கு வரும் 'பொங்கும் பூம்புனல்' தான் அப்போதெல்லாம் எங்களுக்கு சுப்ரபாதம். அந்த 'ஒளிபிறந்த போது, மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா... ' என்ற பாடலின் இசை தூங்கிக் களைத்துப் போன உடலுக்கும் மனத்துக்கும் அப்படியொரு புத்துணர்வு ஊட்டும். எங்க உள்வீட்டுக்கும் (பெட்ரூம்) சீனிவாஸ் மாமா வீட்டுக்கும் இடையே ஒரு சுவர், அனால் அதில் விட்டத்துக்கும் மேல் ஒரு மூங்கில் தப்பை(சட்டம்)யால் ஆன டயமண்ட் வடிவ தடுப்புத்தான்.

சீனிவாஸ் மாமா கரண்ட் ஆபீஸில் வேலை பார்த்தார்; அவர் வீட்டில் ரேடியோ எல்லாம் இருந்தது. அங்கு பேசுவதெல்லாம் இங்கு கேக்கும். என்ன பேசுகிறார்கள் என்றெல்லாம் அறிந்து கொள்ள ஒரு ஆர்வமும் இருந்ததில்லை. ஆனால் பாட்டு மட்டும் பைசா செலவில்லாமல் கேட்டுக்கிட்டே இருப்போம். கடிகாரமும் இல்லாமல் என் அண்ணனுக்கும் எனக்கும் பல்லு விளக்குவதிலிருந்து பள்ளிக்குப் போவது வரை ரேடியோ தான் கடிகாரம், ரேடியோதான் அம்மா. நாலு மணிக்கெல்லாம் அம்மா எழுந்து வேலைக்குப் போயிருப்பார்கள். பள்ளிக்குப் போகும் முன் குளிக்கும் விஷயத்தில் நாங்கள் இங்குள்ள அமெரிக்கக் குழந்தைகளுக்கு முன்னோடிகள்;-)

சீனிவாஸ் மாமா வீடுதாண்டி, எங்க பெரியப்பா வீட்டிலும் ரெண்டு அக்காமார் இருந்ததால் ரேடியோ இடைவிடாது ஒலிக்கும். ஒலிச்சித்திரங்கள் ஒரு மணிநேரம் ஆளைக் கட்டிப்போடும். அவரவர் கற்பனைத் திறனுக்கேற்ப ஒரு ஈஸ்ட்மென் கலர் படமே கண்ணுக்குள் தெரியும். என்னிக்காவது ஒலிச்சித்திரத்துக்குப் பதில் படப்பாட்டுப் போட்டானென்றால் அக்காக்கள் குஷியாவர், எங்களுக்கோ ஏமாற்றம்!

இது எல்லாத்தையும் விட எனக்கு மிகவும் பிடித்தது, கடைக்கார ஆத்தா வீட்டில் ஒரு மாமா இருப்பார்; அவர் ரேடியோவில் பாட்டுக்கேட்பது தான். அதில் விஷயம் என்னன்னா, அவர் ரேடியோவை அப்பப்ப பிச்சு வச்சு வேடிக்கை காட்டுவார். இங்கதான் ஐசக் நியூட்டனுக்குப் பேரனாச்சே, ரேடியோவை உள்ளுக்குள் பார்க்கும் வாய்ப்பை விடமுடியுமா. அங்கேயே நிப்பேன். அவர் அப்பப்ப திருப்புளியால் திருகுவார், தட்டுவார். திடீர்னு ரேடியோவுக்கு லீவு விட்டுவிடுவார்! எனக்கு அங்கு மட்டுமே கிடைத்த ஒரு தரிசனம், ரேடியோப்பெட்டிக்குள் சிகப்புக் கலரில் லைட்டெல்லாம் போட்டுக்கொண்டு ஒரு சிறு நகரம் போல் பெட்டி பெட்டியாய் இருக்குமே, அந்த அதிசயக் காட்சிதான். மெதுவாக எரியும் வால்வு ரேடியோ ஒரு உயிருள்ள வஸ்துவாகவே தெரிந்தது. முதலில் சின்ன சைசில் TMSசும் சுசிலாவும் (அதென்ன, எம்ஜியார் பாடினாலும், சிவாஜி பாடினாலும் ஏன் அவங்க பேரச்சொல்லாம இந்த ஆளு பேரச் சொல்றாங்க?) அந்த கலர் லைட்டு எரியும் உலகத்தில் வசிக்கிறார்கள் என்றே நெடுநாள் நம்பினேன். ரயில் தண்டவாளத்தில் காந்தம் செய்ய எண்ணின அந்த நாட்களில்!

தோழமை தொடரும்...

வியாழன், டிசம்பர் 11, 2003

கெட்டிக்காரனும் பொய்யும் புளுகும்

நேத்து ஒரு பதிவுக்கு தலைப்புக் கொடுக்கவேண்டி யோசித்தபோது, 'ஆணோ பொண்ணோ குப்பாயி, ரெண்டுல ஒண்ணு தப்பாது' என்ற வாசகம் ஞாபகத்துக்கு வந்தது. அதோடு கோர்வையா முன்பு கேட்ட இன்னொரு கதையும் ஞாபகம் வந்தது. அதை இன்னிக்கு எடுத்து உடறேன்.

ஒரு ஊர்லெ ஒரு பெரிய பணக்காரர் (பண்ணையார்னு போட்டதை மாத்திட்டேன், பண்ணையார் என் கதை எல்லாத்திலயும் வர்றார், விடுகதையானாலும்! கெட் லாஸ்ட் பண்ணையார்!) இருந்தார். அவர் சம்சாரம் மாசமா இருந்தாங்க. அவருக்கு, பொறக்கப்போறது ஆணா பொண்ணான்னு தெரிஞ்சுக்கணும்னு ஆசை. அப்ப ஸ்கேன் எல்லாம் இல்லை. பக்கத்து ஊர்லே பேர் போன ஜோசியர் ஒருத்தர் இருந்தார். வண்டிவெச்சு ஆளனுப்பி அவரைக் கூட்டீட்டு வந்தார். வந்தவர் கைரேகை, மை, அது இதுன்னு என்னென்னமோ போட்டுப் பாத்துட்டு, 'அய்யாவுக்கு ராஜா மாதிரி பையன் தான் பொறக்கும்'னு அடிச்சுச் சொல்லிட்டார்.

அய்யாவுக்கு செரியான சந்தோசம். அவருக்குத் தடபுடலா விருந்து எல்லாம் செஞ்சு போட்டு, எக்கச் சக்கமாப் பணம், பவுன் எல்லாம் குடுத்து வண்டியிலே கொண்டுபோய் விட்டுட்டு வர வெச்சார்.

சிங்கக்குட்டி பெத்துக்குடுக்கற பொண்டாட்டியை தாங்கு தாங்குன்னு தாங்கினார் அய்யா. அப்பறம் குழந்தையும் பொறந்துது. ஜோசியர் குட்டும் உடைஞ்சுது. பொறந்துது பொட்டப்புள்ளை!

'கூப்புடுறா அந்த ஜோசியனை'ன்னு சத்தம் போட்டார். ஆள் பறந்து போய் ஜோசியரைக் கூட்டீட்டு வந்தாச்சு. 'என்னய்யா நீ ஜோசியம் பாத்த லட்சணம்? பையன் பொறப்பான்னு அடிச்சு சொன்னே, இப்ப என்ன ஆச்சு பாத்தியா? எனக்குப் பொண்ணு பொறந்ததனால ஒண்ணும் கெட்டுபோகலெ, ஆனா இனிமே இந்த ஜில்லாவிலயே நீ ஜோசியம் பாக்கறேன்னு சொல்லி வாயைத் தொறக்கக் கூடாது' அப்பிடின்னு தாட் பூட்டுன்னு கத்துனார்.

'அய்யா கொஞ்சம் இருங்க. நான் பொய் சொன்னது வாஸ்தவமுங்க. ஆனா என் ஜோசியத்தை குறை சொன்னா அது ஆகாதுங்க. பொண்ணு தான் பொறக்கும்னு ஜோசியம் பாத்த அன்னிக்கே எனக்குத் தெரியுமுங்க. ஆனா, அதை உங்க கிட்ட சொல்லி என்ன ஆகப்போகுதுங்க? பையன்னு சொன்னாலாவது, அந்த சந்தோசத்தில நீங்க உங்க சம்சாரத்தை நல்லாக் கவனிச்சுக்குவீங்க, மாசமா இருக்கறவங்களை நல்லப் பாத்துக்கறதுக்காகவாவது பொய்சொல்லலாமேன்னுட்டுத் தான் அப்பிடிச் சொன்னேன்'ன்னு அசராமச் சொன்னார் நம்மாள், ஜோசியர்.

'அதெல்லாம் சரித்தான், இதை எப்பிடி நான் நம்பறது? நீ இப்ப என்கிட்ட சமாளிக்கறதுக்காக இப்படிச் சொல்றேன்னு நான் சொல்றேன். அதுக்கென்ன சொல்லப் போறே?'ன்னு அய்யா கேட்டார்.

'அய்யா, எங்கூட வாங்க'ன்னு சொல்லி ஜோசியர் எந்திரிச்சு, 'எரவாரத்திலே கையைவிட்டு அங்க ஒரு காயிதம் கிடக்கும், அதை எடுங்க' அப்பிடின்னார். அய்யா அதேமாதிரி ஓரு இடுக்கிலிருந்து ஒரு சுருண்டுகிடந்த பழைய காயிதத்தை எடுத்தார். 'அய்யா இதில் என்ன எழுதியிருக்குன்னு படீங்க'ன்னு சொன்னார். 'பெண்'-படிச்சார் அய்யா. இந்த மாதிரி கேள்வி வரும்னு அன்னிக்கே எனக்குத் தெரியும். அதுனாலதான், ஜோசியப்படி நான் கண்ட உண்மையான பலனை இங்க எழுதி வெச்சுட்டுப் போனேன்', அப்பிடின்னார் நம்மாளு. 'இப்ப ஒத்துக்கிறீங்களா என் ஜோசியத்தோட செல்வாக்கை?'

'அட, ஆமாய்யா, நீ உம்மையிலேயே பெரிய ஜோசியர் தான். அதுமட்டுமில்ல, பெரிய மனுஷனும் கூட. எல்லாரும் நல்லா இருக்கட்டும்னுதான் மாத்திச் சொன்னேன்னு நான் ஒத்துக்கறேன்'ன்னுட்டு, இன்னும் கொஞ்சம் பணம், நகை எல்லாம் குடுத்து வண்டியிலயே கொண்டுபோய்விட்டுட்டு வரச்சொன்னார்.

மறுபடியும் பணம், நகையெல்லாம் சன்மானம் வாங்கிட்டு வந்த ஜோசியர்கிட்ட அவர் சம்சாரம் கேட்டுது, 'பையன் பொறந்திருந்தா என்ன பண்ணியிருப்பீங்க?'ன்னு. நம்மாளு சிரிச்சுக்கிட்டே சொன்னார், 'அந்த எரவாரத்தில ஓட்டு சந்தில நான் வெச்சிட்டு வந்த காகிதம் யாருக்குத் தெரியப் போகுது, பொங்கலுக்கு வெள்ளையடிக்கறப்ப குப்பையோடு குப்பையாப் போயிருக்கும்'னு.

அ.சொ.பொ.
எரவாரம்: ஓட்டு வீடுகளில் திண்ணைக்கு மேல் கைக்கைட்டும் இடத்தில் அகப்படும் இடுக்கு.

செவ்வாய், டிசம்பர் 09, 2003

ஆணோ பெண்ணோ குப்பாயி, ரெண்டுல ஒண்ணு தப்பாது

தலைப்புக்கு அர்த்தம் எல்லாம் தேடக்கூடாது. அது ஒரு பாட்டி கதையில் வரும் வசனம். ஒருத்தர் பேரைப் பாத்ததுமே அவங்க ஆணா பெண்ணான்னு எப்படித் தெரிஞ்சுக்கறது? அதுவும் முக்கியமா வேற்று நாட்டுக்காரர்களோடு, கடிதம் அல்லது மின்னஞ்சல் வழியாகப் பழகும்போது இது இன்னும் சிக்கல். நானே நம்ம வலைப்பூ மதியை கொஞ்ச நாள் ஆம்பளைன்னு நினைச்சிட்டிருந்தேன். அதுக்கு காரணம் என்னன்னு மரத்தடியில் இப்படிச் சொன்னேன்:

என் பெயர் A. காசிலிங்கம். அப்படித்தான் நம்ம ஊருல இருந்துச்சு. அமெரிக்கா வந்தப்புறம் நம் தமிழ் மக்களூக்கு எது மாறுதோ இல்லியோ பேர் மாறிப்போகும். ஒரு எழுத்தில ஒளிஞ்சுட்டிருக்கிற அப்பா பேருக்கெல்லாம் உயிர் வந்துரும். பேரெல்லாம் பார்த்தா ஒவ்வொருத்தரும் ஏதோ அறிஞர் பெருமக்கள் மாதிரி ரொம்ப மரியாதையா ஆயிடும். அப்படி 2 வருஷம் முன்னால் நான் காசிலிங்கம் ஆறுமுகம் ஆனேன். இந்த வெள்ளக்காரங்களுக்கு வசதியா இப்பக் காசி யோட நிறுத்திட்டேன்.

இதே லாஜிக்கில யோசிச்சு மதி கந்தசாமியும் நம்பள மாதிரி K. மதியழகன்னு ஒரு மாசமா நினச்சிட்டு இருந்தேன். அப்புறம்தான் அது சந்திரமதின்னு தெரிஞ்சுது. அட உண்மைங்க, நம்புங்க!


முதல் நிலை ஜெர்மன் (அது சிலருக்கு ஏன் 'யேர்மன்' ஆகியிருக்கும்ங்கிறதுக்கும் என்கிட்ட ஒரு கதை இருக்கு, அது இன்னொரு நாள்:-) மொழி படிக்கிறப்ப வாத்தியார் சொல்லிக் கொடுத்த ஒரு ஃபார்முலா எனக்கு கிட்டத்தட்ட வொர்க்-அவுட் ஆகியிருக்கு. அது ரொம்ப சிம்பிள். அதாவது பெண்களின் பெயர்கள் எல்லாம் உயிர்மெய் எழுத்தில் தான் பெரும்பாலும் முடியும். ஆங்கிலம்/ஜெர்மன் மாதிரி ரோமன்/லத்தீன் வழி மொழியா இருந்தா, உயிரெழுத்தில் (vowel) முடியும். ஆண்கள் பெயர்கள் பெரும்பாலும் மெய்யெழுத்தில்தான் (Consonant) முடியும். ரெண்டுக்குமே விதிவிலக்கு உண்டுன்னாலும், பெண்கள் பெயருக்கு விதிவிலக்கு மிகக் குறைச்சல்.

ஒரு சோதனை, நம்ம வலைப்பதிவர்களில் பெண்கள் யார் யார்?

அருணா, சந்திரா, சந்திரலேகா, சந்திரவதனா, மதி, நளாயினி, பவித்ரா, சுபா, உதயச்செல்வி. அட, அத்தனை பேரும் ஃபார்முலாப் படிதான் இருக்கு.

ஆண் பதிவர்களில், நிறையப் பேர் உதைக்குது. ஆனால் இந்த ரூலை எங்க அலுவலகத்தில் உள்ள வெள்ளைக்காரங்களுக்கு சோதிச்சுப் பாத்தா, ஆண்கள் பெண்கள் இருவரிலுமே 90% வெற்றி. ஒண்ணுமே தெரியாம இருக்கிறதுக்கு இது தப்பில்லைன்னு தோணுது. ஏதோ எங்க வாத்தியார் சொன்னதைப் பகிர்ந்துக்கிட்டேன். இதை நம்பி எதாவது லெட்டர் கிட்டர் போட்டு மேட்டர் வேற மாதிரியாச்சுன்னா நான் பொறுப்பில்லை, சொல்லிட்டேன், ஆமா!

நண்பர் பாலாஜிக்கு ஒரு விளக்கம்

நண்பர் பாலாஜிக்கு ஒரு விளக்கம்

நண்பர் பாஸ்டன் பாலாஜி இந்த வாரம் வலைப்பூ வாத்தியாராகி சுவையாகக் கலக்குகிறார். இன்று என் வலைப்பதிவு பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். நன்றி பாலாஜி!

இவர் கேட்டிருக்கும் சில கேள்விகள் எனக்கு நானே கேட்டுக் கொண்ட கேள்விகள். அதற்கு ஓரளவு நானே விளக்கமும் தந்திருந்தேன். இருந்தாலும் புதிதாய் பார்ப்பவர்களுக்கு அதே கேள்விகள் தோன்றலாம், எனவே அவற்றை மீள்பார்வை செய்ய இது ஒரு வாய்ப்பு என்று நினைக்கிறேன்.

ஆனால் அவர் கேட்டிருக்கும் வேறுபல கேள்விகள் கொஞ்சம் கத்துக்குட்டித் தனமாகவும் தெரிகிறது, என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும்:-(

முதலில் பாலாஜியின் கருத்துகள்:

காசி புரிந்த மொழியில் (தமிழ்தானுங்க :) புதிய விஷயங்களை கொடுத்தாலும் ஆங்காங்கே வரும் வார்த்தைகளுக்கு க்ரியாவோ, உலகத் தமிழ் ஆராய்ச்சி புத்தகமோ தேவைப்படுது.

அவருடைய பதிவில் இருந்து ஒரு வரி....
>>----------
மேலும், நான் அறிந்த வரை, தொலைதொடர்புத் துறையின் கடைத்தள தொழில்நுட்பப் பணியாளர்களின் அக்கறையின்மை கம்பிவழித் தொடர்பில் இறுதிக்காதப் பிழைகள் பெருகுவதற்கு ஒரு முக்கியக் காரணம். அவர்களை மாற்றுவது என்ற கடினமான காரியத்தைவிட, வைஃபை, மற்றும் CDMA செல்பேசிகள் மூலம் இந்தக் குறிப்பிட்ட குறைபாட்டை சரி செய்வது எளிது என்று நினைக்கிறேன்.


மேலே கொடுத்திருப்பதில் எனக்குத் தெரிந்து அரிதான தமிழ்ச் சொற்கள் இரண்டே இரண்டுதான். அவை:
1. கடைத்தள = கடை + தள. நான் குறிப்பிடுவது லைன்மேன் என்று பொதுவாக அழைக்கப்படும் Field worker, நம் இல்லங்களுக்கு தொலைதொடர்புத்துறையிலிருந்து வரும் ஒரே நபர். கடைநிலை ஊழியர் என்று ஒரு சொல் உண்டு. அது ஒருமாதிரி பியூன்/அட்டெண்டர் மாதிரியான வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதால், அதையே இங்கு பயன்படுத்தாமல், இன்னும் கொஞ்சம் பரவலாக பொருள் தரக்கூடிய இந்தச் சொல்லைப் பயன் படுத்தினேன். பயன்பாடு புதிதாக இருந்திருக்கலாம். ஆனால் கடை, தளம் இரண்டும் புதியன அல்ல.
2. இறுதிக்காத = இறுதி + காத. last-mile என்பதை இப்படிக் குறித்தேன். மைல் என்பதை அப்படியே பயன்படுத்தாமல், தூரத்தைக் குறிக்கும் 'காதம்' என்ற தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தினேன். அது ஒரு விருப்பத் தேர்வு. இதுதான் சரியென்று வாதிட முடியாது. தவறென்றும் வாதிட முடியாது என்று நினைக்கிறேன்.

இந்த இரண்டே இரண்டு சொற்கள், அதுவும் பிரித்துப் படித்தால் புரிந்து கொள்ளக்கூடிய சொற்கள், இதற்கு, என்னவோ ஒரு பெயர் சொல்லியிருக்கிறீர்களே 'அந்த அகராதிகள்' வேண்டுமென்றால், என்னால் உங்களைப் பார்த்துப் பரிதாபப்படத்தான் முடியும் பாலாஜியாரே:-)) உண்மையில் அதுமாதிரியெல்லாம் அகராதிகள் இருக்கின்றனவா என்றே எனக்குத் தெரியவில்லை!

மேலும் அவர் குறிப்பிட்டது:

கம்பியில்லா வலைப்பின்னல் இணைப்பு பற்றி விரிவாக எழுதியுள்ளார். இதனால் எவ்வளவு
தமிழருக்குப் பயன்? அவரின் உழைப்பும், தமிழில் விஞ்ஞான் தகவல்களை பதிவதும்
மிகவும் பாராட்டதக்கது. ஆனால், ஒருவர் wi-fi வேண்டும் என்றவுடன் கூகிலில்
தேடிக் கண்டுபிடிப்பார் அல்லது நேரடியாக அந்தக் கருவியுடன் வந்திருக்கும்
கையேட்டைப் பார்த்து தெரிந்து கொள்வார். எவர் கஷ்டப்பட்டு இங்கு வந்து
படிப்பார்?

நானும் அவர் எழுதியது குறிப்பிடத் தகுந்தது, பாராட்டப்பட வேண்டியது என்று
ஊக்குவித்து மட்டும் சென்றிருக்கலாம். ஆனால், மனதில் குதித்த சந்தேகத்தை
இங்கு தெளிவு செய்யலாமே என்றுதான்....


நன்றி பாலாஜி, சந்தேகத்தை உள்ளுக்குள் பூட்டாமல் கேட்டதற்கு. இதற்கு என் விளக்கம் இதோ:

>>ஒருவர் wi-fi வேண்டும் என்றவுடன் கூகிலில் தேடிக் கண்டுபிடிப்பார்

WiFi என்றால் என்னவென்று தெரிந்தவர்தானே தேடிக் கண்டு பிடிப்பார். அதுவென்றாலே என்ன வென்று தெரியாதவர்? இன்றைக்கு வைஃபை வளர்ந்து வரும் தொழில்நுட்பம். இந்தியாவில் டிஎஸ்எல் சேவை வழங்குபவர்களிடமே இதுபற்றிய முழு விவரங்களும் கிடைப்பதில்லை என்பதை தன் பதிவில் பத்ரியும் குறிப்பிட்டிருந்தார். இது அமெரிக்காவில் இருக்கும் மென்பொருள் துறையில் பணிபுரியும் ஒரு தமிழருக்காக எழுதப்பட்டதல்ல. அவர்களுக்கு ஸ்னேகாவும், பச்சை அட்டையும், வார இறுதிக்கு யார் ஆன் கால் என்பதும், இந்த டிசம்பரில் எத்தனை நாள் தன் வெள்ளைக்கார அதிகாரி விடுப்புக் கொடுப்பான்/ள் என்பதும் தான் முக்கிய விஷயங்கள், என்பதை நானும் அறிந்திருக்கிறேன். இது பொதுவான ஒரு உலகத்தமிழருக்கு, சராசரி கணினி அறிவுள்ளவருக்கு எழுதப்பட்டது. அதுமட்டுமல்லாமல், இதை மட்டுமே படித்து ஒருவர் தன் வீட்டில்/அலுவலகத்தில் வைஃபை அமைத்து விடுவார் என்று நானும் எண்ணவில்லை. இந்தத் தொடர் ஆரம்பிக்கும் முன் நான் கொடுத்த விளக்கத்தையும், ஆரம்பித்த பின் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்களையும் படித்திருந்தால் இதெல்லாம் தெளிவாகி இருக்கும், ஆனால் பாவம், பாலாஜிக்கு அதையெல்லாம் பார்க்க நேரமில்லாமல் இருந்திருக்கலாம்.

>>அல்லது நேரடியாக அந்தக் கருவியுடன் வந்திருக்கும் கையேட்டைப் பார்த்து தெரிந்து கொள்வார்.

கருவியை வாங்கிய பிறகுதானே கையேடு நண்பரே! முதலில் தொழில்நுட்பத்தைப் பரிச்சயம் செய்துகொண்டு, பிறகு தன் கணினி அமைப்புக்குத் தகுந்த கருவியைத் தேர்ந்தெடுத்த பின் தானே கையேடு. அப்படிப்பட்ட அந்தக் கையேட்டுக்குப் பதிலாக என் வலைப்பதிவு, ஏன் ஆங்கிலத்தில் எழுதப்பட்டதாகவே இருக்கும் வேறு ஒரு வலைப்பதிவாகவே இருந்தாலும், இருக்கமுடியும் என்று ஒருவர் எண்ணினால், அவரை நினைத்துப் பரிதாபம் கூட படமுடியாது:-))

இது நண்பர் பாலாஜி எழுப்பிய கேள்விகளுக்கான நேரடி விளக்கம். ஆனால் இன்னும் சிலவற்றை, இந்தக் கேள்விகள் எழுப்பாத நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இந்த விளக்கங்களினால் இந்தத் தொடரின் அடுத்த பாகம் தள்ளிப்போகிறதே என்று வருத்தப் படவில்லை. ஏனென்றால், நான் முதலிலேயே சொன்னதுபோல. இந்தத் தொடரே,, ஒரு சோதனை ஓட்டம் தான். அதாவது இப்படிப்பட்ட ஒரு தொழில்நுட்பக் கட்டுரையை தமிழில் செய்யும்போது என்னென்ன பிரச்னைகள், என்னென்ன அனுகூலங்கள் என்று தெரிந்துகொள்ளவும் இது பயனாகிறது. ஆனால் நண்பர் பாலாஜியின் விமர்சனத்தால், கொஞ்சம் கூடுதலான நேரம் செலவாகிவிட்டது.

மீண்டும் வருவேன்.

திங்கள், டிசம்பர் 08, 2003

இந்தியாவில் வைஃபை ஹாட்ஸ்பாட்ஸ், ஒரு இற்றைப்பாடு

(c) FreeFoto.com

நண்பர் குடந்தை இஸ்மாயில் கனி அவர்கள், sify.com இந்தியாவில் வைஃபை ஹாட்ஸ்பாட்ஸ் அமைத்திருப்பது பற்றி இங்கு தன் பின்னூட்டத்தில் சொல்லியிருந்தார். கொஞ்சம் நுழைந்து பார்த்ததில் சென்னையில் மூன்று இடங்களிலும், டெல்லியில் ஒரு இடத்திலும் இப்போதைக்கு செய்திருப்பதாகத் தெரிகிறது. அதைவிட முக்கியமாக, இந்தியாவின் மின்னணு மற்றும் மென்பொருள் தொழில் அடர்த்தி பெருகியுள்ள பெங்களூரில் 120 இடங்களில் அமைக்கப்போவதாகவும் அறிகிறேன். இது மிகவும் உற்சாகமளிக்கும் செய்தி.

இந்தியா போன்ற பயனர் அடர்த்தி அதிகம் இருக்கக் கூடிய இடங்களுக்கு வைஃபை மிகப் பொருத்தமானது என்பது என் அபிப்ராயம். மேலும், நான் அறிந்த வரை, தொலைதொடர்புத் துறையின் கடைத்தள தொழில்நுட்பப் பணியாளர்களின் அக்கறையின்மை கம்பிவழித் தொடர்பில் இறுதிக்காதப் பிழைகள் பெருகுவதற்கு ஒரு முக்கியக் காரணம். அவர்களை மாற்றுவது என்ற கடினமான காரியத்தைவிட, வைஃபை, மற்றும் CDMA செல்பேசிகள் மூலம் இந்தக் குறிப்பிட்ட குறைபாட்டை சரி செய்வது எளிது என்று நினைக்கிறேன்.

இன்னொரு இற்றைப்பாடு: நண்பர் குமரகுரு காஷ்மீர் தால் ஏரியிலும் வைஃபை தொடர்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டிருக்கிறார். நன்றி, (ஒரு குளிர்ச்சியான படம் போட வாய்ப்புக் கொடுத்தற்கும் சேர்த்து ;-)

சனி, டிசம்பர் 06, 2003

எனக்கும் ஒரு விருந்தாளி

கோவையில் இருந்தவரை விருந்தினருக்குப் பஞ்சம் கிடையாது. அம்மாவுடன் பிறந்தவர்கள் 6 பேர். அப்பாவுடன் பிறந்தவர்கள் 5 பேர். அனைவரும் கோவை மாவட்டத்துக்குள்ளேயே, பிறகு சொல்ல வேண்டுமா? ஒரு வாரத்தில் ஒரு நாளாவது விருந்தினர் வராமல் இருந்தால் என்னமோ போல இருக்கும். இங்கு அமெரிக்காவில் அவ்வளவாக யாரும் வருவதற்கு வாய்ப்பில்லை. அதிலும் எனக்கு இந்தக் கண்டம் முழுக்க ஒரு உறவினரோ, உடன் பணிபுரிந்த நண்பரோ, வகுப்புத்தோழரோ இல்லை என்னும் போது, கொஞ்சம் ஏக்கமாயும் இருக்கும். ஆனாலும் என் மனைவியின் விருந்தோம்பல் ஆசையை நிவர்த்திக்க அவ்வப்போது எப்படியாவது விருந்து நடந்துகொண்டேதான் வந்திருக்கிறது. இங்கு பழகிய நண்பர்களுடன் மாதம் ஒருமுறைவாக்கில் கலந்து உண்டு வந்திருக்கிறோம்.

ஆனாலும், இந்தியாவிலேயே பழகிய ஒருவர், இந்தியாவிலிருந்து வருவதென்றால் அது தனிதானே. அப்படி என்னுடன் பணிபுரிந்த தோழர் ஒருவர் இந்த சனி-ஞாயிறில் எங்கள் வீட்டுக்கு வருகிறார். எனவே அடுத்த இரண்டு நாட்கள் புதிதாய் இங்கு ஒன்றும் ஏறாது. மீண்டும் சந்திப்போம்

வெள்ளி, டிசம்பர் 05, 2003

கம்பியில்லா வலைப்பின்னல் இணைப்பு (Wireless Networking)-4

இந்தக் கட்டுரைத்தொடரின் முந்தைய பாகங்களை தனியான வலைப்பக்கமாக இங்கு காணலாம்.

மாநில சட்டமன்றங்களுக்கு இடைத்தேர்தல்

மூன்று முக்கிய மாநிலங்களில் பாஜக வென்றிருப்பது ஆச்சரியமான விஷயம். 'ஆட்சிக்கட்டில் துவேஷம்' தான் காரணம் என்று சிலர் சொன்னாலும், எந்த இழுபறியும் இல்லாமல் முடிவுகள் அமைந்திருப்பதைப் பார்க்கையில் அதுமட்டுமே காரணம் என்று கூறமுடியவில்லை. இதனால் மட்டும் 'மத்தியில் பாஜகவுக்கு ஆதரவு கூடுகிறது' என்று எடுத்துக் கொள்வதும் சரியாய் இருக்காது. என்னைப் பொறுத்தவரை, பாஜகவுக்கு அதன் தலைவர் ஒரு சாதகம் என்றால், காங்கிரசுக்கு அதன் தலைவர் தான் பாதகம். சட்டப்படி சோனியாவுக்கு எல்லா உரிமைகளும் இருந்தாலும், தார்மிக அடிப்படையில் அவரை என்னால் என் நாட்டுக்கு தலைவராக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இயல்பாகவே, நேரு-இந்திரா-ராஜிவ்-குடும்பத்து ஆதிக்கத்தின் மேல் இருக்கும் ஒரு வெறுப்புக் கூட இதற்குக் காரணமாய் இருக்கலாம். புதிய மகளிர் முதல் அமைச்சர்கள் எப்படி செயல்படப்போகிறார்கள் என்பது போகப் போகத்தான் தெரியும். செல்விகள் ஜெயலலிதா, மாயாவதி ஆகியோர் தந்த அனுபவத்தை வைத்துப் பார்க்கையில் எனக்கு செல்வி உமாபாரதியைப் பார்த்தால்தான் பயமாக இருக்கிறது.

புதன், டிசம்பர் 03, 2003

சுவையான கேள்வி பதில்கள்

ரெண்டு நாள் ஹெவியாப் போட்டுத் தாக்கினதுக்கு ஒரு நிவாரணம், இன்று சும்மா துக்கடா. பருவ(?) இதழ்களில் வந்த கேள்வி-பதில் பகுதிகளில் இருந்து நான் ரசித்த சில.
___________________________________________________________________

கோல்டன் அ. ஷாகுல், வந்தவாசி: இறைவனால் பூமியில் படைக்கப் படுகிறோம். வாழ்க்கையில் (பூமியில்) இன்பம், துன்பம், சோகம், வெற்றி, தோல்வி, பொறாமை என இப்படி வாழ்ந்துகொண்டிருக்கையில், காலம் முடிந்துவிடுகிறது. புதைக்கப்பட்டோ, எரிக்கப்பட்டோ மீண்டும் இறைவனிடம் போய்ச் சேருகிறோம். இது இறைவனின் விளையாட்டு என்றால், விளையாடுவதற்கு நாம்தானா கிடைத்தோம்?

ஹாய் மதன் - ஆனந்த விகடன்:  தெரியலையே! இந்த அகண்ட வெளியில் இன்னும் எவ்வளவு கிரகங்களில் இந்த விளையாட்டு நடக்குதோ?! கிரிக்கெட் விளையாட ஒரே ஒரு கிரவுண்டை மட்டுமே இறைவன் தேர்ந்தெடுத்திருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை!

___________________________________________________________________

ஜீபா, திருப்புகலூர்: ஒரு அறிவுரை ப்ளீஸ்..!

இளசு பதில்கள் - தமிழன் எக்ஸ்பிரஸ்: வசதியானவர்களே! நீங்கள் மனசாட்சிப்படி நடந்து கொண்டு உங்கள் தவறுகளுக்குப் பிராயச்சித்தம் தேடுங்கள்.

வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ளவர்களே! நீங்கள் மனிதராகப் பிறந்ததற்கும், பிறந்ததனால் செய்த தவறுகளுக்கும் தண்டனையை அனுபவியுங்கள்.

ஏனெனில் இதுதான் இன்றைய உலகின் நிலை. இதில் அறிவுரையால் ஆகப் போவதென்ன?

___________________________________________________________________

வி.சுப்ரமணியம், திருப்பூர்: கார்த்திகை மாதம் ஐயப்ப சீசன் தொடங்கி விட்டது... பக்தர்களுக்கு உங்களின் ஆலோசனை ஏதாவது?

அந்துமணி பதிலகள் - தினமலர் வாரமலர்: கடன் வாங்கி மாலை போடாதீர்; அப்படியாவது ஐயப்பனை தரிசிக்கும் எண் ணம் வேண்டாம்! மலையில் இருந்து இறங்கியதும் பாட்டிலை "ஓப்பன்' செய்யாதீர் கள்–அதை தவிர்ப்பதற்காக – மனதை கட்டுப்படுத்துவதற்காக 41 நாள் இருந்த விரதத்திற்கு மதிப்பில்லாமல் போகும்! சபரி மலை செல்வதை, ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் ஜாலி டிரிப்–குடும்பத்திலிருந்து, மனைவியிடமிருந்து நாலு நாள் விடுதலை என்பது போலவும் கருதாதீர்கள்!

___________________________________________________________________

வி.ஜி. சத்தியநாராயணன், சென்னை-61: ராமனை காட்டுக்கு அனுப்பி 'வனவாசம்' இருக்கச் செய்தது பதினான்கு வருடம்.. இந்தியாவில் ஆயுள் தண்டனை என்பது பதினான்கு வருடம்.. இரண்டையும் ஒப்பிட முடியுமா?

ஏன்? எதற்கு? எப்படி? - ஜுனியர் விகடன்: இந்த 'பதினான்கு' ஒற்றுமை ஆச்சரியம் தான். மேலும், கம்பனின் பாடலைப் பாருங்கள்..

'ஆழி சூழ் உலகமெல்லாம் பரதனே ஆள நீ போய்..' என்ற கம்பராமாயணத்தின் மிகப் பிரசித்தமான விருத்தம் அது. ''ராச்சியத்தை பரதனே ஆள நீ காட்டுக்குப் போய் புண்ணிய நதிகளில் குளித்துவிட்டு 'ஏழிரண்டாண்டில்' சீக்கிரமே வந்துவிடு என்று உன் அப்பாதான் சொன்னார்!'' என்கிறார் கைகேயி.

ஆயுள் தண்டனையை, கணவனின் எதிரிலேயே இவ்வளவு தேன் தடவிச் சொல்ல ஓர் அழகான இளம் மனைவியால்தான் முடியும்!

___________________________________________________________________

திங்கள், டிசம்பர் 01, 2003

கம்பியில்லா வலைப்பின்னல் இணைப்பு (Wireless Networking)-1

இந்தக் கட்டுரைத்தொடரின் முந்தைய பாகங்களை தனியான வலைப்பக்கமாக இங்கு காணலாம்.

என் அறிவியல் தமிழுக்கு சோதனை!

'வலைப்பின்னல் அமைப்பில் கம்பியில்லாத் தொடர்பு' என்ற தலைப்பில் ஒரு கட்டுரைத் தொடர் செய்யலாம் என்று ஆசை. இந்த விஷயத்தில் என் அனுபவத்தை பதிக்கும் விதமாய் இதை நான் முயலுகிறேன்.

'பிறநாட்டு நல்லறிஞர்கள் சாத்திரங்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்' என்றான் பாரதி. இன்றைக்கு ஒரு சாதாரண அறிவியல் தொழில்நுட்ப விஷயத்தை தமிழில் எழுதுவதில் உள்ள சிரமங்கள், அனுகூலங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ள ஒரு சோதனை ஓட்டமாயும் இது எனக்குப் பயன்படப் போகிறது. பார்க்கலாம்.

பிரபஞ்சத்தின் பிரம்மாண்டமும், அணுக்கருவின் நுண்மையும்

நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த இணைப்பு ஒன்றை இங்கே கொடுத்திருக்கிறேன். இது National High Magnetic Field Laboratory என்ற அமெரிக்காவில் ஃப்ளோரிடா மானிலத்தில் உள்ள ஒரு ஆயவகத்தின் தயாரிப்பு. அண்ட வெளியில் ஒரு கோடி ஒளிவருடங்கள் (1023 மீட்டர்) என்ற அளவிலிருந்து பத்தில் ஒரு பாகமாய்க் குறுகிக் குறுகிக் கடைசியில் அணுக்கருவின் உள்ளே 100 ஆட்டோ மீட்டர் (10-16 மீட்டர்) என்பது வரை நமக்குக் காணக் கிடைக்கும் விதமாய் கொடுத்திருக்கிறார்கள். இந்தப் பிரபஞ்சத்தில் நாம் எவ்வளவு தூசி என்று எண்ணும் அதே சமயம், நமக்கும் சிறியதாய் பிரபஞ்சங்களே இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று எண்ணும் வண்ணம், பிரமிப்பூட்டும் விதமாய் இருக்கிறது. அறிவியல் ஆர்வமுள்ள ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய பயனுள்ள ஒரு அறிவியல் காட்சிப் பொருள் இது.

சனி, நவம்பர் 29, 2003

Do You Speak American?

ஆங்கிலம் தெரிந்தவர்கள் எல்லாரும் அமெரிக்கா வந்தவுடன் குழம்பும் அளவுக்கு அமெரிக்க ஆங்கிலம் இருக்கிறது. இங்கே அட்டவணையில் உள்ள சொற்களைப் பார்த்தால் தெரியும். இதில் அமெரிக்க ஆங்கிலம் என்று கொடுத்திருக்கும் பட்டியலில் உள்ள சொற்கள் பலவும் நமக்குப் பரிச்சயமானவையே. ஆனால் பேச ஆரம்பித்ததும் நாக்கில் முதலில் வருவது பிரிட்டிஷ்/இந்திய சொற்களே. எனவேதான் பெரும்பாலும் அவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ள முடிகிற அதே வேளையில், நாம் பேசுவதைப் புரிந்து கொள்ள அவர்கள் சிரமப்படுவது. இவை ஒரு பானை சோற்றுக்கு பதம் பார்க்க தரும் பருக்கைகள் என்றால். முழுப் பானையும் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் புரியும். அதிலும் அத்தனை காய்கறிக்கும் இங்கு அமெரிக்க மொழியில் வேறு பெயர்கள்! வாழ்க்கை சுவாரசியமாக இருக்க இவையெல்லாம் காரணம்!


British/Indian

American

Advertisment

Commercial

Bin, Dustbin

Trash Can

Biscuit

Cookie

Bonnet

Hood (car)

Boot, Dicky

Trunk (car)

Canteen

Cafeteria

Car Park

Parking Lot

Casualty

Emergency Room

Chemist

Drugstore

Diversion

Detour

Entree, Starter

Appetizer

Film

Movie

Flat

Apartment

Flyover

Overpass

Football

Soccer

Garden

Yard

Gum

Glue

Highway

Freeway (Expressway)

Hire

Rent (to)

Holiday

Vacation

Jam

Jelly

Lift

Elevator

Lorry

Truck

Napkin, Nappy

Diaper

Note

Dollar Bill

Pavement

Sidewalk

Petrol

Gasoline

Post

Mail

Public school

Private school

Purse

Wallet (Woman's)

Queue

Line

Ring

Call (on the phone)

Rubber

Eraser

Rubbish

Trash

State school

Public School

Sweets

Candy

Tin

Can

Torch

Flashlight

Trolley

Shopping Cart/Basket

Wardrobe

Closet (bedroom)

Zed

Zee (letter)



Thanks: http://www.geocities.com/Athens/Atlantis/2284/

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...