செவ்வாய், ஜூலை 25, 2006

சில முயற்சிகள் சில அனுபவங்கள் -12

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10 பாகம் 11

பல பதிவுகள் திரட்டிப் பட்டியலிலிருந்து விலக்கப்பட்டது தவிர்க்க முடியாத தற்காலிக நடவடிக்கை என்பதை விளக்கிச் சொல்லியும் இங்கே அதைப் புரிந்துகொண்டவர்களை விட புரிந்துகொள்ளாதவர்களே அதிகம். சில நிரலாளர்களை வைத்து அடுத்த பதிப்பைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டிருந்தேன். எப்படியும் சில வாரங்களில் முடியாவிட்டாலும் ஓரிரு மாதங்களில் இந்த விலக்கத்துக்கு முடிவு கட்டமுடியும் என்று உறுதியாக நம்பினேன். ஏனென்றால் புதிய பதிப்பில் தானியங்கியாக எல்லாப் பதிவுகளையும் சுற்றிவந்து புது இடுகையைத் தேடுவதற்குப் பதிலாக, அவரவரே, இடுகை எழுதிப் பதிப்பித்த உடனேயே அடுத்த நொடியிலேயே தமிழ்மணம் திரட்டியில் சேர்க்கும் வழிசெய்ய எண்ணியிருந்தேன். நம் சமூகத்தில் இன்னும் பலர் தன் உரிமை/கடமை, அடுத்தவர் சிரமம் போன்ற எல்லாவற்றையும் பின்னுக்குத்தள்ளி தன்னலம் ஒன்றையே குறிக்கோளாகவும், அடுத்தவர் செயலுக்கு எப்போதும் ஒரு உள்நோக்கம் கற்பிப்பதில் முனைப்பாகவும் இருப்பது இப்போது தெளிவாக விளங்கியது. ஏதேதோ பிரச்னைகளில் என் மேல் காட்டம் கொண்டு அடங்கிப்போனவர்களெல்லாம், இந்த வாய்ப்பைக் கையில் எடுத்து என்னை விளாசி மகிழ்ந்தார்கள்.

இந்தக் கூச்சல்களுக்குப் பதில் சொல்வது இயலாதது மட்டுமல்ல, வீண்வேலை என்றும் நம்பியதால், எல்லாவற்றையும் புறந்தள்ளி, என் மீது வைக்கப்பட்ட தாக்குதல்களுக்கு என் ஒரே பதிலாக, அனைவருக்கும் இடம் கிடைக்கும் புதிய தமிழ்மணத்தை வெளியிடுவதிலேயே என் உழைப்பைச் செலுத்தினேன். வலைப்பதிவு உலகில் பல புதுமைகளைக் கொண்டு தமிழ்மணம்.காம் இரண்டாம் பதிப்பு 2006 ஜனவரி 14ஆம் நாள் தைத்திங்கள் மலர்ந்தது. கிட்டத்தட்ட அதே காலக்கட்டத்தில் நண்பர் தேன்கூடு தளத்தையும் பொதுப்பயனுக்கு வெளியிட்டார். தானாக இடுகைகளைத் திரட்டிய காலம் போய் ஒவ்வொருவரையும் அவர்களை சேர்க்கச் சொல்லியிருக்கிறோமே, அவர்கள் செய்யாவிட்டால் மொத்தத் திரட்டியுமே தோல்வியில் முடியுமே என்ற ஐயம் இருந்தாலும், பெரும்பான்மையான வலைப்பதிவர்கள் தமிழ்மணத்தின்மேல் கொண்டிருந்த நம்பிக்கையும், அவர்கள் பெறப்போகும் கூடுதல் பயன்கள் காரணமாகவும் இந்த சவாலை சமாளிக்கமுடியும் என்று நம்பினேன். அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை. சிலர் எங்களுக்கு இரண்டாம் பதிப்பு வேண்டாம் முதல் பதிப்பை தொடர்ந்து இன்னொரு முகவரியிலாவது அளியுங்கள் என்றெல்லாம் சொல்லியும்கூட அதைச் செய்யாமல் பொறுமையுடன் காத்திருந்தேன். இரண்டாம் பதிப்பு முன்பிருந்ததைவிடவும் அதிக வரவேற்பைப் பெற்றது வாசகர் வருகைக்கணக்கிலிருந்து தெரிந்தது.

தமிழ்மணம் 2.0-ன் புதிய சிறப்பம்சங்கள்:
  • ஆபாசம், வன்முறை போன்ற காரணங்கள் தவிர நுட்பம்/கணித்திறன் பற்றக்குறையால் எந்த வலைப்பதிவையும் விலக்கி வைக்கத் தேவைப்படாதது.
  • வலைப்பதிவர் தன் மின்னஞ்சல் முகவரியைத் தமிழ்மணத்துக்கு அளித்தல்.
  • வலைப்பதிவர் தானே தன் இடுகையை திரட்டிக்கு அறிவித்தல். இதனால் ஒரு நொடிநேரத் தாமதமும் இல்லாமல் பதிப்பித்த உடனே பலரையும் சென்று சேர்த்தல்.
  • ஒவ்வொரு இடுகையையும் வகைப்படுத்துதல்
  • குறிச்சொல்லிடுதல் (பிறகு ஏற்படுத்தப்பட்டது)
  • வலைப்பதிவின் தலைப்பு/ஆசிரியர் பெயர்/கருப்பொருள் உரை போன்றவற்றைத் திரட்டி தானே எடுத்துக்கொள்ளுதல். மேலும் இவற்றில் பதிவர் ஏதும் மாற்றம் செய்தால் அடுத்த முறை பதிவு திரட்டப்படும்போது அந்த மாற்றம் திரட்டியில் இற்றைப்படுத்தப்படுதல்.
  • வலைப்பதிவரின் வில்லையளவுப் படம் காட்டுதல்/தானே இற்றைப்படுத்தல்
  • இந்த வார நட்சத்திரங்களை நன்றாக முன்னிறுத்தல், படம்/அறிமுகம் காட்டுதல், சென்ற வார நட்சத்திரங்களின் படம்/அறிமுகம்/எழுதிய இடுகைகள் பட்டியல்/மின் நூல் ஆக்குதல்
  • பல இடுகைகளைத் தொகுத்து மின்நூலாக்குதல்
  • தேதிவாரியாக இடுகைகளைப் பட்டியலிடல்
  • வகை (தலைப்பு) களைத் தெரிவு செய்து பட்டியலிடல்
  • 'பதிவு' கருவிப்பட்டை வாயிலாக இடுகையிலிருந்து ஒற்றை/பல இடுகைகளின் மின்நூல் ஆக்குதல், இடுகையின் வகையைக் காட்டுதலோடு, அதே வகையில்(தலைப்பில்) எடுதப்பட்டவற்றுக்குப் பயணித்தல், வாசகர் பரிந்துரைத்தல்.
  • 'பதிவு' கருவிப்பட்டை வாயிலாக புது இடுகையை தமிழ்மணத்துக்கு அறிவித்தல், கருவிப்பட்டையில் தேவைப்படும் அமசங்களைத் தெரிவு செய்தல்.


பெரும்பாலான இந்த வசதிகள் தானுணர்த்தியாக இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளன.


இந்த மாற்றத்தைப் பொறுமையுடன் ஏற்றுக்கொண்ட அனைத்து வலைப்பதிவர்களுக்கும், தாங்களாக முன்வந்து தங்கள் வலைப்பதிவைப் பட்டியலில் சேர்த்தமைக்காக நன்றி. இதில் இக்கட்டான சூழ்நிலையில் விலக்கிவைக்கப்பட்ட பதிவுகளும் அடங்கும்.


இன்று வாழ்வில் வேறு உந்துதல் காரணமாக தமிழ்மணத்தை இன்னொருவரிடம் ஒப்படைத்துச் செல்ல எண்ணும்போது இந்த நுட்பங்களுக்காக நான் செலவிட்ட பணத்தையேனும் பெற்றுக்கொள்வது என்னளவில் தார்மீக வரையறையில் சரியானதே என்று நம்புகிறேன். அதனாலேயே தமிழ்மணத்தை இன்னொருவருக்கு என்னால் இலவசமாக அளிக்க இயலவில்லை. இதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டேன். ஏற்கனவே கிடைத்த அனுபவங்கள் என்னை அப்படி வைக்கவில்லை. புரிந்துகொள்பவர்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்.


இத்துடன் இந்தத் தொடரை முடிக்கிறேன். தமிழ்வலைப்பதிவுகள் உலகில் சென்ற 3 ஆண்டுகள் இயங்கியதில் கிடைத்த பல சுவையான அனுபவங்களை, இன்றியமையாத பாடங்களை எனக்குக் கிடைத்த பெறற்கரிய பரிசாக எண்ணுகிறேன். இந்தப் பரிசை எனக்குக் கிடைக்கச் செய்த, என்னுடன் ஒத்துழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி. மீண்டும் சந்திப்போம். வணக்கம்.

திங்கள், ஜூலை 24, 2006

Seminar on Blogs at CSI, Coimbatore

கோவையில் வரும் புதனன்று வலைப்பதிவுகள் பற்றிய நுட்பங்களின் அடிப்படைகளை விவரிக்கும் கருத்தரங்கு ஒன்றைத் தயாரித்து அளிக்கிறேன். கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் ஆதரவில் நடக்கும் இந்நிகழ்ச்சிக்கு, வலைப்பதிவில் ஆர்வமுள்ளவர்களை அழைக்கிறேன். ஆங்கிலத்தில் நடக்க இருக்கிறதானாலும் பொதுவில் எளிமையான நுட்பங்களைப் பற்றியதானதால் மொழி ஒரு தடையாக இருக்காது என்று எண்ணுகிறேன். இதில் கிடைக்கும் அனுபவத்தையும் வரவேற்பையும் பொறுத்து, தேவைப்பட்டால் இன்னொருநாள் தமிழிலும் அளிக்க முயல்வேன்.

நன்றி.

There is going to be a seminar by me on Blogs: Technology, Services, Tools and Aggregators under the aegis of Computer Society of India, Coimbatore Chapter. It is held at the CSI Hall near Race Course, at 6:30 Pm on 26th July, Wednesday. I welcome friends interested in the subject of blogging. Please call me at 98941 11554 to confirm your particpation.

Thanks,
-Kasi

சனி, ஜூலை 22, 2006

சில முயற்சிகள் சில அனுபவங்கள் -11

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 |பாகம் 10

ஆபாச மறுமொழிகள் யாரிடமிருந்து வருகின்றன என்று பலருக்கும் தெரிய வர வர ஆபாசத்தின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே வந்தது. டோண்டு ராகவன் போன்றோர் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். ஆனாலும் பிரச்னையை வளர்ப்பதற்கும் அவர்கள் செயல்பாடே காரணம் என்றும் பலர் சொல்லிக்கொண்டிருந்தார்கள். யார் சொல்வது சரியென்றெல்லாம் பஞ்சாயத்துப் பண்ணுவது தமிழ்மண நிர்வாகிகளுக்கு சாத்தியமில்லாத காரியமில்லாததால் யாரும் இடையீடு செய்யவில்லை, இது எப்போதும்போலத் தொடர்ந்து கொண்டிருந்தது.

காலப்போக்கில் தமிழ்மணத்தில் வெட்டி அரட்டைப் பதிவுகள் அதிகரிக்க ஆரம்பித்தன. அவற்றுக்கு மறுமொழிகிறேன் பேர்வழி என்ற பெயரில் புரியாத குழூஉக்குறிகளில் யாரையாவது மறைமுகமாக சீண்டி எழுதப்படுபவை, எண்ணிக்கையைக் கூட்டுகிறேன் பார் என்ற ரீதியில் மறுமொழிக் குப்பைகள் என்று பல நிகழ்வுகள் நடந்தேறிய வண்ணம் இருந்தன.

எது பொதுவான வாசிப்புக்குத் தகுதியான பதிவு என்று கண்டுணரும் அனுபவம் இல்லாத ஒரு புதியவர் தமிழ்மணம் முகப்புக்கு வந்து இடுகைகளை வாசிக்க ஆரம்பித்தால் பயிரோடு வளரும் களைகள் போல இவ்வகை இடுகைகளே அதிகம் தட்டுப்படும் அளவுக்கு இவை அதிகரித்தன. கூடவே மதரீதியான சண்டைகளைக் கொண்ட பதிவுகளும் வளர ஆரம்பித்தன. வலைப்பதிவுகளின் அடிப்படை அம்சமே சுதந்திரம் என்ற கொள்கையால் இவற்றை தவறென்று ஒதுக்க முடியவில்லை. ஆனால் தமிழ்மணத்தில் இவை தொடர வேண்டுமா என்ற நெருடல் இருந்துகொண்டே இருந்தது.

'தமிழ்மணத்தில் இவை தேவையா?' என்பது தமிழ்மணத்தின் 'புனித பிம்ப'த்துக்கு பங்கம் வந்துவிட்டதே என்ற பொருளில் சொன்னது அல்ல. ஆழமான சுதந்திரமான சிந்தனைகள் தமிழில் எழுதப்பட, ஊக்கம் பெற, கவனம் பெற ஒரு இடம் வேண்டும், தமிழின் பயன்பாடு இணையத்தில் அதிகரிக்கவேண்டும், தமிழ்க் கணிமை/கருவிகள் வளரவேண்டும் போன்ற நோக்கங்களுக்கு சற்றும் பொருந்தாத இவற்றுக்காக நானும் மற்ற நிர்வாகிகளும் தங்கள் நேரத்தையும், உழைப்பையும், பணத்தையும் செலவு செய்து உழைப்பது சரிதானா, தேவைதானா என்ற நெருடல் அது. ஆனாலும் எதுவும் செய்ய இயலாமல் சும்மா இருந்தேன்.

நாம் சும்மா இருந்தாலும் மற்ற சூழல்கள் சும்மா இருக்கவேண்டுமே! முக்கியமாக நுட்பரீதியான சவால்கள் தமிழ்மணத்தின் பதிவுகளின்/இடுகைகளின் எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாக பெரிதாகி வந்தன. தமிழ்மணம் திரட்டி அப்போது தானியங்கியாக இருந்தது. அதாவது பட்டியலில் இருக்கும் ஒரு வலைப்பதிவில் புதிதாக எதுவும் எழுதப்பட்டால் வலைப்பதிவர் ஏதும் செய்யாமலேயே புது இடுகை தமிழ்மணத்தால் திரட்டப்பட்டுவிடும். இது தமிழ்மணம் திரட்டி தன் பட்டியலில் இருக்கும் எல்லாப் பதிவுகளையும் சுற்றுவரிசையில் ஒரு குறிப்பிட்ட நிமிடங்களுக்கு ஒருமுறை தேடி எடுப்பதால் சாத்தியப்பட்டது. இந்தத் தேடும் திறன் இணைய வழங்கியின் கணித் திறன், பயன்பாட்டு அழுத்தம், வழங்கியின் இணையத் தொடர்பின் வேகம் பொன்றவற்றைச் சார்ந்தது.

தமிழ்மணம் தொடங்கிய போது 108 பதிவுகள் இருந்தன. சாதாரணமாக ஒரு சுற்றுத்தேடல் 5 நிமிடத்துக்குள் முடிந்தது. அப்போது ஒவ்வொரு 15 நிமிடத்துக்கு ஒருமுறை ஒரு சுற்று நிகழுமாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனவே இதில் சிக்கல் ஏதும் இல்லை. ஆனால் 2005 செப்டம்பரில் 800-க்கும் அதிகமான பதிவுகள், கூடவே அதிக வாசிப்பு எண்ணிக்கையினால் கூடிய பயன்பாட்டு அழுத்தம், எல்லாம் சேர்ந்து, இந்த 'ஒரு சுற்றுத் தேடலுக்கான' நேரத்தை பெருமளவு அதிகரித்திருந்தன. சில சமயங்களில் ஒரு சுற்றுக்கு 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் கூட ஆனது. 20 நிமிடத்துக்கு ஒரு சுற்று என்று மாற்றி, பிறகு 30 நிமிடத்துக்கு ஒன்று என்று மாற்றியும், பல சமயங்களில் முதல் சுற்று முடியும் முன் அடுத்த சுற்று ஆரம்பிக்கும் சிக்கல் வந்தது. இதனால் பட்டியலில் கடைசியில் உள்ள சில பதிவுகள் ஒவ்வொரு சுற்றிலும் தவற விடப்பட்டு தொடர்ந்தாற்போல பல மணிநேரம் திரட்டியில் அகப்படாமலே இருந்ததும் நிகழ்ந்தது. இதற்குத் தீர்வு நுட்பரீதியில்தான் சாத்தியம் என்பதால் நுட்ப விஷயங்களில் மற்ற நிர்வாகிகளைப் பெரிதும் ஈடுபடுத்தியதில்லையாதலால் அவர்களிடம்கூட விவாதிக்கவில்லை.

தமிழ்மண நிரல்களை மாற்றியமைப்பதன் மூலம் திரட்டி இயங்கும் விதத்தை மாற்றியமைப்பதுதான் நிரந்தரத் தீர்வாக முடியும், என்றாலும், இன்னும் பொருத்தமான நிரலாளர் குழு எதுவும் எனக்கு அகப்படவில்லை. எனவே மூன்று மாதமாக எழுதப்படாமல் இருந்த பல பதிவுகளை திரட்டியிலிருந்து விலக்கி வைத்தேன். அந்தப் பதிவர்கள் பெரிதாகக் கோபிக்கவில்லை. ஆனால் சிலர் பெயருக்கு மீண்டும் ஒரு இடுகையை எழுதி நடப்புப் பட்டியலில் மீண்டும் இடம் பெற்றார்கள். சில வாரங்களுக்குப்பின் இந்த தேடும் நேரச் சிக்கல் மேலும் அதிகரித்தது. ஒரு சுற்றுக்கு ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆனது. சில பதிவுகள் 24 மணி நேரமாகியும் திரட்டப்படவில்லை.

இக்காலத்தில் தமிழ்மணத்தின் வாசகர் வருகையும் குறைய ஆரம்பித்திருந்தது. தமிழ்மணத்தை வாசிக்கும்போது உருப்படியான பதிவுகள் கிடைப்பது குறைந்துகொண்டு வந்ததும் இதற்கு ஒரு காரணம் என்பதை உணர்ந்தேன். வகைப்படுத்தல் போன்ற நுட்பத்தீர்வுகள் வாசகர் வருகையை அதிகரிக்க வாய்ப்பிருப்பினும், நிரல் மேம்படுத்த எனக்கு வசதிப்படவில்லை. உடனடித் தேவையாக ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாக உணர்ந்தேன். இருக்கும் பட்டியலில் சிலவற்றை நீக்கி பட்டியலை சிறிதாக்கினால் ஒழிய மொத்த தமிழ்மண இயக்கமுமே சீர்கெடும் என்ற நிலை. ஆகவே ஒரு தவிர்க்க முடியாத இடைக்கால நடவடிக்கையாக ஒரு மாதமாக எழுதப்படாதவை, மதரீதியானவை, சக வலைப்பதிவர்களை கேலிசெய்வதை மட்டுமே முக்கிய நோக்கமாகக் கொண்டவை, வெட்டி அரட்டை மறுமொழிகளுக்காகவே எழுதப்படுபவை ஆகிய பதிவுகளை திரட்டியிலிருந்து விலக்கிவைத்தேன். இதனால் மீண்டும் பதிவுகள் முழுமையாகத் திரட்டப்பட்டன.

குறிப்பு: என் வலைப்பதிவு kasi.thamizmanam.com சில நாட்களில் என்னைவிட்டுப்போகும் முகவரி என்பதால் முடிந்த வரை தொடுப்புகள் கொடுப்பதைத் தவிர்க்கிறேன்.
-தொடரும்

திங்கள், ஜூலை 17, 2006

சில முயற்சிகள் சில அனுபவங்கள் -10

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9

வலைப்பதிவிலிருந்து விலகுவதாகச் சொல்லியிருந்த மாலன், சென்னை சந்திப்புக்கு முன்பே யாஹூ360 என்ற சேவையைப் பயன்படுத்தி மீண்டும் வலைப்பதிவு ஒன்றைத் தொடங்கியிருந்தார். இந்த சேவையில் ஒரு அம்சம், தன் வலைப்பதிவில் யாரையெல்லாம் மறுமொழிய அனுமதிக்கலாம் என்பது நம் கையில் இருக்கிறது. அனாமதேயங்களுக்கு மட்டுமல்ல, கொஞ்சம் இறுக்கிப் பிடித்தால் போலிகளுக்கும் இங்கே வேலையில்லை. அன்றைக்கு ப்ளாக்கர்.காம் மறுமொழிச் சேவையில் இம்மாதிரி வசதி இல்லை. அதுமட்டுமல்லாமல், இன்று முக்கியமாகப் பயன்படுத்தப்படும் மறுமொழி மட்டுறுத்தல் வசதியும் ப்ளாக்கர்.காம் அளிக்க ஆரம்பிக்கவில்லை. அதனாலேயே மறுமொழிகள் விஷயத்தில் தமிழ்மணம் செய்ய ஒன்றுமில்லை என்று சொன்னோம். மறுமொழி மட்டுறுத்தல் வசதியை 2005 நவம்பரில், அதாவது இந்த சந்திப்பு நிகழ்ந்து சுமார் 4 மாதங்கள் கழித்தே ப்ளாக்கர்.காம் நடப்புக்குக் கொண்டு வந்தது.

நமக்குத் தெரிந்தவர்களை மட்டும் வாசகராக வைத்துக்கொண்டு வலைப்பதிவில் ஈடுபடுவது எல்லாருக்கும் உவப்பான செயலாக இருக்கமுடியாது. வலைப்பதிவின் திறந்த நிலையே அதன் வளர்ச்சிக்கு ஒரு அடிப்படைக் காரணி. மாலன் போலி ஒழிப்புக்கான தீர்வாக ப்ளாக்கர்.காம்க்கு பதிலாக யாஹூ360 சேவையை பரிந்துரை செய்தார். போலிகளைக் கட்டுப்படுத்த சில கூடுதல் வசதிகள் என்பதைத் தவிர பெரிய நிறைகள் யாஹூ 360-ல் இல்லை. ப்ளாக்கர்.காம்-ஓடு ஒப்பிடும்போது பல வகைகளில் இது குறைப்பட்ட வசதியே. இன்று எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் யாஹூ 360-இல் இயங்குகின்றன என்பதிலிருந்தே இது புலப்படும். போலி ஒழிப்புக்காக மட்டும், வசதியான, ஆற்றல்மிக்க, நுட்பரீதியாக மேம்பட்ட ஒரு சேவையை விட்டு இடம் மாறுவது பலருக்கும் பிடிக்காமல் போனதில் வியப்பில்லை. ஆகவே இந்தப் பரிந்துரையை பெரிதாக யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

மேலும், இதே யாஹூ360 சேவையைப் பயன்படுத்திய இன்னொரு வலைப்பதிவர் ஏற்கனவே தமிழ்மணத்தில் சேர்க்கைக்கு அளித்திருந்ததும், அது சேர்க்கப்பட்டு திரட்டப்பட்டுக்கொண்டிருந்ததும் மாலன் அறிந்திருக்கவில்லை. எனவே இதுவும் தமிழ்மணத்தோடு இயங்கக்கூடிய, ப்ளாக்கர்.காம்-க்கு மாற்றான இன்னொரு சேவை என்பதை சரியாக உணர்ந்து முன்னிறுத்தாமல், தமிழ்மணத்துக்குப் பதிலாக ஒரு சேவை என்ற ரீதியில் அவர் எழுதிவிட்டார். நான் சென்னை சந்திப்புக்குப் போகும்வரை மாலன் இம்மாதிரி ஒன்று எழுதி அது சர்ச்சைக்குள்ளாகியிருப்பதுகூட எனக்குத் தெரியாது. ப்ளாக்கர்.காம்-க்கும் தமிழ்மணத்துக்கும் வேறுபாடு தெரியாத பல புதியவர்களைப்போல மாலன் எழுதியிருக்க முடியாது என்றும், ஆகவே அவரின் நோக்கத்தையே சந்தேகிக்க வேண்டியிருப்பதாகவும் பலர் பதிவுகளில் விவாதிக்கவும் பிரச்னை இன்னும் பெரிதாகிப் போனது மிகுந்த வருத்தமளித்த ஒரு செயல்.

இந்த சமயத்தில் வந்திருந்த சிலரின் இடுகைகள் இன்று தேடும்போது, திருத்தப்பட்டிருக்கின்றன அல்லது நீக்கப்பட்டிருக்கின்றன. பலர் வாசிக்க ஒரு இடுகையைப் பதிப்பித்த பின் ஒரு வரியை மாற்றினாலே அதைக் குறிப்பிட்டு செய்ய வேண்டும் என்று ஒரு கொள்கையை நான் உள்பட பலர் இங்கே ஒரு நெறிமுறையாக வைத்திருக்கிறோம், ஆனால் அறிவிப்பின்றி இப்படி முழு இடுகைகளே நீக்கப்படுவது சரியா என்பதை வாசிப்பவர்களின் முடிவுக்கு விடுகிறேன். இன்று கூகிளின் சேமிப்பிலிருக்கும் (cached pages) பக்கங்களை வாசித்தால் பிரச்னையின் தீவிரமும் சிலர் எடுத்த தவறான நிலைப்பாடுகளும் தெரியவருகின்றன. தாங்கள் தவறாக எழுதிவிட்டதை உணர்ந்தோ என்னவோ அப்பக்கங்களை அவர்களே நீக்கிவிட்ட நிலையில் அவற்றிலிருந்து மேற்கோள்காட்டுவது நாகரிகமில்லை என்றாலும் 'வரலாற்றை மறந்தவர் அதே வரலாற்றை வாழ்ந்து பார்க்க வைக்கப்படுவர்' என்ற கூற்றுக்கேற்ப வரலாற்றை முற்றிலும் மறக்கவும் முடியவில்லை. அந்த சர்ச்சைகளிலிருந்து பிருந்தாவனம் கோபியின் ஒரு மறுமொழியை மட்டும் கூகிளின் சேமிப்பிலிருந்து எடுத்து இங்கே மேற்கோளிடுகிறேன்.

//
இங்கே ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். தமிழ்மணம் ஒரு பட்டியலிடும் தளம், அவ்வளவே.

அவரவர் தங்கள் ப்ளாக்கர் தளங்களில் எழுதுவதை பட்டியலிடும் ஒரே காரணத்துக்காக, தமிழ்மணத்தை குறை சொல்ல முடியாது.

தமிழ்மணத்தில் ஒரு வலைப்பூவை பட்டியலிடச் செய்வது மிக எளிது. தொழில்நுட்ப ரீதியாக ஒரு வலைப்பூ RSS Feed சேவையை அளிக்குமானால் அதனை தமிழ்மணத்தில் பட்டியலிட முடியும்.

Yahoo 360ன் RSS feed சேவையை பயன்படுத்தி அது வழங்கும் வலைப்பூக்களையும் தமிழ்மணத்தில் பட்டியலிடச் செய்வது எளிது.

மாறவேண்டியது அழுக்கடைந்த சில மனித மனங்களே அன்றி Blogger சேவையிலிருந்து Yahoo 360க்கோ அல்லது தனிப்பட்ட வலைப்பூக்களுக்கோ அல்ல என்பது என் கருத்து.

உங்கள் தளத்தின் வருகையாளர்கள் தமிழ்மணத்தையும் Blogger/Yahoo 360 சேவையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே இந்தப் பின்னூட்டம்.

நன்றி!

ப்ரியமுடன்,

கோபி

By கோபி(Gopi), at 4:35 PM
//

இதுபோன்ற சர்ச்சைகள் வரும்போது தானாக முன்வந்து பலர் தங்கள் கருத்துக்களை எழுதுவதும், அவர்கள் சொல்வது என்னையோ தமிழ்மணத்தையோ ஆதரிக்கும் ரீதியில் இருந்துவிட்டால் அவர்களை 'என் அடியாட்கள்/அல்லக்கைகள்' என்று குறிப்பிட்டு, 'எது கேட்டாலும் இந்த ஆள் பேசமாட்டானாம், அவனின் அடியாட்கள் பேசுவார்களாம்' என்று சிலர் எழுதுவதும் பலமுறை கண்டிருக்கிறேன். எந்த அணியிலும் சேர விரும்பாத, யாருடனும் தொலைபேசியில் மட்டுமல்லாமல், மின் அரட்டையிலும் கூடத் தொடர்புகொள்ள விரும்பாத, இலக்கிய, சிற்றிதழ் குழுக்களை அறிந்தும்கூட இராத எனக்கு இத்தகைய தன்னார்வலர்களின் ஆதரவு ஒன்றே ஊட்டம். அது மட்டும் இல்லையென்றால் இந்த தமிழ் இலக்கிய அரசியல் சூழல் புரிந்த அன்றே தமிழ்மணத்தைத் தூக்கிக் கடாசிவிட்டுப் போயிருப்பேன்.

ஆனாலும், 'தமிழ்மணத்தை இழுத்து மூடிவிட்டுப் போ' என்ற ரீதியில் ஒரு முகமிலி எழுதும் அளவுக்கு பிரச்னை வளர்ந்தது என் மனதில் பட்ட முதல் காயம். ஆனால் யாருக்கோ தமிழ்மணம் வழியாக இத்தனை பேர் எழுதுவது பிடிக்காததால் இதைச் சொல்வதாக எடுத்துக்கொண்டேன். அதற்காகவாவது இது தொடர வேண்டும், இன்னும் உத்வேகத்துடன் நடக்கவேண்டும் என்று உறுதிபூண்டேன். என் நேரவசதிக் குறைவினால் அதன்பின்னர் தமிழ்மணம் இரண்டாம் பதிப்புக்கு நிரல் எழுத சம்பளத்துக்கு ஆள் தேடுவதில் ஈடுபட்டேன். இத்தனை சச்சரவுகளின் போது பலரும் கொடுத்த அனுபவமும், தொழில்ரீதியாக மென்பொருளாளன் அல்லாத என் ஒருவன் கைப்பாட்டில் உருவான தமிழ்மண நிரல்பொதியில் திறமூல நிரல்குழுக்கள் எதுவும் கைவைத்து மேம்படுத்துவது என்பதில் எனக்கு பெரிய நம்பிக்கையில்லாததாலும், நான் யாரையும் உதவிக்கு அழைக்கவில்லை.

இதற்குள் என் இல்லத்திலும் அகலப்பாட்டை இணைப்புப் பெற்றுவிட்டேன். ஓரளவுக்கு நிர்வாகப் பணிகளிலும் மீண்டும் ஈடுபடத் தொடங்கிவிட்டேன். அமெரிக்காவை விட்டுக்கிளம்பியதிருந்து அதுவரை செல்வராஜ்/மதி/பரி மூவருமே நிர்வாகப் பொறுப்பில் முழுமையாக ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் பங்களிப்பு எப்போதையும் விட அந்த மாதங்களில் மிகுந்த அவசியமானதாக இருந்தது. அவர்கள் பொறுப்பேற்காவிட்டிருந்தால் இடையில் பெரிய தொய்வு ஏற்பட்டிருக்குமென்பதில் ஐயமில்லை.

வியாழன், ஜூலை 13, 2006

உமர் தம்பி - தமிழ்க் கணிமைக் கொடையாளர்

தமிழ்க் கணிமை வளர்ச்சிக்கு கொடையளித்த பெருந்தகையாளர்களில் முதல் வரிசையில் வைக்கத் தகுதியானவர்களுள் ஒருவர் அதிராம்பட்டினம் உமர் தம்பி அவர்கள். நேற்று (2006 ஜூலை 12ஆம் நாள்) மாலை 5:30 மணிக்கு அவர் தன் சொந்த ஊரில் இயற்கை எய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு சொந்த சகோதரரை இழந்தது போன்ற துக்கம் ஏற்பட்டது.

எத்தனை செயலிகள், எழுத்துருக்கள், கட்டுரைகள், அகராதிகள் அவர் கொடையளித்தவை என்ற கணக்குக் கூட எங்காவது இருக்கிறதா அறியேன். மதி கந்தசாமியின் இந்தத் தொகுப்புகூட அவரின் அத்தனை கொடையையும் கொண்டிருக்கிறதா என்று எனக்கு ஐயமாகவே இருக்கிறது.

உமரும் ஒரு வலைப்பதிவு எழுதினார் என்பதும் நம்மில் பலருக்கும் புதிய செய்தியாக இருக்கும். ஆம். அவரின் வலைப்பதிவு இங்கே இருக்கிறது:
http://thendral.blogspot.com/ வலைப்பதிவின் பெயரில் கூட சலசலப்பை விரும்பாத 'தென்றல்' அவர். 'வலைப்பதிவு ஒரு நேர விழுங்கி, இதில் ஈடுபட்டு செலவாகும் நேரத்தை வேறு பயனுள்ள வழிகளில் செலுத்தி பலருக்கும் நல்லது செய்யலாம்' என்றே அவர் அதைத் தொடராமல் விட்டிருக்கக் கூடும்.

உமர் அவர்களுடன் எனக்கு நேரடித் தொடர்பு குறைவே. ஓரிரு முறை மின்னஞ்சலில் தொடர்புகொண்டிருக்கிறேன். அவர் இன்னும் வளைகுடாப்பகுதியில் தான் பணிபுரிகிறார் என்றே இன்றுவரை எண்ணிக்கொண்டிருந்தேன். முதன்முதலில் அவரின் தேனீ இயங்கு எழுத்துருவை என் வலைப்பதிவில் பயன்படுத்தியபோது ஏதோ ஆர்வமிகுதியில் 'உமர்பாய்' என்று அவரைக் குறிப்பிட்டுவிட்டு, பிறகு , 'அடடா அறிமுகமில்லாதவரிடம் அதிகம் உரிமை எடுத்துக் கொண்டோமோ' என்று எண்ணி, அவருக்கு என்னைப் புரிந்துகொள்ள வேண்டி முதல் மடல் அனுப்பினேன். அதில், கொஞ்சம் மரியாதையாக 'அன்பு நண்பருக்கு' என்று மடலைத் தொடங்கியிருக்க, 'சகோதரரே என்ற போது கிடைத்த நெருக்கம், நண்பரேவில் இருக்குமா?' என்று வாஞ்சையுடன் பதிலளித்து என் மனதை லேசாக்கினார்.

பிறகு தமிழ்மணம் தளம் அமைக்கும்போது தேனீயை அதில் பயன்படுத்த அனுமதி கேட்டு எழுதினேன். 'தேனீ இன்னும் பலரையும் கொட்ட வாய்ப்பிருக்குமானால் அதைவிட எனக்கென்ன மகிழ்ச்சி இருக்கமுடியும்?' என்று உடனே அனுமதியளித்தார்.

ஒருங்குறி குழுமத்தில் ஆர்வமாக பல கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்தேன். அங்கே முதல் மடலே அவருடையதுதான் . அவரின் ஆங்கில-தமிழ் அகராதியையும் பலமுறை பயன்படுத்தியிருக்கிறேன்.

தமிழ்மணம் மென்னூலாக (pdf) வலைப்பதிவுகளை வழங்க முயன்றபோது அதில் பயன்படுத்தவும் ஒரு எழுத்துரு தேவைப்பட்டது. அதே தேனீ எழுத்துருவின் திஸ்கி வடிவக் கோப்பை நம் அனைவருக்கும் இன்னுமொருமுறை கொடையளித்தார், அன்பு உமர்.

பல எழுத்துருக்களை gpl உரிம முறையில் உலகிற்கு இலவசமாக அளித்துள்ளார். இத்தனை கொடைகளையும் சத்தமில்லாமல் செய்துவிட்டு எந்த பிரதிபலனையும், பாராட்டு உள்பட, எதிர்பார்க்காமல் அடுத்த பணியில் ஈடுபட்டுவிடுவார்.

உமர் அவர்கள் மறைந்தாலும் அவர் பெயரை இந்த தமிழ்க் கணிமை உலகம் என்றும் மறவாது. அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தாருக்கு இந்த இழப்பின் சோகத்திலிருந்து மீண்டு வரும் மன ஆற்றலை இறைவன் அளிக்கட்டும்.

வாழ்க உமர் அவர்களின் புகழ்! வெல்க அவர் தொடங்கி வைத்த தமிழ்க் கணிமை முயற்சிகள்!

புதன், ஜூலை 12, 2006

சில முயற்சிகள் சில அனுபவங்கள் -9

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8

ஊருக்குத் திரும்பும்முன்பே ஆட்சேபகரமான மறுமொழிகள் பிரச்னை ஆரம்பமாகிவிட்டதென நினைவு. ஆனாலும் அதுபற்றி தமிழ்மணம் செய்ய ஒன்றுமில்லை. அனைவரும் ப்ளாக்கர்.காம்-க்கு இதன் தீவிரத்தைக் குறிப்பிட்டு எழுதினால் அவர்கள் ஏதேனும் செய்யலாம் என்ற ஒன்று மட்டுமே சொல்லமுடிந்தது. இந்தப் பிரச்னை அருணா ஸ்ரீனிவாசன் அவர்கள் பதிவில் ஒருமுறை ஒருவன் ஆபாச மறுமொழியை இட்டதால் வெளிச்சத்துக்கு வந்தது என நினைக்கிறேன்.

ஊருக்கு வந்தபின் 'பிடுங்கி நடப்பட்ட மரமாக' பல சிரமங்கள். எனவே பலநாட்கள் இணையத்திலிருந்தே விலகியிருந்தேன். எனவே பதிவுகளில் நடப்பதை முழுதுமாக அறிவது சாத்தியப்படவில்லை. இதனால் இந்த ஆபாசத் தாக்குதல்கள், போலி மறுமொழிகள் பற்றிய முழுமையாக என்னால் பின் தொடரவியலவில்லை. ஊர் திரும்பி சில வாரங்கள் கழித்து அலுவலக வேலையாக சென்னை சென்றேன். முன்பாகத் திட்டமிடாததால் முறையாக அறிவிக்காவிட்டாலும், கிடைப்பவர்களை வைத்து ஒரு வலைப்பதிவர் சந்திப்பை நடத்தலாம் என்ற ஆசையில் ஐகாரஸ் பிரகாஷைத் தொடர்புகொள்ள அவர் அடித்துப்பிடித்து (அவர்களுக்கு) வழக்கமான இடமான உட்லண்ட்ஸ் டிரைவ்-இன்னில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்து அசத்தினார். உண்மையில் கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டு மழைகாரணமாகவே இங்கு மாற்றப்பட்டது அது.

செல்வராஜுடன் பல முறை தொலைபேசியிருந்தாலும் நேரில் சந்திக்க வாய்ப்பு வந்ததில்லை. இத்தனைக்கும் அவர் நாங்கள் வசித்த ரோச்சஸ்டரிலிருந்து சில மணி நேரத்தில் சென்றுவிடும் தூரத்திலேதான் வசித்துக்கொண்டிருந்தார். ஆனால் ஆச்சரியமாக நான் சென்னை வந்திருந்த அன்று அவரும் அலுவலக வேலையாக இந்தியா வந்து சென்னையிலிருந்தார். மாலையில் பெங்களூர் கிளம்பவேண்டியவரை இழுத்துப்பிடித்து சந்திப்புக்கு வரச்சொல்லிக்கேட்க அவரும் ஆர்வத்துடன் சம்மத்தித்தார். அன்றுதான் அவரையும் சந்தித்தேன்.
அந்த சந்திப்பு பலரையும் நேரில் காணும் வாய்ப்பை அளித்தது. மிகுந்த நிறைவாய் இருந்தது. அன்று அனைவரும் இந்த போலியன் பிரச்னையைப் பற்றிப் பேசினோம். மீண்டும் தமிழ்மணம் செய்ய ஒன்றுமில்லை என்று விளக்கிவிட்டு, ஒரு யோசனையாக அப்போது 'கொஞ்ச நாள் மறுமொழி திரட்டுவதை நிறுத்தி வைக்கலாமா?' என்றும் தோன்றியதை முன்வைத்தேன். பலரும் ஆமோதித்தார்கள். ஆனால், பிறகு வீடு திரும்பி ஆழமாக யோசித்துப்பார்த்ததில் இதனால் மட்டும் போலிப்பிரச்னை தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை வராததாலும், எலிக்குப்பயந்து வீட்டைக்கொளுத்திய கதையாக இத்தனை சிரமப்பட்டு ஏற்படுத்திய வசதியை விலக்குவது சரியல்ல என்று தோன்றியதாலும் அதை நடைமுறைப்படுத்தவில்லை. இது அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் சிலருக்குப் பிடிக்கவில்லை என்று பின்னால் உணர்ந்துகொண்டேன். என்ன செய்வது, என் நம்பிக்கைகள்தானே தமிழ்மணத்தில் என்னை இத்தனைதூரம் செலுத்தின, அவற்றுக்கு எதிராக என்னால் இயங்கமுடியவில்லை. அவரவர் நம்பிக்கை அவரவருக்கு.
இதுபற்றி எனக்கு இப்போது கிடைத்த சில சுட்டிகள்: http://pitchaipathiram.blogspot.com/2005/07/blog-post_112082445484376520.html http://pitchaipathiram.blogspot.com/2005/07/blog-post_11.html

அந்த சந்திப்பில் ராமச்சந்திரன் உஷா, பெருமாள் முருகனின் 'கூள மாதாரி' புத்தகத்தைப் பரிசளித்தார். அவர் பரிசளித்தபின் தான் ஒன்று நினைவுக்கு வந்தது.

தமிழ்மணம் மூலம் நான் அளித்துவந்த சேவையை இலவசமாகப் பெறுவதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அன்றைக்கு வலைப்பதிவர்களாக இருந்த சிலர் சேர்ந்து எனக்கு எதேனும் நன்கொடை அளிக்க வேண்டும் என்று பரிமேலழகர் முன்பு ஒரு யோசனையை முன்வைத்திருந்தார். http://pari.kirukkalgal.com/?p=130 நன்கொடையாக எதையும் பெறுவதில் எனக்கு விருப்பமில்லை, என் சுதந்திரத்துக்கு அது கேடுவிளைக்கும் என்று சுட்டிக்காட்டி, 'கொடுத்தே ஆக வேண்டும் என்றால் ஆளுக்கு ஒரு புத்தகம் பரிசளியுங்கள். முடிந்தால் உங்கள் கையொப்பத்துடன் அளியுங்கள். ஊர்திரும்பியவுடன் என் இல்லத்தில் அவற்றைச் சேர்த்துவைத்து பெருமைப்பட்டுக்கொள்வேன்' என்று சொல்லியிருந்தேன். நான் இந்தியா திரும்பிய பின்னரே புத்தகங்களைப் பெற்றுக்கொள்வேன் என்றும் சொல்லியிருந்தேன். உஷா அதை நினைவில் வைத்துக் கொடுத்தாரா என்று அறியேன். எதுவானாலும் அருமையான புத்தகத்தைப் பரிசளித்த அவருக்கு என் நன்றி.

அன்று வலைப்பதிவர் சந்திப்புக்கு சென்னை வந்திருந்த இன்னொரு நண்பர் தமிழ்மணம் திரட்டி இயங்கும் நுட்பம் குறித்து சில கேள்விகளை என்னுடன் தனியாகக் கேட்டுக்கொண்டார். அதன் பின்னரும் அஞ்சல் தொடர்பில்/தொலைபேசியில் எங்களுக்குள் பரிமாற்றம் இருந்தது. அவர் இன்று தேன்கூடு நடத்தும் அன்பர்.

-தொடரும்

சில முயற்சிகள் சில அனுபவங்கள் -8

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7

இன்னும் நவன் பகவதி, சாகரன், சத்யராஜ்குமார், என்று பலர் சிறுசிறு ஆலோசனைகளை வழங்கி தமிழ்மணம் மேம்பட உதவியிருக்கிறார்கள். (இன்னும் கூட சிலரின் பெயர் விட்டுப்போயிருக்கலாம், முடிந்தவரை நினைவிலிருந்து எழுதுகிறேன்.) பலர் தனிப்பட்ட முறையில் நேரில் சந்திக்கும்போதும், மின்னஞ்சல் வழியாகவும் 'தமிழ்மணம் ஒரு சாதனை' என்றெல்லாம் பாராட்டியிருக்கிறார்கள். ஆனாலும் எந்த பிரபல தினசரி/வார/மாத இதழிலோ, சிற்றிதழிலோ, திசைகள் தவிர பிற இணைய இதழிலோ வலைப்பதிவுகள் என்ற ஒரு வடிவத்தின் இருப்பையோ வளர்ச்சியையோ அவற்றுக்கு தமிழ்மணம் போன்ற முயற்சிகளின்மூலம் கிடைக்கும் உத்வேகத்தையோ குறிப்பிட்டு யாரும் எழுதியதில்லை. ஓரிருமுறை சில இதழ்கள் வலைப்பதிவுகளிலிருந்து எடுத்தாண்டு மறுபதிப்பு செய்தபோதும் இந்த விஷயத்தில் பெரும் கவனத்துடனே இருந்தார்கள். வலைப்பதிவுகளை சிலாகிக்கவோ, வாழ்த்தி, வரவேற்கவோ நான் கோரவில்லை. ஒரு செய்தியாகவாவது குறிப்பிடப்படவில்லை என்பதுதான் நான் சொல்லவருவது. இது பெரும் நெருடலாகவே இருந்து வந்தது.

இத்தனைக்கும் பல ஊடகங்களிலும் இயங்கும் பலர் இங்கு வலைப்பதித்துக்கொண்டிருந்தார்கள். பத்திரிகையாளர்களும் இருந்தார்கள். எழுத்தாளர்களும் இருந்தார்கள். 'வலைப்பதிவர் என்பவர், இவர்கள் யாருக்கும் மாற்றோ, போட்டியோ அல்லர், அவர் ஒரு புதுவகைப் பிராணி' என்பதை இவர்கள் உணரத் தவறியதாலேயே அளவுக்கு மீறிய எச்சரிக்கை உணர்வால் வலைப்பதிவர்களை சக எழுத்தாளர்களாகவும், பத்திரிகையாளர்களாகவும் பார்த்து போட்டி மனப்பான்மை வந்துவிட்டதோ என்றும் எனக்கு ஐயம் இருக்கிறது.

இன்றும் நான் தெளிவாகவே இருக்கிறேன்: வலைப்பதிவர் என்பவர் எழுத்தாளருக்கோ, பத்திரிகையாளருக்கோ என்றும் போட்டியாக முடியாது. அவர்கள் அளவுக்கு (வலைப்பதிவில் மட்டும் நாட்டமுள்ள) ஒரு வலைப்பதிவருக்கு எடுத்த பொருளில், இயக்கத்தில் தீவிரம் இருப்பது அரிது. அதே நேரத்தில் வலைப்பதிவு என்ற வடிவத்திலும் ஒருவர் உச்சத்தைத் தொடமுடியும், அவர் புத்தகம் போடவேண்டியதில்லை, பத்திரிகைக்கு எழுதவேண்டியதில்லை. எப்படி வானொலியில், தொலைகாட்சியில் செய்தி வாசிக்க ஆரம்பித்தாலும் செய்தித்தாளின் முக்கியத்துவம் குறையவில்லையோ, எப்படி தொலைக்காட்சியில் நாடகங்கள் வந்தும் திரைப்படத்தின் தாக்கம் குறையவில்லையோ, அப்படியே வலைப்பதிவுகளின் வருகையால் மற்ற எழுத்து வடிவங்களுக்கும் எந்தப் பாதிப்பும் வரும் என்று நான் நம்பவில்லை. கட்டிலில், ரயிலில், சாப்பிடும்போது ஒற்றைக் கையில் என்று ஒரு புத்தகம் படித்த அனுபவம் அதன் இ-வடிவத்தில் கிடைக்குமா? ஏகப்பட்ட இடைநிறுத்தங்கள், கவன இழப்புகளோடு டிவியில் படம் பார்ப்பது அரங்கில் முழு இருட்டில் படம் பார்ப்பதுபோல வருமா? அதுபோலவேதான் வலைப்பதிவும். காலம் இதை தெளிவுபடுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இடையில் வலைப்பதிவர்களுக்காக பரிசு என்ற அறிவிப்பை திசைகள் மூலம் வழங்குவதாக மாலன் அறிவித்தார். அனைவரும் பாராட்டினோம். ஒரு வருடம் முழுதும் எழுதப்படும் பதிவுகளை அவதானித்து சிறந்தவற்றைத் தேர்ந்தெடுக்க அருணா ஸ்ரீனிவாசன், சுரதா, பத்ரி, மதி இவர்களுடன் என்னையும் சேர்த்து ஒரு தேர்வுக்குழு அறிவிக்கப்பட்டது. வருடம் முழுவதும் தொடர்ந்து அவதானிப்பது, அதுவும் பலர் செய்வது என்பதால் சரியான வழிகாட்டு நெறிமுறைகள் வேண்டும் என்றும் மாலனுக்கு பரிந்துரைத்தேன். தேர்வுக்குழுவுக்கு ஒரு தகவலாக தமிழ்மணத்திலிருந்து மாதத்தில் பத்து இடுகைக்கு மேல் எழுதியவர்களுக்கான மொத்த இடுகைகள், மொத்த மறுமொழிகள் போன்ற தகவல்கள் தரவுத்தளத்திலிருந்து திரட்டி அனுப்பும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அதே போல மூன்று மாதங்கள் அனுப்பியும் வந்தேன். அதை அனுப்பும்போதே, நாம் எண்ணிக்கைகளுக்கு எச்சரிக்கையுடனேகூடிய மரியாதையே அளிக்கவேண்டும் என்ற குறிப்பும் அனுப்பினேன்.


இது நடந்து சில மாதங்களிலேயே மாலன் தன் மீது ஒருவர் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியைக் காட்ட அவரின் வலைப்பதிவைப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுப்பி, தான் வலைப்பதிவுகளிலிருந்து விலகுவதாகச் சொன்னார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டது. அந்த சர்ச்சையில் யார் செய்தது தவறு சரி என்பதெல்லாம் இலக்கியவாதிகளின் பிரச்னை, என் சிற்றறிவுக்கு எட்டாதது. ஆனால் 'இதற்காக இப்படி முடிவெடுக்க வேண்டியதில்லை, வேண்டுமானால் சற்று விடுப்பு எடுத்துக்கொண்டு வாருங்கள்' என்று பலரும் சொன்னோம். அது போலவே மாலனும் முற்றாக விலகிவிடாமல் அவ்வப்பொது இன்றும் வலைப்பதிக்கிறார்.

ஆனாலும் மாலனின் இந்த நிலைப்பாடு பரிசு திட்டத்தைப் பாதித்தது. தான் விலகினாலும் திட்டம் தொடரும் என்று அவர் அறிவித்தது யாருக்கும் பெரிய அளவில் நம்பிக்கையளிக்கவில்லை. 'வலைப்பதிவுகள் வேண்டாம்' என்று சொல்லும் ஒருவர் முன்னின்று அளிக்கும் பரிசோ/விருதோ வாங்கிக்கொள்பவருக்கு எப்படி இருக்கும்? எனவே அந்த தேர்வுக்குழு என்ன ஆயிற்று என்பது அறிவிக்கப்படாமலே அழிந்துபோனது.

இதற்குள் தமிழ்மணம் 500 பதிவுகளைத் தாண்டி நடைபோட்டது. 500வதாக சேர்க்கப்பட்டது தமிழ்மணம் அறிவிப்புகள் என்ற வலைப்பதிவு. நான் அமெரிக்காவைவிட்டு நீங்கி குடும்பத்துடன் இந்தியாவுக்கு நகர்ந்த போது சுமார் 600 வலைப்பதிவுகள் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அமெரிக்காவில் இருக்கும்போதே தமிழ்மணம் இரண்டாம் பதிப்பை ஓரளவுக்கு திட்டமிட்டுவிட்டிருந்தேன். அதன் முன்வடிவை நிர்வாகிகளுடன் பகிர்ந்தும்கொண்டிருந்தேன். கருவிப்பட்டை உட்பட சில நுட்பங்களை சோதித்துப் பார்த்திருந்தேன். ஊர் திரும்புமுன் நடைமுறைக்குக் கொண்டுவர முயன்றும் முடியவில்லை. ஊருக்குப் போய் செய்யலாம் என்ற சமாதானத்துடன், செல்வா/மதி/பரியிடம் நடவடிக்கைகளை ஒப்படைத்துவிட்டு நடையைக் கட்டினேன்.

- தொடரும்

செவ்வாய், ஜூலை 11, 2006

சில முயற்சிகள் சில அனுபவங்கள் -7

பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6

பயனர்கள் தமிழ்மணம் தள இயக்கம் பற்றிய தங்கள் கருத்துக்களை/கேள்விகளை விவாதிக்க ஒரு மேடை வேண்டும் என்பதால் முதலில் குறைந்த வசதிகளுடன் ஒரு மன்றம் அமைக்கப்பட்டது. பிறகு phbb forum என்ற திறமூல நிரல்பொதியை தமிழ்ப்படுத்தி தமிழ்மணம் தளத்துக்குள்ளேயே இயங்குமாறு அமைத்தேன். ஆனாலும், இந்தத் தமிழ்ப்படுத்திய நிரல்பொதியை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. காரணம், இது முழுமையான தமிழ்ப்படுத்தலன்று என்பதும், அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்குக்குத் தேவையான நேரமும் பொறுமையும் எனக்கு அப்போது இல்லை என்பதும். ஆயினும் தனிப்பட்டமுறையில் என்னிடம் கேட்ட சில நண்பர்களுக்கு அதன் மொழியாக்கம் செய்யப்பட்ட கோப்பைப் பகிர்ந்துகொண்டேன்.

இந்த மன்ற நிரல்பொதி ஒரு முழுமையான மன்றத்தை இயக்கும் ஆற்றல்மிக்க பொதி. ஆற்றலுடன் கூடவே பாதுகாப்புச் சிக்கல்களும் இருந்தன. எனவே இந்த மன்றத்தை நிர்வகிக்கும் பணியை ஒருவர் பொறுப்பேற்றுச் செய்தால் சிறப்பாக இருக்கும் என்று நண்பர் பரிமேலழகரிடம் கேட்டதில் உடனே ஏற்றுக்கொண்டார். அப்படியும் இரு முறை இந்த மன்றம் கொந்தர்களின் (hackers) வன்தாக்குதலுக்கு ஆளானது. பல முக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் இழக்கப்பட்டன. அதன் பின்னர் ஓரளவு மீட்டெடுக்க முடிந்தாலும் இதுதான் சரியான முறையா என்ற கேள்வி தொடர்ந்து எழவும், மன்ற நிரல் பொதியைக் கையாளும் நிரலாளர்களின் வலைத்தளமே (www.phbb.com) பலமுறை கொந்தப்படுவதைப் பார்த்ததாலும், இதைக் கைவிட்டு, கூகிள் குழுமத்துக்கு மன்றத்தை மாற்றியமைத்தேன். இதன்மூலம் குறைந்தபட்சம் மேலும் மடல் பரிமாற்றங்கள் இழப்பதை நிறுத்த முடிகிறது.

இந்த மன்றம் என்பது பயனர்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் இடமாக இருக்கவேண்டும், அவர்களால் தீர்வு சொல்ல இயலாத பிரச்னைகளுக்கு தமிழ்மண நிர்வாகிகளோ, நானோ பதிலளிக்குமாறு இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது நிறைவேறவில்லை. நம் பயனர்கள் இதை 1-800-... வாடிக்கையாளர் சேவை மையமாகத் தான் பார்த்தார்கள். முழுக்க விளக்கப்பட்ட பிரச்னைகளுக்கும் எதையுமே வாசிக்காமல், தாங்களும் யோசிக்காமல் கேள்விகள் கேட்கப்படுவது வாடிக்கையாக நடக்கிறது. ஒரு வணிக நிறுவனம் அளிக்கும் வாடிக்கையாளர் சேவை என்றால் இப்படிக் கேட்பதில் தவறில்லை. பயனர் கையேட்டில் குறிப்பிட்டிருந்தாலும் வாடிக்கையாளர் அதைப் படிக்காமல் கேட்டாலும், சேவை அளிப்பவர் பதில் சொல்லியாக வேண்டியது கட்டாயம். ஆனால் ஆர்வத்தில் செய்யப்படும் தமிழ்மணம் போன்ற முயற்சிகளில் இதே வாடிக்கையாளர் சேவையை எதிர்பார்ப்பது நியாயமில்லை அல்லவா?

பல கேள்விகளுக்கும் தெளிவாக விளக்கப்பட்ட உதவிப்பக்கங்கள் உள்ளன. அதிலும் விடுபட்டிருப்பின், பதில் தெரிந்த 100 பேர் இங்கே இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் பதில் சொல்வதில்லை. நூற்றில் ஒருவர் சிரமமெடுத்து சில சமயம் சொல்லுவார். அவரும் சில நாளில் மனம் சோர்ந்தோ என்னவோ மேலும் அதைத் தொடர முடியாமல் விட்டுவிடுவார். ஆனால் 'கேட்டேன், பதிலில்லை' என்று ஒற்றைத்தனமாக தமிழ்மணம் சேவையை மட்டந்தட்டிப் பேசி, அதற்கும் ஒரு மடலோ, இடுகையோ எழுதிவிட்டுப் போய்க்கொண்டே இருப்பதைப் பார்த்து மனம் நொந்ததும் உண்டு. இதுபோன்று கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் உள்ள சிரமத்துக்கு வணிக நிறுவனங்களுக்கும் தமிழ்மணத்துக்கும் உள்ள முக்கிய வேறுபாடான இலவசம் (அதனால் ஆள்போட்டு நடத்த முடியாது, அதனால் எல்லாரையும் திருப்தி செய்ய முடியாது) என்ற காரணியைச் சுட்டினால், 'ஃப்ரீன்னா ஃபினாயிலையும் குடிக்கமுடியுமா?' என்ற கொச்சைப் பேச்சும் கேட்டதுண்டு. இன்னும் சில பெரிய மனிதர்கள் மன்றத்தில்கூட கேட்காமல் தங்கள் பதிவிலேயே எழுதிவிட்டு தமிழ்மணம் பதில் சொல்லவேண்டும் என்று எதிர்பார்த்து, பதில்வராததால் கோபித்ததும் உண்டு. தமிழ்ச் சமூகத்துக்கு சேவையளிக்க முனையும் எவரும் இந்நிகழ்வுகளை நினைவில் நிறுத்தி தகுந்த ஏற்பாடுகளுடனும் மனநிலையுடனும் நடந்துகொள்வது அவசியம் என்பது என் அனுபவம்.

வெள்ளி, ஜூலை 07, 2006

சில முயற்சிகள் சில அனுபவங்கள் -6

பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5

பாராட்டுக்கள் குவிந்தபோதே சச்சரவுகளும் இருந்தன.

தமிழில் எழுதப்படும் வலைப்பதிவுகளுக்கு மட்டும் என்ற கொள்கையால் ஆங்கில வலைப்பதிவு ஒன்றை ஏற்க மறுத்ததற்கு தன்னை இசைக்கலைஞர் என்று அறிவித்துக்கொண்ட ஒரு வலைப்பதிவர் மரியாதைக்குறைவாக தன்னுடைய வலைப்பதிவில் எழுதியதும் நடந்தது. தமிழ்மணம் சேவை பெறும் அவரின் நெருங்கிய நண்பர்கள் பலரும் அன்று குறைந்த பட்ச நாகரிகத்துக்காகவாவது அவருக்குக் கண்டனம் தெரிவிக்காததைப் பார்த்த போதுதான் தமிழ் இணையம் ஒரு வெளிப்படையான உலகம் அல்ல, இங்கே மாயச் சுழல்கள் பல ஏற்கனவே இயங்குகின்றன என்ற புரிந்துணர்வு எனக்கு வந்தது. ஆனால் இன்று இருக்கும் போலிகளையும் முகமிலிகளையும் பார்த்தால் அவர் எழுதியது பெரிய எரிச்சலைத்தராது என்பது உண்மை.

தானே தன் வலைப்பதிவை தமிழ்மணத்தில் சேர்க்கலாம் என்பது ஆரம்ப காலம் முதலே இருந்த நடைமுறை. இதில் இன்று இருக்கும் கட்டுப்பாடுகள் அன்று இல்லை. ஒருவர் தன் வலைப்பதிவைச் சேர்த்த அடுத்த நொடியே அது பட்டியலிலும் திரட்டியிலும் தெரிய ஆரம்பித்துவிடும். அந்தரங்கமான விஷயங்களை ஒருவர் எழுதி இப்படிச் சேர்த்த பின்னரே இதன் அபாயம் புரிந்து, முன்பார்வையிட்டு நிர்வாகி ஒருவர் சேர்க்கும் முறை வந்தது. பெயருக்கு ஒன்றை தொடங்கி தமிழ்மணத்தில் சேர்த்து, பின் கிடப்பில் போடுவதைப் பார்த்தே 3 இடுகைகளாவது எழுதிய பின்னரே சேர்க்கப்படும் என்ற நடைமுறை வந்தது.

வலைப்பூ ஒருங்கிணைப்பாளராக இருந்தபோதே ஒரு தரவுத்தளத்தை ஏற்படுத்தி அனைவரையும் தங்கள் தகவல்களை உள்ளிடச் சொல்லிக் கேட்டிருந்தேன். அப்போது தமிழ்மணம்.காம் இந்தத் தகவல்களைப் பயன்படுத்தப் போகிறது என்ற விவரமான திட்டம் இல்லை. ஒழுங்கற்ற வடிவத்தில் தரவுகள் இருப்பதை விட சீரான கட்டமைப்பில் தரவுகள் இருப்பது அவற்றின் பயன்பாட்டினை விரிவாக்கும் என்ற நம்பிக்கையில் செய்தது அது. தமிழ்மணம் வெளியிடும்போது அன்றுவரை இந்த தரவுத்தளத்தில் தன் விவரங்களைச் சேர்த்த வலைப்பதிவுகளை மட்டும் (108 என்று நினைவு) நானாக சேர்த்துவிட்டேன். (இப்படி திறந்த இடத்தில் கிடைத்த பட்டியலைக் கொண்டு தொடங்கப்பட்டதாலே தமிழ்மணம் முதல்பதிப்பு 800க்கும் மேல் வளர்ந்தும், பதிவுகளின் பட்டியலை மூடி வைக்காமல் opml வடிவில் யாருக்கும் கிடைக்கச் செய்தேன். அதுவே தேன்கூடு போன்ற முயற்சிகளுக்கு ஆதாரமாக இருந்தது.) அப்படி அதுவரை தாங்களாக முன்வந்து அளிக்காதவர்களை ஒதுக்குவதல்ல என் நோக்கம். அவர்களும் நொடியில் தங்கள் தகவல்களைச் சேர்த்து இணைந்துகொள்ள தமிழ்மணத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதையும் புரிந்துகொள்ளாமல், 'ஏன் என் வலைப்பதிவைச் சேர்க்கவில்லை', 'ஏன் என் நண்பருடைதைச் சேர்க்கவில்லை' என்று கூவியவர்களும் இருந்தார்கள். அவர்களுக்குப் பொறுமையாக பதில் சொல்லி விளக்கம் கொடுத்த பின்னும் இது நடந்ததிலிருந்து இந்த சமூகம் சுயசேவைக்கு இன்னும் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளவில்லை என்றும் புரிந்தது.

தானியங்கிக் கருவியே தற்போக்காக எடுத்த (Randomly picked)10 பதிவுகளை பட்டியலில் காட்டும்போதும் 'என் பெயர் வருவதேயில்லை, காசி தனக்குப்பிடித்த பெயர்களை மட்டும் முன்னிறுத்துகிறார்' என்றும் சிலர் குறைபட்டுக்கொண்டபோது இங்கே எத்தகைய 'தன்னை மையப்படுத்தும், அவநம்பிக்கை நிறைந்த' சூழல் நிலவுகிறது என்று புரிந்தது. இத்தனைக்கும் இப்படிச் சொன்னவர்களில் ஒருவர் தேர்ந்த அறிவியலாளர். இன்னொருவர் மென்பொருள் வல்லுநர்!

பலரும் எழுதுவதில் சிறந்த இடுகைகள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து தனியாகக் காட்டலாம் என்று சில நண்பர்கள் சொல்லவே, மேற்சொன்ன சூழல் அளித்த பயத்தால் 'இப்படிக் காட்டுவதற்கு தேர்வுக்குழு ஒன்றை அமைப்பது சர்ச்சைக்கு வழிவகுக்கும், ஆகவே, ஜனநாயகமுறைப்படி தேர்வு நடக்கட்டும்' என்று சிந்தித்து, வாசகரே வாக்களித்துப் பரிந்துரைக்கும் வசதியை ஏற்படுத்தினேன். அதில் வளைகுடா நாடுகளில் இணையத்தொடர்பு அளிக்கும் நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் விசேட முறைமையால் கள்ளவாக்குப் போட வாய்ப்பிருப்பதைக் கண்ட நண்பர்கள், 'குறைகளை என்னிடத்தில் சொல்லுங்கள், நிறைகளை நண்பர்களிடத்தில் சொல்லுங்கள்' என்ற மேற்கோளுக்கு நேர் எதிராக இயங்கி, 'இந்தப் பரிந்துரை முறையே ஒரு போங்கு' என்ற நல்ல செய்தியைத் தங்கள் வலைப்பதிவில் எழுதிப் பரப்பி, முறைமை மேம்பட உதவியதும் நடந்தது.

அதன் பின்னர் அதற்கும் ஒரு தீர்வு காணப்பட்டாலும், இணையத்தில் உள்நுழை/மின்னஞ்சல்-அழைப்பு அல்லாத நேரடி வாக்கெடுப்பு முறைகள் எதிலுமே முற்றிலும் நம்பகமானது என்று எதுவுமில்லை என்பதைப் புரிந்துகொள்ளாமல் ஏசுவது இன்றும் தொடர்கிறது. தன் இடுகைகள் பரிந்துரைக்கப்படாததைப் பொறுக்க முடியாதவர்கள், தங்கள் கருத்துக்கு எதிரானவை பரிந்துரைக்கப்படுவதை சகிக்காதவர்கள் இதை ஏற்றுக்கொள்ளாததும் தொடர்கிறது.

-தொடரும்

சில முயற்சிகள் சில அனுபவங்கள் -5

பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4

தமிழ் வலைப்பதிவுகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த முயற்சிகள் என்றால் மதி/சுரதாவின் உதவிப் பக்கங்கள், வளைகுடாப்பகுதியில் வசித்த உமர் தயாரித்து அளித்த தேனீ இயங்கு எழுத்துரு, மலேசியாவிலிருந்த முகுந்த் தலைமையில் தமிழா குழு அளித்த இ-கலப்பை தட்டச்சு செலுத்தி, மறுமொழியிடலை எளிதாக்கிய ஜெர்மனிவாழ் சுரதாவின் பொங்குதமிழ் ஜாவாஸ்க்ரிப்ட் நிரல் ஆகியனவற்றைச் சொல்லலாம். முக்கியமாக தேனீ இயங்கு எழுத்துரு தயாரிக்கையில் உமர் கூடுதல் முயற்சி எடுத்து எல்லாத் தளங்களிலும் அது இயங்குமாறு செய்திருந்தது ஒரு சிறப்பு.

இவை அனைத்தும் பொதுநல நோக்கில் விருப்பு வெறுப்பின்றி இலவசமாகவே அளிக்கப்பட்டன. ஆகவே, இவற்றின் நீட்சியாக தமிழ்மணம் சேவையும் இலவசமாகவே என்றும் அளிக்கப்பட வேண்டும் என்பதை ஒரு அடிப்படைக் கொள்கையாகக் கொண்டேன். இத்தனைக்கும் ப்ளாக்கர்.காம் வலைப்பதிவுகளில் மறுமொழிச் சேவை இல்லாததால் என் வலைப்பதிவுக்கு backblog.com என்ற, வெளியிலிருந்து இயங்கும் மறுமொழிச் சேவையைப் பெற வருடம் $10 சந்தா கட்டியிருக்கிறேன். இன்று தமிழ்மணம் திரட்டி இலவசமாக அளிக்கும் சேவைகள் விலை கொடுத்துப் பெற்ற இந்த சேவையின் வேலைத்திறனை விட பல மடங்கு இருக்கும் என்பது கண்கூடு.

சுரதாவின் முயற்சியில் ஒரு வலைத்திரட்டி உருவாவது அறிந்து அவருடனும் தொடர்பு கொண்டு தமிழ்மணம் உருவாவதைப் பகிர்ந்துகொண்டபோது இரண்டும் வேறுவேறு நுட்பத்தில் இயங்குவதை விளக்கி, தமிழ்மணம் இயக்கும் நுட்பத்தின் கூடுதல் சிறப்பைக் குறிப்பிட்டு மனதாரப் பாராட்டினார். அத்துடன் தமிழ்மணத்தின் ஆரம்ப காலத்தில் தொடர்ச்சியான பல ஆலோசனைகளை வ்ழங்கி மேம்படுத்தலுக்கும் உதவினார்.

முகுந்த்தும் ஒரு திரட்டியை தன்னுடைய தளத்தில் நிறுவியிருந்தார். ஆனால் சரியாக அதை வளர்த்து சீராட்டுவதன் தேவையை உணராததாலோ என்னவோ அது பிரபலமாகாமலேயே போய்விட்டது.

வியாழன், ஜூலை 06, 2006

சில முயற்சிகள் சில அனுபவங்கள் -4

பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3

நிர்வாகப் பணிக்கு மதி, செல்வராஜ், அன்பு செழியன் ஆகியோர் (பரி பின்னாளில் நிர்வாகத்தில் பங்கெடுத்தார்) முன்வந்தனர். பத்ரி, மீனாக்ஸ், சந்திரவதனா, மதி ஆகியோர் உறுப்பினராக ஒரு ஆலோசனைக்குழுவும் ஏற்படுத்தப்பட்டது. முதல் கட்டப்பணியாக இந்தவார நட்சத்திரத்தைத் தேர்ந்தெடுத்து ஏற்பாடு செய்யும் பணி நான்கு வார சுற்றாக நால்வரிடமும் அளிக்கப்பட்டது. அவரவர்க்கு ஒரு புவியியல் களமும் வரையறுக்கப்பட்டது. இதன்மூலம் எந்த வாரத்துக்கு யார் ஏற்பாடு, அல்லது யாரிலிருந்து யார் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்துக்கு அறவே வழியின்றி செய்யப்பட்டது.

மூன்று சுற்றுக்கள் அதாவது 12 வாரங்கள் இந்த ஏற்பாடு தட்டுத்தடுமாறி நடந்தது. இது இனியும் தொடர்ந்தால் 'இந்த வார நட்சத்திரம்' என்ற வடிவத்துக்கே முழுக்குப் போட்டுவிடவேண்டியதுதான் என்னுமளவுக்கு குழு மூலமான செயல்முறை இருந்தது. ஒவ்வொருவருக்கும் பலமுறை நான் நினைவூட்ட வேண்டியிருந்ததிலிருந்து, கடைசி நிமிடத்தில் ஒப்புக்கு சப்பாணியாக ஒருவரை ஏற்பாடு செய்ததுவரை பொறுமையை நன்றாகவே சோதித்தது இந்த முயற்சி. நானே முன்வந்து நட்சத்திரத்துக்கு ஆள்பிடித்துக்கொடுத்ததும் உண்டு! வ.கே.கே/விக்கி இரண்டும் கனவில் வந்து சிரித்தன.

இப்படிச் சொல்வதால் ஆலோசனைக்குழு உறுப்பினர்களை மட்டம் தட்டுவதாய் ஆகாது. அவரவருக்கு ஆயிரம் வேலைகள், முக்கியப் பிரச்னைகள்!

இதற்குள் மதியும் மீண்டும் தான் பொறுப்பேற்கத் தயாராயிருப்பதாய்ச் சொல்லவே, இந்த வார நட்சத்திரத்தை மதி ஒருவரே ஒருங்கிணைப்பதென்று முடிவு செய்தேன். ஒருவிதத்தில் அவர் நடத்தி வந்த 'வலைப்பூ' வாத்தியாரின் ஒன்னொரு வடிவமே இது. எனவே அவரே தொடர்வதே சரியெனப் பட்டது. அதுவே இன்றும் தொடர்கிறது. ஆனால் ஆயிரத்துக்கும்மேல் வலைப்பதிவுகள் வந்துவிட்ட நிலையில் இனி வாரம் ஒருவர் என்று முன்னிறுத்துவது சரியாக இருக்குமா என்றும் மனதில் இன்று கேள்வி எழாமல் இல்லை.

இந்த நட்சத்திரமாகட்டும் வலைப்பூ வாத்தியாராகட்டும் நடத்துவதில் உள்ள சிரமம் நடத்தியவர்களுக்கே தெரியும். பலரும் 'இவரைப் போய் ஏன் போட்டார்கள், இன்னும் சிறப்பாக எழுதும் அவரை ஏன் போடவில்லை?' என்றெல்லாம் பேசலாம். ஆனால் உண்மையில் இந்த வாரம் நீங்கள் இருக்கத்தயாரா என்று கேட்டால் பாதிப்பேர் நான் அந்த வாரம் ரொம்ப பிசி என்பார்கள். (இன்று என்னை புனைபெயரில் தாக்கி எழுதும் வலைப்பதிவர்கூட அன்று அவருடைய இன்னொரு புனைபெயரில் தொடர்பு கொண்டபோது நேரமில்லை என்றுதான் சொல்லிவிட்டார்) சிலர் சரி என்று ஒப்புக்கொண்டுவிட்டு கடைசி நிமிடத்தில் ஜகா வாங்குவதும் நடந்திருக்கிறது. இன்னும் சிலர் சரியாக எழுதாமலும் சொதப்பியதும் உண்டு. எதையும் விமர்சிப்பது எளிது செய்வது எத்தனை கடினம் என்பது இந்த அனுபவங்களில் கிடைத்த பாடம்.

-தொடரும்

சில முயற்சிகள் சில அனுபவங்கள் -3

பாகம் 1 | பாகம் 2

விடுப்பு முடிந்து அமெரிக்கா திரும்பியும், மனம் வலைப்பதிவுகளில் எழுதுவதை விட இந்த 'தளம்' அமைக்கும் விருப்பத்திலேயே லயித்து இருந்தது. எனவே உள்ளூர் பார்டர்ஸ் புத்தகக்கடையில் php/mysql புத்தகம் வாங்கி உடனே முயற்சியைத் தொடங்கினேன்.

முதலில் தானே தகவல்களைச் சேர்க்கும் பட்டியல் ஒன்றைத் தயாரித்தேன். அதை சோதித்து ஆலோசனை வழங்கியவர்களில் நண்பர்கள் செல்வராஜ், பாஸ்டன் பாலா, சத்யராஜ்குமார் ஆகியோர் முக்கியமானவர்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கி திரட்டியையும் சேர்த்து ஆகஸ்ட் 23, 2004 அன்று வெளியிட்டேன். இடையில் வலைப்பூ ஒருங்கிணைப்புப் பணியை மதியிடமே கொடுத்திருந்தேன். எனவே இதில் முழுமையாக ஈடுபடமுடிந்தது. அந்த 2 மாதங்கள் என் முழு சிந்தனையுமே இதிலேதான் கிடந்தது.

வெளியிடும்போது புது ஆள்களப்பெயரோடு வெளியிட எண்ணி துண்டுபோட்டுவைத்த பெயர்தான் 'நந்தவனம்.காம்'. ஆனால் நானாக வெளியிடும் முன்பே பலரும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டதால் தற்காலிகமாக இயங்கிவந்த 'தமிழ்மணம்.காம்' என்பதையே நிரந்தரமாக்கிவிட்டேன். வெங்கட், பத்ரி, மாலன், கண்ணன் போன்றோரிடம் முன்னதாக அறிவித்து ஆலோசனை கோரினேன். வெங்கட்மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்து பல யோசனைகளை சொல்லியிருந்தார். கண்ணனும் மாலனும் வாழ்த்தினார்கள். மாலன் ஒருபடி மேலே போய், திசைகள் இதழில் நல்ல அறிமுகம் கொடுத்தார்.

அத்தோடு நிறுத்தாமல் தொடர்ச்சியாக மே 2005 வரை தமிழ்மணத்தின் ஆற்றல்களையும் வசதிகளையும் மேம்படுத்திகொண்டே இருந்ததால் தமிழ்மணம் பலரும் விரும்பிப் பயன்படுத்தும் ஒரு வசதியாகிப்போனது. 'இந்த இணைய இதழில் எழுதுகிறேன்' என்பதுபோல 'தமிழ்மணத்தில் எழுதுகிறேன்' என்று சொல்லுமளவுக்குத் தமிழ்மணமும் தமிழ்வலைப்பதிவுலகமும் ஒன்றாகிப் போனது. இதனால் பெருமை இருந்தாலும் பல சிக்கல்களும் இருந்தன. ப்ளாக்கர்.காம்க்கும் தமிழ்மணத்துக்கும் கூட வேறுபாடு தெரியாதவர்களும் இருந்தார்கள்.

தொடங்கியபோது தமிழ்மணத்தில் இருந்த வசதிகள் இரண்டே தான்:
  1. தொடங்கிய தேதி, வலைப்பதிவர் பெயர், வசிக்கும் கண்டம் வாரியாக அடுக்கப்பட்ட வலைப்பதிவர் பட்டியல
  2. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக எழுதப்பட்ட இடுகைகள் (15 நிமிடத்துக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட்டது)

பிறகு பல்வேறு கட்டங்களில் ஏற்படுத்தப்பட்ட முக்கியமான மேம்பாடுகள்:
  1. கருத்துக்களம் சார்ந்த பதிவுகள் பகுதி
  2. சென்ற நாட்களில் எழுதப்பட்டவை
  3. மறுமொழி நிலவரம் காட்டுதல்.
  4. இடுகைகளில் தேடுதல்
  5. வாசகர் பரிந்துரை வசதி
  6. பிடிஎஃப் மென்னூலாக்கும் வசதி.
  7. ஆங்கில இடுகைகளை தானாக மறைக்கும் வசதி.
  8. இடுகைகளின்மேல் ஆட்சேபம் தெரிவிக்கும் வசதி.

தமிழ்மணம் தொடங்கிய சில வாரங்களில் மதியிடமிருந்து, தான் சில மாதங்கள் தீவிர இணையச் செயல்பாட்டிருந்து விலகியிருக்க நேர்ந்திருப்பதாயும் அதனால் 'மீண்டும் வலைப்பூவை ஒருங்கிணைக்க முடியுமா?' என்ற வேண்டுகோள் வந்தது. அப்போது உதயமானதுதான் 'இந்த வார நட்சத்திர' யோசனை. அதே சமயத்தில் இதுவரை முழுக்க முழுக்க தனியொருவனாக நடத்திவந்த தமிழ்மணத்தில் ஆலோசனைக்கும், நிர்வாகத்துக்கும் வலைப்பதிவு நண்பர்கள் சிலரைத் துணைக்கொண்டு தமிழ்மணப் பணியைப் பரவலாக்கவும் யோசனை வந்தது.

-தொடர்ந்து வரும்.

சில முயற்சிகள் சில அனுபவங்கள் -2

பாகம் 1

சில மாதங்களுக்கு முன்புதான் கண்ணனிடம் 'ஹெச்டிஎம்எல் டேக் என்றால் என்ன' என்று கேட்டவன், 'டெம்ப்ளேட்டை எப்படி மாற்றலாம், டைனமிக் ஃபான்ட் எப்படிப் போடுவது', என்று தேடியவன், ஒவ்வொன்றாய்க் கற்றுக்கொண்டு, வலைப்பதிவையே அப்போதுதான் புரிந்துகொண்டிருந்தேன். ஆனால் அதற்கும் மேலாக இணைய வழங்கி(web server), தரவுத்தளம்(database), வழங்கிப்பக்க நிரலி(server-side scripting) என்று பல புது நுட்பங்கள் மிரட்டின. எப்படியோ விழுந்து எழுந்து, நியூக்ளியஸ் பொதியின் அதிகாரப்பூர்வ தமிழ்ப் பதிப்பு வெளியாக என் பங்களிப்பை அளித்தேன். தமிழாக்கம் வெறும் மொழிக்கோப்பை தமிழாக்கம் செய்வதில் மட்டும் இல்லை. மேலும் பல வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது. இந்த முயற்சியில் என் அனுபவங்களை பின்னாளில் உத்தமம் மின்மஞ்சரி சஞ்சிகையில் ஒரு கட்டுரையாக எழுதினேன்.

இந்த நியூக்ளியஸ் தமிழாக்க முயற்சிகளுக்கான சோதனைக்களமாக எனக்கு ஒரு இணைய வழங்கிச் சேவை தேவைப்பட்டது. 1and1.com என்ற சேவை நிறுவனம் இலவசமாக அளித்த வழங்கியின்மூலமே இது சாத்தியப்பட்டது. சேவையை தனித்துவமிக்க ஒரு ஆள்களப்பெயருடன் (damain name) பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று யோசித்ததன் விளைவே 'தமிழ்மணம்' என்ற பெயர். தமிழ் வலைப்பூ மணம் வீசும் இடம் என்ற பொருளில் வைத்ததுதான் இந்தப் பெயர். ஆனால் இன்று இருக்கும் வலைத்திரட்டிக்காக யோசித்த பெயரில்லை. இந்த ஆள்களப்பெயருடன் http://kasi.thamizmanam.com/ என்ற வலைமுகவரியில் நியூக்ளியஸால் இயங்கும் என் வலைப்பதிவு 2004 ஜனவரி முதல் நடப்புக்கு வந்தது.

இ-சங்கமம் என்ற இணைய இதழ் ஆசிரியர் ஆல்பர்ட் வலைப்பதிவு பற்றி தொடர் எழுதுமாறு நா. கண்ணனைக் கேட்டுக்கொள்ள, அவர் என்னைச் சுட்டிக்காட்டி 'இவர் எழுதினால் நன்றாக இருக்கும்' என்றிருக்கிறார். அப்படித்தான் அதில் ஒரு தொடராக 'தமிழில் எழுதலாம் வாருங்கள், வலையில் பரப்பலாம் பாருங்கள்' வந்தது.

வ.கே.கே. முழு வெற்றியடையாத்தால், தமிழ் வலைப்பதிவு விக்கி ஒன்றைக் கட்டலாம் என்று வெங்கட்ரமணன் முன்வந்து தன் தளத்தில் ஒரு விக்கியை நிறுவிக்கொடுத்தார். யூனிகோடு ஆதரவு இன்மை, சமூக ஆர்வமின்மை போன்ற காரணங்களால் இதுவும் எதிர்பார்த்த அளவில் வளரவில்லை. பிறகு அந்த விக்கியும் ஆள்களப்பெயர் சிக்கலால் இழக்கப்பட்டுவிட்டது.

நியூக்ளியஸ் பொதி இயங்கும் அடிப்படை நுட்பத்தை அறிந்த போது, இதே நுட்பங்களைக் கொண்டு வேறு என்ன செய்யமுடியும் என்று சிந்தித்தேன். இடையில் மதியின் வேண்டுகோளுக்கிணங்க மதி ஒருங்கிணைத்துக்கொண்டிருந்த, வாரம் ஒருவர் ஆசிரியராக இருக்கும், 'வலைப்பூ' என்ற வலைப்பதிவை ஒருங்கிணைக்கும் கூடுதல் பணியும் ஏற்றுக்கொண்டேன். அத்துடன் 'வலைப்பதிவர் பட்டியலை' நிர்வகிக்கும் பொறுப்பும் வந்தது. அப்போதுதான் செய்தியோடை நுட்பம் ஓரளவுக்கு பரவலான பயன்பாட்டுக்கு வந்திருந்தது.

பட்டியல்-நியூக்ளியஸ்-வலைப்பூ-செய்தியோடை என்ற இந்த சூழலே என்னை ஒரு புதுமையான வலைப்பதிவு தளத்தை வடிவமைக்கத் தூண்டியது. இன்று தமிழ்மணத்தில் பார்க்கும் பெரும்பாலான அம்சங்களும் அன்றே யோசித்திருந்தவையே. அவற்றைப் பட்டியலிட்டு சக வலைப்பூ ஒருங்கிணைப்பாளரான மதியுடனும், இன்னொரு நுட்பவியலாளரான சுரதாவுடனும் பகிர்ந்துகொண்டேன். ஆனால் இந்த முயற்சிகளில் ஈடுபடத்தேவையான php/mysql நுட்பத்தில் அவர்கள் பணியாற்றவோ, ஈடுபடவோ இல்லாததால், அவர்கள் செய்யவாய்ப்பில்லையென்றும் அறிந்தேன். கூட்டுமுயற்சிகளின் வெற்றி வாய்ப்பையும் ஏற்கனவே வ.கே.கே./விக்கி அனுபவங்களால் அறிந்திருந்ததால், செய்தால் தனியாகத்தான் செய்வது என்று முடிவு செய்தேன். அத்துடன் 2004 கோடை விடுமுறைக்கு இந்தியா வருவதைமுன்னிட்டு வாரக்கணக்கில் விடுப்பும் எடுத்து வலைப்பதிவுகளிலிருந்து சற்று விலகியிருந்தேன்.

சில முயற்சிகள் சில அனுபவங்கள் -1

தமிழ் இணைய உலகில் என் அனுபவம் சுமார் 3 ஆண்டுகளே. அதற்குள் பல அனுபவங்கள். என் பணி சூழலால் இணையத்துடனான என் தொடர்பு சென்ற மாதங்களில் குறைந்துகொண்டே வருகிறது. எனவே என் அனுபவங்களை சுருக்கமாகவேனும் ஓரிடத்தில் எழுதி வைப்போம் என்று தோன்றியது. அதன் விளைவே இந்தக் குறுந்தொடர். வாழ்க்கை அனுபவங்கள் பற்றிய தொடர் வாசிக்க ஆர்வமுள்ளவர்களை பழைய 'சில விளக்குகள் சில வழிகாட்டிகள்'-க்கு அழைக்கிறேன்.

வலைப்பதிவுகள் வட்டத்தில் முதலில் இயங்கியவர்களில் பெரும்பாலானோர், ஏற்கனவே இணையக்குழுமங்கள், சஞ்சிகைகள் வாயிலாக இணையத்தில் தமிழின் போக்கை அறிந்தவர்களாக இருந்தார்கள். என்னைப்போன்ற சிலரே நேரடியாக வலைப்பதிவுக்கு வந்தவர்களாக இருந்தார்கள். வலைப்பதிவுகள் தந்த சுதந்திரம் + நுட்பநீதியான சாத்தியங்கள், இவையே என்னை இந்த வடிவத்தின்பால் ஈர்த்த காரணிகள்.

நண்பர் ஒருவர் ஹரேகிருஷ்ணா இயக்கத்தில் ஈடுபட்டு பல கருத்துக்களையும் என்னுடன் கலந்துரையாடியபோது வைணவக் கருத்துக்களின் ஊற்றுக்கண் தேடி அதன்மூலம் இணையத்தில் தமிழ் வழியாகக் கிடைத்த ஆழ்வார்களின் அறிமுகம், நா.கண்ணனின் குடில்...அங்கிருந்து அவரின் 'வலைப்பூ'... என்று என் வலைத்தமிழ்ப் பயணம் இருந்தது. கண்ணனின் தொடர்ச்சியான வாசகனானேன். அப்போது மதி கந்தசாமி/சுரதா தொகுத்திருந்த வலைப்பதிவுகளுக்கான உதவிப்பக்கங்கள், பட்டியல் போன்றவையும் அறிமுகமாயின. 2003 ஆகஸ்ட் மாத திசைகள் இதழ் வலைப்பதிவுகளை முன்வைத்து வெளியானது. மாலன் அவர்கள் வலைப்பதிவுகளின் சாத்தியங்களைப் புரிந்து அவற்றுக்கு நல்ல அறிமுகம் கொடுத்தார். அது என்னையும் வலைப்பதிக்கத் தூண்டுவதாக இருந்தது. ஒரு கணப்பொழுதில் எடுத்த முடிவால் வலைப்பதிவனானேன். ரிடிஃப் சேவையில் சில நாள் உழன்றுவிட்டு ப்ளாக்கர் சேவையில் ஐக்கியமானேன்.

தொழில்நுட்ப அம்சங்களின்பால் எனக்கு இருந்த இயற்கையான ஈடுபாடு, புத்துருவாக்கலில்(Innovation) எனக்கு இருப்பதாக நான் நம்பிய திறமை இவை இரண்டும் என்னை ஒரு சாதாரண வலைப்பதிவனாக இருக்க விடவில்லை.

மதியின் முயற்சியினாலான அங்கும் இங்குமான சில உதவிப்பக்கங்களின் நீட்சியாக ஒரு முழுமையான உதவிப்பக்கங்களின் தொகுப்பு, 'வழக்கமாகக் கேட்கப்படும் கேள்விகள்' என்ற வடிவில் கூட்டுமுயற்சியாகச் செய்யலாம் என்று யோசனை பலராலும் முன்வைக்கப்பட்டபோது, 'மூத்த' பதிவர் எவரும் முன்வராததால் நான் இந்தக் கூட்டுமுயற்சிக்கு ஒருங்கிணைப்பாளனாக இருக்கத் தலைப்பட்டேன். இன்று என்னோடு தமிழ்மண நிர்வாகத்தில் தோள்கொடுக்கும் மதி, செல்வராஜ் ஆகியோருடன், பரிமேலழகர், சுரதா, வினோபா ஆகியோரும் பங்களிக்க சில பக்கங்கள் தொகுக்கப்பட்டன, ஆனாலும் இந்த முயற்சி முழு வெற்றியடையவில்லை. ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்ட குறிப்புகளை தமிழ்ப்படுத்த தான் தயார் என்று பத்ரி சேஷாத்ரி சொல்லியிருந்தார். இந்த முயற்சிகள் பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.

இடையில் தமிழா மென்பொருளாளர் குழுவின் முகுந்தராஜ் நியூக்ளியஸ்சிஎம்எஸ் என்ற திறமூல நிரல்பொதியை (open source software package) சுட்டிக் காட்டி, அதன் மொழிக்கோப்பைத் தமிழாக்கம் செய்ய 'யார் முன்வருகிறார்கள்?' என்று கேட்டார். உடனே யாரும் முன்வராததால் அங்கும் 'நான் செய்கிறேன்' என்று முயன்றேன். க்ருபாஷங்கர் தானும் ஆர்வமாக இருப்பதாகவும், நான் செய்வதால் தான் ஒதுங்கிக்கொள்வதாகவும் சொன்னார். இப்படி தமிழ்மணம்.காம் தளம் உருவாவதற்கான முதல் விதையை ஊன்றியவர் முகுந்தராஜ் என்றே சொல்லலாம்.

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...