சனி, செப்டம்பர் 26, 2009

வறுமைக்கோடு

அவசர வேலையாய் உடுமலைப்பேட்டை பயணம். பல்லடம் வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தேன். இரவு சுமார் ஒன்பதரை மணி. பல்லடத்துக்கு மேற்கே ஒரு ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் பச்சைக் குழல்விளக்கு ஒன்றின் முன் காரை நிறுத்தினேன். சட்டத்தால் ஏற்படுத்தியிருக்க முடியாத தரப்படுத்தலை நடைமுறை வசதி ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்துச் சாலைகளில் பச்சைக் குழல்விளக்குகளைக் கண்டால் இரவு உணவுக்கு அங்கே நிறுத்தலாம்.

தமிழனின் வழக்கமான இரவு உணவான புரோட்டா இரண்டு சொல்லி அமர்ந்தேன். சில நிமிடங்களில் சூடான அடுக்கடுக்காகப் பிரியும் புரோட்டா வாழை இலையில் பரிமாற்றம். தொட்டுக்கொள்ள தேங்காய்ச்சட்டினியும், காரச்சட்டினியும், கெட்டியான காய்கறிக் குருமாவும்.

சாப்பிட்டுக்கொண்டே நோட்டமிட்டதில் அடுப்பு அமைக்கப்பிருந்த ஒழுங்கு தெரிந்தது. புகை கொஞ்சமும் வெளிவராமல் குழாய்மூலம் மேலெழும்பி வெளியேறுமாறு செய்யப்பட்டு, தென்னை மட்டைகள் எரிந்துகொண்டிருந்தன. டிவி ஓடிக்கொண்டிருக்க சிறுவர் இருவர் விளையாடிக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தனர். கடையில் என்னைத் தவிர இன்னொருவர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு சுடப்பட்ட தோசை ஏற்படுத்திய ஓசை காதுக்கு இனிக்கவே எனக்குப் பிடித்த ஆப் பாயில் ஒன்று கேட்டேன். சந்தோசமாக சரியான பதத்தில் கொண்டுவரப்பட்டது.

தேவகோட்டைப் பக்கம் சொந்த ஊராம். கோவைப் பக்கம் வந்து பதினெட்டு ஆண்டாச்சாம். வேறு கடையில் வேலைக்கு இருந்துவிட்டு இந்தக் கடை தொடங்கி ஒரு ஆண்டு ஆச்சாம். இருபத்துநாலு மணி நேரமும் புரோட்டா கிடைக்குமாம். வாகனப் போக்குவரத்தை எதிர்பார்த்து நடப்பதால் கூட்டம் விட்டுவிட்டு சேருமாம்.சாப்பிட்டுக்கொண்டே ‘புரோட்டா நல்லாருக்கு’ என்றேன். அவர் முகத்தில் ஒரு மின்னல்.

போதும்போல இருந்தாலும் ஒரு தோசை சாப்பிடுவமே என்றும் தோன்றியது. ‘பெரிசா மொறுமொறுன்னு எண்ணையா வேண்டாம், அளவா ஒரு தோசை கிடைக்குமா?’ ‘ஓ... வீட்டுத் தோசை மாதிரி போட்டுத் தரட்டுங்களா?’’ம்.’வழக்கமான கிண்ணத்தை கொண்டு தேய்க்காமல் கரண்டிகொண்டு பரப்பி, மூடிவேகவைத்து பக்குவமாகக் கொடுத்தது அசல் வீட்டுத் தோசை மாதிரியே இருந்தது. இதற்கு கெட்டிச்சட்டினியும், மணக்கும் முருங்கைக்காய் சாம்பாரும். விட்டிருந்தால் இன்னும் ரெண்டு தோசை சாப்பிட்டிருப்பேன். தொப்பையைக் குறைக்க காலையில் வெக்குவெக்குனு நடப்பதில் பயனில்லாமல் போய்விடும் என்பதால் அத்துடன் எழுந்து இலையை பாத்திரத்தில் போட்டுவிட்டு கையைக்கழுவினேன்.

’எவ்வளவாச்சு?’

’பதினெட்டுரூபா சார்’

எடுத்த ஐம்பது ரூபாயை வைத்துக்கொண்டு, இரு பத்துரூபாய்த் தாள்களைக் கொடுத்து, மீதிவேண்டாம், வெச்சுக்கங்க’ என்று சொல்லி நடையைக்கட்டினேன். இன்னும்கூட ரொம்பக் குறைவாய்க் கொடுத்த மாதிரி குற்ற உணர்வு.

இன்று 300 ரூபாய்-400ரூபாய் சம்பாதிக்கிறார்கள் கொத்தனார்கள். 100ரூபாய்க்குக்கீழ் எந்த வேலைக்கும் ஆள்கிடைப்பதில்லை. ஆனாலும் ஒருவேளை உணவு இருபதுரூபாய்க்குள் சாப்பிட முடிகிறது ஆச்சர்யமாகத் தானிருக்கிறது.

இங்கே பட்டினிமூலம் இனி ஒரு சாவு வராது. விவசாயிகள் தூக்குப் போட்டுக்கொள்வதும் இங்கேயில்லை. வாழ்க தமிழகம்!

வியாழன், ஆகஸ்ட் 27, 2009

செல்பேசியில் தமிழ் - சோனி எரிக்சன் C510 அனுபவம்

நட்சத்திர வாரம்னுட்டு நுட்பக்கட்டுரை எழுதலைன்னா எப்படி? குறைந்தபட்சம் நுட்பம் மாதிரி பாவனையாவது காட்டவேண்டாமா?அதான்.

ஏற்கனெவே ஒரு முறை
 1. தமிழ்ப்பக்கங்கள் வாசிக்க,
 2. குறுஞ்செய்தி/மறுமொழி தமிழில் எழுத,
 3. வரும் தமிழ் குறுஞ்செய்தி வாசிக்க
ஏதுவான செல்பேசியைப் பார்த்ததும் துள்ளிக்குதித்து ஒரு கட்டுரை எழுதினேன்.

ஆனால் தொடர்ந்து அந்த செல்பேசியை அதிகம் பயன்படுத்த வாய்ப்பிருக்கவில்லை. இப்போது வாங்கிய சோனி எரிக்சன் C510 + ஏர்டெல் மொபைல் ஆபீஸ் இணைய சேவை மூலமாக நான் பெற்றுவரும் சில வசதிகளையும் இன்னும் நிறைவேறாத தேவைகளையும் எழுதிவைக்க வேண்டி இந்த இடுகை.

 1. முன்பு சொன்னபடி, இந்தியாவில் விற்கும் பல குறைந்த விலை செல்பேசிகளில் தமிழுக்கும் பல இந்திய மொழிகளுக்கும் மேலேசொன்ன மூன்றுவகையான ஆதரவுடன் வருகின்றன.
 2. அந்தோ, கொஞ்சம் படிப்போ வசதியோ உள்ள இந்தியன்தான் தாய்மொழியில் புழங்குவதில்லையே, அதனால் மேம்பட்ட, உயர்ரக செல்பேசிகளில் இது எதற்கு என்று அவற்றில் இவ்வசதி வருவதில்லை. எனவே சிரமப்பட்டுத்தான் தமிழ் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.
 3. ஒபரா மினி என்ற இலவச உலாவியைத் தரவிறக்கி, சில அமைப்புத் தெரிவுகளைச் செய்வதன் மூலம் (Use bitmap fonts for complex scripts=yes) வலைப்பக்கங்களில் தமிழ் வாசிக்கலாம்.
 4. இலகுவாகத் தரவிறக்கம் ஆக (செலவு குறைய :)) முக்கியமான வலை சேவைகளின் மொபைல் வடிவத்தைப் பயன்படுத்தலாம். உ.ம். m.gmail.com, m.twitter.com, m.thamizmanam.com
 5. ஜிமையிலின் imap சேவையில் இயங்குமாறு செல்பேசியின் மின்னஞ்சல் செயலியை அமைப்பித்துவிட்டால் அதிலும் push email என்ற தெரிவைச் செய்வதன்மூலம், ப்ளூபெர்ரி போலவே உடனடியாக மின்னஞ்சல் நம் செல்பேசிக்கு வருமாறு செய்யலாம். இதற்கென்று தனியான செலவில்லை. GPRS மட்டும் போதும். பலமுறை என் மடிக்கணியின் ஜிமெயில் திரைக்கு ஒரு புது அஞ்சல் காட்டப்படும் முன்னமே, செல்பேசியில் ட்ட்டடாய்ங் என்று வந்துவிடும். நண்பர்கள் மத்தியில் ஒரு கீக் (geek) எபக்ட் கிடைக்கும்:)
இன்னும் கேமரா, கூகிள் மேப்ஸ் போன்றவற்றிலும் பல புதுமைகளைச் செய்திருக்கிறார்கள் சோனி எரிக்சன் காரர்கள். ஆனாலும், தமிழுக்கு நேரடி ஆதரவு என்றைக்கு வருமோ?

தமிழ்மணம் குழு

கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்மணம் சேவையை நடத்துவது தமிழ் மீடியா இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் என்பது தெரிந்த செய்தி. இது லாபநோக்கற்ற ஒரு நிறுவனமாக அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்டது.

இப்போது
முனைவர் இரா. செல்வராஜ் - தலைவர்,
முனைவர் நா. கணேசன் - துணைத் தலைவர்,
முனைவர் பா. சுந்தரவடிவேல் - செயலாளர்,
மயிலாடுதுறை சிவா - பொருளாளர்.

இவர்களோடு,

முனைவர் சொ. சங்கரபாண்டி
தமிழ்சசி
முனைவர் இரமணீதரன்
முனைவர் பாலு
இளங்கோ
முனைவர் சுந்தரமூர்த்தி
கார்த்திக்ராமஸ்
முனைவர் தங்கமணி
முனைவர் பாலாஜி பாரி

ஆகியோரும் உறுப்பினர்களாக உள்ளனர். சுரதாவும் நானும் ஆலோசகர்களாக உள்ளோம்.

தமிழ்மணம் தொடர்ந்து இயங்குவதற்கு இவர்கள் அனைவரின் பங்களிப்பும் ஆர்வமும் பெரிதும் காரணம்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்சசியின் நுட்பரீதியான பங்களிப்பு மிக முக்கியக் காரணி. தமிழ்மணம் நுட்பத்தின் குழந்தை. தொடர்ந்து நுட்ப மேம்பாடுகள் செய்துகொண்டிருந்தாலே இது காலமாற்றங்களுக்கேற்ப பரிணாமித்து இயங்கமுடியும். ஏற்கனவே சொன்னதுபோல தமிழ்மணத்தின் நிரல்கள் ஒரு வழமையான மென்பொருளாளரால் உருவாக்கப்படாததால் தொழில்முறை உத்திகளைப் பயன்படுத்தி ஒரு குழுமுயற்சியால் மேம்படுத்துவதில் பல சவால்கள் ஏற்பட்டன. அப்போது தனியொருவராக பொறுப்பு எடுத்துக் கொண்டு இன்று கிட்டத்தட்ட தமிழ்மணத்தின் நுட்பம் முழுமைக்கும் ஆதாரமாக விளங்குவது தமிழ்சசி.

திரைமணம், செய்திகள், மறுமொழி திரட்டி என பல பரிமாணங்களாக விரிந்திருக்கும் தமிழ்மணம் தளத்தின் முதன்மை நுட்பவியலாளருக்கு வந்தனங்கள். இரு குழந்தைகளுடன், தற்போதைய சிக்கலான பொருளாதார மந்த நிலை சூழலில், தமிழ்சசி எடுத்துக்கொண்டுள்ள பணியை எண்ணிப் பார்த்து, தமிழ்மணத்தின் நுட்பச் சிக்கல்களைப் பற்றிக் குறிப்பிடும் நண்பர்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டுகிறேன். மாற்றாக பலரும் பங்களிக்க ஏதுவான வேறு தீர்வுகள் இருப்பினும் முன்வைத்தால் தமிழ்மணம் குழு பரிசீலிக்கும் என்று நம்புகிறேன். முக்கியமாக மென்பொருளாளர்கள் கவனத்துக்கு இதை வைக்கிறேன்.

தற்போதைய தலைவர் செல்வாவும் சரி, முன்னாள் தலைவர் சங்கரபாண்டியும் சரி, தலைவருக்குரிய முதிர்ச்சி, கண்டிப்பு, பொறுமை, போன்ற எல்லாக் குணங்களும் கொண்டு தமிழ்மணத்தை நடத்திச் செல்வதைப் பார்க்கிறேன். செல்வா கிட்டத்தட்ட நான் வலைப்பதிவுக்கு வந்த நாள்முதலே நல்ல நண்பர். ஈரோட்டுக்காரர். நுட்பத்திலும், இலக்கிய சமூக எழுத்துக்களிலும் சமமான ஈடுபாடு கொண்டவர். தேவைக்கேற்ப நுட்பப் பங்களிப்பும் செய்யக்கூடியவர்.

சங்கரபாண்டிக்கென்று வலைப்பதிவே கிடையாது! பின்னூட்டப் புகழ் சங்கரபாண்டியென்று வேடிக்கையாகச் சொல்வதுண்டு. பெரும் சமூக ஆர்வம் கொண்டவர். இணையத்துக்கு வெளியே தமிழ்ச்சங்கம் போன்ற பணிகளில் அதிகம் செயலாற்றுபவர். எங்க ஊர் மாப்பிள்ளை!

எங்கூர்க்காரர் கணேசனைப் பத்திச் சொல்வதானால் சொல்லிட்டே இருக்கலாம். நாசாவில் விஞ்ஞானி. அற்புதமான நினைவாற்றல். ஆனால் தினமும் மணிக்கணக்காகப் படிப்பது தமிழ். வெறுமனே படித்துக்கொண்டிராமல் தமிழ்க் கணிமைக்காகப் பல பங்களிப்புகளைச் செய்திருக்கிறார், செய்துகொண்டிருக்கிறார். பல பெரிய தமிழறிஞர்கள், நுட்பவியலாளர்களுடன் நெருங்கிய தொடர்பு. தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா சென்ற அறிஞர்களில் கணேசனுடைய ஹூஸ்டன் வீட்டு விருந்தோம்பலை நுகராதவர் இருக்கமுடியாது. எனக்குத் தான் வாய்க்கவில்லை!

’பெயரிலி’ ரமணியைப் பலருக்கும் தெரியும், ஆனால் சிலருக்கே புரியும்! மேலோட்டமான பொதுப்புத்தியில் அவரைப் பார்த்துவிட்டு சிறுமைப்படுத்தும் மனிதர்களைப் பார்த்துச் சிரித்துக்கொள்வதுண்டு. ஈழத்து நிகழ்வுகளால் காயப்பட்டிருக்கும் அவரைப் போன்ற நண்பர்களுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. தமிழ்மணத்தின் அன்றாட நிர்வாகப் பொறுப்பில் பலநாள் பங்களித்துள்ளார்.

சுந்தரவடிவேல், கலையார்வம் நாட்டுப்புறவியல் ஆர்வம் மிக்க நண்பர். பெட்னா விழா போன்ற நிகழ்வுகளில் நாட்டுப்புறக்கலை வடிவங்கள்மூலம் பல செய்திகளை உணர்த்தியிருக்கிறார்.

இளங்கோ, பாலு, கார்த்திக், தங்கமணி, சுந்தரமூர்த்தி, சிவா, பாலாஜி பாரி ஆகியோரும் சாத்தியத்துக்குட்பட்ட பங்களிப்பைத் தொடர்ந்து செய்கிறார்கள்.

இது சிறப்பான அமைப்பா என்றால் உறுதியாகச் சொல்லமுடியவில்லை. இன்னும் கொஞ்சம் நுட்ப ஆதரவு/பங்களிப்பு சாத்தியப்பட்டிருந்தால் தமிழ்மணம் இன்னும் உச்சங்களை எட்டியிருக்கும். ஆனால் சிறப்பான குழுவா என்றால் உரக்கச் சொல்லலாம் ஆம் என்று.

புதன், ஆகஸ்ட் 26, 2009

கடேசிப்பேர், ஒட்டுப்பேர், குடும்பப்பேர், அக்கப்போர்

அதென்ன தமிழனுக்கு மட்டும் இந்தக் கேவலம்? என்னமோ அனாதப்பயலப் பாக்கற மாதிரியில்ல பாக்கறானுவ, எல்லாவனும்! எல்லா நாட்டுக்காரனுக்கும், அட நம்ம இந்தியாவிலேயே மத்த மாநிலத்தவங்களுக்குக்கூட இருக்காமாப்பா, நமக்கு மட்டும் இல்லியாம்ப்பா...என்னதுங்கிறீங்களா? அதுதாங்க: கடேசிப்பேர், ஒட்டுப்பேர், குடும்பப்பேர்... இங்லீஷில் சொன்னா last name, surname, family name.
எனக்குத் தெரிஞ்சு நம்ம தமிழ்மக்கள் எல்லாருக்குமே ஒருத்தருக்கு ஒரே பேருதான். (செல்லப்பேர், லொள்ளுப்பேர், பட்டப்பேர், குலதெய்வப்பேர், அப்பாரு பேர், அப்பச்சி பேர், புனைபேர், முகமூடிப்பேர் இதெல்லாம் கணக்கில் சேர்க்கறதாயில்லை, சட்டபூர்வமா, சர்டிபிகேட்டில் போடறது மட்டும்தான் பேச்சு :-)) அது நம்ம அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி - யாரோ வெச்சதா இருக்கும். அதனால அது வெச்சபேரு, இங்லீஷில் given name அல்லது first name. சண்முகம், ஆறுச்சாமி, சுந்தரம், ராஜேந்திரன்னு எதுவானாலும் ஒருபேர், ஒரே ஒரு பேர். அதுக்குமேல் கிடையாது.

ஆனா பாஸ்போர்ட் எடுக்கும்போது கேப்பான், 'கடேசிப்பேரு என்ன'ண்ணு. அங்கதான் ஆரம்பிக்கும் வில்லங்கம். அதுவரைக்கும் ஒரு இனிஷியலை ஒட்டிக் கூட்டியாந்திருப்போம், சில பெரியவங்க ரெண்டு இனிஷியலும்கூட வெச்சிருப்பாங்க (இதில கேகேஎஸ்எஸ்ஆர்ஆர்- எல்லாம் தனி). உடனே அந்த இனிஷியலை நீட்டி முழக்கி, 'இதுதாங்க கடேசிப்பேரு'ன்னு சொல்லி... அப்பத்திக்கு வேலை முடிஞ்சிரும். அப்புறம் இருக்குபாருங்க விவகாரம்..

எங்கப்பாவுடைய வெச்சபேரு என்னோட கடேசிப்பேரு ஆயிட்டுது. எனக்கு வெச்சபேரு என் மகனுக்குக் கடேசிப்பேரு ஆச்சு. இனிஷியலை இழுத்துவிட்டா அப்படித்தானே வருது. அங்கதான் நம்மளை எல்லாவனும் கேவலமாப் பாக்குறான். ஒரு குடும்பத்துல கடேசிப்பேரு எல்லாருக்கும் ஒண்ணாத்தான் இருக்கணுமாமில்லே. ஒவ்வொரு இடத்திலேயும், 'என் கடேசிப்பேரு வேற, என் மகனின் கடேசிப்பேரு வேற'ன்னு சொன்னா ஏன் மேலேயும் கீழேயும் பாக்கறானுவ?

இதிலே, 'என் வெச்சபேருதான் என் மகனின் கடேசிப்பேரு'ன்னா இன்னும் திருதிருன்னு முழிச்சு எனக்குத்தான் புரியலைன்னு நினைச்சுக்கிறாங்க. கடேசிப்பேரு இல்லேன்னா என்னவாம்? இதிலே அன்னிக்கு இங்க ஒரு வெள்ளக்காரன் பெருமையாச் சொல்றான், ஊடால நடுப்பேருன்னு வேற ஒண்ணு இருக்காமாப்பா...இங்லீஷில middle name. அப்பாவீட்டிலிருந்து கடேசிப்பேரு வந்துருமாம், அம்மா வீட்டு சீதனமா இந்த நடுப்பேராம். நம்ம ஒரு பேரைச் சொல்லவே இவங்க நாக்கு சுளுக்கிக்குது, ஓரசை, ஈரசை பேராப் பழகிட்டு, நம்ம 'எக்கச்சக்க அசை'ப் பேரை வெட்டிப்புடறாங்க. இதிலே அதே பாணியில் நடுப்பேரும் கடேசிப்பேரும் வெச்சுட்டா, ஒருத்திகிட்டக்கூட போனில் பேசி பேரை முழுசாச் சொல்லமுடியாது. என் சூப்பர்நேம் 'காசிலிங்கம்', முதல் மாசம் எலக்ட்ரிக் பில்லில் Kefilangham ஆகியிருந்தது. இன்னும் லக்ஷ்மிநரசிம்மன், வெங்கடரமணன் எல்லாம் என்ன பாடுபடறாங்களோ!

இது எப்போ ஆரம்பிச்ச பிரச்னை? 400 வருஷம் பின்னோக்கிப் போனாக்கூட 'வில்லியம்' ஷேக்ஸ்பிய'ருக்குக்கூட ரெண்டுபேரும் இருந்துருக்கு போலத்தெரியுது. 'வில்லியம்' 'வொர்ட்ஸ்வொர்த்', 'ஜான்' 'மில்டன்' எல்லாம் அப்படியேதான் போல. நம்ம கம்பரும் வள்ளுவனும் இளங்கோவும் கடேசிப்பேரு வெச்சிருந்தாமாதிரித் தெரியலையே. அட நம்ம முண்டாசு, அவரு பேரில் 'சி.' கூட சின்னசாமி அய்யர்தானே, அது அவரோட அப்பா பேருதானே. அப்படின்னா எப்பவுமே நம்ம மக்கள் இப்படிக் கடேசிப்பேரு, குடும்பப்பேருன்னு வெச்சிக்கலையா?

இந்த கடேசிப்பேரு சமாச்சாரம் மட்டும் இல்லீன்னா, இந்திராகாந்தியும், ராஜீவ்காந்தியும் அட நம்ம பீட்சாலேண்ட்-பார்ன் சோனியாகாந்தியும் இந்த அளவுக்குப் பேர் வாங்கியிருப்பாங்களான்னு தெரியலை. எனக்குத் தெரிந்து, 'மகாத்மா காந்தியும் இவங்களும் ஏதோ மாமன் மாச்சான் கூட்டம்'னு நெனைக்கிறவங்க எத்தனைபேரு!

இங்கே சில கன்னடத்து நண்பருங்க 'ஹெக்டே'ன்னு, 'காமத்'துன்னு கடேசிப்பேரு வெச்சிருக்காங்க. தேலுங்குதேசத்துக்காரங்க 'ராவு' 'ரெட்டி'ன்னு சொல்லிக்கிறாங்க, சேட்டன்மாரு 'நாயர்' 'பிள்ளை'ங்கிறாங்க. இதெல்லாம் எனக்கு வெறும் கடேசிப் பேராத்தெரியலை. கூடவே ஜாதியயையும் தம்பட்டமடிக்கறமாதிரியில்ல தெரியுது. ஒருவேளை இந்தக் கடைசிப்பேரு ஜாதியின் அடையாளம், அதனால இது வேண்டாம்னு நம்ம பெரியவங்க இதைத் தூக்கிக் கடாசிட்டாங்களோ?

நான் ஒண்ணு பண்ணிடலாமுன்னு இருக்கேன். இந்தப் பேர்ப்பஞ்சம் என்னோடு போகட்டும். என் மக்களுக்கு என் வெச்சபேரை கடேசிப்பேரா ஆக்கியாச்சு, அதுவும் எல்லா இடத்திலும் கெட்டியா உக்காந்திருச்சு. இனிமேல் என் பேரப்புள்ளைங்களுக்கும் இதையே கடேசிப்பேராக்கிட்டா என்ன? என் குடும்பம் இனி 'காசிலிங்கம்' குடும்பம்னு இருக்கட்டுமே. அட தாத்தா பேரை பேரனுக்கு வைக்கிறது நம்ம ஊரு வழக்கம் தானே. என் பேரனுக்கு என் பேர்தான் கடேசிப்பேரு. ஸ்டைலா ஒருபேரை வெச்சு, அதை 'வெச்ச பேரு' ஆக்கிடலாம். ஸ்டைலுக்கு ஸ்டைல், சாங்கியத்துக்கு சாங்கியம், சட்டத்துக்கு சட்டம். ஒரே கல்லுல மூணு மாங்கா!

தமிழ்மணமெல்லாம் வரும் முன்னாடி எழுதியது. மீள்பதிவு. இன்னும் நிலைமை மாறியிருக்கிறமாதிரி தெரியலை.

செவ்வாய், ஆகஸ்ட் 25, 2009

நட்சத்திரக் கேள்விகள் - ஒரு சிறிய மாற்றம்

ஆழந்தெரியாமக் காலை விடுவதே வேலையாப் போச்சுங்க!

நண்பர்கள் பலரிடமும் கேள்விகளை அனுப்பி, அவர்களும் பதில் அனுப்பியிருந்தார்கள். பதில்களைப் பார்த்து கொஞ்சம் மலைப்பாய்த் தான் இருந்தது. அத்தனை விதமான பார்வைகள், கருத்துகள். இவற்றை கேள்விக்கு ஒரு இடுகையாக 6 இடுகைகளில் இடுவதாக முதலில் எண்ணியிருந்தேன். ஆனால் இப்போது இந்தப் பதில்களை அப்படி இட்டால் வாசிப்பது மிக சிரமமாக இருக்கும் என்றும், அதனால் இவற்றை சிரமமெடுத்து எழுதியோருக்கு உரிய கவனம் கிடைக்காமல் போய், கருத்துக்கள் பலருக்கும் சென்று சேராமல் போய்விடும் என்ற பயம் வந்துவிட்டது. மேலும் ஏற்கனவே கோவி.கண்ணன் போன்ற நண்பர்கள் எழுதும் பதில்கள் ஒரு சங்கிலித்தொடராக அமைந்து வருகிறது. இந்த நிலையில் முன்பு போட்ட திட்டத்தில் ஒரு மாறுதல் செய்கிறேன். நண்பர்கள் புரிந்துகொண்டு உதவவேண்டும்.

அதாவது என் மின்னஞ்சல் வழியாக பதில் அனுப்பிய நண்பர்களை நான் கேட்டுக்கொள்வது, உங்கள் பதிவிலேயே இந்தக் கேள்வி-பதிலை ஒரு இடுகையாக இடுங்கள் என்பதே. இதனால் ஒவ்வொருவர் எழுதிய மணியான பதில்களும் அவற்றுக்குரிய கவனம் பெறுவதோடு, அவரவர் ப்திவில் நிரந்தரமாக சேமிக்கவும் ஏதுவாகின்றது. அந்தந்த பதில்கள் மேல் விவாதம் நடப்பதானால் அங்கேயே நிகழவும் இது வாய்ப்பளிக்கிறது. மேலும் மறுமொழிவழியாகவோ, தங்கள் பதிவு வழியாகவோ பதில் எழுதுபவர்களும் ஜோராச் செய்யுங்க.

என்ன நான் சொல்றது, சரிதானுங்களே!

அவரவர் பதிவில் இட்டபின் இங்கே ஒரு மறுமொழியாகத் தொடுப்புக் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

செஞ்சுடலாமா?

திங்கள், ஆகஸ்ட் 24, 2009

நட்சத்திரக் கேள்விகள் - 0

பெரிதாக ஒண்ணும் சிந்திக்காமலே, சிந்தனையாளர்போல பாவனை செய்வது எப்படி? கீழே உள்ள கேள்விகளைப் பாருங்கள். இதுக்குப் பதில் சொல்ல கொஞ்சமாவது யோசிக்கணும்தானே. அதனால்தான் திருவிளையாடல் தருமி போல நான் கேள்விகளோடு நிறுத்திக்கொண்டேன். நண்பர்கள் சிலரிடம் பதில் தருமாறு கேட்டேன். பலரும் அனுப்பியிருந்தார்கள். சிலர் அனுப்பிய பதில் பிரமாண்டமாய் இருந்தது. பதில்கள் பின்னால் வருகின்றன. இதோ கேள்விகள்:
 1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்?
 2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).
 3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும்முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?
 4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?
 5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?
 6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

சுமார் 30 பேரிடம் கேட்டு வாங்கிவிட்டேன். இதைத் தொகுத்துப்போடுவதே பெரிய வேலையாய் இருக்கும் போலிருக்கிறது, இன்னும் சிலரும் பட்டியலில் இருந்தார்கள், வேலைப் பளுவுக்குப் பயந்து அவர்களுக்கு எழுதவில்லை. பதில் தந்த நண்பர்களுக்கு நன்றி சொல்லும் வேளையில், கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பும் அனைவருக்கும் வரவேற்பைச் சொல்லி, மறுமொழியாக உங்கள் பதிகளை இடலாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு கேள்வியும் ஒருநாளாக 6 கேள்விகளும், பதில்களும் வரும். அந்தந்த இடுகையில் உங்கள் கருத்துகளைச் சொல்லலாம்.

வாங்க, வாங்க.

இணையத்திலே தமிழ் வாசிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் தமிழ்மணம் சேவையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு வாழ்த்துகள்.

என்னடா இது சோதனை, வலைப்பதிவுக்குச் சம்பந்தமில்லாத ஆளுகளையெல்லாம் தமிழ்மண நிர்வாகம் நட்சத்திரமாக்கீருக்காங்களேன்னு முழிக்காதீங்க:-) கொடநாடு எஸ்டேட்டில் இடம் கிடக்காததால், பக்கத்தில் கோயமுத்தூரிலேயே கொஞ்ச நாளாக ஓய்வெடுக்கும் மூத்த பதிவர் யாம். இந்த ஒருவாரம் உங்களோடு சில செய்திகளைப் பரிமாறிச் செல்ல எண்ணம். பொறுத்தருள்க.

என்னைப் பற்றிய சிறு அறிமுகம் இங்கே கீழே இன்னொருமுறை (சுய விளம்பரம் இங்கே ரொம்பப் பிடிக்கும் என்று அறிக)

பெயர்: காசி ஆறுமுகம்
ஊர்: கோவை
வயது: 45
தொழில்: இயந்திரவியல் பொறியாளர்
வலைப்பதிவு தொடங்கிய நாள்: ஆகஸ்ட் 2003.
கடந்துவந்த தளங்கள்:
சில நாட்குறிப்புகள்:
தமிழ்மணம் 2.0 தளம் உருவாக்கம்: 14 ஜன 2006
ஆர்வங்கள்:
கணினி, இணையம், கருவிகள், இயந்திரங்கள், வரலாறு, வரைபடங்கள், சுற்றுலா, நண்பர்கள், காரோட்டுதல், சமையல்....

சரி, போதும்.

எழுதுவதற்கு சங்கதி இருப்பதாயிருந்தால் தான் ஏற்கனவே எழுதிக்கொண்டிருப்பமே, அது இல்லாததால்தானே ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறது! ஆனாலும் கிடைத்த வாய்ப்பை விட மனமில்லாமல் ஒரு குறுக்கு வழியில் இறங்கியிருக்கிறேன்.

நாமாக எழுத இயலாத போது யாராவது எழுதினதை வைத்து ஓப்பேத்துவது சகஜம்தானே. அதையேகொஞ்சம் மாத்தி, ’அய்யா, அம்மா, எழுதிக்கொடுங்கன்னு கேட்டு வாங்கிப்போட்டா எப்படி இருக்கும்?

இந்த வாரம் பெரும்பாலும் அப்படியாகத்தான் ஓட்டுவதாகத் திட்டம் (தப்பிச்சோம்டா சாமீன்னு குரல் கேக்குது, யாராயிருந்தாலும் விட்டுடுவோம், பொழச்சுப் பொகட்டும்)

நம்ம வலை உலகப் பெரியவங்க சிலபேர்கிட்ட சூப்பர் கேள்விகள் சிலதைக் கேட்டு, பதிலை வாங்கி, ஒத்தி ஒட்டி, இந்த வாரத்தைக் கடத்துகிறேன். ஆதரவு கொடுங்க அன்பர்களே!

அதற்கு முன், தமிழ் இணையத்துடன் எனக்கு பரிச்சயம் ஏற்பட்டதுக்குப் பின்னர் கடந்த 5 ஆண்டுகளுக்குள் மறைந்த மூன்று நண்பர்களுக்கு அஞ்சலியுடன் என் நட்சத்திர வாரத்தைத் தொடங்குகிறேன்.

தேனீ உமர் தம்பி
தேன்கூடு சாகரன்
சிந்தாநதி

இவர்களில் சாகரனும் சிந்தாநதியும் தங்கள் புனைபெயர்களிலேயே இணையத்தில் வெளிப்படுத்திக்கொண்டதால் அப்படியே தொடர்கிறேன்.

தமிழ் வலைப்பதிவுகளின் தொடக்க காலத்தில் பல்வேறு எழுத்துரு/குறியேற்ற வேறுபாடுகளால் ஏற்பட்ட தொய்வுநிலை களைய உமரின் தேனீஎன்ற இயங்கு எழுத்துரு (dynamic font) மிகுந்த பணியாற்றியது. ஒரே எழுத்துருவில் பலபைட்-யுனிகோடுக்கும் ஒருபைட்-திஸ்கிக்கு ஆதரவு தந்ததுடன், அதை இயங்கு எழுத்துருவாக அளித்ததும், இதற்கும் மேலாக நுட்பத்தை கொந்தி (hacking) எந்தத் தளத்திலும் அது இயங்கும் விதமாக அளித்ததும் வியத்தகு சாதனைகள். உலகில் எந்த நுட்பவியலாளரும் சிந்தித்திருக்கமுடியாத ஒன்று. சொல்லப்போனால், இன்றும் கூட இந்தச் சிக்கலின், அதன் தீர்வின் ஆழத்தைப் புரிந்தவர்கள் வெகுசிலரே இருப்பர் என்பது என் கணிப்பு. அத்தகைய சாதனைக்குச் சொந்தக்காரர் உமர்.

இலக்கிய ஆர்வமும் நுட்பத் திறனும் ஒருங்கே அமைந்த சாகரன் கட்டியது தேன்கூடு என்னும் தளம். வலைப்பதிவர்களுக்குப் போட்டிகள் தொடங்கி வைத்ததும், புதிய நுட்பங்களை அறிமுகப்படுத்தி தேன்கூட்டின் சேவையைத் தமிழ்மணத்தின் சேவையிலிருந்து தனிப்படுத்திக்காட்டியதும் சாகரனின் பங்களிப்புகளில் சில.

வலையின் மூலமாகவே அமைந்த ஒரு பெரிய நண்பர் வட்டத்துக்குத் தன்னலம் கருதாது பல்வேறு நுட்ப ஆலோசனைகள், உதவிகள், நிரல்கள், விளக்கங்கள் வழங்கி பெரிய வினையூக்கியாக இருந்தவர் சிந்தாநதி. தமிழ் கணிமை, புத்தக சந்தை, சற்றுமுன் போன்ற பலமுயற்சிகளுக்கு ஆதார சக்தி. அவரின் மன முதிர்ச்சி அதிசயிக்கத்தக்கது. சென்னையில் நடந்த வலைப்பதிவர் பட்டறைக்காக சிந்தாநதி தயாரித்தளித்த கையேடு ஒரு முன்னோடி முயற்சி. (வேண்டுகோளை ஏற்று, சுயவிளம்பரம் விரும்பாத சிந்தாநதியின் நிழற்படம் அளித்து உதவிய அவரின் தம்பி ராஜேசுக்கு மிக்க நன்றி.)

இன்னும் பல தன்னார்வல்ர்களின் உழைப்பும் முனைப்பும் தமிழ் இணையத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியிருக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.

தமிழ்மணத்தை தொடங்கிய நாட்களில் கிடைத்த செய்திகள் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். கடந்த மூன்றாண்டுகளாக தமிழ்மணத்தை திறம்பட நிர்வகிக்கும் தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நண்பர்கள் சிலரைப் பற்றி அடுத்த இடுகைகளில்...

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...