சனி, நவம்பர் 29, 2003

Do You Speak American?

ஆங்கிலம் தெரிந்தவர்கள் எல்லாரும் அமெரிக்கா வந்தவுடன் குழம்பும் அளவுக்கு அமெரிக்க ஆங்கிலம் இருக்கிறது. இங்கே அட்டவணையில் உள்ள சொற்களைப் பார்த்தால் தெரியும். இதில் அமெரிக்க ஆங்கிலம் என்று கொடுத்திருக்கும் பட்டியலில் உள்ள சொற்கள் பலவும் நமக்குப் பரிச்சயமானவையே. ஆனால் பேச ஆரம்பித்ததும் நாக்கில் முதலில் வருவது பிரிட்டிஷ்/இந்திய சொற்களே. எனவேதான் பெரும்பாலும் அவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ள முடிகிற அதே வேளையில், நாம் பேசுவதைப் புரிந்து கொள்ள அவர்கள் சிரமப்படுவது. இவை ஒரு பானை சோற்றுக்கு பதம் பார்க்க தரும் பருக்கைகள் என்றால். முழுப் பானையும் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் புரியும். அதிலும் அத்தனை காய்கறிக்கும் இங்கு அமெரிக்க மொழியில் வேறு பெயர்கள்! வாழ்க்கை சுவாரசியமாக இருக்க இவையெல்லாம் காரணம்!


British/Indian

American

Advertisment

Commercial

Bin, Dustbin

Trash Can

Biscuit

Cookie

Bonnet

Hood (car)

Boot, Dicky

Trunk (car)

Canteen

Cafeteria

Car Park

Parking Lot

Casualty

Emergency Room

Chemist

Drugstore

Diversion

Detour

Entree, Starter

Appetizer

Film

Movie

Flat

Apartment

Flyover

Overpass

Football

Soccer

Garden

Yard

Gum

Glue

Highway

Freeway (Expressway)

Hire

Rent (to)

Holiday

Vacation

Jam

Jelly

Lift

Elevator

Lorry

Truck

Napkin, Nappy

Diaper

Note

Dollar Bill

Pavement

Sidewalk

Petrol

Gasoline

Post

Mail

Public school

Private school

Purse

Wallet (Woman's)

Queue

Line

Ring

Call (on the phone)

Rubber

Eraser

Rubbish

Trash

State school

Public School

Sweets

Candy

Tin

Can

Torch

Flashlight

Trolley

Shopping Cart/Basket

Wardrobe

Closet (bedroom)

Zed

Zee (letter)



Thanks: http://www.geocities.com/Athens/Atlantis/2284/

நானும் ஒரு மொழிபெயர்ப்பாளன்

சென்ற மாதத்தில் ஒரு நாள் என் அலுவலகத் துறைத் தலைவர் (ஒரு முதல் தலை முறை அமெரிக்கர்), என்னை அவசரமாக அழைத்தார். 'காசி, ஒரு தொலைபேசி வழி உரையாடலுக்கு என்னுடன் நீயும் இருக்க வேண்டும்' என்றார். இங்கிருப்பவர்கள் இந்தியாவில் இருந்து சேவை மற்றும் ஆட்களைப் பெறுவதற்காக அவ்வப் போது அங்குள்ளவர்களுடன் இத்தகைய உரையாடல்களில் ஈடுபடுவது உண்டு. ஒருவேளை இந்திய உச்சரிப்புப் புரியாமல் என்னைத் துணைக்கு அழைக்கிறார் என்று நினைத்து நானும் போனேன்.

ஆனால் பேச ஆரம்பித்து பரஸ்பரம் அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது தான் தெரிந்தது, அந்தப் பக்கம் இருப்பவர்கள் பிறவி ஆங்கிலேயர் என்று. ஆம், இந்த அமெரிக்கர்களுக்கு இங்கிலாந்துக்காரன் ஆங்கிலமே புரிவதில்லையாம். நான் பேசுவது அதே மாதிரி இருக்கிறதாம் (என்னுதும் புரிவதில்லை என்பதை இப்படியா சொல்ல வேண்டும், ஹும்..) அதனால் லண்டன்காரனுடன் பேசுவதற்கு என்னை மொழிபெயர்ப்பாளனாக கூப்பிட்டிருக்கிறார். எப்படிப் போகிறது கதை? இங்கே பேசுவது 'அமெரிக்கம்', 'ஆங்கிலம்' அல்ல. இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை சுவையாகக் கோர்த்த ஒரு தொகுப்பு எங்கோ பார்த்திருக்கிறேன், அதைத் திரும்பக் கண்டு பிடிக்கணும்.

நாளும் வளர்கிற நவீன மொழியின் கதையே இப்படி என்றால், தூக்கத்திலிருந்து எழுகிற எம் செம்மொழியின் கதை அப்படிப் போவதில் வியப்பேதும் இல்லை. உஷாவுக்கு பல ஈழத் தமிழ் சொற்கள் புரியவில்லை என்பது புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றுதான். ஆனால் ஆங்கிலத்தையே எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு புத்தகமோ கட்டுரையோ படிக்கும் போதும் புதுப்புது சொற்கள் நம்மைத் தாக்கிக் கொண்டே தான் இருக்கின்றன, நாம் அதன் சூழலை வைத்து அர்த்தம் செய்துகொண்டு மேலே போய்க்கொண்டேதான் இருக்கிறோம். அந்தச் சொல் அகராதியில் இருக்கிறது என்பதற்காக, ஒவ்வொரு சொல்லுக்கும் அகராதியைப் பார்த்துத் தெளிந்துகொண்டா அடுத்த அடிக்குப் போக முடியும். அப்படிப் படித்தால், படித்த உணர்வு கிட்டுகிறதா? நூற்றுக்குத் தொண்ணூறு சொற்கள் சூழலை வைத்து உணரக்கூடியதாகவே இருக்கின்றன. அந்த மிச்சம் சொற்கள் அரிதாகத் தான் உரையின் கருத்துக்கு உதவுகின்றன. எனவே ஒரு வட்டார வழக்கைப் படிக்க அகராதி வேண்டும் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.

ஒரு கொசுறு: அன்று ஒரு நாள் டிவியில் பிபிசி நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அது அமெரிக்க நடப்புகளைப் பற்றிய ஒன்று. அப்போது அங்கு வந்த என் 10 வயது மகன், அடுத்த வினாடி, 'ஏன் இங்கிலாந்து டிவியெல்லாம் பார்க்கிறீர்கள்' என்றான். அப்போது அங்கு டிவியில் மூலையில் வரும் முத்திரை கூட WXXI என்ற அமெரிக்க முத்திரை தான். 'எப்படி உனக்கு இது இங்கிலாந்து நிகழ்ச்சி என்று தெரியும்' என்று கேட்டேன். 'அதுதான் அவர்கள் பேச்சில் தெரிகிறதே' என்கிறான்! எனக்குத் தான் எல்லா மண்ணும் ஒண்ணாகவே தெரிகிறது!

என் தமிழ் - உன் தமிழ்

ஒரு சுவாரசியமான ஆனால் சற்று உணர்வுப் பூர்வமான ஒரு விவாதம் இன்று வலைப்பூ சஞ்சிகையில் நடக்கிறது. எங்கோ ஆரம்பித்தது, கடைசியில் ஈழத்தமிழ் இலக்கியவாதிகளுக்கும் கலைஞர்களுக்கும் சரியான அங்கீகாரம் கிடைக்கப் பெறவில்லை என்று குறைப்பட்டு, அதற்குக் காரணமாய் ஊடகங்களில் 'பிராமண ஆதிக்கம்' சுட்டிக் காட்டப்பட்டு, கொஞ்சம் காரசாரமாகவே போகிறதாய்த் தெரிகிறது. என் பங்குக்கு நானும் சிலதைச் சொன்னேன்.

வெங்கட் இதைப்பற்றிய தன் கருத்துகளைத் தன் வலைக்குறிப்புகளில் சற்று வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார். அவர் இறுதியாக முடிக்கும்போது கேட்டது:
பொதுவில் இந்தியத்தமிழர்கள் ஈழத்தமிழர்களை அறியாமையை விவாதிக்கையில் அதையும் ஈழத்தமிழ்-பார்ப்பனத்தமிழ், ஈழத்தமிழ்-கொங்குத்தமிழ், ரீதியில் விவாதித்து அதற்குக் காரணமாக நாடகங்களில், சங்கீதத்தில், குமுதங்களில் கோலோச்சியதாகச் (செட்டியார் குமுதத்தில் ஐயங்கார் சுஜாதா எத்தனை நாள் தாக்குபிடிக்க முடிந்தது என்பது கண்கூடு) சுட்டி அவர்கள்தான் இதற்கெல்லாம் காரணம் என்று தொனிக்க எழுத வேண்டுமா?

ரமணீதரன், தன் நீண்ட விளக்கத்தில், பிரபலமான பல இந்தியத் தமிழ் கலைஞர் மற்றும் இலக்கியவாதிக்கும் இணையான இலங்கைத் தமிழர் பெயரைக் குறிப்பிட்டு, அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று எழுதி இருந்தது, என்றுமே நிறைவேற்ற இயலாத குறை. நமக்கு என்றுமே ஒரு பழக்கம். பரவலாகத் தெரிந்த ஒரு பட்டம் அல்லது பெயர், இவற்றுக்கு, நம் குறுகிய வட்டத்துக்குள் ஒரு பதிலி தேடுவது. எல்லாருக்கும் தெரியும், இங்கிலாந்தில் மான்செஸ்டர் புகழ்பெற்ற சவுளித் தொழில் மையம். உடனே இந்திய அளவில் பம்பாய் 'இந்தியாவின் மான்செஸ்டர்' என்போம். பிறகு இன்னும் குறுக்கி, கோவை 'தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' என்பதும் இப்படியே. காமராஜ் 'தென்னகத்து காந்தி'யாவதும், கோவை, 'ஏழைகளின் ஊட்டி' ஆவதும் இந்த மனப்பான்மையின் வெளிப்பாடே. அண்ணா 'தென்னாட்டு பெர்னாட்ஷா' ஆவதும். இப்படி ஒவ்வொரு இந்தியத் தமிழ் பிரபலத்துக்கும் இலங்கையில் இணை இருக்க வாய்ப்பிருக்கிறது. அப்படியானால் எல்லா விதத்திலும் ஈழத்தமிழர் இந்தியத் தமிழரில் மாற்றுக் குறைந்தவர்களா என்றால் இல்லை. சனத் தொகை, வர்த்தக வீச்சு, போன்ற பல காரணங்களால், இயற்கையில் இந்தியத் தமிழரின் பிரபலத்தை அடைவது ஈழத்தமிழருக்கு கடினமான காரியம், என்பதைச் சொல்கிறேன். ஆகவே இவர்களுக்குக் கிடைத்த அங்கீகாரம் அவர்களுக்கு ஏன் இல்லை என்ற கேள்வி விடையில்லாத கேள்வி.

வெங்கட் கடைசியாகக் கேட்ட கேள்விக்கும் விடை சற்று சிரமமானதாகவே தோன்றுகிறது. என் சிறு அனுபவம் ஒன்று: விளையாட்டுப் பிள்ளைகள் வீடு கட்டுவது போன்று, அம்மாவிடம் சப்பாத்தி மாவை வாங்கி தானும் சப்பாத்தி செய்வது போல், நானும் என் பதின் வயதுகளில் கதை ஒன்று எழுத எத்தனித்தேன். என் உலகம் மிகமிகச்சிறியது. நான் கண்ட ஊர்கள் சித்தூரும், கொஞ்சம் கோவை, பொள்ளாச்சி, அவ்வளவே. நான் படித்த புத்தகங்கள் குமுதம், கல்கண்டு, கொஞ்சம் விகடன், மாலைமதி, ராணிமுத்து போன்றவை. அன்று எந்த டிவியும் இல்லை என் ஆத்ம நண்பன் (அவன் ஐயங்கார் என்பது சில வருடங்களுக்கு முன்பு தான் தெரியும், அய்யர் என்று அப்போதே கேள்விப் பட்டிருக்கிறேன்) கூட என்றுமே பிராமணத் தமிழ் பேசி நான் கேட்டதில்லை. நான் எழுதிய அந்தக் கிறுக்கலில் முதல் வரி இப்படி ஆரம்பித்தது. 'ஏன்னா, சாயந்திரம் வரும்போது நான் சொன்னதெல்லாம் வாங்கிட்டு வருவேளா?'. எனக்கு எங்கிருந்து வந்தது இந்தத் தமிழ்? என்னையும் அறியாமல், கதை என்றால் அது இந்த மாதிரித் தான் இருக்கும் (அதற்குத் 'பிராமணத் தமிழ்' என்று பெயர் என்று கூடத் தெரியாது!) என்பது மாதிரி என் அடிமனதில் அப்படியொரு எண்ணம் படிந்திருந்ததற்கு என்ன காரணமாயிருக்க முடியும்? அன்று வரை நான் படித்திருந்த கதைகளும் நாவல்களும் தவிர என்னால் வேறு ஒன்றையும் சுட்டிக்காட்ட முடிய வில்லை.

ஆனால் ஒன்று, இதெல்லாம் கால ஒட்டத்தில் மாறிக்கொண்டு வரும் விஷயங்கள். சென்னையிலேயே மயிலாப்பூர் வீடும், மவுன்ட் ரோடு ஆபீசுமாய் கதைகள் வந்தபோது, ஒரு ராஜேஷ்குமார் கோவையிலிருந்து வந்து காந்திபுரத்தையும் சாயிபாபா காலனியிலும் கதையை நகர்த்தினார். அவர் எழுதினதெல்லாம் இலக்கியமா என்பதல்ல இங்கு பிரச்னை. அது ஒரு மாற்றம். ஆனால் ஒரு மதுரைக் காரருக்கோ, திருச்சிக் காரருக்கோ, இன்னும் எரிச்சலாய்த் தான் இருக்கும். ஏன் கதைகள் நம் ஊரில் நடப்பதில்லையா? என்று, இதற்கு அது மருந்தாகாது. ஒரே சூழல், ஒரே வட்டார வழக்கு இவையெல்லாம் மாற வேண்டும். அதற்கு இலக்கியம் படைப்பவர்கள் கொஞ்சம் விசாலமாய்ச் சிந்திக்க வேண்டும். போனதை கூறு போட்டு ஆராய்வதில் வலிகளே மிஞ்சும். உலகம் போகும் போக்கைப் பார்த்து நம் தமிழ்ச் சமுதாயத்தை முன்னேற்ற என்ன வழிகள் என்று தொலை நோக்கோடு நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். இந்தப் பிராந்திய வாதம் நம்மை எங்கும் கொண்டு சேர்க்காது. வேண்டுமானால், 'கொங்கு நாட்டுப் பாரதி'களையும், ஈழத்து'சிவாஜி'யையும் கொடுக்கும், ஆனால் நாம் குறிவைக்க வேண்டியது, இந்தியாவுக்கும் வெளியில், ஆசியாவுக்கும் வெளியில், உலகளாவிய சமுதாயத்தில் நம்மில் சிலர் பெயர் எடுக்க வேண்டும். இந்தத் 'தமிழ் நாட்டு நோபெல்', 'தென்னகத்து ஆஸ்கார்' போன்ற மாயைகளிலிருந்து விடுபடவேண்டும்!

வியாழன், நவம்பர் 27, 2003

விடுகதைக்கு விடை - இற்றைப்பாடு

விடுகதை இங்கே

நண்பர் கண்ணன் பார்த்தசாரதி அருமையாக கதை சொல்லி விடை கொடுத்திருந்தார், ஆனாலும் இந்த இலவச சேவைகளின் சாயம் வெளுத்து, இப்போது அந்தப் படம் தெரிவதில்லை. நண்பர் பாலாஜி 'எங்கே விடை? இங்கே கொடு' என்று கேட்டதால் நான் விடையை மட்டும் இங்கு மீண்டும் கொடுக்கிறேன்.

கந்தசாமி மகன் வெறும் பத்து மாடுகளை நட்சத்திர வடிவத்தில் நிறுத்தி தான் ஒப்புக்கொண்டபடி ஒப்படைத்தாய் வாதாடினான். இதோ கீழே இருப்பது போல்.



செவ்வாய், நவம்பர் 25, 2003

ரயிலே உன்னைக் காதலிக்கிறேன் - 3

பாகம் - 1, பாகம் - 2 இங்கே.

இந்த ரயில் காதலை முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போகலாம்.

இப்படியாக வளர்ந்த காதல், பாலிடெக்னிக் இறுதியாண்டில் 10 நாள் சென்னை-பெங்களூர் சுற்றுலா ரயிலிலேயே என்றதும், மேலும் அதிகரித்தது. ரயிலைக் கிட்டத்தில் பார்த்து, அதனுடனே சில இரவுகளையும் கழித்து (சே, சொல்ல வெட்கமாயிருக்கிறது :-) காதல் வளர்ந்து கொண்டே இருந்தது.

இன்னும் வளர்க்காமல் இனி இந்தப் பைத்தியம் இறங்கின கதையையும் சொல்லிவிடுகிறேன். கொஞ்சம் காதலியை வெறுக்க ஆரம்பித்தது திருவள்ளூரில் இருந்து குரோம்பேட்டை MIT சென்று இரவு 11:30க்கு திரும்ப திருவள்ளூர் வந்து சேரும்வண்ணம் படித்த அந்த பட்ட மேல்படிப்பு. கொடுமையிலும் கொடுமை, தினம் இரண்டு மணி நேரம் (ஒரு வழி!), அதுவும் கடும் பசியுடன், அரைத்தூக்கத்துடன்...எப்படியடா இவளிடமிருந்து விடுபடுவது என்று சமயம் பார்த்துக்கொண்டிருக்க, பெற்றோர் பார்த்து வைத்த அத்தை பெண்ணாய் வந்தது IITயின் பட்ட மேல்படிப்புக்கான வாய்ப்பு. விட்டேன் சவாரி!, இல்லையில்லை ரயில் சவாரியை விட்டேன். அப்படியே எல்லாத்தையும் தூக்கிப்போட்டு விட்டு ஓடிப்போனேன். இல்லாவிட்டால் வினோபா, மீனாக்ஸ் போல நானும் MIT பட்டதாரி (அதென்ன அப்துல் கலாம், சுஜாதா என்றுதான் சொல்லணும்னு கட்டாயமா என்ன?) என்று சொல்லியிருப்பேன். இப்போது வெறும் IITயோடு போய் விட்டது;-)

எல்லாக் காதல்களையும் போல் இதுவும் முற்றாய்க் கசப்பதற்கு ஒரு வேளை வரவேண்டாமா? வந்தது. அமெரிக்கா வருவதற்கு முன் கிட்டத்தட்ட ஒரு வருடம் கோவை-சென்னை இடையே வாராவாரம் பயணிக்கவேண்டி வந்ததும், மீண்டும் ரயில் மங்கை வாழ்வில் எட்டிப் பார்த்தாள். ஒரு நாளா ரெண்டு நாளா, 48 வாரம் பயணித்தேன் ஒவ்வொரு வெள்ளியன்றும் சென்னையிலிருந்து, பின் ஞாயிறன்று கோவையிலிருந்து. இனிமேல் ரயில் என்றால் 'நானில்லை, வரமாட்டேன்' என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஆனது. 'நீ வந்தால்தான் ஆச்சு' என்று அமெரிக்கா அழைக்க, ஐம்பதாவது வாரக் கொண்டாட்டத்தையும்கூட மறந்து அவளை மீண்டும் விட்டுவிட்டு இங்கு ஓடி வந்துவிட்டேன். ஆனாலும் அன்று 'வலைப்பூ'வில் அவளின் அட்டகாசமான படம் வரவும் பழசெல்லாம் மனதில் வந்து முதல் மரியாதை சிவாஜியாய் ஆட்டியது. ம்ஹும்..அந்த மலரும் நினைவுகள்!

அது சரி, அமெரிக்காவில் எத்தனை பேர் ரயிலில் போயிருக்கிறீர்கள், நான் அதையும் பார்த்துவிட்டேன். ஆல்பனியிலிருந்து எங்க ஊருக்கு ஒரு இரவில்(!) அமெரிக்க ரயிலையும் பார்த்தாச்சு. ஐரோப்பா ரயிலும் பார்த்தாச்சு, இன்னும் இந்த ஜப்பான் மாமா பெற்ற புல்லட் ரயில் ஒன்றையும் பார்த்துவிட்டுத் தான் இந்தக் கட்டை வேகும்!

ஒரு படம், சிறு விளக்கம்


இந்தப் படத்தை ஒரு ரயில் காதல் கதை அத்தியாயத்துக்குக் கொசுறாக ஜோக்குக்கு பயன்படுத்தலாம் என்று வைத்திருந்தேன். ஆனால் அண்டை வீட்டு அன்பர் அளித்த அன்பான விருந்தின் மகிமையால் இரண்டு நாள் வயிற்றுவலியோ வலி. ராத்திரி தூங்க முடியாத அளவுக்கு வலி. நான் அதில் விழுந்துவிட்டதால் என் நிலையை விளக்கவே இந்தப் படம் பயன்பட்டது. இன்னும் நம்மில் நிறையப்பேர் விருந்தினரை உபசரிப்பதென்றால், அவர்கள் சாப்பிட முடியாமல் விழிக்கும் அளவுக்கு தட்டை நிரப்புவது தான் ஒரே வழி என்று நம்புவதால், அதே வழியில் இந்த அன்பரும் போனதால்... ம்.. என்ன சொல்லி என்ன செய்ய, எங்கே போனது என் புத்தி? இத்தனைக்கும் சாப்பாடு மிக மிக சுமார். ம்ம்..கிரஹணம் பிடிக்கவேண்டும் என்று பஞ்சாங்கத்தில் எழுதியிருந்தால் சுப்ரீம் கோர்ட் நினைத்தாலும் மாற்ற முடியாது. இதெல்லாம் என்ன சாதாரணம்.

ஒரு நண்பர் இந்தப் படத்தை எதுக்கு இங்கே போட்டிருக்கிறாய் என்று கேட்டதால், எல்லாரும் பரியைப்போல் விவரமானவர்களாய் இல்லாததால், ஒரு சிறு விளக்கம்: ரயிலை இயற்கையாகப் படம் வரைய ஆசைப்பட்டவரின் கடைசி ஒவியம் இது:-)

ஞாயிறு, நவம்பர் 23, 2003

ஒரு சின்ன ஆராய்ச்சி

பொது நூலகம் போன்ற இடங்களில் உள்ள, கட்டுப்பாடுகளுடன் கூடிய கணினியொன்றில் இருந்து நான் இதைப் பதிக்கிறேன். டெம்ப்ளேட்டில் சில மாறுதல்கள் செய்தவுடன், இப்பொது இயங்கும் எழுத்துரு முழுதும் பயன் தருகிறது. இதன் மூலம், வலைப்பதிவுகளைப் படிக்க முடிவது மட்டும் இல்லாமல், கருத்துச் சேவை சன்னலிலும் தமிழ், அதுவும் TSCII மற்றும் யுனிகோட் இரண்டிலும் இடப்பட்ட கருத்துக்களைப் படிக்க முடிகிறது.

சுரதாவின் எழுத்துரு மாற்றியுடன் சேர்ந்து இப்போது, எந்தக் கட்டுப்படுத்தப்பட்ட இடத்தில் உள்ள வின்டோஸ் கணினியிலும் இப்போது ஒரு பயனர் வலைப்பதித்தல், கருத்தைப் படித்தல், கருத்துப் பதித்தல் ஆகிய அனைத்தும் செய்ய முடிகிறது.

இவற்றை எப்படி செய்வது என்பதை விவரமாக அ.கே.கே வில் கொடுப்போம்.

இன்னும் இதைப் படிக்கிறவர்கள் ஏதும் குறை இருப்பின் தெரியப்படுத்தினால் மிகவும் உதவியாக இருக்கும்.

நன்றி!

சனி, நவம்பர் 22, 2003

ரயிலே உன்னைக் காதலிக்கிறேன் - 2

பாகம் - 1 இங்கே


பஸ் ட்ரைவர் திறமை சாலியா? ரயில் ட்ரைவர் திறமைசாலியா? இதில் என்ன சந்தேகம், இவ்வளவு பெரிய ரயிலை கொஞ்சம் கூட தண்டவாளத்தை விட்டு விலகாமல் நழுவாமல் ஓட்டுவதென்றால் அவர் எவ்வளவு திறமை சாலியாக இருக்கவேண்டும்? ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு நாள் எஞ்சின் அருகே சென்று பார்க்கும் வாய்ப்புக் கிடைத்த போது தான் தெரிந்தது அவர் கையில் ஸ்டேரிங்கே இல்லை என்று!

இரும்பை இழுக்கும் காந்தம் சிறு வயதில் தங்கத்தை விட மதிப்புள்ள பொருள். இது எப்படிச் செய்கிறார்கள்? 'அதுவா, நமக்குத் தேவையான அளவு இரும்பைக் கொண்டுபோய் ரயில் தண்டவாளத்திலே வைத்தால், ரயில் அது மேலே ஏறிப் போனதுக்கப்புறம் அது காந்தமா மாறிடும்' - இது பொது அறிவுள்ள, டவுன் பக்கமிருந்து சித்தூருக்கு வந்த என் நண்பன் கொடுத்த செய்முறை. இதை சோதனை செய்து பார்க்க வேண்டுமென்று நானும் ஆசைப்பட்டேன்.

பக்கத்தில் பட்டறையில் கிடைத்த அந்தப் பெரிய இரும்பை வைத்துப் பெரிய காந்தமாய் செய்திருக்க வேண்டியவன், காலுக்கெட்டும் தூரம் வரை ரயில் தண்டவாளம் கிடைக்காததால், இதன் வண்டவாளத்தை அறிய முடியாமல் போய்விட்டது. கூடவே ரயிலில் போகிறவர்கள் பண்ணின புண்ணியம் சேர்ந்து கொள்ள, சோதிக்க முடியாமலே போய்விட்டது. இல்லாவிட்டால், ஒருவேளை சிறு வயதிலேயே ரயிலைக் கவிழ்க்க முயன்றான் என்று பொடோவில் போட்டிருப்பார்கள்!

அதெல்லாம் சரி, பஸ் மாதிரி ரயில் சட்டென்று திரும்புவதில்லையே, ரிவர்ஸ் கூட எடுக்க முடியுமா தெரியவில்லை (எந்த சினிமாவில் ரயில் ரிவர்ஸில் போறதைக் காட்டினான்!) பொள்ளாச்சி போனதும் இதை எப்படித் திருப்புவார்கள்? 'அதுவா? பொள்ளாச்சி ஸ்டேஷனுக்கு வெளியே பெரிய வட்டமாய் ரயில் பாதை உண்டு, அதில் ரயிலை விடுவார்கள் அது தன்போக்கில் ஓடித் திரும்பி வரும்'.

என் அண்ணனும் நானும் பின்னொரு முறை பொள்ளாச்சி ஸ்டேஷன் (ஜங்ஷன் என்று பேரெல்லாம் பெரிசாப் போட்டிருக்கும், ஆனா பைசா பிரயோசனம் இல்லாத ஸ்டேஷன், இன்னும் மீட்டர் கேஜ்! சினிமா ஷூட்டிங்குக்கு ஆகும், நிறையப் படத்தில் நடித்திருக்கிறது, உ.ம்.: 'கிளிஞ்சல்கள்') போகும் வாய்ப்புக் கிடைத்ததும் முதலில் பார்க்கப் போனது, இந்த ரயில் திரும்புவதைத் தெரிந்து கொள்ளத்தான். அப்பத்தான் தெரிந்தது, எஞ்சினை மட்டும் தான் திருப்புவார்கள், அதுவும் ஒரு பெரிய வட்டமான குழிக்குள் அமைந்த ஒரு மேடை மேல் நிறுத்தி மனிதர்களாகச் சேர்ந்து 'ஏலேலோ ஐலசா' போட்டுத் திருப்புவார்கள் என்பதை.

இப்படி ரயிலைச் சுற்றியே எண்ணங்கள் சிந்தனைகள்! அதை வைத்தே அறிவியல் ஆராய்ச்சி!

ரயில் பயணம் இன்னும் தொடரும் (ஜாக்கிரதை!)

சரி இன்றைய ரயில் ஜோக்குகள்:

* * * *

'அம்மா, உன்னையும் என்னையும் போலீஸ் தேடி வந்திட்டு இருக்கு'

'எதுக்குடா?'

'நீ பண்ணின மைசூர் பாகை உடைக்கறதுக்காக தண்டவாளத்திலே வெச்சேன், ரயில் கவுந்துருச்சு'

* * * *

'உஸ்..அப்பா...தலையை வலிக்குதே'

'ஏன் என்னாச்சு?'

'எனக்கு இந்த எலெக்ட்ரிக் ட்ரைய்ன்லெ வண்டி போறதுக்கு எதிரே பாத்து உக்காந்து போனா ஒத்துக்கறதில்லை, இன்னிக்கு அப்படி உக்காந்து வந்தேன், அதான்.'

'உங்களுக்கு ஒத்துக்காதுன்னா எதிரே உக்காந்திருக்கறவர் கிட்டெ ரிக்வெஸ்ட் பண்ணிக் கேட்டு மாறி உக்காந்திருக்கலாம்லெ'

'நானும் கேக்கலாம்னுதான் நினைச்சுப் பாத்தேன், எதிர் சீட்டிலே ஒருத்தரையுமே காணோமே'

* * * *

ரயிலே உன்னைக் காதலிக்கிறேன்


ரயில் நிலையம் இல்லாத ஊரில் பிறந்து வளர்ந்ததால் மனதில் ரயிலின் மேல் எப்போதும் ஒரு தீராக் காதல் இருந்தது. கோவை மாவட்டத்தில் வட்டாரப் போக்குவரத்துக்கு ரயிலை ஒரு பொருட்டாகவே யாரும் மதிப்பது இல்லை. கோவை, பொள்ளாச்சி, ஈரோடு ஆகியன என்றுமே பேருந்துப் போக்குவரத்தில் மற்ற பகுதிகளைவிட முன்னேறி இருந்தன. இதனால் அதுவா அதனால் இதுவா தெரியாது. ஆனால் கலக்குவதற்குக் கல்லூரிக்குப் போகும் இளசுகள், 10 மணிக்கு மேல் அலுவலகங்களுக்கு விசிட் பண்ணும் பெரிசுகள் காசு மிச்சம் பண்ண வேண்டி சீசன் டிக்கட்டில் அதில் போவார்கள். உருப்படியான வேலை இருக்கும் யாரும் அந்தப்பக்கமே தலை காட்ட மாட்டார்கள்.

சித்தூரில் இருந்தவரை ஒரே ஒரு முறை ரயில் பயணம் அமைந்தது. அங்கிருந்து 8 கி.மீ. பேருந்தில் சென்று கிணத்துக்கடவில் பொள்ளாச்சிக்கு ரயில் ஏறினோம். அது சுமார் முக்கால் மணிப் பயணம் தான். அங்கிருந்து பழனிக்கு பிரயாணம். ஆனால் அன்று அடைந்த ஆனந்தம், 20 வருடம் கழித்து ஜெட் ஏர்வேஸில் முதல் முறையாய் பறந்த போது கால்பங்கு கூடக் கிடைக்கவில்லை.

சில வருடங்களுக்குப் பிறகு பொள்ளாச்சிக்கே குடிபோய்விட்டோ ம். ஒரு நாள் அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலுக்கு போயிருந்தபோது அங்கிருந்து கூப்பிடு தூரத்தில் அது கண்ணில் பட்டதும் காணாமல் போன காதலியைத் திரும்பப் பார்த்தாற்போல் எல்லையில்லா ஆனந்தம்! அது வேறு ஒண்ணுமில்லை, ஒரு ரயில்வே கேட்! 'கோயிலெல்லாம் நீங்க பாத்துட்டு வாங்க, நான் ரயிலைப் பாத்துட்டுத்தான் வருவேன்' என்று அம்மாவிடமும், அண்ணனிடமும் சொல்லிவிட்டு அந்தக் கேட்டருகே நின்று தொடுவானம் வரை நீண்டு கிடந்த தண்டவாளங்களை ரசித்துக் கொண்டு காத்திருந்தேன். யாரோ சொன்னார்கள் பஸ் போல ரயில் அடிக்கடி வராதாம். 'சும்மா சொல்கிறார்கள், என்னை ஏமாற்ற' என்று எண்ணிக் கொண்டே, 'ரயிலை இவ்வளவு கிட்டத்தில் பார்க்க எப்பேர்ப்பட்ட வாய்ப்பு கிடைத்திருக்கு, என்ன ஆனாலும் இன்னிக்குப் பார்க்காமல் திரும்புவதில்லை' என்று நின்றேன்.

சாமி தரிசனம் முடிந்து வந்தவர்கள் என்ன கூப்பிட்டும், என் தேவி தரிசனம் கிடைக்காமல் நான் வர மாட்டேன் என்று நின்றேன். அங்கிருந்தவர்கள் எல்லாரும் இன்னும் 4 மணி நேரம் கழிச்சுத்தான் அடுத்த ரயில் என்றார்கள். இருக்கட்டுமே அதனால் என்ன, நான் இங்கேயே நிக்கிறேன். அதுக்கப்புறம் வந்து என்னைக் கூட்டிட்டுப் போங்கள் என்று மல்லுக்கட்ட, அம்மாவும் அண்ணனும் கோபம் தலைக்கேறி கிட்டத்தட்ட என்னை இழுத்து வந்துவிட்டார்கள். எத்தனை படங்களில் பார்த்திருப்போம், காதலியிடமிருந்து காதலனைப் பிரித்து இழுத்துச்செல்லும் காட்சியை, அந்தக் காதலனே தோற்கும் அளவுக்கு அழுதது இன்னும் நினைவில் இருக்கிறது.

ரயில் பயணம் தொடரும் (ப்ராமிஸ், நாளையே!)


விளம்பர இடைவேளையில் ரயில் சம்பந்தப்பட்டஒரு சர்தார்ஜி ஜோக் (முன்னமே கேட்டவர்களும் என் காதலிக்காக சிரித்து வைக்கவும்):

* * * *

'ஏம்பா தாடி, கில்லாடிபா நீ, எப்டியோ மேலே எடம் புட்ச்சிட்டியே'
'சாந்தாசிங்கா கொக்கான்னேன், என்னால விடியற வரைக்கும் சீட்ல உக்காந்து வர முடியாதுன்னு தான் போர்ட்டருக்கு துட்டு வெட்டி எடம் புடிச்சேன்'
'உம்...இன்னா பண்ண, காத்தாலவரைக்கும் நா ஒக்காரத்தான்...'
'ஏம்பா, நீ தான் முழிச்சிட்டிருக்கப் போற இல்ல, நான் 20 ருவா தாரேன், என்னை காலைல 4 மணிக்கு எழுப்புறியா?, நான் இறங்கணும்'
'சரி, சொம்மா துட்டு வருதுன்னா எனக்கு இன்னா கஸ்க்குதா, குடுபா, நானாச்சு ஒன்ன எயுப்ப'

* * * *

'கொர்ர்...கொர்ர்ர்....'
'அடச்சே, ஒரு சேவிங்குக்கே நமக்குப் பத்து ரூவா கூட எவனும் தர்ரதில்லை, பாவம்பா இந்தத் தாடிக்காரன். இருவது ரூவா குட்துக்கறான். சொம்மாத்தானே குந்தீக்கிறோம். அல்லாரும் சப்ஜாடாத் தூங்கிட்டானுக. அவனுக்கு வேற தாடியும் மீசையும் பொதராட்டமாக் கெடக்கு, அவன் அப்டியே தூங்கட்டும், நான் அவனுக்கு சூப்பரா சேவிங் பண்ணி வுடறென் பாரு..'

* * * *

'இந்தாபா..உங்க ஊரு வந்த்ச்சுப்பா, ஏந்திரி'
'அட..அதுக்குள்ளயா? ஓ...தேங்க்ஸ்பா, வரட்டா'

* * * *

'பீவி..இங்க பாத்தியா என்ன வாங்கி வந்திருக்கேன்னு'
'அய்யய்யோ நீங்க யாரு...அட நீங்களா? என்ன ஆச்சு, ஏன் இப்படி? ஆளு அடையாளமே தெரியல!'
'ஏன்?'
'போயிக் கண்ணாடியிலே பாருங்க தெரியும்'

* * * *

'அடப்பாவீ! அந்தப் பய சரியான ப்ராடா இருக்கான்'
'யாரு?'
'அதான், கீழே சீட்ல இருந்தவன். 4 மணிக்கு எழுப்பி விடுன்னு நான் குடுத்த 20 ரூவாயை வாங்கீட்டு, அந்த ராஸ்கல் வேற யாரையோ எழுப்பி விட்டுருக்கான்.'

* * * *

புதன், நவம்பர் 19, 2003

விடுகதையும் விடைக்கதையும்

புதிர் ஒன்றை சோடனை செய்து கதை வடிவத்தில் (விடு'கதை' என்பது இது தானோ?) கொடுத்திருந்தேன். சில விடைகள் மின்னஞ்சலில் வந்திருந்தன. அதில் முக்கியமான ஒரு பதில் மனதைக் கவர்ந்தது.

முதலில் நான் இதை வெறும் புதிராகத்தான் பதிக்க எண்ணி, ஒரு பாரா தட்டச்சியும் விட்டேன். பிறகு என்ன இது ரொம்ப வறட்சியாக இருக்கிறதே. எப்படியாவது சுவையூட்ட முடியுமா என்று யோசித்து இப்படி ஒரு முயற்சி செய்தேன். எனக்கே ஆச்சரியமாக இருந்தது, இப்போது படிப்பதற்கு எளிய நடையாகத் தோன்றியது. சரியென்று பதித்தேன்.

நண்பர் கண்ணன் பார்த்தசாரதி இதற்கு வெறும் விடையாகக் கொடுக்காமல் விடுகதைக்கு பதிலாக ஒரு விடைக்கதை ஒன்றை தன் வலைமொட்டுக்களில் பதித்து இருக்கிறார். அதைப் படிக்கும்போது வெறும் புதிருக்கு விடை என்பதைவிட எவ்வளவு மனித உணர்வுகளைப் பின்னி எழுத முடியும் என்பது புரிந்தது. இந்தப் பாடத்திற்கு நன்றி, கண்ணன்.

அருமையான அந்த விடைக்கதையை இங்கே காணலாம்.

கணக்குப்புலி கந்தசாமி மகன்


'சாமி, ஏதாச்சும் வேலை இருந்தாக் கொடுங்க, சீவனத்துக்கே வழியில்லைங்க '

'ஓ, கந்தசாமி மகனா, என்ன வேலைடா செய்வே?'

'கணக்கெல்லாம் நல்லாப் போடுவேங்க, கணக்குப்பிள்ளை வேலை கொடுத்திங்கன்னா...'

'போடா போ, நான் பாக்காத கணக்கா.. மாடு மேய்க்கிற வேலைதான் இருக்கு, செய்யறியா?'

'கஞ்சிக்கே வழி இல்லிங்க, எதுனாலும் செஞ்சு தானே ஆகணும், சரிங்க செய்யிறேன்'

'சரி, சரி, விடிகாலைல சீக்கிரமா வந்து மாட்டையெல்லாம் காட்டுக்கு ஓட்டிட்டுப்போ'

****

'பாத்தியாடா எத்தனை மாடு இருக்குன்னு, சாயங்காலம் இத்தனையையும் பத்திரமா என்கிட்ட ஒப்படைச்சிட்டுப் போகணும்'

'சரிங்க, எத்தனைன்னு எண்ணிக் குடுத்துடுங்க சாமி'

'என்னமோ கணக்கில பெரிய புலின்னெயே, இப்ப மாட்டை எண்ணரதுக்கு நான் வேணுமா?'

'இல்லிங்க உங்க மாடு, நீங்க எண்ணினா சரியா இருக்கும்'

'இப்படி வரிசையா நிறுத்து, நான் எண்ணிக் காமிக்கறேன்'

'இந்தாங்க, எல்லாம் வரிசையில நிறுத்தியிருக்கனுங்க'

'பாத்தியா, ஒரு வரிசையிலெ நாலு மாடு இருக்கா, அது மாதிரி எத்தனை வரிசை இருக்கு?'

'ஒண்ணு, ரெண்டு...அஞ்சுங்க'

'ம்..ம்..பரவால்லேடா, உனக்கும் எண்ணிக்கையெல்லாம் தெரியுதே'

'நான் மொதல்லியே சொன்னேனுங்க...'

'சரி சரி, நீ கில்லாடின்னு தெரியும், எத்தனைன்னு பாத்துட்டயல்ல, இதே மாதிரி எனக்கு பொளுதோட திரும்ப எண்ணி ஒப்படைக்கணும், தெரிஞ்சுதா'

'சரிங்க, வரிசைக்கு நாலா, அஞ்சு வரிசை ஒப்படைக்கணும், இல்லிங்களா?'

'உனக்கு எத்தனை தாட்டி சொல்றது, அதேதான், வரிசைக்கு நாலா, அஞ்சு வரிசை ஒப்படைக்கணும். ஏதோ கந்தசாமி மகன்ங்கிறதுனால உன்னை நம்பி ஒப்படைக்கிறேன், மாட்டிலே ஒண்ணு கொறஞ்சாலும், படவா பஞ்சாயத்தில நிறுத்திடுவேன்'

'சரிங்க சாமி'

******

'சாமி, மாடுங்க அல்லாம் நல்லா மேஞ்சுதுங்க, இதோ எல்லாத்தையும் கொண்டுவந்துட்டேங்க'

'ஓஹோ, சரி சரி, நான் எண்ணிப்பாக்க வேண்டாமா, அல்லாத்தையும் வரிசையில நிறுத்து'

'நிறுத்திட்டேங்க சாமி, சரியான்னு பாத்துக்கங்க'

'எங்கே காமி'

'இத பாருங்க, வரிசை ஒண்ணு, ரெண்டு,..அஞ்சு'

'டேய், என்னடா நிறைய மாடு கொறையுது'

'இல்லிங்களே, நீங்க சொன்ன மாதிரி நாலு நாலா அஞ்சு வரிசை இருக்குங்களே'

'அடே, அடே நீ கணக்கிலெ கில்லாடின்னு நான் ஒத்துக்கறேன், இப்ப என் மாட்டையெல்லாம் கொடுத்துடுடா'

'சாமி, நீங்க சொன்ன மாதிரி நாந்தான் அஞ்சு வரிசை காட்டிட்டனுங்களே'

'அடே, அதெல்லாம் வேண்டாண்டா, என்னுது இருவது மாடுடா, என்னடா நிறைய மாட்டைக் காணோமே'

'சாமி, நான் சொன்ன வாக்கைக் காப்பாத்திட்டேன், வாங்க நீங்க சொன்ன மாதிரி பஞ்சாயத்துக்கு, அவங்களையே கேட்டுருவோம்'

****

கணக்குப்புலி, கந்தசாமி மகன் எத்தனை மாடுகளைக் கொண்டுவந்து
சரியாய் இருக்கிறது என்று சாதித்தான்? எப்படி நிறுத்தி பண்ணையார் வாயை அடைத்தான்? யாருக்கு என்ன தோணுகிறது? எனக்கு எழுதலாம். என்னிக்காவது இந்தப் பொட்டி தட்டுற வேலையெல்லாம் இல்லாமப் போனா, நமக்கெல்லாம் ஆகும். ம்..யாருக்கு என்ன வேலை கொடுக்கணுமோ அதைத்தான் கொடுக்கணும்னு பண்ணையார் புரிஞ்சிருப்பார்.

செவ்வாய், நவம்பர் 18, 2003

இசைப்புயல் இளையராணி

எங்க வீட்டு வாண்டு இன்னிக்கு இளையராணி ஆகிட்டா. என்னிக்குமே இளையராணிதான் என்றாலும், இன்னிக்கு இளையராஜாவுக்குப் போட்டியா தானும் இசை அமைக்க ஆரம்பிச்சுட்டதால இளையராணி! அண்ணன் பள்ளியில் 'கடனே' என்று வாசிப்பதற்காக ட்ரம்போன் என்னும் ஊது கருவி ஒன்று வைத்திருக்கிறான். இவள் அவனுக்கு இன்று எழுதிய (அம்மா மூலம் டிக்டேட் செய்த) கடிதம் இப்படிப் போகிறது:

Dear Sathish, 

Please take this note. so you can go good at
trombone. So you can practice very well.
So you can be very very good
at the trombone. I hope you get well.

Love,
Gayathri



அந்தக் காகிதத்தின் பின் புறம் அவள் கொடுத்த musical note தான் படத்தில் இருப்பது.

அண்ணன் அவள் அமைத்த இசைக்கு வாசிக்க வேண்டும் என்று அடம் வேறு. இல்லையென்றால் உனக்கு மியுசிக் தெரியவில்லையென்று வேறு பழிப்பாள். பாவமாய் இருக்கிறது அவனைப்பார்த்தால்!

 

 

திங்கள், நவம்பர் 17, 2003

குட்டிக் குரங்கும், மனக் குரங்கும்

நேற்று ஒரு நண்பர் இல்லத்தில் ஒரு ISKCON கிருஷ்ணபக்தர் தன் பேச்சின் இடையே, 'மனிதனுக்கு எதைவிடவும் மிகவும் முக்கியமானது எது' என்பதை விளக்க அக்பர்-பீர்பால் கதை ஒன்றைச் சொன்னார். அக்பர் கேட்ட இந்தக் கேள்விக்கு பீர்பால் 'தன் உயிர்தான்' என்று பதில் சொன்னாராம். அதை நிரூபிக்க ஒரு விளக்கத்துக்கும் ஏற்பாடு செய்தாராம்.

ஒரு குழிக்குள் ஒரு தாய்க்குரங்கையும் அதன் குட்டிக் குரங்கையும் விட்டார்கள். அவை தானாக மேலே ஏற முடியாத அளவுக்கு அந்தக் குழி ஆழம். அந்தக் குழிக்குள் நீரை நிரப்ப ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் நீர் குட்டிக் குரங்கை முழுக ஆரம்பிக்க, தாய் அதைத் தூக்கிக் கொள்கிறது. 'பார், பீர்பல், தாய்க்கு குட்டியின் மேல் உள்ள பாசத்தின் மகிமையை' என்றாராம் அக்பர். மேலும் நீர் மட்டம் ஏற, தாய் அதைத் தோளில் இருத்திக்கொள்கிறது. இன்னும் மேலே ஏற, குட்டியைத் தன் தலைக்கு மேல் இரு கைகளாலும் தாய் தூக்கிக் கொண்டு சிரமப்பட்டுக் காக்கிறது. அகப்ர் முகத்தில் புன்னகை. பீர்பாலோ நீர் இன்னும் ஏறட்டும் என்கிறார். இப்போது தாய்க் குரங்கின் தலைக்கும் மேல் நீர்.

தாய், குட்டியை விட்டு விட்டு, தன்னைக் காத்துக்கொள்ளத் தத்தளிக்கும் என்று சொல்வார் என்று எதிர்பார்த்தேன். அவர் சொன்னது: தன்னைக்காத்துக்கொள்ள அந்தத் தாய் குட்டியைக்கீழே போட்டு அதன் மேல் ஏறி நின்றதாம்.

பீர்பால் தன் வாதத்தில் வென்றிருக்கலாம், அதை இவரும் நமக்குப் புரிய வைத்திருக்கலாம், ஆனால் உதாரணம் என்னவோ மனதைப் பிசைவது மாதிரி இருக்கிறது. வீட்டுக்கு வந்தும், அந்தக் குட்டியும், குரங்கும் மனதை விட்டுப்போக மறுக்கின்றன. அந்தக் குட்டி உயிருக்காகப் போராடுவது, அதுவும் தாயிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ளப் போராடும் காட்சி மனத்திரையில் திரும்பத்திரும்ப ஓடுகிறது.

பெற்ற குட்டிகளைத் தின்னும் விலங்குகளைக் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனாலும் இது மனதை என்னவோ பண்ணுகிறது.

ஞாயிறு, நவம்பர் 16, 2003

போலீஸ் எப்படித் தேடவேண்டும்

தி ஹிந்து பத்திரிகையாளர்மேல் சட்டமன்றம் எடுத்த நடவடிக்கை, நீதிமன்றம் அளித்த இடைக்காலத் தடைக்குப்பின் மெதுவாக அமுங்கிவிடும் என்றே தோன்றுகிறது. இந்த வாரம் ஜுனியர் விகடனில் இது பற்றிய கட்டுரையில் தி ஹிந்துவின் ஜெயந்த் தன் வீட்டில் தன்னைத் தேடிவந்த போலீசார் எப்படி நடந்து கொண்டார்கள் என்று அளித்த பேட்டி சிரிப்பை வரவழைக்கிறது. தலைப்பு: போலீஸ் ஆடிய அசிங்க நாடகம். அதில்,

போலீஸார் வாரண்ட் எடுத்துக்கொண்டு இரண்டாவது முறை வீட்டுக்கு வருவதற்குள், நான் என் மனைவிக்கு போன் செய்தேன். என் குரலை போனில் கேட்டதும், சின்ன குழந்தையைப் போலத் தேம்பித் தேம்பி அழுதாள். 'அம்மாவுக்கு ஆறுதல் சொல்' என்று கல்லூரி மாணவியான என் மகள் நீத்தாவுக்குச் சொல்லலாம் என்றால், மகளும் அழுதுகொண்டிருந்தாள்.

பிறகு, 'சோதனை' என்ற பெயரில் எங்கள் வீட்டில் டாய்லெட்டில் ஆரம்பித்துப் படுக்கையறை வரை போலீஸார் தலைகீழாக கவிழ்த்துப் பார்த்து ஆடிய அசிங்க நாடகம் எல்லாம்தான் எல்லோருக்குமே தெரியுமே!

என்னுடைய அப்பா மிகவும் வயதானவர். உடல்நலம் குன்றியவர். அம்மாவுக்கோ, அப்பாவைவிட மோசமான உடல்நிலை. ஊன்றுகோல் உதவியுடன்தான் நடப்பார். நாங்கள் வசிக்கும் அதே அபார்ட்மெண்ட்டின் கீழ்த்தளத்தில் உள்ள இன்னொரு ஃப்ளாட்டில்தான் அவர்கள் இருவரும் வசிக்கிறார்கள். நடந்த எந்த சம்பவத்தையுமே அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எப்போது போன் செய்தாலும், அவர்கள் அழுகையை மட்டும்தான் என்னால் கேட்க முடிந்தது. இந்தச் சம்பவத்தினால் அவர்களது உடல் நிலை இன்னும் மோசமாகிவிட்டது...


இதில் எதுவும் புதிதாக, எங்குமே நடக்காத எதுவும் போலீஸ் செய்ததுபோல் தெரியவில்லையே. வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்போன எல்லா இடத்திலும் எப்படி நடந்திருக்குமோ அப்படித்தான் நடந்திருப்பதாகத் தெரிகிறது. வாசலிலேயே 'அய்யா உள்ளே இருக்கிறாருங்களா?' என்று விசாரித்துவிட்டு, 'சரிங்கம்மா, வந்தா லாக்கப்புக்கு வந்து வீக் எண்டை எங்க ஸ்டேஷனிலேயே கழிச்சுட்டுப் போகச்சொல்லுங்கம்மா' என்று சொல்லிச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா? உள்ளே வந்து ஒரு இடம் விடாமல் தேடுவது தான் கைது செய்ய வந்த போலீஸின் கடமை. அந்த தண்டனை சரியா தவறா என்பது வேறு, தலைமறைவாய் இருப்பவரைத் தேடும் போலீசின் நடவடிக்கை வேறு. டாய்லெட்டிலோ படுக்கை அறையிலோ தேடுவதில் என்ன அசிங்கம் இருக்கமுடியும்? எனக்குப் புரியவில்லை.

சனி, நவம்பர் 15, 2003

பாரதியின் தீர்க்கதரிசனம்

திசைகள் இதழில் ஒவ்வொரு மாதமும் பாரதியார் பக்கம் என்ற தலைப்பிட்டு மகாகவியின் கருத்துக்கள் எண்ணங்கள் அதிலும் அதிகம் (நான்) கேள்விப்படாத விஷயங்கள் வெளியாகின்றன. இந்த நவம்பர் இதழில் வெளியானதிலிருந்து சில வரிகள்:


வெளிநாட்டுக்குக் கப்பலேறிப் போங்கள். புறப்படுங்கள். புறப்படுங்கள். தொழிலாளிகளே, வியாபாரிகளே, வித்வான்களே, புத்திமான்களே, எப்படியேனும் யாத்திரைச் செலவுக்குப் பணம் தயார் செய்து கொண்டு அன்னிய தேசங்களைப் பார்த்து விட்டு வாருங்கள். நமது தொழில்களுக்கும் கலைகளுக்கும் யோசனைகளுக்கும் வெளி நாடுகளில் ஏராளமான உதவி கிடைக்கும். சந்தேகப்பட வேண்டாம்.

...எவ்விதமான யோசனை, எவ்விதமான தொழில், எவ்விதமான ஆசை, எதையும் கொண்டு பிற தேசங்களுக்குப் போக வேண்டும். ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் யாத்திரை செய்யப் போதுமான திரவியமில்லாதவர்கள் ஜப்பானுக்குப் போகலாம். வெளியுலகம் நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. நமது வரவுக்குக் காத்திருக்கிறது. நமது மேன்மைக்கு வசப்பட ஆவல் கொண்டிருக்கிறது. வெளியுலகத்தில் நாம் சென்று மேம்பாடு பெற்றாலொழிய, இங்கே நமக்கு மேன்மை பிறக்க வழியில்லை. ஆதலால், தமிழ்ப் பிள்ளைகளே, வெளி நாடுகளுக்குப் போய் உங்களுடைய அறிவுச் சிறப்பினாலும், மனவுறுதியினாலும் பலவிதமான உயர்வுகள் பெற்றுப் புகழுடனும், செல்வத்துடனும், வீர்யத்துடனும், ஒளியுடனும் திரும்பி வாருங்கள்.

உங்களுக்கு மஹா சக்தி துணை செய்க.

தமிழ் வலைக்குறிப்புகள்/வலைப்பதிவுகள்/வலைப்பூக்கள்

சும்மா ஒரு ஆர்வத்தில் மற்ற இந்திய மொழிகளில் blogs எப்படிப் போகிறதென்று கூகிளில் தேடினபோது ஆச்சரியப்பட்டேன். ஏனென்றால் அப்படி எதுவும் நடப்பதாகத் தெரியவில்லை! இணையத்தில் முதலில் ஏறின இந்திய மொழி தமிழ் என்று எங்கோ படித்ததாக ஞாபகம். அன்னிய வசிப்பிடத்தில், அன்னிய ஊரில், அன்னிய மக்களோடு அன்னியமான மொழியில் உரையாடி பணிபுரிவது கஷ்டமில்லை. ஆனால் அன்னிய உணவு வெகுவிரைவில் வெறுத்துப்போகும், நெருங்கினவர்களுடன் அன்னிய மொழியில் உரையாடினால் நெருக்கம் குறைந்து போகும். இது இரண்டும், நாக்கு சம்பந்தப்பட்ட விஷயம்.

இந்தி எதிர்ப்போ, இலக்கியங்களோ, ஆழ்வார்களோ, நாயன்மாரோ, திராவிட அரசியலோ, ஏதோ ஒன்று காரணமாய் மற்ற எல்லா இந்திய மொழி மக்களையும் விட எம் தமிழருக்கு தாய் மொழிப்பற்று அதிகம் தான்.எண்ணிகையிலே பெரிதாயிருக்கூடிய(?) இந்தியிலேகூட இன்னும் blogs எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என்னும் போது, கட்டாயம் நம் பன்னெடுங்கால இலக்கியப் பாரம்பரியம் தான் இதற்கு முதல் அடிப்படையாகத் தெரிகிறது. வசதியும், வாய்ப்புகளும் உள்ள மற்ற இந்தியர் தங்கள் மொழியை இன்னும் தேவைக்கு உபயோகப்படுத்தும் (utility) ஒன்றாகத்தான் பார்க்கிறார்கள் என்று தோன்றுகிறது. கடையில், தெருவில், சினிமாவில் பயன்படுத்தமட்டும் அவர்களுக்கு மொழி தேவைப்படுகிறதோ? அதற்கு மேல் உள்ளுணர்வுகளுக்கான ஊடகமாகப் பார்க்கவில்லையோ என்று தோன்றுகிறது.

ஆனாலும் தமிழ் blogs-ல் எத்தனை பேர் உலாவி வாசிக்கிறார்கள் என்று தெரியவில்லை. comments பகுதியில் விழும் கருத்துக்கள் பெரும்பாலும் மற்றொரு blogger இட்டதாகத் தானிருக்கும். இது ஒருவகை பேனா நண்பர்கள் கூட்டம் போல் தோன்றுகிறது. எனக்குத் தெரிந்து என் வலைப்பக்கத்தை பார்க்கும் ஆர்வம் உள்ள பல நண்பர்கள் இணைய வசதி இல்லாததால் (கணினி, மின்னஞ்சல் வசதி இருந்தும்) பார்க்க முடிவதில்லை. எனக்கு தோன்றுகிறது, ஒவ்வொரு பதிவையும், அல்லது வாரம் ஒரு முறை இவர்களுக்கு pdf பைலாக அனுப்பிவைக்கலாமா என்று.

வெள்ளி, நவம்பர் 14, 2003

இன்று புதிதாய்க் கற்றேன்

வாங்க, வாங்க, நம்ம வலைப்பக்கத்திலே கொஞ்சம் திரைமறைவு வேலையெல்லாம் ஆயிருக்குங்க.

இப்போ நம்ம உமர் பாய் உதவியிலே கிடைச்ச dynamic encoded font இப்போ இங்கே இயங்கிட்டு இருக்கு. இப்போ மூணு விதத்தில இங்க தமிழைப் படிக்க முடியும்.

நீங்க Win2000/WinXPயில் இருக்கிறவங்கன்னா ஏதும் செய்யாமலேயே தமிழ் தெரியும். அதிகபட்சம் நீங்கள் Indic Language support enable செய்யத்தேவைப்படலாம், நான் சோதித்தவரையில் அதுகூடத் தேவையில்லை.

அதற்கு கொஞ்சம் முந்தைய OS வெச்சிருந்தீங்கன்னா இத்தனை நாள் எ-கலப்பை அல்லது முரசு தேவைப்பட்டது, இனி தேவையில்லை. அதற்குத்தான் இந்த dynamic encoded font உதவுகிறது. ஒரே தேவை, உங்கள் Internet Explorer version 5.5 அல்லது அதற்குப்பிற்பட்டதாக இருக்கவேண்டும். நீங்க இந்த வட்டத்துக்குள் வர்ரவங்கன்னா, இத்தனை நாள் முரசு/எ-கலப்பை இல்லாமல் படிக்க முடிஞ்சிருக்காது. இனி அப்படியில்லை.

நீங்க அதுக்கும் முந்தைய OS/IE வைத்திருந்தா, இருக்கவே இருக்கிறது முரசு/எ-கலப்பை. எப்பவும்போல அதுபின்னால ஓடிட்டு இருக்கட்டும், இங்க தமிழ் தெரியும்.

இதுக்கப்புறமும் ஏதாவது சிக்கல் இருந்தா, அதை என்கிட்ட முதல்ல சொல்றவங்களுக்கு ஆயிரம் பொற்காசுகள், ம்ஹும், என்ன பரிசுன்னு இங்க சொடுக்குங்க தெரியும்.

புது வெள்ளை மழை விழுந்தாச்சு


ஆச்சு, இன்னொரு நீண்ட ரோச்சஸ்டர் குளிர்காலம் ஆரம்பிச்சாச்சு. அன்டர் கிரவுண்டில் போட்டுவச்சிருந்த ஜாக்கெட், கையுறை, தொப்பி, கம்பளி, எல்லாம் எடுத்து போன வாரமே தயாரா வெச்சாச்சு. ஒன்டாரியோ ஏரிக்கரையில் இருப்பதால் இந்த ஊரில் பனிப்பொழிவு ரொம்ப சாதாரணம். பக்கத்தில் இருக்கும் பஃப்பலோ நகரம் (Buffalo, NY), அட ஆமாம், எருமையேதான், எங்களை விடவும் கஷ்டப்படும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். இந்த வருஷப் பனிக்கு இன்னிக்கு பூஜைபோட்டாச்சு. போதாக்குறைக்கு இன்னிக்கு சூறைக்காற்று வேறு. 35 மைல் (50-60 கிமீ) வேகத்தில் வீசினதால, பனி மேலேயிருந்து விழாமல், கன்னத்தில் அறைஞ்சா மாதிரி பக்கத்திலேர்ந்து விழுந்தது.


ஆனால் இங்கே இந்தப் பனியால் எதுவும் நிற்பதில்லை. போன குளிர்காலத்தில் மட்டும் நாங்க குடியிருக்கிற வெப்ஸ்டர் பகுதியில் 160 இன்ச் (13 அடிக்கும் மேல்) பனி விழுந்தது. பக்கத்தில் ஒரு சில இடத்தில 270 இன்ச் கூட விழுந்திருக்கு. நியூ யார்க் நகர் அவ்வளவா இதில் அடிவாங்கிறதில்லை, அங்கே வெறும் 49 இன்ச் (4 அடி). ஆனால் இங்க ஒரு நாள் கூட வேலை கெட்டதில்லை, ஸ்கூல் மூடினதில்லை! (என்ன இருந்தாலும் நம்ம ஊரு போல வருமா? 'வங்கக் கடலில் புயல் சின்னம்'னு ரேடியோவிலே சொன்னாப்போதும் ஸ்கூல் லீவுதான், ம்ஹும்.)

ரெண்டு மாசத்துக்கு முன் பச்சைப்பசேல்னு இருந்த ஊர், இனி வண்ணமெல்லாம் தொலைஞ்சுபோய், கறுப்பு வெள்ளையா ஆயிடும். மரங்கள் எல்லாம் கறுப்பா காஞ்ச விறகுக் குச்சிகளாத் தெரியும். புல்வெளியெல்லாம் வெள்ளை, கூரையெல்லாம் வெள்ளை. வண்ணங்களைத் தொலைத்த வாழ்க்கை, வசந்தத்தை மறந்த வனாந்திரம், எல்லாம் ஒரு சூன்யமான உணர்வைத் தரும். சும்மாவா பாடினாரு நம்ம எளயராசா 'சொர்க்கமே என்றாலும், அது நம்மூரு போல வருமா...'

வியாழன், நவம்பர் 13, 2003

நான் உலகமயமாக்கலுக்கு எதிரி

பெரிய விஷயமெல்லாம் ஒண்ணுமில்லை. நாம் எதேச்சையா பயன்படுத்துற சில வார்த்தைகள் எப்படி உலகமயமாக்கலிலே அனர்த்தமாய் தெரியுதுன்னு ஒரு சின்ன அலசல் (அறுப்பு!)

நம்ம விஞ்ஞானி வெங்கட் இருக்காரே, அவரை நான் ஓவராப் புகழ்ந்துட்டேன்னு 'ஐஸ் வெக்காதே, வாத்தியாரே'ன்னு பதில் காமெண்ட் உட்டிருந்தார். அதோட இருந்திருந்தா நான் சும்மா இருந்திருப்பேன். 'ஏற்கனவே டொரொன்டோ வில் ஏகத்துக்கும் குளுருது, இதிலே நீ வேறயா'ன்னு சொன்னப்பதான் எனக்கு சட்டுனு பொறிதட்டுச்சு. (வெங்கட், சும்மா கிடந்தவனைச் சீண்டிவிட்டிங்க, இப்ப பாருங்க:-)

ஐஸ் வெக்கறதுங்கிற வார்த்தை நம்ம காஞ்சுபோன பூமியிலே கண்டுபிடிச்ச வார்த்தை. தண்ணொளி, உச்சி குளிர்தல் இதெல்லாம் ஏற்கனவே சூட்டிலே வெந்துகிடக்கறவங்களுக்கு, சுகமான விஷயங்கள். இதை ரொம்ப 'எல்கிய'மாப் பேசாம, 'ஐஸ் வெக்கறது'ன்னு ஜனரஞ்சகமாப் பேசினாங்க நம்ம ஊரிலே. அதை இங்க உக்காந்துட்டு, 'மைனஸ் அஞ்சா மைனஸ் பத்தா'ன்னு கிடக்கிற நமக்கு அப்ளை பண்ணினா, குளிரத்தானே செய்யும். ஐஸ் வெக்கிறதுன்னா, குஷிப்படுத்துறதுன்னு அர்த்தம், தொண்டையார் பேட்டையிலேன்னா குளிரப்பண்ணுவது, டொரொன்டோவிலேன்னா சூடு ஏத்துறதுன்னு எடுத்துக்கிட்டா ஐஸ் ஆனந்தமா இருக்கும்.

இதேமாதிரிதான், இங்லீஷிலே லெட்டர் எழுதறப்போ 'with warm regards'ன்னு இயந்திரத்தனமா கையெழுத்துக்கு முன்னாடிப் போடறதும். ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் உள்ள வெள்ளக்காரங்களுக்கு எப்பவும் warm தேவை. ஒருத்தர் அண்மையிலே warmth கிடைச்சா அவங்களுக்கு சந்தோஷம். பல்லவன் (இப்ப என்ன பேரோ தெரியல்லியே..) பஸ்ஸிலே மட்ட மத்தியானத்திலே நெருக்கி ஏறி போகும்போது, பக்கத்திலிருக்கறவன் பாடி பட்டா, என்னமா எரியும் தெரியுமா? அந்த ஊரிலே இருக்கிறவனுக்கு லெட்டர் போடும்போது with warm regardsன்னு போடறது எவ்வளவு கெட்ட எண்ணம் தெரியுமா?

ஆகவே நான் இந்த மாதிரி விஷயங்களில் உலகமயமாக்கலை எதிர்க்கிறேன். down with globalization, up with localization!

புதன், நவம்பர் 12, 2003

ஆன்மீக சிந்தனை தேவைதானா?

கடவுள் உண்டா? இல்லையா? இந்த விவாதமே தேவையற்றதா? மூன்று கேள்விகளுக்குமே ஆம் என்று வாதிட ஆதாரம் உண்டு. உண்டென்றால் உண்டு, இல்லையென்றால் இல்லை. விவாதம் தேவையில்லை என்றால் அதுவும் சரியே.

குளியலறை இருக்கிறதே, அதைப்போன்றது தான் என் மனம். வரவேற்பறை, சமையலறை, படுக்கையறை எங்கும் நான் போடும் வேடங்களை நான் களைந்து என்னை முழுதாய் அங்குதான் காண்கிறேன். என் மனதில் தோன்றும் அழுக்கு எண்ணங்கள் அங்கு கிளம்பும் துர்நாற்றங்களுக்கு சமம். இலக்கியம், சமயம், சமூக நெறிமுறைகள் இவை கொடுக்கும் நல்ல எண்ணங்கள் எல்லாம், நான் அவ்வப்போது அந்த அறையில் பரப்பும் வாசனைத் துளிகள்.

தினமும் துர்நாற்றங்கள் கிளம்பிக்கொண்டுதான் இருக்கின்றன. என்னால் அவற்றைத் தவிர்க்க முடியவில்லை. அந்த அறையில் கூடாதென்றால் வேறு எந்த இடத்தில் கூடும்? அனைவரும் புழங்குகிற மற்ற அறைகள் சில நாகரிக எல்லைகளுக்கு, எதிர்ப்பார்ப்புகளுக்கு உட்பட்டவை. அதேபோல் தான் நான் மற்றவர்களுடன் பழகும் பொழுதுகளில் கண்ணியத்துடனும், ஒழுக்கத்துடனும் நடப்பதும். தனிமையில் தான் அழுக்கும், துர்நாற்றமும். எனக்கு எந்த வாசனையும் பிடிக்காமல் தான் இருந்தது. என்னால் முடிந்த அளவு சுத்தம் செய்து பார்த்தேன். ஆயினும், அறைக்கு வெளியே போய் விட்டுத் திரும்புகையில், என் நாசி பழைய வாசத்தின் எச்சம் இன்னும் இருப்பதை எப்படியோ கண்டுகொள்கிறது. எனவே எனக்கு வாசனைத்துளிகள் தேவைப்படுகின்றன.

இப்படி நாற்றத்திற்கும் அதற்கெதிரான நறுமணத் தாக்குதலுக்கும் நடுவே எத்தனை நாள் அல்லாடுவது? குளியலறையிலேயே தங்கியிருந்து, நாற்றம் கிளம்பும் முன்பே தயாராய் நறுமணம் என்ற ஆயுதத்தை எங்கும் விரவிப் பரப்பி நல்லுணர்விலேயே அந்த அறையை வைக்க வழியில்லையா? கொண்டுவந்தேன் அறையின் வாயுவைப் புதுப்பிக்கும் ஒரு வில்லை. தொங்கவிட்டேன் அதை அறையின் உள்ளே.

அவ்வப்போது காற்றில் பரப்பிவிடும் வாசனைத்துளிகளின் அளவுக்கு அது சுகந்தமாயில்லைதான். ஆனால் அது நின்று பரவி, அப்படியொரு துர்நாற்றம் இங்கு இருந்ததா என்று கேட்குமளவிற்கு என் குளியலறையை சுத்தமாக்கியது. இப்போதும் அந்த அறையில் துர்நாற்றங்கள் கிளம்பிக் கொண்டிருக்கின்றன, ஆனால் அவை உறுத்தவில்லை, அதைச்செய்தது அந்த வில்லை.

என் எண்ண அழுக்குகளுக்கும் அதற்கான எதிர்விளைவைக் கொடுக்கும் சீரிய சிந்தனைகளுக்கும் மேல் அந்த 'வில்லை'யைப்போல் கிடைத்தது தான் இறை சிந்தனை. அது கட்டாயம் தேவைதானா? இல்லை, அதுவும் ஒரு பிற்சேர்க்கைதான், செயற்கை வாசனைதான். ஆனால், என்று என்னால் துர்நாற்றங்கள் உருவாவதையே தவிர்க்க முடிகிறதோ, அன்று இந்த செயற்கை வாசனையையும் தவிர்க்கமுடியும். என்று என்னால் அழுக்கு எண்ணங்களை அறுக்க முடிகிறதோ, அன்று எனக்குக் கடவுள் தேவையில்லை. என்று நான் முற்றும் உணர்ந்த ஞானியாகிறேனோ, அன்று எனக்கு இறைநம்பிக்கை ஒரு சுமை. அன்று என் இல்லத்தில் அறைகளே இருக்காது. யாரிடமும் ஒளிக்க, மறைக்க என்னிடம் எதுவும் இருக்காது. அதுவரை எனக்கு இந்த வில்லை தேவை.

செவ்வாய், நவம்பர் 11, 2003

தைப்பொங்கல் தமிழரின் புத்தாண்டா?



படம் உதவி: (c) அரிசோனா பல்கலைக்கழகம்  

பொங்கல் விழாவில் கதிரவன் கதாநாயகன். பொங்கல் விழாவை இந்தியாவெங்கும் வேறு வேறு பெயரில் கொண்டாடுகிறோம். வான, சோதிட சாஸ்திரப்படி அதன் பொதுவான பெயர் 'மகர சங்கராந்தி'. அன்று கதிரவன் மகர ராசியில் பிரவேசிக்கிறான். அன்றிலிருந்து தன் தென்திசைப் பயணத்தை முடித்து வடதிசைப் பயணத்தை (உத்தராயணம் என்று வடமொழியில் அழைக்கப்படுகிறது) ஆரம்பிக்கிறான். பகலின் நீளம் அன்று தான் வருடத்திலேயே மிகக்குறைவு. ஆங்கிலத்தில் Winter Solstice என்று சொல்லப்படுகிறது. அன்றிலிருந்து பகலின் நீளம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும். உவ்வுலகில் எல்லா வளங்களுக்கும் கதிரவனே ஆதாரம். எனவே அவன் ஆளுமை உயருவது யாவருக்கும் நல்லது என்ற அடிப்படைதான், இந்த நாளை சுபநாளாகக் கொண்டாட முக்கியமான காரணம். இப்படியொரு நல்ல நாளை ஆண்டுத் துவக்கமாக ஒரு சமூகம் கொண்டிருக்க பெரும் வாய்ப்பு உண்டு.

இங்கும் இரண்டு பிணக்குகள்:

1. இன்றைய அறிவியல் அளிக்கும் வசதிகளைக் கொண்டு பார்க்கையில் உண்மையில் Winter Solstice டிசம்பர் 21-22 வாக்கில் தான் நடக்கிறது என்பது தெளிவாக்கப்பட்டிருக்கிறது. நாம் கொண்டாடும் ஜனவரி 14க்கும் இதற்கும் கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு மேல் இடைவெளி. எனவே நாம் இன்று கொண்டாடுவது ஒரு குறிப்புக்காகத் தான் (symbolic) என்று சமாதானம் சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது. உண்மையில் ஆண்டின் நீளத்தை நம் வான சாஸ்திரங்கள் துல்லியமாகக் கணிக்காததால் தான் இந்த இடைவெளி என்பது ஒரு கருத்து. 'நெடுங்காலத்துக்குமுன் நம் மகர சங்கராந்தி டிசம்பரில் தான் இருந்தது; ஒவ்வொரு வருடமும் சில நிமிடங்கள் பிழையானதால் இன்று கிட்டத்தட்ட 22 நாட்கள் தள்ளிப்போய்விட்டது' என்று கேள்விப்படுகிறேன். சும்மா ஒரு கணக்குக்கு 5000 வருடத்திற்கு முன் சரியாக இருந்ததாகக் கொண்டால், வருடத்திற்கு சுமார் 6 நிமிடம் பிழை என்றாலே போதும், இந்த வித்தியாசத்திற்கு! நம் முன்னோர் வானியலில் புலிகள் என்று சொல்லிக்கொள்ளுவது இங்கு கொஞ்சம் உதைத்தாலும் அவர்களிடம் இருந்த வசதிகளுக்கு, அவர்கள் செய்த கணிப்பு உன்னதமானதுதான். இந்த இடைவெளி இன்னும் அதிகரிக்குமா அல்லது இப்படியே இருக்குமா என்பது, இந்தப் பிழையை, பின்வந்த சோதிட, வான சாஸ்திர வல்லுனர்கள் சரிசெய்துவிட்டர்களா என்பதைப் பொறுத்து இருக்கிறது. எனக்குத்தெரியவில்லை.

2. பூமிப்பந்தின் வட பாகத்தில் இருப்பவர்களுக்கே இது நல்ல சகுனம். தென் புலத்தில் இருப்பவர்களுக்கு? அவர்களுக்கு இத்தனை நாள் இருந்து வந்த நீண்ட பகற்பொழுது இனி குறைய ஆரம்பிக்கிறது. அந்த விதத்தில் இது ஒரு துக்க நாள். சந்தோஷமான நாள் அல்ல! உண்மையில் குமரிக்கண்டம் இலங்கைக்கும் தெற்கே இருந்ததாக எடுத்துக்கொண்டால் அந்தக் கண்ட வாசிகளுக்கு இது முன்னேற்றத்தின் சின்னம் அல்ல. எனவே அவர்கள் இதை முன்னிறுத்தி தங்கள் புத்தாண்டாகக் கொண்டிருக்க வாய்ப்பு இல்லை. இது அவர்களுக்கு Summer Solstice! அப்படியானால் ஆஸ்திரேலியாவிலோ கேப்டவுனிலோ உள்ள தமிழர்களே நீங்கள் கதிரவன் உங்களை விட்டுப்போகும் துக்கநாளையா பொங்கலாகக் கொண்டாடுகிறீர்கள், பாவம்!

இன்னொன்றும் சொல்லலாம், பகல் பொழுது குறைவது நல்ல விஷயமா கெட்ட விஷயமா என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். நிலநடுக்கோட்டருகே உள்ளவர்களுக்கு உத்தராயணமும் தக்ஷிணாயணமும் பெரிதாய் ஒன்றும் மாற்றங்களைக் கொடுக்கப் போவதில்லை. நம் தமிழகம், இலங்கை போன்ற சில வெப்ப மண்டல வாசிகளுக்கு சுட்டெரிக்கும் நீண்ட கோடைப்பகற்பொழுதைவிட குளிர்ந்த வாடைப்பகல் பிடித்தமானதாய் இருக்கும். எனவே எது நல்ல நாள் எது துக்க நாள் என்றெல்லாம் வரையறுக்க முடியாது.

மேலும் விவரங்கள் வேண்டும் ஆர்வமுள்ள நண்பர்கள் சொடுக்கவேண்டிய சுட்டி:
http://scienceworld.wolfram.com/astronomy/WinterSolstice.html
 

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...