புதன், பிப்ரவரி 11, 2004

என் பைக்கணினி அனுபவங்கள் -2

'இத வெச்சு இதைச்செய்யலாம் அதைச்செய்யலாம்'னு வாங்கிடறோம். ஆனா அப்புறம் ஆனைக்கு அம்பார வகையறாக்கள்னு வேற தனியாச் செலவு பண்ண வேண்டியிருக்குது. அலுவலகம் சம்பந்தப்பட்ட வேலைகள் போக பொழுதுபோக்குக்கு இதில் நிறைய வசதி இருந்ததால அதுல ஒவ்வொண்ணா செய்துபார்க்க ஆரம்பித்தேன். முதலில் இதன் MP3 பிளேயர் உபயோகம்.

வாங்கிய நிலையில் நிறையப் பாடல்களை தேக்கி வைக்க இதில் இட வசதி பத்தாது. ஒரு 10MBக்குள்ளதான் மிச்சம் இருந்தது. அதுக்குத் தான் ஃப்ளாஷ் மெமரி கார்ட் என்கிற சிறு அட்டைகள் இருக்கு. அதில் ஒரு அட்டை முதலில் வாங்கினேன். அது ஒரு 64MB அளவு கொண்டது. அதுக்குள்ளே பாட்டெல்லாம் தேக்கி வைக்கும்போதுதான் என்னவிதமான ஒலி வடிவங்கள் இருக்கு, அதில் என்னவெல்லாம் செய்யலாம். எந்த வடிவம் எந்த செயலியில் ஓடும் என்றெல்லாம் தெரிந்து கொண்டேன். ரொம்ப அறுக்காமல் சொல்வதானால், முக்கியமா மூன்று வகை ஒலிக்கோப்பு வடிவங்கள் இருக்கு. இந்த அட்டவணையை ஒரு கண் பார்த்தா கொஞ்சம் விளக்கம் கிடைக்கும்.

குறுவட்டில் வரும் பாடல்களின் தரம் அப்படியே வேணும் என்றால் சுமார் 6MB அளவில் ஒரு பாடலை அடக்கலாம். திருவிளையாடல் தருமி மாதிரி கொஞ்சம் குறைச்சுபோட்டுக் கொடுத்தாப் போதும்னா, 3MB அளவிலும் அடக்கலாம். அப்படிப் பாத்தா சுமார் 20 பாட்டுக்கள் இந்த 64MB அட்டையில் அடங்கும். அதுவே கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஓடுமே, எனவே நிறையப் பாட்டுக்களை (சினிமாப்பாட்டுத்தான்) இணையத்தில் இருந்து இறக்கிக் கொண்டேன். புதுசுபுதுசா படம் வர வர அதை இதில் போட்டுக்கிட்டு கேட்டேன். ஒரு ஹெட்போன் இருந்தது, ஆனால் சீக்கிரம் போரடிச்சுப்போச்சு. அதோடு, பேட்டரியும் அடிக்கடி இறங்கிப் போய் தொல்லைகொடுத்தது. அப்புறந்தான் காரில் இதையே ஓடவிடமுடிந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும் என்று தோன்றியது. புதுசா இறக்கிய MP3 பாடல்களை காரின் கேசட் பிளேயர் வழியாக் கேட்பதற்கு ஒரு அடாப்டர் வாங்கினேன். காரின் சிகரெட் லைட்டர் மூலம் பேட்டரிக்கு சாப்பாடு போட ஒரு கார்-சார்ஜர். இரண்டும் வந்தபின் காரில் எப்பவும் சுடச்சுடப் புதுப்பாட்டுத்தான். கேக்கத்தான் நேரமில்லை. இங்கதான் வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் 3 நிமிடப் பிரயாணம் தானே!

கொஞ்சம் கொஞ்சமாய் இன்னும் ஆக்டொபஸ் தன் ஆயிரம் கைகளை விரித்தது. பாடல்கள் மட்டுமில்லாமல் 'ஒலியும் ஒளியும்' ஓட்டினால் ஜாலியா இருக்குமே. ஜீன்ஸ் வி.சி.டி.யை பிரிச்சுப்போட்டு, ஒலியும் ஒளியும் தயார்செய்தேன். அப்போதுதான் என்னென்ன விடியோ வடிவங்கள் இருக்கின்றன என்ன அளவில் எப்படி கையடக்கமாக விடியோத்துண்டுகளைத் தயாரிக்கலாம் என்பது பிடிபட்டது. ஒரு அருமையான விடியோ வடிவமாற்றி கிடைத்தது. இப்படி விடியோவேலையில் ஆழமாய் இறங்கவும் இந்த 64MB பத்தாமல் போனது. ஒரு 'பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம்' மட்டும் 20MB பிடித்தது. இன்னும் பெரிசாய் அட்டை கொண்டுவா என்றது இந்த அட்டை. ஓடு, மறுபடியும் தேடு. தேடி 256MB அட்டை ஒண்ணு வாங்கினேன்.

அப்பாடா, இப்போ மணிக்கணக்கில் MP3 பாடும், அப்பப்ப உள்ளங்கையில் நெல்லிக்கனி ஆடும். இப்படியே கொஞ்ச நாள் பொழுது போச்சு. அக்கம் பக்கத்தில் நெறையப்பேரை ஏத்திவிட்டாச்சு. எல்லாரும் நானும்வாங்கணும்னு ஆசைப்பட ஆசைப்பட நமக்கு நம்ம குட்டிப்பாப்பாமேல் காதலும், பெருமையும் அதிகமாச்சு. அதுவும் இதுதான் சமயம்னு அடுத்த பட்டியலை நீட்டுச்சு.

-தொடரும்

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...