வியாழன், பிப்ரவரி 05, 2004

ஆளில்லாத லெவல் கிராசிங்கில் காரில் சென்ற இருவர் பலி


Picture courtesy: Mikes Railroad crossing

இது என்னவோ தினத்தந்தி தலைப்புச் செய்தி மாதிரி இருக்கா? 'ரயில் வருவது தெரியாமல் காரில் சென்ற கணவன் மனைவி இருவரும் ரயில் மோதி உடல் நசுங்கி இறந்து போனார்கள்' என்பது இன்றைய உள்ளூர் செய்தி. உள்ளூர் இங்கு ரோச்சஸ்டர் (மறுபடியும்!). அந்த ரயில்ரோடு கிராசிங்கில் நானும் பலமுறை கடந்திருக்கிறேன். அப்போதெல்லாம், 'பாரடா, என்ன சிஸ்டமேடிக்கா, ஆட்டோமேடிக்கா எல்லாம் பண்ணி வச்சிருக்கானுங்க'ன்னு சிலாகிச்சுட்டே போவேன். இங்கே நிறைய வேலைகளில் ஆளில்லாமல் செய்துவைத்திருக்கிறார்கள். ஆனால், நம்ம 'ஆளில்லா லெவல் கிராசிங்'குக்கும் இதுக்கும் ஒரு வித்தியாசம், இதில் ஆளில்லாவிட்டாலும், ஆள் பண்ணுகிற வேலையெல்லாம் அதுவாக நடக்கும்.

ஒரு படம் மேலே இருக்கு, அதில் பார்த்தால் தெரியும். முக்கியமாகப் பார்க்கவேண்டியது சாலையில் அரைப்பாகத்தை (மட்டும்) மறைக்கும் தடுப்பு, மற்றது ஓரமாய் இல்லாமல் நடுவில் மின்னிமின்னி எரியும் சிவப்பு விளக்கு. ரயில் வரும் முன் சிவப்பு விளக்கு மின்ன ஆரம்பித்து, பிறகு தடுப்பு கீழே இறங்கும். ஒரு நிமிடம் முன் தான் இது நடக்கும். பிறகு ரயில் போனதும், தானாகத் திறக்கும். ஓரளவுக்கு விதிகளை எல்லாரும் சிரத்தையாக கடைப்பிடிப்பதால் எல்லாம் ஒழுங்காக நடக்கிறது.

நேற்று இந்த லெவல் கிராசிங்கில் கட்டாயம் சிவப்பு விளக்கு மினுக்கியிருக்கலாம், ஆனால் தடுப்பு கீழே வரவில்லை என்று பலர் சாட்சியம் அளித்துள்ளனர். விளக்கைப் பார்த்து னிற்பது என்ற 'மென்' தடுப்பு சில சமயம் வேலை செய்யாமல் போக நிறையக் காரணம் இருக்கும். கண்பார்வைக் கோளாறில் இருந்து, மன உளைச்சல், கவனமின்மை வரை நிறையச் சொல்லலாம். அதற்காகத்தான் 'வன்'தடுப்பும் தேவைப்படுகிறது. இந்த வன் தடுப்பு பழுதாகி இருப்பது, ரயில் நிறுவனத்துக்குத் தெரியும் என்றும், ரயில் ஒட்டுனர்கள் இந்த சந்திப்பில் ரயிலை நிறுத்தி எடுக்க அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள் என்றும் இன்றைய செய்தி சொல்கிறது. அப்படியும் ஏன் நிறுத்தவில்லை என்று விசாரணை செய்வார்கள். ஆனால் பாவம் திவ்யதம்பதிகள் போய்விட்டது போய்விட்டதுதான். இனி அடுத்த முறை இந்த தானியங்கியை நம்பி இங்கே கடப்பதற்குப் பயமாக இருக்கிறது.

ரயில்வே கேட்டை கடப்பதில் ஒரு சமயம் உலகுவும் நானும் பி.ஹெச்.டி யே பண்ணியிருந்தோம். அப்போது கோவையில் எவெரெஸ்ட் எஞ்சினீரிங் வாசலில் கேட், அது அரை மணிக்கொருமுறை மூடப்படும் கேட். அதில் நீண்ட வரிசை வாகனங்களுக்கிடையில் சைக்கிளில் நெருக்கி அடித்துக் கடப்பதில் இருக்கும் கிக், ஃபார்முலா ஒன் ரேசில் கிடைக்குமா என்பது கேள்விக்குறி (தன்னை வைத்து உலகை அளந்தால் அதற்குப் பெயர் கிணத்துத் தவளையாமே, அதனாலென்ன, அப்படியே இருப்பதிலும் ஒரு சுகம் இருக்கத்தானே செய்கிறது). அப்படி ஒரு நாள் பஸ்ஸின் பின்புறம் இஞ்ச் கணக்கில் தொடர்ந்துவர, பஸ் பிரேக் போடும்போது அதன் கூண்டுக்கடியில் சைக்கிளின் முன்சக்கரம் நுழைய, பஸ் அப்படியே அந்தச் சக்கரத்தின் மேல் உட்கார, சக்கரம் சதுரமாகிப் போனதெல்லாம், கிளைக்கதை.

அதெல்லாம் சரி, இங்கே ரோச்சஸ்டர் கூட்ஸ் ரயிலில் நசுங்கி சாவிலும் இணைபிரியா அந்த ஜோடியின் வயதென்ன தெரியுமா, 75&75! போன வருஷம் கலிபோர்னியாவில் ஒரு கிழவர் கடைத்தெருவில் காரில் உழுததில் எத்தனையோ பேர் மாண்டார்கள். அனேகமாக கண்பார்வை, உடனடியாக இயங்கமுடியாமை போன்ற முதுமை சம்பந்தமான காரணங்கள் இங்கே முக்கியமாகப் படுகின்றன.

ஒன்று தெரிகிறது, அமெரிக்காவானாலும், ரயில்வே கேட் ரயில்வே கேட் தான். நாம் தான் கவனமாய் இருக்கணும்.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...