செவ்வாய், செப்டம்பர் 23, 2008

நந்தனம் சிக்னல்

தமிழ்நாட்டின் மிக அதிக வசூல்திறனுள்ளதாகச் சொல்லப்படும் நந்தனம் சிக்னல். மாலை 8 மணி. தி. நகரிலிருந்து வந்து தெற்குப்புறம் திரும்பவேண்டும். என் ஹோண்டா ஷைன் சிக்னலுக்கு அருகில் வரவர பச்சைமாறி மஞ்சள் விழுகிறது. 'ஒரே அமுத்து'. அப்பாடா!

பிறகு வேகம் குறைத்து மெதுவாக அண்ணா சாலையின் அகலத்தை ரசித்தவாறு சைதாப்பேட்டை நோக்கி சவாரி. வலதுபுறமாக ஒரு போலீஸ் மாமா. 'ஒதுங்கு' என்ற சைகை. குழப்பத்தில் முதலில் புரியாவிட்டாலும், பிறகு புரிந்து ஒதுக்குகிறேன். முன்னால் போன மாமா எனக்கு முன்னால் ஒதுங்கி அவரருகே வர சைகை கொடுக்க, வண்டியிலேயே நகர்ந்து செல்கிறேன்.

'எந்த ஊரு?'
'கோயம்த்தூரு'. அதான் டி.என். முப்பத்தெட்டு சொல்லுதே, பிறகென்ன கேள்வி.

'சிக்னல்ல என்ன லைட் இருந்துச்சு நீங்க பாஸ் பண்ணும்போது?'
'பச்சை'. ஒரே அடி!
'இல்லை, ரெட்'
'இல்லை, பச்சைதான்'
'கேமராவில் எல்லாம் ரெகார்ட் ஆகியிருக்கு, ரெட்தான்'
'ம்ஹும்'
'உங்க ஊர்ல இப்படிப் போலாமா இருக்கும், இங்கல்லாம் ரெட்னா நிக்கணும்'
'எல்லா ஊர்லயும்தான். ஆனா ரெட் இல்லை, மஞ்சள் விழுந்துது. ஆனா வந்த வேகத்தில் எப்படி நிறுத்தமுடியும்?'
'அதெல்லாம் நான் சொல்லலை. கேமராவில் இருக்கு, என்னோட வர்றீங்களா, காட்டறேன்.'

சார்லீ கம்ப்யூட்டரக் காட்டி மிரட்டினார், இந்தாளு கேமராவைப் பத்திச் சொல்லி பூச்சாண்டியா? 'சென்னை சாலைப்போக்குவரத்து அனுபவங்கள்' எழுத வெச்சிருவார் போல இருக்கே! அட அதுக்கெல்லாம் நேரமில்லை, எழுதினாலும் யாருக்கும் படிக்க பொறுமையிருக்காதுய்யா. கொஞ்சம் பொறுமையிழக்க ஆரம்பிக்கிறேன். ஆள் பார்க்க ஏற்கனவே கட்டிங் அடித்த அல்லது அடிக்கப் போகிற சாயலில், வேலை முடிந்து நங்கநல்லூரோ, மடிப்பாக்கமோ, வீட்டுக்குப் போகிற சாவகாச மூடில் 'வெளியூர் வண்டி, கிடைக்கிறது லாபம்'னு கணக்குப் போட்டு ஒதுக்கற மாதிரி தெரியுது.

வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்துகிறேன்.

'வாங்க போகலாம்'
மாமா வண்டியில் ஏறப் போகிறேன்.
'அங்க வந்து ப்ரூவ் ஆகிருச்சுன்னா டபுள் பைன் தெரியுமல்ல?'
'ஓ'
'ஆமா, சொன்னா ஒத்துக்குங்க'
'இல்ல, நான் ஒத்துக்கல, வாங்க பாத்திருவம்'
'வாங்க...'
'திரும்ப இதே இடத்தில கொண்டுவந்துவிடுவீங்கல்ல' மாமா வண்டியில் ஏற எத்தனிக்கிறேன்.
'ஆமா. சரீ, அப்படியே லைசன்ஸ், ஆர்,சி. இன்சூரன்ஸ் எல்லாம் எடுத்துக் காட்டுங்க'
'இந்தாங்க'

ஏய்யா, ஒரு டம்ளர் டீகுடிக்கப்போனாலே, நாலுமுறை பாக்கெட்டைத் தடவிப் பாத்துக்கற ஆளுகிட்ட, பேப்பர்சா கேக்கிற?

'கேமராவெல்லாம் எதுக்கு, இங்கயே ஓட்டை'
'என்ன ஓட்டை'
'பாருங்க, இன்சூரன்ஸ் எக்ஸ்பயர் ஆயிடுச்சு'
'அலோ, அதை விடுங்க, இன்னொரு காயிதம் இருக்கு பாருங்க, அதைப் படிங்க.'

மங்கிய மஞ்சள் வெளிச்சத்தில் சாளேசரக் கண்ணாடியில்லாமல் இன்சூரன்ஸ்காரன் எழுத்து எனக்குப் படிக்கமுடியவில்லை.

'ம்..சரியாத்தான் இருக்கு..'
'எல்லாம் சரியாத்தான் இருக்கும். சரி, வாங்க, கேமராவைக் காட்டுங்க'
'சரி, சரி, போகட்டும், இனிமேலாவது பாத்து ஒட்டூங்க'
'சேரி. இனி ஒருதடவைக்கு ரெண்டுதடவை பாத்து ஓட்டுறேன்'

ஒண்ணும் தேறலை. போய்விட்டார்.

ப்ளாட்பாரத்தில் ஒரு ஆள்: 'சார் நீங்க விடாம பேசினதால விட்டுட்டான் சார், இல்லாட்டி, காசு வாங்காம விடமாட்டான் சார்.'

என்னமோ சாதிச்ச மாதிரி ஜம்பமா கிளம்புறேன். இனிமேல் மஞ்சள்வந்தாலுமே க்ராஸ் பண்ணக்கூடாதுன்னு பிரசவ வைராக்கியத்துடன்.

38 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

I also had similar situation. But i lost 100 rupees. Felt bad

Boston Bala சொன்னது…

கலக்கல்... :)

-/பெயரிலி. சொன்னது…

வயித்தெரிச்சலைக் கிளப்புகிறீர்கள். இரண்டு வாரங்களுக்கு முன்னால், பாடசாலை ஒன்றுக்கு முன்னால், வீட்டுச்சண்டையை எண்ணி, அக்ஸிலரேட்டை அமத்தினேன் பாருங்கள். போன கிழமை கோர்ட் வாசற்படி மிதிக்காமலே தாண்டி, $145 & குற்றம் குற்றமே. அந்த நீதிபதி அக்கா(வோ தங்கையோ) கோவிச்சுக்கொள்ளும், "தலைமயிரை வெட்டிப்போ" என்று சொன்னவர்களின் கதையைக் கேட்டு, தலையை எலிப்பல்கைக்காரி ஒருத்தியிடம் முதல்நாள் பின்னேரம் குடுத்து அரிக்கவிட்டதுதான் சோகத்தின் உச்சம். "தங்காய், எவ்வளவு காலம் முடி அலங்கரித்துக்கொட்டுகிறாய்??" என்று முடிவிலே கேட்டேன்; "சமரிலேதான் கொஸ்மற்றோலஜி முடித்தேன்;இன்றைக்கு முதல்வேலையிலே இரண்டாம் நாள்." முருகா!

பெயரில்லா சொன்னது…

you peoples spent some time in USA for some years..

yellow is ready
green you can take off..

the problem is with yours..
i accept all the traffic policemen tamilnadu wants some extra money..its big tree root..how those money is spared with them to top most.

you did a crime.. but you are writing a story of getting escaped..what a worst germ you are

ILA (a) இளா சொன்னது…

தூள்

enRenRum-anbudan.BALA சொன்னது…

சூப்பர் :) இவ்வளவு சுவாரசியமா எழுதுவீங்களா நீங்க ? ;-)

எனக்கும் இந்த மாதிரி அனுபவம் உண்டு, நான் சம்திங் கொடுத்துட்டு ஜோலியை பார்க்கப் போலாம்னு யோசித்தபோது, கூட இருந்த நண்பர் உசுப்பி விட, எதுவும் கொடுக்காம, போலிஸ்காரரையும் கொஞ்சம் களாய்ச்சுட்டு, இரண்டு பேரும் எஸ்கேப் :)

பெயரில்லா சொன்னது…

//வேலை முடிந்து நங்கநல்லூரோ, மடிப்பாக்கமோ, வீட்டுக்குப் போகிற சாவகாச மூடில் 'வெளியூர் வண்டி, கிடைக்கிறது லாபம்'னு கணக்குப் போட்டு ஒதுக்கற மாதிரி தெரியுது.
//

LOL!

Me the escape.........

கிரி சொன்னது…

//ஏய்யா, ஒரு டம்ளர் டீகுடிக்கப்போனாலே, நாலுமுறை பாக்கெட்டைத் தடவிப் பாத்துக்கற ஆளுகிட்ட, பேப்பர்சா கேக்கிற?//

ஹா ஹா ஹா கலக்கல் ....

Kasi Arumugam சொன்னது…

//I also had similar situation. But i lost 100 rupees. Felt bad//

லஞ்சமா, ரசீதுடன் அபராதமா?

பெயரிலி, பெரிய மனசுபண்ணி அம்மணிக்கு தலைகொடுத்ததற்கு :)

ராமரத்தினம் அய்யா, விசாரிக்காம ஒரேயடியா தீர்ப்பு வாசிக்காதீங்க. சென்னையா உங்களுக்கு?

பாபா, இளா, :-)

எ.அ.பாலா, புனைவா எழுத்ததெரியாதுங்க. நடந்ததை அப்படியே சொன்னேங்க. ரொம்ப ஐஸ் வெக்காதீங்க, கூச்சமா இருக்குங்க.

பெயரில்லா சொன்னது…

//இனிமேல் மஞ்சள்வந்தாலுமே க்ராஸ் பண்ணக்கூடாதுன்னு பிரசவ வைராக்கியத்துடன்.//



அண்ணே, அந்தத் தப்ப மட்டும் பண்ணிராதீங்க. இப்படித்தான் என் நண்பன் (கலிபோர்னியா ரிட்டர்ன்) மஞ்சளப் பாத்து ஆக்டிவாவ கோட்டுக்கு நேரே நிறுத்தினான். டமால்ன்னு சத்தத்தோட கீழ விழுந்தான். பாத்தா, பின்னால் வந்த சுமோ ஓட்டி நம்ம பய சிக்னல தாண்டிருவான்னு நிறுத்தாம வந்தவரு கடைசி நொடியில் ப்ரேக்கப் போட்டு நண்பன் முட்டியப் பேத்தாரு.

புருனோ Bruno சொன்னது…

வெளுத்துவாங்கி விட்டீர்கள்

வாழ்த்துக்கள்

இலவசக்கொத்தனார் சொன்னது…

சரிதான்!! விடாக்கண்டனும் கொடாக்கண்டனும் அப்படின்னு பேர் வெச்சு இருக்கலாம் போல!

நீங்களாவது மஞ்சளில் போனீங்க. ஆனா சிகப்பு என நின்ற பெனாத்தலார் கதை என்ன ஆச்சு தெரியுமா?

இங்க பாருங்க - http://penathal.blogspot.com/2008/09/13-sep-08.html

Mohandoss சொன்னது…

பெங்களூரில் TN வண்டியை வைத்துக் கொண்டு நான் அடிக்கிற லூட்டியில் என்னைக் கண்டதும் Fine போடும் படி உத்தரவு இருப்பதாகக் கேள்வி.

இந்த கடைசி இரண்டு வருட அனுபவத்தில் ஒரு முறை ஹெல்மெட் போடாததற்கும் ஒருமுறை பேப்பர் இல்லாமலும் Fine அழுதிருக்கிறேன். இது Statistically ரொம்பவே கம்மி.

ஒருமுறை தெனாவட்டாக MG Road(HSBCக்கு எதிர்த்தார்ப் போல்)ல் வண்டியைப் பார்க் செய்துவிட்டு, பின்னர் Two awayவிற்காக பைசா கட்டியிருக்கிறேன்.

ஐ, இப்படியே கொஞ்சம் வளர்த்தி உங்களை மாதிரி ஒரு பதிவு எழுதியிரலாம் போலிருக்கே!

எ.அ.பாலா சொல்வது போல், நீங்கள் இப்படிக் கூட பதிவு எழுதுவீர்களா? ஆச்சர்யமாகயிருக்கிறது. ;)

Mohandoss சொன்னது…

//"சமரிலேதான் கொஸ்மற்றோலஜி முடித்தேன்;இன்றைக்கு முதல்வேலையிலே இரண்டாம் நாள்." //

-/., ஒரு புகைப்படம் எடுத்துப் போடுங்களேன் ;) அந்தப்பல்காரி படித்த கொஸ்மற்றோலஜி 'அழகை' பார்க்கலாம். :)

Kasi Arumugam சொன்னது…

பேரில்லாவிட்டாலும், அன்புள்ள தம்பீ, ஆமாம், நிறுத்தும் தூரம் பாக்கணும்ல, அதில்லாமல் ராமரத்தினம் அய்யா சொல்ர மாதிரி பச்சைல தான் போவேன்னு பச்சக்னு பிரேக்போட்டா 'பப்பரக்கா'தான்.

இலவசம், :) சுட்டிக்கு நன்றி. படிக்கிறேன்.

கிரி, புரூனோ, :)

தாசு, பெங்களூரில் டி.என். வண்டியோ, தமிழ்நாட்டில் கே.ஏ. வண்டியோ வெச்சுக்கிட்டு ரெண்டே ரெண்டு முறைதான் மாட்டுவது அசாத்தியமான சாதனைதான். கட்டாயம் நீட்டி முழக்கினால் ஒரு இடுகையென்ன, ஒரு தொடரே எழுதலாம்.:)

(எலிப்பல் படமா? குதறப்பட்ட இடத்தின் படமா? ;-))

துளசி கோபால் சொன்னது…

மஞ்சளும் ஒரு வகையில் ஸ்டாப் தான். ஆனா வேகமாவந்து 'சட்'னு ப்ரேக் போட்டபின் நிறுத்தமுடியாமப்போனாத் தூக்கியடிச்சு விபத்து நடந்துருமில்லையா? அதனால் வேற வழி இல்லேன்னா மஞ்சளில் போகலாம். இதுலே கவனிக்க வேண்டியது பாதுகாப்பு மட்டுமே.

காசி, சொன்னா நம்பமாட்டீங்க.... இன்னிக்குக் காலையில் பதிவு போடும்போது உங்களைத்தான் நினைச்சேன்.

இரா. செல்வராசு (R.Selvaraj) சொன்னது…

பழையபதிவர் காசியைப் பார்க்க மகிழ்ச்சி.

ஈரோட்டுல இப்படித்தான் 'சிக்னல்லே' பச்சை வரட்டும்னு காத்திருந்தப்போ, 'டைமர்'-இல் 15, 20 வினாடி இருக்கும்போதே எல்லோரும் உறுமிக்கிட்டுக் கிளம்பினாங்க. போலீஸ்காரர் குடைக்குக் கீழ நின்னு சும்மா பாத்துக்கிட்டுத் தான் இருந்தார். அவரால தான் என்ன பண்ண முடியும்னு நெனச்சுக்கிட்டேன்.

Kasi Arumugam சொன்னது…

துளசி, செல்வராஜ்,

:)

பிச்சைப்பாத்திரம் சொன்னது…

காசி,

இந்தியன் தாத்தா மாதிரி "என் ஷுவை தொடச்சிட்டு நூறு ரூபாவ வாங்கிக்க"ன்னு சொல்லலாம்தான். அந்தாளு அதுக்கும் ரெடியாகியிருந்தான்னா உங்க பாடு திண்டாட்டமா போயிருக்கும். :-)

உண்மைத்தமிழன் சொன்னது…

காசி ஸார்..

கடைசிவரைக்கும் பிடி கொடுக்காமலேயே தப்பிவிட்டீர்கள்.. இனி நாங்களும் இதனை பின்பற்றிப் பார்க்கிறோம். வேறு மாதிரியாக ஏதாவது நடந்தால், உதவிக்கு உடனே ஓடோடி வருவீர்களா..?

//enRenRum-anbudan.BALA said...
சூப்பர் :) இவ்வளவு சுவாரசியமா எழுதுவீங்களா நீங்க?;-)//

இப்படி ரெண்டு மாசத்துக்கு ஒரு பதிவு போட்டீங்கன்னா இப்படித்தான் கேப்பாங்க.. காசி யாருன்னே தெரியாத மாதிரி வைச்சிருக்கீங்களே.. இது நியாயமா..?

பெயரில்லா சொன்னது…

கலக்கல் !!!

Unknown சொன்னது…

//இனிமேல் மஞ்சள்வந்தாலுமே க்ராஸ் பண்ணக்கூடாதுன்னு பிரசவ வைராக்கியத்துடன்.//

அது.

நல்ல காவல்காரராய் இருந்தால் இதுவே அவரது வெற்றி.

Kasi Arumugam சொன்னது…

அலோ, சுரேஷ் கண்ணன்! இந்தியன் தாத்தாவெல்லாம் படத்துக்கு சரி. நடைமுறைக்கு ஒத்துவருமா, என்னைக் கவுக்க எதாச்சும் திட்டமா, 'போலீஸ் என் தெய்வம்'.:) `இன்னிக்குப் பாத்தீங்களா, அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் வரலைன்னாலுங்கூட அவங்க வந்துதான் காப்பாத்துறாங்க. வாழ்க காவல்துறை. (பொலிக்கட்டிலி கரெக்ட்னஸ்னா இதுவா?)

Kasi Arumugam சொன்னது…

உ.தமிழரே, என்னைக் காப்பாத்திக்கறதே பெரிசா இருக்கும்போது, நானெங்கே கூப்புட்டா வர்றது... அதெல்லாம் அப்பன் முருகன் பாத்துக்குவான்.

அது சரி, //காசி யாருன்னே தெரியாத மாதிரி வைச்சிருக்கீங்களே.. இது நியாயமா..?// இதெதுக்கு பில்டப்? காசி யாருங்க?

Kasi Arumugam சொன்னது…

ரவி:)

சுல்தான்: //இனிமேல் மஞ்சள்வந்தாலுமே க்ராஸ் பண்ணக்கூடாதுன்னு பிரசவ வைராக்கியத்துடன்.//

பதிவுலகில் இருந்தா நுண்ணறிவுடன் படிக்கக் கத்துக்கிடணும்னு சொல்லிக் குடுத்துருக்காங்க. புரிஞ்சுதுங்ளா?

Athisha சொன்னது…

அடேங்கப்பா நீங்க கில்லாடிதான்

இதுக்குதான் அமெரிக்கால ஒரு வருசம் இருக்கணும்ங்கறது

Kasi Arumugam சொன்னது…

அதிஷா,

அமெரிக்காவில் நாலு வருசம் இருந்தாச்சி, என்ன பிரயோசனம்?

Thamira சொன்னது…

சுவாரசியமாக இருந்தது.

இராம்/Raam சொன்னது…

//வேலை முடிந்து நங்கநல்லூரோ, மடிப்பாக்கமோ, வீட்டுக்குப் போகிற//

பதிவுலகத்தை பொறுத்தவரை ரெண்டும் நல்ல பொறுத்தமான ஊரு பேருக தான்... :))

இராம்/Raam சொன்னது…

// Kasi Arumugam - காசி said...

ரவி:)

சுல்தான்: //இனிமேல் மஞ்சள்வந்தாலுமே க்ராஸ் பண்ணக்கூடாதுன்னு பிரசவ வைராக்கியத்துடன்.//

பதிவுலகில் இருந்தா நுண்ணறிவுடன் படிக்கக் கத்துக்கிடணும்னு சொல்லிக் குடுத்துருக்காங்க. புரிஞ்சுதுங்ளா?//

நுண்ணுரசியலும் தெரியனுமில்ல??? :))

Ŝ₤Ω..™ சொன்னது…

கில்லாடி அய்யா நீர்... விடாகொண்டன் கொடாகொண்டன் கதையா இல்ல இருக்கு.. இதுமாறி புத்திசாலித்தனமா நடந்துக்க எல்லாரும் கத்துகிட்டா நம்மள‌ யாரு அசைக்க முடியாது...

காசி அவர்களே.. மன்னிக்கவும்.. மேலே உள்ளது சும்மா உங்களுக்காக..
ஏங்க.. நீங்க செஞ்ச தப்ப எவ்வளவு அழகா மறச்சிரிக்கீங்க.. அந்த காவலதிகாரி லஞ்சம் கெட்டதுபோலவே படிப்பவர்க்கு எண்ணம் வருமளவு, என்ன ஒரு அழகான எழுத்து நடை?? வாழ்க.. இதுக்கு ஒரு பதிவுவேற...

ஒரே மகிழ்ச்சி.. கடைசி வரி... //இனிமேல் மஞ்சள்வந்தாலுமே க்ராஸ் பண்ணக்கூடாதுன்னு பிரசவ வைராக்கியத்துடன்//

மயிலாடுதுறை சிவா சொன்னது…

காசி

யாதர்த்தமான பதிவு. நல்ல அனுபவம்!

நம்ம தலைவர் ஆட்சியில் 'அண்ணன்கள்' பெயரை சொல்லி எஸ்கேப் ஆக முடியாதா?

மயிலாடுதுறை சிவா...

Kasi Arumugam சொன்னது…

சென்னைப் பாத்தாப் பாவமா இருக்கு! (இது வேற சென்-ஐ)

அய்யா, எனக்கென்ன பொய் சொல்ல ஆசையா? சட்டப்படி அவர் பக்கம் பலமாக இருந்தால் (இருப்ப்தாக அவர் நம்பினால்) கேமராவிலிருந்த படத்தைக் காட்டி இரு மடங்கு அபராதம் வசூலித்திருக்கலாமே. (இந்த இரு மடங்கே ஒரு 'போங்கு'!) ராமரத்தினம் அய்யா சொன்னதிலே ஒரு தவறைக் கவனிச்சீங்களா? மஞ்சள் (அல்லது ஆரஞ்சு) புறப்படத் தயாராக ஆக முன்னறிவிப்பு என்றால், அது ஏன் பச்சை முடிஞ்சு சிகப்பு வரும்போது குறுக்கே வரணும்? யோசிக்கணும், அல்லது கேள்வி கேக்கணும். மஞ்சள் விழுந்தால், 'ஏற்கனவே நிறுத்தமுடியாத அண்மையில் வந்துவிட்டவர்கள் தொடரவும், நிறுத்தும் தூரத்தில் வந்துவிட்டவர்கள் நிறுத்தவும்' ஒரு அறிவிப்பு. அது புரியாமல் (எத்தனை போக்குவத்துக் காவலர்களுக்கு இது தெரியும் என்றே எனக்கு ஐயம் இருக்கிறது, அது வேறுகதை:)) மேன்மைதாங்கிய விருந்தினர் நீங்கள் சும்மா சாஸ்திரத்தில போட்டிருக்குங்கற மாதிரி உளறாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Kasi Arumugam சொன்னது…

சிவா:)

எனக்குத் தெரிஞ்ச ஒரே அண்ணன் வாசிங்டன் வட்டத்தலைவர் மயிலாடுதுறை சிவாண்ணன் தான். ஆனால் அது இங்கே எடுபடாதே!

துளசி கோபால் சொன்னது…

ஐரோப்பாவில் சில இடங்களில் இப்படிச் சிகப்புமுடிஞ்சு மஞ்சள் வருதாம். அதுக்கு அப்புறம் பச்சை.

கோபால் சொல்லிக்கிட்டு இருக்கார்.

Ŝ₤Ω..™ சொன்னது…

காசி அய்யா..
முதலில் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. நீங்க பொய் சொல்லிருக்கீங்கனு பொருள் வரும்படி எனது பின்னூட்டம் அமைந்ததற்கு..

நான் சொல்லவரது என்னன்னா.. உங்க பதிவ படிக்கும் எல்லாருக்கும் அந்த காவலதிகாரி மீது மட்டுமே கோபம் வருமாறு எழுதப்பட்ட உங்களது நடை தவறு என்பது தான்.

சிந்தித்துப் பாருங்க.. நாம தவறு செய்யபோகவே தான் இது போல பிரச்சனைகள் நமக்கே திரும்பி வரும்..

எனக்கு சாலை விதிகள் சொல்லிக்குடுத்தவர்கள், மஞ்சள் விளக்கு ஒளிரும்போது "அய்யா உஷாரு"னு அர்த்தம் என்று சொல்லிகுடுத்தாங்க.. அப்படினா, நிற்கும் போது மஞ்சள் விளக்கு ஒளிர்ந்தா பச்சை வரபோது தயாராயிக்கோனு அர்த்தம்.. அதே பச்சையிலிருந்து மஞ்சள் மாறினா, வண்டி வேகத்தக்குறைச்சி பத்திரமா நிருத்திக்கோனு அர்த்தம்..

அய்யா நீங்களே சொல்லிருக்கீங்க, //என் ஹோண்டா ஷைன் சிக்னலுக்கு அருகில் வரவர பச்சைமாறி மஞ்சள் விழுகிறது. 'ஒரே அமுத்து'. அப்பாடா!//
அப்படினா நீங்க, ஓரளவு ஊகிக்கற தூரத்துல வந்திருக்கனும்.. அப்படினா தவறு செய்தது நீங்களும் தான்..
அதைதான் நான் சொல்ல வந்தது..

உங்க profile பார்த்தேன்.. ஒரு மதிப்பு உண்டாயிற்று.. the words..
"A simple engineer trying to improve the world around me. " really impressed me... when we try to change the world around us, we are helping the world improve better... tats wat made me to write..

மற்றபடி, உங்களுக்கும் எனக்கும் என்ன பகையா?? இல்ல நான் என்ன நக்கீரனா??

Kasi Arumugam சொன்னது…

அன்புள்ள சென், மன்னிப்பா? கிடையாது:)

பாருங்க, நடந்ததை அப்படியே சொலியிருக்கிறேன். அப்படியிருக்க //அந்த காவலதிகாரி மீது மட்டுமே கோபம் வருமாறு // இருந்தா அது என் தவறல்ல, அந்தக் காவலதிகாரியின் தவறே. சரி, ஒரு பேச்சுக்கு, அந்தக் காவலதிகாரி ஒரு வலைப்பதிவு வெச்சிருந்து ஒரு இடுகை எழுதியிருந்தா எப்படி எழுதியிருப்பார்? அட, அவர் பார்வையில் சரியா நடந்துக்கிட்டதாகவே இருக்கட்டுமே, நீங்களும் வலைப்பதிவர்தானே, ஒண்ணு முயற்சியுங்களேன், படிச்சுப் பாக்கலாம். ஒரு வேளை அதுக்குப் பிறகாவது எதாவது தெளியுதான்னு பாப்போம்.

மீண்டும் சொல்றேன், 'சிக்னலுக்கு அருகில் வரவர'ன்னு சொல்லும்போதே மிக அருகில் வந்தாச்சுன்னு தெரியலையா? நான் நிறுத்துவதானால் கஷ்டப்பட்டுத்தான் நிறுத்தியிருக்கமுடியும். அப்படியே நிறுத்தியிருந்தாலும் இங்கே பலரும் சொன்னமாதிரி என் பின்னால் வரும் வண்டி என்னை மோதித்தள்ளாமல் இருக்குமான்னு தெரியாது.

இன்னொண்ணு: //உங்க profile பார்த்தேன்.. ஒரு மதிப்பு உண்டாயிற்று.. // 2008-லேயும் இப்படி இருக்கீங்களா, ப்ரொபைலைப் பாத்து எடை போடாதீங்க, அதெல்லாம் சும்மானாச்சுக்கும்:P

பெயரில்லா சொன்னது…

//என் ஹோண்டா ஷைன் சிக்னலுக்கு அருகில் வரவர பச்சைமாறி மஞ்சள் விழுகிறது. 'ஒரே அமுத்து'.//


இங்க அமெரிக்காவிலனா, மஞ்சள பார்த்தவுடனே பய பக்தியோட கன்னத்தில போட்டுட்டு நின்னுருப்பீங்க!

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...