சனி, செப்டம்பர் 26, 2009

வறுமைக்கோடு

அவசர வேலையாய் உடுமலைப்பேட்டை பயணம். பல்லடம் வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தேன். இரவு சுமார் ஒன்பதரை மணி. பல்லடத்துக்கு மேற்கே ஒரு ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் பச்சைக் குழல்விளக்கு ஒன்றின் முன் காரை நிறுத்தினேன். சட்டத்தால் ஏற்படுத்தியிருக்க முடியாத தரப்படுத்தலை நடைமுறை வசதி ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்துச் சாலைகளில் பச்சைக் குழல்விளக்குகளைக் கண்டால் இரவு உணவுக்கு அங்கே நிறுத்தலாம்.

தமிழனின் வழக்கமான இரவு உணவான புரோட்டா இரண்டு சொல்லி அமர்ந்தேன். சில நிமிடங்களில் சூடான அடுக்கடுக்காகப் பிரியும் புரோட்டா வாழை இலையில் பரிமாற்றம். தொட்டுக்கொள்ள தேங்காய்ச்சட்டினியும், காரச்சட்டினியும், கெட்டியான காய்கறிக் குருமாவும்.

சாப்பிட்டுக்கொண்டே நோட்டமிட்டதில் அடுப்பு அமைக்கப்பிருந்த ஒழுங்கு தெரிந்தது. புகை கொஞ்சமும் வெளிவராமல் குழாய்மூலம் மேலெழும்பி வெளியேறுமாறு செய்யப்பட்டு, தென்னை மட்டைகள் எரிந்துகொண்டிருந்தன. டிவி ஓடிக்கொண்டிருக்க சிறுவர் இருவர் விளையாடிக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தனர். கடையில் என்னைத் தவிர இன்னொருவர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு சுடப்பட்ட தோசை ஏற்படுத்திய ஓசை காதுக்கு இனிக்கவே எனக்குப் பிடித்த ஆப் பாயில் ஒன்று கேட்டேன். சந்தோசமாக சரியான பதத்தில் கொண்டுவரப்பட்டது.

தேவகோட்டைப் பக்கம் சொந்த ஊராம். கோவைப் பக்கம் வந்து பதினெட்டு ஆண்டாச்சாம். வேறு கடையில் வேலைக்கு இருந்துவிட்டு இந்தக் கடை தொடங்கி ஒரு ஆண்டு ஆச்சாம். இருபத்துநாலு மணி நேரமும் புரோட்டா கிடைக்குமாம். வாகனப் போக்குவரத்தை எதிர்பார்த்து நடப்பதால் கூட்டம் விட்டுவிட்டு சேருமாம்.சாப்பிட்டுக்கொண்டே ‘புரோட்டா நல்லாருக்கு’ என்றேன். அவர் முகத்தில் ஒரு மின்னல்.

போதும்போல இருந்தாலும் ஒரு தோசை சாப்பிடுவமே என்றும் தோன்றியது. ‘பெரிசா மொறுமொறுன்னு எண்ணையா வேண்டாம், அளவா ஒரு தோசை கிடைக்குமா?’ ‘ஓ... வீட்டுத் தோசை மாதிரி போட்டுத் தரட்டுங்களா?’’ம்.’வழக்கமான கிண்ணத்தை கொண்டு தேய்க்காமல் கரண்டிகொண்டு பரப்பி, மூடிவேகவைத்து பக்குவமாகக் கொடுத்தது அசல் வீட்டுத் தோசை மாதிரியே இருந்தது. இதற்கு கெட்டிச்சட்டினியும், மணக்கும் முருங்கைக்காய் சாம்பாரும். விட்டிருந்தால் இன்னும் ரெண்டு தோசை சாப்பிட்டிருப்பேன். தொப்பையைக் குறைக்க காலையில் வெக்குவெக்குனு நடப்பதில் பயனில்லாமல் போய்விடும் என்பதால் அத்துடன் எழுந்து இலையை பாத்திரத்தில் போட்டுவிட்டு கையைக்கழுவினேன்.

’எவ்வளவாச்சு?’

’பதினெட்டுரூபா சார்’

எடுத்த ஐம்பது ரூபாயை வைத்துக்கொண்டு, இரு பத்துரூபாய்த் தாள்களைக் கொடுத்து, மீதிவேண்டாம், வெச்சுக்கங்க’ என்று சொல்லி நடையைக்கட்டினேன். இன்னும்கூட ரொம்பக் குறைவாய்க் கொடுத்த மாதிரி குற்ற உணர்வு.

இன்று 300 ரூபாய்-400ரூபாய் சம்பாதிக்கிறார்கள் கொத்தனார்கள். 100ரூபாய்க்குக்கீழ் எந்த வேலைக்கும் ஆள்கிடைப்பதில்லை. ஆனாலும் ஒருவேளை உணவு இருபதுரூபாய்க்குள் சாப்பிட முடிகிறது ஆச்சர்யமாகத் தானிருக்கிறது.

இங்கே பட்டினிமூலம் இனி ஒரு சாவு வராது. விவசாயிகள் தூக்குப் போட்டுக்கொள்வதும் இங்கேயில்லை. வாழ்க தமிழகம்!

8 கருத்துகள்:

ஆயில்யன் சொன்னது…

/இன்று 300 ரூபாய்-400ரூபாய் சம்பாதிக்கிறார்கள் கொத்தனார்கள். 100ரூபாய்க்குக்கீழ் எந்த வேலைக்கும் ஆள்கிடைப்பதில்லை. ஆனாலும் ஒருவேளை உணவு இருபதுரூபாய்க்குள் சாப்பிட முடிகிறது ஆச்சர்யமாகத் தானிருக்கிறது.///


உண்மைதான்!

தற்போதைய சூழலில் 250க்கு கூலி வேலைக்கு ஆள் வந்தால் அடுத்த நாளே “அவன் 250 தரான் எவன் போவான் வேலைக்கு என்று சொல்லும் நிலையும் கூட”

உணவு விலை இன்னும் சில காலத்திற்கு உயராமல் இருக்க ஆண்டவனை பிரார்த்தனை செய்துகொள்வோம்!

மா சிவகுமார் சொன்னது…

நல்ல ஒரு அனுபவம்!

//இங்கே பட்டினிமூலம் இனி ஒரு சாவு வராது. விவசாயிகள் தூக்குப் போட்டுக்கொள்வதும் இங்கேயில்லை.//

பட்டினி மூலம் சாவு வராது, பல ஆண்டுகள் வரவில்லை என்றுதான் நினைக்கிறேன்.

விவசாயிகள் தற்கொலை என்பது சாப்பாட்டுக்கு வழியில்லை என்பதை விட வாழ்க்கையில் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற பொருளாதாரம் வழி கொடுக்காமல் இருப்பதால்தான் என்று தோன்றுகிறது.

சமூகத்தின் மற்ற துறைகளில், நிலங்கள், வீட்டு விடைகள், கல்வி வாய்ப்பு, மருத்துவம் எல்லாம் விலை கூடி விட்ட நிலையில் அதற்கு ஈடான வருமானம் விவசாயப் பொருளாதாரத்தில் உருவாக வழி செய்வது வரை விவசாயிகளின் வாழ்க்கை போராட்டம்தான்.

17% நாட்டு உற்பத்தியைக் கொடுக்கும் விவசாயத்தை நம்பி 60% மக்கள் இருக்கிறார்கள் என்று போன மாத ஒரு நிகழ்ச்சியில் மத்திய விவசாய அமைச்சர் பேசியிருக்கிறார். மீதி 40% பேர் 83% உற்பத்தியை அனுபவிக்கும் போது 60% விவசாயப் பொருளாதார மக்களின் நிலை ஒப்பீட்டளவில் ஏழ்மையில்தானே இருக்க முடியும்!

60% என்பது குறைந்து 20%த்தை நெருங்க வேண்டும் அல்லது 17% என்பது வளர்ந்து 50%த்தைத் தொட வேண்டும்.

அன்புடன்,
மா சிவகுமார்

rajakvk சொன்னது…

நேராக நானே சென்று சாப்பிட்டது போல ஒரு உணர்வு. வாழ்க தமிழன். உங்கள் நடை வெகு யதார்த்தம்.

காசி - Kasi Arumugam சொன்னது…

ஆயில்யன், நன்றி. பிரார்த்திப்போம்.

சிவா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. புள்ளிவிவரங்களுக்கு கூடுதல் நன்றி. ஒன்றில் வருமானம் குறையும்போது மக்களாகவே இன்னொன்றுக்கு மாறிவிடுவது இயல்பே. அது தவறில்லை.

ராஜா, நன்றி.

பழமைபேசி சொன்னது…

ஊர் நினைவும், அவரோட அந்த கர்மவினையும் மனசை நெகிழ வைக்குதுங்க அண்ணே!

மஞ்சூர் ராசா சொன்னது…

அடுத்தமுறை நானும் வாரேன்.

Indian சொன்னது…

//பச்சைக் குழல்விளக்கு ஒன்றின் முன் காரை நிறுத்தினேன். சட்டத்தால் ஏற்படுத்தியிருக்க முடியாத தரப்படுத்தலை நடைமுறை வசதி ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்துச் சாலைகளில் பச்சைக் குழல்விளக்குகளைக் கண்டால் இரவு உணவுக்கு அங்கே நிறுத்தலாம்.
//

இந்தப் பச்சை விளக்கு சமாச்சாரம் ஏதாவது தனியார் தரக் கட்டுப்பாடு குறியீடுங்களா? புரியலியே.

பெயரில்லா சொன்னது…

Very Interesting!
Thank You!

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...