திங்கள், ஜனவரி 19, 2004

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 12


உலகுவுடன் நான் - 199? -ல்

கோவை-பொள்ளாச்சி சாலையில் இரண்டு கம்பெனிகளில் முயற்சிக்குப் பின் மூன்றாவதாக எவரெஸ்ட் நிறுவனத்திற்குப் போனேன். காந்திபுரத்தில் தலைமை அலுவலகம் போகச் சொன்னார்கள். பர்சானல் ஆபீஸர் ஒருவர், வயசானவர், அவரிடம் அப்ளிகேஷன் கொடுத்ததும், அவர் ஒரு சிறு இன்டர்வியூ ஏற்பாடு செய்து, ஆச்சரியமூட்டும்விதமாய் அதில் நல்ல முடிவும் கிடைத்தது. அந்தக் கம்பெனி அப்போது ஸ்டிரைக்கில் இருந்ததால், உடனே வேலைக்கு எடுக்காமல், சோதனை (trial basis) முறையில் என்று சொல்லி மூன்று மாதத்திற்கு என்று எடுத்துக் கொண்டார்கள். எனக்கு மிகவும் பிடித்த டிசைன் டிபார்ட்மென்டில் போட்டார்கள். 300 ரூபாய் ஸ்டைபன்ட், சம்பளம் என்று சொல்வதில்லை. எப்படியோ மூன்றுமாதம் செய்த வேலையில் திருப்தி ஏற்பட்டு, வழக்கமான ட்ரெய்னீயாக 450 ரூபாய் சம்பளத்தில் எடுத்துக் கொண்டார்கள். அதிலும் 50 ரூபாய் பிடித்தம் உண்டு. வருடம் 50 ரூபாய் உயர்வும் உண்டு.

அங்கே கிடைத்தவன் தான் என் நண்பன் உலகு. என்னுடனே டிப்ளமா முடித்திருந்தாலும், என்னைப் போல் இல்லாமல் நேரடியாக அங்கு வந்திருந்ததால், ஏற்கனவே ஒரு வருடம் அங்கு எனக்கு சீனியர். டிப்ளமாவுடன் நின்றுவிடாமல் மேற்கொண்டு நான் படிக்கப் பெரிதும் காரணம் உலகு. சாமானியமாக கோபம் வராது. எல்லாருடைய நியாயங்களையும் அவர்கள் பார்வையிலிருந்து பார்க்கும்/முயற்சிக்கும் எண்ணம் உண்டு. வெளிப்படையான பேச்சு. எல்லாவற்றையும்விட என்மீது தனிப்பட்ட அன்பு, நம்பிக்கை, எல்லாம் உண்டு.

கோவைக்கு அம்மாவைக் கூட்டிவர என்ணியதும் உலகுதான் கவுண்டம்பாளையத்தில் தன் வீட்டருகே ஒரு வீடு பார்த்துக்கொடுத்து உதவினான். அன்று வடக்குப் பார்த்து மேட்டுப்பாளையம் ரோடு பக்கம் போனது, இன்றுவரை தொடர்கிறது. 'நான் ராம்நாட் டிஸ்ட்ரிக்ட்' என்று பெருமையாகச் சொன்னாலும், கோவை மிகவும் பிடித்துப் போயிருந்தது. சினிமாவின் மேல் ஆர்வம் உண்டு. பைத்தியம் என்று சொல்ல மாட்டேன். ஆனால் ஓரளவுக்கு பேர் தெரிந்த ரிலீஸ் படங்களைப் பார்க்க ஆர்வம். வேலை முடிந்து என்னையும் கூப்பிடுவான். ஆனால் நான் தயங்குவேன். பையில் காசில்லாததால் தான் என்று தெரிந்து கொண்டு அவன் காசில் அழைத்துச்செல்வான். படம் பார்த்துவிட்டு சைக்கிளில் திரும்பும்போது, என் சைக்கிளில் லைட் இல்லை என்பதால், குறுக்கு வழியில், போலீஸ் கண்ணுக்குப் படாதவகையில் கூட்டிவருவான். எனக்காகத் தன் சைக்கிளில் லைட் இருந்தாலும் போட மாட்டான். கோவையின் விசேஷ அடையாளமான பேக்கரிக் கடைகளில் டீ சாப்பிட என்றாவது அழைக்கும்போது, நான் தயங்குவதைப் புரிந்துகொண்டு, அவனே செலவு செய்வான்.

இதெல்லாம்விடப் பெரிய உதவி, 1983 மேமாதம் ஒருநாள் அவன் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் விவரித்த செய்தி:
'பார்ட் டைம் பி.ஈ. அட்மிஷனுக்கு இந்த வருடம் நாம் அப்ளை பண்ணமுடியும், தெரியுமா?'
'பார்ட் டைம் பி.ஈ.? அதைப்படித்து என்ன ஆகப் போகிறது? படிக்க எவ்வளவு செலவாகும்?...',

என் சந்தேகங்களை தீர்த்து, அந்த வருடம் அப்ளைபண்ணுவதற்கும் தூண்டுகோலாய் இருந்தான். துக்காராம் என்ற இன்னொரு நண்பனுடன் சேர்த்து நாங்கள் மூவரும் அப்ளை பண்ணினோம். என் அனுபவச் சான்றிதழ் கிடைக்க தாமதமாகவே, துக்காராம் உதவியால்தான் கடைசிநேரத்தில் கிடைத்தது. பிறகு இன்டர்வியூக்கு கூப்பிட்டார்கள். அதற்குப்பின் நடந்ததுதான் சோகம். அந்த வருடம் செலக்ஷனில் உலகுவை முன்னேறிய வகுப்பினர் லிஸ்ட்டில் சேர்த்துவிட்டார்கள். என் நல்ல நேரம் எனக்கு கேட்கப்பட்ட கேள்விகள் சுலபமானதாக இருந்துவிட, எனக்கு ஒபன் கோட்டா எனப்படும் அனைவருக்கும் பொதுவான பிரிவில் கிடைத்துவிட்டது. கடைசியில் உலகு 'வெயிட்டிங் லிஸ்ட் ஒன்று' என்ற நிலையில் நின்றதும், நான் மட்டும் என் 'பின்தங்கிய' பிரிவில் வந்திருந்தால் அவனும் அந்த வருடம் பி.ஈ. படித்திருப்பான் என்பதையும் என்ணும்போது, இந்த பின்தங்கிய அடையாளத்தால் இப்படியும் பிரச்னைவருமா என்று தோன்றியது.

ஆனால் இதற்கெல்லாம் பிறகும் உலகுக்கு என் மேல் இருந்த பிரியம் எவ்விதத்திலும் குறைவில்லை. அடுத்தவருடம் அதே கல்லூரியில் அதே வகுப்பில் சேர்ந்தான். இன்று வெளிநாட்டில் குடும்பத்துடன் இருக்கிறான். எப்படியும் கோவையில்தான் செட்டில் ஆகப்போகிறேன் என்கிறான். எனக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் என்று என்றுதான் தெரியவில்லை. எல்லா NRIக்களையும் போல தாமரை இலைத்தண்ணீராகத் தான் இப்போது இருக்கும் இடத்தில் இருக்கிறான். மீண்டும் எல்லாரும் ஒரே இடத்தில் இருக்க முடிந்தால்...

ஞாயிறு, ஜனவரி 18, 2004

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 11


1981 மே மாதம். எல்லாப் பரிட்சைகளும் முடிந்தது. ப்ராக்டிகல்ஸ், ப்ராஜக்ட் வொர்க்..எல்லாம் முடிந்தது. எல்லாருக்கும் ஆங்கிலத்தில் எப்படி அப்ளிகேஷன் எழுதலாம் என்று...இல்லை, இல்லை, ஒரு அப்ளிகேஷனின் டெம்ப்ளேட்டே கொடுத்தார்கள். அதில் அங்கங்கு பெயர், முகவரி, இத்யாதிகளைத் தூவினால் அப்ளிகேஷன் ரெடி. 'கண்ணுங்களா, இனிமே கம்பெனிகளுக்கு அப்ளிகேஷன் போட்டு, வேலை தேடிப் பிழைச்சுக்குங்க' என்று, தாய்க் கோழி வளர்ந்த குஞ்சுகளைக் கொத்தித் துரத்துமே, அதுபோல துரத்திவிட்டார்கள். எந்தக் கம்பெனிக்குப் போடறதுன்னுதான் தெரியலே. ஹாஸ்டலில் தங்கிப் படிக்கவில்லை. எனவே, பிரிவு பெரிதாய் வருத்தவில்லை.

ராமலிங்கம் என்று ஒரு வொர்க்ஷாப் வாத்தியார். எனக்கு சின்னதிலிருந்தே கைவேலை எல்லாம் நல்லா வரும்கிறதாலே ஓரளவுக்கு செய்வேன். அதைப்பாத்து அவருக்கு ஒரு பிரியம். அவர் கடைசி நாள் கேட்டார், 'ஏம்ப்பா, பக்கத்திலே தொழிற்பேட்டையிலே ஒரு வேலை இருக்கு, போறயா?'. தொழிற்பேட்டை எங்க வீட்டில் இருந்து பாலிடெக்னிக் தாண்டி இன்னும் ஒரு கி.மீ. கூடப் போகணும். வெளியூருக்கெல்லாம் போய் வேலைதேடுவதை விட இது நல்லதாச்சேன்னு சரின்னு சொன்னேன்.

அது ஒரு சிறிய கம்பெனி. குரோம்பேட்டை எம் ஐ டி யில் படித்த இருவர் சுயமாகத் தொடங்கிய ஒன்று. எம் ஐ டி ஐப்பற்றியெல்லாம் பிறகு தெரிந்து கொண்டது. அப்போது இவர்கள் நமக்கும் மேல் படித்தவர்கள் என்று மட்டும் தெரியும். போனேன். திரு. ஹரிஷங்கர் பேசினார், எடுத்துக்கொண்டார். திங்கக் கிழமையே வேலைக்குச் சேர்ந்தாச்சு. '200 ரூபாய் சம்பளம். ஆறு மாதம் பாத்துட்டு அப்புறம் உயர்த்துவோம்'. 'சரிங்க'. 'அப்புறம் சாயந்திரம் கரெக்டா அஞ்சு மணிக்குப் போகணும்னு பாக்கக் கூடாது, வேலை இருந்தா கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போகணும்'. 'சரிங்க'. இந்த இரண்டாவது சமாசாரம் பிறகு பெரிய நெருடலாகிப் போனது. ஆறுமாதத்திற்குப்பின் 250 ருபாய் ஆனது. ஆனாலும் தினமும் எப்படியும் 2 மணி நேரமாவது கூடுதல் வேலை, அதற்கு ஓவர்டைம் எல்லாம் கிடையாது. லீவு எடுக்க முடியாது. 25 பேர் வேலை செய்யும் அந்த சிறு இடத்தில் முன்னேற்றத்துக்கு என்ன வழி என்று தெரியாது. எனவே எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக பிடிப்பு விட்டுப்போனது. ஆனாலும், அங்கு கிடைத்த, லைட் எஞ்சினீரிங் தொழிற்சாலையைப் பற்றிய ஒரு பரவலான அறிவு, பின்னால் பெரிதும் பயன்பட்டது. மேலும், லேத், மில்லிங் மெஷின் போன்ற நிறைய மெஷின்களில் கைப்பட வேலை பார்த்தது நம்பிக்கையளித்தது. சில உப கருவிகளை வடிவமைத்தது மனதுக்கு திருப்தியும் தெம்பையும் கொடுத்தது.

அம்மாவை இனி வேலைக்குப் போகவேண்டாம் என்று சொல்லிவிட்டோம். ரொம்ப வருடங்களுக்கப்புறம் இப்போதுதான் ஓய்வு கிடைத்தது.

அதற்குள் அண்ணனுக்குக் கல்யாணப் பேச்சு வந்தது. இன்னும் கொஞ்சம் பொறுத்திருந்திருக்கலாம். வயசும் ஆகவில்லை. மதுரை காமராஜ் திறந்த வெளிக்கல்வியில் முதல் வருடம் பி.காம். கூட முடித்துவிட்டார். இன்னும் இரண்டு வருடம் பொறுத்திருந்தால் முடித்திருப்பார். ஆனால் யாரோ என்னவோ பேசி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைத்துவிட்டார்கள். கல்யாணத்தைக் காரணம் காட்டி, இதுதான் சாக்கென்று நானும் அந்தக் கம்பெனியில் இருந்து கழன்று கொண்டேன். சொல்லப் போனால் மீண்டும் திரு. ஹரிஷங்கரைப் பார்த்து சொல்லிக்கொண்டு வரக் கூட தைர்யமும் விருப்பமும் இல்லை. நான் 'நின்னுட்டேன்', அவ்வளவுதான்.

அண்ணி உடுமலை அருகே ஒரு மில்லில் வேலை பார்த்தார்கள். அண்ணனும் அண்ணியும் வேலை செய்யும்போது நாம் வேலையில்லாமல் இருப்பது நல்லாயில்லை. என்ன செய்யலாம்? எத்தனை சினிமா பார்த்திருக்கிறேன், ஹீரோ சென்னைக்கு ரயிலேறி, ப்ரீப்கேசோடு சர்டிபிகேட் எல்லாம் எடுத்துக்கொண்டு ஆபீஸ் படியேறி வேலை தேடுவதை. நமக்கு சென்னைக்கெல்லாம் போக முடியாது, ப்ரீப்கேசும் இல்லை. அதற்காக விட்டுவிடமுடியுமா?

ஒரு பாக்ஸ்-ஃபைல் எனப்படும் பெட்டிவடிவ ஃபைலில் சர்டிபிகேட் எல்லாம் எடுத்துக்கொண்டு, கோவைக்கு, பஸ் ஏறினேன். எங்கு போவது என்று தெரியாது. ஆனால் கோவைக்குப் போகும் வழியில் ஒரு சிறுதொழில் பேட்டை (மறுபடியும் சிறுதொழிலா :-( ) இருந்தது. அதுதவிர வேறு சில கம்பெனிகளையும் பார்த்திருக்கிறேன். அதில் ஒவ்வொன்றாய்ப் போய் முட்டிப்பார்ப்போம்.

ரவா தோசை செய்யலாம் வர்ரீங்களா?

நேரடியாக மூலப்பொருட்களைக் கொண்டு எந்த ரெடிமேட் மிக்ஸ்களும் இல்லாமல் செய்யும் ரவா தோசை இது. முக்கியமாக, வெளிநாட்டில் இருப்பவர்கள், மிக்ஸி கிரைண்டர் கைவசம் இல்லாதவர்கள், இதை சுலபமாய் செய்யலாம். முந்தின நாளே மாவு ஆட்டி வைக்காதபோதும், திடீர் தோசை வேண்டும் என்றாலும் இது கைகொடுக்கும்.

மேலும் படிக்க நம்ம புது வீட்டுக்கு வாங்க.

சனி, ஜனவரி 17, 2004

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 10


பாலிடெக்னிக்கில் சேர விண்ணப்பித்தாயிற்று. வீட்டில் இருந்தே போகமுடிந்தாலும், 'செமஸ்டருக்கு கட்டணம் முன்னூறு ரூபாய் தேவைப்படுமே, உங்களால் முடியுமா' என்றுகூட சிலர் கேட்டார்கள். ஆனால் அம்மாவும் அண்ணனும் உறுதியாக இருந்தார்கள். நேர்முகத்தேர்வில் ஒரு வேடிக்கை; 14 வயதாகிய நான், மிகவும் பொடியனாக இருப்பேன். அதுவரை 11ஆம் வகுப்பு தேறியவர்களையே பார்த்துப் பழகியவர்களுக்கு என்னைப் பார்த்ததும் வந்தது ஒரு சந்தேகம்.

நீளமான கான்பரன்ஸ் ரூமில் நடந்தது நேர்முகத்தேர்வு.
'ஏம்ப்பா, இங்கே லேத் மிஷினில் எல்லாம் வேலை செய்யணும், நீ என்ன இவ்வளவு பொடியனா இருக்கிறே, உன்னால் முடியுமா?'
'ஓ, செய்வேனுங்க'
'சரி, எங்கே இந்தச் சேரைத் தூக்கிக் காமி பாக்கலாம்', பக்கத்தில் இருந்த எஸ்-வடிவ பின்னல் நாற்காலியைக் காட்டினார் ஒருவர்.
காந்தியுடன் எடுத்த அந்தப் போட்டோ வைப் பார்த்தால் ஏன் அவர்கள் அப்படிக்கேட்டார்கள் என்பது புரியும். என் மகன் 5ஆம் வகுப்புப் படிக்கும்போது அதே மாதிரி இருக்கிறான்! ஆனது ஆகட்டும் என்று மூச்சைப் பிடித்துக்கொண்டு தூக்கினேன். சிரித்துக் கொண்டே ஓகே பண்ணினார்கள்.

வெளியில் வந்ததும் அம்மா 'எங்கே நீ தூக்குவியோ மாட்டியோன்னு நெனச்சேன்' என்றதும், இருவரும் சிரித்ததும் இன்னும் ஞாபகம் இருக்கிறது.

பாலிடெக்னிக் படிப்புக்கு என்று சில கூடுதல் விஷ்யங்கள் தேவைப்பட்டன. ஷூ தான் அணியவேண்டும் என்றார்கள். பாட்டாவில் உள்ளதிலேயே சிக்கனமாய் ஒன்று வாங்கியபிறகு, நல்லதாக செருப்பு ஒன்று வேணும் என்றதுக்கு என் அண்ணன் சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது: 'உனக்குத்தான் ஷூவே வாங்கியாச்சு, இனி எதுக்கு செருப்பு?'

பாடங்கள் மனதுக்குப் பிடித்திருந்தன. ஆனாலும், இந்த கெமிஸ்ட்ரி மட்டும் தகராறு செய்தது. முக்கியக்காரணம், அது ஆங்கில வழியில். கணிதம் மொழிக்கு அப்பாற்பட்டது. இயற்பியலும், வரைபடவியலும் தமிழில் இருந்தது. கேமிஸ்ட்ரி புரிந்தாலும், எழுதும்போது வரவில்லை, மனப்பாடம் செய்யவேண்டியிருந்தது. அதில்தான் நான் வீக்..

அந்தக் காலங்களில் அண்ணனும் அம்மாவும் நிறைய ஓவர்டைம் வேலை செய்வார்கள். அண்ணனுக்கு ஓவர்டைம் செய்யும்போது பேட்டா என்று ஒரு சிறு தொகை தருவார்கள். அதன் நோக்கம் ஒருவேளைச் சாப்பாடுதான். சில நாட்களில் இரவு நேரங்கழித்து வரும்போது, தனக்குக் கிடைத்த பேட்டாவில் எனக்கும் சேர்த்து 'குஸ்கா' வாங்கிவருவார். ஒரு முறை நான் அதற்குள் தூங்கிப்போக, என்னை எழுப்ப முயற்சித்து, முடியாமல் போய், 'பாரு, கஷ்டப்பட்டு இவனுக்கு வாங்கீட்டு வந்திருக்கேன், எந்திரிக்கிறானா பாரு..' என்று சத்தம் போட்டு ஆர்ப்பாட்டம் பண்ணினதாய் அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன்.

விரும்பிய துறையான இயந்திரவியல் துறையும் இரண்டாம் ஆண்டில் அமைந்தது. இதற்கிடையில் அண்ணனையும் வேலையில் நிரந்தரம் செய்தார்கள். சின்னாம்பாளையத்தில் தில்லைமுத்து, ரகுநாதன், மணிபாரதி, கருப்புச்சாமி என்று சில நண்பர்கள் அமைந்தார்கள். கிரிக்கெட்டெல்லாம் சொல்லிகொடுத்தார்கள். பொள்ளாச்சி பூங்கா நூலகம் அடிக்கடி உலாவும் இடமானது. பல நாள் இரவு எட்டு மணிக்கு பூட்டும்வரை உட்கார்ந்திருப்பேன். பெரிய சிக்கல் இல்லாமல் வாழ்க்கை ஓடியது. டிப்ளமாவுக்கு அடுத்து என்ன செய்யப்போகிறேன் என்று பெரிய திட்டமெல்லாம் இல்லை. என்னவெல்லாம் செய்யலாம் என்று சொல்லவும் யாரும் இல்லை. ஒன்றில் மட்டும் உறுதியாய் இருந்தேன். வேலைக்குப் போகவேண்டும்!

நிரலி நம் கையில்

பிரபலமான blogger.com, redfiffblogs.com, blogrive.com போன்ற சேவைகளில் ஓரளவு தமிழ் எழுத்துருக்களைக்கொண்டு தமிழில் வலைப்பதித்தாலும், சில இடங்களில் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறது. ஒரு முறை செல்வராஜ் (அய்யா ஊருக்குப் போனீங்களே, அப்பப்ப எங்காவது தலைகாட்டி மறுமொழியலாம் அல்லவா?) கூட blogger.comக்கு எழுதியிருந்ததாக ஞாபகம், மாதத்தின் பெயரெல்லாம் தமிழில் வருவதில்லையே என்று. நியுக்ளியஸ் தான் முழுவதும் கைவைக்கக்கூடியதாச்சே இதில் இன்னமும் ஏன் மாதம் ஆங்கிலத்தில் இருக்கிறதென்று யோசித்ததில், ரொம்ப சுலபமாக தமிழ் தெரிய வைக்க வழி தெரிந்தது. 'locale' என்று ஒரு அமைவு இருக்கிறது, அதை மாற்றியவுடன் ஜனவரி தானாக வந்துவிட்டது. இன்னும் கொஞ்சம் குடைந்து %A என்று வார்ப்புருவில் சேர்த்ததும், கிழமையும் தெரிகிறது. :) தமிழுக்கான சரியான குறியீடு தமிழ்லினக்ஸ் குழுவில் பழைய மடல் ஒன்றில் கிடைத்தது: ta_IN.UTF-8 என்பதுதான் அது. இன்னும் கடைசியாக வந்த மறுமொழிகள் முகப்புப் பக்கத்தில் தெரியச் செய்ய ஒரு சொருகு நிரல் இருக்கிறது, அதை நிறுவ வேண்டும். அப்புறம், இதுவரை அழகுபடுத்துவற்காக என்று ஒன்றும் செய்யவில்லை, அதில் கொஞ்சம் விளையாடிப்பார்க்க வேண்டும்.

எனக்கு நியூக்ளியஸ்ஸின் மேல் நம்பிக்கை வந்துவிட்டது. அனேகமாக பிப்ரவரியில் இருந்து அங்கே குடிபோய்விடுவேன் என்று நினைக்கிறேன்.

வெள்ளி, ஜனவரி 16, 2004

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 9

பத்தாவது பரீட்சை எழுதிவிட்டு அம்மச்சியிடம் விடைபெற்று திரும்பவும் கோவைக்கு வந்துவிட்டேன். அம்மா 'இட்லிக்காரம்மா'வாகி இருந்தார்கள். கோடை விடுமுறையாதலால் நானும் இட்லிக்கடையில் அம்மாவுக்கு உதவியாக இருந்தேன். நேரம் எளிதில் போனது. இட்லிக்கடை அனுபவம் மற்ற வேலைகளைவிட வித்தியாசமானது. காலையில் 6 மணிக்கெல்லாம் சட்டினி, சாம்பார் செய்து ஆறரைவாக்கில் தயாராகிவிட வேண்டும்.

வாசலில் தரையில் அமர்ந்துதான் எல்லாவற்றையும் செய்யவேண்டும். இரண்டு அடுப்புகள், ஒன்று இட்லிக்கு, மற்றது ஆப்பத்துக்கு. ஆப்பம் கேட்கும்போது மட்டுமே சுடவேண்டும், அதிகம் சுட்டு வைக்கக்கூடாது. இரண்டுமே ஒரே விலைதான், பத்து பைசா! ஒருவர் 50 பைசா இருந்தால் ஒரு வேளையை சமாளித்துக் கொள்ளலாம். சாம்பாருக்கு பெரும்பாலும் தக்காளி+கத்தரிக்காய் கூட்டாக ஒரு குழம்பு மாதிரி செய்வோம், அதுதான் கட்டுபடியாகும். அங்கேயே உட்கார்ந்து சாப்பிடுபவரும் இருப்பர். அவர்களுக்கு மறுமுறை சட்டினி கொடுத்தால் கட்டுபடியாகாது, சாம்பார் எவ்வளவு வேண்டுமானாலும் கிடைக்கும்.

ஆப்பம் சுடுவது ஒரு கலை. பச்சரிசி+புழுங்கல் இரண்டும் கலந்த மாவில், குறைந்த அளவே உளுந்து இருக்கவேண்டும். கொஞ்சம் சமையல் சோடாவும் சேர்க்கவேண்டும், அப்போதுதான் நுரைநுரையாக வரும். ஒரு ஆப்பத்துக்கு சுமார் ஒரு துளி எண்ணைதான் செலவாகும். அது அந்த ஆப்பக்கல், மாவு, ஊற்றும் வாகு இதில் இருக்கிறது. காலை சுமார் 9 மணிக்கு முடியும். பிறகு பாத்திரங்களைக் கழுவிவைத்துவிட்டு, தேவையான காய்கறி மற்றும் பொருட்கள் வாங்கிவைக்க வேண்டும். பிற்பகலில் கொஞ்சம் ஓய்வு. பிற்பகலில் அரிசி, உளுந்து கழுவி மெஷினில் கொடுத்து ஆட்டிவர வேண்டும். பிறகு மாலை 6 மணிமுதல் 9 மணிவரை. அவ்வளவுதான். இதில் ஒரு சிரமம், எளிதில் லீவு எடுக்க முடியாது. ஆட்டிவைத்த மாவு புளித்துப்போனால் வீணாகிவிடும். ஒருசில நாட்களில் கல்யாணம், இழவு எதற்காவது அம்மா போகும்போது நான் மட்டுமே கடைநடத்தியிருக்கிறேன். ஒரு முறை அதில் நான் பண்ணிய கூத்து...

காலையிலேயே அரிசி உளுந்து ஊறப்போட்டால்தான் மாவு அரைக்கத் தயாராக இருக்கும். அந்த நேரத்துக்கு அரைத்து வைத்தால்தான் சரியாகப் புளித்து அடுத்தநாள் சரியான பதத்தில் இருக்கும். நான் ஏதோ ஞாபகத்தில் உளுந்து ஊறப்போட மறந்துவிட்டேன்! ஆட்டுவதற்கு எடுக்கும் போதுதான் தெரிந்தது. அம்மா ஏதோ வேலையாக வெளியூர் போயிருந்தார்கள், இரவில் தான் திரும்புவார். ஆனால் அதற்குள் மாவு ஆட்டி, உப்புப் போட்டுக் கலக்கி வைக்கவேண்டுமே. ஐசக் நியூட்டனின் அருளில் ஒரு யோசனை உருவானது. கெட்டியாய் இருப்பதால்தானே உளுந்து ஆட்டமுடியாமல் இருக்கிறது, லேசாக வேகவைத்துவிட்டால்? அடுப்பில் நீரைவிட்டு கொஞ்ச நேரம் வேகவைத்துப் பின், சூடு தணியும் விதமாக பச்சைத் தண்ணீரைவிட்டு சிலமுறை கழுவி, மெஷினுக்குக் கொண்டுபோய்விட்டேன். அங்கு ஆட்டும்போது வழக்கமாக வரும் மிருதுத்தன்மை வரவில்லை. அதற்குள் அம்மாவும் வந்துவிட, அம்மா கண்டுபிடித்துவிட்டார், நான் என்னவோ திருட்டுத்தனம் பண்ணியிருக்கிறேன் என்று. நானும் ஒத்துக் கொண்டேன். பிறகு புதிதாக ஊறவைத்து, பின்னிரவில் அரைத்து...

அரிச்சந்திரன் மகனைச் சொல்லி என்ன செய்ய?

நாங்கள் இருவரும் இப்படி கோவையில் இருக்க, அண்ணன் இன்னும் பொள்ளாச்சியில் தான் இருந்தார். கொஞ்சநாள் பெயின்டிங் செக்சனில் ஹெல்ப்பர் வேலையும் பார்த்தார். கடினமான வேலை, கையெல்லாம் பழுத்துவிடும். பிறகு, அப்பா வேலைபார்த்த இடத்திலேயே ஓரளவுக்குத் தொடர்ந்து வேலை கிடைத்தது. என் படிப்பு தொடரவேண்டும் என்பதில் இருவரும் குறியாக இருந்தார்கள். என்னை பாலிடெக்னிக்கில் சேர்ப்பது என்று அண்ணன் முடிவு செய்தார். அவருடன் வேலைபார்க்கும் தோழர்கள் சிலர் ஆலோசனையும் இதில் வேலைசெய்தது. அண்ணனின் மேலதிகாரிகள் அப்போது பெரிதும் டி.எம்.இ. படித்தவர்களே. எனவே அண்ணனுக்கு என்னையும் டிப்ளமா படிக்கவைக்க விருப்பம். இது நடக்கவேண்டுமென்றால் மீண்டும் நாங்கள் ஒன்றாகப் பொள்ளாச்சியில் வசிப்பது என்று முடிவானது. அம்மாவுக்கு வேஸ்ட் காட்டன் மில்லில் எப்படியும் வேலை கிடைக்கும். எனவே சமாளித்துக் கொள்ளலாம்.

பொள்ளாச்சியில் வீடு பார்த்து, குடிபுகுந்தோம். இம்முறை பாலிடெக்னிக்குக்கும் மில்லுக்கும் சரிபாதி தூரம் வரும் சின்னாம்பாளையம் எங்களை வரவேற்றது. இது உண்மையிலேயே மகிழ்வளிக்கும் வரவேற்பு. 'இழப்பதற்கு ஒன்றுமில்லை, அடைவதற்கோ பொன்னுலகம்' என்பது உண்மையிலேயே நிகழ்ந்தது.

வியாழன், ஜனவரி 15, 2004

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 8

ஒரு வருடகாலமாய் பழகிப்போன அரிசிச்சாப்பாடு புதுப்பாளையத்தில் அதிகம் இருக்கவில்லை. ஆனாலும் பள்ளிக்கூடத்துக்கு கொண்டுபோக அம்மச்சி அரிசி, அல்லது சாமை இரண்டு மட்டும் செய்துதரும். சாமை, நெல்லஞ்சோத்துக்கு (அரிசிக்கு) உண்ணும் குழம்பு, ரசம் எதனுடனும் ஒத்துக்கொள்ளும். ஆறினபின்னும் பெரிய வித்தியாசம் இருக்காது. ராகி, சோளம் போன்றவை அப்படியல்ல. தோசை பெரும்பாலும் ராகியில் இருக்கும். ராகி ஒரு அற்புதமான தானியம். எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ராகியை அரைத்து மாவாக்கிவைத்துக்கொண்டால், களி செய்யலாம். ரக்கிரி (காட்டுக்கீரை) கடைந்து சுடச்சுட ராகிக் களியுடன் உண்டால் நன்றாய் இருக்கும். மேலும், புட்டுமாவு (ஈர மாவில் புட்டு செய்து, தாளித்தது) மிகவும் பிடித்த டிபன். யாராவது விருந்தினர் வந்துவிட்டால், அல்லது அடை மழைக்காலங்களில் குளிருக்கு இதமாக ராகி வடை நன்றாய் இருக்கும். நிறைய சின்ன வெங்காயம், மிளகாய் அரிந்து போட்டு கெட்டியாய் பரோட்டா போல தோசைக்கல் அல்லது வடைச்சட்டியில் சுடும் 'ரொட்டி'யும் அடுப்புக்கருகேயே உட்கார்ந்து சாப்பிட்டால் சொர்க்கம் தான். இப்போதும் நிறைய இடங்களில் ராகி பக்கோடா கிடைக்கிறது. அமெரிக்காவிலும் எங்கள் வீட்டில் என்றாவது கிடைக்கிறது.

பள்ளிக்கு வெளியே படித்துப் பழக்கமில்லாத்தால் மின் விளக்கு இல்லாதது பெரிய குறையாய்த் தெரியவில்லை. ஆனாலும் சித்தூரில் இருந்த அளவு படிப்பு சோபிக்கவில்லை. அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டதாலோ, பஸ் பிரயாணத்தில் ஏற்படும் அலுப்பினாலோ, அந்த அளவுக்கு ஆசிரியர்-மாணவர் இருபாலரிடமும் அக்கறையின்மையோ ஏதோ ஒன்று. கண்ணன் என்று ஒரு சூட்டிகையான பையன் வகுப்பில் இருந்தான். பள்ளியிலிருந்து அரை கி.மீயில் வீடு, அங்கிருந்து நடந்து வரும் அந்த நேரத்திலும், புத்தகத்தை விரித்து, ஒருகையில் பிடித்துக்கொண்டு படிப்பதும், மனப்பாடம் செய்வதும், புத்தகத்தை முதுகுப்புறமாய் மறைத்துக்கொண்டு, மனப்பாடம் செய்ததைச் சொல்லிப் பார்த்துக்கொள்வதுமாய், அவன் படிப்பதைப் பார்க்கையில், 'இதுவல்லவோ படிப்பு' என்று தோன்றும். அதே மாதிரி மாநில அளவில் பள்ளியிறுதித்தேர்வில் அவன் 13ஆம் இடம் பெற்றான், டாக்டருக்குப் படித்தான் என்று நினைக்கிறேன்.

ஒன்பது-பத்தாம் வகுப்புகளில் எனக்குக் கிடைத்த அருமைத்தோழன் எம் ஜி ஆர். அவனும் மறக்க முடியாத ஒரு உதவியைச் செய்தான். அவனது இன்னொரு பெயர் காந்தி. பிறகு கருணைக்கோ, வள்ளல்தன்மைக்கோ கேட்பானேன். அவன் உண்மைப் பெயரைச் சொல்லவில்லையே, உண்மையில் அவன் பெயர் எம். ராமசாமி. அக்டோபர் இரண்டாம் தேதி பிறந்ததால் காந்தி என்று செல்லப்பெயர். அதை இடையில் போட்டு, 'நான் எம். காந்தி ராமசாமி, அதாவது எம். ஜி. ஆர்.' என்று சொல்லிக்கொள்வான். அவன் வீட்டில் எல்லாரும் போல நானும் காந்தி என்றுதான் அழைப்பேன். அவன் வீட்டில் அனைவரும் அருமையாகப் பழகுவார்கள். அப்பா ஏதோ வியாபாரம் செய்துகொண்டிருந்தார். அப்போதே வீட்டில் போன் வைத்திருப்பார்கள். அங்கு போகும்போதெல்லாம் சாப்பிடாமல் விடமாட்டார்கள்.

நாங்கள் தான் முதன்முதலில் பத்தாம் வகுப்பில் பள்ளியிறுதித்தேர்வு எழுதியவர்கள். அந்த வருடம் எங்கள் சீனியர்கள் 11ஆம் வகுப்பில் பள்ளியிறுதி எழுதினார்கள். ஆக அந்த வருடம் இரண்டுமடங்கு பேர் பள்ளியிறுதியை முடித்தார்கள். எனக்கு தேர்வுசமயத்தில் ஒரு பிரச்னை. தேர்வு நடக்கும் வாரம் பஸ் எல்லாம் ஏதோ காரணத்தால் தொடர் வேலைநிறுத்தம் அறிவிப்பாயிருந்தது. எப்படி புதுப்பாளையத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு தினமும் வந்து தேர்வு எழுதுவது? 'நீ பரிட்சை முடியும் வரை இங்கேயே இரு. முடிந்ததற்கப்புறம் போகலாம்' என்று ஆர்டர் போட்டுவிட்டார் காந்தியின் அப்பா. அந்த வாரம் முழுதும் அங்கேயே தங்கிவிட்டேன். எந்தக் கவலையும் இல்லாமல் பரீட்சை எழுதினேன். இரண்டாம் வகுப்புக்குப் பிறகு எடுத்த என் ஒரே போட்டோ அவர்கள் வீட்டில் காந்தியின் மாமா ஒருவர் எடுத்ததுதான்.

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...