வெள்ளி, ஜனவரி 16, 2004

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 9

பத்தாவது பரீட்சை எழுதிவிட்டு அம்மச்சியிடம் விடைபெற்று திரும்பவும் கோவைக்கு வந்துவிட்டேன். அம்மா 'இட்லிக்காரம்மா'வாகி இருந்தார்கள். கோடை விடுமுறையாதலால் நானும் இட்லிக்கடையில் அம்மாவுக்கு உதவியாக இருந்தேன். நேரம் எளிதில் போனது. இட்லிக்கடை அனுபவம் மற்ற வேலைகளைவிட வித்தியாசமானது. காலையில் 6 மணிக்கெல்லாம் சட்டினி, சாம்பார் செய்து ஆறரைவாக்கில் தயாராகிவிட வேண்டும்.

வாசலில் தரையில் அமர்ந்துதான் எல்லாவற்றையும் செய்யவேண்டும். இரண்டு அடுப்புகள், ஒன்று இட்லிக்கு, மற்றது ஆப்பத்துக்கு. ஆப்பம் கேட்கும்போது மட்டுமே சுடவேண்டும், அதிகம் சுட்டு வைக்கக்கூடாது. இரண்டுமே ஒரே விலைதான், பத்து பைசா! ஒருவர் 50 பைசா இருந்தால் ஒரு வேளையை சமாளித்துக் கொள்ளலாம். சாம்பாருக்கு பெரும்பாலும் தக்காளி+கத்தரிக்காய் கூட்டாக ஒரு குழம்பு மாதிரி செய்வோம், அதுதான் கட்டுபடியாகும். அங்கேயே உட்கார்ந்து சாப்பிடுபவரும் இருப்பர். அவர்களுக்கு மறுமுறை சட்டினி கொடுத்தால் கட்டுபடியாகாது, சாம்பார் எவ்வளவு வேண்டுமானாலும் கிடைக்கும்.

ஆப்பம் சுடுவது ஒரு கலை. பச்சரிசி+புழுங்கல் இரண்டும் கலந்த மாவில், குறைந்த அளவே உளுந்து இருக்கவேண்டும். கொஞ்சம் சமையல் சோடாவும் சேர்க்கவேண்டும், அப்போதுதான் நுரைநுரையாக வரும். ஒரு ஆப்பத்துக்கு சுமார் ஒரு துளி எண்ணைதான் செலவாகும். அது அந்த ஆப்பக்கல், மாவு, ஊற்றும் வாகு இதில் இருக்கிறது. காலை சுமார் 9 மணிக்கு முடியும். பிறகு பாத்திரங்களைக் கழுவிவைத்துவிட்டு, தேவையான காய்கறி மற்றும் பொருட்கள் வாங்கிவைக்க வேண்டும். பிற்பகலில் கொஞ்சம் ஓய்வு. பிற்பகலில் அரிசி, உளுந்து கழுவி மெஷினில் கொடுத்து ஆட்டிவர வேண்டும். பிறகு மாலை 6 மணிமுதல் 9 மணிவரை. அவ்வளவுதான். இதில் ஒரு சிரமம், எளிதில் லீவு எடுக்க முடியாது. ஆட்டிவைத்த மாவு புளித்துப்போனால் வீணாகிவிடும். ஒருசில நாட்களில் கல்யாணம், இழவு எதற்காவது அம்மா போகும்போது நான் மட்டுமே கடைநடத்தியிருக்கிறேன். ஒரு முறை அதில் நான் பண்ணிய கூத்து...

காலையிலேயே அரிசி உளுந்து ஊறப்போட்டால்தான் மாவு அரைக்கத் தயாராக இருக்கும். அந்த நேரத்துக்கு அரைத்து வைத்தால்தான் சரியாகப் புளித்து அடுத்தநாள் சரியான பதத்தில் இருக்கும். நான் ஏதோ ஞாபகத்தில் உளுந்து ஊறப்போட மறந்துவிட்டேன்! ஆட்டுவதற்கு எடுக்கும் போதுதான் தெரிந்தது. அம்மா ஏதோ வேலையாக வெளியூர் போயிருந்தார்கள், இரவில் தான் திரும்புவார். ஆனால் அதற்குள் மாவு ஆட்டி, உப்புப் போட்டுக் கலக்கி வைக்கவேண்டுமே. ஐசக் நியூட்டனின் அருளில் ஒரு யோசனை உருவானது. கெட்டியாய் இருப்பதால்தானே உளுந்து ஆட்டமுடியாமல் இருக்கிறது, லேசாக வேகவைத்துவிட்டால்? அடுப்பில் நீரைவிட்டு கொஞ்ச நேரம் வேகவைத்துப் பின், சூடு தணியும் விதமாக பச்சைத் தண்ணீரைவிட்டு சிலமுறை கழுவி, மெஷினுக்குக் கொண்டுபோய்விட்டேன். அங்கு ஆட்டும்போது வழக்கமாக வரும் மிருதுத்தன்மை வரவில்லை. அதற்குள் அம்மாவும் வந்துவிட, அம்மா கண்டுபிடித்துவிட்டார், நான் என்னவோ திருட்டுத்தனம் பண்ணியிருக்கிறேன் என்று. நானும் ஒத்துக் கொண்டேன். பிறகு புதிதாக ஊறவைத்து, பின்னிரவில் அரைத்து...

அரிச்சந்திரன் மகனைச் சொல்லி என்ன செய்ய?

நாங்கள் இருவரும் இப்படி கோவையில் இருக்க, அண்ணன் இன்னும் பொள்ளாச்சியில் தான் இருந்தார். கொஞ்சநாள் பெயின்டிங் செக்சனில் ஹெல்ப்பர் வேலையும் பார்த்தார். கடினமான வேலை, கையெல்லாம் பழுத்துவிடும். பிறகு, அப்பா வேலைபார்த்த இடத்திலேயே ஓரளவுக்குத் தொடர்ந்து வேலை கிடைத்தது. என் படிப்பு தொடரவேண்டும் என்பதில் இருவரும் குறியாக இருந்தார்கள். என்னை பாலிடெக்னிக்கில் சேர்ப்பது என்று அண்ணன் முடிவு செய்தார். அவருடன் வேலைபார்க்கும் தோழர்கள் சிலர் ஆலோசனையும் இதில் வேலைசெய்தது. அண்ணனின் மேலதிகாரிகள் அப்போது பெரிதும் டி.எம்.இ. படித்தவர்களே. எனவே அண்ணனுக்கு என்னையும் டிப்ளமா படிக்கவைக்க விருப்பம். இது நடக்கவேண்டுமென்றால் மீண்டும் நாங்கள் ஒன்றாகப் பொள்ளாச்சியில் வசிப்பது என்று முடிவானது. அம்மாவுக்கு வேஸ்ட் காட்டன் மில்லில் எப்படியும் வேலை கிடைக்கும். எனவே சமாளித்துக் கொள்ளலாம்.

பொள்ளாச்சியில் வீடு பார்த்து, குடிபுகுந்தோம். இம்முறை பாலிடெக்னிக்குக்கும் மில்லுக்கும் சரிபாதி தூரம் வரும் சின்னாம்பாளையம் எங்களை வரவேற்றது. இது உண்மையிலேயே மகிழ்வளிக்கும் வரவேற்பு. 'இழப்பதற்கு ஒன்றுமில்லை, அடைவதற்கோ பொன்னுலகம்' என்பது உண்மையிலேயே நிகழ்ந்தது.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...