திங்கள், ஆகஸ்ட் 24, 2009

வாங்க, வாங்க.

இணையத்திலே தமிழ் வாசிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் தமிழ்மணம் சேவையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு வாழ்த்துகள்.

என்னடா இது சோதனை, வலைப்பதிவுக்குச் சம்பந்தமில்லாத ஆளுகளையெல்லாம் தமிழ்மண நிர்வாகம் நட்சத்திரமாக்கீருக்காங்களேன்னு முழிக்காதீங்க:-) கொடநாடு எஸ்டேட்டில் இடம் கிடக்காததால், பக்கத்தில் கோயமுத்தூரிலேயே கொஞ்ச நாளாக ஓய்வெடுக்கும் மூத்த பதிவர் யாம். இந்த ஒருவாரம் உங்களோடு சில செய்திகளைப் பரிமாறிச் செல்ல எண்ணம். பொறுத்தருள்க.

என்னைப் பற்றிய சிறு அறிமுகம் இங்கே கீழே இன்னொருமுறை (சுய விளம்பரம் இங்கே ரொம்பப் பிடிக்கும் என்று அறிக)

பெயர்: காசி ஆறுமுகம்
ஊர்: கோவை
வயது: 45
தொழில்: இயந்திரவியல் பொறியாளர்
வலைப்பதிவு தொடங்கிய நாள்: ஆகஸ்ட் 2003.
கடந்துவந்த தளங்கள்:
சில நாட்குறிப்புகள்:
தமிழ்மணம் 2.0 தளம் உருவாக்கம்: 14 ஜன 2006
ஆர்வங்கள்:
கணினி, இணையம், கருவிகள், இயந்திரங்கள், வரலாறு, வரைபடங்கள், சுற்றுலா, நண்பர்கள், காரோட்டுதல், சமையல்....

சரி, போதும்.

எழுதுவதற்கு சங்கதி இருப்பதாயிருந்தால் தான் ஏற்கனவே எழுதிக்கொண்டிருப்பமே, அது இல்லாததால்தானே ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறது! ஆனாலும் கிடைத்த வாய்ப்பை விட மனமில்லாமல் ஒரு குறுக்கு வழியில் இறங்கியிருக்கிறேன்.

நாமாக எழுத இயலாத போது யாராவது எழுதினதை வைத்து ஓப்பேத்துவது சகஜம்தானே. அதையேகொஞ்சம் மாத்தி, ’அய்யா, அம்மா, எழுதிக்கொடுங்கன்னு கேட்டு வாங்கிப்போட்டா எப்படி இருக்கும்?

இந்த வாரம் பெரும்பாலும் அப்படியாகத்தான் ஓட்டுவதாகத் திட்டம் (தப்பிச்சோம்டா சாமீன்னு குரல் கேக்குது, யாராயிருந்தாலும் விட்டுடுவோம், பொழச்சுப் பொகட்டும்)

நம்ம வலை உலகப் பெரியவங்க சிலபேர்கிட்ட சூப்பர் கேள்விகள் சிலதைக் கேட்டு, பதிலை வாங்கி, ஒத்தி ஒட்டி, இந்த வாரத்தைக் கடத்துகிறேன். ஆதரவு கொடுங்க அன்பர்களே!

அதற்கு முன், தமிழ் இணையத்துடன் எனக்கு பரிச்சயம் ஏற்பட்டதுக்குப் பின்னர் கடந்த 5 ஆண்டுகளுக்குள் மறைந்த மூன்று நண்பர்களுக்கு அஞ்சலியுடன் என் நட்சத்திர வாரத்தைத் தொடங்குகிறேன்.

தேனீ உமர் தம்பி
தேன்கூடு சாகரன்
சிந்தாநதி

இவர்களில் சாகரனும் சிந்தாநதியும் தங்கள் புனைபெயர்களிலேயே இணையத்தில் வெளிப்படுத்திக்கொண்டதால் அப்படியே தொடர்கிறேன்.

தமிழ் வலைப்பதிவுகளின் தொடக்க காலத்தில் பல்வேறு எழுத்துரு/குறியேற்ற வேறுபாடுகளால் ஏற்பட்ட தொய்வுநிலை களைய உமரின் தேனீஎன்ற இயங்கு எழுத்துரு (dynamic font) மிகுந்த பணியாற்றியது. ஒரே எழுத்துருவில் பலபைட்-யுனிகோடுக்கும் ஒருபைட்-திஸ்கிக்கு ஆதரவு தந்ததுடன், அதை இயங்கு எழுத்துருவாக அளித்ததும், இதற்கும் மேலாக நுட்பத்தை கொந்தி (hacking) எந்தத் தளத்திலும் அது இயங்கும் விதமாக அளித்ததும் வியத்தகு சாதனைகள். உலகில் எந்த நுட்பவியலாளரும் சிந்தித்திருக்கமுடியாத ஒன்று. சொல்லப்போனால், இன்றும் கூட இந்தச் சிக்கலின், அதன் தீர்வின் ஆழத்தைப் புரிந்தவர்கள் வெகுசிலரே இருப்பர் என்பது என் கணிப்பு. அத்தகைய சாதனைக்குச் சொந்தக்காரர் உமர்.

இலக்கிய ஆர்வமும் நுட்பத் திறனும் ஒருங்கே அமைந்த சாகரன் கட்டியது தேன்கூடு என்னும் தளம். வலைப்பதிவர்களுக்குப் போட்டிகள் தொடங்கி வைத்ததும், புதிய நுட்பங்களை அறிமுகப்படுத்தி தேன்கூட்டின் சேவையைத் தமிழ்மணத்தின் சேவையிலிருந்து தனிப்படுத்திக்காட்டியதும் சாகரனின் பங்களிப்புகளில் சில.

வலையின் மூலமாகவே அமைந்த ஒரு பெரிய நண்பர் வட்டத்துக்குத் தன்னலம் கருதாது பல்வேறு நுட்ப ஆலோசனைகள், உதவிகள், நிரல்கள், விளக்கங்கள் வழங்கி பெரிய வினையூக்கியாக இருந்தவர் சிந்தாநதி. தமிழ் கணிமை, புத்தக சந்தை, சற்றுமுன் போன்ற பலமுயற்சிகளுக்கு ஆதார சக்தி. அவரின் மன முதிர்ச்சி அதிசயிக்கத்தக்கது. சென்னையில் நடந்த வலைப்பதிவர் பட்டறைக்காக சிந்தாநதி தயாரித்தளித்த கையேடு ஒரு முன்னோடி முயற்சி. (வேண்டுகோளை ஏற்று, சுயவிளம்பரம் விரும்பாத சிந்தாநதியின் நிழற்படம் அளித்து உதவிய அவரின் தம்பி ராஜேசுக்கு மிக்க நன்றி.)

இன்னும் பல தன்னார்வல்ர்களின் உழைப்பும் முனைப்பும் தமிழ் இணையத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியிருக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.

தமிழ்மணத்தை தொடங்கிய நாட்களில் கிடைத்த செய்திகள் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். கடந்த மூன்றாண்டுகளாக தமிழ்மணத்தை திறம்பட நிர்வகிக்கும் தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நண்பர்கள் சிலரைப் பற்றி அடுத்த இடுகைகளில்...

53 கருத்துகள்:

சின்ன அம்மிணி சொன்னது…

நட்சத்திரமானதுக்கு வாழ்த்துக்கள், ஐந்தாம் வருசப்பிறப்புக்கு சரியாக நட்சத்திரம் ஆகியிருக்கிறீர்கள். பல தெரியாத விஷயங்கள் தெரிந்து கொள்வோமென்று நம்புகிறேன்.

ஜோ/Joe சொன்னது…

நன்றி கலந்த வணக்கம்!

தேவன் மாயம் சொன்னது…

வணக்கம் !! நண்பரே!! பழையனவற்றைச் சொல்லுங்கள்!!கேட்டுக்கிறோம்.

கோவி.கண்ணன் சொன்னது…

வணக்கம், வாழ்த்துகள் "தமிழ்மணம் காசி.

உங்கள் தமிழ்மணம் சேவை தொடக்கம் பல பதிவர்களை உருவாக்கியது.

இன்னிக்கு நீங்க தான் தமிழ்மணம் நட்சத்திரமாக வருவீங்கன்னு கடலூர் பட்சியின் தகவல் நேற்றே கிடைத்தது.

:)

முரளிகண்ணன் சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள் காசி சார்.

வான்வெளி அமைத்தவர் நட்சத்திரமா?

இருந்தாலும் சம்பிரதாய வாழ்த்துக்கள்.

உமர் அவர்களைப் பற்றிய குறிப்புக்கு மிக்க நன்றி.

விருபா - Viruba சொன்னது…

\\ தமிழ்மணம் சேவையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு வாழ்த்துகள் \\

சுல்தான் சொன்னது…

தமிழ்மணம் பற்றி நினைத்தாலே நீங்கள்தான் நட்சத்திரமாக தெரிகின்றீர்கள். ஒரு வாரத்துக்கு நீங்கள் தனி நட்சத்திரம். (ஸ்பெஷல் ஸ்டார்).

ஜெகதீசன் சொன்னது…

உங்களுக்கும் தமிழ்மணத்திற்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்....

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

தலைப்பையே வெட்டி ஒட்டிவிடுகிறேன்.

“வாங்க, வாங்க.” :)

வாழ்த்துக்கள்.

நண்பர்களைப்பற்றிய குறிப்புகளுக்கு நன்றி..

துளசி கோபால் சொன்னது…

வாங்க வாங்கன்னு நாங்க கூப்புடறோம்.

இ கலப்பைப் பிடிக்கச் சொல்லித்தந்த குருவே,

வணக்கம் . நல்லா இருக்கீங்களா?

இனிய வாழ்த்து(க்)களும் பாராட்டுகளும்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

வாழ்த்துகள் திரு தமிழ்மணம் காசி அவர்களே!

சொந்த வீட்டில் விருந்துக்கழைத்திருக்கிறார்கள்!

உங்கள் சொந்த வீடாதலால் நீங்கள்தான் விருந்து வைக்க வேண்டும்.

உற்ற நண்பர்களின் தமிழ்ப் பணியை நினைவு கூர்ந்து பெருமை சேர்த்ததற்கு நன்றி!

Cable Sankar சொன்னது…

வாழ்த்துக்கள்.. முரளிகண்ணனை வழிமொழிகிறேன்.

ஆயில்யன் சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள் !

நட்சத்திரத்தின் அனுபவங்களோடு தமிழ்மண அனுபவங்களையும் சற்று பகிர்ந்துக்கொள்ளுங்கள் !

புருனோ Bruno சொன்னது…

//வான்வெளி அமைத்தவர் நட்சத்திரமா?
//

வழிமொழிகிறேன்

:)

இராம்/Raam சொன்னது…

பெரியவருக்கு வாழ்த்துக்கள்... :)

சங்கா சொன்னது…

நட்சத்திர வாழ்த்துகள்!

gulf-tamilan சொன்னது…

வாழ்த்துக்கள்.
வான்வெளி அமைத்தவர் நட்சத்திரமா?
வழிமொழிகிறேன்!!!

உண்மைத் தமிழன்(15270788164745573644) சொன்னது…

வாங்க.. வாங்க..!

வருக.. வருக..!

உங்க வீட்டு நிகழ்ச்சிக்கு நீங்கதாங்கண்ணே வாசல்ல நின்னு வரவேற்கோணும்..

அதுனால ஐந்தாமாண்டு துவக்கத்தில் தாங்கள் நட்சத்திரமாக இருப்பது சாலப் பொருத்தம்..

எழுதுங்க. எழுதுங்க.. எழுதுங்க..

ILA சொன்னது…

நட்சத்திரமானதுக்கு வாழ்த்துக்கள்

பைத்தியக்காரன் சொன்னது…

'தமிழ்மண'த்தின் ஐந்தாம் வருட தொடக்கத்துக்கு சரியான 'நட்சத்திரம்'.

வாழ்த்துகள் காசி

தோழமையுடன்
பைத்தியக்காரன்

தருமி சொன்னது…

தமிழ்மண காசி அவர்களுக்கு

//ஜோ/Joe சொன்னது…

நன்றி கலந்த வணக்கம்!//

மீண்டும் என் நன்றி கலந்த வணக்கம்.

நர்சிம் சொன்னது…

வணக்கம் ஸார்.

கானா பிரபா சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள் காசி

jackiesekar சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே...

பெத்தராயுடு சொன்னது…

வாழ்த்துகள் காசி அண்ணே.

மணியன் சொன்னது…

அன்பு காசிக்கு, உங்களை மீண்டும் தமிழ்மணத்தில் பார்க்க மகிழ்ச்சி. யூனிக்கோடு என்னவென்றும் வலைப்பதிவதெப்படி என்றும் சொல்லிக்கொடுத்த குருவிற்கு வந்தனங்கள். தமிழை இணையத்தில் காண பெரும்பங்காற்றிய மறைந்த பெரியவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதில் நானும் கலந்து கொள்கிறேன்.

கோவை சிபி சொன்னது…

வணக்கமும்,வாழ்த்துக்களும்.

யுவகிருஷ்ணா சொன்னது…

உங்களை சூரியன் என்று சொல்வதே பொருத்தம். சூரியனும் ஒரு நட்சத்திரம் தானென்றாலும், நட்சத்திரம் நம் பார்வைக்கு மிக சிறியது.

வாழ்த்துகள்!

சாலிசம்பர் சொன்னது…

செவ்வணக்கமும்,செவ்வாழ்த்துகளும் தோழர்.

தமிழ் பிரியன் சொன்னது…

///முரளிகண்ணன் சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள் காசி சார்.

வான்வெளி அமைத்தவர் நட்சத்திரமா?

இருந்தாலும் சம்பிரதாய வாழ்த்துக்கள்.///

அதே.. :)

கதிர் - ஈரோடு சொன்னது…

வணக்கம்
வாழ்த்துகள்

தமிழ்மணத்திற்கு இந்த நல்ல நாளில் நன்றிகள்

☼ வெயிலான் சொன்னது…

வணக்கமும். நன்றியும்.

திரு/thiru சொன்னது…

தமிழ்மணம் பலரின் எழுத்து ஆர்வத்திற்கு களமாகியது.நீங்கள் துவக்கிய தமிழ்மணம் 5 ஆண்டுகள் கடந்து வளர்வது மகிழ்ச்சி. நன்றி காசி!

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்!

திகழ்மிளிர் சொன்னது…

வணக்கம்

வாழ்த்துகள்

enRenRum-anbudan.BALA சொன்னது…

Welcome (Should I add "back":) ) Kasi !

Hope you will give us some dose of Nostalgia !

anbudan
BALA

காசி - Kasi Arumugam சொன்னது…

சின்ன அம்மிணி, ஜோ, தேவன் மாயம்,
விருபா, சுல்தான், ஜெகதீசன், முத்துலெட்சுமி, அத்திவெட்டி ஜோதிபாரதி, கேபிள் சங்கர், ஆயில்யன்,
புரூனோ, இராம், சங்கா, கல்ப்-தமிழன்,
உள்ளூர்த்தமி...இல்லை, உண்மைத் தமிழன், இளா, பைத்தியக்காரன், தருமி, நர்சிம், கானாபிரபா, ஜாக்கிசேகர், பெத்தராயுடு, கோவை சிபி, தமிழ்ப்பிரியன், கதிர்-ஈரோடு,

அனைத்து நண்பர்களின் வாழ்த்துக்கும் வரவேற்புக்கும் நன்றி.

கோவி. கண்ணன், கடலூர் பட்சி களத்துமேட்டிலி்ருந்து கடல் கடந்து பறப்பதைப் பார்க்க மகிழ்ச்சி.

முரளிகண்ணன்,
உதாரணத்தில் கொன்னுட்டீங்க:-) நட்சத்திரமில்லா வானம் வெறுமையாயிருக்கும்தானே, நீங்க எல்லாரும்தான் இந்த வெளியை ஒளிரவைப்பவர்கள். (அப்பாடா பதிலுக்கு உதாரணத்தாலேயே கொன்னாச்சு!)

துளசி கோபால், குருவா, சும்மா இருங்க. அதெல்லாம் ரொம்ப எளிமையான விசயம்.

மணியன், உங்களுக்குமா? சரி, எனக்கு எதாவது சொல்லிக்குடுங்க, சரியாப்போய்விடும்.:-)

யுவகிருஷ்ணா,
நம்ம சூரியன் கட்சிதான். அதுக்காக நம்மளை நாமளே சூரியன்னு சொல்லிக்கலாமா? :-)

சயந்தன் சொன்னது…

நம்ம வலை உலகப் பெரியவங்க சிலபேர்கிட்ட // நான் நம்பமாட்டேன் :) :)

புதுப்பாலம் சொன்னது…

வணக்கம். வருக, வருக.......

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும். கலக்குங்கள்...........

அன்புடன்
இஸ்மாயில் கனி

சந்தனமுல்லை சொன்னது…

தங்களுக்கும், தமிழ்மணத்திற்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்....

ராஜன் சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள் காசி சார்....

பத்மா அர்விந்த் சொன்னது…

காசி
உங்கள் பெயரை பார்த்த மாத்திரத்திலேயே ராவா தோசை செய்வதும், மான்கள் கடக்கும் சாலையும் உன்கோடு என் கோடு யுனிக்கொடு போன்ற பல பழைய பதிவுகள் தன்னாலே நினைவுக்கு வருகின்றன. மீண்டும் தொடர்ந்து எழுதுங்கள். இளவஞ்சியும் செல்வநாயகியும் எழுத வந்திருப்பது போல.
ஐந்து ஆண்டுகள் கடந்ததாகவே தெரியவில்லை. வாழ்த்துக்கள்.

ரவிசங்கர் சொன்னது…

சிந்தாநதி படத்தைக் கண்டு நெகிழ்கிறேன். வெளியிட்டமைக்கு நன்றி.

சத்யராஜ்குமார் சொன்னது…

காசி & தமிழ்மணத்துக்கு வாழ்த்துக்கள்!

தகடூர் கோபி(Gopi) சொன்னது…

காசி,

தமிழ்மணம் ஐந்தாண்டுகளுக்கும் உங்கள் நட்சத்திர வாரத்துக்கும் நல்வாழ்த்துகள்.

//சிந்தாநதி படத்தைக் கண்டு நெகிழ்கிறேன். வெளியிட்டமைக்கு நன்றி.//

ரவியை நான் வழிமொழிகிறேன். நன்றி

தகடூர் கோபி(Gopi) சொன்னது…

உண்மைத்தமிழன்,

//அதுனால ஐந்தாமாண்டு துவக்கத்தில்//

தூங்கிட்டே தட்டுனீங்களா? :-)))))

ஐந்தாம் ஆண்டு நிறைவுன்னா ஆறாம் ஆண்டு துவக்கம்னு இல்ல வரனும் ?

உண்மைத் தமிழன்(15270788164745573644) சொன்னது…

[[[தகடூர் கோபி(Gopi) கூறியது...

உண்மைத்தமிழன்,
//அதுனால ஐந்தாமாண்டு துவக்கத்தில்//
தூங்கிட்டே தட்டுனீங்களா?:-)))))
ஐந்தாம் ஆண்டு நிறைவுன்னா ஆறாம் ஆண்டு துவக்கம்னு இல்ல வரனும்?]]]

வாப்பா அஜீத்து..!

இத்தனை வருஷமா..? இத்தனை மாசமா..? இத்தனை நாளா..? கண்டுக்காம விட்டுட்டு, மவன் எப்ப மாட்டுவான்னு எதிர்பார்த்து காத்திருந்து பின்னூட்டம் போடுறியா..?

நல்ல மனசுங்கடா சாமி உங்களுக்கு..!

யு.எஸ்.தமிழன் சொன்னது…

சூரியன் டார்ச், திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிருதம் மாதிரி காசி நட்சத்திரம். கலக்குங்க.

கொங்கு மணம் கமழ ஒத்த பதிவாவது இருக்கணும் சொல்லிபோட்டோமுங்... இல்லான்ன ராசாகிட்ட சொல்லி யெச்டி புல்லட் வூட்டுக்கு அனுப்புவோம் ஆமா! :)

-டைனோ

SP.VR. SUBBIAH சொன்னது…

இந்த வர நட்சத்திரம்னு ஒருவார நட்சத்திரக் குடத்தில் அடக்கிவிடக்கூடிய நடசத்திரமா நீங்கள்? வானில் ஜொலிக்கும் நட்சத்திரமல்லவா நீங்கள்?தமிழ்ப் பதிவுகளுக்கான திரட்டியை வடிவமைத்துக்கொடுத்த திலகம் அல்லவா நீங்கள்!

நீங்கள் அடிக்கடி பதிவுகள் எழுதினாலும் சரி, எழுதாவிட்டாலும் சரி, என்றுமே நீங்கள் ஒரு நட்சத்திரம்தான்
நட்புடன்
SP.VR.சுப்பையா

மஞ்சூர் ராசா சொன்னது…

இணையத்தில் தமிழுக்காக பாடுப்பட்ட நண்பர்கள் மூவரும் இன்று நம்முடன் இல்லாதது பேரிழப்பு என்பதில் சந்தேகம் இல்லை.

உமர் அவர்கள் மிகவும் ஈடுப்பாட்டுடன் செய்த பணியை பாராட்ட வார்த்தைகளில்லை.

இளவஞ்சி சொன்னது…

வாங்கண்ணே! :)

சுவனப்பிரியன் சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள் திரு காசி அவர்களே!

காசி - Kasi Arumugam சொன்னது…

வெயிலான், திரு, திகழ்மிளிர்,எ.அ.பாலா, :)

சயந்தன், சொன்னா நம்பணும்;)

இஸ்மாயில் கனி, சந்தனமுல்லை, ராஜன் :)

பத்மா, அது ஒரு கனாக்காலம்!

ரவிசங்கர், நன்றி தம்பி ராஜேசுக்கு.எனக்கும் முதலில் பார்த்ததும் ஒண்ணுமே ஓடவில்லை. பல நிமிடம் வெறித்துப் பார்த்துக்கொண்டேயிருந்தேன்!

கோபி, :)

டைனோ, இப்பல்லாம் பைக்கா? எச்.டியா? புல்லட்டா? ஏன் ரெண்டையும் போட்டீங்க?

கொங்குத்தமிழ் மணக்க இடுகை இல்லாமலா? செஞ்சுருவோம்.

சத்யராஜ்குமார், SVS, மஞ்சூர் ராசா, இளவஞ்சி, :)

PENNESWARAN சொன்னது…

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தமிழ் இணையத்தில் அரிய சாதனையை சாத்தியப் படுத்தி இருக்கிறீர்கள். தமிழ்மணத்தைப் பயன்படுத்திக் கொண்டு பயனடைந்த பல்லோரில நானும் ஒருவன். அதற்காக தமிழ் மணத்தையும் உங்களையும் இந்த ஐந்தாம் ஆண்டில் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.

தமிழ்மணம் குறித்த வரலாறு, செய்தியை டெல்லியில் இருந்து வெளிவரும் வடக்கு வாசல் இதழில் வெளியிடும் வண்ணம் புகைப்படங்களுடன் ஒரு அறிமுகக்ட்டுரையை அனுப்ப முடியுமா? வடக்கு வாசல் பற்றிக் கேள்விப்பட்டது இலலை என்றால் எங்கள் இணையதளம் www.vadakkuvaasal.com வருகை தாருங்கள்.

இன்னும் ஒருமுறை மனம் நிறைந்த வாழ்த்துக்கள் காசி ஆறுமுகம்.

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...