ஞாயிறு, டிசம்பர் 23, 2007

அறிவுக்களஞ்சியம் விருது 2008

நண்பர் முனைவர் சேயோனிடமிருந்து வந்த மடல்:

எம்.டி.எஸ். அகடெமி
எண் 4, கிழக்கு மாட வீதி,
மைலாப்பூர்,
சென்னை - 600 004
தொலைபேசி: 044-24951415 செல்பேசி: 9444991415
மின்னஞ்சல்: mtsacademy@yahoo.co.in


அறிவுக்களஞ்சியம் விருது 2008 - இளைஞருக்கான போட்டிகள்

தேசிய இளைஞர் நாளாக அனுசரிக்கப்படும் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு எம்.டி.எஸ். அகடெமி, நேரு யுவ கேந்திரா, இந்திய அரசின் இளைஞர் விவகாரம் & விளையாட்டு அமைச்சகம், சென்னைப் பல்கலைக் கழகத்தின் தேசிய சேவைத் திட்டம் ஆகியோர் இணைந்து அறிவுக்களஞ்சியம் விருது 2008 - இளைஞருக்கான போட்டிகளை நடத்துகின்றனர். 16 வயது முதல் 30 வரையிலான இந்தப் போட்டிகள் சென்னைப் பல்கலைக் கழகத்தில் வரும் ஜனவரி 5-ஆம் நாள் சனிக்கிழமை காலை 10:00 மணியளவில் நடைபெறும்.

உத்தேசமாக 10 விருதுகள் கீழ்க்கண்ட பிரிவுகளில் அளிக்கப்படவிருக்கின்றன.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தியில் பேச்சுப்போட்டி (3 போட்டிகள்)
(தலைப்பு: இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தரின் செய்தி)

தமிழ், ஆங்கிலம், ஹிந்தியில் கட்டுரைப்போட்டி (3 போட்டிகள்)
(தலைப்பு: திருவள்ளுவர் வலியுறுத்தும் வாழ்வியல் நெறிகள்)

தமிழ், ஆங்கிலம், ஹிந்தியில் கவிதைப்போட்டி (3 போட்டிகள்)
(தலைப்பு: மானுடம் போற்றும் மகாத்மா காந்தி)

இசைப்போட்டி (1 போட்டி)
(தலைப்பு:திருக்குறள், திருவள்ளுவர், விவேகானந்தர், மகாத்மா காந்தி பற்றிய பாடல்கள்)

முதல் பரிசு: ருபாய் 2000/- மதிப்புள்ள அறிவு மலர் விருது
இரண்டாம் பரிசு: ருபாய் 1500/- மதிப்புள்ள அறிவுக்கதிர் விருது
மூன்றாம் பரிசு: ருபாய் 1000/- மதிப்புள்ள அறிவுத்தளிர் விருது
நான்காம் பரிசு பரிசு: ருபாய் 700/- மதிப்புள்ள அறிவுத்துளிர் விருது
ஐந்தாம் பரிசு: ருபாய் 500/- மதிப்புள்ள அறிவுப்புதிர் விருது

மேற்குறிப்பிட்ட எல்லாப் (பத்து) போட்டிகளிலும் பங்கேற்று மிக அதிக தரமதிப்பெண் பெறும் இளைஞருக்கு ரூபாய் 3000/- மதிப்புள்ள அறிவுக்களஞ்சியம் விருது 2008 வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும். பங்கேற்க விரும்புவோர் பதிவுக் கட்டணமாக ஒரு போட்டிக்கு ரூபாய் 10/- செலுத்தி மேற்கண்ட முகவரியில் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளவேண்டும்.

அனைவரின் பங்கேற்பையும் ஆதரவையும் வேண்டி,
-முனைவர். சேயோன்,
கௌரவ செயலாளர்.

வெள்ளி, டிசம்பர் 14, 2007

மனிதனுக்கும் விலங்குகளுக்குமான மோதல்கள்



(நான்கு படங்களும் 14-12-2007 தினகரன் கோவைப் பதிப்பிலிருந்து நன்றியுடன் சுடப்பட்டவை)

காட்டு விலங்குகள் தங்கள் வசிப்பிடத்தில் மனிதன் ஊடுருவி அவற்றின் வாழ்வை நெருக்குதலுக்குள்ளாக்குவதைப் பொறுக்கமாட்டாமல் மனிதனுடன் மோத வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை இந்த ஒரு வாரத்தில் கோவை மாவட்டத்தில் நடந்த மூன்று நிகழ்வுகள் உணர்த்துவதாகத் தெரிகின்றது.



ஒரு வாரமாக மதுக்கரை வனப்பகுதியிருந்து வழி தெரியாமலோ, நான்கு யானைகள் இரை/நீர் தேடியோ வன எல்லையிலிருந்து 30-40 கிமீ வரை வெளியே வந்து தங்களுக்கும் பொதுமக்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தி இன்று காலை வரை தங்கள் எல்லைக்குள் போகாமல் அலைந்துகொண்டிருக்கின்றன. இதுவரை இருவரை மிதித்துக் காயப்படுத்தியிருக்கின்றன. கும்கி யானைகளைக் கொண்டு விரட்டியும் வெற்றி கிட்டாமல் நேற்று கோவை மாநகர எல்லைக்குள்ளேயே வந்தும் விட்டன.



வாலபாறையில் தேயிலைத் தோட்டத்திற்கருகில் இரவில் ஒரு 11 வயது சிறுமியை நேற்று முன் தினம் ஒரு சிறுத்தைப் புலி கடித்துக் கொன்றுவிட்டது. வால்பாறை பகுதியில் யானைக் கூட்டம் குடியிருப்புகளுக்குள்ளும், தேயிலைத் தோட்டங்களுக்குள்ளும் புகுந்து சேதம் விளைவிப்பது அடிக்கடி நடக்கிறது.



'அமராவதி ஆற்றில் முதலைகள்' என்று செய்திகள் வந்தாலும் (சென்ற மாதம் போனபோது ஆற்றுக்குள் இறங்கி பாறைகள் மேல் அமர்ந்து இளைப்பாறும்போதும் பயம் இருந்தது) இன்று படத்துடன் செய்தி வந்திருக் கிறது. சாதாரணமாக குளிக்க துணி துவைக்க ஆற்றுக்குப் போகும் மக்கள் இதனால் பீதியடையவும் வாய்ப்பிருக்கிறது.

மனிதன் அனாவசியமாக விலங்குகளோடு மோதுகிறானோ? இல்லை, விலங்குகள் தான் தன் வரம்பை மீறி மனிதனோடு விளையாடுகின்றனவோ?

(இது சம்பந்தமாக பத்திரிகைச் செய்தியிலிருந்து படங்கள் சுட்டுப் போடநினைத்தேன் இப்போது முடியவில்லை. மாலையில் முயற்சிக்கிறேன்) சுட்டாச்சு போட்டாச்சு.

செவ்வாய், டிசம்பர் 04, 2007

ஒன்பது ரூபாய் நோட்டு - சில எண்ணங்கள்

இது முழுமையான விமர்சனமல்ல. படத்தைப் பார்த்ததும் தோன்றிய சில கோர்வையற்ற எண்ணங்களின் தொகுப்பே.
  • படத்துக்கும் பெயருக்கும் என்ன சம்பந்தம் என்று விளங்கவில்லை. (இது அறிவுஜீவிக்காத சாதாஜீவிங்கோ)
  • சத்யராஜின் நடிப்பு மிக இயல்பாக இருக்கிறது. மனிதர் விருதுக்குத் தயாராகி வருகிறார்.
  • சத்யராஜ் உள்பட இன்னும் பலரின் பேச்சு வழக்கு சரியான கடலூர் வட்டார வழக்காகத் தெரியவில்லை.
  • அர்ச்சனா அடிக்கடி ஆங்காரமாய் அலறுவது எரிச்சலாயிருக்கிறது. எங்கள் பின் இருக்கையிலிருந்தவர்கள் அடுத்த முறை அர்ச்சனா எழும்போதே கூடக் குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்
  • இரண்டாம் நாள், சனி இரவுக் காட்சிக்கே சிறிய தர்சனா தியேட்டரில் இருக்கைகள் காலி என்பது வரவேற்புக் குறைவைக் காட்டுகிறது
  • எல்லாருமே ரொம்பப் பேசுகிறார்கள். 'ஒளி ஓவியர்' பேச்சைக் குறைத்து விசுவல்களை அதிகம் பயன்படுத்தவேண்டாமா?
  • எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று என்னால் படத்துடன் ஒன்ற இயலாமல் செய்கிறது. வெயில், காதல் அளவுக்கு உணர்ச்சிகரமாக இல்லை.
  • நினைத்தது போலவே, மகனுக்கும் மகளுக்கும் பிடித்திருக்காது. கூட்டிவராதது நல்லதாய்ப் போயிற்று. அவர்கள் அப்பச்சியுடன் அழுகிய தமிழ்மகனை சந்தோசமாகப் பார்த்துவிட்டுப் போய்விட்டார்கள்.
இலவச விளம்பரம்: இதே பெயரில் ரொம்ப நாள் முன் செய்த உப்புமா.

புதன், நவம்பர் 14, 2007

புனித பிம்ப தமாஷ்!

பரண் என்று ஒன்று தமிழ்மணத்தில் இடதுபுறமாக சாத்தி வைக்கப்பட்டிருக்கிறது. யார் பார்க்கிறார்களோ இல்லையோ பழைய பெருச்சாளியான நான் அவ்வப்போது பார்ப்பேன். நடந்ததை அசைபோடுவது வயசான காலத்தில் நல்ல பொழுதுபோக்கல்லவா? :P

இன்று அதில் பார்த்த ஒன்று பயங்கர சிரிப்பை வரவழைத்தது பத்ரி சேஷாத்ரியின் கருத்துச் சுதந்தரம் என்ற இடுகைதான் அது. அதில் பத்ரி (மறுமொழி மட்டுறுத்தல் ஆசான்:), இவர் சொல்லபோய்த்தான் ப்ளாக்கரின் புதுசாய் அந்த வசதி வந்தது எனக்குத் தெரிந்தது, அதுக்குமுன்பே அது இருந்ததுபோலவும் நாங்கள் தான் ஒளித்துவைத்தது மாதிரியும் இன்னொரு கோஷ்டி சொல்லிக்கொண்டிருப்பது வேறுகதை) தன் மட்டுறுத்தல் கொள்கைகளாக அப்போது இவர் அறிவித்தது:
கருத்து ரீதியாக நான் செய்யப்போவது (இப்போதைக்கு) இதுதான்:

  1. spam, தேவையற்ற வெட்டி விளம்பரங்கள் ஆகியவை வெட்டப்படும்.
  2. மூன்றாவது மனிதர்களை (என்னை அல்ல) பற்றி ஒருவர் எழுதும்போது defamation/libel என்று நான் அதைக் கருதினால் அதனை வெளியிட மாட்டேன்.
  3. என்னைப் பற்றி எந்த விமரிசனத்தையும் வெட்டமாட்டேன் - ஆனால் கீழ்த்தரமான "கெட்ட" வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டால் அதை வெட்டுவேனா மாட்டேனா என்று இன்னமும் யோசிக்கவில்லை.
  4. ஒரு பதிவுக்குச் சம்பந்தமற்ற பின்னூட்டங்களையும் ஏற்றுக்கொள்ளப்போகிறேன்.

இவைதான் இப்பொழுதைக்கு...

அக்டோபர் 2005-ல் தமிழ் வலைப்பதிவர்கள் என்ற பெயரில் இயங்கிய சிலர் (ஏம்ப்பா, ஒரு தொழில்நுட்பப் பிரச்னையால சில பதிவுகளை தற்காலிகமான நீக்குனதுக்கு என்னமோ வலைப்பதிவுலகமே இருண்டு போனாமாரி கூவுனீங்களே, அந்தச் சிலரில் ஒரு டிக்கிட்டுங்கூட இன்னிக்கு பதிவுலகிலேயே காணமே, அட தமிழ்மணத்தை வுடு, தமிழ் வலைப்பதிவு உலகிலேயே காணமே, அதைக் கேக்குறேன். இதில் வேற நடுவுநிலை வியாக்கியானம் பேசிட்டு ரெண்டு நல்லவங்க வேற வீரப்பா இருந்துட்டாங்க, இன்னிக்கும் அவங்க வீம்பே அவங்களை நீரோட்டத்தில் சேரவிடாமத் தடுக்குது, ம், நல்லவங்க, வாழ்க:) ) என்னைச் சூழ்ந்து தர்ம அடி போட்டபோது என்னால் யாருக்கும் பதில் தர நேரமோ, பொறுமையோ, மனநிலையோ வாய்க்கவில்லை.
அப்போது நடுநிலைவியாதிகள் வேசம் போட்டுக்கொண்டிருந்த முக்கால்வாசி பதிவர்கள் 'எங்கேயோ மழை பெய்யுது, எங்கேயோ காத்தடிக்குது' என்ற மோன நிலையில் இருந்தார்கள்.

சில வாரங்களுக்கு முன் பரண்மூலம் அன்று நடந்த கூத்துக்களையெல்லாம் இன்று படித்து ரசித்து சில பதிவுகளில் என் மறுமொழியையும் இட்டுக்கொண்டிருந்தேன். அப்போதுதான் பத்ரியின் தமிழ் வலைப்பதிவர்களுக்கு சில ஆலோசனைகள் (இதற்கு அவர் முதலில் வைத்த தலைப்பு '... சில அறிவிப்புகள்', அது என் 'அறிவிப்பு' இடுகைகளைக் கிண்டல் செய்ய விரும்பி, பிறகு அப்பட்டமாக எழுதினால் தன் புனித பிம்பத்துக்கு பங்கம் வந்துவிடுமோ என்று எண்ணி இப்படி மாத்தீட்டாருன்னு இப்ப புரியுது, எளவு, அன்னிக்குப் புரியலை! ஆதாரம்: இன்னும் தமிழ்மணம் தரவுத்தளத்திலுள்ள தலைப்பு '...அறிவிப்புகள்'தான், இதுபற்றிய என் மறுமொழியையும் பார்க்கலாம்.)

அதில் முதல் வாக்கியம்: 'இது தமிழ்மணம் பற்றிய பதிவல்ல:-)'

இன்றைக்கு இவங்க அரசியல் எல்லாம் புரிந்துவிட்டதால், இதை விட்டுவிட மனமில்லாமல் ஒரு கேள்வி கேட்டேன்: 'ஊர் உலகத்தில் நடப்பதைப்பற்றியெல்லாம் எழுதுபவருக்கு தன்னைச்சுற்றி நடப்பதைப் பற்றி எழுத ஒண்ணுமில்லையா? நல்லாருக்கு உங்கள் பரந்த பார்வை' (இந்தாளு இதைக்கூட நிறுத்தி வைப்பாருன்னு தோணாம அதை சேமிச்சுக்கூட வைக்காமப் போயிட்டேன்!)

அதுக்கு முன் வேறு இடுகைக்கு நான் எழுதிய மறுமொழிகள் உடனுக்குடன் மட்டுறுத்தப்பட இது மட்டும் பலநாள் கிடந்தது. இன்னொருமுறையும் எழுதிக் கேட்டேன். ம்ஹும். பெட்டி பூட்டுனது பூட்டுனதுதான்.

இதில் என்ன தனிமனிதத் தாக்குதல், என்ன 'கீழ்த்தரமான கெட்ட வார்த்தைகள்', ஒரு எளவும் புரியலே!

புனித பிம்ப .சிருகள் வாழ்க!

டிஸ்கி:
1. 'நான் இதுவரைக்கும் 900 கமெண்டு போருக்கேன் சார்வாள் ஒண்ணையும் நிறுத்தலை, தங்கம்'னு சர்டிபிகேட் கொடுக்கறவங்க அப்பீட்டாகிக்குங்க. இங்க, வராததைப் பத்தி மட்டும்தான் பேச்சு.
2. 'இங்கே மட்டும் மட்டுறுத்த மாட்டியா, எல்லாம் போடுவியா?'ன்னு கேக்கறவங்களுக்கு 'ராசா, இது ஒரு *சர்வாதிகார*, *த..க் கம்மனாட்டியின்* வலைப்பதிவு, இங்க நான் வெச்சதுதான் சட்டம், இஷ்டமிருந்தா எழுது இல்லாட்டிப் போயிட்டே இரு'ங்கறதுதான் பதில்.
3. சாரைப் பத்தி அறிவுத்திருட்டு அது இதுன்னு எழுதி ஒய்ஞ்சவங்க எதுனா இங்க வந்து கும்முனா, 'அது என்னோட சட்ட அறிவுக்குட்பட்டே மட்டுறுத்தப்படும், எதுக்கும் நான் கியாரண்டி இல்லை'ங்கைறதையும் சொல்லிடறேன்.
4. 'பட்டறை மேளாவுல பலரும் பேசுனதையெல்லாம் வலையேத்துனவர் என் உளறலை ஏன் ஏத்தலைங்கற காண்டுலதான் கரிக்க்கிறான் வயத்தெரிச்சல் புடிச்சபய'ன்னாலும், 'ஆமா அப்படின்னே வெச்சுக்க, இப்ப அதுல என்ன தப்புங்கறேன்'ன்னு இப்பவே கேட்டுக்கர்றேன். அதுமட்டுமில்ல, இந்தியா டுடே போட்டாவிலிருந்து, ரிப்போர்ட்டர்ல எம் பொண்டாட்டி சொன்னதா அவனவன் விருப்பத்தை எளுதிக்கிட்டதிருந்து, சிஎன்என் ஐபிஎன் சன் டிவி விடியோவில் தமிழ்மணப் பக்கத்தையே காமிச்சுங்கூட தமிழ்மணம்க்கிற லோகோ வராமப் பாத்துகிட்ட கதையெல்லாம் வெளிவரும், கபார்தார்!

மக்களே, கடைசியா, சார் எழுதறதெல்லாம் 'politically very correct', ஆனா நான் சொல்லிக்கறது 'people, be alert!'

திங்கள், நவம்பர் 12, 2007

சோதனைக்கு எலிகள் தேவை (தமிழ் எலிகள்!)

பயந்துடாதீங்க மக்களே :)

செல்போனில் முதலில் தமிழைக் 'கண்டுபிடித்து' செல் தமிழ் ஆசான் பட்டத்தைப் பெற்றதும் ('யாரு கொடுத்தா எங்க'ன்னெல்லாம் கேக்கப்படாது ஆமா:P) ) கை துருதுருன்னு இருக்குதுங்க. ('அட இரும்பு புடிச்சவன் கையே, அது துறுதுறு'!ன்னு மனசாட்சி சொல்லுதுங்கோ)

இதில் தமிழில் குறுஞ்செய்தி கோர்த்து அனுப்பினால் யுனிகோடாகவே போகிறதா, பெறுபவர் போனில் யுனிகோடு உடைகிறதா உடையவில்லையா என்றெல்லாம் யோசனையாகவே இருந்ததுங்க. உடனே எனக்கே ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன், அது சரியாகவே தெரிந்தது. பத்தாயிரம் ரூபாய் போன் வைத்துள்ள என் நண்பருக்கு அனுப்பினேன் கட்டம் கட்டமாகத் தெரிகிறது.

இப்ப நான் கேட்பது, உங்களில் யாருக்கேனும் இதில் ஆர்வமிருந்தால் உங்கள் இந்திய செல் எண் கொடுத்தால் நான் தமிழில் குறுஞ்செய்தி அனுப்பி சோதிக்க விரும்புகிறேன். எற்கனவே முத்து நெடுமாறனின் செல்லினம் போன்ற பல ஜாவா செயலிகள் மூலமாக தமிழ் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி இருந்தாலும், மேலதிக கருவி/சேவை/பதிவிறக்கம் ஏதும் இல்லாமல் தமிழில் அனுப்பப்படும் முதல் குறுஞ்செய்தியைப் பெற உங்களை அழைக்கிறேன். குறுஞ்செய்தி செலுத்திய கோமகன் பட்டத்தை யாராவது பிடித்துக்கொள்ளுமுன் அதைப் பிடிக்க வேண்டாமா? என்ன குறுஞ்செய்தி ஏற்ற குலக்கொழுந்து பட்டத்துக்கு நீங்க தயாரா?

இங்கேயோ தனி மடலிலோ செல் எண்ணைத் தரலாம். அஞ்சல்: akaasi (at) gmail (dot) com

ஞாயிறு, நவம்பர் 11, 2007

சத்தமில்லாமல் ஒரு புரட்சி: செல்பேசிகளில் யுனிகோடு தமிழ்



சில வாரங்களுக்கு முன் என் சோனி எரிக்சன் செல்பேசியிலிருந்து நோக்கியாவிற்கு மாறிக்கொள்ள எண்ணம் பிறந்தது. வீடு, பணியகம் இரண்டிலுமே சமிக்ஞை சரியாகக் கிடைக்காத பிரச்னையால் பல மாதங்கள் அவதிப்பட்டபின் இயல்பாக எலக்ரானிக்ஸ் பொடிஜாமான்களில் சோனிக்கு பெரிய பிரமுகர் அந்தஸ்து;-) இருப்பதை உணர்ந்திருந்தும் இந்தியாவில் செல்பேசித்துறையில் நோக்கியாவின் அனுபவம் அதிம் என்பதால் நோக்கியாவை ஒருமுறை பாவித்து நோக்கியாவது பாவப்பட்ட என் செல் தொடர்பை மேம்படுத்திக்கொள்ள ஆசைப்பட்டு நோக்கியா 2630 என்ற கைக்கு அடக்கமான பைக்கு லகுவான (66 கிராம் எடை) ஒரு போனை வாங்கினேன்.

ஏற்கனவே மின்னஞ்சலை செல்பேசியில் பார்க்க ஆசைப்பட்டு மாசம் 49 ரூபாய் என்ற தொடக்க நிலை ஜிபிஆரெஸ் சேவைக்கு பிஎஸென்னெல் சந்தா கட்டியும் அதை என் பழைய போனில் சரியாக பயன்படுத்தவில்லை. இதிலாவது சரியாக அமைப்பிக்கலாம் என்று ஆசைப்பட்டு கொஞ்சம் போராடி, பின் ஜிமெயில் அப்ளிகேசனை இறக்கியும் அது சரியாக வேலை செய்யாமல் போக, பின் இந்த நேரடி முகவரியில் முயற்சிக்கவே அது வேலை செய்ய ஆரம்பித்துவிட்டதும் ஆஹா, ஒரே ஜாலிதான் போங்க.

ஜிமெயிலில் வந்த தமிழ் யுனிகோடு செய்திகளும் அருமையாகத் தெரிவது எனக்கு நம்ப முடியாத ஆச்சரியம்! பிறகுதான் வழக்கமான நோண்டல் ஆரம்பம். நம் வலைப்பதிவுகள் எப்படித் தெரியும் என்று பார்க்க ஆசைப்பட்டு எனக்கு மிகவும் பிடித்த தங்கமணியின் வலையைத் திறந்து பார்க்க, அட... அட... அட... ஆனந்தம் போங்க. பக்கங்கள் எல்லாம் தெளிவாத் தெரியுது! கீழே பாருங்க.




இந்த வகை செல்பேசிகளில் யுனிகோடு எழுத்துரு (Unicode font), யுனிகோடு திரைஎழுதி (rendering engine-equivalent to uniscribe in MS) மற்றும் யுனிகோடு உள்ளிட செலுத்தி(input driver) ஆக மூன்று அடிப்படை அம்சங்களும் வாங்கும்போதே நிறுவப்பட்டு வருகின்றன. மேசைக்கணினி/ மடிக்கணினிகளிலேயே தமிழ் உள்ளிட்ட மக்கள் மொழிகளுக்கான அனுசரணை சரிவர நிறுவப்பட்டு விற்கப்படாத நிலையில், செல்பேசியில் சத்தமிலாமல் இது நடந்து வருவதைக் காண மகிழ்வாய் இருக்கிறது.

(இதைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் மூடிக்கிடந்த இந்தப் பக்கங்களுக்கு உயிருட்டுகிறேன். இனி வாரம் ஒருமுறையாவது எழுதுவேன்)

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...