வியாழன், ஜனவரி 15, 2004

வலைப்பூ - சில சிந்தனைகள்

கடந்த சில நாட்களாக என் வலைப்பதிவில் வாழ்க்கைக்கதை மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, இதை குழாய்த்தண்ணீரைப்போல விட்டுவிட்டு எழுத விருப்பம் இல்லை. இரண்டு, எனக்கு நியூக்ளியஸ் மென்கலம் சம்பந்தமான சோதனைகளுக்கு நிறைய நேரம் செலவிடவேண்டி இருக்கிறது.

இருந்தாலும், நம் தமிழ் வலைப்பதிவுகள் சஞ்சிகையான வலைப்பூ பற்றி எனக்கு சில கருத்துகள் தோன்றியது, அதை இங்கு பதிக்கலாம் என்று எண்ணம்.

இதன் முக்கிய நோக்கமாக நான் கருதுவது:எல்லாராலும் 100 வலைப்பதிவுகளுக்கும் போய்ப் படிக்க முடியாதாகையால், இந்த வலைப்பூ ஆசிரியர்கள் கொஞ்சம் மெனக்கெட்டுத் தேடி, அந்த வாரம் பதிவான விஷயங்களில் குறிப்பிடத்தகுந்ததை எடுத்துக் காட்டலாம். கூடவே அந்த வார ஆசிரியரைப்பற்றி, அவர் ரசித்த மற்ற விஷயங்களைப்பற்றியும் கோடி காட்டலாம். இதுகூட, தனியே வலைப்பதிவு செய்யாத ஆசிரியருக்கே பொருத்தமாக இருக்கும்.

முதலில் வந்த ஆசிரியர்கள் கிட்டத்தட்ட இப்படித்தான் செய்தார்கள். ஆனால் கடந்த சில வாரங்களில் இந்த பாணி மாறிக்கொண்டே வருவதாக ஒரு தோற்றம். இன்னொன்றும் சொல்லலாம், கிட்டத்தட்ட ஒரு மாதம் ஒருவர் வலைப்பதிவு செய்யும் அளவுக்கு விஷயங்களை இந்த ஒரு வாரத்தில் தந்து அஜீர்ணம் ஆக வைத்துவிடுவதுபோலவும் தோன்றுகிறது.

இதில் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. எல்லாருக்கும் பிடித்திருந்தால் இப்படியே தொடர்வதில் தப்பில்லை.

புதன், ஜனவரி 14, 2004

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 7

கோவை போனபின், வாழ வழியற்ற பெண்கள் நிறையப்பேருக்குக் கைகொடுக்கும் இட்லிக்கடை அம்மாவுக்கும் கைகொடுத்தது. அலுவலகம் ஒன்றில் வெள்ளைச்சட்டை வேலை பார்க்கும் என் மாமாவுக்குத் தன் வீட்டு வாசலில் இட்லிக்கடை என்பது கொஞ்சம் கௌரவக்குறைவாய் இருந்ததால், அம்மா பக்கத்திலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதன் வாசலில் கடை நடத்தினார். ஓரளவுக்கு இது நன்றாகப் போனது, எனவே அம்மாவால் யாருக்கும் சுமை இல்லை என்கிற அளவில் நாட்கள் நகர்ந்தன.

என்னதான் பெரிய கொள்கைகளோடு அரசாங்கங்கள் திட்டம் போட்டாலும், அதை நடைமுறைப்படுத்தும் போது வரும் சிக்கல்கள், திட்டத்தின் போக்கையே மாற்றிவிடுகின்றனவே. பெரியப்பாவின் திட்டம் ஆமைவேகத்தில் போகும்போது, பெரியம்மாவின் திட்டு முயல்வேகத்தில் ஓடி, மூன்று மாதத்துக்குப் பின் எனக்கும் அடுத்த இடம் தேடவேண்டி ஆனது. பொறுத்துக் கொண்டுதான் இருந்தேன், ஆனால், ஒரு ப்ரேக்-பாயின்ட் வந்தது. அங்கே இருக்க விடுத்த அழைப்பு திருப்பி எடுத்துக் கொள்ளப்பட்டது. இன்னும் ஒரு ஏழெட்டு மாதம்தான், அதற்குப்பின் பத்தாவது பரீட்சை முடிந்துவிடும், அப்புறம் என்ன படிப்பேன், எங்கே படிப்பேன், ஒன்றும் தெரியாது. ஆனால் அதற்குள் இந்த நிகழ்வு. இந்த எட்டுமாதம் பொடியனுக்கு எங்கு இடம் கிடைக்கும்? அழுதுகொண்டு கோவைக்குப் போனேன். அம்மாவிடம் விஷயத்தைச் சொன்னதும், எனக்குத் திட்டு விழும் என்று பயந்தேன். 'அழுகாதீடா, மலை போல மனுசனே போயிட்டாரு, இனி இதெல்லாம் என்ன..' என்று சொன்ன நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் உள்ளே இருந்த உரமேறிப்போன நெஞ்சை உணர்த்தின.

ஆனாலும், இன்னும் எட்டு மாதத்திற்கு எங்கே தங்கப் போகிறேன் என்பதை நினைத்துப் பார்த்தால் ஒரே இருட்டாய் இருந்தது. அந்த இருட்டிலிருந்து எனக்கு ஒளிகொடுத்தவர் என் சின்ன அம்மச்சி, (அம்மாவின் அம்மாவின் தங்கை.) அவரொன்றும் வசதியானவரில்லை, அங்கும் மாதாமாதாம் சம்பளம் கொண்டுவந்து யாரும் கொட்டுவது கிடையாது. நானும் அவரின் நேரடிப் பேரன் கிடையாது. ஆனால், அவரும் அம்மாவுக்குப் புதிதாய்க் கிடைத்த வெள்ளைப்புடவைப் பரிசை ஏற்கனவே பெற்றுவிட்ட பாட்டாளி. ஆறு மக்களுடன் தனியாய் நின்று, போராடி நிமிர்ந்துகொண்டிருப்பவர். அவரின் நன்றாகப் படிக்கக்கூடிய ஒரு மகனும் என் அண்ணனைப்போலவே பள்ளியிறுதிக்குமேல் படிக்க முடியாமல் பலவேலைகளுக்குப் போய்க் கஷ்டப்படுவதும் என் மேல் பரிவு வரக் காரணமாயிருக்கலாம். ஆனால் அவர் கொடுத்த ஆதரவு, அந்தச் சமயத்தில் கோடி ரூபாய்க்குச் சமம்.

அவர் இருப்பது பொள்ளாச்சியில் இருந்து 16கி.மீ. தள்ளி, புதுப்பாளையம் கிராமம். ஆனால், அங்கிருந்து டவுன் பஸ் வசதி ஓரளவுக்கு இருந்தது. சந்தை நாட்களில் மாலையில் பொள்ளாச்சியில் இருந்து பஸ் ஏறுவதற்குள் பெரிய பாடாகிவிடும். ஒரு மாமன் அங்கேயே தனிக்குடித்தனம் இருந்தார். இன்னும் மூன்றுபேர் வேறு இடத்தில் இருந்தார்கள். அங்கு மின்சாரவசதியும் கிடையாது. அது ஒரு பெரிய பிரச்னையாய் இல்லை. புதுப்பாளையத்தில் இருந்த எட்டு மாதங்களும் எந்த முகச்சுளிப்பும் இல்லாமல், காலையில் 7 மணிக்கெல்லாம் எனக்கு சமையல்செய்து சாப்பிடவும் கொண்டுபோகவும் கொடுத்துவிடும் அம்மச்சி. இத்தனைக்கும் அவரும் காட்டு வேலைக்குப் போகவேண்டும். பஸ்ஸுக்கு மட்டும் அம்மா பணம் கொடுத்துவிடும். மற்றபடி என்னைத் தன் சொந்தப் பேரனைவிடப் பார்த்துகொண்டார் அம்மச்சி.

செவ்வாய், ஜனவரி 13, 2004

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 6

அது எமர்ஜென்சியின் இறுதிக் காலம். அப்பாவுக்கு அரசியலில் ஆர்வம் இருந்தது. சித்தூரில் கிடைத்ததை விட அதிகமான செய்தித்தாள்கள் தினமும் நூலகத்தில் மாலையில் படிப்பது, வேலையிடத்தில் தோழர்களுடன் விவாதிப்பது போன்றவற்றால் இங்கு வந்தபின் ஈடுபாடு இன்னும் அதிகரித்தது. 1977 மார்ச்சில் தேர்தல் அறிவிக்கப்பட, பொதுக்கூட்டங்கள் நிறைய நடந்தன. சில முறை நானும்கூட அவருடன் போயிருக்கிறேன். தேர்தல் நாள் நெருங்கியது. சித்தூர் வாக்காளர் பட்டியலில்தான் இன்னும் பெயர் இருந்தது. எனவே தன் வாக்கைப் பதிவுசெய்யவும், பழைய நண்பர்களையெல்லாம் பார்த்துவரலாம் என்றும் சித்தூருக்கு தேர்தல் நாளன்று சென்றுவந்தார்.

அடுத்த நாள் நான் பள்ளியிலிருந்து வரும்போது வீட்டில் உடம்புக்கு சரியில்லை என்று படுத்திருந்தார். அன்னேரத்துக்கு அவர் வீட்டுக்கு வந்து நான் பார்த்ததில்லை. அப்புறம்தான் தெரிந்தது, வேலை செய்யும் இடத்திலேயே வாந்தி எடுத்து மயங்கி விழ, அவர்கள் தான் வீட்டில் கொண்டுவந்து விட்டிருக்கிறார்கள். பிறகு நடந்தது எதுவும் கோர்வையாக நினைவில்லை.

பொள்ளாச்சி பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆக்ஸிஜன் உதவியெல்லாம் கொடுத்து, நினைவில்லாமல் கிடந்தார். அதிகம் கோயிலுக்கெல்லாம் போகாத நானும் அம்மாவுடன் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்குப் போனது நினைவிருக்கிறது. அம்மா முகத்தில் சோகம் அப்பியிருந்தது. நான் சாமியிடம் ஒரு டீல் போட்டுக்கொண்டேன். 'சாமி, எங்கப்பாவுக்கு ஒண்ணும் ஆகாம சரி பண்ணிட்டீன்னா, இனிமே உன்னைக் கும்பிடறேன், நிந்திக்க மாட்டேன்'னு. ஆனால் சாமிக்கு அதில் ஒண்ணும் பெரிய ஆர்வமில்லை என்பது தெரிந்தது. அப்பா மூன்றாம் நாள் காலமாகிவிட்டார். ஃபுட் பாய்சனிங், சித்தூர் நண்பர்களுடன் சாப்பிட்ட நாட்டுச்சரக்கில் கோளாறு, முன் விரோதம் காரணமான சதி, இதில் ஏதோ ஒன்று, இது தான் காரணம் என்று இன்று வரை தெரியாது.

'ஒருவழியாக நம் சோகத்துக்கெல்லாம் விடிவு பிறந்துவிட்டது' என்று கடந்த பத்து மாதங்களாக விட்ட நிம்மதிப் பெருமூச்சு காற்றில் கரைந்தது. 'சம்பாதித்து, உட்காரவைத்து சோறு போடாவிட்டாலும், கணவன், குடும்பத்தலைவன் என்று பெருமையுடன், பாதுகாப்புடன் இருக்க முடிந்ததே, இனி அதற்கும் வழி இல்லையே', என்று அம்மா அரற்றி, அழுதது நினைவில் இருக்கிறது. இப்படி பலிகொடுப்பதற்கா ஊரைவிட்டு வந்தோம்? இனி என்ன வழி? ஏன் நமக்கு மட்டும் எல்லாம் இப்படி எல்லாமே எதிராகவே வேலை செய்கிறது? இங்கேயே இருப்பதா? இங்கு யாரைத்தெரியும், என்ன செய்ய முடியும்? கேள்விகள், கேள்விகள்..விடை தெரியாக் கேள்விகள்!

அண்ணனுக்கு இன்னு பத்து நாளில் எஸ். எஸ். எல். சி. பொதுத்தேர்வு. 'எப்படி எழுதப்போகிறான்' என்று அனைவரும் பரிதாபப் பட்டனர். அதற்கடுத்து என் ஒன்பதாவது முழுப்பரீட்சை. இரண்டும் முடிந்ததும், அனைவரும் கோட்டாம்பட்டிக்கு விடை சொல்லி, மாமன்மார் ஆதரவில் மேலும் எப்படியாவது எதையாவது செய்யலாம் என்று கோவைக்குப் பயணம் ஆனோம். சித்தூருக்குத் திரும்பிப் போக மனமில்லை. என் படிப்பு மேலும் தொடரவேண்டுமானால், அங்கே போய் பயனில்லை. அண்ணனுக்கு அப்பா வேலை பார்த்த இடத்திலேயே ஏதாவது வேலைக்கு முயற்சிக்கலாம் என்றும் ஆலோசனை கிடைத்தது. அப்பா அங்கே சம்பாதித்து வைத்திருந்த நல்ல பெயர் கொஞ்சம் நம்பிக்கையளித்தது. அதுவரை, கிடைத்த வேலையை செய்துகொண்டு அங்கேயே அண்ணன் இருப்பது என்று முடிவானது.

நாங்கள் வசித்த வீட்டருகிலேயே திண்ணையில் இலவசமாய்த் தங்கிக்கொள்ள பெரிய மனதுள்ளவர்கள் அண்ணனுக்கு இடம் கொடுத்தார்கள். அது ஒரு புகையிலைக் குடோன். எனவே கொஞ்சம் சுறுசுறுவென்று மூக்கை உறுத்தும், தும்மல் போடும். ஆனால் அதை விட்டால் வேறு வழியில்லை. அம்மாவுடன் கோவைக்குப் போனாலும் என்னைத் தன் வீட்டில் வைத்துக்கொள்ள என் பெரியப்பா முன்வந்ததால், கோடை விடுமுறைக்குப் பின் நான் மீண்டும் பொள்ளாச்சிக்கே வந்துவிட்டேன். பெரியப்பாவுக்கு என்னை விட ஒருவயது மூத்த மகன். கொஞ்சம் படிப்பில் மந்தம், நான் அங்கே இருந்தால் அவனுக்கும் படிப்புக்கு ஒரு தூண்டுகோலாய் இருக்கும் என்ற எண்ணமும் கூட.

மூவரும் மூன்று இடமாய் சிதறிப்போனோம்.

திங்கள், ஜனவரி 12, 2004

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 5

பொள்ளாச்சி போனபின்னும் அம்மா வேஸ்ட்காட்டன் மில் ஒன்றில் பஞ்சிலிருந்து கொட்டை, குப்பையெல்லாம் பொறுக்கி சுத்தம் பண்ணும் வேலைக்குப் போனார். நிழலில் உட்கார்ந்து செய்யும் வேலை. பெரிய குடோனில் வரிசையாய்ப் பெண்கள் தரையில் உட்கார்ந்து வேலை செய்வதைப் பார்த்தால் ஏதோ கல்யாணத்தில் பந்தி வழங்குகிறார்களோ என்று எண்ணத் தோன்றும்.

புதிய இடமாதலால் கோட்டாம்பட்டியில் அப்பாவுக்கும் வெட்டி நண்பர்கள் இல்லை. ஒன்றுக்கு இரண்டாய் இருந்த நூலகங்கள் எங்கள் மாலை நேரங்களைப் பயனுள்ளதாக்கின. அங்கே என் பள்ளித்தோழன் பாபுவுக்கு ஒரு ட்யூஷன் மாஸ்டர். அவரை பாபுதான் போய் அழைத்து வருவான், கொண்டுபோய் விடுவான். ஏனென்றால் அவர் முகத்திரண்டு கண்ணில்லாதவர். பிறகு எப்படி பாபுவுக்கும் அவன் தம்பிக்கும் பாடம் சொல்லிக்கொடுப்பார்? ஒரே முறை இவர்கள் தங்கள் பாடத்தை அவருக்குப் படித்துக் காண்பித்தால் போதும், பிறகு, அங்கேயும் ஹார்ட் டிஸ்க் கெட்டி, கப்பென்று வாங்கி ரைட்-ப்ரொடெக்ஷன் போட்டு உட்கார வைத்துக்கொள்ளும். மனிதன்தான் எப்பேற்பட்ட இயந்திரம்! ஒரு சென்சார் வேலை செய்யவில்லையென்றால் வேறொன்று எவ்வளவு எளிதில் கூடுதல் பொறுப்பேற்கிறது! அவர் காட்டியதுதான் பள்ளிப்படிப்புக்கு மேல் என்ன படிக்கலாம் என்ற வழி. அண்ணன் அப்போது எஸ்.எஸ்.எல்.சி. 'அது முடிந்ததும் பி.யு.சி. படிக்கவேண்டாம், பாலிடெக்னிக்கில் பி.டி.சி. படிக்கச்சொல்லுங்கள். பிறகு முடிந்தால் பி.இ. இல்லையென்றால் டிப்ளமா... வேலை எளிதில் கிடைக்கும்' என்ற மந்திர உபதேசம். ஆனால் அந்த உபதேசத்தை பயன்படுத்திக் கொள்ள அண்ணனுக்குப் கொடுத்துவைக்கவில்லை, அதற்கு அடுத்த வருஷம் தம்பிக்குப் பயன்பட்டது.

கால்பரீட்சை லீவில் சித்தூர் தலைமை ஆசிரியரிடம் இருந்து ஒரு சேதி வந்தது. ஒவ்வொரு பள்ளியிலும் எட்டாம் வகுப்பில் பள்ளியில் முதல் இரண்டு இடம் பெறும் மாணவர்களை சேர்த்து, ஊராட்சி ஒன்றிய மட்டத்தில் இன்னொரு தேர்வு வைத்து அதில் தேறுபவர்களுக்கு மெரிட் ஸ்காலர்ஷிப் என்று ஒன்று கொடுப்பார்கள். அது வருடத்திற்கு 1000 ருபாய் மதிப்புள்ளது. அப்பா பால் மொத்தவியாபரம் செய்யும்போது ஆயிரம் ரெண்டாயிரம் என்று நோட்டுப்புத்தகத்தில் கணக்கெல்லாம் எழுதுவதைப் பார்த்திருக்கிறேன். மற்றபடி ஆயிரம் ரூபாய் அந்தக் கட்டத்தில் பெரிய பணம். எப்படியோ தேர்வு நேரத்துக்குள் தகவல் கிடைத்து 'கல்லு மெத்தை' பள்ளிக்கூடத்தில் போய்ப் பரீட்சையும் எழுதினேன்.

எழுதியது மறந்துபோய் வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பின பின் ஒருநாள் தேர்வான ஓலையும் வந்தது. ஆனந்தமோ ஆனந்தம், ஆனால் அதில் ஒரு சிக்கல். அந்த 1000 ருபாய் ஹாஸ்டல் வசதியுள்ள குறிப்பிட்ட சில பள்ளிகளில் படித்தாலே கிடைக்கும். அதே பள்ளிகளில் வீட்டில் இருந்து படித்தால் வருடத்திற்கு 500 ரூபாய். அதை விடுத்து வேறு எந்தப்பள்ளியில் படித்தாலும் 150 ரூபாய். நான் படித்துக் கொண்டிருந்த மூணுமாடிப் பள்ளி 150 லிஸ்டில் வந்தாலும், நல்லவேளையாகத் தொலைவில் இருந்த கல்லுமெத்தைப் பள்ளி 500 ரூபாய் லிஸ்டில் வந்தது. 'கல்லுமெத்தை' என்ற நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தார்கள். அங்கு வகுப்பாசிரியர் ராஜலட்சுமி டீச்சருக்கு ஏக சந்தோஷம், ஏதோ பெரிய படிப்பாளி கிடைத்துவிட்டான் தன் வகுப்புக்கு என்று. பொடியனைத் தனக்கு நடைத்தோழனாக நியமித்து, தான் மாலையில் தன் வீட்டில் எடுக்கும் ட்யூஷனில் இலவசமாய்ச் சேர்த்தும் கொண்டார்.

இன்னும் விளக்குகள் வரவில்லை, வழிகாட்டிகளே தலை காட்டுகிறார்கள். இன்னும் ஓரிருநாளில் முதல் விளக்கை சந்திக்கலாம்.

சனி, ஜனவரி 10, 2004

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 4


உயர்நிலைப் பள்ளியில்தான் தேர்வெல்லாம் வைத்தார்கள், தொடக்கப் பள்ளியில் தேர்வு ஒன்றுமே நினைவில் இல்லை. கால், அரை, முழு (முக்கால் ஏன் இல்லை?) ஆண்டுத்தேர்வுகளோடு, இடையில் முன்-காலாண்டு, முன்-அரையாண்டு, இப்படி சேர்த்து 6 முறை தேர்வுகள். 'நம் மண்டையில் என்னவோ இருக்கிறது, மேலேதான் எழுத்தெல்லாம் கிறுக்கல், ஆனால் உள்ளே என்னவோ சரியாய்த்தான் இருக்கிறது', என்று உணரவைத்தவை இந்தத் தேர்வுகள். ப்ரோக்ரஸ் ரிப்போர்ட் எல்லாம் உண்டு. அதைக் கொண்டுவந்து அம்மா அப்பாவிடம் காட்டி, 'இதில் இந்த இடத்தில் வரிசையா 1 என்று போட்டிருக்கிறது பாருங்க, அப்படின்னா வகுப்பிலேயே நான் தான் முதல் இடம்', என்று சொல்லும்போது அவர்களுக்குக் கிடைத்த சந்தோஷம், வீதியில் அவ்வப்போது தட்டுப்படும் எட்மாஸ்டர், தாங்கள் ஒன்றும் கேட்காமலே, 'பையன் நல்லாப் படிக்கிறான், எப்படியும் அவன் விருப்பம் போல படிக்க வையுங்க', என்று சொல்லிப் போகும்போது கிடைத்த போதை, இதெல்லாம் தான் 'என்ன சிரமம் வந்தாலும், இவர்கள் படிப்பை நிறுத்தக் கூடாது' என்று வைராக்கியத்தை கொடுத்திருக்க வேண்டும்.

படிப்பு ஒன்றும் சிரமமாகத் தெரியவில்லை. அப்படிப்பட்ட ஆசிரியர்கள் அமைந்தால் எதுவும் எளிதே. புத்தகம் ஒன்றைத்தவிர பெரிதாய் செலவு வைக்க மாட்டார்கள். அதிலும் தமிழாசிரியர்கள்...பெரியவர், சின்னவர் என்று இரண்டுபேர். அதிலும் பெரியவர் வகுப்பு... பிற்காலத்தில் சுகி.சிவம் அவர்கள் டிவியில் பேசிக் கேட்டபோது அப்படியே அவரை நினைவுக்குக் கொண்டுவரும். ஒருமுறை யாரோ ஒரு பையன் செய்யுளுக்கோ, இலக்கணத்துகோ தெரியவில்லை, தேவைப்படும் என்று 'கோனார் தமிழ் உரை'யை டவுனில் இருந்து வாங்கி வந்துவிட்டான். அது அவர் கண்ணில் பட்டதுதான் தாமதம், 'ஏண்டா இதெல்லாம் வாங்கிப் படிக்கறே, அப்ப இங்க நான் ஒருத்தன் என்னத்துக்கு இருக்கிறேன், மொதல்லே அதை வீசி எறிஞ்சிட்டு வா'ன்னு அப்படி ஒரு கோபம்! அவர் அப்படிக் கோபப்பட்டு என்றும் பார்த்ததில்லை.

மாலை பள்ளியில் இருந்து வந்ததும் அண்ணன் பாத்திரம் எல்லாம் கழுவி, விறகுக்கு முள் தரித்து(நறுக்கி) வைக்க வேண்டும். நான் வீடு எல்லாம் கூட்டிப் பெருக்கவேண்டும். பிறகு விளையாட்டுத்தான். ஆனாலும் வீட்டைவிட்டு தூரமாய் எங்கும் விளையாடப் போகக்கூடாது. ஆறு மணிக்கு வீட்டில் லைட்டெல்லாம் போட்டு நடையைத் திறந்துவைக்கவேண்டும் (லட்சுமி வரும் நேரம்!). அதற்குப்பின் தான் கச்சேரியே. 'வினாயகனே வல்வினையே வேரறுக்க வல்லான்..' என்று டூரிங் டாக்கீஸில் பாட்டுச்சத்தம் கேட்டால், வாசலில் கிடக்கும் உரல் சோபாவில் உட்கார்ந்து, ஒவ்வொரு வரியாய் ரசித்து, சத்தம் போட்டுக் கூடப்பாடி...ஏழரையாகும் பாட்டு நிறுத்த. அதுவரைக்கும் நம்ம கச்சேரிதான்.

பிறகு எதையாவது பேசி, சாப்பிட்டு விட்டுத் துங்கப்போகணும், அம்மாவுக்குத்தான் காலையில் சீக்கிரம் எழவேண்டுமே. ஒரு நாளாவது வீட்டில் புத்தகத்தை எடுத்து வைத்துப் படித்ததில்லை. ஒரு வரி எழுதியதும் இல்லை. 'ஏண்டா படிப்பதே இல்லையே?' என்று யாரும் கேட்டதும் இல்லை. 1..1..1 என்ற எண்ணைப் பார்த்தாச்சே. அப்பவே ரிசல்ட்-ஒரியென்டேஷன்:-) வாத்தியார் உள்ளிடுவது அப்படியே ஹார்ட்டிஸ்க்கில் சேமிப்பாகிறது, இடையில் ஃப்ளாப்பி, பேக்கப், ரிஸ்டோர் எல்லாம் எதுக்கு? 'ப்ரின்ட்' என்றால் கடகடவென்று கொட்டப்போகிறது.

இப்படி எட்டாவது வரை கழிந்தது. வழக்கம்போல அந்தக் கோடை விடுமுறையிலும் கோவையில் அம்மச்சி வீட்டுக்குப் போனவன், அங்கிருந்து சித்தூருக்கு வராமல் நேரே பொள்ளாச்சிக்கு வருவேன் என்று நினைத்துப் பார்க்கவேயில்லை. யாரிடமும் சரியாய் சொல்லிக்கொள்ளக் கூட முடியவில்லை. அவ்வளவு சீக்கிரம் அதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் எல்லாரையும் விட அம்மாவுக்குத் தான் இந்த மாற்றத்தில் பெரிய நிம்மதி. கடின உழைப்பில் இருந்து விடுதலை. அப்பாவுக்கு வேலை ஓரளவுக்கு நிரந்தரமானதுபோல ஒரு நிலை. அவருக்கு எட்டரை ரூபாய் கூலி. அதுபோக ஓவர்டைம் உண்டு. எனவே நம் சோகத்துக்கெல்லாம் முடிவு வந்துவிட்டது, என்ற சந்தோஷம் முகத்தில் தெரிய வந்த எங்களை பொள்ளாச்சி எல்லையில் கோட்டாம்பட்டி வரவேற்றது. அங்கே 20 ரூபாய் வாடகையில் ஒரு ஒற்றை அறை வீடு. அந்த வரவேற்புக்கும், கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வந்த போது ஆடி அசைந்து வரவேற்ற(?) கொடிக்கும் இருந்த ஒரு ஒற்றுமை அப்போது யாருக்கும் தெரியவில்லை.

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 3

அப்பா பொள்ளாச்சிக்கு வேலைக்குப் போக ஆரம்பிக்கும் முன்பே அம்மாவுக்கு நல்ல சம்பளத்துக்கு '·பாரின் ஆ·பர்' ஒன்று கிடைத்துவிட்டது. முன்பு வாங்கின சம்பளத்துடன் ஒப்பிட்டால் மூணு நாலு மடங்கு சம்பளம், அது மட்டுமில்லாமல் வேலை செய்தவரைக்கும், திறமையுள்ளவரைக்கும் சம்பாதிக்கலாம், வரம்பில்லா ஊதியம்! ஆண்/பெண் வித்தியாசம் இல்லை, எல்லாருக்கும் ஒரே அளவு அங்கீகாரம்.

ஆனால் அந்த வேலை நடக்குமிடம் சித்தூரிலிருந்து 5-6 கிலோமீட்டர் தூரத்தில், கொண்டம்பட்டி தாண்டிப் போக வேண்டும். 'வன்கலம்' சம்பந்தப்பட்ட வேலையாதலால் கடப்பாரை, மண்வெட்டி, கூடைதான் கருவிகள். 'ஏரி போடுதல்' என்று அழைக்கப்பட்ட அந்த வேலையின் 'ஸ்டேட்மென்ட் ஆ·ப் வொர்க்' எளிமையானது. சாலை ஒரங்களில் ஒரு அடி ஆழத்தில் பத்துக்குப் பத்து சதுரத்தில் குழி வெட்டி அதில் இருக்கும் மண்ணை அடுத்து சாலைக்கோ, அல்லது ஒரு வரப்பு மாதிரி திட்டுக்கோ அணைப்பாய் கொண்டுபோய் பரப்ப வேண்டும். இந்த ஒரு குழி ஒரு யூனிட். அதற்கு ஒண்ணே கால் ரூபாய் என்று நினைக்கிறேன். அதுமாதிரி ஒருவர் எத்தனை குழி முடிக்கிறாரோ அத்தனை சம்பளம். எந்த உச்ச வரம்பும் இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். அத்தனையும் டாக்ஸ்-·ப்ரீ. அந்த வறட்சிக் காலத்தில் இறுகிப்போன நிலத்தை அகழ்ந்து தோண்டி எடுப்பது எவ்வளவு சுகமாய் இருந்திருக்கும்....

இதில் ஒரு சிரமம், வெயில் ஏற ஏறக் களைப்பு அதிகமாகும். எனவே காலையில் 'பலானு'விடிய (வெளிச்சக் கீற்று தெரியும்போது) 'க்ளையன்ட் சைட்'டில் இருந்தால்தான் சூரியனோடு போட்டிபோட்டு நான்கைந்து குழி முடிக்க முடியும். எல்லாம் உச்சி வேளை வரைதான், அதற்கப்புறம் ஜெயிப்பது அவன்தான். இதற்காக காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து சமையல் வேலையை முடித்து, தூக்கில் எடுத்துக்கொண்டு, நடக்க ஆரம்பித்தால்தான் சரியாக இருக்கும். பிறகு ஒரு இரண்டு மணி வாக்கில் அங்கிருந்து கிளம்பி, 'போர'டிக்காமல் இருக்க அரட்டை அடித்துக் கொண்டு 'நிலா' வெளிச்சத்தில் திரும்பவும் நடந்து, மூன்று மணி வாக்கில் வீட்டுக்கு வந்து சேர்ந்து, திண்ணையில் விழுந்தால், நாங்கள் 4 மணிக்கு பள்ளிக்கூடம் விட்டு வந்து பார்க்கும்போது நாங்கள் வந்தது கூடத் தெரியாமல் அப்படியொரு தூக்கம்! பிறகு எழுந்து, 'இன்னிக்கு நான் சுப்பிரமணியை விட ஒரு குழி அதிகமா வெட்டினேன்' என்று பெருமையாகச் சொல்லும் அம்மா...

எழுத்தெல்லாம் கலங்கலாய்த் தெரிவதால் இதற்குமேல் எழுதமுடியவில்லை...நாளை தொடரலாம்.

வெள்ளி, ஜனவரி 09, 2004

ஒரு சோதனைக்கு உதவுங்கள்

நியூக்ளியஸ் என்ற புதிய மென்கலம் ஒன்றைப் பயன்படுத்தி என் வலைப்பதிவை சோதித்துக் கொண்டிருக்கிறேன். நண்பர்கள் இங்கு வந்து அதில் எல்லாம் தூஊஊஊஉ என்றில்லாமல் கட்டம் கட்டமாக இல்லாமல், ஒழுங்காகத் தெரிகிறதா, எல்லாக் கலப்பையிலும் கோடு போட முடிகிறதா, திரையில் சீக்கிரம் விழுகிறதா என்றெல்லாம் சொன்னால் நன்றாக இருக்கும்:-))

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...