- இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்?
- தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).
- தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும்முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?
- நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?
- தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?
- தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?
சுமார் 30 பேரிடம் கேட்டு வாங்கிவிட்டேன். இதைத் தொகுத்துப்போடுவதே பெரிய வேலையாய் இருக்கும் போலிருக்கிறது, இன்னும் சிலரும் பட்டியலில் இருந்தார்கள், வேலைப் பளுவுக்குப் பயந்து அவர்களுக்கு எழுதவில்லை. பதில் தந்த நண்பர்களுக்கு நன்றி சொல்லும் வேளையில், கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பும் அனைவருக்கும் வரவேற்பைச் சொல்லி, மறுமொழியாக உங்கள் பதிகளை இடலாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு கேள்வியும் ஒருநாளாக 6 கேள்விகளும், பதில்களும் வரும். அந்தந்த இடுகையில் உங்கள் கருத்துகளைச் சொல்லலாம்.
29 கருத்துகள்:
Me tha firstuu...
நட்சத்திர வாழ்த்துக்கள் அண்ணாச்சி! :)
பாருங்க! உங்களுக்கே நட்சத்திர வாழ்த்து சொல்லும் கால கட்டம்! :)
ஐந்து ஆண்டுகளுக்கு முன் தமிழ்மணம் துவங்கிய போது, யோசிச்சி இருப்பீங்களா, நீங்க நட்சத்திரம்-ன்னு? :)))
ரொம்ப நாள் கழித்து வலைப்பதிவில் காண்பதில மகிழ்ச்சி. இந்த கேள்வி-பதில்கள் போக கூடுதலாக சில இடுகைகள் வந்தால் நன்றாக இருக்கும்.
வணக்கம். உங்கள் கடைசி கேள்விக்கு மாத்திரம் எனது விருப்பத்தை தருகிறேன். எல்லாவற்றிக்கும் தலைப்புக்கள் தந்து வகைபடுத்தும் தமிழ்மணம் 'விவசாயம்,சுற்றுச்சுழல் போன்ற வாழ்கையின் ஆதாரத்திற்கு சற்று முக்கியத்துவம் தரலாமே! சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்.
நட்சத்திரம்...?!!
வாழ்த்துகள் காசி.
தமிழ்மணம் ஐந்தாண்டுகளாக உலகத் தமிழர்களின் செய்திகளைத் தொகுத்து வழங்கும் பணியில் முன்னின்றது.
பாராட்டுகள் காசி.
தமிழ்மணம் வளரப் பலர் பாடுபட்டனர் என்பதை இந்த வேளையில் நன்றியுடன் நினைவுகூர விரும்புகிறேன்.
தமிழகத்தில் இதுவரை 20 மேற்பட்ட பயிலரங்குகள் 25 மேற்பட்ட ஆய்வரங்குகளில் தமிழ்மணம் பற்றி எடுத்துரைத்தமை மகிழ்ச்சி தருகிறது காசி.
இந்த மகிழ்ச்சியான நாளில் இணையம் கற்போம் என்ற என் நூல் வெளிவந்துள்ள செய்தியை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தங்கள் நேர்காணல் தமிழ்மணப் பங்களிப்புகள் நூலில் உள்ளன.
நன்றி
மு.இளங்கோவன்
புதுச்சேரி
இந்த வர நட்சத்திரம்னு ஒருவார நட்சத்திரக் குடத்தில் அடக்கிவிடக்கூடிய நடசத்திரமா நீங்கள்? வானில் ஜொலிக்கும் நட்சத்திரமல்லவா நீங்கள்?தமிழ்ப் பதிவுகளுக்கான திரட்டியை வடிவமைத்துக்கொடுத்த திலகம் அல்லவா நீங்கள்!
நீங்கள் அடிக்கடி பதிவுகள் எழுதினாலும் சரி, எழுதாவிட்டாலும் சரி, என்றுமே நீங்கள் ஒரு நட்சத்திரம்தான்
நட்புடன்
SP.VR.சுப்பையா
பள்ளிக்கூடத்தில் டெஸ்ட் வச்சாலே எழுத மாட்டோம், நீங்கள் இதைத் தொடர்பதிவாக்கி இருந்தால் பல விடைகள் கிடைத்திருக்கும். யாரையாவது அழைத்து இருக்கலாம்.
:)
//பெரிதாக ஒண்ணும் சிந்திக்காமலே, சிந்தனையாளர்போல பாவனை செய்வது எப்படி?//
நாங்கெல்லாம் அந்தப்பாவனைதான செய்யரோம். :)
//கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்பும் அனைவருக்கும் வரவேற்பைச் சொல்லி, மறுமொழியாக உங்கள் பதிகளை இடலாம் என்று கேட்டுக்கொள்கிறேன். //
பதில்கள் நீளமாக இருந்ததால் தனிப்பதிவாக போட்டாச்சு !
//வணக்கம். உங்கள் கடைசி கேள்விக்கு மாத்திரம் எனது விருப்பத்தை தருகிறேன். எல்லாவற்றிக்கும் தலைப்புக்கள் தந்து வகைபடுத்தும் தமிழ்மணம் 'விவசாயம்,சுற்றுச்சுழல் போன்ற வாழ்கையின் ஆதாரத்திற்கு சற்று முக்கியத்துவம் தரலாமே! சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்.
//
வழிமொழிகிறேன்
\\ தமிழ்மணம் வளரப் பலர் பாடுபட்டனர் என்பதை இந்த வேளையில் நன்றியுடன் நினைவுகூர விரும்புகிறேன். \\
மு.இளங்கோவன் இதன்மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்
வாழ்த்துக்கள் காசி.
மீண்டும் உங்களை இங்கு சந்திப்பதில் மகிழ்ச்சி.
# இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்? //
இன்னும் முழுமையாக இல்லை என்பதாகவே தெரிகிறது. தினமலர் போன்ற செய்தித் தாள்களை படிக்கும் லட்சக்கணக்கான வாசகர்களுக்கு மற்றைய தளங்கள் அவ்வளவாக அறிமுகம் இல்லை...அதற்கான முதற்படியான யுனிகோட் தான் இருக்கிறது.......அதற்குப்பிறகு வந்த முன்னேற்றம் அபாரமானது........ ஆங்கிலத்தில் சில செய்திச் சேவைகளாகவிருக்கட்டும் , இணைய இதழ்களாகவே இருக்கட்டும்..அச்சில் வெளிவராமலே வெகு பிரபலமாக இருக்கின்றன....ஆனால் தமிழில் அதுபோன்ற இணைய இதழ்களோ , செய்தி இதழ்களோ இல்லை....ஆங்கிலத்தில் ஒரு உதாரணம் டெஹல்கா.காம், இணையத்தில் இருந்து அச்சிற்கு வந்தது இது!!!
***
# தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).
//
இல்லை என்றே தோன்றுகிறது...மின்னஞ்சல் , அரட்டை இவைகளில் தமிழின் பயன்பாடு வெகு குறைவே...! தவிர்த்து நிறைய மின்னஞ்சல்களில் யுனிகோடும் கூட பெட்டி பெட்டியாகவே தெரிகிறது!!
***
# தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும்முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?//
விக்கிபீடியாவில் கூட மற்றைய இந்திய மொழிகளைக் காட்டிலும் தமிழ் பின் தங்கியே இருக்கிறது....ஆனாலும் தமிழ் பெரும்பாலான தமிழர்களுக்கு சென்றடையவில்லை என்பதே உண்மை! முன்னெடுத்துச் செல்ல வேண்டியவை என்று சொல்கிற அளவிற்கு எல்லாம் எனக்கு அறிவு கிடையாது..நான் டெக்னிக்கல் ஞானசூனியம்!
**
# நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?//
விசுக்குன்னு இப்படிச் சொன்னா எப்பிடி? அதெல்லாம் செயற்குழு , பொதுக்குழு கூட்டித்தான் முடிவெடுக்கமுடியும்!!!!!!!!! ஆனாலும் ஒன்று செய்வேன்......நடுநிலையான ஆய்வு / செய்தி / அரசியல் செய்தியிதழ் தொடங்கி எந்நேரமும் தமிழிலேயே மக்களின் புகார்களை இணையம் வழியே அனுப்பி அதன் மூலம் மக்கள் சேவை புரிவேண்!
**
# தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?//
தமிழ் வலைப்பதிவுகள் ஓக்கேதான்.....ஆனாலும் மொக்கைப் பதிவுகளும் , கும்மிப்பதிவுகளும் கொஞ்சம் அதிகம்.....ஆனாலும் அதை எந்தர்டெயின்மெண்ட் அளவில் வைத்துக்கொள்ளலாம்...புதிதாக வருபவர்களுக்கு நான் கூறும் ஒரே அறிவுரை 'சும்மா உங்களுக்குத் தோணியதையெல்லாம் என்னை மாதிரியே எழுதிக்கொண்டிருக்காமல் நிறையப் படியுங்கள், பின்பு எழுதுங்கள்....'
****
# தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?//
இரண்டு ஆண்டுகளாகத் தான் தமிழ்மணம் எனக்கு அறிமுகம்....ஆனால் தமிழ்மணம்தான் பதிவுலகில் என்னை இன்னமும் இருக்க வைக்கிறது...அதுதான் என்னை எழுதத் தூண்டுகிறது...
ஆனாலும் டெக்னிக்கலாக பதிவை இணைப்பதில் ஆகட்டும் , வாக்களிப்பதில் ஆகட்டும் இன்னமும் மற்ற திரட்டிகளைக் காட்டிலும் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.....அதனாலயே இப்போதெல்லாம் தமிழ்மணத்தில் வாக்களிப்பதேயில்லை நான்..மற்ற பல நண்பர்கள்!
அதுமட்டுமின்றி தமிழ்மணம் நட்சத்திரம் பற்றி சில சர்ச்சைகள் வந்தன....ஆனால் அதுபற்றி மருந்துக்கு கூட தனது கருத்தினை தமிழ்மணம் தெரிவிக்காதது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது....அதே சமயம் - கருத்து தெரிவிப்பதும் , தெரிவிக்காததும் தமிழ்மணத்தின் உரிமை...அதை மதிக்கிறோம்...
மற்றபடி பிடிஎப் சேவைகள் அற்புதம்...
இன்னமும் தமிழ்மணம் தமிழ் வலையுலகத்தின் மகுடம்தான்...!
ஐந்து வருடமென்ன இன்னமும் ஆயிரம் வருடங்கள் தமிழ்மணம் மணக்கும்!
அன்பு காசி
தமிழ்மண நட்சத்திரப் பதிவர்கள் பலருக்கும் வாழ்த்து சொல்லியிருக்கிறேன். ஆனால் இன்று இதை தொடங்கியவருக்கே வாழ்த்து சொல்லவேண்டுமா என யோசிக்கிறேன்.
தமிழ்மணம் இல்லாமலிருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என நினைத்துப்பார்க்கிறேன்.
இன்று தமிழ்மணத்தின் மூலம் உலகம் முழுவதும் பல பதிவர்கள் எழுத்தாளர்கள் கவிஞர்கள் உருவாகியுள்ளனர். பல நட்புகளும்.
அனைத்திற்கு காரணம் இதை தொடங்கிய நீங்களே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பின்னர் பல திரட்டிகள் தோன்றியிருந்தாலும் தமிழ்மணமே ஆரம்பம் என்பதும் அதுவே இன்னும் சிறப்பாக நடந்துக்கொண்டிருக்கிறது என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை.
இதற்கு காரணகர்த்தாவான உங்களுக்கு வெறும் நட்சத்திர வாழ்த்து சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதற்கு மேலும் நிறைய இருக்கு.
இதயம் கனிந்த வாழ்த்துகள் நண்பரே.
ஒன்று:இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள், ஐந்தாண்டுகளுக்கு முன்னாள் இருந்ததை விட நிச்சயமாக, அதிகமாகிக் கொண்டு தானிருக்கிறது.
இரண்டு: ஏகப்பட்ட விசைப்பலகைகள், உள்ளீடு செய்வதில் உள்ள குழப்பங்கள் இப்படி மலிந்து கிடக்கும் வேறுபாடுகளை களைந்தாலே, இணையத்தில் தமிழில் அதிகப் புழக்கம் வரும். வந்துகொண்டிருக்கிறது!
மூன்று:தகவல் தொழில் நுட்பப் புரட்சியின் முழுப்பயனையும் எந்த ஒரு சமூகமுமே முழுமையாக அனுவவிக்கவில்லை எனும்போது,
இந்தக் கேள்வியிலேயே கொஞ்சம் மாற்றம் தேவைப்படுவதாகவே எண்ணுகிறேன்.
தமிழ்ச் சமூகம் என்று வரும்போது, இன்னும் அதிக நாளாகுமென்றே தோன்றுகிறது. இங்கே ஒருத்தருக்கொருத்தர் சண்டைபோடுவதற்கே நேரம் போதவில்லை!அரசு ஊடகங்கள் பெயருக்குத் தான் இருக்கின்றன.இம்சையை கூட்டுவது ஒன்றைத் தவிர அரசின் பங்களிப்பு சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை.
நான்கு: இதுவரை ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி, தன்னார்வலர்களின் தளராத முயற்சியின் பயனே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.குறிப்பாக சிங்கப்பூர்-மலேசியத் தமிழர்கள், இலங்கைத் தமிழர்களில் இந்தப் பணியை முன்கைஎடுத்துச் சில பேர் செய்திருக்காவிட்டால், இணையத்தில் இப்போது காணும் வளர்ச்சி இருந்திருக்காது. தமிழ் விக்கிபீடியா, இப்போதுதான் இணையத்தில் அடிக்கடி வந்து போகிறவர்களுக்கே அறிமுகமாயிருக்கிறது-அதற்குள் ஏகப்பட்ட சர்ச்சைகள்! சரியாகிவிட்டது என்று சொல்கிறார்கள்! பயன்பாடு, இனிமேல் தான் தெரியவேண்டும்.
வேற்றுமைகளைப் பெரிதுபடுத்துவதில் தமிழ்ச் சமுதாயத்திற்கு இணை எவரும் கிடையாது! வேற்றுமையிலும் ஒற்றுமையைக் காண முடியும் என்பதை உணர்ந்தாலே, எழுபது சதவீதம் பிரச்சினைகளைக் கடந்து விடலாம். இதற்கு அரசின் தகவல் தொழில் நுட்பத்துறைக்குத் தலைமை ஏற்றால் தான் முடியும் என்பதே இல்லை. உண்மையில், அப்படிப் பொறுப்பு ஏற்றவர்களால், எந்த உபயோகமும் இல்லை.
கடைசியாக, தமிழ்மணம் ஐந்தாண்டுகளை நிறைவு செய்கிற தருணத்தில் எனது வாழ்த்துக்கள். தமிழ்மணம் திரட்டியில் எனதுபதிவு இணைக்கப் படவில்லை. இணைக்கும் எண்ணமும் எனக்கு இல்லை. இப்போது நடக்கும் சில விஷயங்கள், நிர்வாகத்தில் உள்ள குறைகள் வெளியே மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானதில் இருந்தே,என்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ளலாமே!
நட்சத்திர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டார் காசி அவர்களே! :)
அரிய பெரும் பணியாற்றிய உங்களுக்கு ஐந்தாம் ஆண்டு முடிவில் வாழ்த்துக் கூறுவதில் மகிழ்ச்சி.
--------------
***ஆனாலும் டெக்னிக்கலாக பதிவை இணைப்பதில் ஆகட்டும் , வாக்களிப்பதில் ஆகட்டும் இன்னமும் மற்ற திரட்டிகளைக் காட்டிலும் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.....அதனாலயே இப்போதெல்லாம் தமிழ்மணத்தில் வாக்களிப்பதேயில்லை நான்..மற்ற பல நண்பர்கள்!***
நானும் கூட!
யாரோ ஒருவன்,
யாருங்க அது, இந்த ’மீ த பஸ்ட்டு’ வியாதியை முதல்ல ஆரம்பிச்சது, தாங்க முடியலங்க, இது வேணாங்க.:)
கேஆரெஸ்,
:)
அட, நம்மெல்லாம் ‘தனக்கு மிஞ்சினது தான் தானம்’கிற கொள்கை வெச்சிருக்கிறவுங்க, அதனால் யோசிக்காமல் இல்லைங்க. ஏற்கனவே நட்சத்திரமா இருந்துட்டோம். பாருங்க, அது கூட நினைவில்லாத அளவுக்குத்தான் எழுதியிருக்கோம்:(
ரவிசங்கர்,
:)
இப்ப கேள்விகளைப் பதிப்பதில் ஒரு மாற்றம் செய்துள்ளேன். எனவே கேள்விகள் தவிர்த்த மற்ற இடுகைகள் தொடரும். நன்றி.
வென்சென்ட்,
வாங்க சார், எப்படி இருக்கீங்க. உங்க கருத்தை தமிழ்மணம் குழுவிற்கு சேர்க்கிறேன்.
மு.இ.,
பயிலரங்குகள் நடத்தி கல்விச்சாலைகளில் தமிழ் இணைய அறிவை வளர்த்தும் பணிக்கு பாராட்டுக்கள். தமிழ்மணம் வளர்ந்ததற்கு இது பயன்பட்டது என்பதைவிட பொதுவான இணைய அறிவு விரிவாக்கலுக்கு வழிவகுத்தது என்பதே பொருத்தமாயிருக்கும். தமிழ்மணத்தை வளர்த்தவை வலைப்பதிவர்கள், அவர்களுக்கு முறையான சேவை, அதற்கான நிரல்கள்/வழங்கி/நிர்வகித்தல். தொடரும் உங்கள் பணிகளுக்கு நன்றி.
சுப்பையா வாத்தியார்,
ரொம்பப் புகழாதீங்க.:) என் நண்பர் ஒருவர் கண்ணதாசனைப் பத்தி நேத்து பேசிட்டிருந்தார். அவர்கிட்ட சொல்லியிருக்கேன், உங்களைப்பத்தி, ரெண்டு பேரும் உங்களை சந்திக்கிறோம், பேசுவோம்.
கோவி. கண்ணன்,
நீங்க செஞ்சதுதான் சரி. என் அடுத்த இடுகையைப் பாத்திருப்பீங்க. மற்ற நண்பர்களையும் அவரவர் பதிவிலேயே இடுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்.
சின்ன அம்மிணி, அச்சச்சோ, இதுக்கும் போட்டியா? :)
புருனோ, விருபா, சந்திரவதனா, :)
மதிபாலா,
பதில்களுக்கு நன்றி. சுவாரசியமா இருக்கு. நுட்பச் சிக்கல்கள் பலவற்றுக்கும் தீர்வு நுட்பக்குழுவின் நேரச்சிக்கலால் தள்ளிப்போவதாக அறிகிறேன். முதலில் எழுதப்பட்ட நிரல்தொகுப்பு (அடியேன் காரணம்) ஒரு தொழில்முறை நிரலாளர் எளிதில் கையாளுமாறு அமைக்கப்படாததும் முக்கியக் காரணம்:( விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
மஞ்சூர் ராசா,
:) தொடர்ந்து பதிவர் சந்திப்பை நடத்தி விருந்து வைக்கும் உங்கள் போலுள்ளவர்கள் பணிக்கு வந்தனங்கள். (எப்ப அடுத்த விருந்து? - சாப்பாட்டு ராமன்)
கிருஷ்ணமூர்த்தி,
பதில்களுக்கு நன்றி. பல கருத்துக்களுடன் ஒத்துப்போக முடியவில்லை. தமிழ்மணத்தில் இணைக்காமல் இருப்பது உங்கள் விருப்பம். சரியெனப்பட்டதை சொல்ல, செய்ய இணையவெளியில் சுதந்திரம் உண்டுதானே.
TVR, வருண், :)
தமிழநம்பி, மேலே மதிபாலாவுக்குச் சொன்னதைப் பாருங்க.
/பல கருத்துக்களோடு ஒத்துப்போக முடியவில்லை/
எனக்கும் தான்! மொக்கை போடுவதிலும், வெறுப்பை வளர்ப்பதிலுமே இது வரை பெரும்பாலான தமிழ் வலைப்பதிவுகள், அவைகளையே முக்கியப்படுத்தி, பிரபலப்படுத்திய திரட்டிகளைக் கவனித்துக் கொண்டு இருப்பவன் என்ற வகையில், எனக்கு நிறைய கருத்துக்கள் உண்டு. இணையத்தைப் பயிற்றுவிக்கப் போகிறேன் என்று கிளம்பியிருப்பவர்களையும், அவர்களது செயல்பாடுகளையுமே கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட திரட்டியில் இணைவது அல்லது இணையாமல் இருப்பது என்பது என்னுடைய சொந்த விருப்பத்தை மட்டுமல்ல, அந்தத் திரட்டி நிர்வாகம் எப்படி நடந்துகொள்கிறது என்பதையுமே பொறுத்துத் தீர்மானிக்கப்படுகிறது!
உங்களுடைய சேவை மாஜிக் மிகவும் நன்றாக இருக்கிறது!
அன்பின் காசி,
நீங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க என் பதில்களை இங்கு பதிகிறேன். வாய்ப்பளித்தமைக்கு நன்றி. என்னுடைய பதில்கள் நீளமாக இருப்பதால் ஒரே பின்னூட்டமாக அனுமதிக்கப் படவில்லையென்பதால் ஒன்றுக்கும் மேற்பட்ட பின்னூட்டங்களாக இடுகிறேன்.
1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று
எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும்
இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம்
செய்யவேண்டும்?
தேவையான அளவுக்கு உள்ளன என்று நான் கருதவில்லை. ஆனால் அதைவிட கவனத்தில் கொள்ள வேண்டியது கிடைக்கும் தகவல்களுள் தரமானவை என்று கருதப்படக்கூடியவை மிகக் குறைவு என்பதே. செய்திகள், கிசுகிசுக்கள் மற்றும் புனனவுகள் தவிர்த்து கட்டுரைகள் மற்றும் தகவல்களில் பெரும்பாலானவை தகுந்த ஆராய்ச்சிச் சான்றுகளை அடிப்படையாக வைத்து எழுதப் படுகின்றனவா என்றால் உறுதியாகச் சொல்ல முடியாது. இது தமிழ் மொழிக்கே மட்டுமுரிய பிரச்னையில்லை. இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து பிற மொழிகளிலும், ஏன் ஆங்கிலத்திலும் கூட எழுதப் படும் கட்டுரைகளிலும் இப்பிரச்னனயிருப்பதாக மற்ற மொழி நண்பர்களின் வாயிலாகவும் அறிகிறேன். அதற்கு முக்கியக் காரணங்கள் இரண்டு: (1) மேலை நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில் முறைசார்ந்த கல்வியமைப்பில் (formal education) இளம்பருவத்திலிருந்தே ஆராய்ச்சி செய்யும் ஆர்வம் வளர்த்தெடுக்கப் படவில்லை. அதுபோல் முறைசாராக் கல்வியமைப்புகளான (informal education) நூலகங்களும் சுயாட்சியின்றி முற்றிலும் சிதைக்கப் பட்டு விட்டன. (2) இந்திய மொழிகள் அனைத்தும் வெறும் பொழுது போக்கிற்கான ஊடகங்களாக மாறிவிட்டமை கவலைக்குரியது. பொருண்மையுள்ள விடயங்களை ஆங்கிலத்தில் மட்டுமே செய்யவேண்டுமென அடிமை மனப்பான்மையே இதற்கான அடிப்படை.
இப்படியான சூழலில் இக்கேள்வியின் இரண்டாம் பகுதிக்குப் பதிலளிப்பது மிகக்கடினமாகிறது. நான் மேற்கூறிய இரண்டு குறைகளையும் தவிர்க்க வேண்டுமென எளிதாகச் சொல்லி விடலாம். ஆனால் நடைமுறையில் விரைவில் நிகழக்கூடிய மாற்றமல்ல அது. எனக்குத் தோன்றுகிற ஒரே ஒரு வழியை மட்டும் இங்கு பரிந்துரைக்கிறேன். கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர்களில் பெரும்பாலோர் ஆங்கிலத்தில் தேர்ச்சியுடையவராக இருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே ஆங்கிலத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் தகவல்களை மிகுந்த சிரத்தையெடுத்துத் தமிழில் தந்தாலும் அவர்கள் அதை நாடப் போவதில்லை. அப்படியான தகவல்களைத் தமிழில் மட்டுமே படிக்கத் தெரிந்த தமிழருக்கோ கணினி மற்றும் இணையவசதி இன்னும் எட்டாக்கனிதான். கைத்தொலைபேசி தற்பொழுது ஓரளவிற்கு பெரும்பான்மையோர் வாங்கிப் பயன்படுத்தக் கூடிய அளவிலுள்ளதால் கைத் தொலைபேசிக்கணினி மலிவாகவும் கிட்டி, தமிழும் படிக்க வாய்த்தால் நல்லது. ஆனால் தற்பொழுது கணினியும் இணையமும் உள்ள வசதியான தமிழர்களைத் தமிழில் படிக்க வைக்க ஒரே வழி ஆங்கிலத்தில் கிடைக்காத தரமான தகவல்களைத் தமிழில் தருவது. காட்டாக நம்முடைய பூகோளம் சார்ந்த அரிய தகவல்களைத் திரட்டி நேர்த்தியுடன் அளிப்பதே. அவை பின்னால் மற்ற மொழியினரின் விருப்பத்தைப் பொறுத்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்க்கப் படலாம். அண்மையில் மக்கள் தொலைக்காட்சியிலிருந்து வெளியான “அழகின் சிரிப்பு” என்ற தமிழ்மண் சார்ந்த அருமையான சில காணொளிப்படங்கள் சிலவற்றை இங்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிட விரும்புகிறேன். குறிப்பாக, பனைமரத்தைப் பற்றிய ஒரு காணொளி அற்புதமானது, பனைநிலத்தில் வாழ்ந்தவர்களைத் தவிர வேறு யாரும் பனைமரத்தைப் பற்றிய அவ்வளவு அரிய தகவல்களைப் பற்றி அறிந்திருக்க முடியாது.
நன்றி - சொ.சங்கரபாண்டி
முந்தையப் பின்னூட்டத்தின் தொடர்ச்சி...
2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம்
அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை
போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல்
போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம்
தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு,
குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).
நான் தமிழ்நாட்டுக்கு வெளியே வசிப்பதால் நேரடியான அனுபவம் அல்லது சான்றுகளின் அடிப்படையில் இதற்கான பதிலை என்னால் அளிக்க முடியவில்லை. தமிழ்நாட்டுக்கு வெளியே உள்ள தமிழர்களிடம் தொழில்நுட்பப் பயன்பாடு தமிழின் வாயிலாக மிகக்குறைவு என்றே தோன்றுகிறது.
நன்றி - சொ.சங்கரபாண்டி
முந்தையப் பின்னூட்டத்தின் தொடர்ச்சி...
3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின்
பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த
அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும்
முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?
தன்னார்வலர்களின் பங்களிப்பு ஒன்றே கணினியில் தமிழின் பயன்பாடு இந்த அளவாவது பரவியிருக்க காரணமென்று சொல்லலாம். அரசு அமைப்புகள் அரசியல் சூழலில் சிக்குண்டு எந்த முனைப்பும் செயல்பாடுமில்லாமல் இருக்கும்பொழுது, தமிழர்களுள் வசதிபடைத்த மேல்தட்டு வர்க்கத்தினர் ஆங்கில மோகமுடையவர்களென்பதால் வணிக அமைப்புகளும் எந்த நாட்டமுமில்லாமல் இருக்கும் பொழுது, தன்னார்வலர்கள் மட்டுமே தொடர்ந்து தங்களது சொந்த ஆர்வத்தின் அடிப்படையில் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். தன்னார்வப் பங்களிப்புகள் ஆங்கிலத்தைப் போன்று ஒருங்கிணைந்து நிகழாமல் தமிழில் தனித்தனியே தீவுகளாக இயங்கி வருவதால் சில குறைபாடுகள் இருந்தாலும், கணினியில் தமிழின் பயன்பாடு சில குறிப்பிடத்தக்க சாதனைகளால் பெரிதளவில் முன்னெடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. அப்படிப் பட்ட சாதனைகளாக நான் நினைப்பவை சில உண்டு. ஆதமி தட்டச்சு முறை, ‘கல்வி’ தமிழ்ப்பயிற்று மென்பொருள், முரசு அஞ்சல், எ-கலப்பை, தேனி ஒருங்குறி எழுத்துரு, சுரதா, தமிழ்மணம், மதுரைத் திட்டம், விக்கிப்பீடியா என இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் ஒரு முக்கியமான முன்னெடுப்பைச் செய்திருக்கிறது.
ஆதமி தட்டச்சு முறை ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தித் தமிழ் மொழியை எழுதும் ஒலிமாற்ற முறை. தமிழ் எழுத்துருக்களும், மென்பொருட்களும் உருவாக்கப்பட்டதற்கு முன்பு ஆரம்பகாலத்தில் கணினியைப் பயன்படுத்திய தமிழர்கள் தமிழ் மொழியை ஆதமி வரைமுறையின்படி ஆங்கிலத்தின் மூலம் எழுதத் தொட ங்கினர். இன்று தமிழிலேயே தட்டச்சு செய்யக் கூடிய மென்பொருட்கள் இருக்கின்றபோதும், தமிழ்த்தட்டச்சுத் தெரியாத தமிழர்களால் இம்முறையே பயன்படுத்தப் படுகிறது. மென்பொருட்கள் அவ்வெழுத்துக்களை தமிழெழுத்துக்களாக மாற்றுகின்றன. இது இன்றும் பெரும்பாலான ஆங்கிலம் தெரிந்த தமிழர்கள் பயன்படுத்தக்கூடிய தட்டச்சு முறை. கனடா நாட்டைச் சேர்ந்த முனைவர் கே. ஸ்ரீவாசன் அறிமுகப்படுத்திய முறை இது.
‘கல்வி’ தமிழ் பயிற்றுவிக்கும் மென்பொருள் நானறிந்து முதன்முதலாக ஆங்கிலத்துக்கு இணையாக மிக நேர்த்தியுடன் உருவாக்கப் பட்ட தமிழ் மென்பொருள். இதனை உருவாக்கியவர் முனைவர் பெரியண்ணன் குப்புசாமி. குறைந்த விலையில் இம்மென்பொருள் விற்பனை செய்யப் பட்டாலும், தமிழ் மென்பொருட்களின் தரத்துக்கு ஒரு முன்னோடியாக அமைந்ததெனலாம்.
முரசு அஞ்சல் வணிகநோக்கில் உருவாக்கப்பட்ட மென்பொருளென்றாலும், முதன்முதலாக அருமையாக உருவாக்கப் பட்ட தமிழ்த் தட்டச்சு மென்பொருள். முரசு நிறுவனர் திரு. முத்து நெடுமாறன் உத்தமம் அமைப்பின் தோற்றத்திற்கும் அடிகோலியவர்களில் ஒருவர் என்று நினைக்கிறேன்.
நன்றி - சொ.சங்கரபாண்டி
முந்தையப் பின்னூட்டத்தின் தொடர்ச்சி...
எ-கலப்பை இலவச மென்பொருள் மிகக் குறுகிய காலத்திலேயே அதிக அளவு பயனர்களைப் பெற்று, கணினியில் தமிழ் ஒரு நிலையான இடத்தைப் பெற்றதற்கு முக்கிய காரணமாக இருந்த ஒரு மென்பொருள் எனலாம். எ-கலப்பை மென்பொருளைச் சமைத்த முகுந்துவிற்கும், தயாரிப்பிற்குப் பொருளுதவியவர்களும் பாராட்டுக்குரியவர்கள்.
இணையத்தில் தமிழ் பரவ முக்கியக் காரணமாக இருந்த இரண்டு பங்களிப்புகள் உண்டு. அவை திரு. உமரின் தேனி ஒருங்குறி எழுத்துருவும், பிற எழுத்துருக்களை மிக எளிதாக ஒருங்குறி எழுத்துருவுக்கு மாற்ற சுரதாவின் இணையதளத்தில் இலவசமாகக் கிடைத்த மென்பொருளுமாகும். எழுத்துருக்களைத் தங்கள் கணினியில் நிறுவத்தேவையில்லாமலே தமிழில் தட்டச்சவும், படிக்கவும் இக்கருவிகள் உதவியதால் இணையத்தில் தமிழ் மிக வேகமாகப் பரவியது. மற்ற இந்திய மொழிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ்த் தளங்கள் அதிக அளவில் உருவாயின.
Blogs என்று ஆங்கிலத்தில் அழைக்கப் படும் வலைப்பதிவுகளின் வருகைக்குப் பின்பே தமிழில் சாதாரண வாசகர்களும் தாங்களே எழுதித் தங்கள் தளங்களை உருவாக்கும் இலவச வசதி உருவாகியது. அப்படியொரு வசதி உருவாகி ஆண்டுகள் சில ஆகியும் தமிழில் வலைப்பதிவுகள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருந்தன. இச்சூழலில் தமிழ்மணம் திரட்டி ஒரு கிரியா ஊக்கியாக அமைந்தது எனலாம். எங்கோ ஒரு மூலையில் எழுதப்பட்டு பிறர் அறியாமலிருந்த தமிழ் வலைப்பதிவுகளனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரேதளத்தில் படிக்கக்கிடைக்கும் வசதியை தமிழ்மணம் அளித்ததால், தமிழில் நாள்தோறும் புதிய வலைப்பதிவுகள் உருவாயின. வலைப்பதிவுகளுக்கென்றே தமிழ்மணம் வழங்கும் தொழில்நுட்ப வசதிகளை வேறெந்த திரட்டியும் எந்த மொழிகளிலும் வழங்கவில்லை. இன்று ஐயாயிரம் தமிழ்ப் பதிவுகளை எட்டியிருக்கும் நிலைக்கு வித்திட்ட தமிழ்மணம் திரட்டியும், அதை உருவாக்கிய திரு. காசி ஆறுமுகமும் பாராட்டுக்குரியவர்கள். மேலும் முதன்முறையாக சில தன்னார்வ பதிவர்கள் ஒன்று கூடி ஒற்றுமையாக இதைத் தொடர்ந்து நிர்வகித்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்ப ரீதியிலல்லாமல் தமிழின் அரிய இலக்கியக் களஞ்சியங்களை கணினிக்குள் தட்டச்சுச் செய்து இணையத்தில் கிடைக்கச் செய்யும் அரும்பணியைச் செய்தது மதுரைத்திட்டம். பல தன்னார்வலர்களின் பங்களிப்பு பயன்படும் வகையிலான இத்திட்டத்தை வகுத்த அதன் நிறுவனர் முனைவர் கல்யாணசுந்தரம் பாராட்டுக்குரியவர்.
இறுதியாக தமிழ் விக்கிப்பீடியா நல்லதொரு திட்டமென்று நினைக்கிறேன். இது இன்னும் வேகமாகவும், தரமானதாகவும் செயல்படவேண்டுமென்றாலும், தன்னார்வலர்களால் கட்டியெழுப்பப் படுவது பாராட்டுக்குரியது.
நன்றி - சொ.சங்கரபாண்டி
முந்தையப் பின்னூட்டத்தின் தொடர்ச்சி...
4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?
தற்பொழுது கணினிப் பயன்பாடு எப்படி ஆரம்பப் பள்ளியிலிருந்தே ஊக்கப்படுத்தப் படுகிறதோ, அந்த நிலையிலேயே தமிழ்க்கணினிப் பயன்பாடும் ஊக்கப்படுத்தப் படவேண்டும். குழந்தைகள் தமிழில் தட்டச்சு செய்தலும், வலைப்பதிதலும் பாடத்திட்டத்தின் கீழ் வரவேண்டும். அமெரிக்காவில் வார இறுதியில் நடக்கும் எங்களுடைய தமிழ்ப்பள்ளியில், குழந்தைகள் வீட்டுப்பாடத்தை தமிழில் மின்னஞ்சல் செய்யக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். தமிழைக் கணினியில் பயன்படுத்தும் சிறுவர்களும், இளைஞர்களும் அதிகரித்தால், தானாகவே மற்ற மாற்றங்கள் வர ஆரம்பிக்கும் என்பது என் கருத்து.
5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக
வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?
நான் வலைப்பதியாததால் மற்றவர்க்கு யோசனை சொல்லப் போதிய தகுதியில்லையென்று நினைக்கிறேன். இருந்தாலும் வலைப்பதிவுகளில் நடக்கும் தணிக்கையற்ற விவாதங்களை பெரிதும் மதிக்கிறவனென்ற முறையில் ஒரேயொரு வேண்டுகோள். கருத்து மாறுபடும் பொழுது மாற்றுக் கருத்தை ஓரிரு முறைகள் அழுத்தமாகச் சொல்லி விட்டுப் போய்க் கொண்டிருந்தால் போதுமானது. அப்பொழுது மாற்றுக் கருத்து மதிக்கப் படும். மாறாக தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தால் அனைவர் நேரமும் விரயமாவது மட்டுமல்லாமல், மாற்றுக் கருத்தும் எடுபடாமல் போகும்.
6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை
நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய
உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?
தமிழ்மணம் குழுவில் இருப்பவன் நான் என்ற முறையில் இந்தக் கேள்விக்கான பதிலை மற்றவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
நன்றி - சொ.சங்கரபாண்டி
கருத்துரையிடுக