சனி, நவம்பர் 29, 2003

Do You Speak American?

ஆங்கிலம் தெரிந்தவர்கள் எல்லாரும் அமெரிக்கா வந்தவுடன் குழம்பும் அளவுக்கு அமெரிக்க ஆங்கிலம் இருக்கிறது. இங்கே அட்டவணையில் உள்ள சொற்களைப் பார்த்தால் தெரியும். இதில் அமெரிக்க ஆங்கிலம் என்று கொடுத்திருக்கும் பட்டியலில் உள்ள சொற்கள் பலவும் நமக்குப் பரிச்சயமானவையே. ஆனால் பேச ஆரம்பித்ததும் நாக்கில் முதலில் வருவது பிரிட்டிஷ்/இந்திய சொற்களே. எனவேதான் பெரும்பாலும் அவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ள முடிகிற அதே வேளையில், நாம் பேசுவதைப் புரிந்து கொள்ள அவர்கள் சிரமப்படுவது. இவை ஒரு பானை சோற்றுக்கு பதம் பார்க்க தரும் பருக்கைகள் என்றால். முழுப் பானையும் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் புரியும். அதிலும் அத்தனை காய்கறிக்கும் இங்கு அமெரிக்க மொழியில் வேறு பெயர்கள்! வாழ்க்கை சுவாரசியமாக இருக்க இவையெல்லாம் காரணம்!


British/Indian

American

Advertisment

Commercial

Bin, Dustbin

Trash Can

Biscuit

Cookie

Bonnet

Hood (car)

Boot, Dicky

Trunk (car)

Canteen

Cafeteria

Car Park

Parking Lot

Casualty

Emergency Room

Chemist

Drugstore

Diversion

Detour

Entree, Starter

Appetizer

Film

Movie

Flat

Apartment

Flyover

Overpass

Football

Soccer

Garden

Yard

Gum

Glue

Highway

Freeway (Expressway)

Hire

Rent (to)

Holiday

Vacation

Jam

Jelly

Lift

Elevator

Lorry

Truck

Napkin, Nappy

Diaper

Note

Dollar Bill

Pavement

Sidewalk

Petrol

Gasoline

Post

Mail

Public school

Private school

Purse

Wallet (Woman's)

Queue

Line

Ring

Call (on the phone)

Rubber

Eraser

Rubbish

Trash

State school

Public School

Sweets

Candy

Tin

Can

Torch

Flashlight

Trolley

Shopping Cart/Basket

Wardrobe

Closet (bedroom)

Zed

Zee (letter)



Thanks: http://www.geocities.com/Athens/Atlantis/2284/

நானும் ஒரு மொழிபெயர்ப்பாளன்

சென்ற மாதத்தில் ஒரு நாள் என் அலுவலகத் துறைத் தலைவர் (ஒரு முதல் தலை முறை அமெரிக்கர்), என்னை அவசரமாக அழைத்தார். 'காசி, ஒரு தொலைபேசி வழி உரையாடலுக்கு என்னுடன் நீயும் இருக்க வேண்டும்' என்றார். இங்கிருப்பவர்கள் இந்தியாவில் இருந்து சேவை மற்றும் ஆட்களைப் பெறுவதற்காக அவ்வப் போது அங்குள்ளவர்களுடன் இத்தகைய உரையாடல்களில் ஈடுபடுவது உண்டு. ஒருவேளை இந்திய உச்சரிப்புப் புரியாமல் என்னைத் துணைக்கு அழைக்கிறார் என்று நினைத்து நானும் போனேன்.

ஆனால் பேச ஆரம்பித்து பரஸ்பரம் அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது தான் தெரிந்தது, அந்தப் பக்கம் இருப்பவர்கள் பிறவி ஆங்கிலேயர் என்று. ஆம், இந்த அமெரிக்கர்களுக்கு இங்கிலாந்துக்காரன் ஆங்கிலமே புரிவதில்லையாம். நான் பேசுவது அதே மாதிரி இருக்கிறதாம் (என்னுதும் புரிவதில்லை என்பதை இப்படியா சொல்ல வேண்டும், ஹும்..) அதனால் லண்டன்காரனுடன் பேசுவதற்கு என்னை மொழிபெயர்ப்பாளனாக கூப்பிட்டிருக்கிறார். எப்படிப் போகிறது கதை? இங்கே பேசுவது 'அமெரிக்கம்', 'ஆங்கிலம்' அல்ல. இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை சுவையாகக் கோர்த்த ஒரு தொகுப்பு எங்கோ பார்த்திருக்கிறேன், அதைத் திரும்பக் கண்டு பிடிக்கணும்.

நாளும் வளர்கிற நவீன மொழியின் கதையே இப்படி என்றால், தூக்கத்திலிருந்து எழுகிற எம் செம்மொழியின் கதை அப்படிப் போவதில் வியப்பேதும் இல்லை. உஷாவுக்கு பல ஈழத் தமிழ் சொற்கள் புரியவில்லை என்பது புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றுதான். ஆனால் ஆங்கிலத்தையே எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு புத்தகமோ கட்டுரையோ படிக்கும் போதும் புதுப்புது சொற்கள் நம்மைத் தாக்கிக் கொண்டே தான் இருக்கின்றன, நாம் அதன் சூழலை வைத்து அர்த்தம் செய்துகொண்டு மேலே போய்க்கொண்டேதான் இருக்கிறோம். அந்தச் சொல் அகராதியில் இருக்கிறது என்பதற்காக, ஒவ்வொரு சொல்லுக்கும் அகராதியைப் பார்த்துத் தெளிந்துகொண்டா அடுத்த அடிக்குப் போக முடியும். அப்படிப் படித்தால், படித்த உணர்வு கிட்டுகிறதா? நூற்றுக்குத் தொண்ணூறு சொற்கள் சூழலை வைத்து உணரக்கூடியதாகவே இருக்கின்றன. அந்த மிச்சம் சொற்கள் அரிதாகத் தான் உரையின் கருத்துக்கு உதவுகின்றன. எனவே ஒரு வட்டார வழக்கைப் படிக்க அகராதி வேண்டும் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.

ஒரு கொசுறு: அன்று ஒரு நாள் டிவியில் பிபிசி நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அது அமெரிக்க நடப்புகளைப் பற்றிய ஒன்று. அப்போது அங்கு வந்த என் 10 வயது மகன், அடுத்த வினாடி, 'ஏன் இங்கிலாந்து டிவியெல்லாம் பார்க்கிறீர்கள்' என்றான். அப்போது அங்கு டிவியில் மூலையில் வரும் முத்திரை கூட WXXI என்ற அமெரிக்க முத்திரை தான். 'எப்படி உனக்கு இது இங்கிலாந்து நிகழ்ச்சி என்று தெரியும்' என்று கேட்டேன். 'அதுதான் அவர்கள் பேச்சில் தெரிகிறதே' என்கிறான்! எனக்குத் தான் எல்லா மண்ணும் ஒண்ணாகவே தெரிகிறது!

என் தமிழ் - உன் தமிழ்

ஒரு சுவாரசியமான ஆனால் சற்று உணர்வுப் பூர்வமான ஒரு விவாதம் இன்று வலைப்பூ சஞ்சிகையில் நடக்கிறது. எங்கோ ஆரம்பித்தது, கடைசியில் ஈழத்தமிழ் இலக்கியவாதிகளுக்கும் கலைஞர்களுக்கும் சரியான அங்கீகாரம் கிடைக்கப் பெறவில்லை என்று குறைப்பட்டு, அதற்குக் காரணமாய் ஊடகங்களில் 'பிராமண ஆதிக்கம்' சுட்டிக் காட்டப்பட்டு, கொஞ்சம் காரசாரமாகவே போகிறதாய்த் தெரிகிறது. என் பங்குக்கு நானும் சிலதைச் சொன்னேன்.

வெங்கட் இதைப்பற்றிய தன் கருத்துகளைத் தன் வலைக்குறிப்புகளில் சற்று வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார். அவர் இறுதியாக முடிக்கும்போது கேட்டது:
பொதுவில் இந்தியத்தமிழர்கள் ஈழத்தமிழர்களை அறியாமையை விவாதிக்கையில் அதையும் ஈழத்தமிழ்-பார்ப்பனத்தமிழ், ஈழத்தமிழ்-கொங்குத்தமிழ், ரீதியில் விவாதித்து அதற்குக் காரணமாக நாடகங்களில், சங்கீதத்தில், குமுதங்களில் கோலோச்சியதாகச் (செட்டியார் குமுதத்தில் ஐயங்கார் சுஜாதா எத்தனை நாள் தாக்குபிடிக்க முடிந்தது என்பது கண்கூடு) சுட்டி அவர்கள்தான் இதற்கெல்லாம் காரணம் என்று தொனிக்க எழுத வேண்டுமா?

ரமணீதரன், தன் நீண்ட விளக்கத்தில், பிரபலமான பல இந்தியத் தமிழ் கலைஞர் மற்றும் இலக்கியவாதிக்கும் இணையான இலங்கைத் தமிழர் பெயரைக் குறிப்பிட்டு, அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று எழுதி இருந்தது, என்றுமே நிறைவேற்ற இயலாத குறை. நமக்கு என்றுமே ஒரு பழக்கம். பரவலாகத் தெரிந்த ஒரு பட்டம் அல்லது பெயர், இவற்றுக்கு, நம் குறுகிய வட்டத்துக்குள் ஒரு பதிலி தேடுவது. எல்லாருக்கும் தெரியும், இங்கிலாந்தில் மான்செஸ்டர் புகழ்பெற்ற சவுளித் தொழில் மையம். உடனே இந்திய அளவில் பம்பாய் 'இந்தியாவின் மான்செஸ்டர்' என்போம். பிறகு இன்னும் குறுக்கி, கோவை 'தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' என்பதும் இப்படியே. காமராஜ் 'தென்னகத்து காந்தி'யாவதும், கோவை, 'ஏழைகளின் ஊட்டி' ஆவதும் இந்த மனப்பான்மையின் வெளிப்பாடே. அண்ணா 'தென்னாட்டு பெர்னாட்ஷா' ஆவதும். இப்படி ஒவ்வொரு இந்தியத் தமிழ் பிரபலத்துக்கும் இலங்கையில் இணை இருக்க வாய்ப்பிருக்கிறது. அப்படியானால் எல்லா விதத்திலும் ஈழத்தமிழர் இந்தியத் தமிழரில் மாற்றுக் குறைந்தவர்களா என்றால் இல்லை. சனத் தொகை, வர்த்தக வீச்சு, போன்ற பல காரணங்களால், இயற்கையில் இந்தியத் தமிழரின் பிரபலத்தை அடைவது ஈழத்தமிழருக்கு கடினமான காரியம், என்பதைச் சொல்கிறேன். ஆகவே இவர்களுக்குக் கிடைத்த அங்கீகாரம் அவர்களுக்கு ஏன் இல்லை என்ற கேள்வி விடையில்லாத கேள்வி.

வெங்கட் கடைசியாகக் கேட்ட கேள்விக்கும் விடை சற்று சிரமமானதாகவே தோன்றுகிறது. என் சிறு அனுபவம் ஒன்று: விளையாட்டுப் பிள்ளைகள் வீடு கட்டுவது போன்று, அம்மாவிடம் சப்பாத்தி மாவை வாங்கி தானும் சப்பாத்தி செய்வது போல், நானும் என் பதின் வயதுகளில் கதை ஒன்று எழுத எத்தனித்தேன். என் உலகம் மிகமிகச்சிறியது. நான் கண்ட ஊர்கள் சித்தூரும், கொஞ்சம் கோவை, பொள்ளாச்சி, அவ்வளவே. நான் படித்த புத்தகங்கள் குமுதம், கல்கண்டு, கொஞ்சம் விகடன், மாலைமதி, ராணிமுத்து போன்றவை. அன்று எந்த டிவியும் இல்லை என் ஆத்ம நண்பன் (அவன் ஐயங்கார் என்பது சில வருடங்களுக்கு முன்பு தான் தெரியும், அய்யர் என்று அப்போதே கேள்விப் பட்டிருக்கிறேன்) கூட என்றுமே பிராமணத் தமிழ் பேசி நான் கேட்டதில்லை. நான் எழுதிய அந்தக் கிறுக்கலில் முதல் வரி இப்படி ஆரம்பித்தது. 'ஏன்னா, சாயந்திரம் வரும்போது நான் சொன்னதெல்லாம் வாங்கிட்டு வருவேளா?'. எனக்கு எங்கிருந்து வந்தது இந்தத் தமிழ்? என்னையும் அறியாமல், கதை என்றால் அது இந்த மாதிரித் தான் இருக்கும் (அதற்குத் 'பிராமணத் தமிழ்' என்று பெயர் என்று கூடத் தெரியாது!) என்பது மாதிரி என் அடிமனதில் அப்படியொரு எண்ணம் படிந்திருந்ததற்கு என்ன காரணமாயிருக்க முடியும்? அன்று வரை நான் படித்திருந்த கதைகளும் நாவல்களும் தவிர என்னால் வேறு ஒன்றையும் சுட்டிக்காட்ட முடிய வில்லை.

ஆனால் ஒன்று, இதெல்லாம் கால ஒட்டத்தில் மாறிக்கொண்டு வரும் விஷயங்கள். சென்னையிலேயே மயிலாப்பூர் வீடும், மவுன்ட் ரோடு ஆபீசுமாய் கதைகள் வந்தபோது, ஒரு ராஜேஷ்குமார் கோவையிலிருந்து வந்து காந்திபுரத்தையும் சாயிபாபா காலனியிலும் கதையை நகர்த்தினார். அவர் எழுதினதெல்லாம் இலக்கியமா என்பதல்ல இங்கு பிரச்னை. அது ஒரு மாற்றம். ஆனால் ஒரு மதுரைக் காரருக்கோ, திருச்சிக் காரருக்கோ, இன்னும் எரிச்சலாய்த் தான் இருக்கும். ஏன் கதைகள் நம் ஊரில் நடப்பதில்லையா? என்று, இதற்கு அது மருந்தாகாது. ஒரே சூழல், ஒரே வட்டார வழக்கு இவையெல்லாம் மாற வேண்டும். அதற்கு இலக்கியம் படைப்பவர்கள் கொஞ்சம் விசாலமாய்ச் சிந்திக்க வேண்டும். போனதை கூறு போட்டு ஆராய்வதில் வலிகளே மிஞ்சும். உலகம் போகும் போக்கைப் பார்த்து நம் தமிழ்ச் சமுதாயத்தை முன்னேற்ற என்ன வழிகள் என்று தொலை நோக்கோடு நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். இந்தப் பிராந்திய வாதம் நம்மை எங்கும் கொண்டு சேர்க்காது. வேண்டுமானால், 'கொங்கு நாட்டுப் பாரதி'களையும், ஈழத்து'சிவாஜி'யையும் கொடுக்கும், ஆனால் நாம் குறிவைக்க வேண்டியது, இந்தியாவுக்கும் வெளியில், ஆசியாவுக்கும் வெளியில், உலகளாவிய சமுதாயத்தில் நம்மில் சிலர் பெயர் எடுக்க வேண்டும். இந்தத் 'தமிழ் நாட்டு நோபெல்', 'தென்னகத்து ஆஸ்கார்' போன்ற மாயைகளிலிருந்து விடுபடவேண்டும்!

வியாழன், நவம்பர் 27, 2003

விடுகதைக்கு விடை - இற்றைப்பாடு

விடுகதை இங்கே

நண்பர் கண்ணன் பார்த்தசாரதி அருமையாக கதை சொல்லி விடை கொடுத்திருந்தார், ஆனாலும் இந்த இலவச சேவைகளின் சாயம் வெளுத்து, இப்போது அந்தப் படம் தெரிவதில்லை. நண்பர் பாலாஜி 'எங்கே விடை? இங்கே கொடு' என்று கேட்டதால் நான் விடையை மட்டும் இங்கு மீண்டும் கொடுக்கிறேன்.

கந்தசாமி மகன் வெறும் பத்து மாடுகளை நட்சத்திர வடிவத்தில் நிறுத்தி தான் ஒப்புக்கொண்டபடி ஒப்படைத்தாய் வாதாடினான். இதோ கீழே இருப்பது போல்.



செவ்வாய், நவம்பர் 25, 2003

ரயிலே உன்னைக் காதலிக்கிறேன் - 3

பாகம் - 1, பாகம் - 2 இங்கே.

இந்த ரயில் காதலை முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போகலாம்.

இப்படியாக வளர்ந்த காதல், பாலிடெக்னிக் இறுதியாண்டில் 10 நாள் சென்னை-பெங்களூர் சுற்றுலா ரயிலிலேயே என்றதும், மேலும் அதிகரித்தது. ரயிலைக் கிட்டத்தில் பார்த்து, அதனுடனே சில இரவுகளையும் கழித்து (சே, சொல்ல வெட்கமாயிருக்கிறது :-) காதல் வளர்ந்து கொண்டே இருந்தது.

இன்னும் வளர்க்காமல் இனி இந்தப் பைத்தியம் இறங்கின கதையையும் சொல்லிவிடுகிறேன். கொஞ்சம் காதலியை வெறுக்க ஆரம்பித்தது திருவள்ளூரில் இருந்து குரோம்பேட்டை MIT சென்று இரவு 11:30க்கு திரும்ப திருவள்ளூர் வந்து சேரும்வண்ணம் படித்த அந்த பட்ட மேல்படிப்பு. கொடுமையிலும் கொடுமை, தினம் இரண்டு மணி நேரம் (ஒரு வழி!), அதுவும் கடும் பசியுடன், அரைத்தூக்கத்துடன்...எப்படியடா இவளிடமிருந்து விடுபடுவது என்று சமயம் பார்த்துக்கொண்டிருக்க, பெற்றோர் பார்த்து வைத்த அத்தை பெண்ணாய் வந்தது IITயின் பட்ட மேல்படிப்புக்கான வாய்ப்பு. விட்டேன் சவாரி!, இல்லையில்லை ரயில் சவாரியை விட்டேன். அப்படியே எல்லாத்தையும் தூக்கிப்போட்டு விட்டு ஓடிப்போனேன். இல்லாவிட்டால் வினோபா, மீனாக்ஸ் போல நானும் MIT பட்டதாரி (அதென்ன அப்துல் கலாம், சுஜாதா என்றுதான் சொல்லணும்னு கட்டாயமா என்ன?) என்று சொல்லியிருப்பேன். இப்போது வெறும் IITயோடு போய் விட்டது;-)

எல்லாக் காதல்களையும் போல் இதுவும் முற்றாய்க் கசப்பதற்கு ஒரு வேளை வரவேண்டாமா? வந்தது. அமெரிக்கா வருவதற்கு முன் கிட்டத்தட்ட ஒரு வருடம் கோவை-சென்னை இடையே வாராவாரம் பயணிக்கவேண்டி வந்ததும், மீண்டும் ரயில் மங்கை வாழ்வில் எட்டிப் பார்த்தாள். ஒரு நாளா ரெண்டு நாளா, 48 வாரம் பயணித்தேன் ஒவ்வொரு வெள்ளியன்றும் சென்னையிலிருந்து, பின் ஞாயிறன்று கோவையிலிருந்து. இனிமேல் ரயில் என்றால் 'நானில்லை, வரமாட்டேன்' என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஆனது. 'நீ வந்தால்தான் ஆச்சு' என்று அமெரிக்கா அழைக்க, ஐம்பதாவது வாரக் கொண்டாட்டத்தையும்கூட மறந்து அவளை மீண்டும் விட்டுவிட்டு இங்கு ஓடி வந்துவிட்டேன். ஆனாலும் அன்று 'வலைப்பூ'வில் அவளின் அட்டகாசமான படம் வரவும் பழசெல்லாம் மனதில் வந்து முதல் மரியாதை சிவாஜியாய் ஆட்டியது. ம்ஹும்..அந்த மலரும் நினைவுகள்!

அது சரி, அமெரிக்காவில் எத்தனை பேர் ரயிலில் போயிருக்கிறீர்கள், நான் அதையும் பார்த்துவிட்டேன். ஆல்பனியிலிருந்து எங்க ஊருக்கு ஒரு இரவில்(!) அமெரிக்க ரயிலையும் பார்த்தாச்சு. ஐரோப்பா ரயிலும் பார்த்தாச்சு, இன்னும் இந்த ஜப்பான் மாமா பெற்ற புல்லட் ரயில் ஒன்றையும் பார்த்துவிட்டுத் தான் இந்தக் கட்டை வேகும்!

ஒரு படம், சிறு விளக்கம்


இந்தப் படத்தை ஒரு ரயில் காதல் கதை அத்தியாயத்துக்குக் கொசுறாக ஜோக்குக்கு பயன்படுத்தலாம் என்று வைத்திருந்தேன். ஆனால் அண்டை வீட்டு அன்பர் அளித்த அன்பான விருந்தின் மகிமையால் இரண்டு நாள் வயிற்றுவலியோ வலி. ராத்திரி தூங்க முடியாத அளவுக்கு வலி. நான் அதில் விழுந்துவிட்டதால் என் நிலையை விளக்கவே இந்தப் படம் பயன்பட்டது. இன்னும் நம்மில் நிறையப்பேர் விருந்தினரை உபசரிப்பதென்றால், அவர்கள் சாப்பிட முடியாமல் விழிக்கும் அளவுக்கு தட்டை நிரப்புவது தான் ஒரே வழி என்று நம்புவதால், அதே வழியில் இந்த அன்பரும் போனதால்... ம்.. என்ன சொல்லி என்ன செய்ய, எங்கே போனது என் புத்தி? இத்தனைக்கும் சாப்பாடு மிக மிக சுமார். ம்ம்..கிரஹணம் பிடிக்கவேண்டும் என்று பஞ்சாங்கத்தில் எழுதியிருந்தால் சுப்ரீம் கோர்ட் நினைத்தாலும் மாற்ற முடியாது. இதெல்லாம் என்ன சாதாரணம்.

ஒரு நண்பர் இந்தப் படத்தை எதுக்கு இங்கே போட்டிருக்கிறாய் என்று கேட்டதால், எல்லாரும் பரியைப்போல் விவரமானவர்களாய் இல்லாததால், ஒரு சிறு விளக்கம்: ரயிலை இயற்கையாகப் படம் வரைய ஆசைப்பட்டவரின் கடைசி ஒவியம் இது:-)

ஞாயிறு, நவம்பர் 23, 2003

ஒரு சின்ன ஆராய்ச்சி

பொது நூலகம் போன்ற இடங்களில் உள்ள, கட்டுப்பாடுகளுடன் கூடிய கணினியொன்றில் இருந்து நான் இதைப் பதிக்கிறேன். டெம்ப்ளேட்டில் சில மாறுதல்கள் செய்தவுடன், இப்பொது இயங்கும் எழுத்துரு முழுதும் பயன் தருகிறது. இதன் மூலம், வலைப்பதிவுகளைப் படிக்க முடிவது மட்டும் இல்லாமல், கருத்துச் சேவை சன்னலிலும் தமிழ், அதுவும் TSCII மற்றும் யுனிகோட் இரண்டிலும் இடப்பட்ட கருத்துக்களைப் படிக்க முடிகிறது.

சுரதாவின் எழுத்துரு மாற்றியுடன் சேர்ந்து இப்போது, எந்தக் கட்டுப்படுத்தப்பட்ட இடத்தில் உள்ள வின்டோஸ் கணினியிலும் இப்போது ஒரு பயனர் வலைப்பதித்தல், கருத்தைப் படித்தல், கருத்துப் பதித்தல் ஆகிய அனைத்தும் செய்ய முடிகிறது.

இவற்றை எப்படி செய்வது என்பதை விவரமாக அ.கே.கே வில் கொடுப்போம்.

இன்னும் இதைப் படிக்கிறவர்கள் ஏதும் குறை இருப்பின் தெரியப்படுத்தினால் மிகவும் உதவியாக இருக்கும்.

நன்றி!

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...