ஒரு சுவாரசியமான ஆனால் சற்று உணர்வுப் பூர்வமான ஒரு விவாதம் இன்று வலைப்பூ சஞ்சிகையில் நடக்கிறது. எங்கோ ஆரம்பித்தது, கடைசியில் ஈழத்தமிழ் இலக்கியவாதிகளுக்கும் கலைஞர்களுக்கும் சரியான அங்கீகாரம் கிடைக்கப் பெறவில்லை என்று குறைப்பட்டு, அதற்குக் காரணமாய் ஊடகங்களில் 'பிராமண ஆதிக்கம்' சுட்டிக் காட்டப்பட்டு, கொஞ்சம் காரசாரமாகவே போகிறதாய்த் தெரிகிறது. என் பங்குக்கு நானும் சிலதைச் சொன்னேன்.
வெங்கட் இதைப்பற்றிய தன் கருத்துகளைத் தன் வலைக்குறிப்புகளில் சற்று வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார். அவர் இறுதியாக முடிக்கும்போது கேட்டது:
பொதுவில் இந்தியத்தமிழர்கள் ஈழத்தமிழர்களை அறியாமையை விவாதிக்கையில் அதையும் ஈழத்தமிழ்-பார்ப்பனத்தமிழ், ஈழத்தமிழ்-கொங்குத்தமிழ், ரீதியில் விவாதித்து அதற்குக் காரணமாக நாடகங்களில், சங்கீதத்தில், குமுதங்களில் கோலோச்சியதாகச் (செட்டியார் குமுதத்தில் ஐயங்கார் சுஜாதா எத்தனை நாள் தாக்குபிடிக்க முடிந்தது என்பது கண்கூடு) சுட்டி அவர்கள்தான் இதற்கெல்லாம் காரணம் என்று தொனிக்க எழுத வேண்டுமா?
ரமணீதரன், தன் நீண்ட விளக்கத்தில், பிரபலமான பல இந்தியத் தமிழ் கலைஞர் மற்றும் இலக்கியவாதிக்கும் இணையான இலங்கைத் தமிழர் பெயரைக் குறிப்பிட்டு, அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று எழுதி இருந்தது, என்றுமே நிறைவேற்ற இயலாத குறை. நமக்கு என்றுமே ஒரு பழக்கம். பரவலாகத் தெரிந்த ஒரு பட்டம் அல்லது பெயர், இவற்றுக்கு, நம் குறுகிய வட்டத்துக்குள் ஒரு பதிலி தேடுவது. எல்லாருக்கும் தெரியும், இங்கிலாந்தில் மான்செஸ்டர் புகழ்பெற்ற சவுளித் தொழில் மையம். உடனே இந்திய அளவில் பம்பாய் 'இந்தியாவின் மான்செஸ்டர்' என்போம். பிறகு இன்னும் குறுக்கி, கோவை 'தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' என்பதும் இப்படியே. காமராஜ் 'தென்னகத்து காந்தி'யாவதும், கோவை, 'ஏழைகளின் ஊட்டி' ஆவதும் இந்த மனப்பான்மையின் வெளிப்பாடே. அண்ணா 'தென்னாட்டு பெர்னாட்ஷா' ஆவதும். இப்படி ஒவ்வொரு இந்தியத் தமிழ் பிரபலத்துக்கும் இலங்கையில் இணை இருக்க வாய்ப்பிருக்கிறது. அப்படியானால் எல்லா விதத்திலும் ஈழத்தமிழர் இந்தியத் தமிழரில் மாற்றுக் குறைந்தவர்களா என்றால் இல்லை. சனத் தொகை, வர்த்தக வீச்சு, போன்ற பல காரணங்களால், இயற்கையில் இந்தியத் தமிழரின் பிரபலத்தை அடைவது ஈழத்தமிழருக்கு கடினமான காரியம், என்பதைச் சொல்கிறேன். ஆகவே இவர்களுக்குக் கிடைத்த அங்கீகாரம் அவர்களுக்கு ஏன் இல்லை என்ற கேள்வி விடையில்லாத கேள்வி.
வெங்கட் கடைசியாகக் கேட்ட கேள்விக்கும் விடை சற்று சிரமமானதாகவே தோன்றுகிறது. என் சிறு அனுபவம் ஒன்று: விளையாட்டுப் பிள்ளைகள் வீடு கட்டுவது போன்று, அம்மாவிடம் சப்பாத்தி மாவை வாங்கி தானும் சப்பாத்தி செய்வது போல், நானும் என் பதின் வயதுகளில் கதை ஒன்று எழுத எத்தனித்தேன். என் உலகம் மிகமிகச்சிறியது. நான் கண்ட ஊர்கள் சித்தூரும், கொஞ்சம் கோவை, பொள்ளாச்சி, அவ்வளவே. நான் படித்த புத்தகங்கள் குமுதம், கல்கண்டு, கொஞ்சம் விகடன், மாலைமதி, ராணிமுத்து போன்றவை. அன்று எந்த டிவியும் இல்லை என் ஆத்ம நண்பன் (அவன் ஐயங்கார் என்பது சில வருடங்களுக்கு முன்பு தான் தெரியும், அய்யர் என்று அப்போதே கேள்விப் பட்டிருக்கிறேன்) கூட என்றுமே பிராமணத் தமிழ் பேசி நான் கேட்டதில்லை. நான் எழுதிய அந்தக் கிறுக்கலில் முதல் வரி இப்படி ஆரம்பித்தது. 'ஏன்னா, சாயந்திரம் வரும்போது நான் சொன்னதெல்லாம் வாங்கிட்டு வருவேளா?'. எனக்கு எங்கிருந்து வந்தது இந்தத் தமிழ்? என்னையும் அறியாமல், கதை என்றால் அது இந்த மாதிரித் தான் இருக்கும் (அதற்குத் 'பிராமணத் தமிழ்' என்று பெயர் என்று கூடத் தெரியாது!) என்பது மாதிரி என் அடிமனதில் அப்படியொரு எண்ணம் படிந்திருந்ததற்கு என்ன காரணமாயிருக்க முடியும்? அன்று வரை நான் படித்திருந்த கதைகளும் நாவல்களும் தவிர என்னால் வேறு ஒன்றையும் சுட்டிக்காட்ட முடிய வில்லை.
ஆனால் ஒன்று, இதெல்லாம் கால ஒட்டத்தில் மாறிக்கொண்டு வரும் விஷயங்கள். சென்னையிலேயே மயிலாப்பூர் வீடும், மவுன்ட் ரோடு ஆபீசுமாய் கதைகள் வந்தபோது, ஒரு ராஜேஷ்குமார் கோவையிலிருந்து வந்து காந்திபுரத்தையும் சாயிபாபா காலனியிலும் கதையை நகர்த்தினார். அவர் எழுதினதெல்லாம் இலக்கியமா என்பதல்ல இங்கு பிரச்னை. அது ஒரு மாற்றம். ஆனால் ஒரு மதுரைக் காரருக்கோ, திருச்சிக் காரருக்கோ, இன்னும் எரிச்சலாய்த் தான் இருக்கும். ஏன் கதைகள் நம் ஊரில் நடப்பதில்லையா? என்று, இதற்கு அது மருந்தாகாது. ஒரே சூழல், ஒரே வட்டார வழக்கு இவையெல்லாம் மாற வேண்டும். அதற்கு இலக்கியம் படைப்பவர்கள் கொஞ்சம் விசாலமாய்ச் சிந்திக்க வேண்டும். போனதை கூறு போட்டு ஆராய்வதில் வலிகளே மிஞ்சும். உலகம் போகும் போக்கைப் பார்த்து நம் தமிழ்ச் சமுதாயத்தை முன்னேற்ற என்ன வழிகள் என்று தொலை நோக்கோடு நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். இந்தப் பிராந்திய வாதம் நம்மை எங்கும் கொண்டு சேர்க்காது. வேண்டுமானால், 'கொங்கு நாட்டுப் பாரதி'களையும், ஈழத்து'சிவாஜி'யையும் கொடுக்கும், ஆனால் நாம் குறிவைக்க வேண்டியது, இந்தியாவுக்கும் வெளியில், ஆசியாவுக்கும் வெளியில், உலகளாவிய சமுதாயத்தில் நம்மில் சிலர் பெயர் எடுக்க வேண்டும். இந்தத் 'தமிழ் நாட்டு நோபெல்', 'தென்னகத்து ஆஸ்கார்' போன்ற மாயைகளிலிருந்து விடுபடவேண்டும்!
எனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எழுத்தென்னும் அற்புதம்
நண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...
-
அதென்ன தமிழனுக்கு மட்டும் இந்தக் கேவலம்? என்னமோ அனாதப்பயலப் பாக்கற மாதிரியில்ல பாக்கறானுவ, எல்லாவனும்! எல்லா நாட்டுக்காரனுக்கும், அட நம்ம இந...
-
தமிழ்நாட்டின் மிக அதிக வசூல்திறனுள்ளதாகச் சொல்லப்படும் நந்தனம் சிக்னல். மாலை 8 மணி. தி. நகரிலிருந்து வந்து தெற்குப்புறம் திரும்பவேண்டும். என...
-
மதி கந்தசாமியின் நேரமோ நேரம்! தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்ட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக