பாகம் - 1, பாகம் - 2 இங்கே.
இந்த ரயில் காதலை முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போகலாம்.
இப்படியாக வளர்ந்த காதல், பாலிடெக்னிக் இறுதியாண்டில் 10 நாள் சென்னை-பெங்களூர் சுற்றுலா ரயிலிலேயே என்றதும், மேலும் அதிகரித்தது. ரயிலைக் கிட்டத்தில் பார்த்து, அதனுடனே சில இரவுகளையும் கழித்து (சே, சொல்ல வெட்கமாயிருக்கிறது :-) காதல் வளர்ந்து கொண்டே இருந்தது.
இன்னும் வளர்க்காமல் இனி இந்தப் பைத்தியம் இறங்கின கதையையும் சொல்லிவிடுகிறேன். கொஞ்சம் காதலியை வெறுக்க ஆரம்பித்தது திருவள்ளூரில் இருந்து குரோம்பேட்டை MIT சென்று இரவு 11:30க்கு திரும்ப திருவள்ளூர் வந்து சேரும்வண்ணம் படித்த அந்த பட்ட மேல்படிப்பு. கொடுமையிலும் கொடுமை, தினம் இரண்டு மணி நேரம் (ஒரு வழி!), அதுவும் கடும் பசியுடன், அரைத்தூக்கத்துடன்...எப்படியடா இவளிடமிருந்து விடுபடுவது என்று சமயம் பார்த்துக்கொண்டிருக்க, பெற்றோர் பார்த்து வைத்த அத்தை பெண்ணாய் வந்தது IITயின் பட்ட மேல்படிப்புக்கான வாய்ப்பு. விட்டேன் சவாரி!, இல்லையில்லை ரயில் சவாரியை விட்டேன். அப்படியே எல்லாத்தையும் தூக்கிப்போட்டு விட்டு ஓடிப்போனேன். இல்லாவிட்டால் வினோபா, மீனாக்ஸ் போல நானும் MIT பட்டதாரி (அதென்ன அப்துல் கலாம், சுஜாதா என்றுதான் சொல்லணும்னு கட்டாயமா என்ன?) என்று சொல்லியிருப்பேன். இப்போது வெறும் IITயோடு போய் விட்டது;-)
எல்லாக் காதல்களையும் போல் இதுவும் முற்றாய்க் கசப்பதற்கு ஒரு வேளை வரவேண்டாமா? வந்தது. அமெரிக்கா வருவதற்கு முன் கிட்டத்தட்ட ஒரு வருடம் கோவை-சென்னை இடையே வாராவாரம் பயணிக்கவேண்டி வந்ததும், மீண்டும் ரயில் மங்கை வாழ்வில் எட்டிப் பார்த்தாள். ஒரு நாளா ரெண்டு நாளா, 48 வாரம் பயணித்தேன் ஒவ்வொரு வெள்ளியன்றும் சென்னையிலிருந்து, பின் ஞாயிறன்று கோவையிலிருந்து. இனிமேல் ரயில் என்றால் 'நானில்லை, வரமாட்டேன்' என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஆனது. 'நீ வந்தால்தான் ஆச்சு' என்று அமெரிக்கா அழைக்க, ஐம்பதாவது வாரக் கொண்டாட்டத்தையும்கூட மறந்து அவளை மீண்டும் விட்டுவிட்டு இங்கு ஓடி வந்துவிட்டேன். ஆனாலும் அன்று 'வலைப்பூ'வில் அவளின் அட்டகாசமான படம் வரவும் பழசெல்லாம் மனதில் வந்து முதல் மரியாதை சிவாஜியாய் ஆட்டியது. ம்ஹும்..அந்த மலரும் நினைவுகள்!
அது சரி, அமெரிக்காவில் எத்தனை பேர் ரயிலில் போயிருக்கிறீர்கள், நான் அதையும் பார்த்துவிட்டேன். ஆல்பனியிலிருந்து எங்க ஊருக்கு ஒரு இரவில்(!) அமெரிக்க ரயிலையும் பார்த்தாச்சு. ஐரோப்பா ரயிலும் பார்த்தாச்சு, இன்னும் இந்த ஜப்பான் மாமா பெற்ற புல்லட் ரயில் ஒன்றையும் பார்த்துவிட்டுத் தான் இந்தக் கட்டை வேகும்!
எனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எழுத்தென்னும் அற்புதம்
நண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...
-
அதென்ன தமிழனுக்கு மட்டும் இந்தக் கேவலம்? என்னமோ அனாதப்பயலப் பாக்கற மாதிரியில்ல பாக்கறானுவ, எல்லாவனும்! எல்லா நாட்டுக்காரனுக்கும், அட நம்ம இந...
-
தமிழ்நாட்டின் மிக அதிக வசூல்திறனுள்ளதாகச் சொல்லப்படும் நந்தனம் சிக்னல். மாலை 8 மணி. தி. நகரிலிருந்து வந்து தெற்குப்புறம் திரும்பவேண்டும். என...
-
மதி கந்தசாமியின் நேரமோ நேரம்! தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்ட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக