அதென்ன தமிழனுக்கு மட்டும் இந்தக் கேவலம்? என்னமோ அனாதப்பயலப் பாக்கற மாதிரியில்ல பாக்கறானுவ, எல்லாவனும்! எல்லா நாட்டுக்காரனுக்கும், அட நம்ம இந்தியாவிலேயே மத்த மாநிலத்தவங்களுக்குக்கூட இருக்காமாப்பா, நமக்கு மட்டும் இல்லியாம்ப்பா...என்னதுங்கிறீங்களா? அதுதாங்க:
கடேசிப்பேர், ஒட்டுப்பேர், குடும்பப்பேர்... இங்லீஷில் சொன்னா last name, surname, family name.
எனக்குத் தெரிஞ்சு நம்ம தமிழ்மக்கள் எல்லாருக்குமே ஒருத்தருக்கு ஒரே பேருதான். (செல்லப்பேர், லொள்ளுப்பேர், பட்டப்பேர், குலதெய்வப்பேர், அப்பாரு பேர், அப்பச்சி பேர், புனைபேர், முகமூடிப்பேர் இதெல்லாம் கணக்கில் சேர்க்கறதாயில்லை, சட்டபூர்வமா, சர்டிபிகேட்டில் போடறது மட்டும்தான் பேச்சு
) அது நம்ம அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி - யாரோ வெச்சதா இருக்கும். அதனால அது வெச்சபேரு, இங்லீஷில் given name அல்லது first name. சண்முகம், ஆறுச்சாமி, சுந்தரம், ராஜேந்திரன்னு எதுவானாலும் ஒருபேர், ஒரே ஒரு பேர். அதுக்குமேல் கிடையாது.
ஆனா பாஸ்போர்ட் எடுக்கும்போது கேப்பான், 'கடேசிப்பேரு என்ன'ண்ணு. அங்கதான் ஆரம்பிக்கும் வில்லங்கம். அதுவரைக்கும் ஒரு இனிஷியலை ஒட்டிக் கூட்டியாந்திருப்போம், சில பெரியவங்க ரெண்டு இனிஷியலும்கூட வெச்சிருப்பாங்க (இதில கேகேஎஸ்எஸ்ஆர்ஆர்- எல்லாம் தனி). உடனே அந்த இனிஷியலை நீட்டி முழக்கி, 'இதுதாங்க கடேசிப்பேரு'ன்னு சொல்லி... அப்பத்திக்கு வேலை முடிஞ்சிரும். அப்புறம் இருக்குபாருங்க விவகாரம்..
எங்கப்பாவுடைய வெச்சபேரு என்னோட கடேசிப்பேரு ஆயிட்டுது. எனக்கு வெச்சபேரு என் மகனுக்குக் கடேசிப்பேரு ஆச்சு. இனிஷியலை இழுத்துவிட்டா அப்படித்தானே வருது. அங்கதான் நம்மளை எல்லாவனும் கேவலமாப் பாக்குறான். ஒரு குடும்பத்துல கடேசிப்பேரு எல்லாருக்கும் ஒண்ணாத்தான் இருக்கணுமாமில்லே. ஒவ்வொரு இடத்திலேயும், 'என் கடேசிப்பேரு வேற, என் மகனின் கடேசிப்பேரு வேற'ன்னு சொன்னா ஏன் மேலேயும் கீழேயும் பாக்கறானுவ?
இதிலே, 'என் வெச்சபேருதான் என் மகனின் கடேசிப்பேரு'ன்னா இன்னும் திருதிருன்னு முழிச்சு எனக்குத்தான் புரியலைன்னு நினைச்சுக்கிறாங்க. கடேசிப்பேரு இல்லேன்னா என்னவாம்? இதிலே அன்னிக்கு இங்க ஒரு வெள்ளக்காரன் பெருமையாச் சொல்றான், ஊடால நடுப்பேருன்னு வேற ஒண்ணு இருக்காமாப்பா...இங்லீஷில middle name. அப்பாவீட்டிலிருந்து கடேசிப்பேரு வந்துருமாம், அம்மா வீட்டு சீதனமா இந்த நடுப்பேராம். நம்ம ஒரு பேரைச் சொல்லவே இவங்க நாக்கு சுளுக்கிக்குது, ஓரசை, ஈரசை பேராப் பழகிட்டு, நம்ம 'எக்கச்சக்க அசை'ப் பேரை வெட்டிப்புடறாங்க. இதிலே அதே பாணியில் நடுப்பேரும் கடேசிப்பேரும் வெச்சுட்டா, ஒருத்திகிட்டக்கூட போனில் பேசி பேரை முழுசாச் சொல்லமுடியாது. என் சூப்பர்நேம் 'காசிலிங்கம்', முதல் மாசம் எலக்ட்ரிக் பில்லில் Kefilangham ஆகியிருந்தது. இன்னும் லக்ஷ்மிநரசிம்மன், வெங்கடரமணன் எல்லாம் என்ன பாடுபடறாங்களோ!
இது எப்போ ஆரம்பிச்ச பிரச்னை? 400 வருஷம் பின்னோக்கிப் போனாக்கூட 'வில்லியம்' ஷேக்ஸ்பிய'ருக்குக்கூட ரெண்டுபேரும் இருந்துருக்கு போலத்தெரியுது. 'வில்லியம்' 'வொர்ட்ஸ்வொர்த்', 'ஜான்' 'மில்டன்' எல்லாம் அப்படியேதான் போல. நம்ம கம்பரும் வள்ளுவனும் இளங்கோவும் கடேசிப்பேரு வெச்சிருந்தாமாதிரித் தெரியலையே. அட நம்ம முண்டாசு, அவரு பேரில் 'சி.' கூட சின்னசாமி அய்யர்தானே, அது அவரோட அப்பா பேருதானே. அப்படின்னா எப்பவுமே நம்ம மக்கள் இப்படிக் கடேசிப்பேரு, குடும்பப்பேருன்னு வெச்சிக்கலையா?
இந்த கடேசிப்பேரு சமாச்சாரம் மட்டும் இல்லீன்னா, இந்திராகாந்தியும், ராஜீவ்காந்தியும் அட நம்ம பீட்சாலேண்ட்-பார்ன் சோனியாகாந்தியும் இந்த அளவுக்குப் பேர் வாங்கியிருப்பாங்களான்னு தெரியலை. எனக்குத் தெரிந்து, 'மகாத்மா காந்தியும் இவங்களும் ஏதோ மாமன் மாச்சான் கூட்டம்'னு நெனைக்கிறவங்க எத்தனைபேரு!
இங்கே சில கன்னடத்து நண்பருங்க 'ஹெக்டே'ன்னு, 'காமத்'துன்னு கடேசிப்பேரு வெச்சிருக்காங்க. தேலுங்குதேசத்துக்காரங்க 'ராவு' 'ரெட்டி'ன்னு சொல்லிக்கிறாங்க, சேட்டன்மாரு 'நாயர்' 'பிள்ளை'ங்கிறாங்க. இதெல்லாம் எனக்கு வெறும் கடேசிப் பேராத்தெரியலை. கூடவே ஜாதியயையும் தம்பட்டமடிக்கறமாதிரியில்ல தெரியுது. ஒருவேளை இந்தக் கடைசிப்பேரு ஜாதியின் அடையாளம், அதனால இது வேண்டாம்னு நம்ம பெரியவங்க இதைத் தூக்கிக் கடாசிட்டாங்களோ?
நான் ஒண்ணு பண்ணிடலாமுன்னு இருக்கேன். இந்தப் பேர்ப்பஞ்சம் என்னோடு போகட்டும். என் மக்களுக்கு என் வெச்சபேரை கடேசிப்பேரா ஆக்கியாச்சு, அதுவும் எல்லா இடத்திலும் கெட்டியா உக்காந்திருச்சு. இனிமேல் என் பேரப்புள்ளைங்களுக்கும் இதையே கடேசிப்பேராக்கிட்டா என்ன? என் குடும்பம் இனி 'காசிலிங்கம்' குடும்பம்னு இருக்கட்டுமே. அட தாத்தா பேரை பேரனுக்கு வைக்கிறது நம்ம ஊரு வழக்கம் தானே. என் பேரனுக்கு என் பேர்தான் கடேசிப்பேரு. ஸ்டைலா ஒருபேரை வெச்சு, அதை 'வெச்ச பேரு' ஆக்கிடலாம். ஸ்டைலுக்கு ஸ்டைல், சாங்கியத்துக்கு சாங்கியம், சட்டத்துக்கு சட்டம். ஒரே கல்லுல மூணு மாங்கா!
தமிழ்மணமெல்லாம் வரும் முன்னாடி எழுதியது. மீள்பதிவு. இன்னும் நிலைமை மாறியிருக்கிறமாதிரி தெரியலை.