பல பதிவுகள் திரட்டிப் பட்டியலிலிருந்து விலக்கப்பட்டது தவிர்க்க முடியாத தற்காலிக நடவடிக்கை என்பதை விளக்கிச் சொல்லியும் இங்கே அதைப் புரிந்துகொண்டவர்களை விட புரிந்துகொள்ளாதவர்களே அதிகம். சில நிரலாளர்களை வைத்து அடுத்த பதிப்பைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டிருந்தேன். எப்படியும் சில வாரங்களில் முடியாவிட்டாலும் ஓரிரு மாதங்களில் இந்த விலக்கத்துக்கு முடிவு கட்டமுடியும் என்று உறுதியாக நம்பினேன். ஏனென்றால் புதிய பதிப்பில் தானியங்கியாக எல்லாப் பதிவுகளையும் சுற்றிவந்து புது இடுகையைத் தேடுவதற்குப் பதிலாக, அவரவரே, இடுகை எழுதிப் பதிப்பித்த உடனேயே அடுத்த நொடியிலேயே தமிழ்மணம் திரட்டியில் சேர்க்கும் வழிசெய்ய எண்ணியிருந்தேன். நம் சமூகத்தில் இன்னும் பலர் தன் உரிமை/கடமை, அடுத்தவர் சிரமம் போன்ற எல்லாவற்றையும் பின்னுக்குத்தள்ளி தன்னலம் ஒன்றையே குறிக்கோளாகவும், அடுத்தவர் செயலுக்கு எப்போதும் ஒரு உள்நோக்கம் கற்பிப்பதில் முனைப்பாகவும் இருப்பது இப்போது தெளிவாக விளங்கியது. ஏதேதோ பிரச்னைகளில் என் மேல் காட்டம் கொண்டு அடங்கிப்போனவர்களெல்லாம், இந்த வாய்ப்பைக் கையில் எடுத்து என்னை விளாசி மகிழ்ந்தார்கள்.
இந்தக் கூச்சல்களுக்குப் பதில் சொல்வது இயலாதது மட்டுமல்ல, வீண்வேலை என்றும் நம்பியதால், எல்லாவற்றையும் புறந்தள்ளி, என் மீது வைக்கப்பட்ட தாக்குதல்களுக்கு என் ஒரே பதிலாக, அனைவருக்கும் இடம் கிடைக்கும் புதிய தமிழ்மணத்தை வெளியிடுவதிலேயே என் உழைப்பைச் செலுத்தினேன். வலைப்பதிவு உலகில் பல புதுமைகளைக் கொண்டு தமிழ்மணம்.காம் இரண்டாம் பதிப்பு 2006 ஜனவரி 14ஆம் நாள் தைத்திங்கள் மலர்ந்தது. கிட்டத்தட்ட அதே காலக்கட்டத்தில் நண்பர் தேன்கூடு தளத்தையும் பொதுப்பயனுக்கு வெளியிட்டார். தானாக இடுகைகளைத் திரட்டிய காலம் போய் ஒவ்வொருவரையும் அவர்களை சேர்க்கச் சொல்லியிருக்கிறோமே, அவர்கள் செய்யாவிட்டால் மொத்தத் திரட்டியுமே தோல்வியில் முடியுமே என்ற ஐயம் இருந்தாலும், பெரும்பான்மையான வலைப்பதிவர்கள் தமிழ்மணத்தின்மேல் கொண்டிருந்த நம்பிக்கையும், அவர்கள் பெறப்போகும் கூடுதல் பயன்கள் காரணமாகவும் இந்த சவாலை சமாளிக்கமுடியும் என்று நம்பினேன். அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை. சிலர் எங்களுக்கு இரண்டாம் பதிப்பு வேண்டாம் முதல் பதிப்பை தொடர்ந்து இன்னொரு முகவரியிலாவது அளியுங்கள் என்றெல்லாம் சொல்லியும்கூட அதைச் செய்யாமல் பொறுமையுடன் காத்திருந்தேன். இரண்டாம் பதிப்பு முன்பிருந்ததைவிடவும் அதிக வரவேற்பைப் பெற்றது வாசகர் வருகைக்கணக்கிலிருந்து தெரிந்தது.
தமிழ்மணம் 2.0-ன் புதிய சிறப்பம்சங்கள்:
- ஆபாசம், வன்முறை போன்ற காரணங்கள் தவிர நுட்பம்/கணித்திறன் பற்றக்குறையால் எந்த வலைப்பதிவையும் விலக்கி வைக்கத் தேவைப்படாதது.
- வலைப்பதிவர் தன் மின்னஞ்சல் முகவரியைத் தமிழ்மணத்துக்கு அளித்தல்.
- வலைப்பதிவர் தானே தன் இடுகையை திரட்டிக்கு அறிவித்தல். இதனால் ஒரு நொடிநேரத் தாமதமும் இல்லாமல் பதிப்பித்த உடனே பலரையும் சென்று சேர்த்தல்.
- ஒவ்வொரு இடுகையையும் வகைப்படுத்துதல்
- குறிச்சொல்லிடுதல் (பிறகு ஏற்படுத்தப்பட்டது)
- வலைப்பதிவின் தலைப்பு/ஆசிரியர் பெயர்/கருப்பொருள் உரை போன்றவற்றைத் திரட்டி தானே எடுத்துக்கொள்ளுதல். மேலும் இவற்றில் பதிவர் ஏதும் மாற்றம் செய்தால் அடுத்த முறை பதிவு திரட்டப்படும்போது அந்த மாற்றம் திரட்டியில் இற்றைப்படுத்தப்படுதல்.
- வலைப்பதிவரின் வில்லையளவுப் படம் காட்டுதல்/தானே இற்றைப்படுத்தல்
- இந்த வார நட்சத்திரங்களை நன்றாக முன்னிறுத்தல், படம்/அறிமுகம் காட்டுதல், சென்ற வார நட்சத்திரங்களின் படம்/அறிமுகம்/எழுதிய இடுகைகள் பட்டியல்/மின் நூல் ஆக்குதல்
- பல இடுகைகளைத் தொகுத்து மின்நூலாக்குதல்
- தேதிவாரியாக இடுகைகளைப் பட்டியலிடல்
- வகை (தலைப்பு) களைத் தெரிவு செய்து பட்டியலிடல்
- 'பதிவு' கருவிப்பட்டை வாயிலாக இடுகையிலிருந்து ஒற்றை/பல இடுகைகளின் மின்நூல் ஆக்குதல், இடுகையின் வகையைக் காட்டுதலோடு, அதே வகையில்(தலைப்பில்) எடுதப்பட்டவற்றுக்குப் பயணித்தல், வாசகர் பரிந்துரைத்தல்.
- 'பதிவு' கருவிப்பட்டை வாயிலாக புது இடுகையை தமிழ்மணத்துக்கு அறிவித்தல், கருவிப்பட்டையில் தேவைப்படும் அமசங்களைத் தெரிவு செய்தல்.
பெரும்பாலான இந்த வசதிகள் தானுணர்த்தியாக இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மாற்றத்தைப் பொறுமையுடன் ஏற்றுக்கொண்ட அனைத்து வலைப்பதிவர்களுக்கும், தாங்களாக முன்வந்து தங்கள் வலைப்பதிவைப் பட்டியலில் சேர்த்தமைக்காக நன்றி. இதில் இக்கட்டான சூழ்நிலையில் விலக்கிவைக்கப்பட்ட பதிவுகளும் அடங்கும்.
இன்று வாழ்வில் வேறு உந்துதல் காரணமாக தமிழ்மணத்தை இன்னொருவரிடம் ஒப்படைத்துச் செல்ல எண்ணும்போது இந்த நுட்பங்களுக்காக நான் செலவிட்ட பணத்தையேனும் பெற்றுக்கொள்வது என்னளவில் தார்மீக வரையறையில் சரியானதே என்று நம்புகிறேன். அதனாலேயே தமிழ்மணத்தை இன்னொருவருக்கு என்னால் இலவசமாக அளிக்க இயலவில்லை. இதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டேன். ஏற்கனவே கிடைத்த அனுபவங்கள் என்னை அப்படி வைக்கவில்லை. புரிந்துகொள்பவர்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்.
இத்துடன் இந்தத் தொடரை முடிக்கிறேன். தமிழ்வலைப்பதிவுகள் உலகில் சென்ற 3 ஆண்டுகள் இயங்கியதில் கிடைத்த பல சுவையான அனுபவங்களை, இன்றியமையாத பாடங்களை எனக்குக் கிடைத்த பெறற்கரிய பரிசாக எண்ணுகிறேன். இந்தப் பரிசை எனக்குக் கிடைக்கச் செய்த, என்னுடன் ஒத்துழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி. மீண்டும் சந்திப்போம். வணக்கம்.
26 கருத்துகள்:
சிரமங்களுக்கிடையே நல்ல நோக்கத்துடன் செய்த செயல்களுக்கு நன்றி.
ஆதரவு/எதிர்ப்பு/கருத்து வேறுபாடு எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தமிழ் வலைப்பதிவு உலகில் தமிழ்மணம் ஒரு முக்கிய மைல்கல்.அதற்கு உங்களின் உழைப்பு,நேரம்,விடாமுயற்சி முக்கியமானது.தமிழ்மணம் போனாலும் ஒரு வலைப்பதிவராக அடிக்கடி எழுதுங்கள்.
நான் ஏற்கனவே சொன்னதுதான்.
சக வலைப்பதிவாளர் என்ற முறையில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தையும் மன அமைதியையும் வழங்கட்டும் என விரும்புகிறேன்.
http://kalvetu.blogspot.com/2006/06/blog-post_18.html
இன்னமும் எனது பிளாக் செயல்படவில்லையே தடை நீங்க வில்லையா?
ஒரு பிளாக்கர் முதலில் தங்களிடம் முறையாக பதியவேண்டும் அவரைப்பற்றிய உண்மையான தகவல்களை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். எந்த நேரத்தில் வரம்பு மீறுகிறாரோ அப்போதே அதை தடைசெய்ய வேண்டும். ஏதோ எனக்குத் தெரிந்தது.
திரு காசி அவர்களுக்கு!
ஆயிரமாவது வலைப் பதிவை நெருங்கும் தமிழ் மணத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். கணிணி சம்பந்தமான ஆங்கில சொற்களுக்கு ஈடான தமிழ்ச் சொற்களின் அட்டவணை ஒன்று வெளியிட்டால் பலருக்கும் உபயோகமாக இருக்கும். தமிழுலகுக்கு மேலும் பல அரிய சேவைகளை செய்திட வாழ்த்திடும்
-சுவனப் பிரியன்
தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி காசி அண்ணா.
//நம் சமூகத்தில் இன்னும் பலர் தன் உரிமை/கடமை, அடுத்தவர் சிரமம் போன்ற எல்லாவற்றையும் பின்னுக்குத்தள்ளி தன்னலம் ஒன்றையே குறிக்கோளாகவும், அடுத்தவர் செயலுக்கு எப்போதும் ஒரு உள்நோக்கம் கற்பிப்பதில் முனைப்பாகவும் இருப்பது இப்போது தெளிவாக விளங்கியது. //
மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.
உங்கள் புதிய முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகள், மீண்டும்.
தொடர்ந்து வலைப்பதிவீர்கள் தானே?
சிறப்பான வசதிகளுடன் கூடிய தமிழ்மணத்தை உருவாக்கியதும், அதில் 1000 பதிவருக்கும் மேல் இணைந்து எழுதிக் கொண்டிருப்பதும் சாதாரண சாதனையல்ல! அதற்குப்பின் இருக்கும் உங்கள் உழைப்பை மனதார பாராட்டுகிறேன்! தொடருக்கு நன்றி!
சுதர்சன் கேட்ட அதே கேள்வி...
தொடர்ந்து வலைப்பதிவீர்கள் தானே? :)
அன்பின் காசி,
தமிழிணையப் பயனாளியாக(மட்டும்)த் தொடர்ந்து பலவருடங்கள் இருந்ததில் பலவகையான முயற்சிகளின் பலனை அனுபவித்து வந்திருக்கிறேன். மிகச்சிலரின் உழைப்பிலும், முயற்சியிலுமே தமிழிணையம் வளர்ந்து வந்திருக்கிறது. அதில் உங்களின் பங்கு மிகப் பெரியது. உங்களின் உழைப்பும், முனைப்பும், ஆர்வமும், தடைகளைக் கையாளும் விதமும் என்னை வியக்க வைத்தது, வைக்கிறது. தொடர்ந்து ஆக்கம்தரும் செயல்களில் ஈடுபட்டு வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.
-மெய்யப்பன்
நன்மனம், நன்றி.
கல்வெட்டு உங்கள் இடுகைக்கு சிறப்பு நன்றி.
//இன்னமும் எனது பிளாக் செயல்படவில்லையே தடை நீங்க வில்லையா?// சில இணைய சேவைகள் நீங்கலாக பொதுவான தடை விலக்கப்பட்டுவிட்டதே.
//ஒரு பிளாக்கர் முதலில் தங்களிடம் முறையாக பதியவேண்டும் அவரைப்பற்றிய உண்மையான தகவல்களை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். எந்த நேரத்தில் வரம்பு மீறுகிறாரோ அப்போதே அதை தடைசெய்ய வேண்டும். ஏதோ எனக்குத் தெரிந்தது.// என்னார், கருத்துக்கு நன்றி. புதியவர்கள் பார்த்து செய்யட்டும்.
சுவனப்பிரியன்: //ஆயிரமாவது வலைப் பதிவை நெருங்கும் தமிழ் மணத்திற்கு // ஏற்கனவே 1087 என்று கணக்கு சொல்கிறதே! வாழ்த்துக்கு நன்றி.
குமரன், வருக.
சுதர்சன், நன்றி. கொஞ்சம் இடைவெளிவிட்டு தொடர எண்ணம்.
இளவஞ்சி, பாராட்டு உங்களுக்கும் சேர்த்துத்தான். நன்றி.
மெய்யப்பன், என்னைவிடச் செய்தவர்கள் பலர் இங்கே அடக்கமாக இருக்கிறார்கள். உங்கள் வாழ்த்துக்கு நன்றி. உங்கள் பாஸ்டன் விருந்தோம்பல் இன்றும் நினைவில் இருக்கிறது. அதற்கும் சிறப்பு நன்றி.
இது தமிழ்மண வரலாறு. அருமையான விளக்கங்கள்.
இனியும் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாம் வெற்றி
அடையணுமுன்னு மனமார வாழ்த்துகின்றோம் காசி.
நல்லா இருங்க.
என்றும் அன்புடன்,
துளசி & கோபால்
திரு.காசி,
என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். நீங்கள் முழுமூச்சாக இறங்கப்போகும் உங்கள் சொந்த வேலை(யாவது), உங்களுக்கு, உங்கள் ஆர்வம் ப்ளஸ் உழைப்புக்கு நியாயமாக கிடைக்கக்கூடிய பலன்களைத் தரவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
பின்னாளில், தமிழிணைய வரலாறு சொல்லப்படும்போது, இன்னது இன்னபடி நடந்தது என்று தெரிந்து கொள்வதற்காகவாவது இந்த அனுபவங்கள் நமக்கு /எங்களுக்கு முக்கியம்.
தூற்றுபவர்கள் பற்றிய மனக்கிலேசங்களையெல்லாம் தூக்கிக் கடாசி விட்டு நிம்மதியாக வேலையைப் பாருங்கள். அவ்வப்போது எழுதிக் கொண்டிருங்கள்
என்றென்றும் அன்புடன்
மூக்கு சுந்தர்
திரு.காசி,
முழுத் தொடரையும் படித்தேன் .மலைத்தேன்!
நீங்கள் ஆற்றிய பணிகளுக்கும் அதை எம்மோடு பகிர்ந்து கொண்டமைக்கும் மனமார்ந்த நன்றி!
தமிழை படித்துக்கொண்டு, எழுத மறந்து கொண்டிருந்த நேரத்தில், தமிழ்மணம் ஒன்று இருந்ததால்தான் தமிழ் எழுதுவதை பழக்கமாகிக்கொண்டோம். உலகம் முழுதுமிருந்து இவ்வளவு தமிழ் மக்கள் ஒன்று கூட வழி செய்த்ததே உங்கள் பெரிய வெற்றி. நன்றி எதையும் எதிர்பாக்காமல், சில பல சிரமங்களுக்கிடையேயும் இப்படிஒரு தளத்தினை அமைத்த உங்களுக்கு பல கோடி நன்றிகள்.
காசி,
தமிழ் வலைப்பதிவுகளைப்பற்றித் தெரிந்தும், எப்பொழுதாவது ஒரு சிலரின் பதிவுகளுக்குச் சென்று படித்திருந்தாலும், கடந்த ஓராண்டு காலமாகத்தான் வலைப்பதிவுகளை ஒட்டு மொத்தமான ஜனநாயகப் படுத்தப் பட்ட ஒரு விவாத அரங்காகக் கருதிப் படித்து வருகிறேன். அதற்கு ஒரே காரணம் தமிழ்மணம் தான். பார்த்த மாத்திரத்திலே கவர்ந்த தரமான தொழில் நுட்ப வேலைப்பாடு. பொதுவாக இத்தகைய தொழில் நுட்பத்திறமை இருந்தால் அதை முதலில் தமிழ் உலகுக்குப் பயன்படுத்த முனைவது அரிது. சிறிது செய்தாலும் விவரம் அறியா பொது மக்கள் மத்தியில் கூட பெரிய அளவில் விளம்பரங்கள் நடந்து வரும். அதைச் செய்யாமல் தொடர்ந்து எப்படி தமிழ்மணத்தில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி வலைப் பதிவுகளைத் திரட்டுவதில் உள்ள நடைமுறைச்சிக்கல்களை தீர்க்கலாம் என்று முனைந்து செயல் பட்டு வந்திருக்கிறீர்கள்.
தமிழ் வலைப்பதிவுகள் பிரபலமானதற்கும், பெருகியதற்கும் முக்கிய காரணமாயிருந்த தமிழ்மணத்தை அச்சிதழ்களில் வலைப்பதிவுகளைப் பற்றி வந்த கட்டுரைகள் புறக்கணித்தன. காசியின் பெயர் குறிப்பிடப் படவிட்டாலும் தமிழ் மணத்தின் சேவைகள் கூட எழுதப் படவில்லை. மாறாக,
நடைமுறைச் சிக்கல்களையும், வலைத்தளங்களின் தொழில் நுட்பக்குறைபாடுகளையும், வலைப்பதிவுகளுக்கும் திரட்டிக்கும் உள்ள வேறுபாடுகளையும் அறியாத பெரும்பாலான பதிவர்கள் மத்தியில் தமிழ் மணத்துக்கு சிலர் உள்நோக்கம் கற்பிக்க முனைந்தது தமிழ்ச்சமூக அரசியலின் வெளிப்பாடு. இது வலைப் பதிவுகளிடையேயான அரசியல் அல்ல.
ஆனாலும் உங்கள் கடின உழைப்பையும், பங்களிப்பையும், என்னைப் போன்ற பெரும்பாலானவர்கள் நன்றியுடன் அறிவார்கள் என்றே நினைக்கிறேன். உங்கள் அனுபவங்களை பதிந்து வைத்தது உங்கள் போல பின்னால் வருபவர்களுக்குப் பயன் தரும். உங்கள் புதிய முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள்.
நன்றி - சொ. சங்கரபாண்டி
உழைப்பிற்கான பலன் எப்போதும் இல்லாமல் போகாது காசி.
அதுவும் இது தன்னலம் கருதா உழைப்பு
அனுபவ பாடத்தினும் இனியது இவ்வுலகில் உண்டா?????
இங்கு பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி காசி
மேலும் உங்கள் பணி சிறக்கட்டும்
காசி,
உங்கள் அனுபவங்களை பலரும் பயனடையும் வகையில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
தங்கள் புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ப்ரியமுடன்,
கோபி
நன்றி மற்றும் வாழ்த்துக்கள் காசி... இதைத்தவிர வேற என்ன சொல்லுறதுன்னு தெரியல....
நல்ல தொடர் காசி.. நிறைய தெரிந்து கொள்ள வசதியாக இருந்தது..
புது முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்
அன்பின் காசி.
நிறைய சிரமங்கள் பட்டிருக்கிறீர்கள். ஏனோ மாலன் வலைப்பதிவிலிருந்து விலகுவதாகச் சொன்னதற்கு நீங்கள் அவரிடம் சொன்ன 'விடுப்பு' உதாரணம் நினைவுக்கு வருகிறது.
நீங்களும் இந்த விடுப்பை முடித்துக் கொண்டு மீண்டும் வாருங்கள்.
உங்கள் உழைப்பிற்கும், அளித்த சேவைக்கும் மனமார்ந்த நன்றிகள்.
காசி அண்ணா,
அரிய பல சங்கதிகளை உங்கள் தொடர் முலம் அறிந்து கொண்டேன். உலகில் இருக்கும் பல தமிழ் உறவுகளை இணைக்கும் உறவுப்பாலமாக தமிழ்மணம் விளங்குகிறது என்றால் மிகையகாது. உங்களின் இப்பணிக்கு தமிழுலகம் மிகவும் நன்றிக்கடமைப்பட்டுள்ளது.
மிக்க நன்றி.
துளசி, நம்பி, மூக்கு சுந்தர், ஜோ, இளா: மிக்க நன்றி.
சங்கரபாண்டி, வலைப்பதிக்காவிட்டாலும் இந்த நிகழ்வுகளை நீங்கள் தொடர்ந்து கவனித்து வருவது தெரிகிறது. உங்கள் பார்வை புரிகிறது. வாழ்த்துக்கு நன்றி.
மதுமிதா://அனுபவ பாடத்தினும் இனியது இவ்வுலகில் உண்டா?????// இல்லை டீச்சர்:-)
கோபி, சுரேஷ் பாபு, பொன்ஸ்: நன்றி.
காசி அவர்களே, இன்னைக்குத்தான் கண்டு பிடிச்சேன் உங்களை! தலைவா, தமிழ்மணம் தொடங்கி நீங்க ஆரம்பிச்ச தளம், பல நல்ல காரியங்களுக்கு பெரும் உதவியா இருக்கு. யார் யாரோ படிக்கிறாங்க, படிப்பிக்கிறாங்க, அறிவை வளக்கிறாங்க, மனசில வளர்றாங்க, இத்தனைக்கும் மேல ஒரு சமுதாயமே உருவாயிடுச்சு, நல்லது கெட்டது பேசி தெரிஞ்சிக்கிறதுக்கு! தன்னந் தனியா எந்த மூலையிலயோ இருக்கிறவங்களுக்கும் நட்பும் நலனும் சேர்க்கும் சமுதாயம் குடுக்கிறது சாமான்யப் பட்ட விஷயமில்ல. கலக்கிப்புட்டீங்களே - எத்தனையோ பேர் பாராட்டியிருப்பாங்க. நானும் சேர்ந்து ஒரு "வாழ்க, வாழ்க" போடுறதுக்கு இன்னைக்குத் தான் சான்ஸ் கிடைச்சுது. Sincerely, I am in awe and admiration for your innovation and dedication that has built the foundation for all of this.
வணக்கம் காசி
இன்றுதான் உங்கள் முழுத்தொடரையும் வாசித்தேன்.
"செயற்கரிய செய்தோர் பெரியோர்".
நீங்கள் எழுதுவது தமிழ்மணத்தின் சரித்திரம். இது எங்களுக்கு மிகவும் தேவை.
வாழ்த்துகளும்,வணக்கங்களும்.
இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்து வந்து இந்த பதிவை படிக்கப் போகின்றவர்களுக்கு உண்மைகளைப் பேசும் கல்வெட்டுச் சரித்திரம். நல்வாழ்த்துகள்.
திரு ஜோதிஜியின் பதிவைப்படித்துவிட்டு இங்கு வந்தேன். நிதானமாக முதலிலிருந்து படிக்கிறேன்.
உங்களது உழைப்பிற்கும், ஆர்வத்திற்கும் எனது பாராட்டுக்கள்.
இந்தத் தகவல்கள் நிச்சயம் அடுத்த தலைமுறையினருக்கு தேவை.
கருத்துரையிடுக