வெள்ளி, ஜனவரி 09, 2004

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 2


(c)Project Atmosphere Australia->  http://www.schools.ash.org.au/paa1/default.htm


ஆறாம் வகுப்புக்கு வெளியூரெல்லாம் போகவேண்டியதில்லை. சித்தூர் ஒண்ணும் பட்டிக்காடில்லை. வாரச் சந்தை, ஐஸ்கூல், மாட்டாஸ்பத்திரி, கரண்ட் ஆபீஸ், போஸ்ட் ஆபீஸ், சினிமாக் கொட்டாயி, ஆயில் மில், கதர்க்கடை, கடைவீதி இதெல்லாம் கொண்ட பெரிய கிராமம்தான். ஊரை ஒட்டி ஒரு சிற்றாறும் ஒடியது. நான் பார்க்க ஓடியதில்லை, ஆனால் அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒரிருமுறை மழைக்காலங்களில் நானே பார்த்தும் இருக்கிறேன். அதில் இரவு நேரத்தில் பேட்டரி லைட் அடித்து நீண்ட கத்தியால் மீன் பிடித்திருக்கிறார்கள், மதி சொன்ன சூள்-ஐப்போல.

ஆனால் அந்த வறட்சியின் போது, (1974 என்று நினைக்கிறேன்) ஊரில் ஒரு கிணறு கூட பாக்கியில்லாமல் வறண்டு போக, அரசாங்கத்தினர் போர்வெல் போட்டு தண்ணீர் கொடுக்க எங்கெல்லாமோ இடம் தேடி, தண்ணீர் வராமல், கடைசியில் அந்த ஆற்றங்கரையிலும் நான்கைந்து இடங்களில் கிடைக்காமல், ஒருவழியாக, அதே ஆற்றங்கரையில் ஊருக்கு மேற்காலே நாராயணசாமி கோயிலுக்குப் பின்னால் ஒரு இடத்தில் கிடைத்தது. அதுவும் 300 அடியோ என்னவோ ஆழத்தில். அந்தத் தண்ணியில் குழம்பு வைத்தால் கடையில் உப்பு வாங்கவேண்டிய செலவு மிச்சம். கடல் என்பதையே கண்ணில் பார்க்காத மக்களுக்கு கடல் தண்ணீராவது காட்டலாம் என்று தான் அந்த உப்புத்தண்ணியை சாமி கொடுத்திருப்பார் என்று தமாஷ் பேசுவோம்.

அந்த வறட்சியிலும் அம்மாவுக்கு ஒரு காட்டில் தொடர்ந்து வேலை கிடைத்தது. அந்தக் கவுண்டர் வீட்டுக்கு நன்றி சொல்லவேண்டும். அவர்களால் முடிந்தவரையில் வேலை கொடுத்தார்கள். தினமும் ஒண்ணரை ரூபாய் கூலி. ஏழுநாட்களும் வேலை. திங்கக் கிழமை மட்டும் வேலை சீக்கிரம் முடிந்துவிடும். அன்றுதான் வாரம் பூராவும் வேலை செய்ததற்கு பத்தரை ரூபாய் கூலி கிடைக்கும். பிறகு வந்து அரப்புத்தேய்த்து தலைக்குக் குளித்துவிட்டு, அம்மாக்கள் சந்தைக்குப் போவார்கள். சிறுவர்கள் வீதிமுக்கில் விளையாடிக்கொண்டே தலையில் 'சாடு'டன் (பெரிய கூடை) தூரத்தில் புள்ளியாக நடந்துவரும் அம்மாக்களை அவர்கள் சேலை வண்ணத்தை வைத்துக் கண்டுபிடிக்க, ஆவலுடன் எதிர்பார்த்திருப்போம். வந்ததும், 'கடலை பொரி' கட்டாயம் கிடைக்கும். சில நாள் முறுக்கும் கூடக் கிடைக்கும். சந்தை காரணமாக தொடக்கப் பள்ளிக்கு வார விடுமுறை ஞாயிறு, திங்கள் அன்றுதான்.

வறட்சியோ தன் இறுக்கத்தை அதிகரித்துக் கொண்டே இருந்தது. எங்கள் பள்ளிப் படிப்புக்கு புத்தகம் வாங்கவாவது பணம் வேண்டாமா? அந்தப் பள்ளியாண்டுத் துவக்கத்தில் வேறு வழியில்லாமல் அப்பா தனக்கு பட்டாவாகி கிடைத்த ஒரு சிறு துண்டு நிலத்தை விற்றார். பெரிய சொத்தில்லை, 120 ரூபாய்க்குப் போனது. ஆனாலும் அன்று அவர் அதைச் செய்யாமல் விட்டிருந்தால், எங்கள் பள்ளி வாழ்க்கை ஒருவேளை பாதியில் நின்றுபோயிருக்கலாம்.

'அரசுயர்பள்ளி' தலைமை ஆசிரியர் அப்துல் வகாப் அவர்கள் மிகுந்த கண்டிப்பானவர். கையில் பிரம்புடன் அவர் பள்ளியைச் சுற்றி நடந்துவரும்போது ஒரு குஞ்சு கூட மூச்சு விடாது. கண்டிப்பு என்பதுடன் கரிசனமும் கொண்டவர் என்பது ஆறாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளும்போதுதான் தெரிந்தது. வழக்கமாக எங்கள் ஜாதிக்கு ஊரில் சொல்லப்படும் பெயர் அரசாங்கப் பட்டியலின் படி முன்னேறிய வகுப்பாம். இதே ஜாதிக்கு வேறு ஒரு பெயர் (அது வடமொழிப்பெயர்) உள்ளதாம், எங்கள் ஜாதியை அந்தப் பெயரிட்டு அழைத்தால் பிற்பட்ட வகுப்பாம், பின்னாளில் சலுகைகள் எல்லாம் கிடைக்குமாம். இதையெல்லாம் சொல்லிக் கொடுத்து என் அண்ணனை ஆறாம் வகுப்பில் சேர்க்கும் முன் எங்களை பிற்பட்ட வகுப்பில் சேர்த்துவிட்டார். அந்த நிலையில் மாற்றாவிட்டால் அதற்கப்புறம் முடியவே முடியாதாம். யாருக்குத்தெரியும் இதெல்லாம், இப்படியெல்லாம் சொல்லித் தான் நாங்கள் பிற்பட்டவர்கள் என்று தெரியுமா?

'காக்கைக் குருவி எங்கள் ஜாதி...' என்ற பாட்டெல்லாம் அப்போது தெரியாது. தெரிந்திருந்தாலும் இது அப்படித்தான் நடந்திருந்திருக்கும். இந்த பிற்பட்ட வகுப்பு அடையாளம் எனக்கு பெரிய உதவியை எங்கும் செய்யவில்லை, ஆனால் பின்னாளில் என் நெருங்கிய நண்பனுக்கு இதனாலேயெ ஒரு நல்லது நடக்க நான் தடையாக இருக்கும்படி ஆனது ஒரு சோகம். அதை அந்த சமயத்தில் பார்க்கலாம்.

வியாழன், ஜனவரி 08, 2004

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 1



முதலில் என்னை ஒண்ணாவதில் சேர்த்துக்கொண்ட அந்த டீச்சருக்கு நன்றி சொல்லணும். அவருக்கும் என் வயதில் ஒரு பெண் இருந்ததால் அவளை சேர்த்துக் கொண்ட போது 'இலவச இணைப்'பாக என்னையும் சேர்த்துக் கொண்டதாக என் அம்மா ஒரு முறை சொல்லக் கேட்டிருக்கிறேன். எங்க வீட்டுக்கு எதிரில், எதிரில் என்றால் வெறும் ஒரு பத்தடி வண்டித்தடம் தான் குறுக்கே, அவ்வளவு கிட்டத்தில் பள்ளி. பல நாள் பள்ளியில் இருந்து தண்ணி குடிக்கக் கூட எங்க வீட்டுக் கதவைத் தட்டுவார்கள். 'கிட்டத்தில் இருந்ததால் நீ சின்ன வயசிலேயெ பள்ளிக்கூடத்துக்குப் போயிட்டே' என்று இன்னொரு நாள். 'உன் அண்ணன் பள்ளிக்கூடம் போகும்போது, நீயும் கூடக் கூடப் போவே, அதனாலெ உன்னையும் சேர்த்துக்கிட்டாங்க', என்று மற்றொரு நாள். இன்னதனால் என்று சரியாகச் சொல்ல முடியாவிட்டாலும், நாலு வயசு ஆன போதே ஒண்ணாவதில் சேர்ந்துவிட்டேன். அதில் ஒரு லாபம் பின்னால் சீக்கிரம் வேலைக்குப் போக ஆரம்பித்து விட்டது. ஆனால் அதுக்காக அந்த டீச்சர் ஏன் பிறந்த தேதியை, மாதத்தை, வருடத்தை என்று எல்லாவற்றையும் மாற்றினார் என்று இன்னும் விளங்கவில்லை? நிறையப் பேருக்கு வருடத்தை மாற்றி எழுதியது கேள்விப்பட்டிருக்கிறேன். ஹும்.

ஆறாம் வகுப்புக்கு மேல் தான் நன்றாய் நினைவில் இருக்கிறது. தொடக்கப் பள்ளியில் ஒரு சில நினைவுகள் மறக்காமல் இருக்கின்றன. படிப்பில் சூரனான அக்பர் அலி, பள்ளியில் ஒண்ணுக்குவிடும் நேரம், 'சுக்குட்டிப்பழம்' (மணத்தக்காளி) பறிக்க செடிக்குள் கைவைத்து, பாம்பு கொத்தி செத்துப்போனது, அமெரிக்காவிலோ எங்கேயோ இருந்து வரும் கோதுமை ரவையை மதிய உணவு செய்து பரிமாறுவது, அதை சில குழந்தைகள் மட்டும் தங்கள் ஈயத்தட்டத்தில் வாங்கி சாப்பிடுவது, தலைமை ஆசிரியர் அறையிலேயே அஞ்சாம் வகுப்பு என்பதால், புதிதாய் ஒண்ணாவதில் சேர்க்க வரும் குழந்தைகளை அவர் தலைக்கு மேல் கைவத்து, காதைத் தொடச்சொல்லி நுழைவுத்தேர்வு நடத்துவது (என்னை மட்டும் இப்படிச் சோதித்திருந்தால் கட்டாயம் 'போடா வீட்டுக்கு'ன்னு சொல்லியிருப்பார்), அவர் அதில் மும்முரமாக இருக்கும்போது, சாக்கில் கட்டி வைக்கப்பட்டுள்ள காய்ந்த கெட்டியான கோதுமை ரவையைக் கைப்பிடி எடுத்து வாயில் அடக்கிக் கொண்டு பிறகு மெதுவாக மென்று சுவைப்பது... வாழ்வின் ஒரே இளமைக்கால போட்டோ இரண்டாம் வகுப்பில் எடுக்கப்பட்ட குரூப் போட்டோ தான். இன்னொன்றும் ஞாபகம் வருகிறது, என்னுடன் அஞ்சாம் வகுப்பில் படித்த பெண், நெடுநெடுன்னு வளத்தியா இருப்பாள், ஆறாம் வகுப்புக்கு வரவில்லை, சில நாள் கழித்து ஒருநாள் அவளை அவள் புருஷனுடன் பார்த்து அதிசயித்தது!

எனக்கு அறிவு தெரிய, ஊரில் பஞ்சம் வந்துவிட்டது. வறட்சி என்றால் அப்படியொரு வறட்சி. அப்பாவும் பல முயற்சிகளுக்குப் பிறகு அமைந்திருந்த பால்வியாபாரத்தில் உள்ளதையெல்லாம் தொலைத்துவிட்டுக் கையைச் சுட்டுக்கொண்டு வீட்டுக்குள் முடங்கியிருந்த நேரம். அம்மாவின் இன்னிங்ஸ் ஆரம்பமானது அப்போது. அம்மா காட்டுக்கு கூலிவேலைக்குப் போயும்கூட, அதில் வரும் சொற்ப வருமானத்தில் நாங்கள் நால்வரும் சாப்பிடுவதென்பது சாமானியமான காரியமாக இல்லை. எங்கும் போகப்பிடிக்காமல், யாரையும் பார்க்கப் பிடிக்காமல் வேப்ப மரத்தடி மேடையில் வெட்டி நண்பர்களுடன் 'பதினஞ்சாங் கரம்' (ஆடு புலி ஆட்டம்) ஆடிப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த அப்பாவை, சரியான கோபக்கார அம்மா அப்படிப் பொறுத்துக் கொண்டார் என்பதிலிருந்து, அப்பா அதற்குமுன் அம்மாவை நன்றாக வைத்திருந்திருக்கிறார் என்பது தெரிந்தது.

அந்த நாட்களில் ஒரு இரவு. அண்ணாடும் போல கூட்டாளிகளுடன் வெட்டி அரட்டையெல்லாம் முடிஞ்சு சாமம் ஆகியும் அப்பா வந்துசேராததால் அம்மா கவலையுடன் இருக்க, கதவு தட்டப்படும் சத்தம்! அம்மா போய்க் கதவைத் திறந்தால் தூக்கமுடியாமல் பெரிய சாக்குப்பையைத் தூக்கிக் கொண்டு அப்பா! அப்பாவும் கூட்டாளிகளும் இரவில் மந்தைக்குப் போகும்போது, அந்த வழியே சந்தேகமான முறையில் ஒரு மாட்டு வண்டியில் சரக்கெல்லாம் போக, இவர்கள் சத்தம் போட்டு யாரென்று விசாரித்திருக்கிறார்கள். இவர்களைப் பார்த்துப் பயந்து அந்த வண்டிக்காரன் ஓடிப்போக, கிட்டப் போய்ப் பார்த்த போதுதான் இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது, வண்டியில் போவது கேரளாவுக்குக் கடத்தப்படும் அரிசி என்று. சோளத்துக்கும், ராகிக்குமே பஞ்சம் வந்துவிட்ட அந்த வறட்சிக்காலத்தில் மூட்டை மூட்டையாய் அரிசியைப் பார்த்ததும், தங்களால் தூக்க முடிந்த அளவுக்கு ஆளுக்குக் கொஞ்சம் எடுத்து வந்திருக்கிறார்கள். சோத்துக்கு லாட்டரி அடிப்பது என்பது இதுதானோ? அந்தக் கடத்தல்காரன் புண்ணியத்தில் அந்த அரிசி சில நாள் எங்கள் வீட்டில் மணந்தது. ஆம், உண்மையைச் சொன்னால் நாற்றம்! நான்கைந்து முறை கழுவியபின் கொஞ்சம் வாசம் குறையும், அப்படியும் சோறு ஆக்கினால் சாப்பிட முடியாது. எனவே அது தீரும்வரை 'சந்தகை'யாய் (இடியாப்பம்) செய்து சாப்பிட்டோம். இந்த அரிசியை கடத்தி...அதையும் அதிக விலை கொடுத்து வாங்க ஆள் இருக்கிறதென்பது ஆச்சரியமாக இருந்தது.

இப்படி சில நாள் சந்தோஷமானாலும், நிறைய நாள் சோதனையே. அந்த வேளையில் என் பெரியப்பா (என் பெரியம்மா வீட்டுக்காரர்) உருவில் வந்தது பொள்ளாச்சியில் புதிதாக ஆரம்பித்திருந்த அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கூண்டு கட்டுமானப்பிரிவில் (பாடிபில்டிங் யூனிட்) அப்பாவுக்கு ஒரு வேலை. அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்காக மயில்சாமி பெரியப்பாவுக்கு நாங்கள் நிறையக் கடன்பட்டிருக்கிறோம்.

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 0

எனக்கும் சரித்திரக் கதை எழுத ஒரு ஆசை. உண்மையில் 'அக்கினிச் சிறகுகள்' மாதிரி ஒரு சுய சரிதம் எழுத ஆசைதான். அதற்கு, முதலில் அப்துல் கலாமாக இருக்க வேண்டுமே. சுய சரிதம் எழுவதற்கு என்று யாரும் தகுதி நிர்ணயிக்கவில்லை என்பதனாலேயே நானெல்லாம் எழுத ஆரம்பித்தால் நாடு தாங்குமா? இருந்தாலும், நான் சந்தித்தவர்களிடையே காணக்கிடைத்த நல்லவர்களை நன்றியுடன் நினைவு கூர, அவர்களைப் பற்றி இங்கு எழுதி வைக்கிறேன். அவர்களோடு நானும் நடந்து வருவேன். என் பிள்ளைகளிடம் இந்தக் கதையெல்லாம் சொல்ல, அதை அவர்கள் புரிந்து கொள்ள, நேரமும், பொறுமையும், இன்ன பிறவும் இப்போது அமையவில்லை. நகரத்தில் பிறந்து, பெரும் சவால்களை எதிர்கொள்ளத் தேவை அதிகமின்றி வாழ்ந்த என் மனைவிக்கே இவற்றில் பலவும் புதிதாக இருக்கும். என் நெருங்கிய நண்பர்களுக்கே நான் இந்தக் கதைகளை முழுதும் சொன்னதில்லை. இதைப் பதிவு செய்வதின் மூலம் என்றாவது ஒருநாள் என் குழந்தைகள் படிக்கலாம் என்று நம்புகிறேன். படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அப்பன் பெற்ற அனுபவங்களை, சந்தித்த மனிதர்களைத் தெரிந்து கொள்ளவாவது என் குழந்தைகள் தமிழ் நன்றாகக் கற்றுக் கொள்ளலாம். என் மகனைப் பற்றி எனக்கு பயமில்லை. மகள் தான் தமிழ் என்றால் 'பவுண்டு என்ன விலை?' (கிலோ என்ன விலை என்று கூடக் கேட்க மாட்டாள்;-) என்று கேட்கிற நிலையில் இருக்கிறாள். ஆனால் அவளும் வழிக்கு வந்துவிடுவாள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சிறுவயதில் எனக்கு இருந்த ஏக்கங்களுக்கும், இழப்புகளுக்கும் ஈடு செய்யும்வகையில் எனக்கு வழிகாட்டிகளும், வாழ்வளித்தவர்களும் அமைந்தனர். என்னை வஞ்சித்தவர்கள் என்று யாரும் எனக்கு ஞாபகமில்லை, ஆனால் உதவி செய்தவர்கள், என்னைக் கைதூக்கிவிட்டவர்கள் என்று பட்டியலிட்டால் பக்கம் பக்கமாக வருகிறது. அவர்களில் முக்கியமான சிலரை ஒட்டிய நிகழ்ச்சிகளை நினைவு கூர, எழுத்துகளில் பதிக்க நான் முயல்கிறேன். இவை பெரும்பான்மையை பிரதிபலிக்காத ஒரு சாமானியனின் வாழ்க்கைப்பயணத்தின் சில நிகழ்வுகள். பல சமயங்களில், 'இது போதும், உள்ளதைக் கொண்டு சந்தோஷமாய் இருக்கலாம்' என்று நான் இருப்பதாக எனக்குத் தோன்றும். ஆனால் இதையெல்லாம் மீண்டும் நினைத்துப்பார்த்தால் நான் ஏன் அப்படி இருக்கிறேன் என்பது புரிகிறது. ஒருவேளை இதெல்லாம் நான் அப்படி இருப்பதற்காக சொல்லிக்கொள்ளும் சமாதானமோ? எது எப்படியோ, வாருங்கள் என்னோடு கைகோர்த்து. நான் நடந்துவந்த வடசித்துர், பொள்ளாச்சி, கோவை, சென்னை எல்லாப் பக்கமும் இன்னொரு முறை போய் வரலாம்.

செவ்வாய், ஜனவரி 06, 2004

நியூக்ளியஸ் சோதனை - மேல்விவரம்

நேற்றும் நியூக்ளியஸ் சோதனை தொடர்ந்தது. 1and1.com என்ற புண்ணியவான்கள் தயவில் PHP மற்றும் MySQL வசதியுடன் ஒரு "கிட்டத்தட்ட" இலவச வழங்கிச் சேவை கிடைத்தது. அதில் நியூக்ளியஸை நிறுவி என் சோதனையைத் தொடர்ந்தேன். இதில் இன்று தெரிந்து கொண்டது.

1. PHP மற்றும் MySQL போன்றவற்றில் அனுபவம் இல்லாத என்னாலேயே சில நிமிடங்களில் நியூக்ளியஸ் நிரலியை என் வலைத்தளத்தில் நிறுவி, செயல்பட வைக்க முடிந்தது. எதுவுமே ஆரம்பிக்கும்வரை பயமாகத்தான் இருக்கும், ஆனால் ஆரம்பித்துவிட்டால் செய்வதற்குத் தேவையான அறிவும், வசதியும் தானாக அமைந்துவிடும் என்பதற்கு உதாரணம் இந்த இரண்டு நாளில் நான் செய்தது. இததனை நாள் ~5MB இடவசதி மட்டும் கொண்ட வழங்கி சேவை மட்டும் என்னிடம் இருந்தது. இப்போது, 500MB இட வசதி, PHP/MySQL உடன் ஒன்றை பிடித்து, அதில் இந்த மாதிரி ஒரு மென்பொருளையும் நிறுவி பயனுக்கு வந்தாகிவிட்டது. ஆகவே என்னை மாதிரி சாதாரண பயனர்கூட முயன்றால் செய்துவிடலாம் போலிருக்கிறது. ஆனால் இன்னமும் நம் எல்லாருக்கும் இது சாத்தியப்படாது என்பதும் உண்மை.

2. அலங்காரக் குறிப்பை (நன்றி: கண்ணன்:-) - Style sheet - மாற்றி அமைப்பதன் மூலம் சில எளிய தோற்ற மாறுதல்களை செய்ய முடிகிறது. உதாரணமாய் நான் முயன்றது: பின்புல வண்ணம், எழுத்து வண்ணம், எழுத்துரு. ஆனாலும் ஆடையில் கைவைக்க இன்னும் பயமாக இருக்கிறது. அதில் கைவைத்தால் தான் பக்கத்தின் வடிவத்தை முழுதாய் நாம் விரும்பும் வண்ணம் மாற்ற முடியும். இதே அலங்காரக் குறிப்பை மாற்றி அமைப்பதன் மூலம் இயங்கு எழுத்துருவையும் பயன் படுத்த முடியும் என்று தொன்றுகிறது, இன்னும் சோதிக்கவில்லை.

3. வழக்கமான யுனிகோட் உரையின் நீளம் சம்பந்தமான பிரச்னைகள் இப்போதே வர ஆரம்பித்துவிட்டன. சாதாரணமாக நியூக்ளியஸ் கீழ்க்கண்ட உரை நீளங்களை அனுமதிக்கிறது.

வலைப்பதிவின் பெயர்: 60
இடுகையின் தலைப்பு: 160
கருத்து: 5000

ஏற்கனவே என் வலைப்பதிவின் அனுமார்வால் பெயர் (சித்தூர்க்காரனின் சிந்தனைச் சிதறல்கள்) வெட்டுப்பட்டுவிட்டது. ஏனென்றால் யுனிகோடில் ஒவ்வொரு எழுத்துக்கும் குறைந்தது 3 பைட்டுகள் எடுத்துகொள்ளும் (நன்றி: ரமணன்:-) எனவே அனுமதிக்கப்பட்ட 60 பைட்டுகளில் சுமார் 20 தமிழ் எழுத்துகள்தான் கொள்ளும். இன்னும் உயிர்-மெய் என்று கணக்கு இருக்கிறதென்று நினைக்கிறேன், எனவே 20க்கும் குறைவாக இருப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஒருவகையில் இதுவும் நல்லதுதான் என்று சமாதானம் செய்துகொண்டேன். அப்படியாவது சுருக்கமான பெயர் வைக்கலாம்.

இதே போல் இடுகையின் தலைப்பும் சுமார் 50 எழுத்துகள் என்பது சில சமயம் ஒரு சிறைக்குள் அடைபட்ட உனர்வைத்தரலாம். இப்போதைக்கு அதற்குள் விளையாடலாம். கருத்தும் சுமார் 1500 எழுத்துகள் அனுமதிக்கப்படலாம், ஆனால் இது பெரிய குறையாகப் படவில்லை. இடுகையின் நீளத்திற்கு எதுவும் எல்லை இருப்பதாக எனக்கு இப்போதைக்குத் தெரியவில்லை.

நியூக்ளியஸ் ஒரு திறவூற்றுச் செயலி என்பதால் இந்த நீளங்களே மாற்றி அமைக்கப் பட முடியலாம். ஆனால் என் சிற்றறிவுக்கு இதெல்லாம் இன்னும் எட்டவில்லை. ஆனால் தமிழுக்கென்று வரும்போது இவற்றை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம் என்று தோன்றுகிறது.

4. rss ஒடை சரியாக வேலை செய்வது போல்தான் தோன்றுகிறது. கண்ணன் சோதித்த மாதிரி நானும் bloglines மூலம் சோதித்தேன். முதலில் யுனிக்கொட் எழுத்துகள் கலங்கலாய்த் தான் தெரிந்தன. பிறகு சரியாகத் தெரிகின்றன. இன்னும் எனக்கு இதில்சில சந்தேகங்கள் இருக்கின்றன. காலப் போக்கில் தெளிந்துவிடும், எனவே அடுத்தவரைக் குழப்ப விரும்பவில்லை.

5. இடுகையை பதிப்பிக்கும் முன் வரைவாக சேமிக்க முடிகிறது. ஆனால் முழுத் தோற்றத்தையும் முன்பார்வையிட முடிவதில்லை. அதன் html வடிவம் மட்டுமே பார்க்க முடிகிறது. ஒருவர் இதற்கு என்று சில ஆடை மாற்றங்களை வெலியிட்டிருக்கிறார், ஆனால் எனக்கு இன்னும் தைரியம் வரவில்லை.

இன்னும் சில நாட்கள் குடைந்தால் அனேகமாக ஒரளவிற்கு பிடிபடும் என்று நினைக்கிறேன். அதன்பிறகு சோதனை ஓட்டமாக சில நாட்கள் என் வலைப் பதிவை இரு தளங்களிலும் இணையாகப் பதிப்பிக்கலாம் என்று நினைக்கிறேன்.

திங்கள், ஜனவரி 05, 2004

நியூக்ளியஸ் வலைப்பதிவு மென்பொருள்


இன்று கொஞ்சம் நேரம் கிடைத்தது. முகுந்தராஜ் தயவில் கிடைத்த இந்த மென்பொருளைக் கொஞ்சம் குடைந்து பார்த்தேன். நான் தெரிந்து கொள்ளவேண்டியது இரண்டு.
1. இந்த மென்பொருள் எப்படி இயங்குகிறது, இதன் அமைப்புகள், வசதிகள் என்னென்ன.
2. தமிழுடன் இது எவ்வளவு சரியாக வேலை செய்கிறது, 'என் புருஷனும் கச்சேரிக்குப் போறான்' என்பதுபோல நானும் தமிழ்ப்'படுத்திய' இதன் கட்டளைச் சொற்கள் எந்த அளவுக்குப் புரிகின்றன, சரியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க...

வெள்ளி, ஜனவரி 02, 2004

சாமானிய சங்கீதம்

நண்பர் நா.கண்ணன் தன் வலைப்பூவில் சங்கீத நினைவுகள்-02 என்ற தலைப்பில் இன்று இசையரசி திருமதி. சுதா ரகுனாதன் அவர்களுடன் தன் சந்திப்பை நினைவு கூர்ந்திருக்கிறார். எங்கள் வீட்டிலும் கொஞ்சம் கர்நாடக இசைப் பாடல்கள் ஒலிக்கக் காரணம் சுதா ரகுனாதன் தான் என்பதை நான் நினைத்துப் பார்த்துக்கொண்டேன். கண்ணன் பாட்டுக்களில் ஈடுபாடு வந்தபிறகு கொஞ்சம் தேடி சுதா ரகுனாதனின் பாடல்களில் இருந்து சிலவற்றை Music India Online தளத்தில் கண்டு எடுத்தேன். இப்போது தினமும், ஏற்கனவே சொன்ன மூன்று பாசுரங்களுடன், சுதா ரகுனாதனின் பல கண்ணன் பாடல்களும் தினமும் எங்கள் வீட்டில் ஒலிக்கின்றன.

ராகத்திற்கும், தாளத்திற்கும் என்ன வித்தியாசம் என்று கூடத் தெரியாதாகையால் இதிலெல்லாம் முன்பு ஒரு ஒட்டாமை (ஒவ்வாமை என்று கூடச் சொல்லலாம்) இருந்தது. இவரின் கண்ணன் பாடல்களைக் கேட்ட பிறகு அப்படி எந்த உணர்வும் இல்லாமல் விரைவில் பிடித்துப்போயிற்று. தமிழிசையின் பலமாகவும் இருக்கலாம். கண்ணன் மேல் ஏற்பட்ட பிடிப்பாகவும் இருக்கலாம். அற்புதமான வரிகளில் பாடல்களை அமைத்த ஊத்துக்காடு வேங்கட சுப்பைய்யர், பாபனாசம் சிவன், அருணாசலக் கவிராயர், போன்றோரின் இசைத் திறமையும் சொல்லாட்சியும் காரணமாய் இருக்கலாம். சுதா ரகுனாதனின் குரல் இனிமையாக இருக்கலாம். இல்லை எனக்கு வயசாகிவிட்டதால் கூட இருக்கலாம்:-)) ஆனால் இந்தப் பாடல்கள் மனதில் உட்கார்ந்துவிட்டது மட்டும் உண்மை.

தினமும் கேட்கிறோம், இதுவரை ஒரு 200 முறை கேட்டிருப்போம், இன்னும் சலிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் புதிதாய்க் கேட்பதுபோல இருக்கிறது. இம்மாதிரி கற்பூர வாசனையை ஏன் என்னை மாதிரிக் கழுதைகள் எல்லாரும் அனுபவிக்கும் விதமாய் எல்லா இசைக்கலைஞர்களும் கொடுக்கக் கூடாது? அல்லது ஏற்கனவே கொடுக்கிறார்களோ என்னவோ, எனக்குத்தான் தெரியவில்லையோ? ஆண்களில் உன்னிகிருஷ்ணன் பாடிய நிறையத் தமிழ்ப் பாடல்கள் ஒரு 'பாகவதர்'பாடின மாதிரியில்லாமல் மனசோடு ஒட்டுகிறது. இன்னும் நிறையத் தேடிப் பிடிக்கவேண்டும். அதிலும் அந்த ஜகத்ஜனனி நன்றாகப் பிடித்துப் போயிற்று.

வானொலியைத் தொடர்ந்து கேட்ட அந்த நாட்களில் இந்த கர்நாடக இசை எதுவும் மனதில் ஒட்டவில்லை. இவர்கள் யாருக்கு வானொலி சேவை நடத்துகிறார்கள், என்னேரம் பார்த்தாலும் புரியாத மொழி, அல்லது ராக ஆலாபனை, ஒரு வார்த்தையை திருப்பித் திருப்பி ஜவ்வாக இழுத்து...உடனே ரேடியோப்பெட்டியை சிலோனுக்கு மாற்றிவிடுவோம், அல்லது அணைத்துவிடுவோம். வெகுஜன மக்களுக்கு அன்னியமாகிப் போய்விட்ட இந்த இசை வடிவத்தை, இம்மாதிரி தமிழ்ப் பாடல்கள் மனதின் அண்மைக்குக் கொண்டுவரும். இதைப் பாடகர்கள் புரிந்துகொண்டால் எல்லாருக்கும் நல்லது. நடக்கும் என்று நம்புவோம்.

நாங்கள் கேட்கும் அந்தப் பாடல்களைக் கேட்க விரும்புகிறவர்கள் இங்கே போனால் கேட்கலாம்.

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...