ஆறாம் வகுப்புக்கு வெளியூரெல்லாம் போகவேண்டியதில்லை. சித்தூர் ஒண்ணும் பட்டிக்காடில்லை. வாரச் சந்தை, ஐஸ்கூல், மாட்டாஸ்பத்திரி, கரண்ட் ஆபீஸ், போஸ்ட் ஆபீஸ், சினிமாக் கொட்டாயி, ஆயில் மில், கதர்க்கடை, கடைவீதி இதெல்லாம் கொண்ட பெரிய கிராமம்தான். ஊரை ஒட்டி ஒரு சிற்றாறும் ஒடியது. நான் பார்க்க ஓடியதில்லை, ஆனால் அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒரிருமுறை மழைக்காலங்களில் நானே பார்த்தும் இருக்கிறேன். அதில் இரவு நேரத்தில் பேட்டரி லைட் அடித்து நீண்ட கத்தியால் மீன் பிடித்திருக்கிறார்கள், மதி சொன்ன சூள்-ஐப்போல.
ஆனால் அந்த வறட்சியின் போது, (1974 என்று நினைக்கிறேன்) ஊரில் ஒரு கிணறு கூட பாக்கியில்லாமல் வறண்டு போக, அரசாங்கத்தினர் போர்வெல் போட்டு தண்ணீர் கொடுக்க எங்கெல்லாமோ இடம் தேடி, தண்ணீர் வராமல், கடைசியில் அந்த ஆற்றங்கரையிலும் நான்கைந்து இடங்களில் கிடைக்காமல், ஒருவழியாக, அதே ஆற்றங்கரையில் ஊருக்கு மேற்காலே நாராயணசாமி கோயிலுக்குப் பின்னால் ஒரு இடத்தில் கிடைத்தது. அதுவும் 300 அடியோ என்னவோ ஆழத்தில். அந்தத் தண்ணியில் குழம்பு வைத்தால் கடையில் உப்பு வாங்கவேண்டிய செலவு மிச்சம். கடல் என்பதையே கண்ணில் பார்க்காத மக்களுக்கு கடல் தண்ணீராவது காட்டலாம் என்று தான் அந்த உப்புத்தண்ணியை சாமி கொடுத்திருப்பார் என்று தமாஷ் பேசுவோம்.
அந்த வறட்சியிலும் அம்மாவுக்கு ஒரு காட்டில் தொடர்ந்து வேலை கிடைத்தது. அந்தக் கவுண்டர் வீட்டுக்கு நன்றி சொல்லவேண்டும். அவர்களால் முடிந்தவரையில் வேலை கொடுத்தார்கள். தினமும் ஒண்ணரை ரூபாய் கூலி. ஏழுநாட்களும் வேலை. திங்கக் கிழமை மட்டும் வேலை சீக்கிரம் முடிந்துவிடும். அன்றுதான் வாரம் பூராவும் வேலை செய்ததற்கு பத்தரை ரூபாய் கூலி கிடைக்கும். பிறகு வந்து அரப்புத்தேய்த்து தலைக்குக் குளித்துவிட்டு, அம்மாக்கள் சந்தைக்குப் போவார்கள். சிறுவர்கள் வீதிமுக்கில் விளையாடிக்கொண்டே தலையில் 'சாடு'டன் (பெரிய கூடை) தூரத்தில் புள்ளியாக நடந்துவரும் அம்மாக்களை அவர்கள் சேலை வண்ணத்தை வைத்துக் கண்டுபிடிக்க, ஆவலுடன் எதிர்பார்த்திருப்போம். வந்ததும், 'கடலை பொரி' கட்டாயம் கிடைக்கும். சில நாள் முறுக்கும் கூடக் கிடைக்கும். சந்தை காரணமாக தொடக்கப் பள்ளிக்கு வார விடுமுறை ஞாயிறு, திங்கள் அன்றுதான்.
வறட்சியோ தன் இறுக்கத்தை அதிகரித்துக் கொண்டே இருந்தது. எங்கள் பள்ளிப் படிப்புக்கு புத்தகம் வாங்கவாவது பணம் வேண்டாமா? அந்தப் பள்ளியாண்டுத் துவக்கத்தில் வேறு வழியில்லாமல் அப்பா தனக்கு பட்டாவாகி கிடைத்த ஒரு சிறு துண்டு நிலத்தை விற்றார். பெரிய சொத்தில்லை, 120 ரூபாய்க்குப் போனது. ஆனாலும் அன்று அவர் அதைச் செய்யாமல் விட்டிருந்தால், எங்கள் பள்ளி வாழ்க்கை ஒருவேளை பாதியில் நின்றுபோயிருக்கலாம்.
'அரசுயர்பள்ளி' தலைமை ஆசிரியர் அப்துல் வகாப் அவர்கள் மிகுந்த கண்டிப்பானவர். கையில் பிரம்புடன் அவர் பள்ளியைச் சுற்றி நடந்துவரும்போது ஒரு குஞ்சு கூட மூச்சு விடாது. கண்டிப்பு என்பதுடன் கரிசனமும் கொண்டவர் என்பது ஆறாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளும்போதுதான் தெரிந்தது. வழக்கமாக எங்கள் ஜாதிக்கு ஊரில் சொல்லப்படும் பெயர் அரசாங்கப் பட்டியலின் படி முன்னேறிய வகுப்பாம். இதே ஜாதிக்கு வேறு ஒரு பெயர் (அது வடமொழிப்பெயர்) உள்ளதாம், எங்கள் ஜாதியை அந்தப் பெயரிட்டு அழைத்தால் பிற்பட்ட வகுப்பாம், பின்னாளில் சலுகைகள் எல்லாம் கிடைக்குமாம். இதையெல்லாம் சொல்லிக் கொடுத்து என் அண்ணனை ஆறாம் வகுப்பில் சேர்க்கும் முன் எங்களை பிற்பட்ட வகுப்பில் சேர்த்துவிட்டார். அந்த நிலையில் மாற்றாவிட்டால் அதற்கப்புறம் முடியவே முடியாதாம். யாருக்குத்தெரியும் இதெல்லாம், இப்படியெல்லாம் சொல்லித் தான் நாங்கள் பிற்பட்டவர்கள் என்று தெரியுமா?
'காக்கைக் குருவி எங்கள் ஜாதி...' என்ற பாட்டெல்லாம் அப்போது தெரியாது. தெரிந்திருந்தாலும் இது அப்படித்தான் நடந்திருந்திருக்கும். இந்த பிற்பட்ட வகுப்பு அடையாளம் எனக்கு பெரிய உதவியை எங்கும் செய்யவில்லை, ஆனால் பின்னாளில் என் நெருங்கிய நண்பனுக்கு இதனாலேயெ ஒரு நல்லது நடக்க நான் தடையாக இருக்கும்படி ஆனது ஒரு சோகம். அதை அந்த சமயத்தில் பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக