முதலில் என்னை ஒண்ணாவதில் சேர்த்துக்கொண்ட அந்த டீச்சருக்கு நன்றி சொல்லணும். அவருக்கும் என் வயதில் ஒரு பெண் இருந்ததால் அவளை சேர்த்துக் கொண்ட போது 'இலவச இணைப்'பாக என்னையும் சேர்த்துக் கொண்டதாக என் அம்மா ஒரு முறை சொல்லக் கேட்டிருக்கிறேன். எங்க வீட்டுக்கு எதிரில், எதிரில் என்றால் வெறும் ஒரு பத்தடி வண்டித்தடம் தான் குறுக்கே, அவ்வளவு கிட்டத்தில் பள்ளி. பல நாள் பள்ளியில் இருந்து தண்ணி குடிக்கக் கூட எங்க வீட்டுக் கதவைத் தட்டுவார்கள். 'கிட்டத்தில் இருந்ததால் நீ சின்ன வயசிலேயெ பள்ளிக்கூடத்துக்குப் போயிட்டே' என்று இன்னொரு நாள். 'உன் அண்ணன் பள்ளிக்கூடம் போகும்போது, நீயும் கூடக் கூடப் போவே, அதனாலெ உன்னையும் சேர்த்துக்கிட்டாங்க', என்று மற்றொரு நாள். இன்னதனால் என்று சரியாகச் சொல்ல முடியாவிட்டாலும், நாலு வயசு ஆன போதே ஒண்ணாவதில் சேர்ந்துவிட்டேன். அதில் ஒரு லாபம் பின்னால் சீக்கிரம் வேலைக்குப் போக ஆரம்பித்து விட்டது. ஆனால் அதுக்காக அந்த டீச்சர் ஏன் பிறந்த தேதியை, மாதத்தை, வருடத்தை என்று எல்லாவற்றையும் மாற்றினார் என்று இன்னும் விளங்கவில்லை? நிறையப் பேருக்கு வருடத்தை மாற்றி எழுதியது கேள்விப்பட்டிருக்கிறேன். ஹும்.
ஆறாம் வகுப்புக்கு மேல் தான் நன்றாய் நினைவில் இருக்கிறது. தொடக்கப் பள்ளியில் ஒரு சில நினைவுகள் மறக்காமல் இருக்கின்றன. படிப்பில் சூரனான அக்பர் அலி, பள்ளியில் ஒண்ணுக்குவிடும் நேரம், 'சுக்குட்டிப்பழம்' (மணத்தக்காளி) பறிக்க செடிக்குள் கைவைத்து, பாம்பு கொத்தி செத்துப்போனது, அமெரிக்காவிலோ எங்கேயோ இருந்து வரும் கோதுமை ரவையை மதிய உணவு செய்து பரிமாறுவது, அதை சில குழந்தைகள் மட்டும் தங்கள் ஈயத்தட்டத்தில் வாங்கி சாப்பிடுவது, தலைமை ஆசிரியர் அறையிலேயே அஞ்சாம் வகுப்பு என்பதால், புதிதாய் ஒண்ணாவதில் சேர்க்க வரும் குழந்தைகளை அவர் தலைக்கு மேல் கைவத்து, காதைத் தொடச்சொல்லி நுழைவுத்தேர்வு நடத்துவது (என்னை மட்டும் இப்படிச் சோதித்திருந்தால் கட்டாயம் 'போடா வீட்டுக்கு'ன்னு சொல்லியிருப்பார்), அவர் அதில் மும்முரமாக இருக்கும்போது, சாக்கில் கட்டி வைக்கப்பட்டுள்ள காய்ந்த கெட்டியான கோதுமை ரவையைக் கைப்பிடி எடுத்து வாயில் அடக்கிக் கொண்டு பிறகு மெதுவாக மென்று சுவைப்பது... வாழ்வின் ஒரே இளமைக்கால போட்டோ இரண்டாம் வகுப்பில் எடுக்கப்பட்ட குரூப் போட்டோ தான். இன்னொன்றும் ஞாபகம் வருகிறது, என்னுடன் அஞ்சாம் வகுப்பில் படித்த பெண், நெடுநெடுன்னு வளத்தியா இருப்பாள், ஆறாம் வகுப்புக்கு வரவில்லை, சில நாள் கழித்து ஒருநாள் அவளை அவள் புருஷனுடன் பார்த்து அதிசயித்தது!
எனக்கு அறிவு தெரிய, ஊரில் பஞ்சம் வந்துவிட்டது. வறட்சி என்றால் அப்படியொரு வறட்சி. அப்பாவும் பல முயற்சிகளுக்குப் பிறகு அமைந்திருந்த பால்வியாபாரத்தில் உள்ளதையெல்லாம் தொலைத்துவிட்டுக் கையைச் சுட்டுக்கொண்டு வீட்டுக்குள் முடங்கியிருந்த நேரம். அம்மாவின் இன்னிங்ஸ் ஆரம்பமானது அப்போது. அம்மா காட்டுக்கு கூலிவேலைக்குப் போயும்கூட, அதில் வரும் சொற்ப வருமானத்தில் நாங்கள் நால்வரும் சாப்பிடுவதென்பது சாமானியமான காரியமாக இல்லை. எங்கும் போகப்பிடிக்காமல், யாரையும் பார்க்கப் பிடிக்காமல் வேப்ப மரத்தடி மேடையில் வெட்டி நண்பர்களுடன் 'பதினஞ்சாங் கரம்' (ஆடு புலி ஆட்டம்) ஆடிப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த அப்பாவை, சரியான கோபக்கார அம்மா அப்படிப் பொறுத்துக் கொண்டார் என்பதிலிருந்து, அப்பா அதற்குமுன் அம்மாவை நன்றாக வைத்திருந்திருக்கிறார் என்பது தெரிந்தது.
அந்த நாட்களில் ஒரு இரவு. அண்ணாடும் போல கூட்டாளிகளுடன் வெட்டி அரட்டையெல்லாம் முடிஞ்சு சாமம் ஆகியும் அப்பா வந்துசேராததால் அம்மா கவலையுடன் இருக்க, கதவு தட்டப்படும் சத்தம்! அம்மா போய்க் கதவைத் திறந்தால் தூக்கமுடியாமல் பெரிய சாக்குப்பையைத் தூக்கிக் கொண்டு அப்பா! அப்பாவும் கூட்டாளிகளும் இரவில் மந்தைக்குப் போகும்போது, அந்த வழியே சந்தேகமான முறையில் ஒரு மாட்டு வண்டியில் சரக்கெல்லாம் போக, இவர்கள் சத்தம் போட்டு யாரென்று விசாரித்திருக்கிறார்கள். இவர்களைப் பார்த்துப் பயந்து அந்த வண்டிக்காரன் ஓடிப்போக, கிட்டப் போய்ப் பார்த்த போதுதான் இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது, வண்டியில் போவது கேரளாவுக்குக் கடத்தப்படும் அரிசி என்று. சோளத்துக்கும், ராகிக்குமே பஞ்சம் வந்துவிட்ட அந்த வறட்சிக்காலத்தில் மூட்டை மூட்டையாய் அரிசியைப் பார்த்ததும், தங்களால் தூக்க முடிந்த அளவுக்கு ஆளுக்குக் கொஞ்சம் எடுத்து வந்திருக்கிறார்கள். சோத்துக்கு லாட்டரி அடிப்பது என்பது இதுதானோ? அந்தக் கடத்தல்காரன் புண்ணியத்தில் அந்த அரிசி சில நாள் எங்கள் வீட்டில் மணந்தது. ஆம், உண்மையைச் சொன்னால் நாற்றம்! நான்கைந்து முறை கழுவியபின் கொஞ்சம் வாசம் குறையும், அப்படியும் சோறு ஆக்கினால் சாப்பிட முடியாது. எனவே அது தீரும்வரை 'சந்தகை'யாய் (இடியாப்பம்) செய்து சாப்பிட்டோம். இந்த அரிசியை கடத்தி...அதையும் அதிக விலை கொடுத்து வாங்க ஆள் இருக்கிறதென்பது ஆச்சரியமாக இருந்தது.
இப்படி சில நாள் சந்தோஷமானாலும், நிறைய நாள் சோதனையே. அந்த வேளையில் என் பெரியப்பா (என் பெரியம்மா வீட்டுக்காரர்) உருவில் வந்தது பொள்ளாச்சியில் புதிதாக ஆரம்பித்திருந்த அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கூண்டு கட்டுமானப்பிரிவில் (பாடிபில்டிங் யூனிட்) அப்பாவுக்கு ஒரு வேலை. அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்காக மயில்சாமி பெரியப்பாவுக்கு நாங்கள் நிறையக் கடன்பட்டிருக்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக