திங்கள், செப்டம்பர் 22, 2003

திருக்குறள் தரும் நிர்வாகக் கோட்பாடுகள் -1

அப்போது ஒரு வளரும் பொறியியல் நிறுவனத்தில் வடிவமைப்புத்துறையின் தலைமைப்பொறுப்பில் இருந்தேன். தொழிற்கூடத்தில் தயாராகும் பாகங்கள் ஒவ்வொன்றுக்கும் செய்முறைக் குறிப்புக்களை எழுத்துவடிவத்தில் பதிப்பிக்க வேண்டி வந்தது. ISO:9001 தர உறுதிச் சான்றிதழ் பெறுதல் என்ற எங்கள் தலைவரின் இலட்சியம் இந்த வேலைகளை முடுக்கி விட்டிருந்தது. குறிப்புக்களைப் பதிப்பிக்கும் விதமாய் ஒரு படிவத்தை முதலில் வடிவமைத்தோம். அந்தப் படிவத்தில் முக்கியமான கட்டங்கள் எவை என்றால்:

1. பாகத்தின் அடையாள எண், பெயர்
2. மூலப்பொருளின் அடையாள எண், பெயர், அளவு
3. மூலப்பொருளில் ஆரம்பித்து செயல்படுத்த வேண்டிய தயாரிப்பு முறைகளின் அட்டவணை. ஒவ்வொரு அடிப்படை செயலுக்கும் கீழ்க்கண்ட விவரங்கள்:
3.1 செயல்
3.2 எந்திரத்தின் பெயர்
3.3 கருவியின் பெயர்
3.4 செய்ய ஆகும் நேரம்
3.5 செய்யும் ஆலையின் பிரிவு/இடம்

இவை அனைத்தும் தெளிவாகக் கொடுக்கப்பட்டால் எந்தப் பாகத்தையும் எப்படித் தயார் செய்வதென்று யாரையும் கேட்காமல் தெரிந்து கொள்ளமுடியும். A4 தாள் அளவில் படிவத்தை கட்டங்கள் கொண்டு அமைத்தோம். அப்போது தயாராகிக்கொண்டிருந்த பாகங்கள் அனைத்திற்கும் இவை சரியாகப் பொருந்தினதில் திருப்தி.

பிறகு ஒருநாள் திருக்குறளைப் புரட்டுகையில் ஒரு குறளைக்கண்ட கண் மேற்கொண்டு நகராமல் நின்றது. அது:

பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல். :675
(பொருட்பால், அமைச்சியல், 2.2.5 வினைசெயல்வகை)

செய்முறை விளக்கத்தை எவ்வளவு சுருக்கமாய், ஆனால் எவ்வளவு நிறைவாய் எழுதியிருக்கிறான் என் பாட்டன்!
பொருள்:
மூலப் பொருள் (raw material), செய்யப்படவேண்டிய பொருள் (objective) இரண்டுக்குமே பொதுவானது
கருவி:
எந்திரம், செய்கருவி, கைக்கருவி என் அனைத்தையும் அடக்கும் ஒரு பெருஞ்சொல். That which transforms! Machine tool, custom made tool (mold, press toll, jigs&fixtures) and hand tools.
காலம்:
விளக்கம் தேவையில்லை. ௾ருந்தாலும் சொல்லலாம். காலம் இரு வகைப்படும். நேரம் மற்றும் வரிசைக்கிரமம் (இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என வரிசைப்படுத்த, அதாவது எது முதல், எது அடுத்து என வரிசைப்படுத்த.) இங்கு அடிப்படைச்செயல்களின் வரிசைப்படுத்த வேண்டிய அவசியத்தையும் 'காலம்' குறிக்கும். செயல் X, செயல் K -க்குப் பிறகு தான் வரவேண்டும் என்றால் பிறகு தான் வரவேண்டும்.
வினை:
செய்முறை, அதாவது வெட்டுதல், இழைத்தல், ஒட்டுதல் போன்ற செயல்கள். அட்டவணைப்படுத்தப்படும் செயல்கள். activity/process
இடம்:
செயல் செய்யப்படவேண்டிய இடம். இது ஆலைபிரிவின் பெயராக இருக்கலாம், அல்லது ஆலைக்கு வெளியே அனுப்பி வாங்கவேண்டிய செயல் என்றால், அப்படி அனுப்பவேண்டிய இடத்தின் பெயராய் இருக்கலாம்.

இவை ஐந்தினையும் 'இருள்தீர' எண்ணிச் செய்யச்சொல்கிறான். எப்போது இருள் தீரும்? தெளிவாகப் பட்டியலிட்டு, அதை சாசனம் செய்து, தேவையான இடங்களில் பார்வைக்கு வைத்தால், பிறகென்ன ஆட்கள் 'இருள்தீர', ஐயம் தெளிவுற தெரிந்து கடைப்பிடிப்பார்களே!

இதில் இன்னுமொரு சிறப்பு இந்தக்குறளை எங்கு வைத்திருக்கிறான் பாருங்கள், பொருட்பாலில், 'அமைச்சியலி'ல். நிறுவனத் தலைவர் அரசர் என்றால் துறைத்தலைவர்கள் அமைச்சர்கள் அல்லரோ? எனவே என் போன்ற துறைத்தலைவர்கள் அறிந்து கொள்ள வேண்டி இதை அங்கு வைத்திருக்கிறான். அய்யா வள்ளுவரே, உம் ஒருவராலேயே எம் தமிழ் வாழும், அதில் எந்த சந்தேகமும் இல்லை.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...