சனி, செப்டம்பர் 27, 2003

மனிதனின் உணவு தர்மம் - 2

அலசல் விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறது.

உடல்கூறு அடிப்படையில் மனிதன் சைவ உணவு உண்ணும் விலங்குகளையே பெரிதும் ஒத்திருக்கிறான் என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆதியில் மனிதன் சைவம் தான் உண்டிருக்க வேண்டும், பிறகு காட்டுத்தீயில் வெந்த மாமிசத்தை எதேச்சையாக உண்ணப்போக, 'ஹய்யா, இது ரொம்ப டேஸ்ட்டா இருக்கே, ஏன் நீ இந்த மாதிரி டிஷ்ஷெல்லாம் பண்றதே இல்ல'ன்னு பொண்டாட்டிகிட்டே கேட்டிருக்கணும். அவளும் மாமா கேக்கறாங்களேன்னு பாய் கடையிலே கறிவாங்கிவந்து சமையல் பண்ணியிருக்கணும்...ச்சே கனவு சரியா மேட்ச் ஆக மாட்டெங்குதே.

ஆனால் இந்தக் காட்டுத்தீ தியரி உண்மையா என்பதும் தெரியவில்லை. பனிப்பிரதேசத்தில் வாழும் (வாழ்ந்த?) எஸ்கிமோக்களை எடுத்துக்கொள்வோம். அவர்கள் பெரும்பாலும் பச்சை மாமிசத்தை உண்டார்கள் என்று ஒரு கருத்து. இந்த எஸ்கிமோ என்ற வார்த்தையே 'பச்சை மாமிசம் உண்பவன்' என்பதில் இருந்து வந்தததாகவும் ஒரு வாதம்.


(c) Jean Clottes

ஃப்ரான்சில் Chauvet (ஷாவே?) குகைகளில் ஆதிமனிதன் காட்டெருமையை வேட்டையாடுவதை கரிக்கட்டையால் படம் வரைந்து இருப்பதையும், கார்பன் டேட்டிங் முறைப்படி அவை இன்றைக்கு 31000லிருந்து 32000 வருடங்களுக்கு முற்பட்டவை என்று கண்டிருப்பதையும் படிக்கிறோம்

அப்படியானால் எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன் அவன் அந்தக் காட்டுத்தீயில் வெந்த கறியை உண்டான்? அசைவப் பிரியர்கள் (வெறியர்கள்?) பங்குகொண்ட ஒரு வலைமடலாடலில் இன்னும் சில தகவல்களைக் கண்டேன். இந்த உடற்கூறு ஒப்புமையில் ஒரு விதத்தில் மனிதன் மாமிசபட்சிணிகளை ஒத்திருக்கிறான் என்று வாதிடுகிறார் ஒருவர். இரு கண்களாலும் ஒரே இடத்தைப்பார்க்கும் திறன் உள்ள விலங்குகள் மட்டுமெ முப்பரிமாணத்தை (Stereoscopic vision) அவதானிக்க முடியும். வேட்டையாடி உண்ணும் சிங்கம், புலி, இவைகளைப்போல மனிதனுக்கும் முன்நோக்கிப் பார்க்கும் இரு கண்கள் உள்ளன. ஆடு மாட்டுக்கெல்லாம் பக்கவாட்டில் பார்க்கும் வண்ணம் தான் கண்கள் உள்ளன. எனவே மனிதன் வேட்டையாடப் பிறந்தவன் என்கிறார் இவர். அப்படியானல் இந்த அற்பக்குரங்கு சைவம் சாப்பிடுகிறதே, அதற்கு நம்மைப்போலவே முப்பரிமாணப்பார்வை தானே, ஒரே குழப்பமாய் உள்ளது இந்த வாதம்.

இன்னொரு அலசல். மனிதன் சைவப்பிராணியாக இருந்து மாறியிருப்பானென்றால், அதுவும் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருக்க வேண்டும் (குறைந்தது 30 000 ஆண்டுகளுக்கு முன் என்பது சான்றுடன் நிரூபிக்கப்பட்டிருக்கும்போது, உண்மையில் லட்சக்கணக்கில் இருக்கலாமே). அப்படியானால் இத்தனை ஆண்டுகளில் அவன் உடல்கூறு கொஞ்சமாவது அசைவ விலங்குகளை நோக்கி நகர்ந்திருக்கவேண்டாமோ, டார்வினின் பரிணாமக்கொள்கையின்படி ? ஒருவேளை இந்த இருகண்பார்வை அதைதான் காட்டுகிறதோ. எனக்கு இப்போதெல்லாம் முன்பு அளவுக்கு டார்வின் மேல் நம்பிக்கை இல்லை. சந்தேகத்துடன் தான் பார்க்கிறேன்.

அந்த மடல்களில் ஒருவர் வாதிட்டிருந்தார், மனிதன் உடல் சைவ உணவிற்கும், அசைவ விருந்திற்கும் (Plants are staple, meat is treat) பொருந்துவதாக.இதைத்தானே செய்து வந்திருக்கிறது எம் தமிழ்ச் சமுதாயம். எங்கள் ஊரில் வாரத்தில் ஒரு நாள் தான் கறிக்கடையே திறக்கும். ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் உணவு ஆட்டுக்கறிக் குழம்பு என்பது எழுதப்படாத சட்டம். பிறகு என்றாவது ஒரு விடுநாளில் வந்து சேரும் ஒரம்பரைகளுக்குப் படைக்க கோழிகள் இருக்கவே இருக்கின்றன.

காடுகளில் இயற்கையாக வளர்க்கப்படும் ஆடுகளையும், வீடுகளில் குப்பை கூளங்களை உண்டு வளரும் கோழிகளையும் விருந்தாக மட்டும் உண்ணும் வரை எல்லாமே சரியாகத்தான் இருந்தது. இறைச்சிக்காகவே விலங்குகளையும், பறவைகளையும் தொழில்முறையாக வளர்க்க ஆரம்பித்தபின் தான் எல்லாச்சிக்கலும். இந்தத் தொழில் முறை இறைச்சி விவசாயம் இந்தப் பூவுலகின் இயற்கை வளங்களுக்கு எப்படி எதிரியாகிறது என்பதையும், மனிதன் முழுநேர மாமிச பட்சிணியானால் மேலும் என்னென்ன விளைவுகள் என்பதையும் இன்னொரு நாள் தொடர்ந்து அலசலாம்.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...