இந்தக் கிடாவெட்டு ஒரு அவசியமான அதீதம். கறி(புலால்) சாப்பிடுவது சமூகக் குற்றமில்லையென்றால் இதுவும் குற்றமாக இருக்கமுடியாது. முதலில் கோயில்களில் 'உயிற் பலியிடல்' தடை செய்யப்படவேண்டும் என்பதற்கான காரணங்கள் என்ன?
சாந்தமே உருவான கடவுள் சன்னிதியில் கொலையை எப்படி அனுமதிக்க முடியும்? அனைத்து உயிர்களுக்கும் அனுக்ரகம் செய்யும் ஆண்டவன் எப்படி ஒரு உயிர்க்கொலையை காணிக்கையாகக் கேட்பான்? மன அமைதிக்காகக் கோயிலுக்கு வரும்போது, அங்கு ரத்த ஆற்றில் பிணங்களைக் கண்டால் எங்கிருந்து வரும் நிம்மதி?
விரும்பியோ விரும்பாமலோ வெகுபல கிடாவெட்டுகளுக்குப் போனவன், சில கிடாவெட்டுகளை நடத்தியவன் என்றமுறையில் நினைத்துப்பார்க்கிறேன். இந்த வாதங்கள் எனக்கு சரியாகப்படவில்லை.
முதலில் சாந்தசொரூபிகளான சாமிகளுக்கு என்றுமே பலியிடுதல் நடத்தப்படுவதில்லை. அதற்கென்று கோயில்கள் இருக்கின்றன. பெருமாள் கோயிலிலோ பிள்ளையார் கோயிலிலோ யாரும் கிடாவெட்டுவதில்லை. எங்கள் ஊரில் கருப்பராயனுக்குத்தான் கிடாவெட்டுவார்கள். கிடாவெட்டு நடத்தும் கோயில்களுக்கு சாத்வீக பக்தர்கள் வருவதில்லை. எனவே இந்த வாதம் வீண்வாதம்.
ஆண்டவன் என்று எதைக்கேட்டிருக்கிறான்? நாமாகக் கொண்டு கொடுப்பதுதானே காணிக்கை. பகவத் கீதையில் கண்ணன் 'இலை, மலர், பழம், நீர் இவையாவது அன்புடன் எனக்கு காணிக்கை செய்தால் அதை நான் சந்தோஷமாய் ஏற்றுக்கொள்வேன்' (Patram Pushpam Phalam Thoyam...) என்று சொல்கிறான். பெரிதாய் செய்யவேண்டியதில்லை, இந்த நாலில் ஒன்றையாவது செய்யுங்கள் என்கிறான், அதிலும் அந்த நாலாவது ஒன்றைக்கூட (நீரை) காணிக்கையிட முடியாதவன் மனமில்லாதவனேயன்றி வேறில்லை. இதைத்தவிர ஒன்றும் படைக்காதீர்கள் என்று சொல்லவில்லை.
நெய்யும் சர்க்கரையும், அரிசியும் பருப்புமாய் பலகாரங்கள் செய்து அவனுக்கு அளித்துப் பின் அதை பிரசாதமாய் உண்டு ஆனந்திக்கிறோம். அதாவது நாம் உண்ணும் எதையும் ஆண்டவனுக்குப் படைத்துப் பின் உண்ணுவதே இதில் அடிப்படியான விஷயம். ஆனால் வேதங்களில் இன்னும் பலவற்றைக் காணிக்கை செய்வதைப் பற்றிய குறிப்புகள், அதிலும் அக்கினியில் இட்டு சாம்பலாக்கும் விதத்தில், இருப்பதாக அறிகிறோம். இதைத்தான் அதீதமான, தேவையற்ற, காணிக்கையாகக் கருதமுடியும். ஏனெனில் இங்கு தீயில் இடப்படுவது எதுவும் நமக்குப் பிரசாதமாய் திரும்ப வருவதில்லை.
கண்ணப்ப நாயனார் வேடனாய் தினமும் ஈசனுக்கு கறி படையலிட்டு வணங்கியதைப் படித்திருக்கிறோம். தர்மம் என்றால் என்ன என்னும்போது 'தன் குணத்தியல்பு வழுவாமல் நடத்தல்' என்று ஒரு விளக்கம் கிடைக்கிறது. மானைக்கொல்வது புலியின் தர்மம், அதன் மூலம் புலி பாவத்தை சம்பாதிப்பதில்லை. க்ஷத்திரியனின் தர்மம் போரில் எதிரியைக்கொல்லுதல். ஒரு வேடனின் தர்மம் வேட்டையாடுதல், அப்படி வேட்டையில் கிடைக்கும் பொருட்களை அவன் கடவுளுக்குக் காணிக்கையிட்டால் அது எப்படிக்குற்றமாகும்? இந்த வகையில் புலால் உண்ணுவதை வழக்கமாகக் கொண்டவர்கள் அதை ஆண்டவனுக்குப் படைத்துப் பின் தான் உண்பதில் என்ன பிணக்கு இருக்க முடியும்?
தன் உணவிற்காகப் பிற உயிர்களைக் கொல்ல வேண்டுமா என்றால் அது ஞாயமான கேள்வி. மனித உடலின் தர்மம் அசைவம் உண்பதா என்றால் அது ஞாயமான கேள்வி. இந்த இரண்டுக்குமே இல்லை என்பதுதான் பதில். புலால் உண்பதால் இந்த உலகின் இயற்கை வளங்களை எப்படி வேகமாக காலி பண்ணிக்கொண்டிருக்கிறோம் என்பது சிந்திக்க வேண்டிய விஷயம். இந்த விபரங்களைப் புரியவைத்து புலால் உண்ணும் வழக்கத்தை ஒழிக்க முயற்சி எடுத்தால் வரவேற்கலாம்.
முன்பெல்லாம் என்றாவது ஒருநாள் கறி சாப்பிட்டது போய் இன்று கறிக்கோழிகள் வந்தபின், தினமும், ஏன் இன்னும் சிலர் ஒரு நாளில் பல வேளை, அசைவம் உண்பது சாதாரணமாகி விட்டது. இதனால் தனக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் கேடு பற்றி அறிய வைத்தல் முக்கியம். கறிக்கோழிகள் வளர்ப்பதற்கு அரசாங்கமே கடன் கொடுக்கும்வரை, கறிக்கடைகள் நடத்துவதை அனுமதிக்கும்வரை, கிடாவெட்டையும் அனுமதிப்பதே சமத்துவம். அதைவிடுத்து வைதீகக் காரணங்களுக்காக சட்டம் இயற்றப்பட்டால் அது நின்று நிலைக்கும் என்று தோன்றவில்லை. இதுவும் அமல் படுத்தாமல் அடங்கிவிட்ட 'கட்டாய மதமாற்றத்தடைச்சட்டம்' கிடக்கும் நிலையிலேயே கிடத்தப்பட்டு விடும் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது.
இதில் இன்னோரு வினோதம், பிறந்தது முதல் அசைவம் உண்டு வந்த நான், அசைவத்தை கைவிட்டு 3 மாதங்களுக்குப் பிறகும் இந்த கிடாவெட்டுத் தடைச்சட்டத்தில் அதிருப்தி காண்பதுதான்!
எனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எழுத்தென்னும் அற்புதம்
நண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...
-
அதென்ன தமிழனுக்கு மட்டும் இந்தக் கேவலம்? என்னமோ அனாதப்பயலப் பாக்கற மாதிரியில்ல பாக்கறானுவ, எல்லாவனும்! எல்லா நாட்டுக்காரனுக்கும், அட நம்ம இந...
-
மதி கந்தசாமியின் நேரமோ நேரம்! தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்ட...
-
தமிழ்நாட்டின் மிக அதிக வசூல்திறனுள்ளதாகச் சொல்லப்படும் நந்தனம் சிக்னல். மாலை 8 மணி. தி. நகரிலிருந்து வந்து தெற்குப்புறம் திரும்பவேண்டும். என...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக