செவ்வாய், செப்டம்பர் 30, 2003

ஆண்பிள்ளை சமையல்

சும்மா ஒரு விஷுவலுக்காக, என் சமையலல்ல :-)

எங்கப்பாவுக்கு சமைக்கத்தெரியும். அவர் அண்ணந்தம்பிகள் எல்லாரும் சமைப்பார்கள். சித்தூரில் ஹோட்டல் நடத்திய ('டீக்கடைன்னு சொல்றது, இதில் என்ன பெருமை?' - இது என் இல்லத்தரசி) குடும்பம் என்பதால் எல்லாருக்கும் சமையல் தெரிந்திருந்தது. சென்ற வருடம் வரை என் பெரியப்பா கடை நடத்தினார். அவருக்குக் கடை ஒன்று தான் உலகம். எந்த ராஜா எந்தக் கோட்டையைப் பிடித்தாலும் கடை நடக்கும்.

ஆனால் எனக்குத் தெரிந்து எங்கப்பா கடை நடத்தினதில்லை. அவர் ஒரு சகலகலாவல்லவர். நிறையத்தொழில் பார்த்திருக்கிறார். அப்பா போனபிறகு அம்மா ரொட்டி வெல்ல (bread winner, ஹி ஹி..:) வேண்டி வெளியேபோக வேண்டிவந்ததால் நானும் என் அண்ணனும் சமைத்துப் பழகினோம். பாலிடெக்னிக் படிக்கும்போதுதான் என் சமையல் சாம்ராஜ்யத்தின் பொற்காலம். ரொம்ப வெரைட்டியெல்லாம் தெரியாது. ஏதோ ஒரு பருப்பு அல்லது பயறு, புளி ரசம் அவ்வளவு தான். அம்மா, அண்ணன் ரெண்டு பேரும் உழைக்க, நான் நிறைய முறை சமைப்பேன். என் அண்ணன் கல்யாணத்துக்கப்புறம் கிட்டத்தட்ட அதை மறந்தே விட்டார் ('நான் இல்லீன்னா பசங்களுக்கு முன்னாடி அப்பா புரோட்டாக் கடையில நிப்பாரு' - இது என் அண்ணி). ஆனால் என்னால் அவ்வப்போது சமையலறையில் சாகசம் பண்ணுவதை நிறுத்த முடியவில்லை. அதற்கு இன்னொரு காரணம் என் குழந்தைகள்.

நண்பர் Dr. கண்ணன் கொரியக் கூட்டணியில் மாட்டிக்கொண்டு சமைக்க ஆரம்பித்தபோது எனக்கு இரண்டு வருடம் முன் அமெரிக்கா வந்து சுயசமையல் பண்ண ஆரம்பித்தது நினைவுக்கு வந்தது. ஒரு சமயம் சமையல் செய்ய ஆர்வமாய் இருக்கும், இன்னொரு சமயம் யாராவது ஒரு கப் தயிர்சாதமாவது செய்துவைத்திருக்க மாட்டார்களா என்று ஏக்கமாக இருக்கும். கண்ணன் அவர்கள் அனுபவம் என்ன என்பது அவர் சொன்னல்தான் தெரியும். அவருடைய சமையல் குறிப்பு சேகரத்தில் நானும் நேற்று ஒரு பங்களித்தேன். ஆனால் அது சிக்கனமான சித்தூர் சமையலுமல்ல, ஏனோ தானோ சுயசமையலுமல்ல. உண்மையில் ஆர்வத்துடன் இந்த வாரம் கற்றுக்கொண்டு செய்த சமையல்.

இத்தனைக்கும் இங்கு என் மனைவி சமையலைப் பாராட்டாதவர் இல்லை. இங்கு எங்களைச்சுற்றி உள்ள தமிழ்ப்பெண்கள் பெரும்பாலும் கலயாணமானதும் அடுத்தவாரம் அமெரிக்கா வந்தவர்கள். எனவே சமையல் அனுபவம் கம்மி. ஆனால் என் மனைவியோ எல்லா R&Dஐயும் ஏற்கனவே முடித்துவிட்டு இங்கு வந்தவள். அதனால் அவள் சமையலைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும்...(அய்யோ அடிக்காதே, அடிக்காதே)

இருந்தாலும், அவ்வப்போது என்னைச் சமைக்கச்சொல்லிக் வேண்டுகோள் ('அன்பு'க் கட்டளை) விடுவாள். குழந்தைகளும் ஆமோதிப்பார்கள். ஏனென்றால் நான் சமையலில் பண்ணும் R&D தான். ரவாதோசை, சுட்ட காய்கறிகளிருந்து சென்ற வாரம் பண்ணிய தால் மக்கானி வரை. இயற்கையிலேயே R&D ஆர்வம் பொங்கும் மண்டையாதலால் இப்போது வேறு எதிலும் R&D பண்ணமுடியாமல் இதில் பண்ணுகிறேன் என்றும் கொள்ளலாம்.

இதில் ஒரு சவுகர்யம், அவள் பண்ணாத ஐட்டம் ஆனதால் அனாவசியமாக போட்டி, பொறாமை இல்லை. நான் ஆரஅமர நேரம் எடுத்து பண்ணிமுடிப்பதற்குள் பசியால் துடிக்க ஆரம்பித்து விடுவார்கள், எனவே எதைச்செய்து போட்டாலும் 'ஆஹா சூப்பர்' என்று பெயர்வேறு கிடைக்கும் (பசி ருசியறியாது)

வருடம் 9 மாதம் குளிரில் வீட்டைவிட்டு வெளியேவரமுடியாத ஊரில் (இன்று இரவு 3 degC குளிர்) மாட்டிக்கொண்டதால், இது ஒரு நல்ல பொழுது போக்கும் கூட. இங்கு மின்னடுப்பு, நுண்ணலை அடுப்பு என்று வித்தியாசமாய் சோதனை செய்ய வசதியான கட்டமைப்பு வேறு. அதிலும் இப்போது சுத்த சைவர்களாகி விட்டதால் காய்கறிச்சமையலில் புதிதுபுதிதாய் ஆராய்ச்சி வேறு நடக்கிறது.

முடிந்தவரையில் ஆண்கள் அவ்வப்போது சமையலை ஒரு கை பாருங்கள், குடும்பத்துக்கே பொழுதுபோகும்.

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...