திங்கள், ஜூலை 17, 2006

சில முயற்சிகள் சில அனுபவங்கள் -10

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9

வலைப்பதிவிலிருந்து விலகுவதாகச் சொல்லியிருந்த மாலன், சென்னை சந்திப்புக்கு முன்பே யாஹூ360 என்ற சேவையைப் பயன்படுத்தி மீண்டும் வலைப்பதிவு ஒன்றைத் தொடங்கியிருந்தார். இந்த சேவையில் ஒரு அம்சம், தன் வலைப்பதிவில் யாரையெல்லாம் மறுமொழிய அனுமதிக்கலாம் என்பது நம் கையில் இருக்கிறது. அனாமதேயங்களுக்கு மட்டுமல்ல, கொஞ்சம் இறுக்கிப் பிடித்தால் போலிகளுக்கும் இங்கே வேலையில்லை. அன்றைக்கு ப்ளாக்கர்.காம் மறுமொழிச் சேவையில் இம்மாதிரி வசதி இல்லை. அதுமட்டுமல்லாமல், இன்று முக்கியமாகப் பயன்படுத்தப்படும் மறுமொழி மட்டுறுத்தல் வசதியும் ப்ளாக்கர்.காம் அளிக்க ஆரம்பிக்கவில்லை. அதனாலேயே மறுமொழிகள் விஷயத்தில் தமிழ்மணம் செய்ய ஒன்றுமில்லை என்று சொன்னோம். மறுமொழி மட்டுறுத்தல் வசதியை 2005 நவம்பரில், அதாவது இந்த சந்திப்பு நிகழ்ந்து சுமார் 4 மாதங்கள் கழித்தே ப்ளாக்கர்.காம் நடப்புக்குக் கொண்டு வந்தது.

நமக்குத் தெரிந்தவர்களை மட்டும் வாசகராக வைத்துக்கொண்டு வலைப்பதிவில் ஈடுபடுவது எல்லாருக்கும் உவப்பான செயலாக இருக்கமுடியாது. வலைப்பதிவின் திறந்த நிலையே அதன் வளர்ச்சிக்கு ஒரு அடிப்படைக் காரணி. மாலன் போலி ஒழிப்புக்கான தீர்வாக ப்ளாக்கர்.காம்க்கு பதிலாக யாஹூ360 சேவையை பரிந்துரை செய்தார். போலிகளைக் கட்டுப்படுத்த சில கூடுதல் வசதிகள் என்பதைத் தவிர பெரிய நிறைகள் யாஹூ 360-ல் இல்லை. ப்ளாக்கர்.காம்-ஓடு ஒப்பிடும்போது பல வகைகளில் இது குறைப்பட்ட வசதியே. இன்று எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் யாஹூ 360-இல் இயங்குகின்றன என்பதிலிருந்தே இது புலப்படும். போலி ஒழிப்புக்காக மட்டும், வசதியான, ஆற்றல்மிக்க, நுட்பரீதியாக மேம்பட்ட ஒரு சேவையை விட்டு இடம் மாறுவது பலருக்கும் பிடிக்காமல் போனதில் வியப்பில்லை. ஆகவே இந்தப் பரிந்துரையை பெரிதாக யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

மேலும், இதே யாஹூ360 சேவையைப் பயன்படுத்திய இன்னொரு வலைப்பதிவர் ஏற்கனவே தமிழ்மணத்தில் சேர்க்கைக்கு அளித்திருந்ததும், அது சேர்க்கப்பட்டு திரட்டப்பட்டுக்கொண்டிருந்ததும் மாலன் அறிந்திருக்கவில்லை. எனவே இதுவும் தமிழ்மணத்தோடு இயங்கக்கூடிய, ப்ளாக்கர்.காம்-க்கு மாற்றான இன்னொரு சேவை என்பதை சரியாக உணர்ந்து முன்னிறுத்தாமல், தமிழ்மணத்துக்குப் பதிலாக ஒரு சேவை என்ற ரீதியில் அவர் எழுதிவிட்டார். நான் சென்னை சந்திப்புக்குப் போகும்வரை மாலன் இம்மாதிரி ஒன்று எழுதி அது சர்ச்சைக்குள்ளாகியிருப்பதுகூட எனக்குத் தெரியாது. ப்ளாக்கர்.காம்-க்கும் தமிழ்மணத்துக்கும் வேறுபாடு தெரியாத பல புதியவர்களைப்போல மாலன் எழுதியிருக்க முடியாது என்றும், ஆகவே அவரின் நோக்கத்தையே சந்தேகிக்க வேண்டியிருப்பதாகவும் பலர் பதிவுகளில் விவாதிக்கவும் பிரச்னை இன்னும் பெரிதாகிப் போனது மிகுந்த வருத்தமளித்த ஒரு செயல்.

இந்த சமயத்தில் வந்திருந்த சிலரின் இடுகைகள் இன்று தேடும்போது, திருத்தப்பட்டிருக்கின்றன அல்லது நீக்கப்பட்டிருக்கின்றன. பலர் வாசிக்க ஒரு இடுகையைப் பதிப்பித்த பின் ஒரு வரியை மாற்றினாலே அதைக் குறிப்பிட்டு செய்ய வேண்டும் என்று ஒரு கொள்கையை நான் உள்பட பலர் இங்கே ஒரு நெறிமுறையாக வைத்திருக்கிறோம், ஆனால் அறிவிப்பின்றி இப்படி முழு இடுகைகளே நீக்கப்படுவது சரியா என்பதை வாசிப்பவர்களின் முடிவுக்கு விடுகிறேன். இன்று கூகிளின் சேமிப்பிலிருக்கும் (cached pages) பக்கங்களை வாசித்தால் பிரச்னையின் தீவிரமும் சிலர் எடுத்த தவறான நிலைப்பாடுகளும் தெரியவருகின்றன. தாங்கள் தவறாக எழுதிவிட்டதை உணர்ந்தோ என்னவோ அப்பக்கங்களை அவர்களே நீக்கிவிட்ட நிலையில் அவற்றிலிருந்து மேற்கோள்காட்டுவது நாகரிகமில்லை என்றாலும் 'வரலாற்றை மறந்தவர் அதே வரலாற்றை வாழ்ந்து பார்க்க வைக்கப்படுவர்' என்ற கூற்றுக்கேற்ப வரலாற்றை முற்றிலும் மறக்கவும் முடியவில்லை. அந்த சர்ச்சைகளிலிருந்து பிருந்தாவனம் கோபியின் ஒரு மறுமொழியை மட்டும் கூகிளின் சேமிப்பிலிருந்து எடுத்து இங்கே மேற்கோளிடுகிறேன்.

//
இங்கே ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். தமிழ்மணம் ஒரு பட்டியலிடும் தளம், அவ்வளவே.

அவரவர் தங்கள் ப்ளாக்கர் தளங்களில் எழுதுவதை பட்டியலிடும் ஒரே காரணத்துக்காக, தமிழ்மணத்தை குறை சொல்ல முடியாது.

தமிழ்மணத்தில் ஒரு வலைப்பூவை பட்டியலிடச் செய்வது மிக எளிது. தொழில்நுட்ப ரீதியாக ஒரு வலைப்பூ RSS Feed சேவையை அளிக்குமானால் அதனை தமிழ்மணத்தில் பட்டியலிட முடியும்.

Yahoo 360ன் RSS feed சேவையை பயன்படுத்தி அது வழங்கும் வலைப்பூக்களையும் தமிழ்மணத்தில் பட்டியலிடச் செய்வது எளிது.

மாறவேண்டியது அழுக்கடைந்த சில மனித மனங்களே அன்றி Blogger சேவையிலிருந்து Yahoo 360க்கோ அல்லது தனிப்பட்ட வலைப்பூக்களுக்கோ அல்ல என்பது என் கருத்து.

உங்கள் தளத்தின் வருகையாளர்கள் தமிழ்மணத்தையும் Blogger/Yahoo 360 சேவையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே இந்தப் பின்னூட்டம்.

நன்றி!

ப்ரியமுடன்,

கோபி

By கோபி(Gopi), at 4:35 PM
//

இதுபோன்ற சர்ச்சைகள் வரும்போது தானாக முன்வந்து பலர் தங்கள் கருத்துக்களை எழுதுவதும், அவர்கள் சொல்வது என்னையோ தமிழ்மணத்தையோ ஆதரிக்கும் ரீதியில் இருந்துவிட்டால் அவர்களை 'என் அடியாட்கள்/அல்லக்கைகள்' என்று குறிப்பிட்டு, 'எது கேட்டாலும் இந்த ஆள் பேசமாட்டானாம், அவனின் அடியாட்கள் பேசுவார்களாம்' என்று சிலர் எழுதுவதும் பலமுறை கண்டிருக்கிறேன். எந்த அணியிலும் சேர விரும்பாத, யாருடனும் தொலைபேசியில் மட்டுமல்லாமல், மின் அரட்டையிலும் கூடத் தொடர்புகொள்ள விரும்பாத, இலக்கிய, சிற்றிதழ் குழுக்களை அறிந்தும்கூட இராத எனக்கு இத்தகைய தன்னார்வலர்களின் ஆதரவு ஒன்றே ஊட்டம். அது மட்டும் இல்லையென்றால் இந்த தமிழ் இலக்கிய அரசியல் சூழல் புரிந்த அன்றே தமிழ்மணத்தைத் தூக்கிக் கடாசிவிட்டுப் போயிருப்பேன்.

ஆனாலும், 'தமிழ்மணத்தை இழுத்து மூடிவிட்டுப் போ' என்ற ரீதியில் ஒரு முகமிலி எழுதும் அளவுக்கு பிரச்னை வளர்ந்தது என் மனதில் பட்ட முதல் காயம். ஆனால் யாருக்கோ தமிழ்மணம் வழியாக இத்தனை பேர் எழுதுவது பிடிக்காததால் இதைச் சொல்வதாக எடுத்துக்கொண்டேன். அதற்காகவாவது இது தொடர வேண்டும், இன்னும் உத்வேகத்துடன் நடக்கவேண்டும் என்று உறுதிபூண்டேன். என் நேரவசதிக் குறைவினால் அதன்பின்னர் தமிழ்மணம் இரண்டாம் பதிப்புக்கு நிரல் எழுத சம்பளத்துக்கு ஆள் தேடுவதில் ஈடுபட்டேன். இத்தனை சச்சரவுகளின் போது பலரும் கொடுத்த அனுபவமும், தொழில்ரீதியாக மென்பொருளாளன் அல்லாத என் ஒருவன் கைப்பாட்டில் உருவான தமிழ்மண நிரல்பொதியில் திறமூல நிரல்குழுக்கள் எதுவும் கைவைத்து மேம்படுத்துவது என்பதில் எனக்கு பெரிய நம்பிக்கையில்லாததாலும், நான் யாரையும் உதவிக்கு அழைக்கவில்லை.

இதற்குள் என் இல்லத்திலும் அகலப்பாட்டை இணைப்புப் பெற்றுவிட்டேன். ஓரளவுக்கு நிர்வாகப் பணிகளிலும் மீண்டும் ஈடுபடத் தொடங்கிவிட்டேன். அமெரிக்காவை விட்டுக்கிளம்பியதிருந்து அதுவரை செல்வராஜ்/மதி/பரி மூவருமே நிர்வாகப் பொறுப்பில் முழுமையாக ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் பங்களிப்பு எப்போதையும் விட அந்த மாதங்களில் மிகுந்த அவசியமானதாக இருந்தது. அவர்கள் பொறுப்பேற்காவிட்டிருந்தால் இடையில் பெரிய தொய்வு ஏற்பட்டிருக்குமென்பதில் ஐயமில்லை.

5 கருத்துகள்:

செந்தில் குமரன் சொன்னது…

காசி இன்றுதான் உங்களுடைய இந்த தொடரின் அனைத்துப் பாகங்களையும் படித்து முடித்தேன். தமிழ் மணம் போன்ற சீரிய முயற்சி தொடங்கியதற்காகவே உங்கள் மேல் மிகுந்த மதிப்பு உண்டு. இந்த தொடரின் மூலம் அந்த மதிப்பு மேலும் கூடுகிறது.

கீதா சாம்பசிவம் சொன்னது…

இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு நீங்க செய்யற சேவையை நாங்க குறை சொல்லுவோமா? உங்கள் சேவை நன்கு நடக்க எங்களால் முடிந்த அளவு ஒத்துழைப்போம்.

ஜோ / Joe சொன்னது…

காசி,
தொடர்ந்து படித்தது வருகிறேன் .நீங்கள் ஆற்றிய பணிகள் என்றும் நன்றியுள்ளோர் நெஞ்சில் நிலைத்து நிற்கும்.

சுந்தரவடிவேல் சொன்னது…

உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன! நன்றி.

குமரன் (Kumaran) சொன்னது…

காசி அண்ணா. இந்தத் தொடரைத் தொடர்ந்து படித்து வருகிறேன். எழுதிப் பதிப்பதற்கு மிக்க நன்றி.

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...