பாராட்டுக்கள் குவிந்தபோதே சச்சரவுகளும் இருந்தன.
தமிழில் எழுதப்படும் வலைப்பதிவுகளுக்கு மட்டும் என்ற கொள்கையால் ஆங்கில வலைப்பதிவு ஒன்றை ஏற்க மறுத்ததற்கு தன்னை இசைக்கலைஞர் என்று அறிவித்துக்கொண்ட ஒரு வலைப்பதிவர் மரியாதைக்குறைவாக தன்னுடைய வலைப்பதிவில் எழுதியதும் நடந்தது. தமிழ்மணம் சேவை பெறும் அவரின் நெருங்கிய நண்பர்கள் பலரும் அன்று குறைந்த பட்ச நாகரிகத்துக்காகவாவது அவருக்குக் கண்டனம் தெரிவிக்காததைப் பார்த்த போதுதான் தமிழ் இணையம் ஒரு வெளிப்படையான உலகம் அல்ல, இங்கே மாயச் சுழல்கள் பல ஏற்கனவே இயங்குகின்றன என்ற புரிந்துணர்வு எனக்கு வந்தது. ஆனால் இன்று இருக்கும் போலிகளையும் முகமிலிகளையும் பார்த்தால் அவர் எழுதியது பெரிய எரிச்சலைத்தராது என்பது உண்மை.
தானே தன் வலைப்பதிவை தமிழ்மணத்தில் சேர்க்கலாம் என்பது ஆரம்ப காலம் முதலே இருந்த நடைமுறை. இதில் இன்று இருக்கும் கட்டுப்பாடுகள் அன்று இல்லை. ஒருவர் தன் வலைப்பதிவைச் சேர்த்த அடுத்த நொடியே அது பட்டியலிலும் திரட்டியிலும் தெரிய ஆரம்பித்துவிடும். அந்தரங்கமான விஷயங்களை ஒருவர் எழுதி இப்படிச் சேர்த்த பின்னரே இதன் அபாயம் புரிந்து, முன்பார்வையிட்டு நிர்வாகி ஒருவர் சேர்க்கும் முறை வந்தது. பெயருக்கு ஒன்றை தொடங்கி தமிழ்மணத்தில் சேர்த்து, பின் கிடப்பில் போடுவதைப் பார்த்தே 3 இடுகைகளாவது எழுதிய பின்னரே சேர்க்கப்படும் என்ற நடைமுறை வந்தது.
வலைப்பூ ஒருங்கிணைப்பாளராக இருந்தபோதே ஒரு தரவுத்தளத்தை ஏற்படுத்தி அனைவரையும் தங்கள் தகவல்களை உள்ளிடச் சொல்லிக் கேட்டிருந்தேன். அப்போது தமிழ்மணம்.காம் இந்தத் தகவல்களைப் பயன்படுத்தப் போகிறது என்ற விவரமான திட்டம் இல்லை. ஒழுங்கற்ற வடிவத்தில் தரவுகள் இருப்பதை விட சீரான கட்டமைப்பில் தரவுகள் இருப்பது அவற்றின் பயன்பாட்டினை விரிவாக்கும் என்ற நம்பிக்கையில் செய்தது அது. தமிழ்மணம் வெளியிடும்போது அன்றுவரை இந்த தரவுத்தளத்தில் தன் விவரங்களைச் சேர்த்த வலைப்பதிவுகளை மட்டும் (108 என்று நினைவு) நானாக சேர்த்துவிட்டேன். (இப்படி திறந்த இடத்தில் கிடைத்த பட்டியலைக் கொண்டு தொடங்கப்பட்டதாலே தமிழ்மணம் முதல்பதிப்பு 800க்கும் மேல் வளர்ந்தும், பதிவுகளின் பட்டியலை மூடி வைக்காமல் opml வடிவில் யாருக்கும் கிடைக்கச் செய்தேன். அதுவே தேன்கூடு போன்ற முயற்சிகளுக்கு ஆதாரமாக இருந்தது.) அப்படி அதுவரை தாங்களாக முன்வந்து அளிக்காதவர்களை ஒதுக்குவதல்ல என் நோக்கம். அவர்களும் நொடியில் தங்கள் தகவல்களைச் சேர்த்து இணைந்துகொள்ள தமிழ்மணத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதையும் புரிந்துகொள்ளாமல், 'ஏன் என் வலைப்பதிவைச் சேர்க்கவில்லை', 'ஏன் என் நண்பருடைதைச் சேர்க்கவில்லை' என்று கூவியவர்களும் இருந்தார்கள். அவர்களுக்குப் பொறுமையாக பதில் சொல்லி விளக்கம் கொடுத்த பின்னும் இது நடந்ததிலிருந்து இந்த சமூகம் சுயசேவைக்கு இன்னும் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளவில்லை என்றும் புரிந்தது.
தானியங்கிக் கருவியே தற்போக்காக எடுத்த (Randomly picked)10 பதிவுகளை பட்டியலில் காட்டும்போதும் 'என் பெயர் வருவதேயில்லை, காசி தனக்குப்பிடித்த பெயர்களை மட்டும் முன்னிறுத்துகிறார்' என்றும் சிலர் குறைபட்டுக்கொண்டபோது இங்கே எத்தகைய 'தன்னை மையப்படுத்தும், அவநம்பிக்கை நிறைந்த' சூழல் நிலவுகிறது என்று புரிந்தது. இத்தனைக்கும் இப்படிச் சொன்னவர்களில் ஒருவர் தேர்ந்த அறிவியலாளர். இன்னொருவர் மென்பொருள் வல்லுநர்!
பலரும் எழுதுவதில் சிறந்த இடுகைகள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து தனியாகக் காட்டலாம் என்று சில நண்பர்கள் சொல்லவே, மேற்சொன்ன சூழல் அளித்த பயத்தால் 'இப்படிக் காட்டுவதற்கு தேர்வுக்குழு ஒன்றை அமைப்பது சர்ச்சைக்கு வழிவகுக்கும், ஆகவே, ஜனநாயகமுறைப்படி தேர்வு நடக்கட்டும்' என்று சிந்தித்து, வாசகரே வாக்களித்துப் பரிந்துரைக்கும் வசதியை ஏற்படுத்தினேன். அதில் வளைகுடா நாடுகளில் இணையத்தொடர்பு அளிக்கும் நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் விசேட முறைமையால் கள்ளவாக்குப் போட வாய்ப்பிருப்பதைக் கண்ட நண்பர்கள், 'குறைகளை என்னிடத்தில் சொல்லுங்கள், நிறைகளை நண்பர்களிடத்தில் சொல்லுங்கள்' என்ற மேற்கோளுக்கு நேர் எதிராக இயங்கி, 'இந்தப் பரிந்துரை முறையே ஒரு போங்கு' என்ற நல்ல செய்தியைத் தங்கள் வலைப்பதிவில் எழுதிப் பரப்பி, முறைமை மேம்பட உதவியதும் நடந்தது.
அதன் பின்னர் அதற்கும் ஒரு தீர்வு காணப்பட்டாலும், இணையத்தில் உள்நுழை/மின்னஞ்சல்-அழைப்பு அல்லாத நேரடி வாக்கெடுப்பு முறைகள் எதிலுமே முற்றிலும் நம்பகமானது என்று எதுவுமில்லை என்பதைப் புரிந்துகொள்ளாமல் ஏசுவது இன்றும் தொடர்கிறது. தன் இடுகைகள் பரிந்துரைக்கப்படாததைப் பொறுக்க முடியாதவர்கள், தங்கள் கருத்துக்கு எதிரானவை பரிந்துரைக்கப்படுவதை சகிக்காதவர்கள் இதை ஏற்றுக்கொள்ளாததும் தொடர்கிறது.
-தொடரும்
12 கருத்துகள்:
காசி,
நல்ல தொடர். உங்கள் அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
திறந்த நிரல் குமுகாயத்தில்(Open Source Community) போகிற போக்கில் குறை சொல்வோர் அதிகம். உடன்வரக் கேட்டால் உதவுவோர் குறைவு (ஹி..ஹி.. அதுவந்து.. நேரமே கிடைக்கமாட்டேங்குது.. இப்ப முடியாது.. வேணா அடுத்த மாசம் உதவவா.. etc.,)
//இணையத்தில் உள்நுழை/மின்னஞ்சல்-அழைப்பு அல்லாத//
இதிலும் ஓட்டைகள் உண்டு என உங்களுக்கு தெரிந்திருக்கும்.
எனவே, நேரடி வாக்கெடுப்பு முறைகள் எதிலுமே முற்றிலும் நம்பகமானது என்று எதுவுமில்லை. :-)
---இப்படிச் சொன்னவர்களில் ஒருவர் தேர்ந்த அறிவியலாளர். இன்னொருவர் மென்பொருள் வல்லுநர்!---
கிசுகிசு க்ளூ போதாதே :-)
---தன் இடுகைகள் பரிந்துரைக்கப்படாததைப் பொறுக்க முடியாதவர்கள், தங்கள் கருத்துக்கு எதிரானவை பரிந்துரைக்கப்படுவதை சகிக்காதவர்கள---
Fallacies: Inductive Argument
Premise 1: Most American cats are domestic house cats.
Premise 2: Bill is an American cat.
Conclusion: Bill is domestic house cat.
---'குறைகளை என்னிடத்தில் சொல்லுங்கள், நிறைகளை நண்பர்களிடத்தில் சொல்லுங்கள்' ---
digg போன்ற பரிணாம வளர்ச்சி அடைந்த நுட்பங்களின் குறைபாடுகளும் பரவலாக விமர்சனத்துக்கு உள்ளாகிறது. பலரும் பயன்படுத்தும் நிரலிகளின் மதிப்பீடுகளை, பொதுவில் வைப்பதில் என்ன தவறு?
காசி,
உங்களது இந்தத் தொடர், மிக இயல்பாக தமிழ்வலைப்பதிவுகள் திரட்டி ஒன்று உருவான கதையை சொல்லும் போதே அதை உருவாக்குவதில் மட்டுமல்லாது நேரடியாக தொடர்பில்லாத ஆனால் கணிணியில் தமிழைக்கொண்டுவருவது தொடக்கம் எழுத்துரு மாற்றிகள் வரை பொதுவுக்கு உழைத்த தமிழார்வலர்கள் அனைவரையும் தொட்டுச்செல்லும் போது ஆவணமாகவும் ஆகிறது. அதே சமயம் தமிழ்ச்சமூகம் அதை எதிர்கொள்ளும் விதமும், தங்களது சுய ஆளுமைகளை முன்னிருத்தி புரிந்துகொள்ள முனையும் போது ஏற்படும் சிக்கல்களையும் சொல்லிச் செல்வது சிறப்பான ஒன்று. இது தமிழுக்காக பொது வேலைகளைச் செய்த அனைவரும் எதிர்கொண்ட கசப்பான அனுபவம். அதை பொதுதளத்தில் யாரும் சரியாகப் பதியாமல் போனதால் அதை மாற்ற எதுவும் செய்யப்படாமலே தொடரும் தமிழ் மனப்பான்மை என்றாகி வருகிறது.
தொடருக்கு நன்றி.
பாலாஜி:
---இப்படிச் சொன்னவர்களில் ஒருவர் தேர்ந்த அறிவியலாளர். இன்னொருவர் மென்பொருள் வல்லுநர்!---
தானியங்கிக் கருவியின் செயற்பாட்டை மெத்தப்படித்தவர்களும், மென்பொருள் வல்லுனர்களும் கூட புரிந்துகொள்ள முடியாத அளவிலேயே அவர்களது தன்முனைப்பும், அவநம்பிக்கையும் ஆட்டிப்படைக்கிறது என்று சொல்வதாகவே நான் புரிந்துகொள்கிறேன். மாறாக யாரையோ பற்றிய கிசுகிசுவாக அல்ல. இணையத்தில் தமிழில் எழுதுபவர்களில் பெரும்பாலானோர்கள் அறிவியல்/ கணிணி துறையைச் சார்ந்தவர்களே (அவர்களுக்கு இருக்கும் ஏகப்பட்ட நேரத்தினாலேயே தமிழ்ப் பதிவுகள் வளர்வதாய்) என்பது சுஜாதா கூட புரிந்துகொண்ட உண்மைதானே!
காசி அண்ணா,
வணக்கம். தங்களின் இப் பதிவு கடந்த வாரம் கண்ணில்பட்டது. ஆனால் வேலைப்பளுக்களால் உடனடியகப் படித்துப் பின்னூட்டமிட முடியவில்லை. தற்போது தான் படித்தேன். மிகவும் அருமையான தொடர். இது ஒரு தொடர் என்பதை விட தமிழ்மணத்தின் வரலாறு என்று சொல்வதே மிகவும் பொருத்தமாகும். அருமையாக, மிகவும் சுவையாகச் சொல்லியுள்ளீர்கள்.
உங்களின் அடுத்த தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
நன்றி.
உங்கள் அனுபவங்களை இங்கு பதிந்து வைப்பது முக்கியமானதும், அவசியமானதும். தொடர்ந்து எழுதுங்கள்!
கோபி, நன்றி. ஓட்டையில்லாத முறை என்று எதுவுமே இல்லை. ஒரு பாதுகாப்பைத் தகர்க்க, தேவைப்படுகிறவர்களுக்கான உந்துதல் எவ்வளவு தீவிரமானது என்பதைப் பொறுத்ததே பாதுகாப்பின் திறனின் அளவு. அரசியல் கண்ணை மறைக்கும்பொது மற்றதெல்லாம் இரண்டாம் பட்சமே.
பாலா, //பலரும் பயன்படுத்தும் நிரலிகளின் மதிப்பீடுகளை, பொதுவில் வைப்பதில் என்ன தவறு?// தவறில்லை. it is a matter of what is right and what is correct. Hope you understand the difference here.
தங்கமணி, ஆமாம் இது ஒரு ஆவணமும்கூடத்தான், என் கண்ணாடி போட்டுப்பார்ப்பதாக மற்றவர்கள் எடுத்துக்கொண்டாலும் சரியே.
//தானியங்கிக் கருவியின் செயற்பாட்டை மெத்தப்படித்தவர்களும், மென்பொருள் வல்லுனர்களும் கூட புரிந்துகொள்ள முடியாத அளவிலேயே அவர்களது தன்முனைப்பும், அவநம்பிக்கையும் ஆட்டிப்படைக்கிறது என்று சொல்வதாகவே நான் புரிந்துகொள்கிறேன்.// சரியான பார்வை. பாலா, கவனிக்க.
லாடு லபக்தாஸ்: அந்த அளவுக்குக்கூட கலைச் சொல் புரியாதவருக்கு இந்தத்தொடரில் ஒன்றுமில்லை.
வெற்றி, செல்வநாயகி, நன்றி.
தொலைநோக்கோடு செய்யும் எந்த முயற்சியும் கடுமையான கல்லெறிதலுக்குப் பிறகே ஜெயிக்கின்றது.
உங்கள் முயற்சியும் அப்படித்தான் ஜெயித்து இப்போது 'தமிழ்மணம்' வீசிக்கொண்டிருக்கிறது.
வாழ்த்துக்கள்.
பாராட்டுக்கள்.
வணக்கங்க்கள்
உங்கள் அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்துகொள்ளுங்கள் காசி...
நன்றி & வாழ்த்துக்கள் !!!
காசி,
அனைத்து பாகங்களையும் இன்றுதான் வாசித்து முடித்தேன்.மிகவும் ஊக்கத்துடன் தொடர்ந்து உழைத்து உள்ளீர்கள்.பாராட்டுக்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்.
கௌதம், நீங்கள் பத்திரிகையாளர் என்று அறிகிறேன். சுவாரசியமான தகவல்களை தொடர்ந்து வழங்க வாழ்த்துக்கள். உங்கள் பாரட்டுக்கு நன்றி.
சோப்பேறி பையன், நன்றி. (இப்படி என் பேரை நீங்கள் வைத்துக்கொண்டுள்ளீர்களே:-))
முத்து, ஆர்வத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி. தொடர்ந்து எழுதுவேன்.
//வளைகுடா நாடுகளில் இணையத்தொடர்பு அளிக்கும் நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் விசேட முறைமையால் கள்ளவாக்குப் போட வாய்ப்பிருப்பதைக் கண்ட நண்பர்கள், 'குறைகளை என்னிடத்தில் சொல்லுங்கள், நிறைகளை நண்பர்களிடத்தில் சொல்லுங்கள்' என்ற மேற்கோளுக்கு நேர் எதிராக இயங்கி, 'இந்தப் பரிந்துரை முறையே ஒரு போங்கு' என்ற நல்ல செய்தியைத் தங்கள் வலைப்பதிவில் எழுதிப் பரப்பி, முறைமை மேம்பட உதவியதும் நடந்தது.//
காசி, உங்களின் நினைவாற்றலை வியக்கிறேன்.
பொதுவாக நான் ஓட்டெடுப்புகளை முழுமையாக நம்புவது இல்லை. அப்படி இருக்கும்போது கண்ணில்பட்ட குறையை என் வலைப்பதிவில் எழுதினேன்.
அப்படி பொதுவில் வலையில் எழுதிய அதே ராஜா தான் உங்களுக்கு ஓட்டெடுப்பில் இருந்த தவறை கலையவும் உதவினான். அது உங்கள் நினைவில் இருந்து மறைந்துவிட்டதா?
எனது பெயர் குறிப்பிட்டு எழுதாததால் நீங்கள் என்னைச் சொல்லவில்லை என்றும் சொல்லலாம் :-). அதற்கும் வாய்ப்புண்டு :-).
ராஜா,
:-)
//இருந்த தவறை கலையவும் உதவினான். அது உங்கள் நினைவில் இருந்து மறைந்துவிட்டதா?//
என் எழுத்தில் ***முறைமை மேம்பட உதவியதும் நடந்தது.*** பார்க்கவில்லையா?
மேற்கொண்டு நான் இதைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை.
கருத்துரையிடுக