சனி, ஜூலை 22, 2006

சில முயற்சிகள் சில அனுபவங்கள் -11

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 |பாகம் 10

ஆபாச மறுமொழிகள் யாரிடமிருந்து வருகின்றன என்று பலருக்கும் தெரிய வர வர ஆபாசத்தின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே வந்தது. டோண்டு ராகவன் போன்றோர் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். ஆனாலும் பிரச்னையை வளர்ப்பதற்கும் அவர்கள் செயல்பாடே காரணம் என்றும் பலர் சொல்லிக்கொண்டிருந்தார்கள். யார் சொல்வது சரியென்றெல்லாம் பஞ்சாயத்துப் பண்ணுவது தமிழ்மண நிர்வாகிகளுக்கு சாத்தியமில்லாத காரியமில்லாததால் யாரும் இடையீடு செய்யவில்லை, இது எப்போதும்போலத் தொடர்ந்து கொண்டிருந்தது.

காலப்போக்கில் தமிழ்மணத்தில் வெட்டி அரட்டைப் பதிவுகள் அதிகரிக்க ஆரம்பித்தன. அவற்றுக்கு மறுமொழிகிறேன் பேர்வழி என்ற பெயரில் புரியாத குழூஉக்குறிகளில் யாரையாவது மறைமுகமாக சீண்டி எழுதப்படுபவை, எண்ணிக்கையைக் கூட்டுகிறேன் பார் என்ற ரீதியில் மறுமொழிக் குப்பைகள் என்று பல நிகழ்வுகள் நடந்தேறிய வண்ணம் இருந்தன.

எது பொதுவான வாசிப்புக்குத் தகுதியான பதிவு என்று கண்டுணரும் அனுபவம் இல்லாத ஒரு புதியவர் தமிழ்மணம் முகப்புக்கு வந்து இடுகைகளை வாசிக்க ஆரம்பித்தால் பயிரோடு வளரும் களைகள் போல இவ்வகை இடுகைகளே அதிகம் தட்டுப்படும் அளவுக்கு இவை அதிகரித்தன. கூடவே மதரீதியான சண்டைகளைக் கொண்ட பதிவுகளும் வளர ஆரம்பித்தன. வலைப்பதிவுகளின் அடிப்படை அம்சமே சுதந்திரம் என்ற கொள்கையால் இவற்றை தவறென்று ஒதுக்க முடியவில்லை. ஆனால் தமிழ்மணத்தில் இவை தொடர வேண்டுமா என்ற நெருடல் இருந்துகொண்டே இருந்தது.

'தமிழ்மணத்தில் இவை தேவையா?' என்பது தமிழ்மணத்தின் 'புனித பிம்ப'த்துக்கு பங்கம் வந்துவிட்டதே என்ற பொருளில் சொன்னது அல்ல. ஆழமான சுதந்திரமான சிந்தனைகள் தமிழில் எழுதப்பட, ஊக்கம் பெற, கவனம் பெற ஒரு இடம் வேண்டும், தமிழின் பயன்பாடு இணையத்தில் அதிகரிக்கவேண்டும், தமிழ்க் கணிமை/கருவிகள் வளரவேண்டும் போன்ற நோக்கங்களுக்கு சற்றும் பொருந்தாத இவற்றுக்காக நானும் மற்ற நிர்வாகிகளும் தங்கள் நேரத்தையும், உழைப்பையும், பணத்தையும் செலவு செய்து உழைப்பது சரிதானா, தேவைதானா என்ற நெருடல் அது. ஆனாலும் எதுவும் செய்ய இயலாமல் சும்மா இருந்தேன்.

நாம் சும்மா இருந்தாலும் மற்ற சூழல்கள் சும்மா இருக்கவேண்டுமே! முக்கியமாக நுட்பரீதியான சவால்கள் தமிழ்மணத்தின் பதிவுகளின்/இடுகைகளின் எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாக பெரிதாகி வந்தன. தமிழ்மணம் திரட்டி அப்போது தானியங்கியாக இருந்தது. அதாவது பட்டியலில் இருக்கும் ஒரு வலைப்பதிவில் புதிதாக எதுவும் எழுதப்பட்டால் வலைப்பதிவர் ஏதும் செய்யாமலேயே புது இடுகை தமிழ்மணத்தால் திரட்டப்பட்டுவிடும். இது தமிழ்மணம் திரட்டி தன் பட்டியலில் இருக்கும் எல்லாப் பதிவுகளையும் சுற்றுவரிசையில் ஒரு குறிப்பிட்ட நிமிடங்களுக்கு ஒருமுறை தேடி எடுப்பதால் சாத்தியப்பட்டது. இந்தத் தேடும் திறன் இணைய வழங்கியின் கணித் திறன், பயன்பாட்டு அழுத்தம், வழங்கியின் இணையத் தொடர்பின் வேகம் பொன்றவற்றைச் சார்ந்தது.

தமிழ்மணம் தொடங்கிய போது 108 பதிவுகள் இருந்தன. சாதாரணமாக ஒரு சுற்றுத்தேடல் 5 நிமிடத்துக்குள் முடிந்தது. அப்போது ஒவ்வொரு 15 நிமிடத்துக்கு ஒருமுறை ஒரு சுற்று நிகழுமாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனவே இதில் சிக்கல் ஏதும் இல்லை. ஆனால் 2005 செப்டம்பரில் 800-க்கும் அதிகமான பதிவுகள், கூடவே அதிக வாசிப்பு எண்ணிக்கையினால் கூடிய பயன்பாட்டு அழுத்தம், எல்லாம் சேர்ந்து, இந்த 'ஒரு சுற்றுத் தேடலுக்கான' நேரத்தை பெருமளவு அதிகரித்திருந்தன. சில சமயங்களில் ஒரு சுற்றுக்கு 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் கூட ஆனது. 20 நிமிடத்துக்கு ஒரு சுற்று என்று மாற்றி, பிறகு 30 நிமிடத்துக்கு ஒன்று என்று மாற்றியும், பல சமயங்களில் முதல் சுற்று முடியும் முன் அடுத்த சுற்று ஆரம்பிக்கும் சிக்கல் வந்தது. இதனால் பட்டியலில் கடைசியில் உள்ள சில பதிவுகள் ஒவ்வொரு சுற்றிலும் தவற விடப்பட்டு தொடர்ந்தாற்போல பல மணிநேரம் திரட்டியில் அகப்படாமலே இருந்ததும் நிகழ்ந்தது. இதற்குத் தீர்வு நுட்பரீதியில்தான் சாத்தியம் என்பதால் நுட்ப விஷயங்களில் மற்ற நிர்வாகிகளைப் பெரிதும் ஈடுபடுத்தியதில்லையாதலால் அவர்களிடம்கூட விவாதிக்கவில்லை.

தமிழ்மண நிரல்களை மாற்றியமைப்பதன் மூலம் திரட்டி இயங்கும் விதத்தை மாற்றியமைப்பதுதான் நிரந்தரத் தீர்வாக முடியும், என்றாலும், இன்னும் பொருத்தமான நிரலாளர் குழு எதுவும் எனக்கு அகப்படவில்லை. எனவே மூன்று மாதமாக எழுதப்படாமல் இருந்த பல பதிவுகளை திரட்டியிலிருந்து விலக்கி வைத்தேன். அந்தப் பதிவர்கள் பெரிதாகக் கோபிக்கவில்லை. ஆனால் சிலர் பெயருக்கு மீண்டும் ஒரு இடுகையை எழுதி நடப்புப் பட்டியலில் மீண்டும் இடம் பெற்றார்கள். சில வாரங்களுக்குப்பின் இந்த தேடும் நேரச் சிக்கல் மேலும் அதிகரித்தது. ஒரு சுற்றுக்கு ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆனது. சில பதிவுகள் 24 மணி நேரமாகியும் திரட்டப்படவில்லை.

இக்காலத்தில் தமிழ்மணத்தின் வாசகர் வருகையும் குறைய ஆரம்பித்திருந்தது. தமிழ்மணத்தை வாசிக்கும்போது உருப்படியான பதிவுகள் கிடைப்பது குறைந்துகொண்டு வந்ததும் இதற்கு ஒரு காரணம் என்பதை உணர்ந்தேன். வகைப்படுத்தல் போன்ற நுட்பத்தீர்வுகள் வாசகர் வருகையை அதிகரிக்க வாய்ப்பிருப்பினும், நிரல் மேம்படுத்த எனக்கு வசதிப்படவில்லை. உடனடித் தேவையாக ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாக உணர்ந்தேன். இருக்கும் பட்டியலில் சிலவற்றை நீக்கி பட்டியலை சிறிதாக்கினால் ஒழிய மொத்த தமிழ்மண இயக்கமுமே சீர்கெடும் என்ற நிலை. ஆகவே ஒரு தவிர்க்க முடியாத இடைக்கால நடவடிக்கையாக ஒரு மாதமாக எழுதப்படாதவை, மதரீதியானவை, சக வலைப்பதிவர்களை கேலிசெய்வதை மட்டுமே முக்கிய நோக்கமாகக் கொண்டவை, வெட்டி அரட்டை மறுமொழிகளுக்காகவே எழுதப்படுபவை ஆகிய பதிவுகளை திரட்டியிலிருந்து விலக்கிவைத்தேன். இதனால் மீண்டும் பதிவுகள் முழுமையாகத் திரட்டப்பட்டன.

குறிப்பு: என் வலைப்பதிவு kasi.thamizmanam.com சில நாட்களில் என்னைவிட்டுப்போகும் முகவரி என்பதால் முடிந்த வரை தொடுப்புகள் கொடுப்பதைத் தவிர்க்கிறேன்.
-தொடரும்

2 கருத்துகள்:

குழலி / Kuzhali சொன்னது…

தமிழ்மணம் வரலாறு எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியது, நிறைய சிரமங்கள் பட்டுள்ளீர்கள்.... உங்கள் உழைப்புக்கு, சேவைக்கு வாழ்த்துகள்

theevu சொன்னது…

//என் வலைப்பதிவு kasi.thamizmanam.com சில நாட்களில் என்னைவிட்டுப்போகும் முகவரி என்பதால் //

:(
-theevu-

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...