பாகம் 1
சில மாதங்களுக்கு முன்புதான் கண்ணனிடம் 'ஹெச்டிஎம்எல் டேக் என்றால் என்ன' என்று கேட்டவன், 'டெம்ப்ளேட்டை எப்படி மாற்றலாம், டைனமிக் ஃபான்ட் எப்படிப் போடுவது', என்று தேடியவன், ஒவ்வொன்றாய்க் கற்றுக்கொண்டு, வலைப்பதிவையே அப்போதுதான் புரிந்துகொண்டிருந்தேன். ஆனால் அதற்கும் மேலாக இணைய வழங்கி(web server), தரவுத்தளம்(database), வழங்கிப்பக்க நிரலி(server-side scripting) என்று பல புது நுட்பங்கள் மிரட்டின. எப்படியோ விழுந்து எழுந்து, நியூக்ளியஸ் பொதியின் அதிகாரப்பூர்வ தமிழ்ப் பதிப்பு வெளியாக என் பங்களிப்பை அளித்தேன். தமிழாக்கம் வெறும் மொழிக்கோப்பை தமிழாக்கம் செய்வதில் மட்டும் இல்லை. மேலும் பல வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது. இந்த முயற்சியில் என் அனுபவங்களை பின்னாளில் உத்தமம் மின்மஞ்சரி சஞ்சிகையில் ஒரு கட்டுரையாக எழுதினேன்.
இந்த நியூக்ளியஸ் தமிழாக்க முயற்சிகளுக்கான சோதனைக்களமாக எனக்கு ஒரு இணைய வழங்கிச் சேவை தேவைப்பட்டது. 1and1.com என்ற சேவை நிறுவனம் இலவசமாக அளித்த வழங்கியின்மூலமே இது சாத்தியப்பட்டது. சேவையை தனித்துவமிக்க ஒரு ஆள்களப்பெயருடன் (damain name) பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று யோசித்ததன் விளைவே 'தமிழ்மணம்' என்ற பெயர். தமிழ் வலைப்பூ மணம் வீசும் இடம் என்ற பொருளில் வைத்ததுதான் இந்தப் பெயர். ஆனால் இன்று இருக்கும் வலைத்திரட்டிக்காக யோசித்த பெயரில்லை. இந்த ஆள்களப்பெயருடன் http://kasi.thamizmanam.com/ என்ற வலைமுகவரியில் நியூக்ளியஸால் இயங்கும் என் வலைப்பதிவு 2004 ஜனவரி முதல் நடப்புக்கு வந்தது.
இ-சங்கமம் என்ற இணைய இதழ் ஆசிரியர் ஆல்பர்ட் வலைப்பதிவு பற்றி தொடர் எழுதுமாறு நா. கண்ணனைக் கேட்டுக்கொள்ள, அவர் என்னைச் சுட்டிக்காட்டி 'இவர் எழுதினால் நன்றாக இருக்கும்' என்றிருக்கிறார். அப்படித்தான் அதில் ஒரு தொடராக 'தமிழில் எழுதலாம் வாருங்கள், வலையில் பரப்பலாம் பாருங்கள்' வந்தது.
வ.கே.கே. முழு வெற்றியடையாத்தால், தமிழ் வலைப்பதிவு விக்கி ஒன்றைக் கட்டலாம் என்று வெங்கட்ரமணன் முன்வந்து தன் தளத்தில் ஒரு விக்கியை நிறுவிக்கொடுத்தார். யூனிகோடு ஆதரவு இன்மை, சமூக ஆர்வமின்மை போன்ற காரணங்களால் இதுவும் எதிர்பார்த்த அளவில் வளரவில்லை. பிறகு அந்த விக்கியும் ஆள்களப்பெயர் சிக்கலால் இழக்கப்பட்டுவிட்டது.
நியூக்ளியஸ் பொதி இயங்கும் அடிப்படை நுட்பத்தை அறிந்த போது, இதே நுட்பங்களைக் கொண்டு வேறு என்ன செய்யமுடியும் என்று சிந்தித்தேன். இடையில் மதியின் வேண்டுகோளுக்கிணங்க மதி ஒருங்கிணைத்துக்கொண்டிருந்த, வாரம் ஒருவர் ஆசிரியராக இருக்கும், 'வலைப்பூ' என்ற வலைப்பதிவை ஒருங்கிணைக்கும் கூடுதல் பணியும் ஏற்றுக்கொண்டேன். அத்துடன் 'வலைப்பதிவர் பட்டியலை' நிர்வகிக்கும் பொறுப்பும் வந்தது. அப்போதுதான் செய்தியோடை நுட்பம் ஓரளவுக்கு பரவலான பயன்பாட்டுக்கு வந்திருந்தது.
பட்டியல்-நியூக்ளியஸ்-வலைப்பூ-செய்தியோடை என்ற இந்த சூழலே என்னை ஒரு புதுமையான வலைப்பதிவு தளத்தை வடிவமைக்கத் தூண்டியது. இன்று தமிழ்மணத்தில் பார்க்கும் பெரும்பாலான அம்சங்களும் அன்றே யோசித்திருந்தவையே. அவற்றைப் பட்டியலிட்டு சக வலைப்பூ ஒருங்கிணைப்பாளரான மதியுடனும், இன்னொரு நுட்பவியலாளரான சுரதாவுடனும் பகிர்ந்துகொண்டேன். ஆனால் இந்த முயற்சிகளில் ஈடுபடத்தேவையான php/mysql நுட்பத்தில் அவர்கள் பணியாற்றவோ, ஈடுபடவோ இல்லாததால், அவர்கள் செய்யவாய்ப்பில்லையென்றும் அறிந்தேன். கூட்டுமுயற்சிகளின் வெற்றி வாய்ப்பையும் ஏற்கனவே வ.கே.கே./விக்கி அனுபவங்களால் அறிந்திருந்ததால், செய்தால் தனியாகத்தான் செய்வது என்று முடிவு செய்தேன். அத்துடன் 2004 கோடை விடுமுறைக்கு இந்தியா வருவதைமுன்னிட்டு வாரக்கணக்கில் விடுப்பும் எடுத்து வலைப்பதிவுகளிலிருந்து சற்று விலகியிருந்தேன்.
எனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எழுத்தென்னும் அற்புதம்
நண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...
-
அதென்ன தமிழனுக்கு மட்டும் இந்தக் கேவலம்? என்னமோ அனாதப்பயலப் பாக்கற மாதிரியில்ல பாக்கறானுவ, எல்லாவனும்! எல்லா நாட்டுக்காரனுக்கும், அட நம்ம இந...
-
மதி கந்தசாமியின் நேரமோ நேரம்! தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்ட...
-
தமிழ்நாட்டின் மிக அதிக வசூல்திறனுள்ளதாகச் சொல்லப்படும் நந்தனம் சிக்னல். மாலை 8 மணி. தி. நகரிலிருந்து வந்து தெற்குப்புறம் திரும்பவேண்டும். என...
3 கருத்துகள்:
அட பதிவெல்லாம் எழுதறீங்க? வாழ்த்து. ;)
நன்றி, கார்த்திக்.
நன்றாய் இருக்கிறது கட்டுரை. ஆனால் எனக்கு எளிமையாய் ஹெச்டிஎம்லை திருத்தி ,நமது புதிய விருப்பங்களை எவ்வாறு சேர்ப்பது என்று கூற முடியுமா?
வி.ஆர்.ஷங்கர்
www.bookindian.blogspot.com
கருத்துரையிடுக