பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6
பயனர்கள் தமிழ்மணம் தள இயக்கம் பற்றிய தங்கள் கருத்துக்களை/கேள்விகளை விவாதிக்க ஒரு மேடை வேண்டும் என்பதால் முதலில் குறைந்த வசதிகளுடன் ஒரு மன்றம் அமைக்கப்பட்டது. பிறகு phbb forum என்ற திறமூல நிரல்பொதியை தமிழ்ப்படுத்தி தமிழ்மணம் தளத்துக்குள்ளேயே இயங்குமாறு அமைத்தேன். ஆனாலும், இந்தத் தமிழ்ப்படுத்திய நிரல்பொதியை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. காரணம், இது முழுமையான தமிழ்ப்படுத்தலன்று என்பதும், அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்குக்குத் தேவையான நேரமும் பொறுமையும் எனக்கு அப்போது இல்லை என்பதும். ஆயினும் தனிப்பட்டமுறையில் என்னிடம் கேட்ட சில நண்பர்களுக்கு அதன் மொழியாக்கம் செய்யப்பட்ட கோப்பைப் பகிர்ந்துகொண்டேன்.
இந்த மன்ற நிரல்பொதி ஒரு முழுமையான மன்றத்தை இயக்கும் ஆற்றல்மிக்க பொதி. ஆற்றலுடன் கூடவே பாதுகாப்புச் சிக்கல்களும் இருந்தன. எனவே இந்த மன்றத்தை நிர்வகிக்கும் பணியை ஒருவர் பொறுப்பேற்றுச் செய்தால் சிறப்பாக இருக்கும் என்று நண்பர் பரிமேலழகரிடம் கேட்டதில் உடனே ஏற்றுக்கொண்டார். அப்படியும் இரு முறை இந்த மன்றம் கொந்தர்களின் (hackers) வன்தாக்குதலுக்கு ஆளானது. பல முக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் இழக்கப்பட்டன. அதன் பின்னர் ஓரளவு மீட்டெடுக்க முடிந்தாலும் இதுதான் சரியான முறையா என்ற கேள்வி தொடர்ந்து எழவும், மன்ற நிரல் பொதியைக் கையாளும் நிரலாளர்களின் வலைத்தளமே (www.phbb.com) பலமுறை கொந்தப்படுவதைப் பார்த்ததாலும், இதைக் கைவிட்டு, கூகிள் குழுமத்துக்கு மன்றத்தை மாற்றியமைத்தேன். இதன்மூலம் குறைந்தபட்சம் மேலும் மடல் பரிமாற்றங்கள் இழப்பதை நிறுத்த முடிகிறது.
இந்த மன்றம் என்பது பயனர்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் இடமாக இருக்கவேண்டும், அவர்களால் தீர்வு சொல்ல இயலாத பிரச்னைகளுக்கு தமிழ்மண நிர்வாகிகளோ, நானோ பதிலளிக்குமாறு இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது நிறைவேறவில்லை. நம் பயனர்கள் இதை 1-800-... வாடிக்கையாளர் சேவை மையமாகத் தான் பார்த்தார்கள். முழுக்க விளக்கப்பட்ட பிரச்னைகளுக்கும் எதையுமே வாசிக்காமல், தாங்களும் யோசிக்காமல் கேள்விகள் கேட்கப்படுவது வாடிக்கையாக நடக்கிறது. ஒரு வணிக நிறுவனம் அளிக்கும் வாடிக்கையாளர் சேவை என்றால் இப்படிக் கேட்பதில் தவறில்லை. பயனர் கையேட்டில் குறிப்பிட்டிருந்தாலும் வாடிக்கையாளர் அதைப் படிக்காமல் கேட்டாலும், சேவை அளிப்பவர் பதில் சொல்லியாக வேண்டியது கட்டாயம். ஆனால் ஆர்வத்தில் செய்யப்படும் தமிழ்மணம் போன்ற முயற்சிகளில் இதே வாடிக்கையாளர் சேவையை எதிர்பார்ப்பது நியாயமில்லை அல்லவா?
பல கேள்விகளுக்கும் தெளிவாக விளக்கப்பட்ட உதவிப்பக்கங்கள் உள்ளன. அதிலும் விடுபட்டிருப்பின், பதில் தெரிந்த 100 பேர் இங்கே இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் பதில் சொல்வதில்லை. நூற்றில் ஒருவர் சிரமமெடுத்து சில சமயம் சொல்லுவார். அவரும் சில நாளில் மனம் சோர்ந்தோ என்னவோ மேலும் அதைத் தொடர முடியாமல் விட்டுவிடுவார். ஆனால் 'கேட்டேன், பதிலில்லை' என்று ஒற்றைத்தனமாக தமிழ்மணம் சேவையை மட்டந்தட்டிப் பேசி, அதற்கும் ஒரு மடலோ, இடுகையோ எழுதிவிட்டுப் போய்க்கொண்டே இருப்பதைப் பார்த்து மனம் நொந்ததும் உண்டு. இதுபோன்று கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் உள்ள சிரமத்துக்கு வணிக நிறுவனங்களுக்கும் தமிழ்மணத்துக்கும் உள்ள முக்கிய வேறுபாடான இலவசம் (அதனால் ஆள்போட்டு நடத்த முடியாது, அதனால் எல்லாரையும் திருப்தி செய்ய முடியாது) என்ற காரணியைச் சுட்டினால், 'ஃப்ரீன்னா ஃபினாயிலையும் குடிக்கமுடியுமா?' என்ற கொச்சைப் பேச்சும் கேட்டதுண்டு. இன்னும் சில பெரிய மனிதர்கள் மன்றத்தில்கூட கேட்காமல் தங்கள் பதிவிலேயே எழுதிவிட்டு தமிழ்மணம் பதில் சொல்லவேண்டும் என்று எதிர்பார்த்து, பதில்வராததால் கோபித்ததும் உண்டு. தமிழ்ச் சமூகத்துக்கு சேவையளிக்க முனையும் எவரும் இந்நிகழ்வுகளை நினைவில் நிறுத்தி தகுந்த ஏற்பாடுகளுடனும் மனநிலையுடனும் நடந்துகொள்வது அவசியம் என்பது என் அனுபவம்.
எனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எழுத்தென்னும் அற்புதம்
நண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...
-
தமிழ்நாட்டின் மிக அதிக வசூல்திறனுள்ளதாகச் சொல்லப்படும் நந்தனம் சிக்னல். மாலை 8 மணி. தி. நகரிலிருந்து வந்து தெற்குப்புறம் திரும்பவேண்டும். என...
-
அதென்ன தமிழனுக்கு மட்டும் இந்தக் கேவலம்? என்னமோ அனாதப்பயலப் பாக்கற மாதிரியில்ல பாக்கறானுவ, எல்லாவனும்! எல்லா நாட்டுக்காரனுக்கும், அட நம்ம இந...
-
மதி கந்தசாமியின் நேரமோ நேரம்! தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்ட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக