வியாழன், ஜூலை 13, 2006

உமர் தம்பி - தமிழ்க் கணிமைக் கொடையாளர்

தமிழ்க் கணிமை வளர்ச்சிக்கு கொடையளித்த பெருந்தகையாளர்களில் முதல் வரிசையில் வைக்கத் தகுதியானவர்களுள் ஒருவர் அதிராம்பட்டினம் உமர் தம்பி அவர்கள். நேற்று (2006 ஜூலை 12ஆம் நாள்) மாலை 5:30 மணிக்கு அவர் தன் சொந்த ஊரில் இயற்கை எய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு சொந்த சகோதரரை இழந்தது போன்ற துக்கம் ஏற்பட்டது.

எத்தனை செயலிகள், எழுத்துருக்கள், கட்டுரைகள், அகராதிகள் அவர் கொடையளித்தவை என்ற கணக்குக் கூட எங்காவது இருக்கிறதா அறியேன். மதி கந்தசாமியின் இந்தத் தொகுப்புகூட அவரின் அத்தனை கொடையையும் கொண்டிருக்கிறதா என்று எனக்கு ஐயமாகவே இருக்கிறது.

உமரும் ஒரு வலைப்பதிவு எழுதினார் என்பதும் நம்மில் பலருக்கும் புதிய செய்தியாக இருக்கும். ஆம். அவரின் வலைப்பதிவு இங்கே இருக்கிறது:
http://thendral.blogspot.com/ வலைப்பதிவின் பெயரில் கூட சலசலப்பை விரும்பாத 'தென்றல்' அவர். 'வலைப்பதிவு ஒரு நேர விழுங்கி, இதில் ஈடுபட்டு செலவாகும் நேரத்தை வேறு பயனுள்ள வழிகளில் செலுத்தி பலருக்கும் நல்லது செய்யலாம்' என்றே அவர் அதைத் தொடராமல் விட்டிருக்கக் கூடும்.

உமர் அவர்களுடன் எனக்கு நேரடித் தொடர்பு குறைவே. ஓரிரு முறை மின்னஞ்சலில் தொடர்புகொண்டிருக்கிறேன். அவர் இன்னும் வளைகுடாப்பகுதியில் தான் பணிபுரிகிறார் என்றே இன்றுவரை எண்ணிக்கொண்டிருந்தேன். முதன்முதலில் அவரின் தேனீ இயங்கு எழுத்துருவை என் வலைப்பதிவில் பயன்படுத்தியபோது ஏதோ ஆர்வமிகுதியில் 'உமர்பாய்' என்று அவரைக் குறிப்பிட்டுவிட்டு, பிறகு , 'அடடா அறிமுகமில்லாதவரிடம் அதிகம் உரிமை எடுத்துக் கொண்டோமோ' என்று எண்ணி, அவருக்கு என்னைப் புரிந்துகொள்ள வேண்டி முதல் மடல் அனுப்பினேன். அதில், கொஞ்சம் மரியாதையாக 'அன்பு நண்பருக்கு' என்று மடலைத் தொடங்கியிருக்க, 'சகோதரரே என்ற போது கிடைத்த நெருக்கம், நண்பரேவில் இருக்குமா?' என்று வாஞ்சையுடன் பதிலளித்து என் மனதை லேசாக்கினார்.

பிறகு தமிழ்மணம் தளம் அமைக்கும்போது தேனீயை அதில் பயன்படுத்த அனுமதி கேட்டு எழுதினேன். 'தேனீ இன்னும் பலரையும் கொட்ட வாய்ப்பிருக்குமானால் அதைவிட எனக்கென்ன மகிழ்ச்சி இருக்கமுடியும்?' என்று உடனே அனுமதியளித்தார்.

ஒருங்குறி குழுமத்தில் ஆர்வமாக பல கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்தேன். அங்கே முதல் மடலே அவருடையதுதான் . அவரின் ஆங்கில-தமிழ் அகராதியையும் பலமுறை பயன்படுத்தியிருக்கிறேன்.

தமிழ்மணம் மென்னூலாக (pdf) வலைப்பதிவுகளை வழங்க முயன்றபோது அதில் பயன்படுத்தவும் ஒரு எழுத்துரு தேவைப்பட்டது. அதே தேனீ எழுத்துருவின் திஸ்கி வடிவக் கோப்பை நம் அனைவருக்கும் இன்னுமொருமுறை கொடையளித்தார், அன்பு உமர்.

பல எழுத்துருக்களை gpl உரிம முறையில் உலகிற்கு இலவசமாக அளித்துள்ளார். இத்தனை கொடைகளையும் சத்தமில்லாமல் செய்துவிட்டு எந்த பிரதிபலனையும், பாராட்டு உள்பட, எதிர்பார்க்காமல் அடுத்த பணியில் ஈடுபட்டுவிடுவார்.

உமர் அவர்கள் மறைந்தாலும் அவர் பெயரை இந்த தமிழ்க் கணிமை உலகம் என்றும் மறவாது. அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தாருக்கு இந்த இழப்பின் சோகத்திலிருந்து மீண்டு வரும் மன ஆற்றலை இறைவன் அளிக்கட்டும்.

வாழ்க உமர் அவர்களின் புகழ்! வெல்க அவர் தொடங்கி வைத்த தமிழ்க் கணிமை முயற்சிகள்!

15 கருத்துகள்:

Sivabalan சொன்னது…

மறைந்த திரு. உமர் அவர்களின் சாதனை இனைய தமிழில் ஒரு மைல்கல்.

மா சிவகுமார் சொன்னது…

உண்மையிலேயே நன்கு வாழ்ந்து மறைந்த ஒரு மனிதர். இவ்வளவு சீக்கிரம் ஆண்டவன் அவரை அழைத்துக் கொண்டது நமக்குத்தான் இழப்பு. என்றுமே மறந்து விட முடியாத நபர். ஒரு முறை கூட மடல் பரிமாற்றம் கூட செய்து கொள்ளாமலேயே எனக்கு, ஏதோ சொந்தக்காரரை இழந்தது போன்ற உணர்வு.

மா சிவகுமார்

இராம் சொன்னது…

//'அடடா அறிமுகமில்லாதவரிடம் அதிகம் உரிமை எடுத்துக் கொண்டோமோ' என்று எண்ணி, அவருக்கு என்னைப் புரிந்துகொள்ள வேண்டி முதல் மடல் அனுப்பினேன். அதில், கொஞ்சம் மரியாதையாக 'அன்பு நண்பருக்கு' என்று மடலைத் தொடங்கியிருக்க, 'சகோதரரே என்ற போது கிடைத்த நெருக்கம், நண்பரேவில் இருக்குமா?' என்று வாஞ்சையுடன் பதிலளித்து என் மனதை லேசாக்கினார்//

படிக்கும் போதே என்னவொ செய்கிறது.அன்பான சகோதரர் ஒருவரை இழந்து விட்டோம் நாம்.

காசி (Kasi) சொன்னது…

இன்னொன்றும் சொல்ல விட்டுப்போனது. theneeUniTx என்ற உமரின் எழுத்துருவைப்போல் அதற்கு முன்னும் பின்னும் நான் இன்னொரு எழுத்துருவைப் பார்க்கவில்லை (எனக்குத் தெரியாமல் இருக்கலாம்) . ஒரே எழுத்துரு கோப்பில் திஸ்கி+யூனிகோடு இரண்டு குறியேற்றங்களுக்கும் ஆதரவைத் தந்தது அதன் தனிச்சிறப்பு. முக்கியமாக மூன்று வருடங்களுக்குமுன்பு பலரும் மடற்குழுக்களின் பழக்கத்தால் யூனிகோடு வலைப்பதிவுகளில் மறுமொழியிடும்போது திஸ்கியில் இட்டுவிட்டாலும், தேனீ அவர்களை மன்னித்து சரியான எழுத்துக்களைக் காட்டும்! 'வலைப்பூ' சஞ்சிகை போன்ற வலைப்பதிவுகளில் இது பெரிதும் உதவிகரமாக இருந்தது. இதன் தேவையை, இதன் நுண்ணிய பயன்பாட்டு அனுகூலத்தை உமரைத்தவிர இன்னொருவர் புரிந்திருப்பாரா என்பதுகூட ஐயமே. வாழ்க உமரின் புகழ்!

ILA(a)இளா சொன்னது…

தமிழ்க் கணிமை சான்றோன் "உமர் தம்பி" அவர்களின் மறைவுக்கு ஆழ்த்த அனுதாபங்கள்.

KARTHIKRAMAS சொன்னது…

காசி உமரின் பணிகளை "மதிக்கும்" பொருட்டு ஏதாவது சிறு அளவிலாவது அவர் குடும்பத்துக்கு நம்மால் செய்ய முடிந்தால் நமக்கு ஒரு திருப்தி ஏற்படும் என நினைக்கிறேன். அப்படி செய்தால் என்னை நிச்சயம் சேர்த்துக் கொள்ளுங்கள். என்ன செய்வது என்று இந்த அதிர்ச்சி செய்தியில் ஒன்றும் பிடிபடவில்லை.

அசுரன் சொன்னது…

வலைப்பூ உலகம் எனக்கு புதிதுதான்

ஆனால் இன்றைக்கு கணிணித் தமிழ் என்ற ஒன்று உருவாகி வளர்ந்து வருகிறது என்றால் அதற்க்கு உமர்தம்பி போன்றவர்களின் பிரதிபலன் பாரா பங்களிப்பு உயிராதாரமான ஒன்று என்று உணர்கிறேன்.

இது உண்மையிலேயே மிகப் பெரிய இழப்புதான். அன்னாரைப் பற்றி எனக்கு எந்த அறிமுகமும் முன்பு இருந்ததில்லை ஆனால் அவரது இரங்கல் செய்திகளை பல்வேறு பதிவுகளில் படிக்கும் பொழுது அவர் செய்துவிட்டு சென்ற சேவைகளை எண்ணி வியக்கிறேன்.

அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.


அசுரன்

வெற்றி சொன்னது…

அமரர் உமர் தம்பி அவர்களைப் பற்றி நான் இதுவரை அறிந்திருக்கவில்லை. அவர் தமிழ்க் கணிமை வளர்ச்சிக்கு ஆற்றிய தொண்டுக்கு தமிழ்ச் சமூகம் என்றென்றும் நன்றிக்கடமைப்பட்டுள்ளது.
அன்னாரின் பிரிவால் துயருறும் உறவினர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

மதி கந்தசாமி (Mathy) சொன்னது…

காசி,

இன்னமும் அதிர்ச்சியாக இருக்கிறது. வலைப்பதிவுலகில் இது இரண்டாவது இழப்பு. :(

உமர் அவர்களின் செயலிகளின் தொகுப்பு ஏறக்குறைய நான்கு மாதங்களுக்கு முன்பு எழுதியது. தமிழ் யூனிகோடு வளர்ச்சியில் அவரது பங்கு எத்தகையது என்று காட்டவும் பரவலான பாவனைக்காகவும் என்று செய்தது. போன வருடம் டொராண்டோவில் கொடுக்கப்பட்ட சிடித் தொகுப்புக்காக அவரிடம் கேட்டபோது அவர் அனுப்பி வைத்த விதயங்களே அவை. என்னுடைய இடுகை எழுதுவதற்கு முதல் அவருக்கு மின்னஞ்சல் அனுப்பி எங்கேயாவது தொகுத்து வைத்திருக்கிறாரா என்று கேட்டதற்கு இல்லையென்றே பதில் வந்தது.

முடிந்தவரை நாம் தேடித் தொகுக்க வேண்டும்.

-மதி

கலாநிதி சொன்னது…

அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Thangamani சொன்னது…

அதிர்ச்சியான செய்தி. அவரது முயற்சிகளை பயன்படுத்திக்கொண்ட எண்ணற்றவர்களின் நானும் ஒருவன் என்ற விதத்தில் அவரது மறைவு வருத்தத்தையும் ஒருவித இழப்புணர்வையும் தருகிறது.

நா. கணேசன் சொன்னது…

நண்பர் உமர் தன் இயங்கு எழுதுரு தேனீயை வடிவமைத்துத் தந்து யுனித்தமிழையும் வலைப்பதிவுகளையும் வளர்த்த அரும்பாடு பட்டவர் ஆவார். எனக்குப் பல எழுத்துச் சீர்மை எழுத்துக்களை வடித்துத் தந்தும் இருக்கிறார். பலமுறை உரையாடியிருக்கிறோம். உமர்தம்பியின் எழுத்துக்களைப் படிக்க அவரது ஒருங்குறி தொழிநுட்புக் குழுவுக்கு வரலாம்:
http://groups.google.com/group/orungkuri

உமர்தம்பி அவர்களின் நினைவைப் போற்றும்வகையில் தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் அதிரை வலைத்தளம் போல யுனித்தமிழில் அமைத்தல் வேண்டும்.உமரின் தமிழன்பர்கள் பலரும் அன்புடன், முத்தமிழ் போன்ற ஜிகுழுக்களில்தங்கள் ஆழ்ந்த இரங்கற்பாடுகளைத் தெரிவித்துள்ளனர். வலைப்பதிவர்கள்அவற்றிலும் மடல்கள் எழுத வேண்டுகிறோம்.

http://groups.google.com/group/anbudan

http://groups.google.com/group/muththamiz


'யூனிகோட்' உமர்தம்பி கனவுகள் தமிழ்க்கணிமையை வெல்லச் செய்வதாகுக!உமர்தம்பி நம் நினைவுகளில் என்றும் வாழ்வார்கள். அவரது குடும்பத்தாருக்கு என் அநுதாபங்கள்.

பிரார்த்தனைகளுடன்,
நா. கணேசன்
ஹ்யூஸ்டன், அமெரிக்கா

நா. கணேசன் சொன்னது…

நண்பர் உமர் தன் இயங்கு எழுதுரு தேனீயை வடிவமைத்துத் தந்து யுனித்தமிழையும் வலைப்பதிவுகளையும் வளர்த்த அரும்பாடு பட்டவர் ஆவார். எனக்குப் பல எழுத்துச் சீர்மை எழுத்துக்களை வடித்துத் தந்தும் இருக்கிறார். பலமுறை உரையாடியிருக்கிறோம். உமர்தம்பியின் எழுத்துக்களைப் படிக்க அவரது ஒருங்குறி தொழிநுட்புக் குழுவுக்கு வரலாம்:
http://groups.google.com/group/orungkuri

உமர்தம்பி அவர்களின் நினைவைப் போற்றும்வகையில் தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் அதிரை வலைத்தளம் போல யுனித்தமிழில் அமைத்தல் வேண்டும்.உமரின் தமிழன்பர்கள் பலரும் அன்புடன், முத்தமிழ் போன்ற ஜிகுழுக்களில்தங்கள் ஆழ்ந்த இரங்கற்பாடுகளைத் தெரிவித்துள்ளனர். வலைப்பதிவர்கள்அவற்றிலும் மடல்கள் எழுத வேண்டுகிறோம்.

http://groups.google.com/group/anbudan

http://groups.google.com/group/muththamiz


'யூனிகோட்' உமர்தம்பி கனவுகள் தமிழ்க்கணிமையை வெல்லச் செய்வதாகுக!உமர்தம்பி நம் நினைவுகளில் என்றும் வாழ்வார்கள். அவரது குடும்பத்தாருக்கு என் அநுதாபங்கள்.

பிரார்த்தனைகளுடன்,
நா. கணேசன்
ஹ்யூஸ்டன், அமெரிக்கா

V.N.Giritharan சொன்னது…

¯Á÷ «Å÷¸Ç¢ý þÆôÒ ¸½¢ò¾Á¢ØìÌ Á¢¸ô¦À⧾¡÷ þÆôÒ. ¬ÃÅ¡ÃÁüÚ «ÇôÀâÂÉ ¦ºö¾¢Õ츢ýÈ¡÷.

- Å.¿.¸¢Ã¢¾Ãý -

Akbar Batcha சொன்னது…

மறைந்த மனிதர், பெரியவர் உமர் தம்பியின் செய்தி கேட்டு மனதிற்குள் லேசான வலி ஏற்பட்டது. அவருடைய எழுத்துருக்களின் உதவியால் வலைப்பதிவுகளில் தமிழில் எழுத ஆரம்பித்த நான், அவருடைய மறைவின் செய்தி ஆழ்ந்த வருத்தததைக் கொடுக்கிறது.

இறைவன் அவருடையக் குடும்பத்தினருக்கு சாந்தியையும் சமாதானத்தையும் வழங்க பிரார்த்திக்கிக்கிறேன்.

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...