வியாழன், ஜூலை 06, 2006

சில முயற்சிகள் சில அனுபவங்கள் -3

பாகம் 1 | பாகம் 2

விடுப்பு முடிந்து அமெரிக்கா திரும்பியும், மனம் வலைப்பதிவுகளில் எழுதுவதை விட இந்த 'தளம்' அமைக்கும் விருப்பத்திலேயே லயித்து இருந்தது. எனவே உள்ளூர் பார்டர்ஸ் புத்தகக்கடையில் php/mysql புத்தகம் வாங்கி உடனே முயற்சியைத் தொடங்கினேன்.

முதலில் தானே தகவல்களைச் சேர்க்கும் பட்டியல் ஒன்றைத் தயாரித்தேன். அதை சோதித்து ஆலோசனை வழங்கியவர்களில் நண்பர்கள் செல்வராஜ், பாஸ்டன் பாலா, சத்யராஜ்குமார் ஆகியோர் முக்கியமானவர்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கி திரட்டியையும் சேர்த்து ஆகஸ்ட் 23, 2004 அன்று வெளியிட்டேன். இடையில் வலைப்பூ ஒருங்கிணைப்புப் பணியை மதியிடமே கொடுத்திருந்தேன். எனவே இதில் முழுமையாக ஈடுபடமுடிந்தது. அந்த 2 மாதங்கள் என் முழு சிந்தனையுமே இதிலேதான் கிடந்தது.

வெளியிடும்போது புது ஆள்களப்பெயரோடு வெளியிட எண்ணி துண்டுபோட்டுவைத்த பெயர்தான் 'நந்தவனம்.காம்'. ஆனால் நானாக வெளியிடும் முன்பே பலரும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டதால் தற்காலிகமாக இயங்கிவந்த 'தமிழ்மணம்.காம்' என்பதையே நிரந்தரமாக்கிவிட்டேன். வெங்கட், பத்ரி, மாலன், கண்ணன் போன்றோரிடம் முன்னதாக அறிவித்து ஆலோசனை கோரினேன். வெங்கட்மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்து பல யோசனைகளை சொல்லியிருந்தார். கண்ணனும் மாலனும் வாழ்த்தினார்கள். மாலன் ஒருபடி மேலே போய், திசைகள் இதழில் நல்ல அறிமுகம் கொடுத்தார்.

அத்தோடு நிறுத்தாமல் தொடர்ச்சியாக மே 2005 வரை தமிழ்மணத்தின் ஆற்றல்களையும் வசதிகளையும் மேம்படுத்திகொண்டே இருந்ததால் தமிழ்மணம் பலரும் விரும்பிப் பயன்படுத்தும் ஒரு வசதியாகிப்போனது. 'இந்த இணைய இதழில் எழுதுகிறேன்' என்பதுபோல 'தமிழ்மணத்தில் எழுதுகிறேன்' என்று சொல்லுமளவுக்குத் தமிழ்மணமும் தமிழ்வலைப்பதிவுலகமும் ஒன்றாகிப் போனது. இதனால் பெருமை இருந்தாலும் பல சிக்கல்களும் இருந்தன. ப்ளாக்கர்.காம்க்கும் தமிழ்மணத்துக்கும் கூட வேறுபாடு தெரியாதவர்களும் இருந்தார்கள்.

தொடங்கியபோது தமிழ்மணத்தில் இருந்த வசதிகள் இரண்டே தான்:
  1. தொடங்கிய தேதி, வலைப்பதிவர் பெயர், வசிக்கும் கண்டம் வாரியாக அடுக்கப்பட்ட வலைப்பதிவர் பட்டியல
  2. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக எழுதப்பட்ட இடுகைகள் (15 நிமிடத்துக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட்டது)

பிறகு பல்வேறு கட்டங்களில் ஏற்படுத்தப்பட்ட முக்கியமான மேம்பாடுகள்:
  1. கருத்துக்களம் சார்ந்த பதிவுகள் பகுதி
  2. சென்ற நாட்களில் எழுதப்பட்டவை
  3. மறுமொழி நிலவரம் காட்டுதல்.
  4. இடுகைகளில் தேடுதல்
  5. வாசகர் பரிந்துரை வசதி
  6. பிடிஎஃப் மென்னூலாக்கும் வசதி.
  7. ஆங்கில இடுகைகளை தானாக மறைக்கும் வசதி.
  8. இடுகைகளின்மேல் ஆட்சேபம் தெரிவிக்கும் வசதி.

தமிழ்மணம் தொடங்கிய சில வாரங்களில் மதியிடமிருந்து, தான் சில மாதங்கள் தீவிர இணையச் செயல்பாட்டிருந்து விலகியிருக்க நேர்ந்திருப்பதாயும் அதனால் 'மீண்டும் வலைப்பூவை ஒருங்கிணைக்க முடியுமா?' என்ற வேண்டுகோள் வந்தது. அப்போது உதயமானதுதான் 'இந்த வார நட்சத்திர' யோசனை. அதே சமயத்தில் இதுவரை முழுக்க முழுக்க தனியொருவனாக நடத்திவந்த தமிழ்மணத்தில் ஆலோசனைக்கும், நிர்வாகத்துக்கும் வலைப்பதிவு நண்பர்கள் சிலரைத் துணைக்கொண்டு தமிழ்மணப் பணியைப் பரவலாக்கவும் யோசனை வந்தது.

-தொடர்ந்து வரும்.

3 கருத்துகள்:

பொன்ஸ்~~Poorna சொன்னது…

என்னை மாதிரி புது வலைப்பதிவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் காசி.. முழுக்க எழுதுங்கள்.. பதிக்க வேண்டிய வரலாறு தான் இது..

மதி சொன்னது…

//ப்ளாக்கர்.காம்க்கும் தமிழ்மணத்துக்கும் கூட வேறுபாடு தெரியாதவர்களும் இருந்தார்கள்.//
என்னைப் பொருத்தவரை 100 ச‌தவிகித உண்மை இது.ப்ளாக்கர் பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது, தமிழ்மணம் பார்த்து ஆரம்பித்ததுதான் என் வலை. குறிப்பாக உங்களது கட்டுரைகள், கணனி தொழில்நுட்ப அறிவே இல்லாத எனக்கு ஒரு தூண்டுகோலாக இருந்த‌து.

//'இந்த இணைய இதழில் எழுதுகிறேன்' என்பதுபோல 'தமிழ்மணத்தில் எழுதுகிறேன்' என்று சொல்லுமளவுக்குத் தமிழ்மணமும் தமி ‌ழ்வலைப்பதிவுலகமும் ஒன்றாகிப் போனது// அப்படித்தான் இன்னும் பொருமைப் பட்டுக்கொண்டிருக்கிறேன்.

தமிழ்ம‌ணம் இல்லை எனில் நான் எழுதியதை நான் மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். இந்தத் தொடர் பொன்ஸ் சொன்னது போல எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.


தமிழ் நூல்கள் இன்று இருப்பதற்கு தமிழ் தாத்தா திரு வி. க பல இடங்களுக்கு நாடிச்சென்று சுவடிகளை தேடித் தொகுத்ததுதான் என கேள்விப் பட்டிருக்கிறேன். அது போல் தேடி வந்த பல தமிழ் வலைகளை திரட்டித்தந்து தமிழ் மாமாவாக இருப்ப‌த‌ற்கு ந‌ன்றி.

தொடரட்டும் இந்த சாதனையின் சரித்திரம்

காசி (Kasi) சொன்னது…

பொன்ஸ், நன்றி.

மதி, ரொம்பப் புகழாதீங்க, கூச்சமா இருக்கு:-)

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...