பல பதிவுகள் திரட்டிப் பட்டியலிலிருந்து விலக்கப்பட்டது தவிர்க்க முடியாத தற்காலிக நடவடிக்கை என்பதை விளக்கிச் சொல்லியும் இங்கே அதைப் புரிந்துகொண்டவர்களை விட புரிந்துகொள்ளாதவர்களே அதிகம். சில நிரலாளர்களை வைத்து அடுத்த பதிப்பைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டிருந்தேன். எப்படியும் சில வாரங்களில் முடியாவிட்டாலும் ஓரிரு மாதங்களில் இந்த விலக்கத்துக்கு முடிவு கட்டமுடியும் என்று உறுதியாக நம்பினேன். ஏனென்றால் புதிய பதிப்பில் தானியங்கியாக எல்லாப் பதிவுகளையும் சுற்றிவந்து புது இடுகையைத் தேடுவதற்குப் பதிலாக, அவரவரே, இடுகை எழுதிப் பதிப்பித்த உடனேயே அடுத்த நொடியிலேயே தமிழ்மணம் திரட்டியில் சேர்க்கும் வழிசெய்ய எண்ணியிருந்தேன். நம் சமூகத்தில் இன்னும் பலர் தன் உரிமை/கடமை, அடுத்தவர் சிரமம் போன்ற எல்லாவற்றையும் பின்னுக்குத்தள்ளி தன்னலம் ஒன்றையே குறிக்கோளாகவும், அடுத்தவர் செயலுக்கு எப்போதும் ஒரு உள்நோக்கம் கற்பிப்பதில் முனைப்பாகவும் இருப்பது இப்போது தெளிவாக விளங்கியது. ஏதேதோ பிரச்னைகளில் என் மேல் காட்டம் கொண்டு அடங்கிப்போனவர்களெல்லாம், இந்த வாய்ப்பைக் கையில் எடுத்து என்னை விளாசி மகிழ்ந்தார்கள்.
இந்தக் கூச்சல்களுக்குப் பதில் சொல்வது இயலாதது மட்டுமல்ல, வீண்வேலை என்றும் நம்பியதால், எல்லாவற்றையும் புறந்தள்ளி, என் மீது வைக்கப்பட்ட தாக்குதல்களுக்கு என் ஒரே பதிலாக, அனைவருக்கும் இடம் கிடைக்கும் புதிய தமிழ்மணத்தை வெளியிடுவதிலேயே என் உழைப்பைச் செலுத்தினேன். வலைப்பதிவு உலகில் பல புதுமைகளைக் கொண்டு தமிழ்மணம்.காம் இரண்டாம் பதிப்பு 2006 ஜனவரி 14ஆம் நாள் தைத்திங்கள் மலர்ந்தது. கிட்டத்தட்ட அதே காலக்கட்டத்தில் நண்பர் தேன்கூடு தளத்தையும் பொதுப்பயனுக்கு வெளியிட்டார். தானாக இடுகைகளைத் திரட்டிய காலம் போய் ஒவ்வொருவரையும் அவர்களை சேர்க்கச் சொல்லியிருக்கிறோமே, அவர்கள் செய்யாவிட்டால் மொத்தத் திரட்டியுமே தோல்வியில் முடியுமே என்ற ஐயம் இருந்தாலும், பெரும்பான்மையான வலைப்பதிவர்கள் தமிழ்மணத்தின்மேல் கொண்டிருந்த நம்பிக்கையும், அவர்கள் பெறப்போகும் கூடுதல் பயன்கள் காரணமாகவும் இந்த சவாலை சமாளிக்கமுடியும் என்று நம்பினேன். அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை. சிலர் எங்களுக்கு இரண்டாம் பதிப்பு வேண்டாம் முதல் பதிப்பை தொடர்ந்து இன்னொரு முகவரியிலாவது அளியுங்கள் என்றெல்லாம் சொல்லியும்கூட அதைச் செய்யாமல் பொறுமையுடன் காத்திருந்தேன். இரண்டாம் பதிப்பு முன்பிருந்ததைவிடவும் அதிக வரவேற்பைப் பெற்றது வாசகர் வருகைக்கணக்கிலிருந்து தெரிந்தது.
தமிழ்மணம் 2.0-ன் புதிய சிறப்பம்சங்கள்:
- ஆபாசம், வன்முறை போன்ற காரணங்கள் தவிர நுட்பம்/கணித்திறன் பற்றக்குறையால் எந்த வலைப்பதிவையும் விலக்கி வைக்கத் தேவைப்படாதது.
- வலைப்பதிவர் தன் மின்னஞ்சல் முகவரியைத் தமிழ்மணத்துக்கு அளித்தல்.
- வலைப்பதிவர் தானே தன் இடுகையை திரட்டிக்கு அறிவித்தல். இதனால் ஒரு நொடிநேரத் தாமதமும் இல்லாமல் பதிப்பித்த உடனே பலரையும் சென்று சேர்த்தல்.
- ஒவ்வொரு இடுகையையும் வகைப்படுத்துதல்
- குறிச்சொல்லிடுதல் (பிறகு ஏற்படுத்தப்பட்டது)
- வலைப்பதிவின் தலைப்பு/ஆசிரியர் பெயர்/கருப்பொருள் உரை போன்றவற்றைத் திரட்டி தானே எடுத்துக்கொள்ளுதல். மேலும் இவற்றில் பதிவர் ஏதும் மாற்றம் செய்தால் அடுத்த முறை பதிவு திரட்டப்படும்போது அந்த மாற்றம் திரட்டியில் இற்றைப்படுத்தப்படுதல்.
- வலைப்பதிவரின் வில்லையளவுப் படம் காட்டுதல்/தானே இற்றைப்படுத்தல்
- இந்த வார நட்சத்திரங்களை நன்றாக முன்னிறுத்தல், படம்/அறிமுகம் காட்டுதல், சென்ற வார நட்சத்திரங்களின் படம்/அறிமுகம்/எழுதிய இடுகைகள் பட்டியல்/மின் நூல் ஆக்குதல்
- பல இடுகைகளைத் தொகுத்து மின்நூலாக்குதல்
- தேதிவாரியாக இடுகைகளைப் பட்டியலிடல்
- வகை (தலைப்பு) களைத் தெரிவு செய்து பட்டியலிடல்
- 'பதிவு' கருவிப்பட்டை வாயிலாக இடுகையிலிருந்து ஒற்றை/பல இடுகைகளின் மின்நூல் ஆக்குதல், இடுகையின் வகையைக் காட்டுதலோடு, அதே வகையில்(தலைப்பில்) எடுதப்பட்டவற்றுக்குப் பயணித்தல், வாசகர் பரிந்துரைத்தல்.
- 'பதிவு' கருவிப்பட்டை வாயிலாக புது இடுகையை தமிழ்மணத்துக்கு அறிவித்தல், கருவிப்பட்டையில் தேவைப்படும் அமசங்களைத் தெரிவு செய்தல்.
பெரும்பாலான இந்த வசதிகள் தானுணர்த்தியாக இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மாற்றத்தைப் பொறுமையுடன் ஏற்றுக்கொண்ட அனைத்து வலைப்பதிவர்களுக்கும், தாங்களாக முன்வந்து தங்கள் வலைப்பதிவைப் பட்டியலில் சேர்த்தமைக்காக நன்றி. இதில் இக்கட்டான சூழ்நிலையில் விலக்கிவைக்கப்பட்ட பதிவுகளும் அடங்கும்.
இன்று வாழ்வில் வேறு உந்துதல் காரணமாக தமிழ்மணத்தை இன்னொருவரிடம் ஒப்படைத்துச் செல்ல எண்ணும்போது இந்த நுட்பங்களுக்காக நான் செலவிட்ட பணத்தையேனும் பெற்றுக்கொள்வது என்னளவில் தார்மீக வரையறையில் சரியானதே என்று நம்புகிறேன். அதனாலேயே தமிழ்மணத்தை இன்னொருவருக்கு என்னால் இலவசமாக அளிக்க இயலவில்லை. இதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டேன். ஏற்கனவே கிடைத்த அனுபவங்கள் என்னை அப்படி வைக்கவில்லை. புரிந்துகொள்பவர்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்.
இத்துடன் இந்தத் தொடரை முடிக்கிறேன். தமிழ்வலைப்பதிவுகள் உலகில் சென்ற 3 ஆண்டுகள் இயங்கியதில் கிடைத்த பல சுவையான அனுபவங்களை, இன்றியமையாத பாடங்களை எனக்குக் கிடைத்த பெறற்கரிய பரிசாக எண்ணுகிறேன். இந்தப் பரிசை எனக்குக் கிடைக்கச் செய்த, என்னுடன் ஒத்துழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி. மீண்டும் சந்திப்போம். வணக்கம்.