புதன், ஜூலை 12, 2006

சில முயற்சிகள் சில அனுபவங்கள் -8

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7

இன்னும் நவன் பகவதி, சாகரன், சத்யராஜ்குமார், என்று பலர் சிறுசிறு ஆலோசனைகளை வழங்கி தமிழ்மணம் மேம்பட உதவியிருக்கிறார்கள். (இன்னும் கூட சிலரின் பெயர் விட்டுப்போயிருக்கலாம், முடிந்தவரை நினைவிலிருந்து எழுதுகிறேன்.) பலர் தனிப்பட்ட முறையில் நேரில் சந்திக்கும்போதும், மின்னஞ்சல் வழியாகவும் 'தமிழ்மணம் ஒரு சாதனை' என்றெல்லாம் பாராட்டியிருக்கிறார்கள். ஆனாலும் எந்த பிரபல தினசரி/வார/மாத இதழிலோ, சிற்றிதழிலோ, திசைகள் தவிர பிற இணைய இதழிலோ வலைப்பதிவுகள் என்ற ஒரு வடிவத்தின் இருப்பையோ வளர்ச்சியையோ அவற்றுக்கு தமிழ்மணம் போன்ற முயற்சிகளின்மூலம் கிடைக்கும் உத்வேகத்தையோ குறிப்பிட்டு யாரும் எழுதியதில்லை. ஓரிருமுறை சில இதழ்கள் வலைப்பதிவுகளிலிருந்து எடுத்தாண்டு மறுபதிப்பு செய்தபோதும் இந்த விஷயத்தில் பெரும் கவனத்துடனே இருந்தார்கள். வலைப்பதிவுகளை சிலாகிக்கவோ, வாழ்த்தி, வரவேற்கவோ நான் கோரவில்லை. ஒரு செய்தியாகவாவது குறிப்பிடப்படவில்லை என்பதுதான் நான் சொல்லவருவது. இது பெரும் நெருடலாகவே இருந்து வந்தது.

இத்தனைக்கும் பல ஊடகங்களிலும் இயங்கும் பலர் இங்கு வலைப்பதித்துக்கொண்டிருந்தார்கள். பத்திரிகையாளர்களும் இருந்தார்கள். எழுத்தாளர்களும் இருந்தார்கள். 'வலைப்பதிவர் என்பவர், இவர்கள் யாருக்கும் மாற்றோ, போட்டியோ அல்லர், அவர் ஒரு புதுவகைப் பிராணி' என்பதை இவர்கள் உணரத் தவறியதாலேயே அளவுக்கு மீறிய எச்சரிக்கை உணர்வால் வலைப்பதிவர்களை சக எழுத்தாளர்களாகவும், பத்திரிகையாளர்களாகவும் பார்த்து போட்டி மனப்பான்மை வந்துவிட்டதோ என்றும் எனக்கு ஐயம் இருக்கிறது.

இன்றும் நான் தெளிவாகவே இருக்கிறேன்: வலைப்பதிவர் என்பவர் எழுத்தாளருக்கோ, பத்திரிகையாளருக்கோ என்றும் போட்டியாக முடியாது. அவர்கள் அளவுக்கு (வலைப்பதிவில் மட்டும் நாட்டமுள்ள) ஒரு வலைப்பதிவருக்கு எடுத்த பொருளில், இயக்கத்தில் தீவிரம் இருப்பது அரிது. அதே நேரத்தில் வலைப்பதிவு என்ற வடிவத்திலும் ஒருவர் உச்சத்தைத் தொடமுடியும், அவர் புத்தகம் போடவேண்டியதில்லை, பத்திரிகைக்கு எழுதவேண்டியதில்லை. எப்படி வானொலியில், தொலைகாட்சியில் செய்தி வாசிக்க ஆரம்பித்தாலும் செய்தித்தாளின் முக்கியத்துவம் குறையவில்லையோ, எப்படி தொலைக்காட்சியில் நாடகங்கள் வந்தும் திரைப்படத்தின் தாக்கம் குறையவில்லையோ, அப்படியே வலைப்பதிவுகளின் வருகையால் மற்ற எழுத்து வடிவங்களுக்கும் எந்தப் பாதிப்பும் வரும் என்று நான் நம்பவில்லை. கட்டிலில், ரயிலில், சாப்பிடும்போது ஒற்றைக் கையில் என்று ஒரு புத்தகம் படித்த அனுபவம் அதன் இ-வடிவத்தில் கிடைக்குமா? ஏகப்பட்ட இடைநிறுத்தங்கள், கவன இழப்புகளோடு டிவியில் படம் பார்ப்பது அரங்கில் முழு இருட்டில் படம் பார்ப்பதுபோல வருமா? அதுபோலவேதான் வலைப்பதிவும். காலம் இதை தெளிவுபடுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இடையில் வலைப்பதிவர்களுக்காக பரிசு என்ற அறிவிப்பை திசைகள் மூலம் வழங்குவதாக மாலன் அறிவித்தார். அனைவரும் பாராட்டினோம். ஒரு வருடம் முழுதும் எழுதப்படும் பதிவுகளை அவதானித்து சிறந்தவற்றைத் தேர்ந்தெடுக்க அருணா ஸ்ரீனிவாசன், சுரதா, பத்ரி, மதி இவர்களுடன் என்னையும் சேர்த்து ஒரு தேர்வுக்குழு அறிவிக்கப்பட்டது. வருடம் முழுவதும் தொடர்ந்து அவதானிப்பது, அதுவும் பலர் செய்வது என்பதால் சரியான வழிகாட்டு நெறிமுறைகள் வேண்டும் என்றும் மாலனுக்கு பரிந்துரைத்தேன். தேர்வுக்குழுவுக்கு ஒரு தகவலாக தமிழ்மணத்திலிருந்து மாதத்தில் பத்து இடுகைக்கு மேல் எழுதியவர்களுக்கான மொத்த இடுகைகள், மொத்த மறுமொழிகள் போன்ற தகவல்கள் தரவுத்தளத்திலிருந்து திரட்டி அனுப்பும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அதே போல மூன்று மாதங்கள் அனுப்பியும் வந்தேன். அதை அனுப்பும்போதே, நாம் எண்ணிக்கைகளுக்கு எச்சரிக்கையுடனேகூடிய மரியாதையே அளிக்கவேண்டும் என்ற குறிப்பும் அனுப்பினேன்.


இது நடந்து சில மாதங்களிலேயே மாலன் தன் மீது ஒருவர் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியைக் காட்ட அவரின் வலைப்பதிவைப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுப்பி, தான் வலைப்பதிவுகளிலிருந்து விலகுவதாகச் சொன்னார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டது. அந்த சர்ச்சையில் யார் செய்தது தவறு சரி என்பதெல்லாம் இலக்கியவாதிகளின் பிரச்னை, என் சிற்றறிவுக்கு எட்டாதது. ஆனால் 'இதற்காக இப்படி முடிவெடுக்க வேண்டியதில்லை, வேண்டுமானால் சற்று விடுப்பு எடுத்துக்கொண்டு வாருங்கள்' என்று பலரும் சொன்னோம். அது போலவே மாலனும் முற்றாக விலகிவிடாமல் அவ்வப்பொது இன்றும் வலைப்பதிக்கிறார்.

ஆனாலும் மாலனின் இந்த நிலைப்பாடு பரிசு திட்டத்தைப் பாதித்தது. தான் விலகினாலும் திட்டம் தொடரும் என்று அவர் அறிவித்தது யாருக்கும் பெரிய அளவில் நம்பிக்கையளிக்கவில்லை. 'வலைப்பதிவுகள் வேண்டாம்' என்று சொல்லும் ஒருவர் முன்னின்று அளிக்கும் பரிசோ/விருதோ வாங்கிக்கொள்பவருக்கு எப்படி இருக்கும்? எனவே அந்த தேர்வுக்குழு என்ன ஆயிற்று என்பது அறிவிக்கப்படாமலே அழிந்துபோனது.

இதற்குள் தமிழ்மணம் 500 பதிவுகளைத் தாண்டி நடைபோட்டது. 500வதாக சேர்க்கப்பட்டது தமிழ்மணம் அறிவிப்புகள் என்ற வலைப்பதிவு. நான் அமெரிக்காவைவிட்டு நீங்கி குடும்பத்துடன் இந்தியாவுக்கு நகர்ந்த போது சுமார் 600 வலைப்பதிவுகள் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அமெரிக்காவில் இருக்கும்போதே தமிழ்மணம் இரண்டாம் பதிப்பை ஓரளவுக்கு திட்டமிட்டுவிட்டிருந்தேன். அதன் முன்வடிவை நிர்வாகிகளுடன் பகிர்ந்தும்கொண்டிருந்தேன். கருவிப்பட்டை உட்பட சில நுட்பங்களை சோதித்துப் பார்த்திருந்தேன். ஊர் திரும்புமுன் நடைமுறைக்குக் கொண்டுவர முயன்றும் முடியவில்லை. ஊருக்குப் போய் செய்யலாம் என்ற சமாதானத்துடன், செல்வா/மதி/பரியிடம் நடவடிக்கைகளை ஒப்படைத்துவிட்டு நடையைக் கட்டினேன்.

- தொடரும்

1 கருத்து:

SnackDragon சொன்னது…

//ஆனாலும் எந்த பிரபல தினசரி/வார/மாத இதழிலோ, சிற்றிதழிலோ, திசைகள் தவிர பிற இணைய இதழிலோ வலைப்பதிவுகள் என்ற ஒரு வடிவத்தின் இருப்பையோ வளர்ச்சியையோ அவற்றுக்கு தமிழ்மணம் போன்ற முயற்சிகளின்மூலம் கிடைக்கும் உத்வேகத்தையோ குறிப்பிட்டு யாரும் எழுதியதில்லை. ஓரிருமுறை சில இதழ்கள் வலைப்பதிவுகளிலிருந்து எடுத்தாண்டு மறுபதிப்பு செய்தபோதும் இந்த விஷயத்தில் பெரும் கவனத்துடனே இருந்தார்கள். வலைப்பதிவுகளை சிலாகிக்கவோ, வாழ்த்தி, வரவேற்கவோ நான் கோரவில்லை. ஒரு செய்தியாகவாவது குறிப்பிடப்படவில்லை என்பதுதான் நான் சொல்லவருவது. இது பெரும் நெருடலாகவே இருந்து வந்தது.
//

காசி,
இதை ஆவணப்படுத்துவதற்கு நன்றி. உங்கள் சுட்டிக்காட்டலில் நன்மை விளைந்தால் நல்லதே.

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...