வெள்ளி, ஜனவரி 30, 2004

திருக்குறள் தரும் நிர்வாகக் கோட்பாடுகள் - 3

நம்மில் நிறையப்பேருக்குத் தெரிந்த ஒரு நிர்வாகவியல் உத்தி 'ஸ்வாட் அனாலிசிஸ்' (SWOT analysis)என்பது. அதென்ன ஸ்வாட்? SWOT - Strength, Weakness, Opportunities and Threat. பலம், பலவீனம், வாய்ப்பு, மிரட்டல் என்று சொல்லலாம். ஒரு காரியத்தில் இறங்கி அதில் வெற்றி பெறுவதற்கு ஆராய வேண்டிய முக்கியமான நான்கு விஷயங்கள் என்று இவற்றைச் சொல்கிறார்கள் நவீன நிர்வாகவியலாளர்கள்.

இதை நான் இங்கு ஆழமாக விளக்க வரவில்லை. ஆனால் இதில் முக்கால் வாசிக்கு மேல் பொருந்தக்கூடிய ஒரு குறள் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அது:

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல். (471)

(பொருட்பால், அரசியல், வலியறிதல்)


இந்தக் குறளுக்கு விளக்கமே தேவையில்லை. எந்தப் பரிமேலழகரின் உரையும் தேவைப்படாமல் புரிகிற குறள்களில் இதுவும் ஒன்று. இதில் 'ஸ்வாட்'டில் உள்ள ஒவ்வொன்றும் இருப்பதைப் பார்க்கலாம்.

S-strength: தன்வலி - தன்னுடைய வலிமை.
W-weakness: வினைவலி - வினையின் வலிமை என்பது செய்யக்கூடிய செயலின் கடினத்தைக் குறிக்கிறது. செயல் கடினம் என்றால் நாம் பலவீனமாக இருக்கிறோம் என்பது சரிதானே. வலிமை(பலம்) என்பதும் பலவீனம் என்பதும் இடத்தைப் பொருத்தவை. ஒன்றுகொன்று தொடர்புடையவை. எனவே இரண்டு விதமாகவும் சொல்லப்படுக்கூடிய கருத்து ஒன்றே.
O-opportunity: துணைவலி - நமக்குத் துணையாக வருபவையைப் பற்றி அறிதல். துணையாகக் கிடைத்தவை பொருளாக இருக்கலாம், அறிவாக இருக்கலாம், மனிதராக இருக்கலாம், எல்லாமே நமக்குக் கிடைத்த வாய்ப்புத்தான். வாய்ப்பு என்ற நேரடி மொழிபெயர்ப்பு சொல்ல வருவது இதுதானே.
T-threat: மாற்றான்வலி - மாற்றானின், எதிரியின், போட்டியாளரின் வலிமை நமக்கு மிரட்டல் தானே.

இப்படி திருக்குறளே இந்தக் கருத்துகளை சொல்லுகிறதென்றால் அதுவே போதுமா என்றால், இல்லை. எப்படி ஒருவர் SWOT என்ற சுருக்கப்பெயருடன், அதற்கு விரிவான நான்கு பெயர்களை மட்டும் தெரிந்து கொண்டால் மட்டும் வெற்றிகரமாக இவற்றை நடைமுறைப்படுத்த முடியாதோ, அப்படியே, இந்தக் குறளைமட்டும் படித்தும் ஒருவர் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் எப்படி 'ஸ்வாட் அனாலிசிஸ்' என்ற பெயர் சொன்னதும் நமக்கு கற்றுகொண்டவற்றை எளிதில் ஞாபகப்படுத்த முடிகிறதோ, அதுபோல சரியாக விளக்கமளித்து இந்த மாதிரிக்குறளை முன்வைத்து சொல்லித்தந்தால், எளிதில் நினைவில் நிறுத்தவும், தேவைப்படும்போது சுட்டவும் இம்மாதிரிக் குறள் கட்டாயம் கைகொடுக்கும்.

4 கருத்துகள்:

ரவி சொன்னது…

அருமையான பதிவு...!!!!!!!

Kasi Arumugam சொன்னது…

நன்றி, ரவி.

பழைய (பீட்டாவுக்கு முந்தைய) பதிவுகளை மீட்டெடுத்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் இந்த மறுமொழியைப் பார்த்தேன். தாமதத்துக்கு மன்னிக்க.

cheena (சீனா) சொன்னது…

ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே - குறுகத்தரித்த குறட்பாக்களில் நிர்வாக இயலைப் பற்றிய அறிவுறைகளைச் சொன்ன குறளாசான் உலகியலில் தொடாத பாடங்களே இல்லை. வாழ்வில் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு குறளில் உண்டு. ஆனால் நாம் தான் அதன் அருமை தெரியாமல் SWOT என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.

Kasi Arumugam சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, சீனா. 'எந்தப் பிரச்னைக்கும்' என்பது அதிகம்தானே! 'செல்பேசியில் தமிழ்தெரியாத' பிரச்னைக்கெலாம் திருக்குறள் தீர்வுதரமுடியாதல்லவா? :-) :-)

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...