என்னுள் இருந்த எஞ்சினீயரை முழுதாய் வெளியே கொண்டுவந்தது எவரெஸ்ட் எஞ்சினீரிங் வொர்க்ஸ் பணிதான். முதல் வருடத்திலேயே 'டெவெலப்மென்ட்' என்ற ஒரு சிறப்புப் பணிக்கு இழுத்துக்கொள்ளப்பட்டேன். இயந்திரங்கள் பற்றி இயற்கையிலேயே இருந்த ஆர்வத்தையும், எண்ணியதை, அடுத்தவர் விளக்குவதை, நம்மிடம் இருக்கும் வசதிகளை வைத்து எளிதில் செய்யும் அளவுக்கு தெளிவான வரைபடங்களாக வெளிப்படுத்தும் திறமையையும் அடையாளம் கண்டு என்னை இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுத்தவர், நிறுவனத்தின் முழு உரிமையாளர் திரு. சோமசுந்தரம் அவர்கள்.
ஒரு நாளாவது பணி போரடித்ததில்லை. அவர் பச்சை இங்க்கிலும் சிவப்பு இங்க்கிலும் தீட்டி வரைந்து கொடுக்கும் ஐடியாக்கள் கண்முன்னே உருவெடுத்து இயங்குவதைப் பார்க்கையில் ஒரு படைப்பாளனுக்குரிய பெருமையும் ஆனந்தமும் கிடைக்கப் பெற்றேன். ஒரு பதினெட்டு வயது டிப்ளமா ஹோல்டர்தானே என்று யாரும் அலட்சியப்படுத்த முடியாத அளவுக்கு அனுபவசாலிகளுடன் பணியாற்ற எனக்குத் தளம் அமைத்துக் கொடுத்தவர் திரு. சோமசுந்தரம். கொஞ்சம் கொஞ்சமாக என் யோசனைகளையும் ஏற்றுக்கொள்லும் அளவுக்கு என்னை நிலைப்படுத்திக் கொண்டேன்.
ஆயிரக்கணக்கில் ஆரம்பித்து லட்சக்கணக்கில் மதிப்புள்ள கருவிகள் என் வடிவமைப்பில் உருவாகும் அளவுக்கு என் மீது நம்பிக்கை வைத்தார்கள். என் மீது முழு நம்பிக்கை வைத்து முழு சுதந்திரம் கொடுத்திருந்தார்கள். பெரும்பாலும் என் பணி தங்கள் தொழிற்சாலைகளில் உற்பத்தித்திறனை அதிகரிக்கவோ, உடல் உழைப்பைக் குறைக்கவோ தேவைப்படும் சிறு கருவிகள், எஸ் பி எம் எனப்படும் விசேஷ தன்னுபயோக எந்திரங்கள் ஆகியவற்றை வடிவமைத்து, மூலப்பொருட்கள் சேகரித்து, செய்யும் இடத்தில் ஒருங்கிணைத்து, சோதனை செய்து, பணியில் ஈடுபடுத்துவது வரை தொடரும். இத்தனையும் நான் மட்டும் செய்யவில்லை. ஆனால் இத்தனை செய்பவரையும் ஒருங்கிணைக்கும் பணி, முக்கியச் சிக்கல்களைக் களையும் பணி, என்னுடையது.
இந்தப் பணி என் பி.ஈ. பகுதி நேரப்படிப்புக்கு ஒரு அருமையான ஆய்வுக்களமானது. உதாரணமாய் அன்று தான் மோட்டாருக்கு வி-பெல்ட் எப்படித் தேர்வு செய்வது என்று படித்திருப்பேன், அடுத்த நாள் அலுவலகத்தில் அதையே பணியில் பயன்படுத்த வேண்டியிருக்கும். இன்னொரு நாள் மோட்டாரின் குதிரைத்திறன் கண்டு தேர்வு செய்திருப்பேன். அடுத்த நாள் மாலை அதையே படிப்பேன். இப்படி பாடத்துக்கும், பணிக்கும் தொடர்புடன் படித்தால் படிப்பு எவ்வளவு சுவையாக இருக்கும் என்பதை அனுபவித்தாலே புரியும். ஜெர்மனியில் இத்தகைய கல்விமுறை இருப்பதாகப் படித்திருக்கிறேன். ஜெர்மன் எஞ்சினீயர்கள் உலகளவில் சிறந்த எஞ்சினீயர்களாக இருப்பத்ற்கு இதுவும் காரணம் என்று நினைக்கிறேன்.
தினமும் ஒரு முக்கோணத்தில் பயணம். வீட்டில் இருந்து காலை 7.30 மணிக்கு சைக்கிளில் புறப்பட்டால் அலுவலகத்தில் பணி முடித்து, மாலை 5 மணிக்கு வெளியே வந்து, வயிற்றுக்கு ஒரு ரூபாயில் எதாவது பதில் சொல்லிக்கொண்டு, அப்படியே சைக்கிளில் கல்லூரிக்குப் போவேன். இரவு 9 மணிக்குத் திரும்பவும் சைக்கிளில் வீடு வந்து 15 நிமிட ஆங்கிலச்செய்திகளோடு உணவை முடித்துப் படுக்கையில் விழவேண்டியதுதான். (அந்தச் சைக்கிளையும் ஒருவன் திருடிய கிளைக்கதை வேறு). 450 ரூபாயில் இருவர் மாதத்தை ஓட்டவேண்டியிருந்ததால், குறைந்த வாடகையில் ஒரு குடிசைவீட்டைப் பிடித்து அங்கேதான் வசித்தோம். அங்கும் மின்விளக்கில்லை. அப்புறம் எப்படிப் படிப்பது? வீட்டில் படித்தால் தானே? இது என்ன ஏழாம் வகுப்பா, வீட்டில் படிக்காமல் பாஸ் பண்னுவதற்கு, அப்படியே பாஸ் பண்ண முடிந்தாலும், வெறும் பாஸ் என்ன பயனைத் தரும்? நல்ல மதிப்பெண்ணுடன் பாஸ் பண்ண வேண்டாமா?
அழகிரி இருக்கையில் இந்தக் கவலை எல்லாம் எனக்கெதுக்கு?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக