செவ்வாய், ஜனவரி 27, 2004

பனிக்காட்டில் ஒரு விளையாட்டு

என் 1991 டயோட்டா (தேசிமுத்திரை;-) கேம்ரி பொதுவாக ஒரு பிரச்னையும் தராது. கொள்ளு மட்டும் கொடுத்தால் லொள்ளு எதுவும் பண்ணாமல் அதுபாட்டுக்கு முச்சிரைக்க ஓடிக்கொண்டே இருக்கும் அரபுக்குதிரை.

போனவாரம் ஒரு நாள் இரவில் காரின் உட்புறக் கூரை விளக்கை அணைக்காமல் விட்டுவிட அடுத்த நாள் ஸ்டார்ட் ஆகவில்லை. பேட்டரியில் வழக்கமான கொள்திறன் பெருமளவு இந்தக் குளிரில் குறைந்துவிடுகிறது. ஆனால் அதே குளிர் காரணமாக எஞ்சினோ ஸ்டார்ட் ஆவதற்கு அதிக ஆற்றலைக் கேட்கிறது. எனவே பேட்டரியை சிறிது விரயப்படுத்திவிட்டாலும் போச்சு, அடுத்தநாள் ஜம்ப்ஸ்டார்ட் தான். அதற்கென்றே AAA போன்ற அவசர உதவி சேவைகள் இருக்கின்றன. பழைய'காரர்'கள் ;-) இதில் கட்டாயம் உறுப்பினராய் இருக்கிறோம். விளக்கை அணைக்காமல் விட்டதற்காக அம்மணியைத் திட்டிவிட்டு (இது மாதிரி சான்ஸெல்லாம் சுலபத்தில் கிடைக்காது-)) தொலைபேசியில் உதவியை அழைக்க, அடுத்த 15 நிமிடத்தில் வந்து ஸ்டார்ட் பண்ணிக் கொடுத்துவிட்டுப் போனார், இந்தக் குளிரில் கையுறைகூடப் போடாத புண்ணியவான்.

அடுத்த நாள் டார்கெட் கடைக்குப் போகும்போது, கொட்டும் பனியில் அவசர அவசரமாய் இறங்கி ஒடி, மணிக்கணக்கில் இதமாக சுற்றிவிட்டு வந்துபார்த்தால், முகப்பு விளக்குப் போட்டது போட்டபடியே இருந்து பேட்டரியை உறிஞ்சி சாப்பிட்டிருந்தது. சூடாக பெண்டாட்டியிடம் ஏத்து வாங்கிக்கொண்டு (பழிக்குப் பழி வாங்குவதில் ரிவால்வார் ரீட்டா தோற்றுவிடுவாள்:-)), மறுபடியும் தொலைபேசியில் அழைத்து ('நேத்துத்தான் ஜம்ப்ஸ்டார்ட் கேட்டிருக்கீங்க...'-மாதரசி. 'ஹி.ஹி. ஆமாம்..இதை இப்படியே விடமுடியாது. நாளைக்கே பேட்டரியை செக் பண்னுகிறேனா இல்லையா பார்..'-அடியேன்) வேண்ட, இன்னொரு புண்ணியவான் வந்து ஸ்டார்ட் பண்ணிக் கொடுத்தார்.

இந்த வாரம் மறுபடியும் பொழுது போகவேண்டுமே. மறுபடியும் அணைக்காமல் விட, மறுபடியும்..அட கேவலம்ப்பா, எத்தனை தடவை பிரதாபங்களை திரும்பச்சொல்வது? ஆனால் இன்னொரு முறை AAA வை அழைக்க நெஞ்சில் உரமில்லை. அன்றே சொன்னார் ஒரு நல்லவர் 'ஜம்ப்ஸ்டார்ட் கேபிள் வாங்கி வண்டியிலேயே வெச்சிக்குங்க' என்று. 'நீங்க வச்சிருக்கீங்களா, என்னைமட்டும் சொல்லுறீங்க'ன்னு அவர்கிட்டே வீர வசனம் பேசினேன். அவர் கார் புதுசு. அத்தோடு அது லைட்டை அணைக்காமல் வந்தா கூப்பிட்டுச் சொல்லும், கத்தும். நம்மளுது சாந்த சொருபி, தேமேன்னு நின்னு கழுத்தை அறுக்கும்.

இந்த முறை பக்கத்தில் இருக்கும் தேசி நண்பரை உதவிக்கு அழைத்து அவரிடம் இருந்த ஜம்ப்பர் கேபிள் மூலம் ('இன்னிக்கே நானும் ஒண்ணு வாங்கப்போறேன், தாய் மேல் ஆணை..') ஸ்டார்ட் பண்ணினோம். அதிலும், கார் மூக்கு உள்ளேபார்த்து நின்றதால், 0F குளிர்நிலையில், -20F உணர்நிலையில், அதை வெளியே தள்ளி, ஸ்டார்ட் பண்ணுவதற்குள் மூக்கில் தண்ணிவந்து கைகள் மரத்துப் போச்சு. ('தேங்க்ஸ், என்னை மாதிரி ஆளுகளுக்காகவே கேபிள் வாங்கி வெச்சு உதவறதுக்கு..' 'மிஸ்டர், உங்களை மாதிரி ஆளுகளுக்கா, எனக்கு வாராவாரம் கேஸ் [பெட்ரோல்] போடலைன்னாகூட சமாளிச்சுடுவேன், ஆனா அடிக்கடி ஜம்ப்ஸ்டார்ட்டலைன்னா ஒண்ணுமே ஓடாது, தெரியுமா'-இது அந்தத் தெய்வம்) சொன்னமாதிரியே, பிறகு வால்மார்ட்டில் ஜம்ப்பர் கேபிள் வாங்கியாச்சு. ஆனால், எனக்குத் தெரியும், இனி ஒரு நாள் கூட இது மாதிரி நடக்காது. அது பாட்டுக்கு முதுகுப்பெட்டியில் தூங்கும்.

கேபிள் வாங்கினதுக்காகவாவது இன்னொரு நாள் லைட்டை அணைக்க மறக்கணும் என்று நினைக்கிறேன். சனியன், அதுக்கப்புறம் ஒரு ஏழெட்டு வாய்ப்பு வந்துவிட்டது, நானும் இதை மறக்காமல் இருக்கிறேன், ஆனால் லைட் மட்டும் எப்படியோ அணைந்திருக்கிறது. (யாரோ குரங்கு, மருந்து என்ற வார்த்தைகளைபோட்டு ஒரு கதை வைத்திருக்கிறார்களாமே, இதுக்குத்தோதாக..) எப்படியும் ஒரு வாரத்துக்குள் இன்னொரு வாய்ப்புக் கிடைக்காமலா போய்விடும்? கிடைக்கும், கிடைக்கும்! அதிலும் 'நாளை இரவு எப்படியும் ஒரு அடி பனி இருக்கும்'னு டிவிலெ சொல்றான், கட்டாயம் சான்ஸ் இருக்கு. நம்பிக்கைதானே வாழ்க்கை!

கருத்துகள் இல்லை:

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...