வெள்ளி, ஜனவரி 23, 2004

சில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 15


என் அம்மாவும் மகளும் 2000-ல்

திருவள்ளூர் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் வேலை சிரமம் இல்லாத வேலை. வேலை எளிதாய் இருந்தது. சம்பளம் அதிகம் கிடைத்தது. வேலைக்கு வெளியே நிறைய நேரம் கிடைத்தது. எனக்கு அங்கு மிகவும் பிடித்த விஷயம் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ளக் கிடைத்த வசதிகள். CAD எனப்படும் கணினி உதவியுடன் வடிவமைக்கும் வசதி அங்கு அப்போதுதான் வந்திருந்தது. கோவையில் மாலையில் படிப்புக்காக செலவிட்ட பழக்கம், பெரிய நட்போ, சுற்றமோ இருந்து நம் நேரத்தை எடுத்துக் கொள்ளாததால் செய்ய ஒன்றுமில்லாமல் வீட்டில் இருந்தது, எளிதில் கிடைத்த வசதிகளைப் பயன்படுத்தி புதியன கற்றுக் கொள்ளும் ஆர்வம், எல்லாம் சேர்ந்து என்னை கணினியிடம் நெருக்கத்தை ஏற்படுத்தின.

அங்கு எனக்குக் கிடைத்த Godfather தான் திரு. ராஜகோபாலன் அவர்கள். ஆர்ஆர் என்று சொல்லப்படும் அவர் பழைய எம்.ஐ.டி. ஆட்டோ பட்டதாரி. அங்கு எம்.ஐ.டி. யில் படித்த படையே உண்டு. அவர்களுக்குள் ஒரு பிணைப்பும் உண்டு. மோட்டார் கம்பெனி என்பதால் அந்த சிறப்புப் படிப்பு ஒரு கூடுதல் தகுதியை வழங்கியது (என்று நிறையப் பேர் நினைத்துக் கொண்டார்கள்!) ஆனால் அங்கு செய்யப்பட்ட இயந்திரங்கள் மோட்டார் வாகங்கள் அல்ல, மோட்டார் வாகன அமைப்புகளின்மேல் கட்டப்பட்ட இயந்திரங்கள். ஆகவே மோட்டார் வாகனவியலுக்கு இணையாக எந்திரவியலுக்கும் வேலை இருந்தது. இதையெல்லாம் புரிந்து கொண்டு என்னை அடையாளம் கண்டுகொண்டவர் ஆர்ஆர்.

அவர் சிரமப்பட்டு நல்ல வேலைகளை எனக்கு பெற்றுத்தந்தார். என்னை நன்றாக முன்னிறுத்தினார். இரண்டு வருடத்தில் நல்ல பேர் எடுத்துவிட்டேன். அதுமட்டுமல்லாமல் என்னை மேற் கொண்டு படிக்கச்சொல்லித் தூண்டியவரும் அவரே. முதலில் எம்.ஐ.டி.யில் மாலை நேர எம்.ஈ. வகுப்புக்கு போக ஆரம்பித்தேன். அது ஒரு கொடுமையான அனுபவம். எனக்கு சென்னைக்கு வீட்டை மாற்றவும் தயக்கமாய் இருந்தது. நல்ல வேளையாக அடுத்த வருடம் ஐஐடியில் எம்.டெக். வகுப்புக்கு ஸ்பான்சர்ஷிப் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வாய்ப்புக் கிடைத்தது. எல்லாரும் சொன்ன கம்பியூட்டர் சயன்ஸ் மற்றும் எனக்குப் பிடித்த எஞ்சினீரிங் மெக்கானிக்ஸ் இரண்டுக்கும் விண்ணப்பித்தேன். இரண்டுமே கிடைத்தது. ஆனால் அதற்குள் யாரோ குளறுபடிசெய்து எங்கள் துறைத்தலைவரிடம் நமக்கு எதுக்கு கம்பியூட்டர் சயன்ஸ்? என்று (சரியாக) கேட்கவும் அவர் என்னை எஞ்சினீரிங் மெக்கானிக்ஸில் சேரச் சொல்லிவிட்டார். எனக்கு வருத்தமில்லை.

ஐஐடியில் ஒருவருடம் சொல்லப்போனால் எட்டுமாதம்தான், எளிதில் ஓடியது. பிறகு மீண்டும் இரு வருடங்கள் திருவள்ளூரில் கழித்துவிட்டு, கோவைக்குப் பயணமானதும், அங்கு ரூட்ஸ் நிறுவனத்தில் அடுத்த ஏழு வருடம் பணிபுரிந்ததும், பிறகு இந்த இரண்டரை வருடமாக அமெரிக்காவில் வசிப்பதும்...காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. நல்லவர்கள் கிடைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களைக் காண, அவர்கள் கண்ணில் நாம் பட, ஒருவருக்கு ஒருவர் ஆதரவாய் இருக்க, தேவை எளிமையான மனம் மட்டுமே. முடிந்த அளவுக்கு மற்றவர்களுக்கு நல்லது செய்ய முயல்வதன் மூலம் அன்று எனக்குக் கிடைத்த நல்லவர்களை நினைவுகூருகிறேன்.

வாழ்க வளமுடன்!
-முற்றும்

1 கருத்து:

Kasi Arumugam சொன்னது…

புதிதாக இந்தப் பக்கங்களைப் படிக்கிறவர்களுக்கு: இந்தப் பக்கக்கங்கள் எழுதப்பட்ட போது ப்ளாக்கர் சேவை மறுமொழி இடும் வசதியை அளிக்காததால் பலரும் வெளியிலிருந்து கிடைக்கும் சேவைகளைப் பெற்று வந்தோம். இந்ததொடருக்கு பல நண்பர்களும் இட்ட மறுமொழிகளும் அந்தச் சேவையுடன் இழக்கப்பட்டுவிட்டன. மறுமொழி அளித்த நண்பர்களுக்கு நன்றி. காக்கமுடியவில்லை என்பது வருத்தமே.

எழுத்தென்னும் அற்புதம்

நண்பர் கல்வெட்டு  படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...