பஸ் ட்ரைவர் திறமை சாலியா? ரயில் ட்ரைவர் திறமைசாலியா? இதில் என்ன சந்தேகம், இவ்வளவு பெரிய ரயிலை கொஞ்சம் கூட தண்டவாளத்தை விட்டு விலகாமல் நழுவாமல் ஓட்டுவதென்றால் அவர் எவ்வளவு திறமை சாலியாக இருக்கவேண்டும்? ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு நாள் எஞ்சின் அருகே சென்று பார்க்கும் வாய்ப்புக் கிடைத்த போது தான் தெரிந்தது அவர் கையில் ஸ்டேரிங்கே இல்லை என்று!
இரும்பை இழுக்கும் காந்தம் சிறு வயதில் தங்கத்தை விட மதிப்புள்ள பொருள். இது எப்படிச் செய்கிறார்கள்? 'அதுவா, நமக்குத் தேவையான அளவு இரும்பைக் கொண்டுபோய் ரயில் தண்டவாளத்திலே வைத்தால், ரயில் அது மேலே ஏறிப் போனதுக்கப்புறம் அது காந்தமா மாறிடும்' - இது பொது அறிவுள்ள, டவுன் பக்கமிருந்து சித்தூருக்கு வந்த என் நண்பன் கொடுத்த செய்முறை. இதை சோதனை செய்து பார்க்க வேண்டுமென்று நானும் ஆசைப்பட்டேன்.
பக்கத்தில் பட்டறையில் கிடைத்த அந்தப் பெரிய இரும்பை வைத்துப் பெரிய காந்தமாய் செய்திருக்க வேண்டியவன், காலுக்கெட்டும் தூரம் வரை ரயில் தண்டவாளம் கிடைக்காததால், இதன் வண்டவாளத்தை அறிய முடியாமல் போய்விட்டது. கூடவே ரயிலில் போகிறவர்கள் பண்ணின புண்ணியம் சேர்ந்து கொள்ள, சோதிக்க முடியாமலே போய்விட்டது. இல்லாவிட்டால், ஒருவேளை சிறு வயதிலேயே ரயிலைக் கவிழ்க்க முயன்றான் என்று பொடோவில் போட்டிருப்பார்கள்!
அதெல்லாம் சரி, பஸ் மாதிரி ரயில் சட்டென்று திரும்புவதில்லையே, ரிவர்ஸ் கூட எடுக்க முடியுமா தெரியவில்லை (எந்த சினிமாவில் ரயில் ரிவர்ஸில் போறதைக் காட்டினான்!) பொள்ளாச்சி போனதும் இதை எப்படித் திருப்புவார்கள்? 'அதுவா? பொள்ளாச்சி ஸ்டேஷனுக்கு வெளியே பெரிய வட்டமாய் ரயில் பாதை உண்டு, அதில் ரயிலை விடுவார்கள் அது தன்போக்கில் ஓடித் திரும்பி வரும்'.
என் அண்ணனும் நானும் பின்னொரு முறை பொள்ளாச்சி ஸ்டேஷன் (ஜங்ஷன் என்று பேரெல்லாம் பெரிசாப் போட்டிருக்கும், ஆனா பைசா பிரயோசனம் இல்லாத ஸ்டேஷன், இன்னும் மீட்டர் கேஜ்! சினிமா ஷூட்டிங்குக்கு ஆகும், நிறையப் படத்தில் நடித்திருக்கிறது, உ.ம்.: 'கிளிஞ்சல்கள்') போகும் வாய்ப்புக் கிடைத்ததும் முதலில் பார்க்கப் போனது, இந்த ரயில் திரும்புவதைத் தெரிந்து கொள்ளத்தான். அப்பத்தான் தெரிந்தது, எஞ்சினை மட்டும் தான் திருப்புவார்கள், அதுவும் ஒரு பெரிய வட்டமான குழிக்குள் அமைந்த ஒரு மேடை மேல் நிறுத்தி மனிதர்களாகச் சேர்ந்து 'ஏலேலோ ஐலசா' போட்டுத் திருப்புவார்கள் என்பதை.
இப்படி ரயிலைச் சுற்றியே எண்ணங்கள் சிந்தனைகள்! அதை வைத்தே அறிவியல் ஆராய்ச்சி!
ரயில் பயணம் இன்னும் தொடரும் (ஜாக்கிரதை!)
சரி இன்றைய ரயில் ஜோக்குகள்:
* * * *
'அம்மா, உன்னையும் என்னையும் போலீஸ் தேடி வந்திட்டு இருக்கு'
'எதுக்குடா?'
'நீ பண்ணின மைசூர் பாகை உடைக்கறதுக்காக தண்டவாளத்திலே வெச்சேன், ரயில் கவுந்துருச்சு'
* * * *
'உஸ்..அப்பா...தலையை வலிக்குதே'
'ஏன் என்னாச்சு?'
'எனக்கு இந்த எலெக்ட்ரிக் ட்ரைய்ன்லெ வண்டி போறதுக்கு எதிரே பாத்து உக்காந்து போனா ஒத்துக்கறதில்லை, இன்னிக்கு அப்படி உக்காந்து வந்தேன், அதான்.'
'உங்களுக்கு ஒத்துக்காதுன்னா எதிரே உக்காந்திருக்கறவர் கிட்டெ ரிக்வெஸ்ட் பண்ணிக் கேட்டு மாறி உக்காந்திருக்கலாம்லெ'
'நானும் கேக்கலாம்னுதான் நினைச்சுப் பாத்தேன், எதிர் சீட்டிலே ஒருத்தரையுமே காணோமே'
* * * *
எனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே!
சனி, நவம்பர் 22, 2003
ரயிலே உன்னைக் காதலிக்கிறேன் - 2
பாகம் - 1 இங்கே
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எழுத்தென்னும் அற்புதம்
நண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...
-
அதென்ன தமிழனுக்கு மட்டும் இந்தக் கேவலம்? என்னமோ அனாதப்பயலப் பாக்கற மாதிரியில்ல பாக்கறானுவ, எல்லாவனும்! எல்லா நாட்டுக்காரனுக்கும், அட நம்ம இந...
-
தமிழ்நாட்டின் மிக அதிக வசூல்திறனுள்ளதாகச் சொல்லப்படும் நந்தனம் சிக்னல். மாலை 8 மணி. தி. நகரிலிருந்து வந்து தெற்குப்புறம் திரும்பவேண்டும். என...
-
மதி கந்தசாமியின் நேரமோ நேரம்! தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்ட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக