மதி கந்தசாமியின் நேரமோ நேரம்! தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்டும் உயிர்பெற்றன.
அறிவியலார் எந்த ஒரு இயற்பொருளையும் (Physical Quantity) அளக்க ஒரு அலகை (unit of measure) கையாளுவர். இவ்வகை அலகுகளில் பலவும் உலகளாவிய ஒரு அமைப்பால் தகுதரப்படுத்தப்பட்ட ஆனால் நேரடியாக இயற்கை அடிப்படை இல்லாத அலகுகள். காட்டாக நீளத்துக்கு மீட்டர் என்ற அலகும், நிறைக்கு கிலோகிராம் என்ற அலகும், காலத்துக்கு நொடி என்ற அலகும், SI system என்ற நெறிமுறைப்படுத்தப்பட்ட திட்டத்தின் அடிப்படை அலகுகள். அவற்றிற்கெல்லாம் தீர்க்கமான விளக்கம் அளித்து மீட்டர் மற்றும் கிகி ஆகியவற்றுக்கு மூல அளவின் மாதிரியையும் ஏற்படுத்திப் பாதுகாத்து வருகிறார்கள். நொடி அளவை மிகத்துல்லியமாக அளக்க அணுக் கடிகாரமும் உள்ளது.
ஆனால் காலம் என்ற இயற்பொருள் நொடி போன்ற செயற்கையான அலகுகள் மட்டுமன்றி இயற்கையான சில அலகுகளால் எளிதில் அளக்கப்படக்கூடியது. நாள், மாதம், வருடம் ஆகியன எந்த ஒரு அதிகார அமைப்போ, தனி மனிதனோ ஏற்படுத்தியவை அல்ல. பூமி தன் அச்சில் சுழல எடுத்துக்கொள்ளும் சராசரி நேரம், ஒரு நாள். சந்திரன் பூமியை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரம் தோராயமாக ஒரு மாதம். பூமி சூரியனைச்சுற்ற எடுத்துக்கொள்ளும் நேரம் ஒரு வருடம். இது இந்தியாவானலும், ஆப்பிரிக்காவானாலும், ஆதிவாசியானாலும், வேதவிற்பன்னராலும் மாறாத சில கால அளவுகள். வேண்டுமானால் இன்றைய விஞ்ஞானம் மேலும் துல்லியமாக அளக்க முடியும், ஆனால் அடிப்படையை மாற்ற முடியாது.
ஆனால், வாரம் என்பது அப்படியல்ல. வாரத்துக்கு ஏழு நாட்கள் என்பது முற்றிலும் செயற்கையான ஒரு அலகு. யூத, கிரிஸ்தவ சமயங்கள் எடுத்துவைக்கும் 'படைப்பு' கோட்பாடு தான் இன்றைய ஏழுநாள் வாரத்துக்கு அடிப்படை என்று ஒரு பரவலான கருத்து.
Thus the heavens and the earth were finished, and all the host of them, and on the seventh day God ended His work which He had made; and He rested on the seventh day from all His work which He had made. And God blessed the seventh day, and sanctified it: because that in it He had rested from all His work which God created and made (Genesis 2:1-3).
இணையத்தில் நான் தேடிய வரையிலும் கி.மு. 4ம் நூற்றாண்டுக்கு முந்திய பண்டைய இந்திய சமயங்கள், மற்றும் வேதம், சோதிடம் பற்றிய நால்கள் இந்த ஏழு நாள் வார அளவைக் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. நட்சத்திரம், திதி என்பன இந்திய நேர அலகுகள். வாரம் அல்ல. இந்து பத்திரிகை, மற்றும் Hinduism Today போன்றவற்றில் இது பற்றி வெளியான சில கருத்துக்கள் கூட இம்மாதிரி எதையும் எடுத்துரைக்கவில்லை. இதைப்பற்றி இந்திய சமய, வரலாறு அறிந்தவர்களிடம் மேலும் தெரிந்துகொள்ள ஆவல்.
இன்றைய குறிப்பில் மதி தேவாரத்திலிருந்து ஒரு செய்யுள் மேற்கோள் காட்டியுள்ளார். எனக்கு அதன் முழு அர்த்தம் தெரியவில்லை, நான் அறிந்த வரையில் அதிலும் கிழமைகளுக்குள் எந்த வேறுபாடும் இல்லை எல்லாம் நல்ல நாட்களே என்று சம்பந்தர் சொல்வதாகத்தான் தெரிகிறது. ஒருவேளை அப்போது மக்கள் இந்தக் கிழமைகளைக் கடைப்பிடிக்க ஆரம்பித்திருந்து, அதில் நல்ல நாள் கெட்ட நாள் பார்க்க ஆரம்பித்ததால் இதெல்லாம் இயற்கைக்கு மாறு என்று காட்ட இந்த தேவாரம் படைக்கப்பட்டதோ. தெரியவில்லை.
கான்ஸ்டன்டைன் என்ற ரோமானியப்பேரரசர் தான் கி.மு. 321-ல் முதலில் இந்த ஏழு நாள் வாரத்துக்கு அதிகாரமேடை அமைத்ததாகவும், அப்போது கூட பெயர்கள் அன்றி வெறும் எண்களால் தான் அழைக்கப்பட்டதாகவும் ஒரு குறிப்புக்கிடைக்கிறது. அன்று அறியப்பட்டிருந்த கோள்கள் ஐந்துடன் சூரியனையும் சந்திரனையும் சேர்த்து ஏழு நாட்களுக்கு ஏழு பெயர்கள் வைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
நாட்காட்டி மற்றும் செய்தித்தாளில் தினப்பலன் சோதிடம் பார்க்கும் நண்பர்களிடத்தில் நான் முதலில் எடுத்துவைக்கும் வாதமே இந்த ஏழு நாள் சம்பந்தப்பட்டதாகத் தானிருக்கும். எப்போது இது ஒரு அன்னியமான அலகு என்று உறுதிப்படுகிறதோ, அன்றே இந்த ராகு காலம், எமகண்டம், சூலை ஆகியவற்றுக்கான அடிப்படையே அடிபட்டுப்போகிறது. கடவுள் நம்பிக்கைக்கும் இதற்கும் சம்பந்தமிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அதேபோல் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள், சனிக்கிழமை பெருமாளுக்கு என்பதெல்லாம் இடைச்செருகலாகத்தான் இருக்க முடியும்.
இதே போல் தான் நீள அளவிற்கான 'அடி' என்ற அலகு. தச்சுவேலை மற்றும் கட்டிட வேலை பார்ப்பவர்களிடம் மனையடி சாஸ்திரம் என்று ஒரு புத்தகம் இருக்கும். இந்த அடி என்ற அளவை அடிப்படையானது அது. ஒவ்வொரு இங்கிலாந்து அரசனாலும் மாற்றப்பட்டு வந்து பன்னிரண்டாம் நூற்றாண்டு வாக்கில் நிலைபெற்ற ஒரு அன்னிய அளவை வைத்து எப்படி ஒரு இந்திய சாஸ்திரம் இருக்கமுடியும். சாஸ்திரம் உண்மையென்றே கொண்டாலும், இன்றைக்கு அது பயன்படுத்தப்படும் விதம் தவறுதானே, அதை வைத்து எடுக்கப்படும் முடிவுகள் தவறுதானே.
தச்சு வேலை(யும்) பார்த்த என் தந்தையிடம் இது ஒரு மோசடி என்று வாதிட எனக்குக் கொடுத்துவைக்கவில்லை, அதற்குள் அவர் மேலும் முக்கியமான பிரபஞ்ச உண்மைகளை அறியப் போய் விட்டார். ஆனால் வேறு பலருடன் வாதிட்டிருக்கிறேன். அதிகம் படிக்காத அவர்களிடம் இதையெல்லாம் புரிந்துகொள்ள எதிர்பார்ப்பது சரியல்ல. படித்தவர்கள் எத்தனை பேர் இதைப் புரிந்துகொள்கிறார்கள் தெரியவில்லை.
எனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எழுத்தென்னும் அற்புதம்
நண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...
-
அதென்ன தமிழனுக்கு மட்டும் இந்தக் கேவலம்? என்னமோ அனாதப்பயலப் பாக்கற மாதிரியில்ல பாக்கறானுவ, எல்லாவனும்! எல்லா நாட்டுக்காரனுக்கும், அட நம்ம இந...
-
மதி கந்தசாமியின் நேரமோ நேரம்! தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்ட...
-
தமிழ்நாட்டின் மிக அதிக வசூல்திறனுள்ளதாகச் சொல்லப்படும் நந்தனம் சிக்னல். மாலை 8 மணி. தி. நகரிலிருந்து வந்து தெற்குப்புறம் திரும்பவேண்டும். என...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக