ஆச்சு, இன்னொரு நீண்ட ரோச்சஸ்டர் குளிர்காலம் ஆரம்பிச்சாச்சு. அன்டர் கிரவுண்டில் போட்டுவச்சிருந்த ஜாக்கெட், கையுறை, தொப்பி, கம்பளி, எல்லாம் எடுத்து போன வாரமே தயாரா வெச்சாச்சு. ஒன்டாரியோ ஏரிக்கரையில் இருப்பதால் இந்த ஊரில் பனிப்பொழிவு ரொம்ப சாதாரணம். பக்கத்தில் இருக்கும் பஃப்பலோ நகரம் (Buffalo, NY), அட ஆமாம், எருமையேதான், எங்களை விடவும் கஷ்டப்படும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். இந்த வருஷப் பனிக்கு இன்னிக்கு பூஜைபோட்டாச்சு. போதாக்குறைக்கு இன்னிக்கு சூறைக்காற்று வேறு. 35 மைல் (50-60 கிமீ) வேகத்தில் வீசினதால, பனி மேலேயிருந்து விழாமல், கன்னத்தில் அறைஞ்சா மாதிரி பக்கத்திலேர்ந்து விழுந்தது.
ஆனால் இங்கே இந்தப் பனியால் எதுவும் நிற்பதில்லை. போன குளிர்காலத்தில் மட்டும் நாங்க குடியிருக்கிற வெப்ஸ்டர் பகுதியில் 160 இன்ச் (13 அடிக்கும் மேல்) பனி விழுந்தது. பக்கத்தில் ஒரு சில இடத்தில 270 இன்ச் கூட விழுந்திருக்கு. நியூ யார்க் நகர் அவ்வளவா இதில் அடிவாங்கிறதில்லை, அங்கே வெறும் 49 இன்ச் (4 அடி). ஆனால் இங்க ஒரு நாள் கூட வேலை கெட்டதில்லை, ஸ்கூல் மூடினதில்லை! (என்ன இருந்தாலும் நம்ம ஊரு போல வருமா? 'வங்கக் கடலில் புயல் சின்னம்'னு ரேடியோவிலே சொன்னாப்போதும் ஸ்கூல் லீவுதான், ம்ஹும்.)
ரெண்டு மாசத்துக்கு முன் பச்சைப்பசேல்னு இருந்த ஊர், இனி வண்ணமெல்லாம் தொலைஞ்சுபோய், கறுப்பு வெள்ளையா ஆயிடும். மரங்கள் எல்லாம் கறுப்பா காஞ்ச விறகுக் குச்சிகளாத் தெரியும். புல்வெளியெல்லாம் வெள்ளை, கூரையெல்லாம் வெள்ளை. வண்ணங்களைத் தொலைத்த வாழ்க்கை, வசந்தத்தை மறந்த வனாந்திரம், எல்லாம் ஒரு சூன்யமான உணர்வைத் தரும். சும்மாவா பாடினாரு நம்ம எளயராசா 'சொர்க்கமே என்றாலும், அது நம்மூரு போல வருமா...'
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக