மேல்நாடு என்றால் என்ன நம்மைவிட மேலான நாடு. அதாவது வசதியான, படித்த, நாகரீகமான நாடு என்று நம்பினேன். அதாவது 'மேல்' என்ற தமிழ் வார்த்தையின் பொருள் 'எல்லாத்திலேயும் மேலான' என்பதாக அர்த்தம் பண்ணிக்கொண்டேன்.
அப்படியானால் நம்மை விட இந்த விஷயங்களில் தாழ்ந்த நாடுகளே இல்லையா. இருக்கே. அந்த நாடுகளைக் கீழ்நாடுகள்னு சொல்வாங்களோ, இருக்கும் இருக்கும்னு சமாதானமாயிட்டேன். பிறகு நம்ம சிவாஜி படம் ஒண்ணு வந்தது, 'கீழ்வானம் சிவக்கும்'னு. (நமக்கு ஒரே அறிவு வாயில் சினிமாதான். ரொம்ப இலக்கியம், வரலாறு எல்லாம் தெரியாதுங்கோ). வானம் தான் தலைக்கு மேலே எங்கும் பரவி இருக்கே, அதிலே எது கீழ்வானம்? எங்க ஊரிலே ஒரு கால அளவு உண்டு. உழவுத்தொழிலை அடிப்படியாகக் கொண்டு காலத்தை அவர்கள் இப்படிக் குறிப்பர்:
கோழி கூப்பிட - 4-5 am
பலானு விடிய (பளீரென்று விடிய) - 5:30-6:00 am
பளையசோத்து நேரம் (காலை உணவாக பெரும்பாலும் பழையது உண்பார்கள்) : 8:30-9 am
மதியம் 12-1 pm
அடிச்சாய (அடிவானத்திற்கு சூரியன் சாயும் நேரம்) 5-6 pm
பொளுதோட (பொழுது - சூரியன் - ஓடிவிடும் நேரம்) after 7 pm
இதில் குறிப்பிடப்படும் 'அடி'வானத்தைத்தான் 'கீழ்'வானம் சிவக்கும் என்கிறார்கள் என்று கணக்குப்போட்டேன். அப்படியானால் மேல்வானம்? ம்ஹூம், மேல் வானத்தில் சூரியன் இருந்தால் காந்தும், எனவே அது சிவக்காது என்று மனம் கணக்குப்போட்டது.
பிறகு ரொம்ப நாளைக்கப்புறம் தான் 'மேல்நாடு' என்றால் மேற்கத்திய நாடுகள், கீழ்வானம் என்றால் கிழக்கு வானம் என்று தெரிந்தது. எல்லா மேல் நாடுகளும் நம்மைவிட மேல் என்று கொள்ளமுடியாது, கீழை நாடுகள் எல்லாம் மட்டமில்லை என்றும் உறைத்தது. மேல் வானமும் சிவக்கும் என்றும் புரிந்தது.
அதெல்லாம் சரி, ஏன் தமிழில் இப்படி ஒரு குழப்பமான வார்த்தைப் பிரயோகம்? 'மேற்கு'க்கும் 'மேல்' என்ற சொல்லுக்கும் என்ன பந்தம்? 'கிழக்கு'ம் 'கீழ்'-உம் என்ன உறவு?
இருக்கிறது. சும்மா எதேச்சையாய் வந்தவையல்ல இந்த உறவு. ஆழமான, அறிவியல் பூர்வமான காரணம் உண்டு என்றே தோன்றுகிறது. தமிழ் நாட்டின் நில அமைப்பை கவனித்தால் வேங்கடம் முதல் குமரி வரை, நிலத்தின் வாட்டம் மேற்கிலிருந்து கிழக்காக இறங்குவதைக்காணலாம். இன்னும் உதகை கொடை போன்ற மலைப்பாங்கான பகுதிகளில் தெருவில் யாரையாவது வழிகேட்டீர்களானால் 'இன்னும் மேலே போங்க', 'கொஞ்சம் இதே ரோடிலே போய் ரைட்ல திரும்பி, கீழே போங்க' என்று வழிகாட்டுவதைப் பார்க்கலாம். அதாவது நான்கு திசைகளோடு, மேல், கீழ் என்பதும் சுட்டி விளக்கத் தேவையாக இருப்பதைக்காணலாம். தமிழகம் முழுதும் மேற்கு உயர்ந்தும், கிழக்குத் தாழ்ந்தும் நிலம் அமைந்ததால் இப்படி மேற்குப்பக்கம் போவதும் 'மேலே' போவதும் பெரும்பாலும் ஒரே திசையைக் குறிக்கிறது. அதே போல் கிழக்கே போவதும் 'கீழே' போவதும் ஒன்றுதான்.
இந்த அடிப்படையில் தான் மேற்கு மற்றும் கிழக்கு திசைகளுக்குப் பெயர் வந்திருக்க வேண்டும் என்பது முற்றிலும் சாத்தியமான ஒன்று.
இந்தத் தியரியில் சில பிணக்குகள்:
1. தமிழகம் இன்றிருக்கும் தமிழ்நாடு மாநிலத்தை மட்டும் குறிக்காது. சேர நாட்டில் பெரும்பாலும், (எங்க சித்தூரையும் சேர்த்துத்தான்) மேற்குத்தாழ்ந்தும், கிழக்கு உயர்ந்தும் உள்ளது.
2. தமிழ், சுமேரியாவிலோ கடல் கொண்டுவிட்ட குமரிக்கண்டத்திலோ தோன்றி வளர்ந்திருந்தால் அந்த நிலங்களின் இயல்புக்கு இது எவ்வளவு ஒத்துவரும்?
இவ்விரண்டுக்கும் விடை தேட என்றிலிருந்து தமிழில் கிழக்கு மேற்கு என்ற சொற்கள் புழங்கிவருகின்றன என்பது தெரியவேண்டும். இன்னும் தேட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக